அ02_2 Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 02_2
சென்னை என்றதும் அப்பா ஒத்துக் கொள்ள வேறு காரணமும் இருந்தது. இந்த வீட்டிற்கு அடுத்து இருக்கும் வீட்டில் தான் இவர் பெரியப்பா குடும்பம் இருந்தது. பெற்ற பிள்ளை போல் தான் பெரியப்பாவும் பெரியம்மாவும் இவர் மேல் பாசம் வைத்திருந்தனர்.
Advertisement
அவர்கள் மகன் வைத்திய நாதனுக்கும் தியாகராஜனுக்கும் சிறு வயதிலிருந்தே நல்ல உறவு. அண்ணன் தம்பியாய் இருவருமே ஒன்றுக்குள் ஒன்றாய் தான் வாழ்ந்தார்கள்… அண்ணனுக்கு பாக்கிய லக்ஷ்மியை திருமணம் முடிக்கும் வரை.
பாக்கிய லக்ஷ்மி அந்த காலத்திலேயே ஒரு லோடிற்கு வரதட்சணையோடு வந்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயும் நீளம்.. நாவும் நீளம். சட்டென்று தூக்கி எறிந்து பேசிவிடுவார். எதிரில் இருப்பவர் உணர்வு புரியுமா என்பது சந்தேகம். அவருக்கு ஒருவரைப் பிடிக்காமல் போனால், அந்த ஒருவரின் நிலை கொஞ்சம் பாடுதான்! அதனால் தானோ என்னவோ அனைவர் முன்னிலும் விரைப்பாக நிற்கும், நான்கு பேர் மதிக்கும் நிலையில் இருக்கும் வைத்திய நாதன் கூட மனைவி முன் வாய் திறப்பதில்லை?!
Advertisement
Advertisement
இப்படி பட்ட குணநலனோடு வந்த பாக்கிய லக்ஷ்மியின் வரவின் பின் எல்லாம் மாறிப்போனது. இன்று அண்ணன் குடும்பம் சென்னையில், வேளச்சேரி பேருந்து நிருத்தம் அருகில்.
‘சென்னையில் படிக்கவா?’ என்று மகள் கேட்டதும் அண்ணன் அங்கு மகளை பார்த்துக் கொள்ள இருக்கிறார் என்ற எண்ணம் எழவே.. சரி என்றுவிட்டார், தியாகராஜன்.
Advertisement
“மாதவன் காலேஜும் உன்னுதும் பக்கத்தில தானாமே. பெரியப்பா வீட்டில தங்கிட்டு அண்ணா கூடவே போய் வரியா? அவன் கூட போனா அர மணி நேரத்துல போயிடலாமாம். அப்புறம் வீட்டில பேச்சுத் துணைக்கு வசந்தி இருக்கா.. உனக்கு வசதியா இருக்கும்”
மாதவன் இவளை விட மூன்று வயது பெரியவன், வசந்தி ஒரு வயது சிறியவள். இரு பிள்ளைகளுமே தாயைக் கொண்டு பிறக்கவில்லை என்பதால் பிள்ளைகளோடு பழகுவது கடினமில்லை. இருந்தாலும் பெரியம்மா?
“இந்த படிப்புக்கு எல்லாம் எதுக்குமா வெளியூர்? வேண்டவே வேண்டாம்”, என்று முதலில் கூறிய அப்பா மனம் இறங்கி.. மகள் ஆசைக்கு உடன் பட்டு கல்லூரியில் சேர்த்துவிட்டதே அதிகம்.. இதில் தனக்கு அந்த ‘மிலிட்டரி ஆப்பிசர் என்ற எண்ணம் கொண்ட’ பெரியப்பா; ‘லொட லொட பெரியம்மா’ வீட்டில் தங்குவதில் சிறிதும் விருப்பமில்லை என்று எப்படிக் கூறுவது? அவள் தயங்கி நிற்க..
“அது எல்லாம் வேண்டாம் டா தியாகு. பாக்கியம் கூட எல்லாம் நம்ம அலரால இருக்க முடியாது. இந்தா இருக்கு சென்னை. அவ பொண்ணுங்க விடுதியில தங்கிப் படிக்கட்டும். அப்பப்போ போய் பார்த்துட்டு வா”, சகுந்தலா பாட்டி கூற..
“சொல்லுங்க அத்த.. அவருக்கு புரியறமாதிரி.. அந்த ஊரு நெரிசல்ல வேளச்சேரியில இருந்து நுங்கம்பாக்கம் போகவே மணி நேரம் ஆகிடுமாமே.. அது கூட பரவால. இவர் அண்ணி கூட எல்லாம் இருக்க முடியுமா? அவங்களும் அவங்க வாயும். இவர் அண்ணா? மத்தவங்கட்ட தான் அவர் வீரத்தைக் காட்டுவார்! பொண்டாட்டி வாய மூட தெரியாது!”, அன்று சௌந்தர்யா வாய் விட, கணவன் முறைக்க..
“அவங்க எப்படியோ போகட்டும். பொம்பளை பிள்ளை தைரியமா வாழ கத்துக்க வேண்டாமா? ஒரு வீட்டுல போய் வாழ போற பொண்ண இடுப்பில வச்சு அவ வளர்ச்சிய கெடுக்காத.”, என்று பேசி, பாட்டி தான் அலரை காப்பாற்றி விட்டார்.
“ஆமா ஆமா உங்க பேத்திக்குத் தைரியம் ரொம்ப கம்மி தான்..”, கூறிய படியே அவர் மனைவியைப் பார்த்த பார்வையில் சௌந்தர்யா அடங்கிப் போனார். அலர்விழியின் புகழ் அப்படி! அவளைத் தனியே வெளி உலகிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணினாலே பெற்றவருக்கு படபடப்பு தான்! பெற்றவர் மகளை நினைத்துப் பயப்படக் காரணம் இருந்தது.
போகும் இடம் எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்க மாட்டாள். ஆனால் அவள் ஈடுபட்ட காரியத்தில் பிரச்சனை என்று தெரிந்தாலும்.. அதைக் கண்டு ஓடி ஒளிய மாட்டாள். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பாள். அசட்டுத் தைரியமோ.. துணிவோ.. நேர்மையோ எதுவோ ஒன்று கொஞ்சம் அளவுக்கு அதிகம் தான் பாரதியின் புதுமை பெண்ணிடம்.
ஏன்.. சில மாதங்கள் முன் கூட இப்படி தானே… வேதியியல் பயிற்சி மையத்தில் இவள் தோழியைத் தொந்தரவு செய்த வாத்தியாரை காம்பஸ் கொண்டு குத்தவில்லை?
“ஏய்.. காம்பஸ்ச இப்பிடி தான் கேர்லெஸ்சா நீட்டி பிடிச்சுட்டு இருப்பியா?”, தொடையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, அமர்ந்திருந்தவளிடம் எரிச்சலோடு அன்று வாத்தியார் கத்த.. பொறுமைக்கே பிறந்தவள் போல்.. மெல்ல காம்பஸ் நுனியைத் துடைத்து ஜாமெட்ரி டப்பாவில் மூடி வைத்தவள், அதை விடப் பொறுமையாக அவர் முகம் பார்த்துச் சிறு புன்னகையுடனே, “யார் சொன்னா கேர்லெஸ்சா பிடிச்சிருந்தேன்னு?”, உதடு புன்னகைக்க.. கண் அவரை எரித்தது.
என்றும் பெஞ்ச்சில், ஓரமாய் அமரும் அலரின் உயிர் தோழி ஜோதி உட்புறம் அன்று அமர்ந்திருக்க… அவள் முகத்தில் அத்தனை ஆதங்கம்.
வாங்கிய குத்தின் காரணம் புரிந்தது வாத்தியாருக்கு. வாய் திறக்க முடியவில்லை. முறைக்க மட்டும் தான் முடிந்தது. அன்றிலிருந்து அவர் கையை ஆட்டிக்கொண்டோ, மேசையை உரசிக்கொண்டோ அங்கும் இங்கும் வகுப்பறைக்குள் நடப்பதில்லை. ஒழுங்காக அவர் நாற்காலியில் அமர்ந்து கொள்வார். ஆனால் வகுப்பு பாடம் என்று அவர் கொடுத்த குடைச்சல் தான் பெண்ணிற்கு அதிகமாய் போனது.
என்ன முயன்றும் அவள் நிமிர்வு, திமிர், தைரியம், துணிச்சல் என்று எதையுமே அவரால் அசைக்க முடியவில்லை.
இது வீடு வரை பிரச்சனையாக எட்டவில்லை என்றாலும், அப்பா காதிற்கு விடயம் வரத்தான் செய்தது. இப்படி பிரச்சனை கொடுப்பவனைப் பார்த்து ‘பயந்து ஓடி ஒளி’ என்று ஒரு பெண்ணை பெற்ற தகப்பனாக அவரால் சொல்ல முடியவில்லை. பெண்களுக்குத் தைரியம் மிக அவசியம். அசட்டுத் தைரியமாக அது உருமாறாத வரை நன்மைக்கே என்று மனைவியைக் கொண்டு மகளிடம் பேச வைத்தார். இது நடந்து முடிந்த கதை என்றாலும்.. இது போல் ஏதாவது அவ்வப்போது காற்றோடு வந்து பெற்றவர் காதில் விழும்.
இத்தனை தடங்கல்களை தாண்டி பெண் சென்னைக்கு பெட்டியை கட்டிக் கொண்டிருக்கிறாள்.
அன்றைய பொழுதும் அடுத்த நாளும் அலர்விழிக்கு பெட்டி கட்டுவதிலேயே சென்றாலும், அக்காளும் தங்கையுமாக வீட்டைக் குஷி மூடுலேயே வைத்திருந்தனர்.
“எண்ணி அஞ்சு வருஷம் மா.. ரிட்டயர் ஆக ரெடி ஆகிடுங்க. நான் படிச்சு பெரிய எம்.என்.சி-ல சேந்து ஃபாரின் போய் சம்பாரிச்சு உங்கள எல்லாம் பாத்துப்பேன்..”, கண்களில் கனவோடும்.. தீர்மானத்தோடும் உரைத்த மகளைப் பார்த்து பெருமைப் படாமல் இருக்க முடியவில்லை, அம்மாவால்.
திங்கள் அப்பாவோடு கிளம்பும் வரை இருந்த திடம் வாயில் தாண்டும் வேளை இல்லாமல் போனது. அம்மாவும் பாட்டியும் அணைத்து, உச்சி முகர்ந்து, பத்திரம் சொல்லி அனுப்ப.. நகுநாவை கண்கள் தேடியது. நகமும் சதையுமாக வாழ்ந்து, சண்டையாலும் சிரிப்பாலும் வீட்டை நிறைத்தவர் இருவரும். முதல் பிரிவு தங்கையால் தாங்க இயலவில்லை. கிணற்றடியில் மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
“நகு..”, இவள் தோள் தொடவும்… கண்ணீரைத் துடைத்து, “நல்லா படிச்சிட்டு வா அலர்.”, தமக்கைக்கு விடைக் கொடுத்தவளுக்கு எப்படி ஆறுதல் கூற வேண்டும் என்று அழுது கொண்டிருந்தவளுக்குத் தெரியவில்லை.
“ஏய் அழாத லூசு. ரெண்டு வருஷம் தான்… அதே காலேஜ்ல உனக்கும் சீட் வாங்கிடுவோம்..”, கட்டிக் கொண்டு அழுதவளை அழுது கொண்டே ஆறுதல் படுத்தினாள், சற்றே பெரியவள்.
இருவருக்குமே தெரியும் நகுநாவை அப்பா எங்குமே விட மாட்டார் என்று. நகுவிற்கு வலது கை மற்ற கையை விட கால் பங்கு நீளம் குறைவு. பத்து வயது பெண் கை அளவு தான் அதன் பருமனும் இருக்கும். எப்பொழுதும் மடித்தே வைத்திருக்கும் பலமில்லாத கரம் கொண்டு ஒரு கப் காபி கூட தூக்க இயலாது. கை அப்படி இருக்க.. அந்த இழப்புக்கு ஈடு கொடுக்கவென அவ்வளவு இனிமையான குணம். பெண் அத்தனை அழகு. அம்மாவின் மொத்த அழகையும் கொண்டும் பிறந்திருந்தாள்.
இன்று வரை அதைக் குறையாக யாரும் குறிப்பிட்டதில்லை என்றாலும் அவளைக் கொஞ்சம் அதிகமாகவே அப்பா அடை காத்தார். அதிக அக்கறையோ இல்லை இயற்கை குணமோ, நகுநா அதிக அலப்பறை செய்யத் தெரியாத பொறுமையின் சிகரமாய் வளர்ந்தாள்.
அவளுக்கும் சேர்ந்து மூத்தவள் அராஜகம் செய்தாள் என்று கூறினால் மிகையாகாது.
“பாத்து போயிட்டு வா பாப்பா. வீண் வம்புக்குப் போகாத. வம்பு வருதுன்னு தெரிஞ்சா ஒதுங்க கத்துக்கோ.”, வழியனுப்பிய தாய்க்கு பாரம் தாளவில்லை. அத்தனை அருமையாக கைக்குள் பொத்தி வளர்த்த மகளைக் கண்காண இடத்துக்கு அனுப்புவது ஒன்றும் எளிதாக இருக்கவில்லை அவருக்கு.
பேருந்தில் கண்மூடி படுத்திருக்க… அதில் கசிந்த இசை சிறுமியைக் கலக்கம் கொள்ளச் செய்தது. உள்ளுக்குள் பல சிந்தனைகள் கிளர்ந்தது.
அடுத்த மூன்று வருடம் படிப்பிலும்.. அதற்கு அடுத்த இரண்டு வருடம் வேலையிலும் சென்றபின்.. கண்டிப்பாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஒரே கூரையில் பெற்றோர், சகோதரியோடான வாழ்க்கை இன்றோடு முடிவடைகிறது என்ற நிதர்சனம் மனதைக் கலங்கடிக்க, கண் ஓரம் மெலிதான நீர் கோடு.
அவள் பேச்சு, சிரிப்பு, கண்ணீர் என்று எல்லாவற்றிற்கும் அவள் வீட்டில் தலை சாய்க்க என்றும் ஆள் உண்டு. இனி தனியே இந்த பரந்த உலகில் தன் சத்தம் செல்லுபடியாகுமா?
ஓ… பூமி… பூமி… சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி.. கத்தும் சத்தம்
மனிதன் மனிதன், ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்?
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்?
அந்த காலை வேளையில் பேருந்து நகர்ந்துக் கொண்டிருக்க மகளின் கண்ணீரை தகப்பனால் சகிக்க முடியவில்லை. “அப்பா இல்ல அம்மா மாசத்துக்கு ஒரு தரம் வந்து பாக்குறோம். உனக்கு நடுவுல ஏதாவது லீவ் விடுறாங்கன்னா.. முந்தின நாள் அப்பாட்ட சொன்னா போதும், நான் வந்து கூப்பிட்டுப்பேன். அழாத பாப்பா. நீ ஏதோ சாதிக்கணும்ன்னு நினைக்கிற. அத மட்டும் நினை. துணிச்சலான பொண்ணு பாப்பா நீ, மனச போட்டு அலட்டிக்காத”
ஆம் துணிச்சலான பெண் தான்! அது தானே இன்றைய பயம்!
தோளில் சாய்ந்திருந்த மகளின் தலையை வருடி தைரியமாக இருக்கக் கூறினாலும், பெண்ணை பெற்றவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம். மகளின் துணிச்சல் எங்கேனும் கொண்டு போய் விடுமோவென்று!
அவள் துணிச்சல் எங்குக் கொண்டு விடும்? இன்றிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து ‘ஒருவனிடம் கழுத்து நெரிப்படும் அளவிற்குக் கொண்டு போய் விடும்’ என்றுவிடுவர் ஜோசியம் தெரிந்தவர்.
இதே நேரம் அந்த ஒருவனின், விழிகள் இரண்டும் கருப்புக் கண்ணாடிக்குப் பின் மறைந்து கொண்டிருந்தாலும் சுவாரஸ்யத்தோடே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்களை வேடிக்கை பார்க்க.. இனிப்பில்லாத அந்த சவ்வுமிட்டாய் வாய்க்குள் சவைப்பட.. மிதமான வேகத்தில் சென்னையின் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த மகிழுந்து பாடிக் கொண்டிருக்க.. நீள வலுவான அந்த விரல்கள் ரசனையோடு ஸ்டீயரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
உடலென்ற பாண்டம்… உடைந்துவிடும்
கதறும் மனமே… கவலுற வேண்டாம்
இலைகள் உதிரும் பொழுதில்… மரம் அழிவதில்லை
அக்றினைபோலே அன்றாடம் வாழ்ந்திடு
உலகே… நிலையில்லையே….
