அ12_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 12_1
“அம்மா அலர் என்னை அடிக்கிறா..”, இன்னும் எத்தனை கொட்டு வாங்கினாலும் கணக்கு பாடம் மண்டையில் ஏறப்போவதில்லை என்று தெரியவும் நகுநா தன்னை காப்பாற்ற அன்னையை அழைக்க.. அவரோ கணக்கை விட அதிக கொடுமையான கணக்கில்லாமல் குவிந்து கிடந்த பாத்திரம் கழுவ அழைத்தார்.
Advertisement
“படிக்கிறதுன்னா ஒழுங்கா படிங்க.. இல்லையா பாத்திரம் கழுவ வாங்க!”, அம்மா குரல் கொடுக்கவும்.. அதற்கு கணிதமே மேல் என்று நினைத்தவள் அதன் பின் அம்மாவிடம் முறையிடவில்லை.
“ட்வெல்த் ஆரம்பிக்கல.. ஆனா போர்ஷன் பாதி முடிச்சுட்டாங்க.. உனக்கு ஒரு மண்ணும் தெரியல… இதுல சொல்லிக்குடுக்கிறவள கம்ப்ளெயின் பண்ணு”, மண்டையில் ஒன்று விழுந்தது.
Advertisement
Advertisement
“எனக்கு ஒன்னும் உன்ன மாதிரி ஸ்கூல் டாப்பரா வர வேண்டாம். சும்மா பாஸ் ஆகி ஒரு காமர்ஸ் குரூப் கிடைச்சா போதும். வேலைக்கு எல்லாம் போகற ஐடியா இல்ல. ஏதோ பேருக்கு டிகிரி பண்ணிட்டு வீட்டோட ஹோம் மேக்கரா இருந்திடுவேன். இதுக்கு எதுக்கு நான் உங்கிட்ட அடி வாங்கி படிக்கணும்? போடி நீ ஒன்னும் சொல்லித் தர வேண்டாம்.. நான் ட்யூஷன் மாஸ்டர் கிட்ட கேட்டுக்கறேன்.”
அங்கு சண்டை ஆரம்பிக்கும் சூழல் எழவும், “போதும் படிச்சது..”, என்று வந்து நின்றாள் வசந்தி.
Advertisement
முதலாம் ஆண்டு விடுமுறை ஆரம்பித்திருக்க அலர்விழி கடலூருக்கு சென்றிருந்தாள். இம்முறை மாதவனோடு வசந்தியும் வந்திருக்க ஒரு வாரமாக வீட்டில் ஆட்டமும் அலறலும் தான். வீடு களைக்கட்டியது.
இதில் அதிக சத்தம் எழுப்பிச் சிரிப்பதும், மாதவனோடு சேர்ந்து ரகளை செய்வதும் சாட்சாத் அலர்விழியே தான். அதே பழைய அலர்!
தேர்வு முடித்து மாதவன், வசந்தியோடு வந்து நின்ற பெண்ணை கண்ட பெற்றவர்கள் அரண்டு போனது உண்மை. படிப்பால் களைத்து மெலிந்து போன உடலைத் தேற்றி எடுக்கும் நோக்கத்தோடு அன்பான தாயாகச் சௌந்தரியா அடுப்பங்கரையே கதி என்று சுற்றித் திரிகிறார்.
“ஏன் பாப்பா அங்க சாப்பாடு பிடிக்கலியா? நீ வேணும்னா பெரியப்பா வீட்டுல தங்கிக்கிறியா? நான் அண்ணாட்ட பேசவா?”, மகளைக் கண்ட அப்பா மனம் பதைபதைத்தது.
அரண்டு போனவள், “இல்ல பா எக்சாமுக்கு கொஞ்சம் ஸ்ரெயின் பண்ணினதால ஒழுங்கா தூக்கம் இல்ல.. அது தான். ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் ப்பா.” என்று மழுப்பினாள்.
மனம் இடறியது. எத்தனை பாடுபட்டுப் பெற்றவர்கள் அவளை இந்த நிலையில் கொண்டு வந்திருக்க.. காதல் என்ற பெயரில் உடலை எப்படி கெடுத்து வைத்திருக்கிறாள். இவளை இப்படி கண்டபின் தானே அவனும் பக்குவம் இல்லாத வயதில் இவை எல்லாம் வேண்டாம் என்றுவிட்டான்.
“படிப்பு முக்கியம் தான் பாப்பா. உனக்கு இருக்க அறிவுக்கு நீ சும்மா போய் எழுதினாலே நல்ல மார்க் எடுப்ப. அதனால படிச்சு தான் இப்படி ஆகிட்டேன்னு என் கிட்டயும் கதை சொல்லாத! உன் மனசுல ஏதோ குழப்பம்.. சோகம் அது தான் இப்படி ஆகிட்ட. எதனாலும் உடம்ப பாத்துக்கோ பாப்பா. எல்லாம் சரி ஆகும் ஒரு நாள். அன்னைக்கு அந்த வாழ்க்கைய அனுபவிக்க தெம்பு வேணும். புரியுதா?”, தலைக்கு எண்ணை வைத்துக் கொண்டே சகுந்தலா பாட்டி கூறினார்.
அமைதியாக கேட்டு கொண்டாள்.
“இனி இப்படி ஆகாது பாட்டி. குழப்பம் ஏதும் இல்ல பாட்டி.”, பாட்டிக்கு மட்டுமல்ல தனக்கும் சேர்த்தே கூறிக் கொண்டாள். அது தான் விம் போட்டு அனைத்தையும் விளக்கோ விளக்கென்று ஒருவன் விளக்கி விட்டுவிட்டானே.. இனி குழம்ப என்ன உள்ளது?
ஏற்கனவே ‘மனோ’ மயக்கத்தில் சுற்றியவள், அன்றைய தினத்திற்குப் பின் அவன் மேல் பித்தம் இன்னும் கூடிப் போக, ‘மனோ’ பைத்தியம் பிடிக்காத குறை ஒன்று தான்!
இருதினங்கள் சூரியன் வந்ததோ சந்திரன் வந்ததோ அவள் கருத்தில் பதியாது அழுது கரையத் தான் செய்தாள். மனதை அழுத்திய வலி குறையவும் எந்த வார்த்தைகள் அவளைக் காயபடுத்தியதோ அதே வார்த்தைகள் அவளுக்கு மருந்தாக மாறியது. அன்று உணரமுடியாத அவன் உணர்வு அத்தனையும் உணரமுடிந்தது. ‘உனக்கு மட்டும் இல்ல. எனக்கும் தான். புரியுதா?’ என்று காதல் கூற ஆரம்பித்தவன் எப்பொழுது.. ஏன்.. ‘வேண்டாம்’ என்று முடித்தான்? தன் நிலை கண்டபின்னோ? இருக்கலாம் என்றது அறிவு! ஆக அவனுக்கும் காதல் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திரை போட்டிருப்பது புரிந்தது.
அது எப்படி இதயத்தில் வீற்றிருக்கும் காதலை, சில காலம் தலையை வெளிக்காட்டாதே என்று கூறினால் அது கேட்டுக்கொள்ளுமா? அணை போட்டால் அது உள்ளே அடங்கி விடுமாமா? எப்படி என்று அதையும் சொல்லிக் குடுங்களேன் மனோ.
மனோவின் மனதில் அவள் இருப்பது தெரிந்தபின்.. அவன் தெளிவான சிந்தனை அவளை இன்னும் ஈர்த்தபின்.. என்றானாலும் அவன் தனக்கு மட்டுமே என்று மனம் 100% நம்பிய பின்.. “ஒன்னு அவன் செத்து போயிருக்கணும்.. இல்ல நீ செத்து போயிருக்கணும். ரெண்டு பேரும் நல்லா தானே இருகீங்க.. எதுக்கு ஒப்பாரி?
ஓவர் கிளிங்ஙி-யா(clingy) இருக்காத! மனோ மாதிரி ஆம்பளைங்களுக்கு பிடிக்காது! அதுக்கு தான் உன்ன பார்த்துப் பயந்து ப்ரேக் எடுத்துக்கிட்டான்! போடி போய் வேலைய பாரு! ஒழுங்கா படி!”. அவளுக்கே அவள் பாடம் புகட்டிக் கொண்டாள்.
விளைவு? எப்பொழுதும் போல் தேர்வை அசத்தலாகச் செய்திருந்தாள். காதல் வந்தால், கடமை மறந்து கனவில் மிதந்து மரத்தைத் தான் சுற்ற வேண்டும் என்றில்லை. அவரவர் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டே காதலிக்கலாம் என்று மனோவிற்கு கற்றுக் கொடுக்க தீர்மானித்துக் கொண்டாள்.
அழுது முடித்து இரண்டே நாட்களில் பளிச் முகத்தோடு தான் சென்டர் போக நினைத்தாள். ஆனால் என்ன கழுவியும் முகம் காஞ்ச கருவாடு போல் தான் காட்சியளித்தது. அகத்தின் அழகை நம்பி கிளம்பி போனாள். அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
கணினியை பிரித்துப் போட்டு மேய்ந்து கொண்டிருந்தவன் தோளைத் தட்ட.. அவனும் யார் என்று திரும்பவும் அவன் முன் வந்து நின்று கொண்டாள்.
யாருமில்லாமல் போகவே மீண்டும் முகத்தைத் திருப்ப… “ஹாய் பாஸ்..” என்று 32 பற்களையும் காட்டி நிற்பவளைப் பார்த்தவன் இதழ் விரிந்தது. இரண்டு தினங்களுக்குப் பின் இன்று தான் அவன் முகம் பிரகாசித்தது.
“விழி..?”, களைத்த கண்கள் மின்னியது.
“ம்ம்… மூனு வாரத்தில எக்சாம்! பாடத்தில ஒரு டவுட். சொல்லித்தர முடியமா?” எதுவுமே நடவாதது போல் பார்த்து நின்றாள்.
இனி அவன் முன் வரமாட்டாள் என்று நினைத்தான். தைரியம், கோபம், திமிர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஏக்கம், தன்னம்பிக்கை, ஈர்ப்பு, காதல் எனப் பல உணர்வுகளை அவள் கண்களில் பார்த்திருக்கிறான். அந்த நிமிடம் அவள் நின்ற தோரணையும் அவள் முகம் காட்டிய பாவமும் புதிது.
அவள் பார்வை அவனை முறுவலிக்கச் செய்தது. முதல் முதலாய் பார்த்த அதே பெண்! அதற்குள்ளாக மீண்டுவிட்டாளா? இரண்டு நாள் முன் அவள் அழுத அழுகை என்ன? இன்று?
அவள் வாய்க்குள் அசைந்தது சவ்வு மிட்டாய்… கூடவே புன்னகைக்கிறாளா இல்லையா என்று புரியா ஒரு இதழ் சுழிவு! மொத்தமாய் அவனைக் கொன்று மென்று ஏப்பம் விட்டுத்தான் போவாள் போலும்.
‘யாரடி நீ?’ அவன் அசைவற்று நிற்கவும்..
புருவங்கள் இரண்டும் ஏறி இறங்க.. “என்ன பாஸ்? சொல்லி தருவீங்க தானே..”, என்று முழுதாய் அவன் மூன்று மணி நேரத்தை விழுங்கிய பின் அவனை விட்டாள்.
அன்று தொடங்கியது அவர்கள் பெயர் தெரியாத அந்த புது உறவு! தேர்வு முடியும் வரை அவ்வப்பொழுது அவன் தான் அவள் ட்யூஷன் மாஸ்டர்! படிப்பை தவிர்த்து இன்று வரை ஒரு வார்த்தை அதிகம் பேசவில்லை என்பது சின்ன இடறல் தான் அவளுக்கு! நட்பு அளவிற்கு கூட வாய் நீளவில்லை!
இருவரும் பிரிந்து போகவில்லை. பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் சூழலில்லை என்ற நிம்மதியில் இன்று குடும்பத்தோடு நேரத்தை இன்பமாக கழித்துக் கொண்டிருக்கிறாள்.
இரவு மணிக்கணக்காக மொட்டை மாடி நிலவொளியில் கதை அடித்தாலும் மறு நாள் நேரத்தோடு எழுந்தவள் உலுக்கியது மாதவனைத் தான். இந்த ஒரு வருடத்தில் மாதவனிடத்தில் மறைத்த ஒரே விஷயம் மனோவை பற்றியது மட்டுமே.
“மாதுண்ணா.. திரும்பவும் கனவு ண்ணா..”
“நல்ல கனவுனா சொல்லு. இல்ல அப்பிடியே ஓடிடு தூக்கத்த கெடுக்காத”
“அன்னைக்கு கண்ட அதே கனவு தான். ஃபாரின் பீச்ல நீ! ஆனா இந்த தரம் நீ தனியா இல்லண்ணா”, சிரித்தாள்.
“சொல்லு சொல்லு… யார் கூட?”, மாதவனின் ஆர்வம் அவன் கண்களை எட்டியது.
“உன் மாமா பையன் வினோத் இல்ல?”
“பச்… அவனா?”, மீண்டும் தலையணைக்குள் முகம் புதைக்க..
“இரு ண்ணா! அவசர குடுக்க! வினோத், நீ, நகு அப்புறம் ஒரு புது பொண்ணு. நீங்க நாலு பேரும் அதே பீச்-ல!”
“பொண்ணு யாரு டி?”, அவன் கவலை அவனுக்கு
“எனக்கு எப்படி தெரியும்? வினோத் அத்தானோட ஃப்ரெண்டோ என்னவோ?”
“நீ இல்லியா? நீ இல்லாம நம்ம நகு-க்கு அங்க என்ன வேல?”
“எனக்கு எப்பிடி தெரியும். கனவு ண்ணா அது! நிரைய பேர கவர் பண்ண முடியாம நீங்க நாலு பேரு மட்டும் தெரிஞ்சீங்களோ என்னவோ?”
“இவ வேற ஒரு கனவையும் முழுசா கண்டு தொலைக்க மாட்டா..? சரி பொண்ணு அழகா இருந்தாளா?”
“முகம் தெரியல… ரொம்ப குட்டியா ட்ரெஸ் போட்டிருந்தா… வெள்ளகாரி மாதிரி தெரிஞ்சுது. முதுகு, ஃபிகர் எல்லாம் நல்லா தான் இருந்துது.”
“ம்ம்… அப்புறம்?”, அவன் ஆர்வமாக
“சொல்றேன்… என்ன தருவ?”, அவள் பேரம் பேச
“அது நீ சொல்றத பொருத்தது..”, அவள் பேரத்தை தள்ளி வைத்தான்.
“பொண்ணு உன் கையை பிடிச்சுட்டு தண்ணில கால் நனச்சுட்டு நின்னுட்டு இருந்தா. அது ஆஸ்ட்ரேலியா ண்ணா..”
“அங்க எனக்கு என்ன டி வேல? சரி போகட்டும்! ஏதோ கனவுலயாவது ஃபிகரோட போனேனே…? இதுவும் பலிக்குமா..?”
“யாருக்கு தெரியும்? கலர் கனவு ண்ணா.. நீ கடலுக்கு மேச்சிங்கா சட்ட போட்டிருந்த!
பலிக்கலாம். பலிக்கும் போது ஆஸ்ட்ரேலியன் கிரேட் பாரியர் ரீஃப் பார்த்துட்டு வா எனக்காக. பாதிக்கு மேல அது அழிஞ்சுடுச்சாம்!”
அழிந்துவரும் பவளப்பாறை பற்றி அவனுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. “ஹனிமூனா இருக்குமோ.. அப்போ உன் அண்ணி வெள்ளகாரியா?”, ஹி ஹி ஹீ என இளித்து வைத்தான்.
எப்பொழுதேனும் இப்படி வண்ண கனவுகள் வரும். பாதி நேரம் கனவு நினைவில் நிற்பதில்லை. ஒன்றிரண்டு நினைவில் நின்றவை கண்டிப்பாக நடந்திருக்கிறது. ஆனால் என்று நடக்கும் என்று சொல்லுவதற்கில்லை. பத்து நாட்களும் ஆகலாம்.. பத்து வருடங்களும் ஆகலாம்! பத்து வருடங்கள் முன் கண்ட கனவு ஒரு நாள் நிறைவேறவும் தான் ‘ஹே… இத நான் எங்கேயோ பார்த்து இருக்கேனே’ என்று தோன்றி, கனவு நினைவில் வந்தது.
வெள்ளைக்காரியோடு மாதவனைப் பற்றி யோசித்தவர்கள், நகுனாவோடு வினோத் நின்றதையும் யோசித்திருந்தால் ஏதேனும் விடை கிடைத்திருக்கும்.
ஜூன் மாதம் மீண்டும் விடுதியை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தவள் எண்ணங்கள் ஒரு வருட சென்னை வாழ்வை அசைபோட்டுக் கொண்டே வந்தது. ஜானகி, ராசாத்தி, சௌமி, ஸ்ருதி, எஸ்தர், மனோ.. முதல் வருடம் கொடுத்த பரிசு இவர்கள்.
கணினி மையத்தில் அவள் பயின்று வந்த கோர்ஸ் ஒரு செமஸ்டரை தாண்டிவிடவே நடுவே இடைவெளி எடுக்க வேண்டியதாக போனது. அடுத்த குழுவோடு சேர்ந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.
மனோவை மார்ச் கடைசியில் பார்த்தது! இன்னும் ஒரு மாதம் கழித்துத் தான் பார்க்க முடியும். மீண்டும் எப்படி அவனிடம் பேசி பழகுவது? அவனே வேண்டாம் என்றால் கூட அவனை விடுவதாக இல்லை எனும்போது அவனுக்கும் பிடித்தம் என்று தெரிந்த பின்…?! அவளுக்கும் அவள் கனவிற்கும் இடையே தடைக்கல்லாய் மனோ இல்லை என்று உணர்த்திவிட்டால் போதும்.
அவள் அவன் நினைவில் காலம் தள்ள, எபி-யின் நாட்கள் படிப்பு, வேலை, கணினி மையம் என்று படு பிஸியாக சென்று கொண்டிருந்தது. அடுத்த கல்வியாண்டில் கல்லூரியில் சேர வேண்டுமென்றால் டிசம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அழுத்தம் அதிகமாகவே படிப்பு சம்பந்தப்பட்ட வேலையில் கவனம் செலுத்த வேண்டி, அலுவலக வேலையை விட முடிவெடுத்தான்.
ஆனால் அன்வர், “கொஞ்சம் பொறுமையா இரு எபி. மூனு.. நாலு மாசம் அமெரிக்கா போற வேலை இருக்கு.. ரெண்டு பேர அனுப்பணும். சீனியாரிட்டி படி உனக்கு வராது. ஆனா நான் உன்ன ரெக்கமென்ட் பண்ணி இருக்கேன். போய் வேலைய பார்த்துட்டே அங்க காலேஜ் கேம்பஸ் எல்லாம் பார்த்துட்டு வா. கேம்பஸ்ல தங்க நல்லா இல்லன்னு தோணினா வெளியில எங்க தங்கறது.. அந்த மாதிரி எல்லாம் பார்க்க ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் டா இந்த ட்ரிப்.. அடுத்த ஏப்ரல் ப்ரொடஷ்ன் போற வரைக்கும் டீம்ல இரு எபி.. இல்லனா என் பாடு திண்டாட்டம் ஆகிடும்..”, என்று அவர் சோககீதத்தோடு ஆசை வார்த்தை காட்டினார்.
அவர் கூறுவதும் சரி தானே… யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்? பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் எழ, “சரி அன்வர்” என்றுவிட்டான்.
கலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் செல்ல ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில், சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்த பகுதியில் தற்செயலாக எபி அலர்விழியை பார்க்க நேர்ந்தது.
