Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ14-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 14_2

 

விழி புரிந்து கொள்வாள் என்று அவன் நினைத்தானோ? அதனால் நினைத்ததைத் தயக்கமின்றி கூறிவிட்டி கிளம்பிவிட்டான்.

 



Advertisement

சேர்ந்து வாழும் பல தம்பதியர்களிடம் இல்லாத புரிதல் இருவரிடமும். இருவருக்கும் எழுபது சதவீதம் ஒத்து போனது. ஒத்து போகாத விடயங்களைக் கடக்கவும் கற்றிருந்தனர்.

 

தோழன் ஹமியிடம் பேசும் அனைத்தையும் விழியிடம் எபி பேசினான். எஸ்தரிடம் பகிரும் அனைத்து விடயமும் அலர்விழியிடமும் பகிர்ந்தான். நல்ல காதலனாய் விழியிடம் எதையும் மறைப்பதில்லை.

Advertisement

 

Advertisement

ஆனால் இதைத் தானே அபிகெய்லிடமும் செய்கிறான்?! அவளிடமும் ஒளிவு மறைவின்றி தானே பேசுகிறான்? இந்த இடம் தான் இடறியது எபிக்கு! அபியிடமும் விழியிடமும் ஒரே உணர்வா வருகிறது? இருவரும் தனக்கு ஒன்றா?

 

‘தனக்கும் விழிக்கும் மட்டுமே’ என்று கூறிக்கொள்ளும்படி ஒன்றுமில்லையே.. காதல் பேச்சென்று எதுவுமில்லையே!’

Advertisement

 

‘ஏன் பிரிவில் இருவரும் உருகவில்லை?’

 

‘மற்ற பெண்களை பார்ப்பதற்கும் காதலியை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா?’ ‘காதலியாய் விழியைப் பார்க்க முடியவில்லையா? அதனால் தான் காதலை அவளிடம் உரைக்கவில்லையா?’

 

மனம் என்னும் வேதாளம் ‘காதல் தானா’ என்ற ‘சந்தேக’ முருங்கை மரத்தை நோக்கிச் சென்றது.

 

இன்றைய நிலையில் அலர்விழிக்கு வேறொருவனோடு திருமணம் நடந்தால்.. அது எபி-யை பாதிக்குமா? கண்டிப்பாகப் பாதிக்கும். ஆனால் மனம் உடைந்து வாழ்க்கை வெறுத்து மரணத்தை நோக்கிப் போவானா? அவனுக்குத் தெரியவில்லை!

 

வேறொருத்தி இவன் வாழ்வில் வந்தால் அவள் மேல் காதல் வருமா? அதுவும் தெரியவில்லை அவனுக்கு!

 

மாதங்கள் முன் எழுந்த தவிப்பும், படபடப்பும் அடங்கிப் போயிருந்தது. நட்புக் கரம் நீட்டியிருக்கவே நட்பு மட்டும் தொடர.. குழப்ப மனநிலை அந்த முதிர்ச்சியற்ற இளம் அறிவாளிக்கு.

 

ஏதேதோ யோசனையோடு அபிகேலோடு கடைக்குக் கிளம்பினான். வெக்மென்ஸ்(Wegmans) அங்காடி வளாகத்தில் அபிகெய்லின் அலுவலக தோழியைக் காண நேர்ந்தது.

 

“அவன் தான் உன் பாய் ஃப்ரெண்டா.. நல்ல செலக்ஷன். ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்.”, என்று அவள் அபியிடம் கூறுவது இவன் காதில் விழுந்தது. மருத்துவ பரிசோதனை முதல் வீட்டுச் சமையல் சாமான் வரை இவனே அனைத்துக்கும் அவளோடு சென்றால் வேறென்ன பேச்சை எதிர்பார்க்க? யாருமில்லா பெண்ணை அவனால் தனியே விடவும் முடியவில்லை! வயிற்று பிள்ளையில்லை என்றால் கதை வேறு!

 

அபிகெயில் கூடவே தோழிகளாய் இருப்பவர்களுக்குக் கூட ஸ்டீஃபனை தெரியவில்லை! அவன் அவளை விட்டுச் சென்றால் கூட அவள் சார்பாக அவனிடம் பேச ஆள் இல்லாத பெண்ணை பார்க்கப் பாவமாகத் தோன்றியது.

 

அவன் எல்லை அவனுக்கு தெரியும் இருந்தும் முதல் முறை வாய் திறந்தான்.  “அபி.. லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் குழந்த வயிறுல வர வரைக்கும் சரி தான்! ஆனா குழந்த வந்த பிறகும் ஏன் கல்யாணம் பண்ணிக்க நினைக்க மாட்டேன்ற? கமிட்மென்ட் வேண்டாம்ன்னு நினைச்சா ஏன் குழந்த?”

 

அவன் கேட்க, அவளும் அலட்டிக் கொள்ளவில்லை. உண்மையை உரைத்தாள். “எனக்கு மட்டும் ஆச இல்லியா எபி? அம்மா அப்பா மாதிரியே புருஷன் பொண்டாட்டியா இருப்பேன்னு தான் நினைச்சேன். ரெண்டு பேரும் விரும்பினோம். அப்போ எல்லாம் அவர் ஒன்னும் சொல்லல. ஓரே வீட்டுல வாழறது ஒன்னும் இங்க புதுசில்லையே.. ஒரு கட்டத்துல அவர் என்னோட  வந்துட்டார். ரெண்டு மாசம் முன்ன எப்போ கல்யாணம்ன்னு கேட்டா, ஸ்டீவ்க்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லியாம். இப்படியே இருந்தா என்னன்னு கேக்கறார்.

‘விட்டுட்டு போயிடுவேன்னு நினைக்கிறியா? நம்பிக்கை இல்லியா’ன்னு கேள்வி கேட்டா என்ன சொல்ல? இத பத்தி பேசினா சண்டை வருது. இந்த நேரத்துல எதுக்கு சண்டைன்னு விட்டுடேன்! எனக்கும் அவர பிடிக்குது. அவருக்கும் என் மேல கொள்ள பிரியம். அப்புறம் என்ன எபி?”

 

“குழந்தையோட அப்பா உனக்கு பாய் ஃப்ரெண்டா? புருஷன் இல்லியா? அப்போ உன் பிள்ள அவர அப்பான்னு கூப்பிடுமா மாமான்னு கூப்பிடுமா? உன் உரிமைக்கு நீ தான் போராடணும் அபி!”

 

“குழந்த பிறந்தா எல்லாம் சரி ஆகிடும் எபி. நீ ஏன் தேவ இல்லாம டென்ஷன் ஆற?”. போராடி வெறுத்துப் போய்விடவே.. விதி போல் வாழ்க்கை என்று விட்டுவிட்டாள்.

 

‘பிள்ளையைக் கொடுக்க தெரிந்தவனுக்கு, பிறக்கும் குழந்தைக்காகக் கூட அவன் கொள்கையை மாற்ற மாட்டேன் என்றால் என்ன செய்ய?’  இதில் அவன் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் அந்த பேச்சை அதன் பின் பேசவில்லை. வாழ்க்கைத் துணையை தேடுவதில் நிதானம் காட்டாமல்  அவள் வாழ்க்கையில் அவசரப்பட்டு அவளே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் என்று தோன்றியது.

 

அன்றைய காலைப் பொழுது அபியோடு சென்றது. முன் மாலையில் பனி மழை முழு வேகத்தோடு கொட்ட ஆரம்பித்தது. வாயிலில் கொட்டும் பனியை, அவ்வப்போது பனி கொட்டிக் கொண்டிருக்கும் போதே குளிரைப் பொருட்படுத்தாது தள்ளிவிடுவதும், உப்பு போடுவதுமாக அன்றை நாளும் அடுத்து வந்த நாட்களும் கடந்தது.

 

 

மாதங்கள் பின்.. அலர்விழியின் விடுதி:

 

அலர்விழியின் இரண்டாம் வருடத் தேர்வும் முடிந்தது. மூட்டை முடிச்சி எல்லாம் கட்டியாயிற்று! இன்று சென்றால் அடுத்து ஜூலை பாதியில் தான் மீண்டும் வருவாள் என்பதால் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி அறையைச் சுத்தம் செய்தாயிற்று.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் மாதவன் வந்துவிடுவான். நேரே செல்லவிருப்பது நிச்சயதார்த்த நிகழ்விற்கு! அதற்கு தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

 

மாதவனின் மாமன் மகள் அர்ச்சனாவின் நிச்சயதார்த்த விழா இன்று. விழாவை முன்னிட்டு அலர்விழி வீட்டில் அனைவரும் முன்தினமே மாதவன் வீட்டிற்கு வந்தாயிற்று. நேற்று தான் அலர்விழிக்கு தேர்வு முடிந்திருக்க அவள் இங்கிருந்து நேரே வருவதாகக் கூறிவிட, மாதவன் வருவான் மூட்டை முடிச்சுகளோடு தங்கையையும் அள்ளி போட்டுக் கொண்டு செல்ல.

 

இரண்டு வாரங்களாக தேர்வின் நிமித்தம் மனோவோடு இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை. இவள் பேசியிருப்பாள்.. ஆனால் அவன் தான் ‘படி விழி’ என்றுவிடுவான்.

 

இரண்டு வாரங்கள் பெண்ணிற்கு யுகமாய் கழிய அவனுக்கு எதுவுமே தோன்றவில்லையா என்பது அவளின் பெருத்த சந்தேகம்.

 

இன்றுமே அலர்விழிக்கி சந்தேகம் தான் அவன் காதலைக் குறித்து. சில நேரம் சிறந்த காதலனாகத் தோன்றும் அவனே பல நேரம் உற்ற தோழனாய் தோன்றுகிறான்! அவள் சென்று கொண்டிருப்பது ஒற்றையடிப் பாதையோ என்ற சந்தேகம் இந்த இரண்டு வாரங்களாகச் சற்று அதிகமே!

 

அவன், ‘நாம் தோழர்கள் தான்!’ என்றுவிட்டால்.. தாங்க முடியுமென்று தோணவில்லை. கண்டிப்பாக அவனில்லாத வாழ்க்கை சூனியம் தான்! 

 

ஒரு வழியாக அவள் நினைவுகளின் சொந்தக்காரன் அழைத்தான்.

 

“விழி..”

 

ஹப்பா.. இந்த அழைப்புக்கு தானே 2 வாரங்கள் தவம் இருந்தாள்.

 

“எப்படி இருக்கீங்க மனோ..”

 

‘உன்ன மிஸ் செய்தேன்’ என்று இன்றேனும் கூறுவானா என்று காத்திருக்க…

“நல்லா இருக்கேன். நீ என்ன சூப்பரா இருக்க? எங்க கிளம்பிட்டு இருக்க?”, என்றான் குறையா புத்துணர்வோடு.

 

‘அது தானே… இவன் என்னை மிஸ் செஞ்சிட்டாலும்!’

“மாதுண்ணாவோட தாய் மாமா பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.”

 

“யாரு… அன்னைக்கு பார்த்தேனே அந்த டாக்டரோட சிஸ்டரா?”

 

“அவருக்கும் தங்க முறை தான். அவர் மாதுண்ணாவோட ஒன்னு விட்ட சொந்தம். நேர் சொந்தம் இல்ல.”

 

“அப்பிடினா?”

 

“அண்ணாவோட தாய் மாமா திருநாவுக்கரசு. அத்த அம்பிகா. அவங்களுக்கு ட்வின்ஸ். வினோத் குமார், அர்ச்சனா”

 

“அர்ச்சனாக்கு இன்னை நிச்சயம்!”

 

“ஆமா!”

 

“அப்போ அந்த டாக்டர்?”

 

“அம்பிகா அத்தையோட ட்வின் சிஸ்டர் அமராவதியோட பையன்! இப்போ தான் இங்க வந்த பிறகு அவர பழக்கம்.”

 

“சரி சரி. அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு அழகா கிளம்பணும்? அவங்க தூரத்துச் சொந்தம் தானே?”

 

கையிலிருந்த கைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு, மேசை மேல் இருந்த இரண்டடி கண்ணாடி பார்த்து முகத்திற்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.

 

“தூர சொந்தமோ கிட்ட சொந்தமோ நல்லா போக வேண்டாமா? சொல்லுங்க.. புடவ நல்லா இருக்கா?”

 

“அது மட்டும் தான் தெரியுது உன் முகம் தெரியல. ஃபோன மேல வை!”

 

“மேல எங்க வைக்க? கண்ணாடி தான் இருக்கு. நீங்க பேசுங்க! எனக்கு கேக்குது! இந்த பட்டு புடவ எனக்கு நல்லா இருக்கா? இல்லியா?”

 

“உனக்கு என்ன.. எது உடுத்தினாலும் அழகா பொருந்துதே. இந்த ஆரஞ்… க்ரீம்.. காம்போ உனக்கு நல்லா இருக்கு!”

 

குஷியாகிப் போக, “தாங்கஸ் தாங்கஸ்”, என்றவள் விழிக்கு மை தீட்டினாள்.

 

“அரை மணி நேரம் முன்ன கூப்பிடேன்.. ஒரே பிஸி போல!” – எபி

 

“ஆன்டிட்ட பேசிட்டு இருந்தேன்!”

 

“அம்மாவா?”

 

“ம்ம்.. காலேஜ் முடிஞ்சிடுச்சே ஒரு நாள் வீட்டுக்கு வந்து இருந்துட்டு போன்னு சொன்னாங்க!”

 

“என்னவோ போ… என்னை விட நீ அம்மாக்கு தோஸ்தாகிட்ட. அடிக்கடி போய் அங்க தங்குற! அம்மாக்கு என் நினைப்பே வர மாட்டேங்குது!”

 

“என்ன அடிக்கடி? ரெண்டு தரம் போய் தங்கினேனா? அதுவும் அங்கிள் இல்ல வீட்டுல! தனியா இருப்பாங்களேன்னு போனேன்.”

 

“உன் வீட்டுல தெரியுமா?”

 

“பச்! அண்ணாக்கே தெரியாது!”

 

“ம்ம்.. வீட்டுக்கு தெரியாம போகாத. சொல்லிட்டு போ! அதுசரி இப்போ என்னவாம்? அப்பா வீட்டுல தானே இருக்காங்க!”

 

“ஆமா இருக்காங்க… ஆனா ஆசையா இருக்கு வான்னு கூப்பிட்டாங்க! ஆண்டிக்கு நான்னா ரொம்ப இஷ்டம். எல்லாரும் உங்கள மாதிரி மறந்து சுத்த மாட்டாங்க!”

 

சிரித்தான். பதிலில்லை!

 

“அப்புறம் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் எப்பிடி இருக்கா?”

 

“என்ன புகையுது?”

 

“ம்கும்.. புகைய என்ன இருக்கு?”

 

“நீ தான் சொல்லணும். என்ட்ட கேட்டா?”

 

முகத்தில் ஒப்பனை முடிய.. குனிந்து முகம் காட்டினாள்.

 

“நல்லா இருக்கேனா மனோ?”

 

“உனக்கென்ன? செம்மையா இருக்க.. இந்த கம்மல் எடுப்பா இல்ல. அன்னைக்கு ஒன்னு பெருசா போட்டிருந்தியே அத போடு! இந்த பிங்க் லிப் கலர் எடுக்கவே இல்ல… அன்னைக்கு போட்டிருந்தியே டார்க் பீச்.. இல்ல லைட் ஆரெஞ்ச் போடு..”

 

இன்று நிச்சயத்திற்கு வரும் இருகண்கள் விழியை கபளீகரம் செய்யும் என்று தெரிந்திருந்தால் ‘இந்த ஜிமிக்கியை போடு… இந்த உதட்டுச் சாயம் பூசு’ என்று அவளைத் தங்கப் பதுமையாகக் கிளம்பியிருக்க மாட்டான். இன்றைய தினம் இருவர் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வரும் என்று தெரிந்திருந்தால்.. ‘நிச்சயத்திற்கு போகாதே விழி’ என்று காலில் விழுந்திருப்பான்! இது எதுவும் தெரியாமல் போகவே அவன் வாழ்விற்கு அவனே ஆழமான குழி நோண்டிக் கொண்டிருந்தான்.

 

தலை அலங்காரத்தை சரி செய்து பூ சூட, கைகள் உயர்ந்து தலைக்குச் சென்றது. அவன் இதயம் தாளம் தப்ப ஆரம்பித்தது. பேச்சற்ற சில வினாடிகள் அவை.

 

“விழி..”

 

“என்ன..?”

 

என்னவென்று கூற? சொல்லித் தான் ஆக வேண்டுமா? சொல்ல மனம் வரவில்லை. லட்சையே இல்லாமல் வளைவு நெளிவுகளைப் பார்த்தான். மேடு பள்ளங்களை ரசித்தான்.

 

ரசனை மாறாமல் அழைத்தான், “விழி..” என்று. அதில் மோகம் கொட்டிக்கிடந்ததை கவனித்தாள் இல்லை.

 

“சொல்லுங்க மனோ..”,

 

சொல்லத்தான் நினைத்தான். இரு மொழிகள் தெரிந்தும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் விழித்தான்.

 

“சாரிய சிங்கிள்ளா போட்டுக்கோயேன்.. இன்னும் அழகா இருக்கும்.”, மென்று விழுங்கினான்.

 

“போங்க மனோ.. கஷ்ட பட்டு குட்டி குட்டியா ப்ளீட்ஸ் போட்டிருக்கேன் யூ-ட்யூப் பார்த்து! அது எல்லாம் மாத்த முடியாது! இப்போ சிங்கிள் ப்ளீட்டா மாத்தினா முந்தி தழையும்..”

 

யார் சேலை எப்பொழுது விலகும் என்று பார்க்கும் ரகமல்ல. அபி தன் முழு தேகத்தை மறைத்தால் அது அவள் வேலைக்கு செல்கிறாள் என்று அர்த்தம். மற்ற நேரங்களில் வீட்டில் இரண்டு கைக்குட்டை அளவு தான் அவள் மேலாடை! அவளிடம் எதையும் பார்க்கத் தோன்றியதில்லையே.

 

இன்று திரையில் தெரிபவள் மேலிருந்து கண்கள் எடுக்கவும் இல்லை. பார்வையை விலக்கவும் இல்லை. அபியும் விழியும் ஒன்றா? மனம் கேட்டது! முன்பு கேட்டுக் கொண்ட கேள்விகள் எல்லாவற்றையும் மீண்டும் தன்னிடமே கேட்டுக் கொண்டான்! இம்முறை பதில் வேறு வந்தது.

 

கண்களை மூடினாலும் திறந்தாலும் மேடு பள்ளங்கள் உள்ளுக்குள் ஏதோ செய்தது.

 

நட்பு என்ற வலை முதல் முறை இறுக்கியது. 

 

அனைத்தையும் அவளிடம் பகிர்ந்தவனால்.. மனம் ரசிப்பதை முதல் முறை விழியிடம் பகிர விருப்பப்பட்டும் முடியவில்லை! 

 

“நான் பார்த்ததை மற்றவர் பார்க்க வேண்டாம்.. இழுத்து மூடு!”, என்று அவளிடம் உரிமை எடுக்க முடியவில்லை. நாசுக்கான பேச்சு பிடிக்கவில்லை!

 

தன்னை விரும்பும் பெண்ணை அவளுக்கே தெரியாமல் வஞ்சனையின்றி  பார்த்து ரசிப்பது திருட்டுத் தனமாகத் தோன்ற.. ‘ஒன்று உரிமையோடு செய். இல்லையேல் செய்யாதே’ என்று உணர்வு எச்சரிக்க.. பட்டென்று கைப்பேசியை அணைத்துவிட்டான்!

 

அவனுக்குத் தெரியவில்லை..! இனி மாத கணக்கில்.. பல இரவுகள் பல பகல்கள் அவளோடு பேச முடியாமல் போகும் என்று அவனுக்குத் தெரியவில்லை.  அவள் முகத்தைப் பார்க்காத நாட்கள் நரகமாக மாறும் என்று தெரியவில்லை! தெரிந்திருந்தால் ‘மூடுடி’ என்று கூறியிருப்பான்.. கைப்பேசியை அணைக்காமல் பேசியிருப்பான்.

 

‘ஏன் மனோ கைப்பேசியை அணைத்தாய்? உரிமை இல்லாததாலா? அந்த உரிமையை வேண்டாம் என்றவன் நீ தானே?’ மனம் சாடியது.

 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாத புது தவிப்பு.. உள்ளுக்குள் குடைந்தது. முதல் முறை நட்பு என்ற போர்வையின் கனம் தாளமுடியவில்லை விழியின் மனோவிற்கு!

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!