Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ14 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 14 

 

முன்பெல்லாம் நடுச்சாமத்தில் வீட்டிற்கு வெளியே கோட்டான்கள் விழித்திருக்கும். இப்பொழுது வீட்டிற்கு இரண்டு கோட்டான்களேனும் விழித்திருக்கிறது  தங்கள் கைப்பேசிகளோடு.

 



Advertisement

இரவு நேர மங்கலான ஒளியில் மெத்தை மேல் படுத்திருந்தாலும் அலர்விழியின் கண்கள் பிரகாசமாய் விழித்தே இருந்தது. காரணம் மனோ.

 

கண்களை மூடுவதும்… மீண்டும் திறந்து அருகில் இருக்கும் கைப்பேசியை பார்ப்பதுமாகப் படுத்திருந்தவளுக்குத் தவிப்பு உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. நேரம் பார்த்தாள். மணி 3:20. ‘இந்நேரம் கிளம்பியிருக்கணுமே… ஒரு மெசேஜ் கூட இல்ல.. பச்’

Advertisement

 

Advertisement

‘அவர் மெசேஜ் போடாட்டி என்ன.. நானே போடுறேன்..’ கைப்பேசியை எடுக்கவும், அவள் எதிர்பார்த்து தவம் கிடந்த சத்தம் கேட்டது. சந்தேகமே இல்லை அது மனோவிடமிருந்து தகவல் வந்திருப்பதற்கான அறிவிப்பே தான்!

 

தகவலைப் பார்த்தாள். அதற்குள் அவள் விழித்திருப்பது அவனுக்குத் தெரிந்துவிடவே அழைப்பு விடுத்தான்.

Advertisement

 

“மனோ…” “விழி” இருவரின் அழைப்பும் மோதி நின்றது.

 

“நீ இன்னும் தூங்கலியா..? உன்ன என்ன சொன்னேன்?”

 

“படுத்துத் தான் இருக்கேன் மனோ. தூக்கம் வரல நான் என்ன பண்ணட்டும்?”

 

“யோசனையை நிறுத்து. தன்னால தூக்கம் வரும். இங்க போர்டிங் ஆச்சு. சரியா 3:30 எடுத்திடுவான் போல இருக்கு. இப்போ ஃபோன ஃப்ளைட் மோடுக்கு போட சொல்லிடுவான்! நீ படு சரியா?”

 

“போய் சேர்ந்ததும் கால் போடுவீங்க தானே..”

 

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசறேன் சரியா..”

 

“பத்திரம் மனோ..”, குரல் கமறியது.

 

“விழி! ஏன் தேவை இல்லாத டென்ஷன்? உலகத்தில பாதி ஊருக்கு போயிட்டு வந்திருக்கேன்… எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல விழி… சோ சில்! நிம்மதியா தூங்கு புரியுதா? நெக்ஸ்ட் ஃப்ளைட்ட மிஸ் பண்ணாம பத்திரமா போய் சேர்ந்திடுவேன். நிம்மதியா படு டி”, அவனும் இதையே எத்தனை தரம் கூறுவான்.

 

“ம்ம்ம்”

 

கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்களை அணைத்து வைக்கும்படியான அறிவிப்பு வரவும், “வைக்கட்டுமா?”, அவன் கேட்க

 

“மனோ..”, என்றாள் தவிப்பாய்.

 

“தூங்கு விழி.”. பாசம் சிதறப் பொறுமையாய் குழந்தைக்குக் கூறுவது போல் கூறினான். “போய் சேந்ததும் பேசறேன்.. பத்திரமா இருப்பேன். தினமும் கண்டிப்பா என்ன வேலை இருந்தாலும் பேசறேன்.”. அவன் குரல் வருடியது. இவள் கண்கள் கரித்தது.

 

தலை வருடி அப்பா இப்படி தான் ஒன்றரை வருடங்கள் முன் விடுதியில் விட்டுச் சென்றார். அதன் பின் வாழ்க்கை மாறிப்போனது. இப்பொழுதெல்லாம் வீட்டையும் வீட்டு ஆட்களையும் பிரிந்து வாழ கற்றுக் கொண்டாள். இனி மனோவும் அப்படி தானே மாறிப் போவான். தனிமையைப் பிடித்துக் கொண்டு தன்னை விட்டுவிடுவானோ?

 

‘லவ் யூ மனோ..’ என்றும் போல் தொண்டை வரை வந்தது.

 

“டேக் கேர், மனோ.”, என்று முடித்துவிட்டாள்.

 

‘லவ் யூ சோ மச், விழி..’ மனதை நிறைத்து நாக்கு நுனி வரை வந்தது.

 

நட்பு என்னும் போர்வையை களைய நேரம் வரவில்லை போலும். “குட் நைட் விழி”, என்றான்.

 

அலைப்பேசியை அணைத்தவன் கண்கள் மீனம்பாக்கம் விமான ஓடு பாதையை வெறித்தது. வைகறையை தொட்டிருந்த பின்இரவில் ஓடுபாதை விளக்குகளால் ஒளிர்ந்தது. கண்கள் அதை வெறித்தாலும் மனம் ஜானகி ஆண்டியின் விடுதியில் தூக்கம் இழந்து கண்ணீர் கடலில் மூழ்கிக் கிடந்தவளைச் சுற்றியது. 

 

ஏனோ இப்பொழுதெல்லாம் எம்.ஐ.டி.-யை விட விழியை அதிகம் பிடிக்கிறது. என்ன மாயம் செய்தாய் பெண்ணே? பல முறை கேட்டு பார்த்துக் கொண்டான். பதிலில்லை. காதல் தான்! சந்தேகமே இல்லை. இருந்தும் அதை வெளிப்படுத்தும் நோக்கம் இன்றும் இல்லை. காதலை உரைத்திருந்தால் அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள் என்பது திண்ணம். அவள் கண்ணீரை மீறி அவனால் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை!

 

இப்பொழுதே விழியை சமாளிக்கத் தெரியவில்லை… அதனால் இருவர் படிப்பும் முடியும் வரை போவது போல் போகட்டும் என்பது அவன் எண்ணம்.

 

அன்று நூலகத்தில் அலர்விழி கண்கள் காட்டிய நம்பிக்கை உள்ளுக்குள் சென்று அவனை ஏதோ செய்தது. நெஞ்சோடு அன்று பட்டும் படாமலும் நின்றவள் உள்ளுக்குள் புதைந்தே போனாள். அன்று தெரிந்து கொண்டான், அலர்விழி என்ற பெண்ணுக்காக தன் பெயர் கெடுவதைக் கூட பொருட்படுத்த மாட்டான் என்று.

 

இருவருக்கும் அதிக பழக்கமில்லை. இருந்தும் அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றிருப்பாள்? அணைத்தும் அணைக்காமலும் நின்ற விழியின் ஸ்பரிசம்… உடல் வெப்பம் இன்றும் மனதைப் புரட்டிப் போட்டது. போதாக் குறைக்கு அவள் வடிவமும் ஆண்மகனைச் சோதித்தது மறுக்க முடியாத உண்மை.

 

அன்றைய நாளில் அவர்கள் நின்றவிதம்.. அவள் சொந்தக்கார மருத்துவனிடம் இவன் கூறிய பதில்.. என்று நினைவு செல்ல, ‘கூறியது நடந்திருந்தால்’.. எண்ணம் தறிகெட்டு ஓடியது. பிடரியை அழுத்தி தேய்த்துவிட்டுக் கொண்டான்.

 

மூடிய கண்களுக்குள் எதையோ கண்டிருப்பான் போல.. முகம் மலர இதழ் ஓரம் வெட்க புன்னகை வந்து நின்றுகொண்டது. அதை வெளிக்காட்டாமல் இருக்க வாய்க்குள் சவ்வு மிட்டாயைத் திணித்துக் கொண்டான்.

 

‘விழி.. மூனு வருஷம் காத்திருப்பியா..?’ மனம் ஏங்கியது. ‘காத்திருப்பாள்’ அவனே பதிலளித்துக் கொண்டான். அது கொடுத்த தைரியமாயிருக்கும் காதலை உரைக்காமல் சுற்றித் திரிவது!

 

காற்றை கிழித்து கொண்டு லுஃப்தான்ஸா விமானம் பறந்தது. மேகங்கள் மேல் ஒரு பயணம். சென்னையில் ஆரம்பித்து ஃப்ராங்க்ஃபர்டில் மாறி ந்யூவர்க் (Newark) விமான நிலையம் சென்றடைந்தான்.

 

பயணக்களைப்பை மிஞ்சியிருந்தது அவன் ஆர்வமும் எதிர்பார்ப்பும். மிக அருகில் தெரிந்தது அவன் கனவை அடையும் கதவு! கனவு முன் வர, சென்னை பின் சென்றது!

 

அபிகெயில் வந்திருந்தாள் அவனை அழைத்துச் செல்ல. தமிழ் தாய்க்கும் அமெரிக்கத் தகப்பனுக்கும் அமெரிக்காவில் பிறந்த மகள். பிறந்தது முதல் பள்ளிப் பருவம் வரையிலுமே அமெரிக்க வாசம். அதன் பின் தகப்பன் விபத்தில் இறந்துவிட இந்தியா திரும்பினர் தாயும் மகளும். கல்லூரி படிப்பு சென்னையில். ஆறு மாதம் முன் வேலை என்று மீண்டும் அமெரிக்கா வந்தவள் திரும்பிச் செல்ல விருப்பப்படவில்லை. தாயும் இன்று உயிரோடில்லை என்பது தான் காரணம். அவள் பிறந்த இடமும் அவள் கடவுச்சீட்டும் (பாஸ்போர்ட்) அமெரிக்காவை சேர்ந்தது என்பதால் அவள் சென்று தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.

 

“ஹாய் எபி”, மெல்ல அணைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து, “வா.. எப்டி இருந்துது பிரயாணம்?” என ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்தாள். தமிழில் பேச ஆரம்பித்தால், அது தற்கொலை செய்து கொள்ளும் என்பதால் ஆங்கிலமே அவளுக்கு வசதி.

 

அனைத்திலும் அப்பாவின் சாயலைச் சுமந்து நிற்பவளிடம் தாயின் அன்பைக் காணலாம்.

 

“என்ன அபி வெயிட் போட்டா உயிர விட்டுடுவ? இப்போ என்ன டையட் எல்லாம் இருக்கது இல்லியா?”

 

“நோ சில்லி! ஆம் ப்ரெக்னென்ட்”, என்றாள் எழும்பாத குட்டி வயிற்றைத் தடவிக் கொண்டே..

 

“எத்தனாவது மாசம்?”

 

 “இப்பொ தான் ஆறாவது வாரம்… யார் கிட்டயும் சொல்லக் கூட இல்ல. உனக்கு தெரிஞ்சிடுச்சு.”

 

“கல்யாணம் ஆனத என் கிட்ட நீ சொல்லவே இல்ல?”, பெட்டியை  வாகனத்தில் அடுக்கிக் கொண்டே குறைபட, அவள் சத்தமாகச் சிரித்தாள்.

 

“எபி! குழந்த பெத்துக்க கல்யாணம் தேவை இல்லன்னு உனக்குத் தெரியாதா?”

 

அவள் சிரிக்க அவன் ஏன் அதன் பின் வாய் திறக்கப் போகிறான்.

 

சட்டென்று ஏமாற்றி விடலாம். சூதுவாது தெரியாது பெண்ணிற்கு!  மிகவும் அருமையான குணம் கொண்டதால் இருக்கலாம்… கல்லூரியில் ஆரம்பித்த தோழமை இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. 

 

ஜெர்சி சிட்டியில் வேலை என்றதுமே தன்னோடு தான் தங்க வேண்டும் என்று சண்டையிட்டுச் சம்மதிக்க வைத்தாள்.

 

அவள் வீட்டிலிருந்து பத்து நிமிட வேக நடையில் எபியின் அலுவலகத்தை அடைந்துவிடலாம். அவளோடு இருந்துகொள்ள அவன் ஒத்துக் கொண்டதின் காரணமும் இதுவே.

 

மூன்று தளம் கொண்ட டவுன் ஹவுஸ் (பகிரப்பட்ட சுவர்களைக் கொண்ட அடுக்கு மாடி வீடு). கீழே ஒரு கார் விடும் அளவு கராஜ் மற்றும் குளியலறையை உள்ளடக்கிய ஒரு பெரிய விருந்தினர் அறை. அதில் தான் அவன் வசிக்க ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. போதிய தனிமை கிடைக்கும்.

 

அறையை ஒட்டி இருக்கும் படி ஏறினால் பொதுவறை, கழிவறை, அடுக்களை… மேலும் படி ஏறினால் இரண்டு படுக்கையறைகள். பெரிய வீடு என்றில்லை என்றாலும் அவர்களுக்கு போதுமானதே!

 

ஸ்டீஃபன் வேலையாக வெளியில் சென்றிருக்கவே இருவர் மட்டுமே வீட்டில். காபி கொடுத்து சிறிது நேரம் அளவளாவியவள், அவனுக்குத் தனிமை கொடுத்து மாடிக்குச் சென்றுவிடவும் கைப்பேசியோடு அமர்ந்தான்.

 

வீட்டிற்கு தகவலை அனுப்பியவன், அலர்விழிக்கு தகவல் அனுப்பவும் பெண் அதற்காகவே காத்திருந்தது போல் உடனே பதில் அனுப்பி வைத்தாள். அவனுக்கு எழுதிக் கதை பேசும் பொறுமை எல்லாம் இல்லை. அழைத்தான்.

 

காணொளி திரையில் வேர்த்து வழிந்து நின்று கொண்டிருந்தாள் அலர்விழி. நலன் விசாரிப்பு முடிந்தது.

 

“எத்தன ரௌண்ட் ஓடி முடிச்சிருக்க?”

 

“ரெண்டு தான்..”, மூச்சு வாங்க, முதன் முதலில் இருவரும் மோதிக்கொண்ட மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள்.

 

சுருட்டை முடியிலிருந்து வியர்வை நெற்றியில் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் இருந்த ஊரில் சூரியன் அஸ்தமித்திருக்க, அவளுக்கு மறு நாள் விடிந்திருந்தது. சூரியனின் தங்கக் கதிர் அந்த வியர்வை துளியை தங்க துளியாய் காட்ட, உள்ளுக்குள் பழைய நினைவலைகள்.

 

உள்ளங்கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

 

“காலைலயே ரண்ணிங் முடிச்சுடுவியா?”

 

“ம்ம்.. டெய்லி 5:00 டூ 6:00. ஈவ்னிங் க்ளாஸ் போகணும்ல்ல.. அது தான்!”

 

அவன் பேசிக்கொண்டிருக்கும் போது கதவு தட்டப்படவும், அதைத் திறக்க அபிகெயில் உணவோடு நின்றிருந்தாள்.

 

மெலிதான் ஸ்ட்ராப் வைத்த சின்ன கௌண் அணிந்து அழகு பதுமை போல் நின்றிருந்தவளைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வரும்.. பெண்களுக்குப் பொறாமை வரும். அலர்விழிக்கு பொறாமையெல்லாம் இல்லை… இருந்தும் விழி பிதுங்கி வெளி வரும் போல் இருந்தது.

 

“விழி, இவ என் ஃப்ரெண்ட்.. அபி, அபிகெயில்.

அபி, இவங்க அலர்விழி”, இருவருக்கும் அறிமுகம் நடந்தது.

 

ஆங்கிலம் தெரியும் இருந்தும் அபியின் அமெரிக்க ஆங்கிலம் சற்று கடினம் தான் அலர்விழிக்கு. இரண்டு நிமிட உரையாடலுக்குப் பின் அவள் சென்றுவிட,

 

“கூட தங்க போற ஃப்ரெண்ட்.. பொண்ணுன்னு சொல்லவே இல்லியே மனோ..”, இவள் இழுக்க..

 

“ப்ரெண்ட்ஸ்ல ஆம்பள பொம்பளன்னு தனிதனியா இருக்கா விழி?”, அவன் எதிர்க்கேள்வி வைக்க..

 

“கூட படிச்ச ஃப்ரெண்டுன்னு சொனீங்க. வெள்ளக்காரி மாதிரி இருக்காங்க?”

 

“ம்ம்… அவ ஹாஃப் இண்டியன்”

 

“ஓ..”

 

சிரிப்பை அடக்கியவன்.. ”இன்டர்வியூ முடிஞ்சுதா?” எனவும்

 

“என்னை ஃப்ரெண்டுன்னு கூட அறிமுக படுத்தலையே மனோ..”, என்றாள். குறையாகக் கூறவில்லை என்பது அவனுக்கும் தெரியும்.

 

“ஓ கவனிக்கல… நெக்ஸ்ட் டைம் மறக்காம சொல்றேன்!”, என்றான் நமுட்டு சிரிப்பை மறையாமல்.

 

இப்படியாகத் தினம் இவர்கள் பேச்சு காரணகாரியங்கள் இல்லாமல் இங்குத் தொட்டு அங்குத் தொட்டு என்று எதையாவது தொட்டுவிடும்.

 

பேச்சின் இடையே படித்த புத்தகத்தின் இதமும், விரிந்த மலரின் நறுமணமும்… அவ்வபோது வருவதுண்டு!

 

குழைந்து.. கொஞ்சி.. ஏங்கி.. தவித்து இப்படி ஒன்றுமில்லாத அவன் காதல் தெய்வீக காதலாய் தோன்றியது, எபிக்கு!

 

நாட்கள் நகர்ந்தது.

ஐந்து கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தான். விண்ணபித்த கல்லூரிகளைச் சென்று பார்த்து வந்தான். கல்லூரியைச் சுற்றி இருக்கும் இடங்களை தெரிந்து கொண்டான். முதுகலை என்பதால் முதல் ஆண்டு கண்டிப்பாக பல்கலைக்கழக வளாகத்தில் தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. விருப்பப்பட்டவர் வெளியே தங்கிக் கொள்ளலாம் என்றிருக்க அவனுக்கும் வெளியே வீடெடுத்து தங்குவது தான் சரி என்று பட்டது.

 

ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் பதில் வர ஆரம்பித்தது. அவன் GPA, GRE scrore அதிகம் என்பதாலேயே சில கல்லூரிகள் அவன் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது. எதிர்பார்த்த ஒன்று தான்! அதிக மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகள் நிலைக்க மாட்டார்கள் என்பதற்காகவே சில கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.

 

அது ஒரு பக்கம் இருக்க, அலுவலகத்திலும் நன்கு பொருந்திப் போனான். காரணங்கள் இரண்டு. ஒன்று அவன் அதி புத்திசாலி. மற்றொன்று அங்குப் பாதிக்கும் மேல் இந்தியர்கள்.

 

எபியின் அலுவலகத்தில் ஒருவன் இருக்கிறான், தமிழ்! தமிழ், தாய் மொழி மட்டுமல்ல அவன் பெயரும் கூட! அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் தமிழகத்தில் இருக்க.. இருவருக்கும் இடையே கைப்பேசி தான் பாலம். அவள் முழித்திருக்கும் பாதி நேரமும் இவன் கைப்பேசியோடே சுற்றித் திரிவான். அழகாய் சிரிப்பான்.. தலை கோதுவான்.. வெட்கப் படுவான்… கொஞ்சுவான்.. கெஞ்சுவான்.. பார்க்க காவியமாகத் தோன்றியது எபிக்கு. விழியோடு இப்படி நேரம் காலம் இல்லாமல் கதை பேச ஆசை எழுந்தது.

 

சில வாரங்கள் தான் இந்த எண்ணம் நீடித்தது. அதன் பின் எபிக்கு இது எதுவுமே ரசிக்கவில்லை. வேலையை நேரத்திற்கு முடிக்காமல் தமிழ் பின் தங்கி நிற்பது முதல் வருத்தம்! கடமை தவறுவது அவனுக்குத் தான் பிடிக்காதே!

 

இவர்கள் நண்பர் கூட்டம் எங்குச் சென்றாலும் தமிழ் மட்டும் தனித்து கைப்பேசியோடு சுற்றுவான்! அதோடு நின்றால் கூட பரவாயில்லை! பெண் அவனைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள். அப்படி தான் எபிக்கு தோன்றியது!

 

‘அவ யாரு? அவட்ட பேசாத’

‘தண்ணி அடிச்சியா? பார்ட்டிக்குப் போகாத’

‘சிகரெட் பிடிச்சியா? கொடுத்தவன் ஃப்ரெண்ஷிப்ப கட் பண்ணு’

‘தூங்கினியா? ஏன் லேட்டா எழுந்த?’

‘எல்லாரும் ஊர் சுத்த போனா என்ன? நீ போகாத’

‘இத செய்’ ‘அத செய்யாத’ என்று எதிலும் அவள் மூக்கை நுழைத்தாள். அவளிடம் தப்பித்துக் கொள்ள, கூசாமல் பொய் உரைப்பான், தமிழ். பல நேரம் இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்கும்… சில நேரம் வஞ்சனை இல்லாமல் குழைவான்! இது எதுவுமே எபிக்கு சகிக்கவில்லை. காவியமாவது காதலாவது மனநிலை எபிக்கு!

 

விழியும் கேட்பாளே இதே போல் கேள்விகளை! அந்த இளம் அறிவாளி மூளை கணக்குப் போட்டது. தமிழின் காதல் வாழ்வை பார்த்தபின் காதலைக் கொஞ்ச நாள் தள்ளிப் போடுவதில் தவறில்லை என்ற எண்ணம் எபியிடம் வலுத்தது.

 

தள்ளிப்போட அதிக காலம் அவர்களிடம் இல்லை என்று யார் அவனிடம் கூறுவது!

 

 

பல மாதங்களுக்கு பின்:

 

என்றும் போல் அன்றும் காலையில் ஒரு கப் காபியோடு அமர்ந்தவன் கரத்தில் கைப்பேசி. காணொளி திரையில் அலர்விழி.

 

தினமும் இது இவர்களின் வழமையாகி மாதங்கள் ஆகிறது.

 

“ஏன் இன்னைக்கு லேட்?”, முன்போல் குரலில் தயக்கமெல்லாம் இல்லை. செல்ல கோபம் எட்டிப் பார்த்தது அவள் தொனியில்.

 

“சொன்னேனே நைட் வீட்டுல பார்ட்டின்னு. படுக்க லேட் ஆகிடுச்சு”

 

“தண்ணி அடிச்சீங்களா?”

 

“பியர் மட்டும் தான்.. ரெண்டு கேன்!”

 

“ம்ம்.. எதுக்கும் பார்ட்டி தானா?”

 

“காலேஜ்ல சீட் கிடைச்சது பெரிய விஷமில்லையா?”

 

“முடிவு பண்ணியாச்சா? எத அக்ஸப்ட் பண்ணறதா ப்ளான்?”

 

“என்ன ரெண்டு தான் கிடைச்சிருக்கு… ஹாவர்ட், ப்ரின்ஸ்டன் ரெண்டும் வெயிட்டிங்-ல போட்டிருக்கான். NYU கிடைக்கவே இல்ல. ஸ்டான்ஃபர்ட், எம்.ஐ.டி. மட்டும் தானே கையில இருக்கு!”

 

“அது ரெண்டு தானே உங்க ட்ரீம். இதுல கிடைக்கிறது ஒன்னும் லேசுபட்ட காரியம் இல்லியே.. அப்புறம் என்ன? ஸ்டேன்ஃபர்ட் தானே டாப்.. அதுக்கு தான் போக போறீங்களா?”

 

“இல்ல விழி.. அதோட லொக்காலிட்டி பிடிக்கல.. எம்.ஐ.டி. தான் எல்லா விதத்துலேயும் சரியா வருது.. என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ஒருத்தன் (cambridge porter square)கேம்பிரிட்ஜ் போர்டர் ஸ்கொயர் கிட்ட தங்கியிருக்கான். ஏரியா ரொம்ப நல்லா இருக்கு! அதையே ஒத்துக்கலாம்ன்னு நினைக்குறேன். என்ன சொல்ற?”

 

‘தோசைக்கு தேங்கா சட்டினியா.. தக்காளி சட்டினியா’ என்று கேட்டுச் செய்யும் வீடு போல் தான் இருவரின் மனப்போக்கும். அவள் கேள்வி கேட்பதும் இவன் பதில் கொடுப்பதும் அவனுக்கு ஏனோ படுத்தி எடுப்பதாகத் தோன்றவில்லை. அதை அவன் கவனித்தானா என்றும் தெரியவில்லை.

 

“யோசிக்க என்ன இருக்கு சரின்னு சொல்லுங்க! எப்போ ஸ்டார்ட் பண்றான்?”

 

“செப்டம்பர் 1”

 

“எப்போ தான் இந்த ப்ராஜெக்ட் முடியும்?”, சலிப்பாகத் தோன்றியது அலர்விழிக்கு.

 

“இழுத்தடிக்குது! ஜூலை எண்ட் வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்காங்க! இன்னும் கூட லேட் ஆகலாம்.”

 

“ஜூலையா? நீங்க எப்போ தான் பேப்பர் போட போறீங்க?”

 

“ம்ம்ம்… நோடீஸ் குடுக்கணும்!”, யோசனையாய் அவன்.

 

“நடுல வருவீங்களா மனோ?”, ஏக்கம் எட்டிப் பார்த்தது.

 

யோசனையின் முடிவாய் கேட்டான், “நான் வேணும்னா கேப் இயர் வாங்கட்டா?” என்று.

 

“சீட் கிடைச்ச பிறகா?”

 

“ஆமா அட்மிஷன் கன்ஃபர்ம் ஆன பிறகு.. நான் ஒரு வருஷம் கழிச்சு சேந்துக்கிறேன்னு சொன்னா.. ஒரு வருஷம் கேப் குடுப்பாங்க!”

 

“எதுக்கு மனோ? அதெல்லாம் வேண்டாம். சட்டுன்னு முடிச்சுட்டு வாங்க!”, அவன் சந்தேகத்தை முடித்து வைத்தாள் பெண்.

 

அவன் படித்து முடிக்கவும் இவள் ஒரு வருட வேலைக்கான கெடு முடியவும் சரியாக இருக்கும். வீட்டில் திருமண பேச்செடுக்கும் போது இவன் இங்கு இருக்க வேண்டாமா? இது அலர்விழி கணக்கு! அவன் கணக்கு என்னவோ?

 

நேரம் பார்த்தான்.

 

“ஹெவி ஸ்னோ இந்த வருஷம். காலையில இருந்தே காத்துப் படுத்தி எடுக்குது! இன்னைக்கு ஸ்னோ ஸ்டார்ம் (snow storm) இருக்கு. ஸ்டீஃபன் டெக்ஸாஸ் போயிருக்கார். அபிய தனியா வெளியில அனுப்ப முடியாது. அவள கூட்டிட்டு நான் கடைக்கு போகணும். நீ தூங்கு காலையில பேசலாம்!”

 

‘ஸ்டீஃபன் என்று அவளுக்காக இருந்தான் இன்று இருக்க?’- இது அலர்விழி. இன்று வரையிலுமே ஒன்று அபிகெயில் தனியே அவள் காரியத்தைச் செய்வாள் இல்லை எபி முன் போய் நிற்பான். இது அனைத்துமே அலர்விழிக்கு தெரியும்.

 

அவளுக்காகப் பரிதாபப்பட்டு இவன் அவளோடு சுற்றுவதும், அதனால் இவர்கள் பேச்சு தடைப்படுவதும் முதல் முறை இல்லையே..

 

நீண்ட மூச்சோ.. “பாய்”யை உதிர்த்தாள். அவள் வலியும் ஏக்கமும் அவளுக்கானது. பேச்சிலோ கண்களிலோ காட்டி கொள்வதில்லை.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!