அ26 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 26
“மூணே வாரம் தானே..”, பெண்ணவளின் அடங்க மறுத்த தலைமுடியை வருடிக்கொண்டே கேட்க,
Advertisement
“ம்ம்ம்..”, என்றாள் அலர்விழி, சிவந்த மூக்கை உறிஞ்சிக்கொண்டே.
Advertisement
“கிளம்பற நேரம் என்னது இது.. குட்டி குழந்த மாதிரி கண்ண கசக்கிட்டு?”, கேட்டுக்கொண்டே பனித்த இமைகள் இரண்டிற்கும் இடம் பெயர்ந்து மனோவின் விரல் வருடல்.
Advertisement
மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “மிஸ் பண்ணுவேன் மனோ”, என்றாள் பெண்.
Advertisement
அடுத்த நான்கு மணி நேரத்தில் அவனுக்கான விமானம் புறப்படவிருக்க, அலர்விழியிடம் விடைபெற்று செல்வது அவ்வளவு எளிதாயிருக்கவில்லை மனோவிற்கு.
“டெய்லி காலைலயும் நைட்டும் கண்டிப்பா பேசறேன். நடுவில உனக்கு எப்போ பாக்கணும்ன்னு தோணினாலும் நேரம் பாக்காம ஃபோன் போடு. பத்திரமா இருந்துக்கோ.”, தலை வருடி நெற்றி முத்தம் வைத்துக் கிளம்பியவனை அணைத்து, “லவ் யூ மனோ”, என்று அனுப்ப மனமில்லாமல் அணைத்த வாக்கிலேயே நின்றவள் முதுகு வருடப்பட்டது.
வருடல் இதம் தரவேண்டாமா? இல்லை தரவில்லை! நாளைய தனிமையைக் கிளறி அவள் வேதனையை அதிகரித்தது.
தலையில் கன்னம் பதித்து நின்றிருந்தவனுக்கு மட்டும் விட்டுச் செல்ல ஆசையா என்ன? நேரமாவது அவளுக்கே தெரிந்தது. “கிளம்பலாம் மனோ..”, என்றாள் அவனிடமிருந்து விலகி கொண்டே.
“ம்ம். ஊர்ல இருந்து இதையும் அதையும் வாங்கிட்டு வாங்கன்னு லிஸ்ட் குடுப்பன்னு பார்த்தா.. வாய திறக்க காணம்?”
“வாட்ஸ் ஆப்ல அனுப்பறேன்..”, மெல்லச் சிரித்தாள்.
“இது தான் என்னோட விழி. நான் கிளம்பறேன்.. நீ பத்திரமா இரு. சட்டுன்னு வந்திடுவேன்”, தலை வருடி, உச்சி முகர்ந்து, கன்னம் தட்டி பயணப்பட்டவனோடு.. விமான நிலையம் வரை கூடவே சென்று, விமானம் புறப்பட இரண்டே மணி நேரம் இருக்கவும் விடைகொடுத்தாள்.
கடந்து சென்ற நான்கு நாட்கள் மனோவோடான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அலர்விழிக்கு தெள்ள தெளிவாய் காட்டியது. பாஸ்டனில் ஒரே வீட்டிலிருந்தாலும், வீட்டில் தங்குவதில்லை. எப்பொழுதும் எங்கேனும் கூட்டிச் சென்றுவிடுவான். விருந்திற்கு சென்று வந்த உவகை மட்டுமே நிலைக்கும்.
ஆனால் கடந்த தினங்களில், அவள் உடல்நிலையை மனதில் கொண்டு எங்கும் அழைத்துச் செல்லவில்லை. சண்டை, சமாதானம், சமையல், வீட்டு வேலை, அடுத்த வாரத்திற்கான காய் கறி ஷாப்பிங் என்று கணவன் மனைவி போன்ற வாழ்க்கை. இருஅறைகளில் தேகங்கள் விலகி இருந்தாலும் மனம் ஒன்றியிருந்தது.
மனோ சென்ற விமானம் சென்னையில் தரையிறங்கிய நேரம், நியூயார்க்கில் தளமிறங்கியது சென்னையிலிருந்து வந்த மற்றொரு விமானம்.
‘வெல்கம் டாக்டர். பிரவீன்’ என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி நின்றவனை நோக்கி கையத்துக் கொண்டே வந்தான் திறம்படைத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.
நியூயார்க் மாநிலத்தில் உள்ள மேன்ஹாட்ன்(Manhattan) நகரில் அமைந்திருந்த புகழ் பெற்ற மருத்துவமனையில், நடக்கவிருக்கும் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சையில் பங்கெடுக்கும் மருத்துவ நிபுணர்களில் இவனும் ஒருவன்.
இந்த அறுவை சிகிச்சைக்கு அவன் ஒத்து கொண்டதிற்கு இரண்டு காரணங்களின் ஒன்று அலர்விழி மற்றொன்று நோயாளிகளின் வயதும், நிலையும்!
நேர்கோடு போல் உச்சந்தலைகள் இரண்டும் ஒட்டி பிறந்த(craniopagus, conjoined twins), ஆரோக்கியமான 20 மாத பேரப் பிள்ளைகளை பார்த்து கொண்டிருக்க யாருக்கு வலிக்காது? பணம் கொட்டிக் கிடந்ததும் ஒன்றும் செய்ய முடியாதவராய் இருந்த மத்திய மந்திரிக்கு, இப்படிப்பட்ட சிகிச்சை முன்னமே மேன்ஹாட்ன் மருத்துவமனையில் செய்து வெற்றி கண்டுள்ளனர் என்று, அவரின் மரணத்தருவாயிலிருந்த மனைவியை அறுவைசிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவன் கூற, அவனும் இதோ இங்கே சிகிச்சை செய்யும் குழுவோடு.
மூன்று கட்டமாக நடக்கவிருக்கும் இந்த அறுவை சிகிச்சை, ஐம்பது மணி நேரத்தை கடக்கக்கூடும். சிகிச்சை முடியக் குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகும். குழந்தைகள் இரண்டு வயதைத் தொடவிருப்பதால் சிக்கல்கள் அதிகம். மொத்தம் நூறு பேர் கொண்ட குழுவில் இவனும் ஒருவன்.
நான்கு மாத அவகாசத்தில் அலர்விழியோடு நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது மருத்துவனின் எண்ணம். அதன் முதல் கட்டமாக, அமெரிக்கா வந்த மறுநாளே அலர்விழி வீட்டு வாயிலில் மலர்க் கொத்தோடு நின்றிருந்தான்.
அழைப்பு மணி அடிக்கவும், ‘யாரு டா நம்ம வீட்டுக்கு?’, என்று நினைத்துக் கொண்டே கதவின் துவாரம் வழி பார்க்க, பார்சல் வந்திருந்தது. டெரெரியம்(terrarium) ஒன்று வந்திறங்கியது. குட்டி கண்ணாடி கூட்டிற்குள் உயிருள்ள குட்டி செடிகளும், கண்கவர் ஊதா நிற ஆர்கிட் செடியும். அழகான குட்டி தோட்டம்! மனோ அனுப்பி இருப்பான் என்று அனுப்புநர் விபரம் தேட.. அதில் ஒன்றும் இல்லை.
அடுத்த அரை மணி நேரத்தில், ஒரு பெரிய டப்பா வந்திறங்கியது. உள்ளே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது ஃபெரேரோ ரோஷே(Ferrero rocher), லின்ட்(Lindt), கொடைவா(Godiva) என்று பலவகை சக்கலேட் வகைகள். இதுலும் அனுப்புநர் விபரம் இல்லை.
மனோவிற்கு நடு இரவு என்பதால் அழைக்கவில்லை. ஆகஸ்ட் 15! அன்று தானே முதன் முதலாய் காதலை உரைத்தான்? அதற்காக இருக்குமோ? கடந்த வருடம் வரை இவள் தான் எதையேனும் அனுப்பி வைப்பாள். பெட்டியில் இருந்த சட்டையைப் பார்த்திருப்பானோ? இந்த வருடம் அவன் அனுப்பிவிட்டிருக்கிறான் என்று பெண் குதூகலித்தாள்.
கண்மூடி மிட்டாயை ரசித்து நக்கிக் கொண்டிருக்க, மீண்டும் அழைப்பு மணி. அடுத்து என்னவோ? பெண் துள்ளிக் குதித்து ஓடி கதவின் துவாரம் வழி பார்க்க, பெரிய மலர்க் கொத்து தான் தெரிந்தது.
மலரின் வண்ணம் கண்டதுமே அவளின் ஆசை காதலன் அனுப்பியதாகவே நம்பினாள்.
கதவைத் திறக்க, நின்றிருந்தவனைக் கண்டவளுக்கு இன்ப அதிர்ச்சியே..
“டாக்டர்?”, கண்கள் முட்டை அளவிற்கு விரிந்தது.
“அத்தான், அலர்விழி”, என்று புன்கைத்தான்.
“வாவ்.. சத்தியமா எதிப்பாக்கல…”, முகம் மலர.. அவள் விழிவிரிக்க,
“உள்ள கூப்பிட மாட்டியா?”, என்றவனை, “அச்சோ.. என்ன கேள்வி இது? வாங்க வாங்க..”, என்று மலர்ந்த முகமாய் அழைக்க, அவன் முகமும் அகமும் மலர்ந்தது.
மலர்க் கொத்தை அவன் நீட்ட, வாங்கியவள் கண்கள் அதில் பதிந்தே நின்றது. அந்த மென்-ஊதா நிற பியனியில்(Peony) மனோ சிரித்தான். மலர்க் கொத்தின் இடையிடையே மணம் பறப்பும் லாவெண்ட(ர்)(Lavender), லைலக்(Lilac) கொத்துகள். அனைத்துமே விதவிதமான பர்புள் நிறம் கொண்டவை.
“என்ன அலர்விழி?”, அசைவின்றி நின்றவள் அவனுக்குள் மின்னலை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். கவிதை பேசிய அவள் விழிகளும்.. பூரித்த அவள் முக பாவமும், ஆசை கொண்ட ஆண்மகனை அசைத்துப் பார்த்தது.
கண்முன் மனோ சிரித்தான். கண்களில் மெலிதான் நீர்ப்படலம்… இதழ் சிரித்தது, முகம் பூரிப்பைக் காட்டியது. “ரொம்ப ரொம்ப அழகா இருக்கு டாக்டர். அதுவும் பர்புள்? வாவ்… ஜஸ்ட் வாவ்”, மலர்களைப் பார்த்து நின்றவள் முகத்தில் ஏதேதோ உணர்வுகளின் பிரதிபலிப்பு.. அவனை ஈர்த்தது.
பெரிய பெரிய மலர்கள்.. இரண்டு கைகளால் அடக்க முடியா மலர்க் கொத்து. மொத்தம் 50 மலரேனும் இருக்கும் என்று தோன்றியது.
மலர்க் கொத்தை கட்டிக் கொண்டவள் முகம் அதில் புதைந்து போனது. மலர்க் கொத்தை கொடுத்தவனுக்கு வேறு என்ன வேண்டும்? அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
சில நிமிடங்களில் இயல்புக்கு வந்தவள், “காபி.. டீ? என்ன குடிக்கறீங்க?”, என்று அவன் முன் வந்து நின்றாள்.
“உனக்கு என்ன குடிக்கப் பிடிக்குமோ.. அதையே குடேன்..”, என்றான் ஆசையாய்.
“டீ போடறேன். ரொம்ப ஹெவியா இருக்காது. அப்போ தான் நைட் சாப்பாட்டுக்கு வயறுல இடம் இருக்கும்”
“இல்ல மா… அவ்வளவு நேரம் இருக்க முடியாது. டீ போதும். கிளம்பறேன்”, என்றவனை வம்படியாய் நிறுத்தினாள்.
“வராதவர் முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க. அப்பிடி எல்லாம் விட முடியாது. நீங்க இருந்தா உங்க புண்ணியத்துல நானும் ருசியா ஏதாவது வயத்துக்குப் போடுவேன்..”, கெஞ்சலாய் அவனை நோக்க, அவன் மறுக்கக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் அவளிடம் மறுப்பானா என்ன?
“டீ நல்லா இருக்கு அலர்விழி”, மெல்ல ரசித்து உறிஞ்சினான். காலம் முழுவதும் இது போன்ற தேநீரை அருந்தும் ஆவலை அவளிடம் உரைக்க ஆசை. சௌந்தர்யாவிற்கு கொடுத்த வாக்கு, நாவை கட்டிப் போட்டது. அவரிடம் அவன் விருப்பத்தைக் கூறும் முன் இவளிடமே கூறியிருக்க வேண்டும். முதன் முதலாக வருந்தினான்.
“தாங்க்ஸ் டாக்”, அவள் புன்னகைக்க..
“இன்னும் டாக்டர் தானா?”, பாவம் போல் பார்த்தான்.
“தாங்க்ஸ் அத்தான்”, ‘போதுமா?’ என்பது போல் புன்னகைத்தாள். அவன் ஆகாயத்தில் பறந்தான். பெண்ணிடம்.. அவள் பேச்சில், சிரிப்பில் ஒட்டுமொத்தமாய் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான். யாருக்காகவும் அவளை விட முடியாது என்ற எண்ணம் வலுத்தது.
அவள் மலர்களோடு தன்னை இணைத்து கைப்பேசியில் பதித்துக் கொள்ள, அவளை அவன் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இங்க வாங்க டாக்.”
“பச்…”
“சாரி சாரி.. இங்க வாங்க அத்தான். பூவோட செல்ஃபி எடுத்துப்போம்..”
இருவருக்கும் இடையே இருந்த மலர்க்கொத்து, இருவருக்கும் முன்னே வந்தது. மலர்களின் மணம் அவள் நாசியை நிரப்ப, அவள் மணம் அவனை நிரப்ப… அவர்களை புகைப்படங்களாய் கைப்பேசி நிரப்பிக் கொண்டது.
இரவு உணவை அவள் தயாரிக்க, அடுக்களை ஓரத்தில் நின்று கதை பேசினான். “எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும் போது வரேன் அலர்விழி. எங்கேயாவது கூட்டி போயேன்!”
“வாங்க அத்தான். மென்ஹாட்ன்ல இருந்து நியூ ஜெர்சிக்குள்ள வர.. 20 நிமிஷம் ஆகுமா? இங்க வர ஒரு பத்து, பதினைஞ்சு நிமிஷம் தானே! அடிக்கடி வாங்க அத்தான்.”
உணவை அவள் பரிமாற… “நீயும் உக்காரு. ஒன்னா சாப்பிடுவோம்..”, என்றவனோடு அடுத்த அரை மணி நேரம், அவன் இங்கு வந்ததின் நோக்கம் பற்றி பேசினாள்.
“நூறு டாக்டர்ஸ்சா?”, வாய் பிளந்து, கண்கள் விரிந்தது.
“இல்ல மா.. மொத்த ஸ்டாஃப்”
“எப்பிடி இண்டியன் டாக்டர இங்க அல்லோ பண்ணினாங்க, சர்ஜரி பண்ண?”
“அது மாகாதேவன் பிரச்சனை”
“மினிஸ்டர் மாகாதேவன்?”
“ம்ம்”
“இன்சூரன்ஸ் இருக்காதே.. ரொம்ப செலவாகுமே..”
“பதினைஞ்சு.. இருபது கோடி! அவர் சேத்து வச்சிருக்க காசுக்கு, இது யானைக்கு போடுற ஒரு கவளம் அளவு தான்!”
“வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று”, அவள் கூற,
“அப்பிடினா?”
“யானை, பல கவளம் சாப்பிடும். ஒரு கவளம் கீழ விழுந்தா அதுக்கு நஷ்டம் இல்ல. ஆனா கோடி எறும்புங்க பயன் படும்! நீங்க, யானை… கவளம்.. அப்பிடின்னு சொல்லவும் சம்மந்தம் இல்லாம இது தோணிச்சு!”
“என்னவோ சொல்ற. எனக்கு ஒன்னும் புரியலை.”, வியந்த பார்வை பார்த்தான்.
“அப்போ அவர் உங்களையும் நல்லா கவனிச்சிருப்பாரே! இதோட நீங்களும் செட்டில் ஆகிடலாம் தான?”
“ஓ… நான் தான் எறும்பா?”, மெல்லச் சிரித்தான். புரையேற்றி கொண்டவன் தலை தட்டி, குடிக்க நீர் கொடுத்தாள். ஆசை கொண்ட ஆண் மனம் அவளை மனைவியாய் பார்க்கப் பேராசை கொண்டது. ஆசையில் தவறேதும் இருப்பதாக அவனுக்கு இந்த நிமிடம் வரை தோன்றவில்லை. மனோவா எபெனேசர் என்ற ஒருவன் அலர்விழி வாழ்வில் இல்லாமல் போயிருந்தால், பிரவீன் என்ற ஒருவனின் ஆசை, பேராசை பட்டியலில் வந்திருக்காது! இவனுக்கு அவன் வில்லனாய் போனது பரிதாபம்!
இவர்கள் பொழுது அழகாகப் பேச்சு சுவாரசியத்தில் செல்ல, எபியின் நாட்கள் அவ்வளவு உவகையாய் இல்லை. மகனைக் கண்ட ஆனந்தத்தில் ஆசையாய் ஓடிவந்த தாய் தடுக்கி விழ, அவன் வீட்டுக்குள் நுழைந்த அன்றே அன்னை மூட்டு வேதனையில் விழுந்தார்.
“டாக்டர பாப்போம் மா..”, என்ற மகனோடு செலவிட வேண்டிய நேரம் எல்லாம் வீணாய்ப் போகுதே என்ற வருத்தம் அவரிடம். ஆனால் வேறு வழி இருக்கவில்லை. மறுநாள் எழுந்து நிற்க முடியவில்லை.
“ஜானகி ஹாஸ்டல்ல ஒரு மலையாளி பொண்ணு தங்கியிருக்கா எபி, அவ அப்பா ஆயூர்வேதா டாக்டராம். தாம்பரத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஆயூர்வேதா ஹாஸ்பிட்டல் வச்சிருக்காராம். ஜானகி கூட கழுத்து வலிக்கு வாரம் வாரம் போய் மசாஜ் பண்ணிட்டு இருந்தா. இப்போ வலி இல்லியாம். அங்க பாருன்னு என்ட்ட சொன்னா. வலி தான் இல்லியேன்னு பாக்கல. அங்க போவோமா?”
ஆங்கில மருத்துவ முறையில் நம்பிக்கை இழந்து வருடங்கள் ஆகயிருக்க, எஸ்தரோடு ஆயூர்வேதா மருத்துவமனைக்கு சென்னர், கணவனும் மகனும். குறைந்தது இரண்டு வாரமேனும் தங்க வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட, எபியின் நாட்கள் மருத்துவமனைக்கும், கணினி மையத்திற்குமாக சென்றது. ஆகஸ்ட் 15 எல்லாம் அவன் சிந்தனையில் இல்லை. அம்மாவின் வலியின் அலறல் முன் எதுவுமே நினைவில் இல்லை. இரவு ஒரு முறை அலர்விழியோடு 10 நிமிடங்கள் தூங்கிக் கொண்டே பேசுவதோடு சரி.
இன்றும் மிகுந்த களைப்பு, அமெரிக்காவில் இரவு, அவன் உடல் தூக்கத்திற்கு ஏங்கியது. இங்குப் பகல், தூங்க முடியாது. மருத்துவமனை செல்லவேண்டும். அப்பாவிற்கு இன்று விடுப்பு எடுக்க முடியா சூழல். சென்று அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். நாளை முதல், வாரம் இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தால் போதும்! அடுத்த ஐந்தாவது நாள், அமெரிக்காவிற்கு மீண்டும் பயணம்! பேச நினைத்து வந்த அனைத்தும் மறந்து போனது விழியின் மனோவிற்கு!
சென்டரில் ஆடிட்டரோடு வேலை குவிந்து கிடக்க, எபிக்கு தலை வெடிக்கும் அளவு வலி. மதிய உணவை முடித்துவிட்டு, ஓட்டுநரும் இல்லாது போகவே அவனே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினான். சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது மருத்துவமனை கண்முன் தெரிய! அரவமில்லா அந்த பெரிய சாலையில் இன்னும் இரண்டே நிமிடம் தான்.. சொல்லிக்கொண்டான்.
அதனால் மூடும் இமைகளை மிகுந்த கடினத்தோடே திறந்து வைத்திருக்க முயன்றான். தன்போல் கண்கள் மூட சட்டென்று அவன் தூங்கிவிழுவது அவனுக்கு உரைக்க… தலையை உலுக்கவும் அவன் எதிரில் சாலையைக் கடந்து கொண்டிருந்தார், அம்மா வயது பெண்மணி! இருவருக்குமே அதிர்ச்சி தான்!
ஸ்டியரிங் வீலை சட்டென்று திருப்ப, அது அங்கிருந்த கம்பத்தில் இடித்து நின்றது. கார் இடித்த வேகத்திற்கு, அவன் முகத்தில் வந்து அறைந்தது வாகனதின் காற்று-பை(air bag). சரியான வலி. முகத்தை தேய்த்துக் கொண்டவனுக்கு, ‘போதுமே’ என்றிருந்தது.
யாரைக் குற்றம் சொல்ல? சாலை விதிமுறை மீறி, வாகனம் வருவதை கவனியாமல், அவசரமாய் சாலையைக் கடக்க நினைத்தவரையா? தூக்கத்தின் நடுவே வாகனம் செலுத்துவதும், குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதும் ஒன்று தான் என்று தெரிந்தும்.. உடல் ஒத்துழைக்க மறுத்தபின்னும் அதை வதைத்தவனையா?
காரை ஓரம்கட்டி வெளிவந்தவன் கண்ணில் விழுந்தார் பெண்மணி, பயத்தில் இடரி விழுந்ததில் காலில் அடிபட்டிருக்கும் போல.. அவரால் நிற்க முடியவில்லை. நேரே அவரிடம் சென்றான்.
“என்னை உங்க மகனா நினைச்சுக்கோங்க”, என்றான்.
அவர் உணரும் முன்னே, சட்டென்று குழந்தையை ஏந்துவது போல் ஏந்தியிருந்தான். அவருக்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. மருத்துவமனைக்குள்ளே நுழையவும் அங்கிருந்த காத்திருப்பு இருக்கையில் இறக்கிவிட்டவனுக்கு அவரை தெரியும் என்ற உணர்வு. ஆனால் தெரியவில்லை.
“ரொம்ப சாரி ப்பா. என் பொண்ணு சொன்னாளேன்னு இன்னைக்கு தான் இங்க மாமியாருக்கு ட்ரீட்மென்டுக்கு வந்தோம். மாமியார் தனியா இருக்காங்கன்னு, எதிர்கடையில சாப்பிட்டுட்டு அவசரமா ஓடி வந்தேன்… உங்க கார் வந்ததை கவனிக்கல.”, என்றவர் அவனைக் கூர்ந்து பார்த்தார். அவருக்கும் அதே உணர்வு தான் போலும். ஆனால் அவனை அடையாளம் தெரியவில்லை.
“உங்க மகன் மாதிரி என்னை நினைச்சுக்க சொன்னேன். என் கிட்ட சாரி எல்லாம் எதுக்கு? என் மேலையும் தப்பிருக்கு ஆண்டி. கண்திறந்து, கொஞ்சம் பார்த்து வந்திருக்கணும். உண்மையாவே ரொம்ப ரொம்ப சாரி”
“புது காரா இருக்கு. முன்பக்கம் உடைஞ்சிடுச்சே! அத சரி பண்ண ரொம்ப செலவாகுமே பா? எவ்வளவு ஆகும்ன்னு சொன்னா, என்னால ஆனா தப்ப, நானே சரி பண்ணுவேன்.”
“தப்புன்னு பாத்தா… எனக்கும் அதுல பங்கிருக்கே ஆண்டி. நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகல. கடவுள தாங்க் பண்ணுவோம். பணம் வரும்,போகும்!அத பத்தி எதுக்கு நினைச்சுகிட்டு?”, என்றவன் அங்கிருந்த செவிலியை அழைத்து, அவர் கணுக்காலின் சுளுக்கு நீங்கி அவர் நடக்க ஆரம்பித்த பின்னரே அம்மாவைக் காணச் சென்றான். ‘நல்ல வேளை இடிக்கவில்லையே’ என்ற நிம்மதி அவனிடம்.
எபியின் முதுகு மறையும் வரை பார்த்து நின்றவர், மெல்ல அவர் மாமியார் இருக்கும் அறை நோக்கிச் சென்றார்.
“மகன் மாதிரின்னு சொன்னான் அந்த பிள்ள… மகனாகவே கூடவே இருந்தான் அத்த. கால் சுளுக்கு எடுக்கும் போது கைய பிடிச்சுகிட்டு பேச்சு குடுக்குறான், வலி தெரியாம இருக்க! பேச்சு பூரா அம்மா அம்மா தான்! கொடுத்து வச்ச அம்மா! அவன் அம்மாக்கு ரெண்டு வாரத்துல வலி நல்லா குறைஞ்சுடுச்சாம்! பிடிமானம் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டாங்க போல! இன்னைக்கு வீட்டுக்கு போறாங்களாம்.
எண்ணைய தேச்சுட்டு சுளுக்க எடுக்கும் போது உயிரே போயிடுச்சு! முழு நேரமும் கைய பிடிச்சுகிட்டு, ஆறுதலா தட்டிவிட்டுகிட்டே நின்னான். அந்த பையன் பேர கேக்காம வந்துட்டேன். முதல் முறையா எனக்கு இப்படி ஒரு மகன் இல்லியேன்னு நினைச்சேன் அத்த.”, நெகிழ்ச்சியோடு கூறிய சௌந்தர்யாவின் குரல் கரகரத்து.
(லண்டன் , கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.
https://www.bbc.com/news/av/health-48956943
https://www.bbc.com/tamil/global-54612009 )
