Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ28 – கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 28

 

தலைகள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிப் பிறந்த இரட்டையரை நல்ல முறையில் பிரித்து மாதம் ஒன்றாகியிருக்க, இன்று, ஒன்றாய்த் தூக்கி வரப்பட்டப் பிள்ளைகள் தனித்தனியே அவரவர் இருக்கையில்.

 



Advertisement

ஒருவனின் தனிப்பட்டத் திறமையோ உழைப்போ இல்லை. நூறு கைதேர்ந்த மருத்துவர்களும் செவிலியரும் காட்டிய அன்பினாலும் அக்கறையினாலும் பிள்ளைகள் இருவருக்கும் புதுவாழ்வு புலர்ந்தது.

 

“சொன்ன மாதிரியே சாதிச்சு காட்டிட்டீங்க தம்பி! எப்போ… என்ன வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க தம்பி. என் உயிர் உள்ளவரை இந்த உதவிய மறக்க மாட்டேன்” என்று மத்திய மந்திரி பிரவீனை தழுவி, நெகிழ்ச்சியோடு கூறிச்சென்றார்.

Advertisement

 

Advertisement

பிரவீன் அமெரிக்கா வந்த வேலை முடிந்திருந்தது. இரண்டு வாரங்களில் இந்தியா கிளம்பிவிடுவான். அவன் பக்க சாதக,பாதகம் மட்டுமே கருத்தில் கொண்டு, வந்த வேலை இரண்டையுமே பிழையின்றிக் கச்சிதமாக முடித்துவிட்டான்.

 

அலர்விழியும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கிளம்பிவிடுவாள் என்று கேள்விப்பட்டதும், முதல் வேலையாக வீட்டிற்கு அழைத்து, திருமணத்தைப் பேசி முடிக்கக் கூறிவிட்டான்.

Advertisement

 

அமராவதிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. அவர் விருப்பத்தைப் பற்றி மகன் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டதாய்த் தோன்றவில்லை. “நான் தான் அவ கூட வாழப் போறேன். இதுல உங்களுக்கு பிடிக்க என்ன இருக்கு? பேசி முடிங்க” என்றுவிட்டான். அவன் அப்படி எல்லாம் பேசுபவன் இல்லையே… அதனால் அவன் பேச்சை மீறமுடியவில்லை. போதாக் குறைக்கு அவனுக்குப் பரிந்து பேசிக்கொண்டு அவன் சித்தி!

 

“அக்கா… ரெண்டுப் பையனுங்களுக்கும் ஒரே குடும்பத்துப் பொண்ணுங்கள எடுத்தா… நம்மக் குடும்பமும் உடையாம இருக்குமே… ஃபாரின் எல்லாம் போன பொண்ணு! அவனுக்கு ஏத்த திறம சாலி! அவனுக்கும் வயசும் ஏறிட்டே போகுது. அவன் சரின்னு சொன்னதே பெரிசு, அவன் ஆசைப் பட்டப் பொண்ண முடிப்போம் க்கா. அவனே மாதவன் மாதிரி முடிச்சுட்டு வந்து நின்னா நமக்கு தானே அசிங்கம்!” என்று அம்பிகா மூளைச் சலவைச் செய்து முடித்தார். ஆக… பிரவீன் நினைத்ததை, பிசிறே இல்லாமல், நினைத்தது போலவே சித்தி மூலம் சாதித்து முடித்தான்.

 

அபிராமியின் விருப்பத்தில் மட்டுமா அவனுக்கு சிரத்தை இல்லை? உண்மையில் அவனுக்கு ஒருவர் விருப்பம் பற்றியும் கவலையில்லை. அவனுக்கு அலர்விழியை மிகவும் பிடித்துப் போனது. அவனை வேண்டாம் என்று கூற அவளுக்கும் காரணம் இல்லை. அதனால் நான்கு முறை அலர்விழியோடு வெளியே சென்றவன், ஒரு முறையேனும் அவள் விருப்பத்தைக் கேட்கவும் இல்லை அவன் விருப்பத்தைக் கூறவும் இல்லை.

 

அன்று இவன் முன் தானே அவள் அப்பாவிடம் பேசினாள். தியாகு மகளிடம் என்ன கேட்டாரோ.. இவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே கூறினாளே.. “இவருக்கு என்னப்பா… ரொம்ப திறமைசாலி, நல்ல டாக்டர். நம்பி தலைய அவர்கிட்டக் கொடுக்கலாம்!” என்று! – இது போதாதா அவள் மனம் அறிய?!

 

அவள் அப்படிக் கூறிய மறுநாளே வினோவின் குடும்பமும், பிரவீன் குடும்பமும் கடலூர் சென்றுவந்தனர். மகள் ஊருக்கு வந்ததும் இரு பெண்களுக்கு நிச்சயமும் அடுத்தடுத்த முகூர்த்தங்களில் திருமணம் என்று பேசி முடித்திருந்தனர். மணமுடிக்க ஆசைப்பட்டவனும் பெண்ணிடம் வாய் திறக்கவில்லை, பேச்சு வார்த்தை முடிந்து மூன்று தினங்கள் ஓடிவிட்ட பின்னும் பெற்றவர்களும் விஷயத்தை அவள் காதில் போடவில்லை.

 

இது எதுவுமே தெரியாமல், இரண்டு காதல் பறவைகள் ஊருக்குச் சென்றதும் பெற்றவர்கள் சம்மதத்தோடு திருமண வாழ்விற்குள் நுழையக் காத்துக் கிடந்தன.

 

எல்லா சனிக் கிழமை போல் இந்த சனிக் கிழமையும் விடிந்தது அலர்விழி-எபிக்கு. அடுக்களையில் நின்றிருந்தவள் பின்னால் சென்று எபி நிற்கவும், அவன் அணைப்பை எதிர்பார்க்க, அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், தோளில் ஆரம்பித்து கீழே இறங்கிய கைகள் இடையைச் சுற்றி வளைக்க, கட்டிக்கொண்டு நின்றான்.

 

வாகாய் மார்பில் சாய்ந்து கொண்டவள் தோள்பட்டையில் நாடி வைத்து, “என்ன டி பண்ற?” என்றான், வெட்டுப்படும் வெங்காயத்தை பார்த்து கொண்டே…

 

“ம்ம்ம்… அடுப்பங்கரையைக் கழுவி விட்டுட்டு இருக்கேன்… கேள்விய பாரு!” அவன் கையில் பட்டென்று வலிக்காத அடி ஒன்றை வைத்தாள்.

 

“ப்ச்! என்ன டிபன்னு கேட்டேன்.”

 

“உங்களுக்கு பிடிச்ச பூரி கிழங்கு. இப்போ இடத்தை காலி பண்ணினா நேரத்துக்கு சாப்பிடலாம்!”

 

“என் செல்லம் டி நீ…” தோள்பட்டையில் இதழ் பதித்து, “பூரி போடும் போது கூப்பிடு, சுடச் சுட முழுங்க வரேன்” கூறியவன், வெளியே சென்று மடிக்கணினியோடு சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

 

அதிக கொஞ்சல்களும் இல்லாமல், அதிக சண்டை சச்சரவும் இல்லாமல் நாட்கள் இருவருக்கும் நகர்ந்தது என்றால் மிகையாகாது. காலை உணவை முடிக்கவும் வீட்டிலிருந்து அலர்விழிக்கு அழைப்பு வந்தது.

 

சௌந்தர்யா பேசினார். அழைப்பு வந்ததுமே, கைப்பேசியோடு படுக்கையறை சென்றிருந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் சத்தம் நடுக்கூடத்தில் அலுவலக வேலையாய் அமர்ந்திருந்தவனை வந்தடைந்தது. சத்தம் அதிகமாகவும், கதவை திறந்து கொண்டு படுக்கையறை சென்றான்.

 

கண்களில் நீரும் முகத்தில் கோபமுமாக… கெஞ்சலும் கோபமுமாக கத்திக்கொண்டிருந்தாள், அவன் விழி! அடுத்த இரண்டு நிமிடங்களின் அழைப்பு துண்டிக்க பட்டிருக்க,  செய்வதறியாது நின்றிருந்தாள் பெண்.

 

“விழி?” என்றவனைப் பார்த்தாள். பதிலில்லை அவளிடம். ‘உன் மேல நம்பிக்கை வச்சு, உன் ஆசைக்கெல்லாம் மதிப்பு கொடுத்த, உன் பெத்தவங்க உனக்கு முக்கியம்னா… அந்த இடத்தையும் அவனையும் தலை முழுகீட்டு வா. இல்ல எங்களைத் தலை முழுக வேண்டி இருக்கும்!’ அம்மா கூறியது எதிரொலித்தது.

 

அவள் மனோவை அவளால் தலை முழுக முடியுமா? அம்மா அப்பாவை விடமுடியுமா? கண்கள் கரித்து கொண்டு வந்தன. ‘ஒருவரையும் விட முடியாதே! மனோ இல்லாத வாழ்வு கசக்குமே. இவன் இடத்தில் வேறொருவனா?’

 

‘உனக்கு, ஊனமா பிறந்த உன் தங்க பத்தி நினைப்பிருந்தா… இந்த காரியம் செய்வியா? அவ்வளவு சுயநலவாதியவா… இருக்க அன்பெல்லாம் கொட்டி வளத்தோம்?’

 

‘நான் சுயநலம் பிடித்தவள் தானோ?’ , ‘அக்காவாய், மகளாய் தவறிவிட்டேனோ?’ அம்மா தலையில் ஏற்றி நிறுத்திய பாரம் அழுத்தியது.

 

“என்ன டி பட்டு?” நாடி பிடித்து முகம் தூக்கியவனைப் பார்த்தாள். “என்ன விழி…   ஏன் ஒரு மாதிரி இருக்க? அம்மா கூட சண்டையா? நம்ம அம்மா தானே, எல்லாம் சரி ஆகிடும். வருத்தப்படாத”

 

என்னவென்றே தெரியாமல் தலை வருடி நின்றவனை கட்டிக் கொண்டவளுக்குப் பேச்சு வரவில்லை. அழுகை வெடித்தது. “என்ன விழி… சொன்னா தானே தெரியும்?” தலையை வருடி விட… அழுகை அதிகமே ஆனது.

 

மனோ இல்லாத ஒரு வாழ்வை நினைக்க முடியவில்லை. “நீங்க இல்லன்னா நான் செத்து போயிடுவேன் மனோ..” நெஞ்சில் முகம் புதைத்துக் கதற மட்டும் தான் முடிந்தது பெண்ணால்.

 

தன்னிலிருந்து அவளைப் பிரித்து, கண்ணீர் துடைத்து, “நான் எங்க போக போறேன் உன்ன விட்டுட்டு? இங்க தான் உன் கூடவே இருக்கேன். வீட்டுல விஷயத்தை சொல்லிட்டியா? ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாங்களா? அதுக்குத்தான் இந்த அழுகையா? இவ்வளவு தான் உன் தைரியமா விழி? இத நாம எதிர்பார்த்ததுதானே?” என்று முகம் பார்த்து நின்றவனிடம்,

 

“ஏதேதோ சொல்றாங்க மனோ. எவனோ மாப்பிள்ளையாம்… அவன் வீட்டுல இருந்து வந்தாங்களாம்… பேசி முடிச்சுட்டாங்களாம்.” என்றாள், மூக்கை உறிஞ்சிக்கொண்டே.

 

“முடிச்சுட்டாங்கன்னா என்ன அர்த்தம்? உன்ட்ட கேக்காமலே கல்யாணத்துக்கு பேசி முடிச்சுட்டாங்களா? புரியலை விழி”

 

“எனக்கும் தான் மனோ புரியல. எங்க விருப்பத்துக்கு எதிரா எந்த முடிவும் எடுக்கவே மாட்டாங்க. நம்ம கல்யாணத்துக்கு அம்மா மட்டும் ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைச்ச நினைப்பு கூட மாதுண்ணா கல்யாணம் முடியவும் மாறிடுச்சு! அண்ணா அண்ணிய ஏத்துகிட்ட மாதிரி நம்மளையும் ஏத்துப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்போ என் தலையில வெடிகுண்ட போடறாங்க!”

 

“என்ன சொன்னாங்க? அத முதல்ல சொல்லு!”

 

“’மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்தாங்க. உனக்கு மாப்பிள்ளைய பிடிக்கும்ன்னு அப்பாட்ட சொல்லியிருந்தியே… அதுனால, அவங்கட்ட சரி சொல்லிட்டோம். நாலு மாசத்தில கல்யாணம். தேதி குறிக்கப்போறோம்… உனக்கு சந்தோஷம் தானே’ன்னு சொல்லவும், நான் உங்கள விரும்பறதா சொன்னேன். நீங்க கிரிஸ்டியன்னு சொல்லவும் அடுத்து பேச கூட விட மாட்டேங்கறாங்க! கல்யாணம் பேசி முடிச்சாச்சு. இனி ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சாதிக்கிறாங்க! அந்த ஆளோட விபரம் குடுங்கன்னு கேட்டேன். ‘நீ வா பேசிக்கலாம்’ன்னு சொல்றாங்க!”

 

“நீ பிடிச்சுதுன்னு சொன்னியா? இது எப்போ? எனக்கு தெரியாம?”

 

“அப்படி மாப்பிள்ளைன்னு பேச்சே வரலியே மனோ. அப்புறம் தானே நான் பிடிச்சுதுன்னு சொல்ல? அவன் எவன்னு கூட தெரியல!”

 

“ம்ம்ம்! பேசியிருக்குன்னு தானே சொன்னாங்க. இன்னும் நிச்சயம் பண்ணலியே. அப்படியே நிச்சயமே முடிஞ்சிருந்தா கூட கல்யாணம் ஆகலியே அப்புறம் என்ன? நாலு மாசம் கழிச்சு தானே கல்யாணம்ன்னு சொன்னாங்க! இன்னும் ரெண்டரை மாசம் நீ இங்க தானே இருக்க போற! அந்த டைம்ல, இங்க இருந்தே பேசி புரியவைப்போம். நாலு மாசம் கழிச்சு நடக்கிற கல்யாணத்தில நீ தான் பொண்ணு … நான் தான் மாப்பிள்ளை”

 

அவனை வேற்று கிரக வாசி போல் பார்த்தாள்.

 

“என்ன டி?”

 

“கண்ண திறந்துட்டே கனவு?”

 

“நாலு மாசம் இருக்கு விழி! ஏன் இவ்வளவு பதட்டம்?”

 

“நீங்களும் என்னோட வரக் கூடாதா மனோ?”

 

“வரலாம் தான். இது ரொம்ப மேஜர் லான்ச். முடிச்சுட்டு போன்னு நிக்கிறாங்க! முடியாதுன்னு கிளம்பினா, இவ்வளவு பெரிய கம்பனிய பகைச்சுகிட்டு என் கெரியர குழி நோண்டி புதைச்சுட்டு தான் வரணும் டி! போன வேலையும் இப்படி தான் பாதியிலேயே விட்டுட்டு வந்து அவங்க கழுத்தறுத்தேன். அதையே செய்ய முடியாது டா.

நீ போன பிறகு ரெண்டே மாசம் தானே… வந்திடுவேன். வந்ததும் நம்ம கல்யாணம்!”

 

“நடக்குமா மனோ? எனக்கு நம்பிக்கையே இல்ல மனோ!”

 

“நடக்கும்னு நம்பு! அப்பிடி வீட்டுல புரிஞ்சுக்க மாட்டேன்னு நின்னா… அப்போ என்ன செய்யறதுன்னு பாப்போம். அப்படி எல்லாம் உன்ன விட்டு கொடுத்துட்டு நிப்பேன்னு நினைச்சியாக்கும்? உன்ன அப்பிடியே எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி, மேடை வரைக்கும் கூட்டிட்டு போனாலும், உன் கழுத்தில நான் தான் தாலி கட்டுவேன்! அழாத டி பட்டு” கூறியவன், மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

 

நெஞ்சோடு ஒண்டிக் கொண்டவளுக்கு நெஞ்சை அடைத்தது. ஏனோ பெண் மனம் அவன் கூற்றை ஏற்கவில்லை. இப்படி இவனோடு ஒட்டி உறவாடியபின் வேறு ஒருவனை யோசிக்க முடியவில்லை. தங்கையை முன் நிறுத்தி அம்மா காரியம் சாதிக்க நினைப்பது வலித்தது. உண்மையில் மேடை வரை கொண்டு சென்றுவிட்டால்? ம்ம்ஹூம்… முடியவே முடியாது!

 

“எதுக்கு ரிஸ்க்? இங்கேயே கல்யாணம் பண்ணிக்கலாம் மனோ…” என்றாள் தீர்மானமாய்.

 

“என்ன டி? அசால்ட்டா சொல்ற? நம்மள பெத்தவங்களுக்கு கொடுக்கிற மரியாதையா இது? ஒருத்தரை விரும்பறது தப்பில்ல விழி. அதுக்காக வீட்டுக்கு தெரியாம எல்லாம்… என்ன டி? உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லற என் மேலயாது நம்பிக்கை வை. பேசுவோம்… போராடுவோம்… முடியாதுன்னு சாதிச்சா அப்போ வேற என்ன செய்யறதுன்னு பாப்போம்!”

 

“நீங்க தானே கல்யாணம் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்ன்னு அன்னைக்கு சொன்னீங்க!”

 

“நம்மளதும் மாதவனோடையது மாதிரி ஸ்பெஷல் மேரேஜ். ஒரு மாச நோட்டீஸ் கொடுத்து, ரெஜிஸ்டர் பண்ணாட்டா, நம்ம கல்யாணம் சட்டப்படி செல்லாது விழி! ரெண்டு வீட்டுல சம்மதிச்சாலும் அப்படி தான் நம்ம கல்யாணம் நடக்கும்.

சினிமால பாக்குற மாதிரி கோவில்ல வச்சு கட்டுற தாலி எல்லாம் செல்லாது விழி. சர்ச்லயும் பண்ணி வைக்க மாட்டாங்க! வேணும்ன்னா ரெஜிஸ்டர் முடிஞ்சதும் மண்டபம் எடுத்துப் பண்ணலாம்!”

 

“சட்டத்துக்குச் செல்லட்டும் செல்லாம போகட்டும். நம்ம கல்யாணம் நமக்கு! என் கழுத்துல நீங்க வீட்டில வச்சு இது தான் தாலின்னு ஒரு சணல் நூல் கட்டினாலும் அது தான் என் தாலிக் கொடி! சொன்னா புரிஞ்சுக்கோங்க மனோ.. எங்க அம்மாவ எனக்கு தெரியும் மனோ! வீட்டுல கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க மனோ… இப்போவே விஷ பாட்டில் அது இதுன்னு பேசறாங்க! கல்யாணம் பண்ணிட்டு, ‘இவர் தான் என் புருஷன்’னு போய் நின்னா… ஒத்துகிட்டு தானே ஆகணும்!”

 

“நான் பேசறேன். எல்லாம் ஒத்துப்பாங்க! எல்லார் முன்னாலயும் நம்ம கல்யாணம் நல்ல படியா நடக்கும் விழி!”

 

அவன் தீர்மானமாய் இருந்தான், பேசி இரண்டு குடும்ப சம்மதமும் வாங்கி விடலாம் என்று! அவன் கனவு, விழித்ததும் மறந்துவிடும் பகல் கனவு என்று அம்மாவிடம் பேசிய பெண்ணிற்குப் புரிந்தது.

 

எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்த இரண்டு வாரங்கள் சென்றது. அலர்விழி எதிர்பார்த்தது போல் அவளைப் பெற்றவர்கள், அவள் காதலைப் புரிந்து கொள்வதற்கான அறிகுறி இல்லாமற்போனது. பேசினாலே வீட்டில் சண்டை என்ற நிலை. அவள் ஆசை நிராகரிக்கப் பட்டது. சத்தம் எடுபடவில்லை. கண்ணீர் ஒருவரையும் இளக வைக்கவில்லை. இவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் பாட்டியும் அப்பாவும் கூட அம்மா கட்சிக்கு மாறியிருக்க, பெண் தனித்துப் போனாள்.

 

வீட்டுச் சம்மதத்தோடு திருமணம் சாத்தியம் இல்லை என்பது வெட்டவெளிச்சம் ஆனது! மாதவனும் அவன் பங்கிற்குப் பேச முயன்று தோற்றுப் போனான். சித்தியின் பிடிவாதம் சற்றும் குறையவில்லை என்றதும், “சித்தி சித்தப்பா சம்மதத்தோட உனக்கு, எபி கூட கல்யாணம் நடக்கும்ன்னு எனக்கு நம்பிக்கையே இல்ல அலர். அவர பத்தி காது கொடுத்துக் கூட கேக்க மாட்டேன்றாங்க! சரி மாப்பிள்ளை யாருன்னு கேட்டா அதுக்கும் பதில் இல்ல. நீ அவர்ட்ட பேசி சட்டுன்னு ஒரு முடிவுக்கு வா அலர். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு நினைச்சா, கடைசியில வேதனை தான் மிச்சம்” என்று அறிவுரை தான் கூறினான்! ஒன்று அவளுக்கு இல்லை பெற்றோருக்கு வேதனை என்பது திண்ணம்! யாருக்கு என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும்!

 

தலைப் பாரம் இறங்க, எபி தோளில் சாயலாம் என்றால்… அவனும், “இந்த சனி வேல இருக்கு டி” என்றவன், கடந்த வாரம் வந்திருக்கவில்லை. “அடுத்த வாரம் லாங்  வீக்-எண்ட் தானே. அப்போ வாரேன்” என்றுவிட்டான்.

 

வியாழன் அல்லது செவ்வாய்க் கிழமை அரசு விடுமுறை வரும் வேளைகளில், இடையில் இருக்கும் வெள்ளி/திங்கட் கிழமையையும் சேர்த்து நான்கு நாள் விடுப்பு கொடுத்துவிடுவர். இம்முறை செவ்வாய் விடுமுறை வரவே, இந்த வார இறுதியோடு அடுத்த இருதினங்களும் விடுப்பைக் கொண்டாடலாம்.

 

வேலைக்கென்று சில வருடங்கள் வெளி தேசங்களுக்கு போகும் இந்தியர்களுக்கு அங்கிருக்கும் தோழர்களே குடும்பம் ஆகிவிடுவர். இப்படி விடுப்பு கிடைக்கும் வேளைகளில் குடும்பமாய் இல்லாத இளவட்டங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டில் ஒன்றோ இரண்டோ தினங்கள் தங்கிச் செல்வதெல்லாம் அங்கு வழமை!

 

அதுவும் அது போல் ஒரு வாரம் என்பதாலும், எபி-அலர்விழி, சில மாதங்களில் இந்தியா செல்லவிருப்பதாலும், மார்க்-ஆட்ரே, இலக்கியா, பாயல் என்று அவர்கள் நெருங்கிய வட்டத்தை அலர்விழியின் இருப்பிடத்திற்கு  அழைத்திருந்தனர்.

 

மார்க், ஆட்ரே எபியின் அறையில் தங்கிக்கொள்ள… எபி, அலர்விழி அறையில் தங்கிக் கொள்வான். பாயல் அதே கட்டிடம் என்பதால், பாயல் வீட்டில் அலர்விழியும் தங்கிக் கொள்வாள். இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான். ஆனால் இம்முறை புது விருந்தாளிகளாய் இலக்கியாவும், பிரவீனும் வருகை தர இருந்தனர்.

 

“திங்க கிழம நைட் ஃப்ளைட் அலர்விழி. ஊருக்கு போகதுக்கு முன்ன உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எங்க மீட் பண்ணலாம்” என்று அவன் கேட்க, “அப்படியே போய் தொலையேன்” என்று கூறுவதை விட்டுவிட்டு, சிறிதும் யோசியாமல், சொந்தம் தானே என்ற நல்லெண்ணத்தில், “வீட்டுக்கு வாங்க டாக்(Dog இல்ல மக்களே… Doc! டாக்டர்!!), கெட்-டுகெதர் இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணு இல்ல ரெண்டு நாள் தங்கிட்டு போவாங்க! நீங்களும் ஒரு நாள் தங்கிட்டு இங்க இருந்தே ஊருக்குக் கிளம்புங்களேன்.” என்று வேலியிலிருந்த ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக்கொண்டாள், மக்கு பெண்!

 

அதையே வெள்ளி இரவு வீட்டிற்கு வந்த மனோவிடம் கூற, எதிர்பார்த்தது போலவே, “அவன எதுக்கு டீ கூப்பிட்ட?” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.

 

“உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், அவர் நம்ம நெருங்கின சொந்தம், ஒத்துப்போக கத்துக்கோங்க! அம்பிகா அத்தையோட மூத்த மகன் மாதிரி! நகு வாழ்க்கைப்படபோற வீட்டுப் பையன்! பகைச்சுக்க முடியாது. முட்டிக்காம எனக்காக.. கொஞ்சம் அவர் முகம் பார்த்து பேசுங்க. ப்ளீஸ்!

யாருக்கு தெரியும்… நேர்ல பார்த்ததும், அவர் மேல இருக்கத் தப்பான எண்ணம் போய் மாதுண்ணா மாதிரியே இவரையும் உங்களுக்கு பிடிச்சு போகலாம் இல்லையா! அப்படியே நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனாலும் ஆகிடலாம்!”

 

அவள் கூறியது போல் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தோன்றினாலும், சொந்தம் என்று ஆனப்பின் என்ன செய்ய முடியும்? இத்தனை மாதங்களாக அவனால் எந்த வித தொந்தரவும் இல்லையே…

 

“என்னவோ பண்ணு போடி. ஆனா அவன் கண்டிப்பா ஒரு இம்சையா தான் இருப்பான்! மாதவன்ட்ட கேளு!”

 

“அது தானே… அண்ணாட்ட பேசி அவர பத்தி டேட்டா கலெக்ட் பண்ணியாச்சாக்கும்!”

 

‘ஹ ஹ ஹா..’ அவன் சிரிக்க, “உங்களுக்கும் அண்ணாக்கும் வேற வேல என்ன? பேசும் போதெல்லாம் அவர் மண்டையைப் போட்டு உருட்ட வேண்டியது!”

 

என்று பிரவீன் அமெரிக்க மண்ணை மிதித்தானோ, என்று அலர்விழி முதல் முறை அவனைச் சந்தித்தேன் என்று கூறினாளோ.. அன்றே மருத்துவரைப் பற்றி மாதவனிடம் பேசி தெரிந்து கொண்டான் மனோ!

 

“அவன் எங்க செட் இல்ல. கொஞ்சம் பெரியவன். தள்ளித் தான் இருப்பான். அவன் முன்னாடி பேசும் போது ‘அவர் இவர்’னு தான் சொல்லுவோம்! அந்த அளவுக்குத் தான் நெருக்கம்! படிப்பு.. ஆஸ்பத்திரி.. மருந்து மட்டும் தான் அவன் வாழ்க்கை. இம்சைன்னு சொல்ல ஒண்ணும் இல்லனாலும்.. அவன் கூட நார்மலா, ஃப்ரீயா பழகமுடியாது. சோ ஒரு இம்சையான உணர்வு இருக்கும் அவன் பக்கம் இருந்தாலே!

கெட்ட எண்ணம் இல்ல.. பணத்தாசை இல்ல… ரொம்ப உதவற டைப்! பேசிக்கலா… ஏகப்பட்ட கோட்பாடுகளோட… தனக்குன்னு ஒரு எல்லையை வரஞ்சுகிட்டு அதுக்குள்ள வாழற நல்ல மனுஷன்.

ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது மனுஷனுக்கு!  அவருக்கா அமையலியா? இல்ல அமைச்சுக்க தெரியலியா… தெரியல! அவருக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்ல. கல்யாணத்துலேயும் ரொம்ப எல்லாம் சாருக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல! பொண்ணுங்கள மனுஷன் ரசனையா பாக்க கூட தெரியாத ஜடம் கேட்டகரி!

அங்க அவருக்கு தெரிஞ்ச ஒரே ஆள் அலர் மட்டும் தானே… அதனால அவட்ட பேசறாரா இருக்கும். மத்தபடி அவ மேல இன்ட்ரெஸ்ட் இருக்க வாய்ப்பே இல்ல! அவங்க ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலேயும் ஒத்துப் போக முடியாது. சேர்ந்தாப்புல ஒரு நாள் இருந்தா அதோட ரெண்டு பேரும் பார்த்து சிரிச்சுக்க கூட மாட்டாங்க!”

 

இப்படி மாதவன் கூறியபின் மருத்துவன் மேல் எபிக்கு சந்தேகப்பட ஒன்றும் இருக்கவில்லை! ஆனால்… அந்த புகைப்படங்களில் அவன் பார்த்த பார்வை?!! பெண்களை ரசிக்கத் தெரியாதவன் பார்க்கும் பார்வையா அது? எதையாவது நினைத்து வெறித்துக் கொண்டிருக்கும் வேளை இவள் இடையே புகுந்திருப்பாளோ? தெரியவில்லை! அது இன்னும் நெருடல் தான் மனோவிற்கு!

 

இவை எல்லாம் கேட்டபின்னும், அவன் மேல் வெறுப்பு எதுவும் இல்லை என்றாலும்.. பிடித்தமும் இல்லை என்ற நிலையில் மாற்றமில்லை!

 

கேள்வி: இரண்டு நாட்களுக்குப் பின்னும், பிரவீனை பற்றிய மனோவின் எண்ணம் இதே போல் இருக்குமா என்றால்…?

பதில்: கண்டிப்பாக இல்லை!

 

கேள்வி: இன்று மனோ-விழி இடையே ஒருவரும் வந்ததில்லை. அப்படி வரும் வேளை அவர்கள் புரிதலும், அன்பும் இப்படியே இருக்குமா என்றால்…?  

பதில்: ஹ ஹ ஹா…!

 

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!