Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ29-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 29-1

 

“விழி” மூன்றாவது முறையாக அலர்விழியை ஒருவன் ஏலம் விட, சிந்தனையிலிருந்தவளின் காதில் எபியின் விளிப்பு எட்டவில்லை.

 



Advertisement

எழுந்து வந்தவன், “என்ன பண்ற டி?” தோளை பிடித்து உலுக்கவும் “என்ன மனோ? ஏதாவது வேணுமா?” என்று இயல்புக்கு வந்தவளின் பார்வையில் விழுந்தது, காபித் தூள் கலந்த தோசை மாவு.

 

“என்ன ஆச்சு? கவனத்தை எங்கேயோ வச்சுகிட்டு அடுப்பங்கரையில நின்னா அது ஆபத்தில முடியும் விழி!”

Advertisement

 

Advertisement

“ப்ச்! கவனமா இருக்கேன் மனோ.” கூறியவள் முகமும் சரியில்லை குரலும் சரியில்லை.

 

“நீ ரொம்ப டையர்டா தெரியிற, மேல உக்கார். நான் தோச ஊத்தறேன். காபி தோச எப்பிடி இருக்குன்னு டேஸ்ட் பாத்து சொல்லு”

Advertisement

 

அவன் தோசை ஊற்றி கொடுக்க மேடையில் அமர்ந்து அதை கொறிக்க ஆரம்பித்தவள், “மனோ” என்று ஆரம்பித்தாள்.

 

“நீ என்ன பேச போறேன்னு எனக்குத் தெரியும் விழி! இப்போ வேண்டாம். சாப்பிடு. பேசுவோம்”

 

“ரொம்ப நெருடலா இருக்கு மனோ. என் கல்யாண பேச்சு போகுது வீட்டுல. ஆனா எல்லாம் ராணுவ ரகசியம் மாதிரி போகணுமா? அப்போ என் ஃபீலிங்க்ஸ் பத்தி எல்லாம் யாருக்குமே கவல இல்லையா? அவங்க பேச்ச நான் கேப்பேன்னு ஒரு தைரியத்தில தானே இந்த ஏற்பாடு பண்றாங்க! அதே தைரியத்த எனக்கும் அவங்க கொடுக்கணும் இல்லையா…? என் அம்மா அப்பா, என் சந்தோஷத்தைத் தான் முதல்ல பாப்பாங்கன்னு நான் நம்பினது எல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிடுச்சே மனோ! என் வாழ்க்கையை மனசுக்கு பிடிச்சவனோட வாழக் கூட எனக்கு உரிமை இல்லியா மனோ?”

 

“டேய் நீ ரொம்ப யோசிக்கிற! அன்னைக்கு உன்கிட்ட பேசின பிறகு அவங்க எதுவும் ப்ரொசீட் பண்ணியிருக்க மாட்டங்க விழி. அதனால தான் அங்க என்ன நடக்குதுன்னு உனக்கு சொல்லலியா இருக்கும். மாப்பிள யாருன்னே சொல்லாம உன்ன கல்யாண மேடையில ஏத்த இது என்ன பதினெட்டாவது நூற்றாண்டா? உன் பேரண்ட்ஸ் உன்ன கண்ணுக்குள்ள வச்சு வளத்தவங்க… அப்பிடி எல்லாம் உனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கைக்குள்ள தள்ள மாட்டாங்க. நம்பு!”

 

“அப்பிடி தான் மனோ நானும் பத்து நாள் முன்ன வரைக்கும் நினைச்சேன்! ஆனா… ப்ச்!!”

 

“ஏன் டென்ஷன் ஆகுற பட்டு? அடுத்த முடிவு எடுக்கதுக்கு முன்ன உன்ட்ட கேப்பாங்க. இன்னார்ன்னு உங்கிட்ட கண்டிப்பா அவனைப் பத்தி சொல்லுவாங்க. என்னை மறக்க சொல்லுவாங்க! அவனோட வீர தீரச் செயல் எல்லாம் சொல்லுவாங்க! உன் சந்தோஷமே அவன் கையில இருக்க மாதிரியும், உன் வீட்டு மானமே உன் கையில தான் இருக்க மாதிரியும் கொஞ்சம் ப்ரெயின் வாஷ் பண்ணுவாங்க. அப்புறம் கொஞ்சம், ‘செத்துடுவேன்… தங்கை வாழ்க்கை உன்னால போச்சு’-ன்னு எமோஷனல் ப்ளாக் மெயில் இருக்கும். இது எல்லா வீட்டுலயும் நடக்கிறது தானே… அந்த கடலையும் தாண்டுவோம்.”

 

“எப்படி தான் இவ்வளவு கூலா இருக்கிங்களோ?”

 

“எதுவும் நம்மள மீறி நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை தான்!”

 

“யோசிச்சு பார்த்ததில கல்ப்ரிட் அபிராமி அத்தையோன்னு தோணுது மனோ! ரெண்டு வாரம் முன்ன அம்பிகா அத்தையும் மாமாவும், அவங்க அக்காவும்-ஹஸ்பண்டும் வீட்டுக்கு போனாங்கல்ல? அதுக்கு நகு என்ன சொன்னா? அபிராமி அத்தையோட சொந்தக்காரங்க விசேஷத்துக்கு வந்த நாலு பேரும் சும்மா தலை காட்டிட்டு போனதா தானே சொன்னா? நகு வீட்டுக்கு வர நேரம் அவங்க நகுவ பார்த்துட்டு கிளம்பிட்டாங்க! அதுனால தான் அவங்க பேசின எதுவும் அவளுக்கு தெரியல! இது நடந்து நாலு நாள்ல தான் அம்மா எனக்கு ஃபோன் போட்டாங்க!

 

எனக்கு என்னமோ இந்த அபிராமி அத்தை யார் வீட்டுக்கோ போனாங்க இல்ல.. அந்த வீட்டுப் பையன் எங்களுக்கு தெரிஞ்சவனா இருப்பான்னு தோணுது. மே பீ, எனக்கு ஃப்ரெண்டா கூட இருக்கலாம். அந்த அத்த ஒண்ணும் காரியம் இல்லாம எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டாங்க.  சோ, அந்த வரனைப் பத்தி சொல்லத் தான் இவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கணும். அம்மா எனக்குத் தான் அந்த பையனை தெரியுமேன்னு ‘பார்க்கலாம்’ன்னு சொல்லி இருக்கணும்! நான் நம்ம விஷயம் சொல்லவும், எல்லாம் பேசி முடிச்ச மாதிரி ஆக்ட் விட்டிருக்கணும்! என்ன சொல்றீங்க?”

 

“நீ டிவி சீரியலுக்கு கதை எழுத போயேன். நல்ல எதிர்காலம் இருக்கு!”

 

“மனோ? போங்க மனோ.. நான் எவ்வளவு சீரியஸ்சா பேசிட்டு இருக்கேன்?”

 

“இப்போ எல்லாம் டி.வி.சீரியல்ல கூட சீரியஸ் கதைய தான் எடுக்கறானாம்!”

 

“மனோ?!”

 

“இந்த கெட்-டுகெதர் முடியட்டும். அடுத்த நாளே, என் மாமனார்ட்ட பேசி, இந்த கன்ஃபூஷன் எல்லாத்துக்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கிறேன்! உங்க வீட்டுல என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அம்மா அப்பாட்ட விஷயத்த சொல்லி என்ன நடக்கணுமோ அத நடத்த சொல்றேன். போதுமா?”

 

“ஓத்துக்காட்டா என்ன பண்றது மனோ?”

 

“யார் முடிவும் உன் தல எழுத்த மாத்த முடியாது. காலம் பூரா என் கூட தான்னு எழுதி இருக்கு!”

 

“நிஜமா?”

 

“நிஜமா!”

 

அவன் கூறிய ஒற்றை ‘நிஜமா!’விற்கு, அவனை தன்பக்கம் இழுத்து, பரிசுகள் வள்ளலாய் வழங்கப்பட்டது. நாவு இனித்தது. தோசை உண்ணாத வாயும் காபி போல் மணத்தது. உடல் இரண்டும் லேசாகி ஓரடி மேலே மிதந்தது.

 

பெண் மனம் லேசாகிப் போக, அன்று இரவு சோஃபாவில் அமர்ந்திருந்த மனோவின் மடியில் படுத்துக் கதை பேசினாள். சுருளை முடியை அவன் இழுத்து விட, அது ஸ்ப்ரிங் போல் மீண்டும் சுருண்டு வந்து நெற்றியில் விழுந்தது. அவளுக்குப் பேச எப்படிச் சளைப்பதில்லையோ அது போல அவனுக்கும், அவள் நூடுல்ஸ் கற்றைகளை இழுத்து விட்டு விளையாடச் சலிப்பதில்லை.

 

மனோவின் விரல்கள் அவள் தலை வருட, கையசைத்து, விழிகள் உருட்டிக் கதை பேசினாள். அவள் பேச்சில் மதிமயங்கினான், என்றும் போல்! மனோ வீட்டிற்கு வெளியே இருக்கும் நாவல் பழத்தை ருசித்து, பவழமல்லி மணத்தில் மயங்கி, நித்தியமல்லி பந்தலுக்குள் நுழைந்து, எஸ்தர் கையால் பூ சூடி, யமுனா கொடுத்த காபி அருந்தி, பால்ராஜோடு ஷேர் மார்க்கெட் விவாதித்து, பால்கனி தினிமையில் நிலவு காய்ந்து… என்று இரவு முழுவதும் அவர்கள் வாழப்போகும் வாழ்வைக் குறித்தும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் பேசியே நேரம் கடத்தினாள்.

 

எப்பொழுது இமைகள் நான்கும் மூடியதென்று இருவருக்கும் தெரியாது. இன்பமான நிறைவான நிமிடங்கள் அவை. பொக்கிஷமாய் உள்ளுக்குள் இறங்கியிருந்தது. சூரியன் வெளிவந்து சில மணி நேரம் கழித்து பெண்ணவள் கண் விழிக்க, கண்டதோ அமர்ந்தே உறக்கத்திலிருந்த மனோவை தான். ஏன் என்று கேட்க ஆள் இல்லாத தனிமையிலும் கண்ணியம் காக்கும் காதலன் கிடைப்பதெல்லாம் வரம் தான்.

 

இம்முறை காபித் தூளை, பாலில் கலந்து எடுத்து வந்தாள். கன்னத்தில் முத்தம் பதித்து காபியை நீட்டியவளை ஆசை சொட்டப் பார்த்தான்.

 

ஒரு மிடருக்குபின், “நல்லா தான் இருக்கு” என்றான், குளித்து ஈரக் கூந்தலோடு தன்னை இடித்துக் கொண்டே அமர்ந்தவளைக் கண்டு.

 

காபியை சுவைத்தாள். “ஏன் மனோ.. எப்பவும் போல தானே இருக்கு”. அப்படி ஒன்றும் புதிதாய் போடவில்லை என்றதால் பெண் குழம்பினாள்.

 

அவளைப் பார்த்துக்கொண்டே, “காபி இல்ல. இப்பிடி நீ கொடுக்கிறது!” என்றான்.

 

“அதுக்கென்ன மனோ… இனிமேல் இப்படியே கொடுத்திட்டா போச்சு!”

 

இரண்டு நிமிடங்கள் காபியோடு சென்றது.

 

“இதெல்லாம் கொடுமை தெரியுமா?” காபியை மெல்ல உறிஞ்சினான்.

 

“எது?”

 

வாரங்கள் இரண்டு பார்க்கவில்லை என்றதும் காதல் ஜோடிகளுள் தாபம் எட்டிப் பார்த்திருக்க ஆசையை அணைப்போட முடியவில்லை இருவருக்கும்.

புருவம் சுருக்கி காபியை உறிஞ்சியவளிடம், “பக்கத்திலேயே உன்ன வச்சுகிட்டு, ‘நான் உத்தமன்’னு ஆக்ட் விடுறது…”

 

“நான் உங்கள ஆக்ட் விட சொன்னேனாக்கும்!” அவள் சிரிக்க… சொக்கிப் போனவன், நேற்று வாங்கிய பரிசை வட்டியும் முதலுமாகத் திருப்பி கொடுத்தான். காபி மணம் நாடி நரம்பெல்லாம் சென்று அணுஅணுவாக மனோ என்று அவளுக்குள்ளும் விழி என்று அவனுக்குள்ளும் பச்சை குத்தியது. நிமிடங்கள் கரைந்தது. நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் காதலையையும் தாண்டிய உணர்வு எழ, அந்த இன்ப உணர்வுக்குக் கடிவாளமிட்டு, நாளினை தொடங்கினர்.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு வேண்டிய சாமங்கள் வாங்கி அடுக்கினர். ஃபிரிஜும், ஃபிரீசரும் பல வகை உணவுகளால் நிரம்பி வழிந்தது. அன்றே இனிப்பு, காரம் போன்ற சில பண்டங்களை செய்து முடிக்க, நிலவும் வந்திருந்தது.

 

சனிக் கிழமை முடிந்து ஞாயிற்றுக் கிழமை அமோகமாக விடிந்தது. திருச்சபை போகவேண்டுமே! குளித்து அலமாரியிலிருந்து உடை எடுத்துக் கொண்டிருந்தவன் கையிலிருந்ததோ சிறிய நகைப் பெட்டி. அதைத் திறந்து பார்த்த மனோவிற்குள் ஏகாந்தம் பரவியது. கார்டியர்- வைர மோதிரம்! நாளை, நட்பு வட்டாரங்கள் முன் விழிக்கு போட்டுவிட வாங்கிய மோதிரம். அங்குள்ள வழக்கப்படி அது அவர்களுக்குள் செய்து கொள்ளும் நிச்சயம்!

 

சற்று நேரத்திற்கெல்லாம் சாற்றியிருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள் பெண்.

 

“என்னங்க…” அவன் சட்டையின் பொத்தான் அவள் கையில் மாட்டிக் கொண்டு திருகு வாங்கியது.

 

“என்ன டி ஓவரா குழையுற? என்ன விஷயம்?” உஷாரானான்.

 

கண்ணாடி முன் தலை வாரிக் கொண்டிருந்தவனிடமிருந்து சீப்பைக் கையில் வாங்கி, “தலை வாரி விடவா?” என்று மேலும் குழைந்தாள்.

 

“ஒண்ணும் வேணாம்!”, சீப்பைப் பிடுங்கி, “ஓவர் கொஞ்சல்சா இருக்கே… மேட்டர சொல்லு டி…” என்று கூறிக் கொண்டே அவன் வேலையில் கவனமானான்.

 

“உட்பிரிட்ஜ்-க்கு தானே போறீங்க?” சரியாய் இருந்த சட்டை காலர் மீண்டும் அவளால் சரிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

 

“ம்ம்.. என்ன புதுசா கேக்கிற? நீயும் இன்னைக்கு சர்ச்சுக்கு வரியா?”

 

“இல்ல.. இலக்கியா இன்னும் பத்து நிமிஷத்தில வந்திடுவா. அவ வந்ததும் பாயலும் வந்திடுவா. எனக்கு வேல இருக்கு! இது வேற! வந்து… ஒரு ஹெல்ப் வேணும் மனோ…”

 

“வேலையாவணும்ன்னா எப்படி கொழையறடி நீ… ம்ம்ம்! சரி, அந்த சாக்சையும் ஷூவையும் போட்டு விட்டுகிட்டே சொல்லு!”

 

அவன் சைக்கிள் கேப்பில் லாரி ஓட்ட நினைக்க, பெண் வேலைக்காக கால் பிடிக்க தயாராயில்லை! “ம்ம்கும்! ரொம்ப ஆசை தான் சாருக்கு! பத்தரைக்கு உங்களுக்கு முடிஞ்சிடும் இல்ல…?”

 

“ம்ம் ம்ம்ம்”

 

“வர வழியில இருந்து டாக்டர கூட்டிட்டு வரீங்களா?”

 

“என்னது மென்ஹட்டன்… உனக்கு வர வழியா?”

 

“இல்ல இல்ல… இங்க எலிசபெத்-ல இருக்கார். அவர் கூட சர்ஜரி பண்ணின டாக்டர் வீட்டில பிரேக்-ஃபாஸ்ட்டுக்கு போயிருக்கார் மனோ. அங்க இருந்து கூட்டிட்டு வரணும்!”

 

சீப்பை மேசையில் விட்டெறிந்தவன், “அவன் பக்கத்து தெருல இருந்தா கூட என்னால கூட்டிட்டு வர முடியாது விழி! உனக்கு எப்படி சொல்லன்னு தெரியல! அவன் இருக்கத் திசை கூடப் போக எனக்கு இஷ்டம் இல்ல! அவன் இங்க வரதும் எனக்கு பிடிக்கல. போதுமா? புரியற மாதிரி சொல்லிட்டேனா?”

 

“மனோ…? சர்ச்சுக்கு வாராவாரம் போனா போதுமா? பைபிள்ல என்ன சொல்லி இருக்கு? லவ் யுவர் எனிமீஸ்ன்னு சொல்லி இருக்கா இல்லையா? இத்தனைக்கும் அவர் உங்க எனிமி கூட இல்ல. அப்புறம் கூட்டிட்டு வரதுக்கு என்ன?”

 

“எனக்கு அவன் மேல வெறுப்பில்ல! சும்மா ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறேன்னு… நீயே தேவ இல்லாம வெறுப்ப ஏற்படுத்தி விட்டுடாத! அப்புறம் உன் பைபிள் லெக்சர் எல்லாம் உன்னோடையே வச்சுக்கோ!”

 

பார்க்காமலே.. பேசாமலே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனது யார் குத்தமோ?

 

“சரி விடுங்க.. அவர் கேப்-ல வந்திடுவார். நீங்க சர்சுல இருந்து திரும்பி வரும் போது சோடா, சிப்ஸ், பால்…” என்று ஆரம்பித்து முன்தினம் விட்டுப் போன பட்டியலைக் கொடுத்து வாங்கிவருமாறு பணித்தாள்.

 

அவனும் வரும் வழியில் அதை வாங்கவென ‘வால்மார்ட் சூப்பர் மார்கெட்’ முன் வண்டியை நிறுத்தினான். உள்ளே, சாமான்களை எடுத்து ட்ராலியில் அடுக்கிக் கொண்டிருக்க, “எபி..” என்று சூறாவளியாய் ஓடி வந்தாள், கைக்குள் அடங்கிக் கொள்ளும் தேகமுடைய மார்கரீட்டா, அவன் கல்லூரி தோழி.

 

“ஹெய்… மார்க்…”, விரித்த அவள் கைக்குள் இவன் செல்ல, மெல்ல அணைக்க, அவள் அழைத்த அழைப்பின் சத்தத்தில் திரும்பிய பிரவீன் கண்களில் விழுந்தது அவர்கள் அணைப்பும், அவள் கன்னம் இவன் கன்னத்தில் பட்டும் படாமலும் இருக்க ‘இச் இச்’ என்று காற்றில் பதிக்கபெற்ற முத்தத்தின் சத்தமும் தான்!

 

அவர்கள் அப்படி தான். எபிக்கு பழகிப் போயிருந்தது, உடல் படாத அணைப்பும், கன்னம் தொடாத முத்தமும்! ஆனால், கண்ட காட்சி பிடிக்கவில்லை, வெளிநாட்டுத் தோழிகள் இல்லாத மருத்துவனுக்கு! எபியை மீண்டும் பார்த்தான் மருத்துவன். பார்த்த முகம்! யாரிவன்? என்று மண்டையை குடைந்தான்! தெரியவில்லை. ஆனால் மிகவும் தெரிந்த முகம் போன்ற பிரமை! நான்கரை வருடங்கள் முன் பார்த்த முகமென்பதால் நினைவில் வரவில்லை போலும்!

 

அத்தனை பெரிய கடையில் இருவரும் இரு திசைக்குச் செல்ல அதன் பின் பிரவீன் கண்களில் எபி விழவில்லை. வாங்க வேண்டியவற்றை வாங்கி, “வேற ஏதாவது வேணுமா விழி..” என்று கைப்பேசியில் கேட்டுக் கொண்டே காரை நோக்கி நடக்க, “ஹே எபி..” என்ற சத்தம் வரவும், அவன் திரும்பிப் பார்க்க மார்கரீட்டா கையசைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

 

“வேற ஒண்ணும் இல்லியே… வந்த பிறகு திரும்பவும் உப்பில்ல, புளியில்லன்னு போக சொன்னா… போக மாட்டேன். இப்போவே சொல்லிட்டேன்! மார்க் எதுக்கோ திரும்பவும் ஓடி வரா…” என்று இவன் அவளை நோக்கிச் சென்றான். வந்த வேகத்தில் அவள் கால் இடற…  பிடிக்கப் போனவன் மேல் சரிந்து விழுந்தாள்.

 

இவன் பிடிக்கவும் வலி தாள முடியாமல் இவன் மேல் சரிந்தே நிற்க, “எதுக்கு எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போடுற? நடந்திடுவியா?” என்று அவளைத் தாங்கிக் கொண்டே குனிந்து அவள் காலை பார்த்தான்.

 

நடந்தது எதுவும் தெரியாதென்றாலும் அவர்கள் நெருக்கம் மட்டும் ஒருவனுக்குத் தெரிந்தது. முகம் சுளித்தான் மருத்துவன்.

 

“கார் ஓட்டிடுவியா? நான் வேணும்னா வீட்டில விடவா…? கார அப்புறம் வந்து யாரையாது எடுத்துக்க சொல்லு..” இவன் கேட்க, “இடது கால் தானே… க்ளச்ச அமுக்கிற வேலை இல்ல. நானே போயிடுவேன்” என்று அவன் உதவியோடே உள்ளே அமர்ந்தவள், அமர்ந்த வாக்கிலேயே, அவனை மெல்ல அணைத்து, “கல்யாணத்துக்கு நான் வர முடியாது. இப்போவே வாழ்த்துகள். இத கொடுக்கத் தான் கூப்பிட்டேன்.. அலர்விலிட்ட கொடுத்திடு” என்று கையிலிருந்த குட்டி பரிசு பொதியை அவனிடம் கொடுத்து விடைபெற்றாள்.

 

சம்பாஷனை எதுவும் கேட்கவில்லை. இருந்தும், ‘வெளி நாட்டுக்கு வந்தாலே நடு ரோட்டுல கொஞ்கிக்க கூசாது போல!’ என்று நடந்த அனைத்திற்கும் அவனே அர்த்தம் கொடுத்துக் கொண்டான் மருத்துவன்.

 

வீட்டை அடைந்த எபி மதிய உணவைத் தயார் செய்து கொண்டிருந்த அலர், மார்க், ஆட்ரேயோடு ஐக்கியமானான். மார்கரீட்டா பற்றிய பேச்சுகளோடு அவனும் உதவ ஆரம்பிக்க, பேச்சும் சிரிப்புமாக வேலை சூடுபிடித்தது. இங்கு சில வகைகளும், பாயல் வீட்டில் ஒரு சில வகைகளும் என்று பல உணவு வகைகள் தயாராகி கொண்டிருக்க, வாசல் மணி அடித்தது.

 

“அடுத்த விருந்தாளியா இருக்கும்… நான் பாக்குறேன்..” என்று எபி தான் கதவைத் திறந்தான். திறந்தவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பூ கொத்தோடு நின்றிருந்தான் மருத்துவன்.

 

யார் என்று தெரியும்… அதனால் ‘வாங்க’ என்று கூப்பிட தான் எண்ணினான். ஆனால் ‘இவனா?’ என்ற பிரவீன் முகத்தில் எழுந்த நொடி நேர அதிருப்தி இவனை நிதானிக்க வைத்தது. பிடித்தமில்லா பார்வையோடு, ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதை பிரவீன் முகம் அப்பட்டமாக பிரதிபலிக்க, கடுப்பானவன்… வேண்டுமென்றே, “ஃப்ளவர் டெலிவரியா?” என்று கேட்டுக்கொண்டே வழியை மறைத்து நின்றான்.

 

“யாருங்க?” கேட்டு கொண்டே பின்னோடு வந்தவள், வழி மறித்து நின்றவனை மெல்ல நகர்த்தி, “வாங்க டாக்டர்… அப்போவே எதிர்பார்த்தேன். வாங்க… உள்ள வாங்க” என்று உள்ளே அழைக்க, ஆண்மக்கள் இருவரின் பார்வையும் மோதி நின்றது.

 

“இவங்க தான் நான் சொன்னேனே டாக்டர்.பிரவீன், அண்ணாவோட அத்தை வழி சொந்தம்…” என்று அறிமுகப் படுத்த, மனோவிற்கு தன்னை பற்றி விலாவாரியாக அவனிடம் அறிமுக படுத்த விருப்பமில்லை. “எபெனேசர்!” என்று கை நீட்டியிருந்தான்.

 

வேண்டா வெறுப்பாக கைகுலுக்கியவன் பார்வை வீட்டை அளக்க, உள்ளே ஆண், பெண் என்று பேச்சு குரல் கேட்கவும், அவன் முகத்தில் ஒரு நிம்மதி. பார்த்து நின்ற எபி முகத்தில் நமுட்டு சிரிப்பு.

 

“உனக்காக அலர்விழி” என்று மலர்க் கொத்தை நீட்டினான். நீட்டி நின்றவன் பார்வை அலர்விழியை ஊடுருவியது… அவள் முகத்தைப் படித்துவிடும் நோக்கத்தோடு!

 

காலியாக்கப்பட்ட மஞ்சள் பூசனியின் வயிற்றை பிளந்து, எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது இலையுதிர்காலத்து மலர்களும் வண்ண இலைகளும்! மஞ்சள், வெள்ளை,  ஆரென்ஞ், பர்குண்டி-மரூன் என்று பல நிற டாலியாக்கள் பெண்ணை பார்த்துச் சிரிக்க… “வாவ் டாக்! சென்டர் பீஸ் செம! த்தாங்க் யூ. லவ்விங் இட்” என்றாள் குதூகலம் குறையாமல். பிரவீன் முகமும் மலர்ந்தது.

 

முதல் பார்வையிலேயே எபி கண்டு கொண்டான் மருத்துவனை. பிரவீன் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பும், அவன் ஆனந்தமும் சரியாகப் படவில்லை எபிக்கு! இந்த வீட்டில் மருத்துவனின் நிலையை உணர்த்த விரும்பியிருப்பான் போலும், “விழி, நம்ம வீட்டுக்கு கெஸ்டு வந்திருக்காங்க… கையிலிருக்கத அந்த டேபிள்ள வச்சுட்டு, ரூம காட்டு! ஃப்ரெஷ் ஆகிட்டு வரட்டும். நீ குடிக்க என்ன வேணும்ன்னு கேட்டு கவனி… நான் சமையலை பாக்க போறேன்” என்று உள்ளே செல்ல, “இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோங்க டாக்…” என்றவளுக்கு எபி கூறியதில் ஒன்றும் தவறாகத் தோன்றவில்லை.

 

ஆனால் ‘நம்ம வீடு’.. ‘கெஸ்ட்’ என்ற வார்த்தைகளால், பிரவீன் முகம் சட்டென்று மாறியது. அவனும் அவர்கள் உறவை நிலைநிறுத்த நினைத்திருப்பான் போலும்! “அத்தான்! அலர்விழி!” என்றவன் தொனியில் ஆழம் அதிகம்! சென்று கொண்டிருந்த எபியின் காதில் விழுந்தது. சிரித்துக் கொண்டான்!

 

“ஓகே… ஓகே. டாக் இல்ல அத்தான்! போதுமா?! சாப்பாடு அல்மோஸ்ட் ரெடி… டென் மினிட்ஸ்ல சாப்பிட உக்காந்திடலாம். நீங்க உங்க திங்கஸ்ச உள்ள வச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. எல்லார்ட்டையும் இன்ட்ரோ கொடுக்கிறேன்”

 

“எனக்கு கூட்டம் ரொம்ப ஆகாது அலர்விழி. நிறையப் பேர் இருக்காங்களோ?”

 

“மொத்தம் ஏழே பேரு தான்! கூட்டத்தோட வாழ பழகிக்கோங்க டாக். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரோடையும் இருக்கும் போது அது தனி சந்தோஷம். இவங்க எல்லாருமே ரொம்ப ஜாலி டைப். பழக பழக உங்களுக்கும் பிடிக்கும் பாருங்க!”

 

பெருவிரலை உயர்த்தி காட்டி மெல்லப் புன்னகைத்து, அவன் அறையை நோக்கிச் செல்லவும் அடுக்களை வந்தவள் எபியின் விலாவில் இடித்து, “உங்களுக்கு ஓவர் குசும்பு! யாருனே தெரியாத மாதிரி வெளியில் நிக்கவச்சு கேள்வி கேக்கறீங்க?”

 

“நான் ஒண்ணும் தப்பா கேக்கல டி. பூவும் கையுமா நிக்கவும் ‘டெலிவரியா’ன்னு கேட்டேன்! அவன் தான் என்னை மொறச்சு பாத்தான்! நான் சொல்லல… அவனும் அவன் பார்வையும்! அவன் பார்வை சரி இல்ல டி பட்டு.”

 

“எனக்கு, அவர் கொடுத்த பூ பிடிச்சிருக்கான்னு ஆர்வமா பாத்தார். அத எல்லாமா தப்பா நினைப்பீங்க? ப்ச் மனோ! உங்களுக்கே அசிங்கமா இல்ல? இந்த இத்துப்போன பல்லவிய  முதல்ல நிறுத்துங்க மனோ! சும்மா எப்போ பார் அவர குத்தம் சொல்லிக்கிட்டு! உங்கட்ட நான் இத எதிர்பாக்கல!”

 

“இங்க தான நாளைக்கு வரைக்கும் இருக்கப் போரான். பாப்போம். ஆனா, இப்பிடியே பார்த்து என் எரிச்சல மட்டும் கிளப்பினான்… கண்டிப்பா மூக்க பேத்துடுவேன்!”

 

“என்னங்க அவர் நம்மள விட வயசுல ரொம்ப பெரியவர். கொஞ்சம் மரியாதை…” அவள் முடிக்கும் முன் இவன் பார்வையில் முறைப்பு ஏறியிருக்க, “உங்களுக்கு அண்ணன் முறை அவர். என்ட்ட பேசற மாதிரியே பேசிடாம, அவர்ட்ட பேசும் போதாவது கொஞ்சம் மரியாதையா பேசுங்க… ப்ளீஸ் மனோ!” என்றாள் வேண்டுதலாய்.

 

எழுந்த கோபத்தை உள்ளுக்குள் விழுங்கி, கண்களை இறுக மூடித்திறந்தவன் “அவனுக்காக எங்கிட்ட வக்காலத்து வாங்கிறது இது தான் கடைசியா இருக்கட்டும் விழி!” என்றவன் நடுக்கூடம் சென்றுவிட, இவளுக்குத் தான் ‘அம்மாடி! ஆரம்பமே இப்படியா..’ என்றிருந்தது!

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!