Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ30_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 30_1

 

மாலை நேரம் வீடு மீண்டும் அதன் இயல்புக்கு மாறியது. மதியம் உணவில் மீதமிருந்த சிக்கன், மட்டன் பஃப்சாக பாயல் மாற்றிக் கொண்டிருக்க, எபி டீ போட இஞ்சியை இடிக்க ஆரம்பித்தான்.

 



Advertisement

நடமாடும் உயிரினங்களை உண்ணாதவனுக்காக, பஃப்சிற்கு உள்ளே வைக்க, உருளைக்கிழங்கு-பச்சைப்பாட்டானி மசாலாவை தயாரித்துக் கொண்டிருந்தவளை பாரத்த எபி வாய் திறந்தானில்லை.

 

“இப்போ டீ வேண்டாம் மனோ. இந்த பஃப்ஸ் ரெடி ஆகிறதுக்கு பத்து நிமிஷம் முன்ன போட்டா போதும். டீக்கு இடிச்ச மசாலா ஐட்டம வச்சுட்டு போங்க. நான் போடுறேன்” என்றவளிடம் எந்த வாதமும் செய்யாமல் வெளியே சென்றவனை இயலாமையோடு பார்த்தாள்.

Advertisement

 

Advertisement

“வீட்டுக்கு ஒருத்தரை கூப்பிட்டுட்டு ‘என்னால உன்ன கவனிச்சுக்க முடியல’ன்னு அவர கிளம்பச்சொல்ல முடியும் மனோ?” என்று கேட்டதற்கு, அவன், “என்னவாது பண்ணு” என்று விலகிக் கொண்டான்.

 

தயாரான பஃப்சும் தேநீரும் பிரவீனிடம் நீட்டப்பட, அதைப் பார்த்தவன், “எனக்கு இது பிடிக்காது. வாய் பூர ஒட்டும்… ரொம்ப மெஸ்சி ஸ்னாக். மசாலா டீ வாசமும் பிடிக்காது. அதுல பால் சேர்த்திருக்கு.. சோ வேண்டாம்” எனவும், “ஓ..” என்றாளே தவிர, வேறு என்ன வேண்டுமென்று கேட்டாளில்லை.

Advertisement

 

ஏதேனும் சொல்லிவிடுவானோ எபியை பார்த்தாள். நடப்பதைக் கவனித்தாலும், அவன் மூக்கை நுழைக்கவில்லை. ‘நீயாச்சு! அவனாச்சு! ஆளவிடு!’ என்ற பாவனை அவனிடம்!

 

பாயல், எபியின் அருகில் அமர்ந்துகொண்டு எதையோ கேட்டுக் கொண்டிருக்க, இருவரும் ஒற்றை மடிக்கணினியில் தலைகளை நுழைத்துக் கொண்டிருந்தனர். அவனிடம் அவள் எதையோ ரகசியம் போல் கூற… அவன் அவள் தலையில் தட்டி, “இத பாரு” என்று சிரிக்க, மீண்டும் அவள் எதையோ கூற இருவரின் சிரிப்பொலியும் அறையை நிறைத்தது.

 

பார்த்திருந்த பிரவீன் நேரடியாகவே முகம் சுளிக்க, அந்த சுளிப்பை அலர்விழி பார்க்கத்தான் செய்தாள். நீண்ட மூச்சை இழுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டவளுக்கு, ‘இருவர் நட்பை பார்த்து முகம் சுளிக்க என்ன இருக்கிறது?‘ என்று கேட்க ஆசை தான்! வாழ்க்கைத் தரத்திற்கும், பழகும் ஆட்களுக்கும், படித்த படிப்பிற்கும் பிரவீனிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஐந்து மணி நேரத்தில் தண்டோரா போடாமலே உணர்த்திவிட்டான்.

 

எபியின் தோள் தட்டி, “அவங்க ரெண்டு பேரும் டீ நல்லா இருக்குன்னு எக்ஸ்ட்ரா எடுத்துகிட்டாங்க. சோ காபி தான்”, என்று அவன் கேட்காமலே, ஒரு வாய் குடித்து ருசி பார்த்த காபியை அவன் கையில் கொடுத்துவிட்டு அலர்விழி செல்ல, பார்த்திருந்த மருத்துவன் காதில் புகை மூண்டது.

 

“அலர்விழி. பிளாக் டீ கிடைக்குமா?” என்றவனுக்கு ருசி பார்க்கப்படாமலே கொடுக்கப்பட்ட தேநீரில் இனிப்பில்லை.

 

“சுகர்.. அலர்விழி”, அடுக்களையில் நின்றிருந்தவளிடம் கோரிக்கை வைக்க,

 

“உள்ள தான் சக்கர இருக்கு. உங்க ருசிக்கேத்த அளவு நீங்களே போட்டுக்கோங்களேன்!” எபி கூறி முடிக்கும் முன், “இந்தாங்க” என்று சக்கரையோடு வந்து நின்றாள் அலர்விழி. ‘இவன் சொல்ல.. அவன் சொல்ல’ என்று மீண்டும் ஒரு சண்டையை அவளால் பார்க்க முடியாது!

 

எபி இவளைப் பார்த்து முறைக்க, ‘ப்ளீஸ் மனோ’ என்ற பதில் பார்வையோடு சென்றாள்.

 

வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள் இருக்க, ஒவ்வொருவரும் ஏதேனும் எடுத்துப் போட்டுச் செய்ய, இவன் மட்டும் ஒரு துரும்பையும் நகர்த்துவதாய் தெரியவில்லை. என்ன பிறவியோ?! குடிக்கத் தண்ணீர் கூட எழுந்து எடுத்துக்கொள்ளத் தெரியாதவனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அலர்விழிக்குப் புரியவில்லை. எரிச்சல் தான்! முகத்தில் காட்ட முடியாத எரிச்சல்!

 

“அலர்விழி” அழைத்தான் பிரவீன்.

 

எபியின் காதில் விழத்தான் செய்தது அந்த அதிகார அழைப்பு. பிடிக்கவில்லை தான்! என்றாலும், சண்டை வேண்டாம் என்று அமைதி காத்தான்.

 

அப்பொழுது தான் அமர்ந்தவளுக்கு ‘இப்போ என்னவாம் இவனுக்கு!’ என்று அலுப்பாய் தோன்றினாலும் படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள்.

 

“த்தாங்க்ஸ்..” என்று தேநீர் குடித்து முடித்த கோப்பையை நீட்ட, அதைப் பிடுங்கி அவன் தலையில் அதை வைத்தே இரண்டு போட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றினாலும், புன்முறுவலோடு கோப்பையை வாங்கி சென்றாள்.

 

அடுத்த மூன்று மணி நேரத்தில் மூவாயிரம் முறை, ‘அலர்விழி தண்ணி’, ‘அலர்விழி இந்தா கப்’, ‘அலர்விழி டீ.வி. போடு’, ‘அலர்விழி ரிமோட் எடு’, ‘அலர்விழி’… ‘அலர்விழி’..  என்று அலர்விழியை நடுக்கூடத்தில் ஏலம் விட, அலர்விழி நோந்தே போனாள். ‘யாருடா நீ?’ கேட்க நினைத்தாலும்… முடியாதே!!

 

இரவு உணவிற்கு மார்க், இலக்கியா மற்றும் ஆட்ரே பீட்ஸா வேலையில் இறங்க, அவர்களோடு அலர்விழியும் பிஸி! பின்னே… ஒருவனுக்கு இவர்கள் உணவெல்லாம் எல்லாம் தொண்டையில் இறங்காதே! நிமிட நேரம் ஓய்வில்லாமல் பெண்ணிற்கு, உடலும் மனமும் களைத்துப் போக ஆரம்பித்தது.

 

அவள் இயலாமை அவளுக்கே கடுப்பாக அதை யாரிடமாவது காட்டவேண்டுமே! “மனோ…” என்று அடுக்களையிலிருந்து அழைக்க, “நான் பிஸி விழி…” என்று அவன் கண்டு கொள்ளாமல் போகவும், மருத்துவன் மேல் காட்ட முடியா கோபம், கவலையில்லாமல் சிரித்து கொண்டிருந்த உரிமையுள்ளவன் மேல் திசை திரும்பியது.

 

“மனோ… பீட்ஸா ரெடி. அதையாது எடுத்து டேபிள்ள வைப்பீங்களா இல்ல இப்பிடியே சீட்டைத் தேய்க்க போறீங்களா?” பற்களைக் கடித்து நின்றவளிடம் மல்லுக்கு நிற்காமல், சொன்னதைச் செய்தான்.

 

மேசையை பெப்பரோனி, பார்பிக்யூ சிக்கன், பன்னீர், ட்ராபிகல் என்று விதவிதமான பீட்ஸாகளும், கார்லிக் ப்ரெட், சிக்கன் விங்க்ஸ், பன்னீர் ஃபிங்கர்ஸ் என்று பல வகை உணவுகள் அலங்கரிக்க, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தனர்.

 

அலர்விழி தட்டோடு அமரவும், “நான் பால் சம்பந்தப்பட்ட எதுவும் சாப்பிட மாட்டேன் அலர்விழி. சீஸ் சுத்தமா பிடிக்காது. வேற எதுவுமே செய்யலியா?” என்று பிரவீன் கூறவும், அழவா இல்லை அவனைக் கொல்லவா என்று அமர்ந்திருந்தாள்.

 

இலக்கியாவைத் தவிர மற்றவர்கள் ஒன்றாய் சேர்ந்து இரண்டு நாட்கள் கழிப்பது அவ்வப்போது நடப்பது தான். இன்றுவரை சிரமமாக இருந்ததே இல்லை. ஆனால் இம்முறை? அலர்விழியால் முடியவே இல்லை.

 

மேசை கீழிருந்த மனோ கையை பிடித்துக் கொள்ள, “வீடு முழுசும்  சீஸ் வாசம் வரும் போதே ஒரு வார்த்த சொல்லி இருக்கலாமே பிரவீன். நாலு பேரும் சாயங்கலத்தில இருந்து அடுப்பங்கரையில் வேந்திட்டு இருந்ததை பார்த்தீங்களே. ஏன் சொல்லலை?”

 

மனோ கேட்க பிரவீன் அலர்விழியை தான் பார்த்தான்.

 

“நான் கட்டுபாடான டையட் சாப்பிடுறவன்னு உனக்கு தெரியாதா அலர்விழி? பால் சம்பந்தபட்டதில தயிர் மட்டும் தான் சாப்பிடுவேன்! எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு உனக்கு இன்னுமா தெரியல? சரி தெரியல! அட்லீஸ்ட் சமைக்கதுக்கு முன்னாடி ஒரு வார்த்த நீ கேட்டிருக்க வேண்டாமா? சரி கேக்கல.. விடு! இப்போ எனக்குச் சாப்பிட ஏதாவது இருக்கா அலர்விழி? இல்ல தண்ணி குடிச்சுட்டு படுக்கப் போகட்டுமா?”

 

ஒட்டு மொத்த பழியும் அவள் மேல் விழ, இருந்த களைப்பில், ‘தண்ணில முங்கி சாவு போடா’ என்று கத்த தோன்றியது.

 

“ஒரு டென் மினிட்ஸ்.. டேபிள்ள சாப்பாடு இருக்கும்” கூறியவள் அடுக்களைக்குள் நுழைய,

 

“உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அவ தெரிஞ்சுக்க ஒரு அவசியமும் இல்ல பிரவீன். அவ கிட்ட பேசும் போது உங்க  அதிகார டோன்ன வாச் பண்றது நல்லது…” என்றவன் முகத்தில் கடுமை ஏறியிருந்தது.

 

எபி முடிக்கும் முன், “அவ என் அத்தை பொண்ணு.. அவ தெரிஞ்சு தான் ஆகணும். அவகிட்ட எப்படி வேணும்னாலும் பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றான்.

 

எபியின் பார்வை எதிரில் இருந்தவை ஊடுருவிப் பார்த்தது. இவனைப் பற்றிய கணிப்பு தவறில்லை என்றது அவன் அறிவு!  “உங்க அதிகாரத்தையும் உங்க உரிமையும் காட்ட வேற அத்தை பொண்ண தேடிக்கோங்க டாக்டர்.பிரவீன்! இங்க, நீங்க வெறும் கெஸ்ட். அந்த நினைப்பில உங்க லிமிர்டோட இருங்க பாருங்க”

 

“அவட்ட எவ்வளவு தூரம் போகணும்.. எப்படி போகணும் எல்லா எனக்குத் தெரியும். அதைச் சொல்ல உனக்கு எந்த உரிமையும் நான் கொடுத்ததா எனக்கு நினைவில்லையே எபெனேசர்!”

 

மெல்ல சிரித்தான். “பூனை மெல்ல வெளியில வருது போல! விழிக்கு உன் எண்ணம் தெரியுமா? சொல்லி தான் பாரேன் என்னாகுதுன்னு!

உன் பார்வையே சரி இல்லன்னு தோணிச்சு! பார்வை ஏன் சரி இல்லன்னு இப்போ புரியுது! நீ எதுக்கும் விழி கிட்ட இருந்து தள்ளியே இரு. முடியலனா கிளம்பிடு! ஏன்னா நான் சிலர் கிட்ட மட்டும் தான் டீசன்ட்! விழி விஷயம்ன்னு வந்துட்டா, நான் ரொம்ப பொல்லாதவன். உயிர் மட்டும் தான் மிஞ்சும்”

 

கூறியவன் அடுக்களைக்குள் செல்ல, அடுக்களையில் நின்றிருந்தவளோ நெற்றியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

“என்ன டி பட்டு?”

 

அருகில் சென்றவனைப் பார்த்தவள் கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. “சத்தியமா முடியலை மனோ. பசிக்குது! நிக்க முடியல, கால் ரொம்ப வலிக்குது. முதுகு வலி கொல்லுது மனோ! இவர் வேற.. பாடா படுத்தறார். எரிச்சலா வருது மனோ. கத்திடுவேனோன்னு பயமா இருக்கு. இவ்வளவு நேரம் நீங்க எங்கப் போனீங்க, அந்தாள்ட்ட என்னை தனியா விட்டுட்டு?” கோபத்தையும் வலியையும் அவன் மேல் இறக்கினாள்.

எதையும் யோசிக்கவில்லை, நின்றிருந்தவளை இடுப்போடு தூக்கி மேடையில் அமர்த்தினான். “நீ உக்காரு” என்றவன், அவளுக்குப் பிடித்தாற் போல் வெறும் சோடாவில் சிறிது எலும்பிச்சையை பிழிந்து உப்பு போட்டுக் கொடுத்தான்.  ஒரு தட்டில் அவளுக்கு பிடித்த வகை உணவுகளோடு வந்தான்.

 

“நீ சாப்பிடு. அவனுக்கு நான் வழி பண்றேன்” என்று குளிர்சாதனப் பெட்டியை ஆராய்ந்தான். சப்பாத்திக்குள் உருளை மசியலோடு ஃப்ரீசரில் இருந்த ‘ஸ்டப்டு ஆலூ பராட்டா’ கைக்கொடுக்க, அதில் மூன்றை சூடு செய்து, கூடவே வெங்காயம், தயிர், ஊருக்காய் வைத்து பிரவீன் வயிற்றை நிறைத்தான்.

 

வழக்கமாக இரண்டு மணி வரை நீளும் அரட்டை, அன்று அலர்விழிக்கு பத்து மணியோடு முடிந்துவிட, விட்டால் போதும் என்று பாயல் வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

 

“நான் வீட்டு வாசல் வரை உன் கூட வரேன் அலர்விழி?” என்றவன் அவள் பதிலுரைக்கும் முன் கூடவே சென்றான்.

 

“சாரி அலர்விழி” என்றவனை ‘எதற்காம்?’ என்ற பார்வை பார்த்தாள்.

 

“எனக்கு இந்த லைஃப் ஸ்டைல் தெரியல. இப்பிடி வெளியில வேலையா போகும் போதும் ஹோட்டல் ஸ்டே தான். வீட்டுல எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க. சோ வீடுனாலே வீட்டுத் தலைவி எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சுப்பாங்கன்னு நினைச்சுட்டேன். அது தான் வீடு மாதிரியே உன்கிட்டயும் ஓவர் உரிமை எடுத்துட்டேன். வெரி சாரி”

 

ஒற்றை ‘சாரி’குள் இருக்கும் உள்குத்து புரியாமலில்லை. இன்னும் எவ்வளவு நேரம் இவனை சகிக்கவேண்டும்!

 

“ஐயோ அத்தான்… அப்பிடி எல்லாம் ஒண்ணும் நினைக்காதீங்க. உங்களுக்கில்லாத உரிமையா? வேணுங்கிற கேளுங்க. கொடுக்க போறேன். அவ்வளவு தான்! ஆனா எனக்குமே இது எல்லாம் புதுசு தான். இவ்வளவு பேர் வந்தாலும் நாங்க எல்லாருமே எல்லாத்தையும் சேந்து தான் செய்வோம்… சோ எனக்குமே உங்க எதிர்பார்ப்பு புரியவும் இல்ல… ரொம்ப புதுசும் கூட! இங்க அவங்க அவங்க வேலையை அவர்களே தான் பார்த்துக்கணும். ஏன்னா நாங்க எல்லாருமே வர்க்கிங். வீடுன்னு வந்திட்டா வேலையைப் பகிர்ந்து செய்யணும்ன்னு நினைக்கிறவங்க. இங்க தினமும் மேல்வேலைக்குன்னு ஆள் எல்லாம் இல்ல பாருங்க!” என்றாள் மனம் மறையாமல்.

 

“கொஞ்ச கஷ்ட படுத்திட்டேன் இல்ல?”

 

“கொஞ்சமா?” சிரித்தாள். “உங்க டிக்ஷ்னரில இது பேரு தான் கொஞ்சமோ?”

 

“எனக்கு தான் தெரியல. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே அலர்விழி. நான் உனக்கு ஏத்தமாதிரி மாறியிருப்பேனே.”

 

“அது உங்க பழக்கம். மத்தவங்க கை பார்த்தே வளந்துட்டீங்க. ஒரு நாள் கெஸ்டா இருந்துட்டு போக போறீங்க. அதுக்கெதுக்கு நீங்க உங்களை மாத்திக்கணும்?  உங்களால எல்லாம் அப்பிடி மாற முடியும்ன்னு எனக்கு தோணல!  எங்க வீட்டு மாப்பிள்ளையோட அண்ணன், உங்கள கவனிக்காம இருக்க முடியுமா?”

 

“அவ்வளவு தானா அலர்விழி?”

 

“புரியல டாக்”

 

“உங்க வீட்டு மாபிள்ளையோட அண்ணன்னு சொன்னியே அது தான் கேட்டேன்”

 

“ஆமா தானே… அந்த உறவு இல்லன்னா இன்னைக்கு இங்க நாம நின்னு பேசிட்டு இருப்போமா சொல்லுங்க?”

 

“அது உண்மை தான். இது வெறும் ஃப்ரெண்ட்ஸ்கான கெட்-டுகெதர் இல்லையா? நான் மட்டும் தான் இங்க ஆட் மேன் அவுட்(odd man out)”

 

அவள் புன்னகைக்க, “பாயல் புரியுது… நீங்க ரெண்டு பேரும் ஒரே நாடு… இப்போ ஒரே பிள்டிங்! சோ ஃப்ரெண்ட்ஸ்! மத்த நாலு பேரோட எப்பிடி ஃப்ரெண்ட்ஷிப்” அடுத்த கேள்வியைக் கேட்டு நின்றான்.

 

“மனோவ, சென்னையில பழக்கம். மத்த எல்லாரும் அவர் மூலமா பழக்கம்”

 

“எபெனேசர்! அவர் கூட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஷிப்போ”

 

“ம்ம்… ஆமா டாக்”

 

“‘இங்க உனக்கு என்ன வேல? இடத்தை காலி பண்ணு!’ன்னு அவர் சொன்னார்ன்னு நான் சொன்னா நம்புவியா?”

 

“காரணம் இல்லாம அவர் எதுவுமே சொல்ல மாட்டார் டாக்!”

 

“அப்போ என்னை விட நீ அவர நம்புற! அப்பிடி தானே?”

 

அங்கு சுற்றி, இங்குச் சுற்றி, எபி பற்றித் தெரிந்து கொள்ளத் தூண்டில் போட்டான்.

 

மெல்ல புன்னகைத்தாள். “உங்களுக்கு அவர பிடிக்கலன்னு எனக்கு தெரியும். எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு அவசியமும் இல்ல. உங்க நம்பிக்கை வட்டத்துக்குள்ள அவர் இல்லங்கிறதுக்காக அவர் தப்பானவரும் இல்ல, நம்ப தகாதவரும் இல்ல. உங்களுக்கு அவர் கூட ஒத்துவரலை. அது அவர் குத்தமில்ல.

என் மேல் உயிரா இருக்க அப்பாக்கு எனக்கு நல்லது மட்டுமே தான் நினைக்க முடியும். அப்படிப் பட்ட அப்பாகிட்டயே என் வாழ்க்கை டெசிஷன்ஸ் எதையுமே எடுக்க விட்டது இல்ல நான். என் படிப்பு, வேலை… ஏன் நான் உடுத்தற துணி வரைக்கும் என் முடிவு தான்!

ஆனா நான் கண்ட என் எதிர்கால கனவை, கண்ண மூடிட்டு மனோ கிட்டக் கொடுத்தேன்! இனி மேலும் நிறையக் கனவு காணுவேன், அவர் கனவை எனதாக்கிப்பேன். அவர் என் கூடவே இருக்க தைரியத்தில. அவர் மேல இருக்க அசைக்க முடியாத நம்பிக்கைனால!”

 

மருத்துவன் நின்றவன் நின்றுபோனான்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!