Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ30-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 30_1 (cont)

 

“என்ன டாக், நின்னுடீங்க?”

 



Advertisement

“அவன லவ் பண்றியா?”

 

கீற்றாய் புன்னகை வந்தது. “இதில ஷாக் ஆக என்ன இருக்கு டாக்?”

Advertisement

 

Advertisement

“விளையாடுறியா அலர்விழி?”

 

“இதில விளையாட என்ன இருக்கு? அவர் அநியாயத்துக்கு ஸ்மார்ட் தான்! அதுக்காக நான் அவருக்குப் பொருத்தமில்லையா என்ன? நாங்க நல்ல பேர் தான் டாக். மேட ஃபார் ஈச் அதர்!”

Advertisement

 

ஓரளவிற்கு எதிர்பார்த்தான் தான்! இருந்தும் அவள் வாய் வழி கேட்கவும் புரியாத உணர்வு அவனைக் கவ்விக் கொண்டது. முதல் முறை, முகத்தில் எழுந்த ஏமாற்றத்தை மறைக்க மிகவும் பாடுபட்டான். ஏதோ உள்ளுக்குள் பிசைந்தது. பிடிக்காத கசப்பை விழுங்கினான்.

 

“உங்களுக்கு மனோவ பிடிக்காதுன்னு தெரியும். ஆனா உங்க கணிப்பு 100% தப்புன்னு கற்பூரம் அணைச்சு சொல்லுவேன். அவர் ரொம்ப தங்கமானவர் டாக். உங்க அம்மா… உங்க சித்தி இல்ல நீங்களே எனக்கு மாப்பிள்ளை  தேடினா கூட அப்பிடி ஒருத்தர பாக்க முடியாது. நீங்க நம்புங்க நம்பாம போங்க. மேட்டர் அதில்ல! தயவு செஞ்சு… உங்களுக்குப் புண்ணியமா போகும், எங்க வீட்டுல அவர பத்தி வாய் திறக்காதீங்க. எங்க கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கவேண்டாம்! யார் எதிர்த்தாலும் அது நடக்கும்! ஆனா நீங்க ஏதாவது சொல்லி அவர் பேரத் தேவையே இல்லாம ரிப்பேர் பண்ணிடாதீங்க! கல்யாணம் பண்ணி வைங்க… எங்க நாலாவது பையனுக்கு உங்க பேர வைக்கிறோம்!”

 

“உனக்கு வீட்டில கல்யாணத்துக்கு பாக்கிறதா சொன்னாங்களே அலர்விழி…”

 

“ம்ம்.. உங்க அம்மாவும் அம்பி அத்தையும், எங்க வீட்டுக்கு போனாங்கன்னு கேள்வி பட்டேன். அப்புறம் தான் இந்த கல்யாணப்பேச்சே ஆரம்பிச்சுது. மாப்பிள்ளை யாருன்னு அவங்களும் சொல்லலை… எனக்கும் அவன தெரிஞ்சுக்க இஷ்டமும் இல்லை! நாளைக்குப் பின்ன அவன் முகம் பாக்க சங்கடமா இருக்காது பாருங்க! அம்மாட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். அம்மாக்கு உங்க அம்மாட்ட சொல்ல சங்கடமா இருக்கு போல, வேண்டாம்னு சொல்லாம, என்னைப் பாடா படுத்துறாங்க! அவங்களுக்கு எதுக்கு சிரமம் டாக். எனக்காகக் கொஞ்சம் பக்குவமா உங்க அம்மாட்டையும் அத்தைட்டையும் சொல்லிடுங்களேன்.”

 

“அது என்ன ‘உங்க அம்மா?’ அவங்களும் உனக்கு அத்தை, அலர்விழி!”

 

“ஆமா டாக். ஆனா அதிகம் பழக்கம் இல்லையா அது தான் சட்டுன்னு வரல. மாத்திக்க ட்ரை பண்றேன்!”

 

“சரி சொல்லு… அவங்கட்ட என்னன்னு சொல்லணும்?”

 

“ஒரு வாழ்க்கை டாக்! அத நம்ம மனசுக்கு பிடிச்சவங்களோட வாழணும். காதலிக்காம போனா அது வேற கதை. ஆனா நான் காதலிக்கிறேன். சும்மா வீட்டுல பாத்தாங்கன்னு யாருக்காது கழுத்தை நீட்டி காலம் பூரா கண்ண கசகிட்டு இருக்க முடியாது. என் வாழ்க்கை என்னோட முடிவா இருக்கணும் டாக். நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு மனோ தான். மனோ மட்டும் தான்.

 

இன்கேஸ் அந்த பையனைப் பார்த்தது உங்க அம்மாவோ… இல்ல அத்தையாகவோ இருந்தா, இத அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்லுங்களேன்.”

 

“ம்ம்… சரிதான் அலர்விழி. ஒரு வாழ்க்கை… யாருக்கு பிடிச்சாலும் இல்லாட்டாலும் நமக்கு பிடிச்சவங்களோட தான் வாழணும்! ஆனா வரவன் நல்லவனா இருக்க…” அவன் முடிக்கும் முன்,

 

“ஓய்.. கால் வலிக்குதுன்னு சொன்ன? இன்னும் படுக்க போகலியா?” கேட்டுக் கொண்டே பாயல் வீட்டு வாசலுக்கு வந்த எபி கையில் தலையணையும் போர்வையும்.

 

அங்கு ஒருவர் நிற்பதை காணாதவன் போல் அலர்விழியிடம், “என்ன வேடிக்கை. கதவ திறந்துட்டு இத வாங்கு. சாவிய குடுப்பியாம்.. நீ தூங்கிட்டா பாயல் உள்ள வரணுமில்ல” எபி கூற,

 

மருத்துவனைப் பார்த்தவள், “குட் நைட் டாக். ஏதாவது வேணும்னா இவர்ட்ட கேளுங்க. காலையில பாப்போம்.” என்று அவள் வீட்டுக்குள் நுழைய, எபியும் உள்ளே நுழைந்தான். நகரவும் முடியாமல், உள்ளே புகவும் முடியாமல் நின்ற மருத்துவன் வழியில்லாமல் மின்தூக்கியை நோக்கிச் சென்றான்.

 

மருத்துவனுக்குப் பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்ட உணர்வு. இன்று வரை அவன் போட்ட கணக்கு தவறினதே இல்லை! சிக்கலை எப்படி சரி செய்ய? அலர்விழியை பெற்றவர்களும் தெளிவாகக் கூறிவிட்டனர், ‘மகள் விருப்பம் தான்’ என்று!

 

“பேசினேன் தம்பி! அவ இப்போ வேண்டாம்ன்னு நிக்கிறா! ஊர்ல இருந்து வரட்டும். நேரில பேசி புரியவைக்கிறேன். உங்க வீட்டில இருந்து வந்து பேசினாதுல ரொம்ப சந்தோஷம். அவ இன்னும் ரெண்டு மாசத்தில வந்திடுவா. அவ எங்க பேச்ச தட்டாத குழந்தை. கண்டிப்பா ஒத்துப்பா. இப்போ ஏதோ பயத்தில குழப்பிக்கிறா போல இருக்கு. நாங்க பேசறோம்.

 

அவ சரின்னு சொன்னதும், முறைபடி, நீங்க சொல்ற தேதில நிச்சயமும், பேசின படி, மூணு மாசத்தில அடுத்தடுத்த  ரெண்டு கல்யாணமும் வச்சிடுவோம். ஆனா அவ விருப்பம் எங்களுக்கு முக்கியம் தம்பி!” அலர்விழியின் அப்பா சென்ற வாரம் அழைத்துக் கூறியபோது கூட இப்படி ஒரு காதல் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே!

 

“அது தான் எங்க வீட்டுல சரி சொல்லிட்டாங்களே மாமா… இனி மேல் நான் பேசறதுல்ல என்ன பிரச்சினை.  ‘நான் தான் உன் வீட்டுல உனக்கு பாத்த மாப்பிள்ளை. எனக்கு பிடிச்சிருக்கு! உனக்கு பிடிச்சிருக்கா’ன்னு இப்போவே கேட்டுட்டா, அவ வந்ததும் கல்யாணம் வச்சுக்கலாமே… எதுக்கு தள்ளி போட்டுட்டே போகணும்?” என்று ஏதேதோ கூறி தானே அலர்விழியோடு பேச நேரம் கேட்டான்!

 

வீட்டிற்கு அழைத்த போது கூட அவள் விரும்பி அழைப்பதாகத் தான் நினைத்தான். ஆனால் இன்று?

 

‘பேசி பிரயோஜனமில்லை! ஊருக்கு வரும் வரை பொறுத்துத்தான் ஆகவேண்டும்! எபெனேசர்? அவனை என்ன செய்வது?’ மனம் சிந்தனையில் மூழ்கியது.

 

அவன் ஒருவன் வாசல் வரை வந்தது மறந்தே போனது அலர்விழிக்கு.

 

“என்ன சார்… பின்னாடியே வந்திருக்கீங்க?”

 

“உனக்கு தான் உன் போர்வையும் தலகாணியும் இல்லாம தூக்கம் வராதே. பாயல் வர வரைக்கும் இங்க தான். கால என் மடியில வை, பென்கே(வலி நிவாரணி) தேச்சுவிடுறேன்.”

 

அவள் கால் பிடித்து விட்டு கர்மமே கண்ணாய் களிம்பைப் பூசிவிட, பார்த்துக் கொண்டிருந்தவள், “லவ் யூ மனோ” என்றாள்.

 

“இத என்ன நான் சாரி-ன்னு எடுத்துக்கணுமா?”

 

“சாரி சொல்ல நான் தப்பு பண்ணல மனோ! இது வேற. நீங்க இல்லாம நான் ஒன்னுமே இல்லன்னு எடுத்துகணும்!”

 

“போடி ஓவர் சென்டி சீன் போடாத”

 

“உங்க மேல அவசியமே இல்லாம நான் கோபப்பட்டாலும், என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்றீங்க மனோ. என் மூட் புரிஞ்சு அனுசரிச்சு போறீங்க. லவ் யூ மனோ” தோள் சாய்ந்து கொண்டவளை, ஆசையாய் தோளோடு அணைத்துக் கொண்டான்.

 

“பைத்தியம்… நீ என்னோட பெட்டர் ஹாஃப் டி! அப்பிடினா என்னன்னு தெரியுமா? என்னோட இதயம் சரிஞ்சிருக்க பாதி தான் நீன்னு அர்த்தம்! உன்கிட்ட கோபிச்சுகிட்டு எங்க போக முடியும்? நீ இல்லன்னா எனக்கு மூச்சு முட்டுமே பட்டு”

 

தலை தூக்கி எபியின் கண்களைப் பார்த்தாள். அதில் அவள் பிம்பம் மட்டுமே.

 

இன்று வரை எபி வாய் திறந்து ஒரு முறை கூட அவளிடம் தன் காதலை கூறியதில்லை. ஆனால் அவன் முழு காதலையும் அவன் கண்களே உரைத்தது. உஷ்ணமான மூச்சு காற்று பட இரண்டு விழிகளிலும் ஆசை முத்தம் பதித்தாள்.

 

“பெட்டர் ஹாப்ன்னா.. அது பொண்டாட்டி மட்டும் தானே மனோ…”

 

“ஆமா”

 

“ஆனா நீங்க என்னை இன்னும் உங்க கேள்-ஃப்ரெண்டா தான் பாக்குறீங்க”

 

நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியவன், “ஹை… நல்லா இருக்கே… பேஷா பார்த்துடுவோம். இப்போவே உன்ன என் பொண்டாட்டியா பாக்க ஆசை தான் டி பட்டு!” என்று அணைக்க,

 

பட்டென்று கையில் அடிபோட்டாள். “மூஞ்சி… நேரங்கெட்ட நேரத்துல தான் இந்தாளுக்கு மூடும் மண்ணாங்கட்டியும் வரும்! தனியா இருக்கும் போது சாமியார் வேஷம் போடுறது. கூட்டம் பார்த்ததும் சுவாமிஜிகளாவே மாறிடுறது. ரெண்டு நாளா கொஞ்சம் சுவாமிஜி லீலை எல்லாம் ஓவரா தான் போகுது!”

 

“தனியா இருக்கும் போது ஆரம்பிச்சா நிறுத்த ஆள் இருக்காது. யாராது இருந்தா நினைச்சாலும் ஒரு கட்டத்தைத் தாண்ட முடியாது! அது தான்”

 

“அம்மாடி என்ன ஒரு ப்ளானிங்! உங்க கேவலமான ப்ளானிங்கால நம்ம மானமே போச்சு. அந்த மனுஷன் உங்கள பத்தி வீட்டுல பத்த வைக்காம இருந்தா சரி தான்!”

 

“அடி போடி, சண்டைன்னு வந்தா சட்டை கிழியதான் செய்யும். காதல்னு வந்தா அடுத்தவன் வயிறு எரிய தான் செய்யும்! அதுக்கெல்லாம் பார்த்தா ஆகுமா?”

 

“இதெல்லாம் தத்துவமோ?”

 

“ஹி ஹி ஹீ”

 

“மனோ… எமோஷன்ஸ் எல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சுட்டு நார்மல் அடல்ட்ஸ் மாதிரி பத்து நிமிஷம் பேசுவோமா?”

 

“ம்ம்ம்” அவன் முகத்தை பெண்ணவள் கழுத்துக்குள் நுழைக்க, அவன் தோள் தட்டி, “ஹலோ.. அடல்ட் டாக்னு(adult talk) சொன்னதுக்கு, மேச்யோட் அடல்ட்ஸ் (matured adults) மாதிரி பேசலாம்ன்னு ஒரு அர்த்தம் இருக்கு மிஸ்டர். இப்போ பேசுவோம். அப்புறம் என்னை மோப்பம் பிடிக்கலாம்”

 

“என்ன..து? மோப்பம் பிடிக்கிறேனா? என் நேரம்! சரி ஆரம்பி உன் பேச்ச!”

 

“இப்போ எதுக்கு என் பின்னாடியே வந்தீங்க மனோ?”

 

“விழி?”

 

“விழி தான்! சொல்லுங்க எதுக்கு வந்தீங்க?”

 

“ப்ச்! போடி”

 

“அவர் கூட பேசினேன் மனோ. பத்து நிமிஷம் அவர் முகம் பார்த்துப் பேசினேன். நீங்க நினைக்கிற மாதிரி அவர் என்னை பாக்கவும் இல்ல, அவர் முகத்தில ஒரு சின்ன விருப்பத்துக்கான அறிகுறியும் இல்ல. நீங்க அவர சந்தேகப்படுறேன்னு என்னைக் கேவல படுத்துறீங்க மனோ. என்ன ஆச்சோன்னு நீங்க பதறிட்டு வர அளவுக்குத் தான் என் மேல நம்பிக்கையா மனோ? யாராவது என்னை பாத்து பல்ல காட்டினா போயிடுவேனா மனோ? என்னை ரொம்ப காயப் படுத்துறீங்க மனோ”

 

“என்ன டி என்னன்னவோ பேசற? நான் அப்பிடி நினைப்பேனா?”

 

“நான் பேசணும் மனோ”

 

முகம் பார்த்தான். நீண்ட மூச்சை விட்டு தள்ளி அமர்ந்தான். முகங்கள் பார்த்துக் கொள்ள, “சொல்லு விழி” எனறான்.

 

“இன்னைக்கு நினைக்கல. ஆனா இந்த பொசசிவ் நேச்சர் அங்க தான் உங்கள கூட்டிட்டு போகும். அவர் நல்லவர், கெட்டவர்… யாரா வேணும்னாலும் இருக்கட்டுமே. அவர் கூடவே நாம இருக்க போரது இல்ல. ஜஸ்ட் ஒரு நாள் கெஸ்ட். ஒரு மதியத்துல இருந்து மறு நாள் நாலு மணி வரை தான். இதுக்குள்ள எதுக்கு வெறுப்பும் எரிச்சலும் மனோ?

 

மொத்தமா என் வாழ்நாள்ல ஒரு பத்து தரம் அவர பார்த்திருப்பேனா? அப்படி அவருக்கு என் மேல் ஏதாவது ஒரு நோக்கம் இருந்தா ஏன் மனோ ஒரு தரம் கூட என் கிட்ட அத பத்தி பேசல!

 

பிடிச்சிருந்தா… ஆயிரம் முறையாது என்னை பாக்க முயற்சி பண்ணி இருக்கணும்! இல்ல என்னை இம்ரெஸ் பண்ண ட்ரை பண்ணியிருக்கணும்! எதுவும் நடக்கிலியே! அப்படியே அவருக்கு என் மேல விருப்பம் இருக்கட்டுமே, அத என் கிட்ட சொல்லாதது வரை அது அவர் பிரச்சனை!

 

நம்ம வாழ்க்கையில எங்கேயுமே இருக்க போறதில்ல அவர். ஆனா அவர் நம்ம சொந்தம். நகு கல்யாணத்துக்கு அப்புறம் நாம அடிக்கடி முகத்தை பாத்துக்க வேண்டி வரும். இப்போ, ‘என்னைக்கோ நீ ஒரு ஃபோட்டோல என்னைப் பார்த்த பார்வை சரி இல்லன்னு தோணுது… இன்னைக்கு உனக்கு சமைத்துப் போட என்னால முடியல, சோ வெளியில போ’ன்னு சொல்லிட்டு நகு குடும்பத்திலிருக்கவங்க முகத்தை நாம எப்பிடி பாப்போம்? ஏன் மனோ நீங்க அத யோசிக்கவே இல்ல?

 

இன்னைக்கு இவர்… நாளைக்கு வேற ஒருத்தர்… யாராவது பாத்துட்டே தான் இருப்பாங்க! அதுக்காக நம்ம நிம்மதியை தொலைக்கணுமா?

 

இவர ஒரு ஃப்ரெண்டா பிடிக்குமான்னு என்ட்ட கேட்டா… சுத்தமா பிடிகல! இவர் ஒரு இம்சைன்னு சொல்லுவேன்! இருந்தாலும் வீட்டாள்ன்னு சகிச்சு போறேன். அந்த சகிப்புத் தன்மைக்கு ஆயுள் கம்மி! அந்த ஆயுள் முடியரதுக்குள்ள அவர் கிளம்பிடுவார்ன்னு நம்புவோம்!

 

இந்த மாதிரி மூணாவது மனுஷன் நமக்குள்ள வேண்டாம் மனோ. நாளைக்கு கிளம்பிடுவார். அதுவரைக்கும் தான் அவருக்கும் நமக்கும் உறவு! குட்டி பிள்ளைங்க மாதிரி நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிறதால என் நிம்மதி தான் போகுது! சோ… ப்ளீஸ் எனக்காக என் நிம்மதிக்காக, அவரையும் மத்த கெஸ்ட் மாதிரி மரியாதையோடா நடத்தி அனுப்பி வைப்போமே.”

 

“ம்ம்ம்”

 

“ம்ம்னா என்ன அர்த்தம்?”

 

அவளிடம் எதை எதையோ கூற வந்தவன், அதற்கெல்லாம் அவசியம் இல்லாமலே போக, “சரி அவன் வம்புக்கே போகல சரியா? நீ நிம்மதியா மூச்சு விடு! உனக்காக இத கூட பொறுத்துக்க மாட்டேனா? ஜஸ்ட் ஒன் மோர் டே!”

 

“லவ் யூ மனோ” அணைத்துக் கொண்டவளை ஆசையாய் இறுக்கிக் கொண்டான்.

 

அவன் நினைத்தது போல் அது ‘ஜஸ்ட் ஒன் டே’வாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால், இன்றோடு காதலன் என்ற உரிமை காற்றோடு கலந்துவிடும் என்று தெரிந்திருந்தால் முத்தம் கொடுத்தவளை மனைவியாக மொத்தமாக எடுத்திருப்பான்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!