Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ31-3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_2 (cont…)

 

 

அடுத்த பத்து நிமிடங்களில் பாயல் சென்றுவிட, இருவரும் இரு அறைகளில். பிரவீன் மனம் ஆரவேயில்லை. எபி பற்றி ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் இல்லை. இன்று மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் சாம்பலாய் போனது.



Advertisement

 

அடி வாங்கியதாலோ, மன உளைச்சலாலோ… தலை வலித்தது! போட்டுக் கொள்ளும் மாத்திரையும் இல்லை.

 

Advertisement

வாங்கிவந்திருந்த மது பாட்டிலோடு அடுக்களைக்குச் சென்றான். என்றாவது மனம் களைக்கும் வேளை ‘வாட்கா’ மட்டுமே அவன் துணை! கண்டிப்பாகக் குடிகாரன் இல்லை! ருசியோ, வாசமோ, அதற்கென்று தனியே நிறமோ இல்லாத வாட்காவை ஸ்ப்ரைட் அல்லது கோலாவோடு காக்டெயிலாக உள்ளெடுப்பது அவன் பலவருட பழக்கம் என்பதால் நிதானம் தவறுவது வரை வாட்காவோடு பயணிப்பதில்லை. 

Advertisement

 

குளிர்சாதனப் பெட்டியை ஆராய்ந்து ஸ்ரைட்(Sprite), எலுமிச்சை பழம் எடுத்தான். அளவு பார்த்து சோடாவோடு வாட்காவை கலந்தான். கைப்பேசி அழைத்தது. கையிலிருந்த பாட்டிலோடு உள்ளே சென்றான்.

 

Advertisement

வந்தவன் பார்த்தது காலி கோப்பையை. எபெனேசர் குடித்திருப்பான் போலும் என்று நினைத்தவன் பட்டிலில் மீதமிருந்ததைத் தொண்டையில் இறக்கினான்.

 

திரவம் பட்ட உதடு, அவன் உள்ளம் போலவே எரிந்தது. அவன் உயரத்திற்கு நடந்தது பெருத்த அவமானம்! உள்ளுக்குள் எரியும் தீயை அணைக்க தெரியவில்லை. உள்ளே சென்ற பானம் அதை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. கையிலிருந்த கண்ணாடி கோப்பையை அருகிலிருந்த ஸ்டீல் குப்பைத் தொட்டியில் வீசிரியடித்தான்.

 

சத்தம் கேட்டு அடுக்களைக்கு வந்தவள் பிரவீனை பார்த்ததும், “ஏதாது வேணுமா?” என்று கேட்க, அவன் பார்வை நிலைத்ததோ அவள் கீரல் விழுந்த கன்னத்தில்.

 

“என்ன டாக்?”

 

“அவன போய்.. ம்ப்ச்! எப்பிடி அலர்விழி?” கேட்டவன் முகத்தில் சலிப்பும் வேதனையும்!

 

“அவர் என்னோட புருஷன் ஆக போரவர் அத்தான். சோ ப்ளீஸ் அவருக்கான மரியாதையைக் கொடுக்க பாருங்க. முடியாதுனா அவர பத்தி பேசாதீங்க”

 

“அவன் சரியில்ல அலர்விழி”

 

“இருக்கட்டும். உங்க பார்வையில அவர் எப்படியாது இருந்துட்டு போகட்டும். என்னால் எல்லாருக்கும் விளக்க முடியாது. அவர் சரியில்லாதவராகவே இருக்கட்டும். ஆனா எனக்கு அவர் தான் வேணும். என் பார்வையில அவர் எங்கேயும் எதுலயுமே குறைஞ்சு போகல.”

 

“அப்போ அவன் சொன்னத நம்புற?”

 

“அவர் உங்கள தப்பா நினைக்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. அது அவர் குத்தமில்லையே! அப்பிடி தானே நீங்களும் அவரைத் தப்பான சூழ்நிலையில பார்த்துட்டு ஜட்ஜ் பண்ணியிருக்கீங்க!”

 

“அந்த கேடுகெட்டவனைப் போய் என் கூட… ச்ச!”

 

கண்களை இறுக மூடி திறந்தவள். “கிளம்புங்க அத்தான். நம்ம மரியாதையை நாமே கெடுத்துகிறதுக்கு முன்ன அவங்க அவங்க வழிய பார்த்து போரது நல்லதுன்னு நினைக்கிறேன். சோ… ப்ளீஸ் கிளம்புங்க!”

 

பட்டென்று அவனுக்குள் ஒர் கோபம்! “கிளம்பறேன். நீயும் கிளம்பி வர ரெடியா இரு. வரும் போது இவனையும்… இந்த வாழ்க்கையையும் இங்கேயே விட்டுட்டு தல முழுகீட்டு நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா வா. என் மனைவிங்கற அந்தஸ்தாவது உனக்கு மிஞ்சும்”

 

கூறியவன் நகரவும், நிமிடம் பிடித்தது அவன் பேச்சு புரிய… “எ..என்ன… என்ன சொன்னீங்க?”

 

திரும்பி பார்க்காமலே, “நாலு மாசத்தில நீ எனக்குச் சொந்தமாக போறன்னு சொல்றேன். அதனால திருந்தி வான்னு சொல்றேன்” கூறி சென்றான்.

 

‘இவனா வீட்டில் பார்த்தவன்? ஒரு வார்த்தை கூட கூறாமல் எப்படி இவனால் சுற்றித் திரிய முடிந்தது? எத்தனை அழுத்தம்? நேற்று இரவேனும் கூறியிருக்கலாமே… மனோவை காதலிப்பது தெரிந்தும் என்ன எண்ணமிது!’ உள்ளம் குமைந்தது.

“ச்சீ.. வாய கழுவு! என்ன அசிங்கமான பேச்சிது. அடுத்தவனுக்குப் பொண்டாட்டியாக போறவட்ட பேசற பேச்சா இது? அவர் உன்ன  அடிச்சதுல தப்பே இல்ல! அவர் விட்ட மீதி மண்டையை நான் பிளக்கிறதுக்குள்ள தயவு செஞ்சு கிளம்புங்க! கல்யாணம் கருமாதின்னு வீட்டுப் பக்கம் வந்திடாதீங்க டாக்டர். இந்த மரியாதை கூட கிடைக்காது. தலையில நல்லா ஏத்திக்கோங்க… நான் மனோவோட மனைவி. யார் நினைச்சாலும் அத மாத்த முடியாது. அதனால உங்க நினைப்பை குப்பைல போடுங்க!”

 

எதுவும் கூறாமல் பெட்டி இருந்த அறைக்குச் சென்றவனுக்கு உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அமர்ந்துவிட்டான். ‘நாலு வருஷமா அவ வீட்டுல சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுபட்டு இவள கல்யாணம் பண்ண காத்திருந்த நான் என்ன கேனையா? ரெண்டே மாசம், ஊருக்கு வா, உன்ன எப்பிடி வழிக்கு கொண்டு வரணும்ன்னு எனக்கு தெரியும்!’ உள்ளுக்குள் கருவினான்.

 

கிளம்பி பெட்டியோடு வெளியே வர, அடுக்களையிலிருந்து அலர்விழியின் சத்தம் கேட்டது. “மனோ… ஃபோன எடுங்க மனோ. எனக்கு என்னவோ செய்யுது மனோ. தல என்னமோ பண்ணுது மனோ. வீட்டுக்கு வாங்க மனோ” நிற்க முடியாமல், பேசவும் முடியமால் அலர்விழி நா குழறியது.

 

“அலர்விழி… என்ன ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்?”  சுவர்மேல் தலையை மோதி நின்றாள். ஏதோ புரியாத பாஷை பேசினாள்.

 

எபெனேசர் வீட்டில் இல்லை என்றால் வாட்காவை அருந்தியது? மாத்திரையை விழுங்கியதைப் பார்த்தானே… ‘அச்சோ’ என்றானது. அந்த மாத்திரையும் வாட்காவும் சேர்ந்தால் நினைவிழக்கலாம்! ஏன் மூச்சு கூட நின்று போகலாம். மருத்துவனுக்குப் பயம் பிடித்தது! மாத்திரையை கொடுத்தது அவனல்லவா!

 

“அலர்விழி என்ன பண்ணுது?”

 

“மனோ…” என்றாள், தெளிவில்லாமல்.

 

“ஏய்… என்ன பண்ணுது?” கேட்டுக் கொண்டே தோள்கள் இரண்டையும் பின்னோடு பிடித்து அவளை நிறுத்த மீண்டும் “மனோ…” என்றாள், நாவோடு உடலும் குழைந்தது.

 

“அலர்விழி…” உலுக்கினான்.

 

“மனோ” என்றவள் கண்கள் சொருக, தோள்களை பிடித்திருந்தவன் நெஞ்சோடு சாய்ந்தாள். 

 

தூக்கி சென்று படுக்க வைத்தான். கண்களை ஆராய்ந்தான். பல்ஸ் பார்த்தான், கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் மதியத்தை விடச் சற்று குறைவு தான். உடல் சில்லிட்டிருந்தாலும், பயப்பட ஒன்றுமில்லை என்று உறுதி படுத்திக் கொண்டான்.

 

நினைவிழந்து படுத்திருந்தவளைப் பார்த்தான்.

 

மற்றவன் வாங்கி கொடுத்த புடவையில், மற்றவன் உரிமையோடு கழுத்திலிட்ட சங்கிலியோடு, மற்றவன் போட்டுவிட்ட மோதிரத்தோடு படுத்திருந்தவளைப் பார்த்தான். முழு போதையிலும்… பாதி மயக்கத்திலும்… தன்னை முற்றிலும் மறந்த நிலையிலும் அவள் வாயிலிருந்து முனகலாய் மற்றவன் பெயரை தவிர வேறு எதையுமே கூற முடியாதவளாகப் படுத்திருந்தவளின் தோற்றம் பார்த்தவன், அவளின் மனதை பார்க்க தவறினான். அவள் அழகிய கன்னத்தில் மற்றவன் ஏற்படுத்தியிருந்த இரத்த கீறல் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

 

சின்ன பெண்ணை ஏமாற்றி வசியம் செய்து வைத்திருக்கும் எபெனேசர் மேல் கோபமாக வந்தது. இவளுக்கு அவனை ஏன் பிடிக்க வேண்டுமென்றே புரியவில்லை. வேறு ஜாதி, வேறு மதம்! எதிலுமே பொருத்தமில்லாத வேற்றினத்தான் எப்படி இவன் அத்தை மகளுக்கு சரியானவனாக இருக்க முடியும்? அவன் தவறானவன் ஆகிற்றே! இவன் தானே இவளுக்குச் சரியானவன்! அறிவு எடுத்துக் கொடுத்தது!

 

சரியானவன் எப்படி இவளை தன்னவள் ஆக்குவது? பிறப்பால் ஒருவரும் உயர்வதும் இல்லை தாழ்ந்துபோவதுமில்லை. ஒருவன் செயல் மட்டுமே கூறும் அவன் யார் என்று!  இதை அறிந்த மேதை, அவன் வசதிக்கு ஏற்றார் போல் கலாச்சாரம், பண்பாடு பற்றி  சிந்தித்தான்.  சினிமா கற்றுக் கொடுத்த ‘கலாச்சாரம்’ அது! அதில், தன்னை விரும்பாத பெண்ணை எப்படி மணப்பது என்ற பாடங்கள் இரண்டிருந்தது.

 

ஒன்று: கதற கதற கோவிலில் வைத்து மஞ்சள் சரடு கட்டுவது. அப்படிக் கட்டினால்…? இவள் அதைக் கழட்டி தூரப் போடும் வாய்ப்புகள் அதிகம்!

மற்றது: அதை நினைக்கவும் பிரவீன் கைகள் மெல்ல நடுங்கியது.

 

ஒழுக்கத்தை முதன்மையாகக் கருதுபவன், பிறர் மனை நோக்காதவன்,  நடுங்கிய கையோடே பாதி மயக்கத்திலிருந்த பெண்ணின் கன்ன காயத்தை வருடினான். சில்லிட்ட அவள் கன்னம் வருடவும் இவன் உடல் சிலிர்த்தது. பாதி திறந்த விழியாள், அவள் கண்ணாளன் நாமத்தை மூச்சுக்காற்றாய் உச்சரித்து கொண்டிருந்தாள். உச்சரித்த உதட்டில், அதிக பளபளப்பில்லாத அடர் ஊதா சாயம், உதட்டின் அழகிய வரிகளை பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நிறமும் அதை தாங்கியிருந்த உதடும் அவனை வசிகரித்தது.

 

அவன், அவள் உயிரில் கலந்தவன், அந்த அழகிய உதட்டுக்குச் சொந்தக்காரன், கோபத்தோடு ஆக்ஸிலேட்டரை மிதித்தால் ‘இன்ஃபினிட்டி’ வாகனத்தால் எவ்வளவு வேகமாக பாஸ்டன் செல்ல முடியும் என்ற பரிசோதனையில் இருந்தான். தற்போதைய வேகம், மணி நேரத்திற்கு 91 மைல்(146 கிமி) என்றது மகிழுந்தின் வேகமானி(speedometer). 

 

பிரவீனின் நாடி துடிப்பும் 91-ஐ தொட்டிருக்கும் என்றது அவன் இழந்த நிதானம்! கண்கள் மூடியிருந்த பெண்ணவள் உதடும் மூடப்பட்டிருக்கவே ‘மனோ’ என்ற சத்தமும் நின்றுபோயிருந்தது. பெண்ணோடு சேர்த்து ‘மனோ’ என்ற நாமத்தையும் மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பித்தான் பிரவீன்.  

   

சகுந்தலா பாட்டி, இவனுக்குப் பாட்டியாக இருந்திருந்தால், “பாரம்பரியம், பண்பாடு, பழமை, எல்லாம் நமக்கு ஒழுக்கத்தைக் கத்து கொடுக்குது. நான் ஒரு மெத்த படிச்ச மேதாவி, எனக்கு எல்லாம் தெரியும்ன்னு அந்த எல்லையை மீற நினைக்கக் கூடாது. ஒரு வேகத்தில, விவேகம் இல்லாம எல்லையைக் கடக்கும் போது அது நம்ம ஒழுக்கத்தை மட்டும் இல்ல, கூடவே நம்ம சம்பாரிச்சு வச்ச நல்ல பேரையும், மதிப்பையும் அழிச்சுடும்! சில நேரம் எல்லையைக் கடக்கும் போது சாதிப்போம். சில நேரம் நம்மளை அது சுவடில்லாம அழிச்சிடும்.” என்று அறிவுரை கூறி வளர்த்திருப்பார், ‘சிங்க நாட்டாமை’யின் தீவிர விசிறி!

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!