Skip to content
Post Views: 4,042
” ஐயோ அவகிட்ட ஏன் டி சொன்ன, அவ என்னைத் திங்கள் கிழமை காலேஜ்ல பார்கிறவரை பயந்திட்டே இருப்பா.” அர்ஜுன் வருந்த….
“நான் சொல்லலை, பிக் பிரதர் தான் சொன்னார். அவ ரொம்பக் கவலைபடுறான்னு தான் உனக்கு இப்ப போன் பண்ணாங்க.” என்றதும்,
“நிஜமாவா ஆரு, மீரா என்னைப் பத்தி கேட்டாளா?” அர்ஜுன் ஆர்வமாகக் கேட்க… “அதெல்லாம் கட்டின பொண்டாட்டி மாதிரி தான் விசாரிச்சா… போன்னை அவகிட்ட குடுக்கவா” ஆரு கேட்க….
அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “இப்படித் திடிர்னு கேட்டா என்ன சொல்றது என்றவன், நீ அவ செல் நம்பர் வாங்கிட்டு வா போதும்.” என்றான். சரி என்ற ஆரு போன்னை வைத்து விட்டு மீராவிடம் செல்ல… அங்கே ஆதி மீராவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
ஆரு ஆதித்யாவை பார்த்து கிளம்பலாமா என்று கேட்டவள், மீராவை பார்த்து, “என் செல் நம்பர் சொல்றேன் நோட் பண்ணிக்கிறியா?” என்றதும், மீராவும் தனது செல்லை எடுத்து ஆருவின் நம்பரை பதிவு செய்ய ஆரம்பித்தாள்.
“இப்ப அதுல இருந்து எனக்கு மிஸ்ட் கால் கொடு.” என்றதும், மீராவும் மிஸ்ட் கால் கொடுக்க, “வந்திடுச்சு மீரா…. சரி நான் கிளம்பறேன்.” என்று ஆரு விடைபெற ஆதியும் மீராவிடம் சொல்லி கொண்டு சென்றான்.
மீரா வீட்டுக்குச் செல்லாமல் கோவிலுக்குச் சென்றவள் கடவுளிடம் அர்ஜுனுக்காக வேண்டிக்கொண்டு இருந்தாள். அப்போது அர்ச்சனை யார் பேருக்கு என்று அர்ச்சகர் கேட்க…. அர்ஜுன் என்ற பேர் காதில் விழ, மீரா கண் திறந்து பார்க்க, அங்கே அர்ஜுனின் அம்மா வித்யா எதிரில் நின்று கொண்டிருந்தார். மீராவிற்குப் புரிந்தது அவரும் அர்ஜுனுக்கு அடிபட்டதால் தான் வந்திருக்கிறார் என்று.
இருவரும் சாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தில் சென்று அமர, வித்யாவின் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்த மீராவிற்கு அவரை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல் அவரருகில் சென்று அமர்ந்தவள், “ஆன்டி… நீங்க ஆருவோட அம்மா தானே” என்று கேட்க… அப்போது தான் அவளைக் கவனித்த வித்யா “ஆமாம்… நீ அன்னைக்கு டான்ஸ் ஆடின பொண்ணு இல்லை.” என்றார்.
ஆமாம் என்ற மீரா, “இன்னைக்கு ஆருவை டான்ஸ் கிளாஸ்ல பார்த்தேன்.” என்றாள். “ஆமாம் அவளும் இன்னையிலிருந்து சாயங்காலம் பாட்ச் போறா. நீ எப்படி இருக்க மீரா? யார் கூட வந்த?” என்றவர், அவளது உடையைப் பார்த்து “டான்ஸ் கிளாஸ்ல இருந்து நேரா வரியா? ” என்று கேட்க…
“ஆமாம் ஆன்டி தனியா தான் வந்தேன்.” என்றாள். சரி போலாமா என்று வித்யா எழுந்து கொள்ள, மீராவும் அவருடன் வெளியே வந்தவள், “எப்படி ஆன்டி போவீங்க ?” என்று கேட்க… “ஆட்டோவில் வந்தேன்.” என்றவர், அங்கு எதாவது ஆட்டோ நிற்கிறதா என்று பார்க்க ஒன்றையும் காணவில்லை.
“உங்க வீடு எங்க இருக்கு ஆன்டி?” “அடையார்ல இருக்கு மீரா.” “எங்க வீடு பெசன்ட் நகர்ல இருக்கு. வாங்க ஆன்டி உங்களைப் போற வழியில இறக்கி விட்டுட்டு போறேன்.” என்ற மீரா அவருக்குக் கார் கதவை திறந்துவிட, “உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே…” என்று கேட்டவர், மீரா இல்லை என்றதும், வித்யா ஏறி அமர… மறுபக்கம் சென்று ஏறிய மீரா காரை கிளப்பினாள்.
வித்யா வழி சொல்ல… மீரா காரை கொண்டு போய் அவரின் வீட்டின் முன் நிறுத்தினாள். அழகான வீடு என்று நினைத்தவளுக்கு, இது அர்ஜுனின் வீடு என்பதே சந்தோஷத்தை கொடுக்க… அது அவள் முகத்திலும் தெரிந்தது.
“வா மீரா… உள்ளே வந்திட்டுக் கொஞ்சம் நேரம் கழிச்சு போ. உங்க வீடு பக்கத்தில தான இருக்கு.” வித்யா கூப்பிட… அர்ஜுனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மீராவும் மறுக்காமல் உள்ளே சென்றாள்.
வித்யாவோடு வந்த மீராவை மாடியில் இருந்து பார்த்து சந்தோஷ அதிர்ச்சி அடைந்த ஆரு வேகமாக அர்ஜுனின் அறைக்குச் சென்று, “அர்ஜுன், மீரா வந்திருக்கா…” என்றதும், “சும்மா விளையாடாதடி..” என்றான் எரிச்சலாக….
“நிஜமா தான்டா…” என்றதும், அதிர்ந்தவன் “மீராவா இங்க எப்படி ? அம்மா வந்துட்டாங்களா?” என்று கேட்க…. “அவ அம்மாவோட தான் வர்றா. அப்ப அம்மா தான் அவளை அழைச்சிட்டு வந்திருக்கணும்.” ஆரு சொல்ல… அர்ஜுன் “சரி நீ போ நான் வரேன்.” என்றான்.
மீராவை அங்கிருந்த சோபாவில் உட்கார சொல்லிவிட்டு வித்யா உள்ளே செல்ல… ஆரு கீழே இறங்கி வந்தவள், “வா மீரா, நீ இன்னைக்கு எங்க வீட்டுக்கு வருவேன்னு நான் நினைக்கவே இல்லை.” என்றாள்.
“ஆன்டிய கோவில்ல பார்த்தேன் அவங்களை ட்ராப் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்.” என்று பேசிக்கொண்டே மீரா அர்ஜுனை தேட… அப்போது அர்ஜுனும் கீழே இறங்கி வந்தான். காலை தாங்கி தாங்கி நடந்து வந்தவனின் கை, முகம் எங்கும் சிராய்த்து இருந்தது. அவனைப் பார்த்ததும் மீராவிற்குக் கண்கள் கலங்கி விட்டது.
“இது தான் சின்னக் காயமா…” அவள் ஆருவிடம் கேட்க…
“எனக்கும் தெரியாது மீரா… இங்க வந்ததும் தான் தெரியும். ரோட்ல மண் இருந்திருக்கு அதுல சறுக்கி விழுந்திட்டான் போல…” ஆரு சொல்ல…
அப்போது வித்யாவும் கையில் ஜூஸ் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவர், அங்கே அர்ஜுனன பார்த்து, “நீ ஏன்டா கீழ வந்த?” என்று கேட்க… “ரூம்ல போர் அடிச்சிது மா.” என்றான்.
இந்தா மீரா ஜூஸ் என்று கொடுத்தவர், அர்ஜுனுக்கும் சென்று ஜூஸ் கொண்டு வந்தார். “இவன் அர்ஜுன் என்னோட ரெண்டாவது பையன். இன்னைக்குப் பைக்ல இருந்து கீழ விழுந்து அடிப்பட்டுட்டு வந்தான், அது தான் மனசுக்கு கஷ்டமா இருந்தது கோவிலுக்கு வந்தேன்” என்றவர்,
“நீ என்ன படிக்கிற மீரா” என்று கேட்க… “நான் BE., second இயர் படிக்கிறேன்” என்றாள்.
“எந்தக் காலேஜ் ?”என்றதும், மீரா கல்லூரியின் பெயரை சொல்ல… “எங்க அர்ஜுனும் அங்க தான் படிக்கிறான்.” என்றவர், உனக்கு அவனைத் தெரியுமா என்று கேட்க… மீரா அர்ஜுனை பார்த்துக்கொண்டே தெரியாது என்றாள்.
“தெரியாதா என் பையன் காலேஜ்ல ரொம்ப famous. கிரிக்கெட் எல்லாம் விளையாடுவான். நீ அவனைப் பார்த்ததில்லை.”
“மீரா எனக்குக் கிரிக்கெட்டே பிடிக்காது” என்றாள். அதைக் கேட்டு அர்ஜுனுக்குக் குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புரை ஏற, கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கினான். பாரு கொழுப்ப அர்ஜுன் அவுட்னு கத்திட்டுத் தெரியாதாம் என்று நினைத்தவன், வித்யா சொல்வதைக் கவனிக்க…
“அர்ஜுன், இவளுக்கு உன்னைத் தெரியாதாமே…. உனக்கு இவளை தெரியுமா?” வித்யா கேட்க “தெரியும் மா… காலேஜ்ல பார்த்திருக்கேன்.” என்ற ஆர்ஜுன், மீராவை பார்த்துக் கண் சிமிட்ட, மீரா அவனைப் பார்த்து முறைத்தாள். ஆரு இதை எல்லாம் சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரி ஆன்டி, நான் கிளம்பறேன்.” மீரா எழுந்துகொள்ள…”சரிமா அடிக்கடி வீட்டுக்கு வா.” என்ற வித்யா “நீ பரவாயில்லை தனியாவே வெளிய போயிட்டு வர… அதுவும் கார் வேற ஓட்ற…. எங்க ஆரு எங்கையும் வெளிய தனியா போக மாட்டா, அவளுக்கு எங்க போனாலும் அவ அண்ணனுங்க வேண்டும்.” என்றவர், அவள் தன் குடும்பத்தைப் பற்றி எதாவது சொல்வாள் என்று மீராவின் முகத்தைப் பார்க்க… அவள் சிரித்தாலே தவிர அவள் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
வித்யாவே மீண்டும் “உங்க அம்மாவை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா மீரா.” என்றார். மீரா அதற்குப் பதில் சொல்லாமல் ஆருவிடம் bye என்றவள், அடுத்து அர்ஜுனை பார்த்து bye என்றாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. அதோடு அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிய, அதைப் புரிந்து கொண்ட அர்ஜுன், அவன் அம்மா மேலும் எந்தக் கேள்வியும் அவளிடம் கேட்டுவிடக் கூடாது என்று நினைத்தவன் “அம்….மா… கால் வலிக்குது…” என்று காலை பிடிக்க… வித்யா, ஆரு, மீரா எல்லோரும் பதறினார்.
ஒன்னும் இல்லை பெட்ல கால் நீட்டி படுத்தா சரி ஆகிடும் என்றபடி அர்ஜுன் மெதுவாக எழுந்துகொள்ள, வித்யாவும் அவனோடு மாடியை நோக்கி சென்றார். நான் போயிட்டு வரேன் என்று மீரா விடை பெற்றவள், ஹால் கதவின் அருகே சென்று திரும்பி அர்ஜுனை பார்க்க… மாடி ஏறிக்கொண்டிருந்தவன், அவளைப் பார்த்து ஒன்னும் இல்லை என்று கண்களால் சொல்ல… மீராவும் தலை அசைத்துவிட்டு சென்றாள்.
அன்று இரவு உணவிற்குப் பின் அர்ஜுனின் அறையில் ஆதியிடம், மீரா வந்ததைப் பற்றி ஆரு சொன்னாள். “நீங்க இல்லாம போய்டீங்க ஆதி அண்ணா, எனக்குத் தில்லானா மோகனாம்பாள் படம் லைவ் டெலிகாஸ்ட் ஆன மாதிரி இருந்தது….” என்றவள்,
“கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நான் அறியேன்.” என்று பாடிக்கொண்டே அபிநயம் பிடிக்க.. அதைப் பார்த்து ஆதியும், அர்ஜுனும் விழுந்து விழுந்து சிரித்தனர். கீழே இருந்து வித்யா இன்னும் தூங்காம என்ன பண்றீங்க? என்று குரல் கொடுக்க… ஆதியும், ஆருவும் அவரவர் அறைக்குப் படுக்கச் சென்றனர்.
அர்ஜுன் கட்டிலில் படுத்தவன் தனது செல்லில் இருந்து மீராவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான். தூங்கி இருப்பாளோ பதில் வருமா என்று யோசித்துக் கொண்டே படுத்திருந்தான்.
அவள் படுக்கையில் படுத்திருந்த மீராவிற்குச் செல் போனில் மெசேஜ் வந்த சத்தம் கேட்டதும், அவள் அதை எடுத்து பார்க்க…. புதிய எண்ணில் இருந்து வந்திருந்தது யாரா இருக்கும் என்று யோசித்துக் கொண்டே திறந்தவள், அதில்
I will always be there for you.
Arjun
என்ற மெசேஜ் பார்த்ததும், இதுவரை இருந்த குழப்பம் எல்லாம் மறைய… துள்ளி கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள், அவனுக்குப் பதில் அனுப்பினாள்.
I know
என்று அனுப்பிவிட்டு மீரா சிரித்த முகமாகத் தலை சாய, அர்ஜுனும் அவள் அனுப்பிய மெசேஜ் பார்த்துச் சந்தோஷத்தில் wow என்று கத்தியவன், பின் புன்னகை முகமாக படுக்கையில் படுத்தவனுக்கு, அடுத்து மீராவை எப்போது பார்ப்போம் என்று இருந்தது.
Advertisement
error: Content is protected !!