Skip to content
Post Views: 4,895
அவள் தன்னுடைய மன உணர்வுகளுடன் போராட ஜீப்பை ஊர் எல்லையில் நிறுத்தியவன் “பிளீஸ் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான்.
“எனக்கு பேச வேண்டியது எதுவும் இல்லை”, என்று பட்டென்று பதில் சொன்னாள் ரேகா. அவள் பயம் அவளுக்கு தானே தெரியும். “என்னை கட்டிப் புடிச்சு என் கிட்ட முத்தமும் வாங்கிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொருத்தனை எப்படி டி நீ கல்யாணம் பண்ணுவ?”, என்று அவன் கேட்டு விடுவானோ என்று பயந்து போய் இருந்தாள். அதனால் தான் அப்படிச் சொன்னாள்.
Advertisement
“இன்னைக்கு என் கிட்ட பேசலைன்னா நீ வாழ்நாள் முழுக்க கஷ்டப் பட வேண்டியது இருக்கும். ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு”, என்று சொன்னவன் குரலில் சிறிது எரிச்சல் வந்திருந்தது.
அவன் கோபத்தை அவனுடைய குரலில் உணர்ந்த ரேகா “பிளீஸ், நானே பயங்கர மனக் கஷ்டத்துல இருக்கேன். நீங்களும் என்னை தயவு செஞ்சு கஷ்டப் படுத்தாதீங்க. நான் செஞ்சது எல்லாம் தப்பு தான். என்னையே அறியாம நடந்தது. எனக்கு உங்க பேர், ஊர் எதுவுமே தெரியாது. அப்படி இருக்க இன்னைக்கு எதிர் பாராத விதமா எல்லாம் நடந்துருச்சு. என்னோட மனசு பலகீனமா இருந்ததா தெரியலை. இதுக்கு முன்னாடி உங்களை நான் பாத்ததே இல்லை. இனியும் நீங்க யாரோ நான் யாரோ தான். என்னோட வாழ்க்கை வேற மாதிரி இருக்கணும்னு அந்த கடவுள் முடிவு பண்ணிருக்கார் போல? நான் என் வழியைப் பாக்குறேன். நீங்களும் உங்க டிரைவர் வேலையை சிறப்பா செய்யுங்க. இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் ஒண்ணுமே இல்லை. பிளீஸ் வண்டியை எடுங்க”, என்று சொல்லி விட்டு அவனைப் பார்த்தவள் திகைத்தாள். அவன் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது.
Advertisement
Advertisement
அது… இது வரை இருந்த நேசப் பார்வை இல்லை. வெறுப்பு, கோபம், இயலாமை என அனைத்தும் கலந்து நீ இப்படித் தானா என்ற பார்வையை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்துக்கு முன் அவளைக் கண்டதும் மின்னிய அந்த மின்னல் இப்போது இல்லை. ஒரு நொடிக்கு மேல் அந்த வெறுப்பான பார்வையை தாங்க முடியாமல் முகம் திருப்பிக் கொண்டாள் ரேகா.
Advertisement
அவன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்தது போல இருந்ததால் ஒரு பெருமூச்சை வெளியிட்டான் அவன். பின் அவன் கையில் ஜீப் பறந்தது. அவன் வேகத்தில் அவள் மிரண்டு போனாள்.
“ஐயோ கொஞ்சம் மெதுவா போங்களேன்”, என்று பயத்தில் அவள் அலற “கவலைப்படாதீங்க மேடம், உங்க உயிருக்கு என்னால ஒண்ணும் ஆகாது. உங்களுக்கு வேற கல்யாணம் நடக்க போகுது. நல்லா இருங்க”, என்று வெறுப்புடன் சொல்லி விட்டு ரோட்டைப் பார்வையிட்டான்.
“இவனுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது? நான் இவனோட ஆசைக்கு இனங்கலைன்னு கோபமா? எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சும் இப்படி என்னை கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்துருக்கானே? அப்ப இவன் கெட்டவன் தானே? இவனுக்கு கோவம் வேற வரணுமோ?”, என்று அவள் அவனைத் திட்டினாள்.
“அவனைச் சொல்றியே? உனக்கு கல்யாணம்னு உனக்கே தெரியும் தானே? தெறிஞ்சிக்கிட்டா நீயே அவன் நெஞ்சில் சாயும் போது அவனைச் சொல்லி என்ன பயன்?”, என்று கேள்வி எழுப்பியது அவள் நியாய மனது.
தன்னுடைய மனமே தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தவள் கப் சிப்பென்று அமர்ந்து விட்டாள்.
சங்கரன் வீட்டு வாசலில் ஜீப்பை அவன் நிறுத்தியதும் அவனை ஒரு பார்வை பார்த்தாள் ரேகா. அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை.
அவள் இறங்கியது தான் தாமதம் அந்த ஜீப் அங்கிருந்து விருட்டென்று சென்றிருந்தது. “பின் பக்கம் போய் நிறுத்துவான், இல்லைன்னா வேற யாரையும் கூப்பிட போவான் போல?”, என்று எண்ணி வீட்டுக்குள் நடந்தாள் ரேகா. வாசலில் கட்டப் பட்ட வாழை மரமும், மாவிலைத் தோரணமும் அவளைக் கண்டு சிரிப்பது போலவே இருந்தது ரேகாவுக்கு.
அவள் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் மொத்த சொந்தங்களும் அவளை சூழ்ந்து கொண்டன. அதன் பின் அவளது நேரம் அவள் கையில் இல்லை. தன்னுடன் வந்தவனை அடிக்கடி அவள் கண்கள் தேடியது. ஆனால் அவன் அவள் கண்ணிலே பட வில்லை.
“என்னை இங்கே கூட்டிட்டு வர வேலை முடிஞ்சிட்டுன்னு இங்க இருந்து போய்ட்டானா? இவனை இனி பாக்க முடியாதா?”, என்று எண்ணிக் கொண்டாள் ரேகா. அவளை உடனே குளிக்க அனுப்பி வைத்தார்கள்.
அவசரமாக தலைக்கு ஊத்தி வந்தவளின் தலையை யாரோ துவட்டி விட்டார்கள். பின் அவள் பாவாடை சட்டை மாற்றியதும் அவளுக்கு மணப்பெண் அலங்காரம் ஆரம்பமானது. எவ்வளவு தான் அவள் தலையை உலர்த்தினாலும் அவ்வளவு முடி காய்வேனா என்று இருந்தது. வேறு வழியில்லாமல் தலை காயாமலே அவளுக்கு தலை பின்னப் பட்டது.
அதன் பின் அவளுக்கு நகை போடப் பட்டது. அந்த நகைகளை அதிர்ச்சியாக பார்த்தாள். அது அவளுடைய அம்மாவுடையது. அந்த நிலைமையிலும் அது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஏதோ அவளுடைய அம்மாவே அவளுடன் இருப்பது போல இருந்தது. “எப்படி இந்த நகையை எல்லாம் அத்தை எனக்கு கொடுத்தாங்க?”, என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விடை சொல்வார் யாருமே இல்லை.
அவள் மனம் முழுவதும் குழம்பியிருந்தாலும் தலை அலங்காரம் ஆரம்பித்து அது நடந்து முடிந்ததும் முக அலங்காரம் ஆரம்பித்தது.
அலங்காரத்தை முடித்து விட்டு அனைவரும் வெளியே செல்ல ரேகா மட்டும் கண்ணாடி முன்பு தனியே அமர்ந்திருந்தாள்.
என்ன தான் கல்யாணத்துக்கு ரெடி ஆனாலும் அவளால் ஜீப்பில் வந்தவனை மறக்க முடிய வில்லை. அவன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டுமோ? கடைசியாக தன்னை பார்த்தானே ஒரு பார்வை? அதை ஆயுசுக்கும் தன்னால் மறக்க முடியுமா? அவனையே மறக்க முடியாது என்னும் போது அவன் பார்வையை மறக்கவா முடியும்?
அவள் மனதில் முதன் முதலில் சலனத்தை விதைத்தது அவன் தான். அவன் யாரோ எவரோ? நல்லவனோ கெட்டவனோ? யாரா இருந்தாலும் அவள் மனதில் பதிந்தது அவன் தான். அவனை மறந்து விட்டு வேறு ஒருவனை எப்படி அவளால் மணக்க முடியும்? அப்படி இன்னொருவனை மணந்தால் அவள் ரெட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை தான் உருவாகும். அது அதை விட அசிங்கம்.
அந்த அருவருப்பு பார்வையை தான் கடைசியாக அவன் பார்த்தனா? எவன் தொட்டாலும் மயங்கும் பெண் என்று தானே நினைத்திருப்பான்?
“அவன் என்கிட்ட எவ்வளவோ பேச முயற்சி செஞ்சானே? அவனை பேச விட்டுருந்தா என்ன பேசியிருப்பான்? என் கூட வந்துருன்னு சொல்லிருப்பானா? நான் தானே அவனை உதாசீனப் படுத்தி விட்டு பேச விடாம செஞ்சேன்? கடவுளே இப்ப அவனை நான் எங்க போய் தேடுவேன்? அவன் யாரா இருந்தாலும் எனக்கு அவன் தான் வேணும்”, என்று அவள் மனம் எண்ணியது.
“அம்மா, அப்பா என்னைக் கட்டிக்க போற மாப்பிள்ளையை நான் பாத்ததே இல்லை. என்னோட ஆசை எல்லாம் ஜீப்பில் வந்தவன் மேல தான் இருக்கு. நம்ம குடும்பத்தை நன்றி கெட்ட குடும்பம்னு சொல்லுவாங்கன்னு நினைச்சு தான் நான் இந்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப மாமா பாத்துருக்குற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுரும். நான் இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறேன். எனக்கு நீங்க தான் துணையா இருக்கணும்”, என்று முடிவு எடுத்து எழுந்து நின்றாள்.
அப்போது உள்ளே வந்தாள் அவளின் அத்தை வேணி. “முதல்ல அத்தைக் கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லலாம்”, என்று எண்ணி அவள் வாயை திறக்கும் போது “அப்படியே உன் அம்மாக்காரி மாதிரியே பிறந்து தொலைச்சிறுக்க டி. அதான் இந்த அழகு. இந்த அழகை காட்டி எவனையாவது இழுத்துட்டு போவேன்னு தானே நினைச்சேன்? இப்படி குடியை கெடுத்துட்டியே?, என்ற வேணியின் பேச்சு சுத்தமாக ரேகாவுக்கு புரிய வில்லை.
“என்ன இவங்க இப்படி சொல்றாங்க? இவங்க தானே என் குடியை கெடுத்தது”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக வேணியைப் பார்த்தாள்.
அவள் குழப்பத்துடன் நிற்கும் போது “உனக்கு இப்படி ஒருத்தன் கிடைப்பான்னு நான் கனவுல கூட நினைக்கலை டி”, என்று மீண்டும் பேசினாள் வேணி.
“அத்தை இப்ப என்ன சொல்ல வறீங்க? உனக்கு கல்யாணம்னு மாமா தான் சொன்னாங்க. நானும் கிளம்பி வந்தேன். இப்ப இப்படி பேசுறீங்க? என்னை இப்ப விட்டா கூட நான் போய்கிட்டே இருப்பேன். எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. நானே நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கும் பிடிக்கலை தானே? மாமாவைக் கூப்பிடுங்க. நான் மாமா கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறேன்”, என்றாள் ரேகா.
“ஓஹோ அப்படியா?”
“அத்தை என்ன இப்படிக் கேக்குறீங்க? நான் உண்மையா தான் சொல்றேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நீங்க உதவலைன்னா கூட நான் இந்த கல்யாணத்தை நிறுத்த தான் போறேன். உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன்னு தான் இந்த கல்யாணத்துக்கு வந்தேன். ஆனா எனக்கு இப்ப இதுல சம்மதம் இல்லை. நான் பொய் சொல்லலை”
“நீயில்ல, உன் மாமா இல்ல… யார் நினைச்சாலும் இந்த கல்யாணம் நிக்காது”
“அத்தை என்ன சொல்றீங்க?”
“இந்த கல்யாண வரன் உன் அழகை தேடி வந்தது. அந்த அழகு உன் கிட்ட இருக்குறப்ப நீ எங்க போனாலும் இந்த வாழ்க்கை உன்னை தேடி தான் வரும்”, என்று வேணி சொல்ல ரேகா புரியாமல் விழித்தாள்.
“அழகுக்காகவா? அத்தை, எனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை எப்படியும் போகட்டும்? என்னைப் பிடிச்சு அவர் கல்யாணத்துக்கு கேட்டிருந்தாலும் பரவால்ல. எனக்கு அவரைப் பிடிக்கலைன்னு நானே அவர் கிட்ட சொல்றேன். அவருக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்னு நான் அவர் கிட்ட சொல்றேன்”
“அவன் கிட்ட நீ பேசப் போறியா? நாங்க எவ்வளவோ பேசிட்டோம்? அவன் கேக்கவே இல்லை. உன் கிட்ட என்ன இருக்குனு தெரியலை. கட்டினா அவன் உன்னைத் தான் கட்டுவேன்னு தெளிவா இருக்கான்”
“அவன் தெளிவா இருந்தா என்ன அத்தை? கல்யாணத்துக்கு சம்மதிக்கிறது நம்ம உரிமை தானே? அப்படி கை காலைக் கட்டியா கல்யாணம் பண்ண முடியும்? நான் பாத்துக்குறேன்”
“அறிவில்லாம பேசாத”
“அத்தை”
“கை காலைக் கட்டி கல்யாணம் பண்ண முடியாதுன்னு தான் அவன் உங்க மாமாவோட கை காலைக் கட்டிருக்கான் அவன்”
“என்ன அத்தை சொல்றீங்க?”
“என்னத்தை சொல்ல? எல்லாம் எங்க தலையெழுத்து. இனி நடக்குறதை யாரலயும் மாத்த முடியாது. நல்லா இருடியம்மா, நல்லா இரு”, என்று சொன்ன வேணியின் குரலில் நிச்சயம் ஆசீர்வாதம் இல்லை. வெறுப்பு மட்டுமே.
“ஏற்கனவே இருக்குற குழப்பம் பத்தாதா? இதுல இவங்க வேற? இந்த மாப்பிள்ளை அப்ப என் மேல விருப்ப பட்டு தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கான். அதனால அவன் கிட்டயே நேர்ல பேசிட்டா என்ன? ஆமா பேசணும். கண்டிப்பா புரிஞ்சிக்குவான். இப்ப அவனை எங்க தேட? கல்யாணம் எங்கன்னு கூடத் தெரியலையே? இங்க வீட்ல கல்யாண அறிகுறி எதுவும் இல்லை. அப்படின்னா கோயில்லயா கல்யாணம்? அப்ப எப்படி பேச? பேசணும். அப்படி அவன் கிட்ட பேச முடியலைன்னா கூட கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திருவேன். அவன் கையால கண்டிப்பா தாலி வாங்கிக்க மாட்டேன்”, என்று உறுதி எடுத்தாள் ரேகா.
விழி பேசும்….
error: Content is protected !!