Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 5_ 2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

“மஞ்சு, காயத்ரி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் உங்க கிண்டலை விக்ரம் கிட்ட வச்சிக்கோங்க. பாவம் பிள்ளை எதுக்கோ டென்சனா இருக்கான்”, என்று சாரதா சொன்னதும் மஞ்சுவும் காயத்ரியும் சரி என்றார்கள்.  

கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் ரேகா முகம் சுருங்கிப் போனது. “இதை எப்படி மறந்தேன்? அத்தை அப்புறம் வர்ஷா கிட்ட கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொல்லிட்டு வந்தேனே? இப்ப என்ன பண்ண? என்னால எப்படி இதை நிறுத்த முடியும்? கடவுளே, நீ எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் போது நான் அதை கெடுத்துருவேன் போலயே?”, என்று எண்ணினாள் ரேகா. 



Advertisement

“ரேகா”, என்று சாரதா அழைத்ததும் அவளை அறியாமலே “என்னங்க அத்தை?”, என்று கேட்டிருந்தாள் ரேகா. 

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மா. உன் அத்தை மாமா பேச்சு கொஞ்சம் சரியில்லை. நாள பின்ன நீயும் விக்ரமும் உன் அத்தை மாமா வீட்டுக்கு வந்து போயி இருப்பீங்க? ஏன்னா உனக்கு அது தான் பிறந்த வீடு. அப்படி இருக்கும் போது  அவங்க விக்ரமை எதுவும் சொல்லாம பாத்துக்கோ மா. சின்ன வயசுல இருந்து விக்ரமை நாங்க எதுவும் சொன்னதில்லை. முகத்தை சுண்டுற மாதிரி பேசிட்டா அவன் அப்புறம் அவங்களைத் திரும்பி கூட பாக்க மாட்டான். அவன் குணமே அப்படி தான். எவ்வளவு சீக்கிரம் ஒருத்தங்க மேல அன்பு வைக்கிறானோ, அவ்வளவு சீக்கிரம் அவங்களை வெறுக்கவும் செய்வான். இப்ப ஏன் சொல்றேன்னா, உன் அத்தை மாமா அவனை எதுவும் சொல்லாத படி நீ பாத்துக்குவல்ல? அதனால தான். இனி அவன் உன்னோட பொறுப்பு. நீ தான் என் மகனை சந்தோஷமா வச்சிக்கணும்”, என்றாள்.

Advertisement

Advertisement

“சரி அத்தை”, என்று ரேகா சொல்ல “அம்மா இப்பவே அவளை பயமுறுத்தாதீங்க? அவ்வளவு நாள் லவ் பண்ணின அவளுக்கு தெரியாதா அவனைப் பத்தி? இத்தனைக்கும் ரெண்டு பேரும் ஒரே காலேஜ் வேற. நாலு வருஷமா லவ் பண்ணுறாங்க. அவனை நம்மளை விட ரேகா நல்லா புரிஞ்சு வச்சிருப்பா”, என்று மஞ்சு சொன்னதும் ரேகா வாயைப் பிளந்தாள்.

“விக்ரம் எங்க காலேஜா? அங்கயா அவன் படிச்சான்? அப்பவே என்னைப் பாத்துருக்கானா? ஆனா நானும் லவ் பண்ணினேன்னு சொல்லிருக்கானே? கடவுளே? எனக்கு எல்லாம் அதிர்ச்சியாவே இருக்கு. புது புதுக் கதையா கேள்விப் படுறேனே? இன்னும் இவனைப் பத்தி நான் என்ன எல்லாம் தெரிஞ்சிக்கணுமோ? அப்படின்னா அவன் என்னைத் விரும்பித் தான் கல்யாணம் பண்ணுறானா? ஆமா அவன்  என்னை விரும்பிருக்கான். இப்ப நான் அவனை விரும்புறேன். அவன் கண்ணுலயும் இப்ப எனக்கு காதலைப் பாத்த நினைவு வருது. நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அப்படி இருக்க நான் அவனை எப்படி வர்ஷாவுக்கு விட்டுக் கொடுக்க முடியும்? இவனைத் தவிர வேற யாரா இருந்தாலும் விட்டுக் கொடுக்கலாம்; ஆனா இவனை கண்டிப்பா விட்டுக் கொடுக்க முடியாது. இவன் எனக்கு தான். என்னோட அம்மா அப்பா கடவுளா இருந்து இவனை எனக்குன்னு தான் அனுப்பிருக்காங்க. வர்ஷா விரும்பினான்னு என்னால இவனை விட்டுக் கொடுக்க முடியாது. இவ்வளவு நாள் அத்தை குடும்பம் சுயநலமா தான் இருந்துச்சு. ஆனா இந்த தடவை நான் சுயநலமா இருக்க போறேன். என்னை மன்னிச்சிரு வர்ஷா. எனக்கு விக்ரம் வேணும். உனக்கு நானும் விக்ரமும் வேற ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்போம்”, என்று முடிவெடுத்த பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. 

Advertisement

இந்த உலகத்திலே யார் அதிகமாக சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கேட்டால் அது ரேகா மட்டும் தான். இந்த உலகையே வென்ற பரவசத்தில் இருந்தது அவள் மனது. 

அப்போது ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது. அதை வீடு என்று சொல்வதை விட குட்டி பங்களா என்று தான் சொல்ல வேண்டும். தோட்டத்தில் தான் மேடை அமைக்கப் பட்டு கல்யாணப் பந்தாலும் போடப் பட்டிருந்தது. கார் சத்தம் கேட்டதும் பால்கனி வழியாக வெளியே எட்டிப் பார்த்தான் விக்ரம். 

பூலோகத்தில் இருக்கும் ரம்பை போலவே காரில் இருந்து இறங்கினாள் ரேகா. அவள் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் அவளை அவன் கண்கள் ரசித்துப் பார்த்தது. அவளைப் பார்த்தவன் பார்த்துக் கொண்டே இருந்தான். 

ரேகாவோ அந்த வீட்டைப் பார்த்து மலைத்தாள். அவள் முகம் கொஞ்சம் கலவரத்தைக் காட்டியதும் விக்ரம் மனம் சிணுங்கியது. இவளுக்கு இங்க வர பிடிக்கலையா? அதுக்கு தான் பயப்படுறாளா? நான் தான் மாப்பிள்ளைன்னு இவளுக்கு தெரிஞ்சிருக்குமா?”, என்று எண்ணினான். 

“டேய் விக்ரம், ரேகா இனி நம்ம வீட்ல தான் டா காலம் முழுக்க இருக்க போறா. இப்பவே அவளை திங்குற மாதிரி பாக்கணுமா? இங்க வந்து உக்காந்து இந்த நகை எல்லாத்தையும் போடு”, என்று சொல்லி அவன் கை பற்றி இழுத்து வந்தான் ஆதித்யா. 

ஆலம் சுற்றி ரேகாவை உள்ளே அழைத்துச் சென்றார்கள். தயக்கத்துடன் வலது காலை எடுத்து அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் ரேகா. அவளுக்கென்று கீழே ஒரு அறை கொடுக்கப் பட்டிருக்க அங்கே அனைத்துப் பெண்களும் கூடி விட்டார்கள். 

கல்யாணத்தை நிறுத்துவதைப் பற்றி அவளுக்கு நினைவூட்ட வர்ஷாவும் வேணியும் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் அவர்களால் அவளை நெருங்க கூட முடியவில்லை. அவர்கள் பார்வை தன்னையே சுற்றி வருகிறது என்று உணர்ந்த ரேகாவும் அவர்களைப் பார்க்க தைரியம் இல்லாமல் அவர்கள் புறம் திரும்பவே இல்லை. 

தன்னை அவர்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. ஆனால் விக்ரமை மட்டும் இழந்து விடக் கூடாது என்று தீர்மானமாக இருந்தாள் ரேகா. 

அப்போது ஐயர் மணமக்கள் இருவரையும் தனித் தனியாக மண மேடைக்கு அழைத்து ஏதோ சடங்குகள் செய்தார். அதனால் விக்ரமை ரேகாவால் நேருக்கு நேர் பார்க்க முடிய வில்லை. பின் ரேகா கையில் முகூர்த்த சேலை அடங்கிய தட்டைக் கொடுத்தார் ஐயர். தட்டை வாங்கிக் கொண்டு ரேகா அறைக்குச் சென்றதும் காயத்ரி, மஞ்சு, மற்ற பெண்கள் அனைவரும் அவளுக்கு முகூர்த்த சேலையை மாற்றி விட்டார்கள். மணமேடையில் அவனை எதிர்க்கொள்ள பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ரேகா.  

“ரொம்ப அழகா இருக்க ரேகா. என் தம்பி இன்னைக்கு ஆன்னு வாயை பிளக்கப் போறான்”, என்று சொல்லி அவளுக்கு திஷ்டி கழித்தாள் மஞ்சு. 

“அவன் இன்னைக்கு முழுக்க புத்தி பேதலிச்சது மாதிரி தான் இருக்க போறான் மஞ்சு”, என்று சிரித்தாள் காயத்ரி. அவர்கள் அவனைப் பற்றி பேச பேச ரேகாவுக்குள் ஆசையும் எதிர்பார்ப்பும் கிளர்ந்தது. 

அவன் தன்னை ரசிப்பானா? அவன் கண்களுக்கு என் அழகு பிடிக்குமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். 

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக மண மேடையில் அமர்ந்திருந்தான் விக்ரம். ஐயர் ஏதோ அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எதை எதையோ யோசித்த படியே அவர் சொன்னதை செய்து கொண்டிருந்தான்.

அப்போது “பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கொடுத்ததும் காயத்ரியும் மஞ்சுவும் சேர்ந்து அவளை அழைத்துக் கொண்டு வந்தார்கள். 

விக்ரம் ஒரு முறை அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆனால் அவன் அருகே நின்ற ஆதித்யாவும் சுதாகரும் அவனை கிண்டல் அடித்தே தலை குனிய வைத்தார்கள். 

அவன் அருகே அமர்ந்த ரேகாவுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவ்வளவு பேர் இருக்கும் சபையில் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. 

“சபைக்கு நமஸ்காரம் சொல்லிக்கோ மா”, என்று ஐயர் சொல்ல அதற்காக நிமிர்ந்து நேரே பார்த்து கை கூப்பினாள் ரேகா. அவள் எதிரே அவளை ஆவலாக பார்த்த படி நின்றார்கள் வேணியும் வர்ஷாவும். அடுத்த நொடி தலை குனிந்து கொண்டாள் ரேகா 

“அம்மா, இப்ப ரேகா இந்த கல்யாணத்தை நிறுத்திருவா தானே? அப்புறம் எனக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் நடக்கும் தானே மா?”, என்று ஆர்வமாக கேட்டாள் வர்ஷா. 

வர்ஷா சொன்னதைக் கேட்டு அவளது ஆர்வத்தைக் கண்டு கண்கள் கலங்கும் போல இருந்தது வேணிக்கு. ஏனென்றால் ரேகா முகத்தில் இருந்த பூரிப்பும் சந்தோஷமும், மஞ்சு அவளிடம் எதையோ சொல்ல அவள் அதற்கு வெட்கப் படும் அழகும் சேர்ந்து வேணிக்கு ரேகா இந்த கல்யாணத்தை நிறுத்துவாள் என்ற நம்பிக்கையை அழித்திருந்தது. 

மகளின் ஆர்வம் கட்டாயம் சிதைந்து போகப் போகிறது என்று கவலையாக இருந்தது வேணிக்கு. இது அனைத்துக்கும் காரணமா ரேகா மேல் வன்மமாக அவள் பார்வை விழுந்தது. ரேகா திருமணத்தை நிறுத்துவேன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் வேணியும் வர்ஷாவிடம் இவ்வளவு ஆசையை தூண்டி விட்டிருக்க மாட்டாள். 

“பாவி நம்ப வச்சு கழுத்தை அறுத்துடுவாளோ?”, என்று கலவரமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி. ஐயர் தாலி இருக்கும் தட்டை காயத்ரியிடம் கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கச் சொல்லி கொடுத்தார்.

ரேகா படபடப்பாக அமர்ந்திருக்க விக்ரமோ இறுக்கம் சந்தோஷம் என்ற இரு மனநிலைக்கு இடையில் போராடிக் கொண்டிருந்தான். அவன் காதலித்த பெண் இன்னும் சற்று நேரத்தில் அவனுக்கு மனைவியாகப் போகிறாள். அது சந்தோஷம் தான். ஆனால் இன்று காலையில் அவள் நடந்து கொண்ட முறை அவள் மேல் அவனுக்கு அளவு கடந்த வெறுப்பை உருவாக்கியிருந்தது. 

காதல் கொண்ட மனதும், அவளுடைய தவறைச் சுட்டிக் காட்டும் மூளை. இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவித்தான் விக்ரம். 

ரேகாவுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போல இருந்தது. அவனது விழி பேசும் பாஷையை உணர வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் செய்ய தைரியமில்லாமல் அப்படியே தலை குனிந்து அமர்ந்திருந்தாள். 

“மாங்கல்யம் தந்துனானே”, என்று ஐயர் ஆரம்பிக்க கெட்டிமேளம் முழங்க அவள் கழுத்தில் தாலியைக் காட்டினான் விக்ரம். தலை குனிந்து அவன் கட்டிய தாலியை வாங்கிக் கொண்டாள் ரேகா. 

அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல் அதே நேரம் யாருடைய கவனமும் தன் மேல் பதியாதவாறு அங்கிருந்து சென்று விட்டாள் வர்ஷா. ஆனால் தன்னுடைய மகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேணி மணமேடையில் அமர்ந்திருந்த ரேகாவை கொலைவெறியுடன் முறைத்து விட்டு மகள் பின்னேயே ஓடினாள். 

மகளும் மனைவியும் அங்கிருந்து செல்வதைப் பார்த்த சங்கரன் மேடையில் அமர்ந்திருந்த விக்ரமை முறைத்துப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றார். 

“அவங்க நெத்திலயும் மாங்கல்யத்துலயும் குங்குமம் வைங்க”, என்று ஐயர் சொல்ல அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தான் விக்ரம். அப்போது இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள அவள் கண்கள் அவனை ஆவலாக நோக்க அவனோ யார் நீ என்ற பார்வையைப் பார்த்தான். 

அவன் கண்களில் காதலைப் பார்த்திருக்கிறாள். மயக்கத்தையும் கண்டிருக்கிறாள். கோபத்தைக் கூட பார்த்தாள் தான். ஆனால் இந்த சொந்தமில்லாத பார்வையை பார்த்த ரேகாவுக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது. அவன் கோபம் குறைய வில்லை என்று தெள்ளத் தெளிவாக ஒற்றை பார்வையில் அவளுக்கு விளக்கி விட்டான் விக்ரம். அந்த சொந்தமில்லாத பார்வையைக் கண்டதும் ரேகா கண்கள் கலங்கி விட்டது. 

அதைக் காணாதது போல அவள் திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைத்தான் விக்ரம். 

மாங்கல்யத்தில் குங்குமம் வைக்கும் போது ரேகாவின் கண்களில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீர் அவன் கரத்தில் பட்டது. “உனக்கு இது தேவை தான் டி. இனிமே தான் உனக்கு இருக்கு”, என்று எண்ணிக் கொண்டு திரும்பிக் கொண்டான் விக்ரம். 

அதன் பின் இருவர் கையிலும் ஒரு ஒரு மாலை கொடுக்க பட முதலில் அவன் அதை அவள் கழுத்தில் போட்டான். அதன் பின் அவள் போட்டாள். 

ஐயர் வரிசையாக சடங்குகள் சொல்லிக் கொண்டிருக்க இருவரும் கலக்கத்தை முகத்தில் காட்டாமல் செய்து கொண்டிருந்தார்கள். 

அதே நேரம் “ஏன் மா இப்படி பண்ணினா அவ? நம்மளை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாளே மா. அவளுக்கும் விக்ரமுக்கும் தான் கல்யாணம்னு அப்பா சொன்னப்ப கூட நான் சரின்னு மனசை தேத்திக்கிட்டேன் மா. ஆனா ரேகா அவ்வளவு உறுதியா சொன்னதும் எனக்குள்ள நிறைய எதிர்பார்ப்புகள் உருவாச்சு. கடைசில நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாளே மா. ரேகா இப்படி இருப்பானு நான் நினைக்கவே இல்லை”, என்று அழுதாள் வர்ஷா. 

“அழாத வர்ஷா. இந்த கழுதை இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை. அவ தான் டி வேற ஒருத்தனை விரும்புறேன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொன்னா. கடைசில இப்படி செய்வானு நானும் எதிர் பாக்கலை. இங்க பாரு வர்ஷா. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. மனசுல இருக்குற எல்லாத்தையும் தூர போட்டுரு. அம்மா இருக்கேன்ல? என்ன செய்யணுமோ எப்ப செய்யணுமோ அப்ப செய்வேன். சரியா? இங்க வச்சு அழுதா யாராவது பாத்திருவாங்க டா”, என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் வேணி. 

“நம்பிக்கையை கொடுத்து கழுத்தை அறுத்துட்டல்ல? உனக்கு இருக்கு டி”, என்று எண்ணிக் கொண்டாள் வேணி. 

இப்படி அனைவரும் ரேகாவைத் திட்டிக் கொண்டிருக்க அவளோ காய்த்ரி மற்றும் மஞ்சுவின் கிண்டலுக்கு முகம் சிவந்து கொண்டிருந்தாள். 

சுதாகர் மற்றும் ஆதித்யாவின் கிண்டலால் விக்ரமும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தான். “நான் ஆசைப் பட்ட கல்யாணம். இனி ஒரு தடவை இது நடக்காது. அதனால இன்னைக்கு எதையும் முகத்துல காட்ட கூடாது”, என்று மனதில் முடிவெடுத்தவன் “என்ன அண்ணி, இன்னைக்கு கிண்டல் கொஞ்சம் அதிகமா இருக்கு. என் பொண்டாட்டி உங்க கிண்டலை எல்லாம் தாங்க மாட்டா. அதனால அவளை விட்டுருங்க”, என்று புன்னகையுடன் காயத்ரியிடம் சொன்னான். 

அவன் பேசியதும், அதுவும் பொண்டாட்டி என்று சொன்னதும் ரேகா முகமும் மலர்ந்து போனது. அவளுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்த விக்ரமுக்கும் சுற்றி இருந்த அனைத்தும் மறைந்து போனது. 

“பாத்தியா மஞ்சு உன் தம்பி சொல்றதை? இப்பவே பொண்டாட்டிக்கு பாவம் பாக்குறதைப் பாத்தியா? ஆனா இவன் என்ன சொன்னாலும் நாம கேக்க மாட்டோம்னு இவனுக்கு தெரியாது போல?”, என்று காயத்ரி சொன்னதும் தான் நடப்புக்கு வந்தான் விக்ரம். 

“அப்பாடி, என்ன ஒரு அழகு. இவளைப் பாத்தாலும் டேஞ்சரா இருக்கு. பாக்கலைன்னாலும் பாக்க ஆசையா இருக்கு. ஏன் தான் இப்படி எல்லாம் இருக்கோ?”, என்று எண்ணிக் கொண்டான் விக்ரம். 

அவன் பேசியதே போதும் என்று எண்ணிய ரேகா அதன் பின் மலர்ந்த முகத்துடனே இருந்தாள். 

விழி பேசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!