உனக்குள் என் உயிரே 23 1
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 23
மீரா வீட்டிற்கு வந்த போது… அங்கே அவள் அப்பாவின் காரும் அதோடு வேறு ஒரு காரும் நிற்பதை பார்த்து, யார் வந்திருப்பாங்க? என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றாள். சாதாரணமாக இந்த நேரத்தில் ராம்நாத் வீட்டில் இருக்க மாட்டார்.
மீரா உள்ளே சென்று பார்த்த போது, ஹாலில் அவளுடைய அப்பாவும், சித்தி மீனாட்சியும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க….. எதிரே இருந்த சோபாவில் ஒரு ஆண்ணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். மீராவிற்கு அவர்களின் பின்புற தோற்றம் தான் தெரிந்தது, அதனால் யார் என்று பார்க்க முடியவில்லை.
யாரவது தெரிஞ்சவங்களா இருப்பாங்க என்று நினைத்தவள், அவள் அறைக்குச் செல்ல மாடிபடியில் கால் வைக்க…..
அப்போது மீராவை பார்த்த ராம்நாத், “மீரா இங்கே வா.” என்று கூப்பிட…. மீராவிற்கு இப்போது இருக்கும் மனநிலையில் யாரையும் பார்க்கவே இஷ்டம் இல்லை. ஆனால் அவளது அப்பா அழைப்பதால் வேறு வழி இல்லாமல் சென்றாள்.
அவள் சோபாவின் அருகே சென்றதும் அதில் உட்கார்ந்து இருந்த பெண்மணி எழுந்து, “மீரா…” என்று அழைத்து அவளை அனைத்துக் கொள்ள….
மீராவிற்கு யார் இது? எதுக்கு நம்மைக் கட்டிபிடிக்கிறாங்க என்று நினைத்தவள், ராம்நாத்தையும், மீனாக்ஷியையும் பார்க்க…. ராம்நாத் சங்கடமான பார்வை பார்க்க…. மீனாக்ஷி கிண்டலாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். மீரா விலகி அந்தப் பெண்மணியின் முகம் பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஏன் என்றால் அந்தப் பெண்மணி வேறு யாரும் இல்லை… அவளைப் பத்து மாதம் சுமந்து பெற்று, பின் விட்டுவிட்டு சென்ற அவளுடைய அம்மா… ஷ்யாமளா தான் அது. வயது ஆக… ஆக ஷ்யாமளாவிற்குஇளமை திருப்புகிறது என்று நினைப்பு போல…. ஒரு லாங் ஸ்கர்ட்டும், டாப்பும் அணிந்து, தலை முடியை விரித்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தாள்.
“மீரா எப்படி டா இருக்க? உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷம் ஆகிடுச்சு, என் பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா.” ஷ்யாமளா பேசிக்கொண்டே செல்ல… அதை மற்ற எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மீரா ஷ்யமளாவிடம் இருந்து விலக…. ஷ்யாமளா மீராவை அவள் உட்கார்ந்து இருந்த சோபாவில் உட்கார கை காட்டினாள். ஆனால் மீரா அதைக் கவனிக்காதது போல் எதிரில் இருந்த ஒற்றைச் சோபாவில் சென்று அமர்ந்தாள்.
ஷ்யாமளாவிற்குமீரா அவள் அருகில் உட்காராமல் எதிரில் சென்று உட்கார்ந்தது ஏமாற்றமாக இருந்தது. அதோடு மீரா அவளை அம்மா என்று அழைக்கவும் இல்லை. அவளை எதுவும் விசாரிக்கவும் இல்லை என்று நினைத்தவள், அதை ஒதுக்கி… மீராவிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.
தன் அருகில் அமர்ந்திருந்த இளைஞனை காட்டி, “இவரு வம்ஷி, லண்டன்ல பிசினஸ் பண்றார். எங்களோட குடும்ப நண்பர்.” ஷ்யாமளா அறிமுகம் செய்ய…. மீரா அவனை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தாள்.
“உன்கிட்ட தனியா பேசணும் மீரா… வெளிய எங்காவது போகலாமா…” ஷ்யாமளா கேட்க…
மீராவிற்கு அவள் அம்மாவை பற்றி நன்றாகத் தெரியும். இத்தனை நாள் தன்னைத் திரும்பியும் பார்க்காத அம்மா…. இரண்டு மூன்று முறை வந்து கடமைக்கு மட்டும் தன்னை வந்து பார்த்தவள், இப்போது வழிய வீடு தேடி வந்திருக்கிறாள் என்றாள்…. அதற்கு எதோ காரணம் இருக்கும் என்று அவள் உள் மனது சொல்ல… மீரா சுதாரித்துக் கொண்டாள்.
“பரவாயில்லை உங்களுக்கு என்ன சொல்லணுமோ…. அதை நீங்க இங்கயே சொல்லுங்க.” என மீரா அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவள் அமர்ந்து இருந்த சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.
ஷ்யமளவிற்கு இது தன் மகள் மீராவா என்று ஆச்சர்யமாக இருந்தது. இதற்கு முன் பார்த்த மீராவிற்கும் இப்போது பார்க்கும் மீராவிற்கும் நன்றாக வித்தாயசம் தெரிந்தது.
மீரா எப்போதும் ஷ்யமளாவிடம் நன்றாகப் பேச மாட்டாள், போன் செய்தாலும் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு வைத்துவிடுவாள். நேரில் பார்க்கும் போதும் அமைதியாக இருப்பாள். ஆனால் இப்போது மீராவிடம் இருக்கும் நிமிர்வு ஷ்யாமளாவிற்குபுதிது.
ஷ்யாமளாவிற்குத் தான் நினைத்த காரியம் நடக்க வேண்டும். அதனால் பொறுத்து போக முடிவு செய்தாள்.
“மீரா, நீ இப்போ கடைசி வருஷம் படிக்கிற… உனக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதனால நான் உனக்கு வம்ஷிய பார்க்கலாம்னு அவரையும் கையோட அழைச்சிட்டு வந்தேன். வம்ஷி அங்க பெரிய பிசினஸ்மேன், ரொம்ப வசதியானவங்க. நீ வம்ஷிய கல்யாணம் பண்ணிகிட்டா… அங்க ராணி மாதிரி இருக்கலாம்.”
தன் தாய் சொன்னதைக் கேட்டு மீராவிற்குப் பத்தி கொண்டு வந்தது. “எனக்கு மாப்பிளை பார்க்க நீங்க யாரு?” என்று அவள் பட்டென்று கேட்க…
ஷ்யாமளா அதிர்ந்தவள், “என்ன மீரா இப்படிப் பேசுற, நான் உன்னோட அம்மா. எனக்கு உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க உரிமை இல்லையா?” என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க…
மீரா மற்ற நாளாக இருந்தால் எப்படிப் பேசி இருப்பாளோ. ஆனால் இன்று ஏற்கனவே சஞ்சனா எல்லோர் முன்பும் தன்னைக் கேலி செய்து பேசியது, அவள் மனதில் இருந்த ரணத்தை மேலும் கீறி விட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தை… அதற்குக் காரணமான ஷ்யாமளாவிடம் வெளிப்படையாகக் காட்டினாள். அதோடு அர்ஜுன் இடத்தில் வேறு ஒருவனை அவள் அம்மா அழைத்து வந்தது வேறு… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.
“இல்லை… நீங்க நாங்க வேண்டாம்னு போய்டீங்க, உங்களுக்கு உங்களோட ஆசை, சந்தோசம் தான் முக்கியம். நீங்க என்னையும், அப்பாவையும் பத்தி கவலைபடமா உங்க ஆசை தான் பெரிசுன்னு போனீங்க. இப்ப எதுக்குப் புதுக் காரணம் சொல்லிட்டு வரீங்க? எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க என்னோட அப்பா, அம்மா இருக்காங்க. அவங்களுக்குத் தெரியும் எனக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு?” என்று ராம்நாத்தையும், மீனாக்ஷியையும் காமித்தவள், நீங்க எப்பவும் போல உங்க குடும்பத்தை மட்டும் பாருங்க.” மீரா குத்தலாகச் சொல்ல…
“மீரா, நான் உன்னோட அம்மா….நீயும் என்னோட குடுமபத்தில ஒருத்தி.” என்றாள் ஷ்யாமளா.
“ஓ…அப்படியா…. இது எப்போதுல இருந்து. நீங்க ஒரு அம்மாவா எனக்கு என்ன செஞ்சீங்க? நான் குழந்தையா இருக்கும் போது என்னைப் பார்த்துகிடீங்களா, இல்லை எனக்குப் பாசமா ஒரு நாளாவது சோறு ஊட்டி இருப்பீங்களா… இல்லை எதுவும் இல்லை. என்னை எல்லார்கிட்டயும் நல்லா பேச்சு வாங்க வச்சீங்க. உங்களால எல்லோரும் என்கிட்டே உங்க அம்மா, உங்க அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்கலாமே அப்படின்னு நக்கலா பேசி சிரிச்சு இருக்காங்க.”
“அது என்னோட தனிப்பட்ட விஷயம், அதைப் பத்தி யாரும் என்ன பேசினாலும் எனக்குக் கவலை இல்லை.” ஷ்யாமளா எடுத்தெறிந்து பேச…
“உங்களுக்குக் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா அதனால கஷ்டபட்டது நான் தான். நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு ஏன் எல்லோரையும் மாதிரி என்னோட அம்மா, அப்பாவோட இல்லை. எல்லாக் குழந்தைகளும் தனக்கு எதாவது வேணும்னா அவங்க அம்மாகிட்ட தான் முதல்ல சொல்வாங்க… எனக்கும் அப்படித் தான இருந்திருக்கும். நான் எவ்வளவு தவிச்சிருப்பேன். உங்க வாழ்க்கை தான் முக்கியம்னு நினைச்ச நீங்க, என்னை ஏன் பெத்தீங்க?” என்று மீரா தன் இயல்பையும் மீறி கத்த…..
அப்போது அங்கே வந்த வருண், மீரா பேசியதை கேட்டதும், அவனுக்கு அழுகையாக வந்தது. அவன் வேகமாகச் சென்று மீராவை அணைத்தவன், “உனக்கு நான் இருக்கேன் கா… நீ வா கா.” என்று மீராவை பிடித்து இழுக்க…. மீரா ஆவேசமாக எழுந்து நின்றாள்.
மீரா பேசியதை கேட்ட ராம்நாத்திற்கு மனம் குற்ற உணர்வில் தவித்தது. தானும் மீராவை அவள் சித்தி கொடுமை செய்வாளோ என்று தள்ளி தானே வைத்திருந்தோம். அவள் பிஞ்சி மனம் என்ன பாடுபட்டதோ…. நானாவது மறு கல்யாணம் செய்யாமல் மீராவோடு இருந்திருந்தால் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று காலம் கடந்து நினைத்தார்.
“மீரா, உனக்கு எதுக்கு இவ்வளவு ஆத்திரம் வருது? நான் எனக்குப் பிடிச்ச வாழ்க்கைய தேடி போனேன், அது தப்பா?”
“வீடு இல்லாம ரோட்ல குடிசை போட்டு இருக்கிறவங்களைப் போய்ப் பாருங்க. அவங்க புருஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சாலும், மிதிச்சாலும் அவங்க புருஷனோட தான் இருக்காங்க. ஆனா நீங்க… உங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கை அமையலைன்னு, நல்லா இருந்த வாழ்கையைத் தூக்கி போட்டுட்டு போனீங்க…”
Advertisement
(Ultram)
