Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காமல் தானே நிழல் போல நானே

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 19

நிழல் 19:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்..

அன்புச்செழியனுக்கும், தேனிசைச்செல்விக்கும் அன்று திருமணம். ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்ன இசையின் வேண்டுகோள் ஒன்று மட்டுமே, அது மீனாட்சி அம்மன் கோவிலில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது.



Advertisement

கதிரவனுடன் அவள் கடைசியாக சென்ற கோவில். ஏனோ அவனே அங்கிருந்து அவளை ஆசிர்வதிப்பதைப் போல் அவளுக்குள் ஒரு எண்ணம். அவர்களின் திருமணத்தில் அகரன் தான், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

அந்த குட்டியான வேஷ்ட்டி சட்டையில் அவன் வலம் வந்து கொண்டிருக்க, கதிரே எதிரில் நடமாடுவதைப் போல் தான் இருந்தது இசைக்கு. அது ஒரு பக்கம் அவனின் நியாபகங்களை அவளுக்குக் கொடுத்தாலும், ஏனோ ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்தது.

ராஜாங்கம்-மங்கை கண்கலங்கி நின்று கொண்டிருக்க, சாந்தா வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார். காதம்பரி முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சியில்லை. சங்கீதாவோ அவருக்கு ஒரு படி மேலாக, எண்ணெயில் போட்ட கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள்.

Advertisement

அன்புச்செழியனின் அப்பா பல்லவன் மட்டுமே முழு மகிழ்ச்சியுடன் இருந்தார். அந்த அடர் பச்சை நிற பட்டில், மீனாட்சி அம்மனைப் போலவே ஜொலித்தாள் இசை.

Advertisement

அவளை மீண்டும் இப்படி ஒரு கோலத்தில் பார்த்த மங்கைக்கும், ராஜாங்கத்திற்கும் மனது நிறைந்து போனது. அவர்களின் இத்தனை பாடும், இசையை இப்படி ஒரு கோலத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே..!

பட்டு வேஷ்ட்டி சட்டையில் அன்புச்செழியன் மிடுக்குடன் இருந்தான். அந்த மிடுக்கில் கொஞ்சமும் போலி இல்லை.. கொஞ்சமும் திமிர் இல்லை, ஆண் என்ற ஆணவமோ, அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் என்ற தியாக எண்ணமோ துளியும் இல்லை.

‘இசையை எனக்குப் பிடித்திருக்கிறது. அதற்காகவே திருமணம் செய்து கொள்கிறேன்..’ என்ற மனபாவம் தான் இருந்தது அவன் முகத்தில்.

Advertisement

இசைக்கு வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு ஆட்டிப் படைக்க, அன்பு தாலியைக் கட்டும் போது, கதிரவனை நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. பட்டென்று கண்ணீர் துளி விழ, அவளுடைய மனநிலையும் அன்பிற்கு புரிந்து தான் இருந்தது.

“எதுக்கு இசை ஒரு மாதிரி இருக்க..?” என்றாள் ரோகிணி.

“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா ரோகிணி..? என்னால முடியலை.. அன்பு கையால தாலியை வாங்கிட்டு இருக்கும் போதே, எனக்கு கதிர் மாமா நியாபகம் வருதே, இதெல்லாம் தப்பில்லையா..?” என்றவளுக்கு முகம் ஒரு மாதிரியாகிப் போனது.

“தப்பேயில்லை..!” என்ற அன்பின் குரலில் அவள் அவனைப் பார்க்க,

“உனக்கு அப்படி நியாபகம் வரலைன்னாதான் தப்பு..! பிடிக்காத விஷயத்தையே நம்மால அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பிடிச்ச விஷயத்தை மறக்குறது என்ன அவ்வளவு சுலபமா..?” என்றான் அன்பு.

“உனக்கு இதுமேல என்ன வேணும் இசை..! கடவுள், உன்னோட வாழ்க்கையில ரெண்டு பேரை அனுப்பினாலும், அவங்க ரெண்டு பேருமே உன்மேல உயிரா இருக்குற மாதிரி தான் அனுப்பி இருக்கார்..!” என்றாள்.

“இதையெல்லாம் நான் எப்படி கடக்கப் போறேன்னு தெரியலை..” என்றாள் இசை.

“அன்பு சார் எதுக்கு இருக்கார்..? அவர் பார்த்துப்பார். நீ மட்டும் எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இருந்தாலே போதும்..” என்று ரோகிணி சொல்ல,

“என்னதான் பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..?” என்றபடி அருகில் வந்தாள் கயல்விழி.

அவர்கள் ஜோடியாக அனைவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க,

“என்னமோ எல்லாமே எங்க சம்மதம் கேட்டு செய்ற மாதிரி..” என்று பேசிக் கொண்டே தான் ஆசீர்வாதம் செய்தார் காதம்பரி. செய்தார் என்று சொல்வதை காட்டிலும், பேருக்கு பல்லவனுடன் நின்றிருந்தார்.

அவருக்கு மாதவன் வேலையை விட்டு வந்தது பிடிக்கவில்லை. போன வேகத்திலேயே வந்து விட்டிருந்தான் அவன்.

இசைக்காகத்தான் வந்து விட்டான் என்று தேவையில்லாமல் நினைத்து காதம்பரியும், சங்கீதாவும் முகத்தை தூக்கியே வைத்துக் கொண்டிருந்தனர்.

கல்யாணம் முடிந்த உடன், அவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல,

“நம்ம வீடு இங்க தான இருக்கு..? இங்க போயிட்டு அப்பறம் போவோம்..” என்றான் மாதவன்.

“என்ன மாப்பிள்ளை நீங்க..? என்னமோ சென்னையில இல்லாத கோவில் மாதிரி, இங்க வந்து தான் கல்யாணம் பண்ணனும்ன்னு பிடிவாதம் பிடிச்சா உங்க தங்கச்சி. சரி, கோவில்ல தானேன்னு நினைச்சு நாங்களும் பேசாம இருந்தோம். இப்ப உங்க வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்றிங்க..?” என்றார் காதம்பரி.

“நான் அதுக்காக சொல்லலை அத்தை, உடனே கிளம்பாட்டி என்ன..? அங்க போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாமேன்னு சொன்னேன்..” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! எல்லாருக்கும் பிளைட் டிக்கெட் போட சொல்லுங்க. சென்னைக்கே போவோம்..” என்றார் அப்பொழுதும் பிடிவாதமாய்.

மங்கையும், ராஜாங்கமும் என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாய் இருந்தனர். மகளுக்கு திருமணம் நடந்ததே பெரிசு என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க,

“அம்மா.. இங்கயே போவோம். நாளைக்கு சென்னை போய்க்கலாம்..” என்றான் அன்பு.

“என்ன அன்பு அண்ணா..? தாலி கட்டி ஒருமணி நேரம் ஆகலை.. அதுக்குள்ளே அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுற..?” என்றாள் சங்கீதா.

“நீ அமைதியா இரு. வாயும் வயிறுமா இருக்கன்னு பேசாம இருக்கேன்..” என்றான் அன்பு. மங்கை அப்போதும் பேசாமல் இருக்க, அவரைப் பார்த்த இசைக்கு கோபமாக வந்தது.

“இப்ப பேசுங்கம்மா..! என் பொண்ணை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்னு அடிச்சுப் பேசுங்கம்மா..!” என்றாள் இசை.

மங்கை அவளை அதிர்ந்து பார்க்க,

“உங்களால முடியாது. ஏன்னா..? உங்களைப் பொறுத்த வரைக்கும் என்னை இவர் கல்யாணம் பண்ணாதே பெரிய விஷயம் அப்படித்தான..?” என்று அவள் கேட்க, தலை குனிந்தார் மங்கை.

“இதுக்காகத்தான் நான் அவ்வளவு சொன்னேன். இப்பவே பேச முடியாத நீங்க, பிறகு எப்ப பேசுவிங்க..? இது கடைசி வரைக்கும் தொடரும், ஒவ்வொரு விஷயத்திலும், இதே எண்ணம் தான் உங்களுக்கு வரும்..” என்றாள் இசை.

“என்ன இசை..? இப்பவே இப்படி பேசிட்டு இருக்க..? நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படித்தான். எல்லாமே உன் இஷ்ட்டத்துக்கு ஆட முடியாது. அவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சு வச்சிருந்தேன். இப்படி யாருமில்லாத மாதிரி கோவில்ல வந்து பண்ற மாதிரி ஆகிடுச்சே. உனக்கு தான் இது ரெண்டாவது கல்யாணம். ஆனா, அவனுக்கு இது தான முதல் கல்யாணம். எங்களுக்கு அவன் ஒரே பையன். எங்களுக்கும் ஆசை இருக்கும் தான..” என்றார் பட்டென்று.

“நான் உங்களை எங்கயுமே தப்பு சொல்லலையே..?” என்றாள்.

“நீ பேசுனதுக்கு என்ன அர்த்தம்..?” என்றார்.

“நான் எங்கம்மாவை தான் சொன்னேன் ஆன்ட்டி.!” என்றாள் இசை.

“இங்கயே ஆரம்பிக்கனுமா..? எங்க எதைப் பேசனும்ன்னு தெரியுமா தெரியாதா..? எங்க போனா என்ன..? எல்லாமே நம்ம வீடு தான்..” என்றான் அன்பு பல்லைக் கடித்துக் கொண்டு.

“அதெப்படி அண்ணா எல்லாமே நம்ம வீடு ஆகும்..? என்ன இருந்தாலும் அது உனக்கு மாமியார் வீடு தான். நீ நம்ம வீட்டுக்குத் தான் வரணும்..” என்றாள் சங்கீதா.

“பேசாம இரு சங்கீதா..” என்று பல்லவன் கூட அதட்டினார்.

அவளையே கூர்மையாய் பார்த்த அன்புச்செழியன்,

“நீ சொல்றதும் சரிதான் சங்கீதா. நான் நம்ம வீட்டுக்கு போறேன். அதே மாதிரி மாதவன், நீங்களும் உங்க வீட்டுக்கே கிளம்புங்க..உங்க பொண்டாட்டியைக் கூட்டிகிட்டு..” என்றான் பட்டென்று. அவன் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்காத சங்கீதா அதிர்ந்து போய் நிற்க,

“அங்க போய் எம்மக எப்படி இருப்பா…? அதெல்லாம் முடியாது..” என்றார் காதம்பரி.

“உங்க பொண்ணு மட்டும் உங்க கூடவே இருக்கணும். அப்படியே, வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையும் உங்க பொண்ணு கூடவே இருக்கணும். ஆனா, வீட்டுக்கு வந்த மருமக மட்டும் அவங்க வீட்டுக்கு போய்டக் கூடாது.. அப்படித்தான..?” என்று அன்பு கேட்ட கேள்விக்கு, பல்லவன் மனதிற்குள் ‘சபாஷ்’ போட்டுக் கொண்டார்.

“அன்பு சார், வெளுத்து வாங்குறாரே..?” என்றாள் ரோகிணி சிரிப்புடன்.

“அண்ணா…. என்னையவே இப்படி எடுத்தெரிஞ்சு பேசுறியா..?” என்றாள் சங்கீதா.

“நான் அப்படி பேசலை. நீதான் பேச வைக்கிற. இது ஒரு சின்ன விஷயம், இதையேன் இவ்வளவு பெரிசு பண்றிங்க..? நாளைக்கு சின்ன சின்ன பிரச்சனைக்கும் இப்படித்தான் பிரச்சனை பண்ணுவிங்க. இதெல்லாம் ஆரம்பத்துலையே பேசி முடிச்சுக்கிறது தான் நல்லது..!” என்றான் அன்பு தீர்மானமாய்.

அவனின் தெளிவான பேச்சில் இருந்தே புரிந்து போனது, இசைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று. கண்டிப்பாக இசையை அவன் நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மங்கைக்கு அப்போதே வந்து விட்டிருந்தது.

‘ஆத்தா மீனாட்சி.. என் மகளுக்கு இந்த வாழ்க்கை கடைசி வரைக்கும் நிலைச்சிருக்கணும். நீதான் கூடவே இருந்து பார்த்துக்கணும்..’ என்று மங்கை வாய்விட்டு வேண்ட,

“அம்மன் என்ன அக்காவுக்கு பாடிகாடாம்மா..? கூடவே இருந்து பார்த்துக்க..” என்ற மாறன் எடக்கு மடக்காக கேள்வி கேட்டு வைக்க, அவனை முறைத்தார் மங்கை.

இசையின் ஊருக்குள் செல்லும் போதே, அவளுக்கு மனதிற்குள் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. உண்மையை சொல்லப் போனால், அவள் ஊர் வாய்க்கு பயந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

மங்கை ஆரத்தி கரைக்க, அன்புச்செழியனுடன் அவள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள். திருமணம் முடிந்த உடன், அவள் வீட்டிற்கு வருவது இது தான் முதல் முறை.

கதிரவனுடன் திருமணம் முடிந்த போது, இருந்த பிரச்சனையில் அவள் இங்கு வரவேயில்லையே.

அவள், ஒவ்வொரு நிமிடமும் பல யோசனையில் இருக்க, அன்பு ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பொறுத்தவரை, அவன் நினைத்தது நடந்து விட்டது. அந்த சந்தோஷமே போதுமென்று நினைத்தான்.

“என்ன அன்பு சார்..! உங்க முகம் ஜொலிக்குது..?” என்றாள் ரோகிணி.

“பொதுவா, கல்யாணம் ஆனா உடனே பொண்ணு முகம் தான் ஜொலிக்கும்ன்னு சொல்லுவாங்க. இங்க தான் அப்படி ஒரு சீனைப் பார்க்க வாய்ப்பே இல்லையே. அதான் என் முகம் ஜொலிக்குது போல..” என்றான் அன்பு.

அவன் இவ்வளவு பேசி, இன்றுதான் கேட்கிறாள் ரோகிணி. அதுவே ஆச்சர்யமாய் இருக்க,

“நீங்க பிழைச்சுக்குவிங்க சார்..!” என்றாள் சிரிப்புடன்.

“மம்மி எனக்கு எப்போ மேரேஜ் நடக்கும்..?” என்றான் அகரன், கொஞ்சம் வார்த்தைகள் தெளிவில்லாமல்.

“அடப்பாவி.. இப்பவே இவனுக்கு இந்த கவலை வேறையா..?” என்று மாறன் வாயைப் பிளக்க,

“சொல்லு மம்மி..” என்றான் விடாமல்.

“நீ பிக் பாய் ஆனதும் நடக்கும்..” என்றான் அன்பு.

“நான் இப்போவே பிக் பாய் தான்..” என்றான் முகத்தை சுருக்கி.

“இந்த பிக் பாய் வசனத்தை விடவே மாட்டியாட..?” என்ற அன்பு சிரிக்க,

“நான் கோவமா இருக்கேன்..!” என்றான் அகரன்.

“நீ கொஞ்ச நேரம் கோவமாவே இருடா. அதுக்காக உனக்கு கல்யாணமா பண்ணி வைக்க முடியும்..?” என்று அன்பு சிரிப்புடன் கேட்க, இசைக்கும் சிரிப்பு வந்தது. அதை அவள் அடக்க பார்க்க,

“சிரிக்கலாம் தப்பில்லை..!” என்றான் அன்பு. இவர்கள் மூவரையும் இப்படிப் பார்த்த மங்கையின் மனம் நிறைந்து போனது.

“என்னால இதையெல்லாம் பார்க்க முடியலைம்மா..” என்றாள் சங்கீதா.

“பார்க்க முடியலைன்னா, கண்ணை மூடிக்க..” என்றான் மாதவன் கோபமாக.

ஒரு விருந்தே தயாராக, நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது.

அதற்குள் இசைக்கு திருமணமாகி, அவள் வந்திருக்கும் விஷயம் ஊருக்குள் பரவியிருக்க, ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர்.

பெரும்பாலும் வந்தவர்கள் இசையை ரொம்பப் படுத்தி எடுக்கவில்லை. அவளுக்கு திருமணம் நடந்தது சந்தோசம் என்ற ரீதியிலேயே பேசிச் சென்றனர். அதையெல்லாம் கேட்ட இசைக்குத் தான் குழப்பமாக இருந்தது.

அதிலும் ஒரு கிழவி,

“செல்வி உன் புருஷன் ராஜாவாட்டம் இருக்கான்..! சந்தோஷமா இரு..” என்று சொல்லி விட்டு செல்ல,  திகைத்தாள் இசை.

“என்னம்மா..? அப்படியே மாத்தி பேசிட்டு போறாங்க..?” என்றாள் அதிர்ச்சி நீங்கமால்.

“இது தான் மனுஷங்க செல்வி. நேத்து அப்படி பேசுனவங்க, இன்னைக்கு எப்படி பேசுறாங்க பாரு. நரம்பில்லாத நாக்கு இப்படியும் பேசும்,அப்படியும் பேசும். இவங்களுக்காகப் பார்த்தா, நம்ம வாழ்க்கையை நம்ம வாழ முடியாது..!” என்றார் மங்கை. அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்று கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்தாள் இசை.

அன்பு அனைவரிடமும் சகஜமாக பேசுவதைக் கண்டு அவளுக்கு ஆச்சர்யம் தான். அவள் பார்வையில் இருந்தே புரிந்து கொண்டான் அன்பு.

“என்ன இசை இப்படி பார்க்குற..?” என்றான்.

“இவங்களையெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் அன்பு சார்..” என்றாள்.

“என்ன இன்னும் சாரு, மோரு..” என்று கடுப்பாக சொன்னவன்,

“மறந்துட்டியா, சங்கீதாவை உங்க அண்ணனுக்கு தான் கட்டியிருக்கு..” என்றான் சிரிப்புடன்.

“ஆமால்ல..” என்று அவள் அசடு வழிய,

“உங்கண்ணன் கல்யாணத்துல இவங்களையெல்லாம் பார்த்தது… அப்போ எல்லாரும் செல்வி, செல்வின்னு உன்னைப் பத்தி பேசிட்டு இருக்குறதைப் பார்த்து, மாதவன்கிட்ட கேட்டேன். அப்போதான் நடந்ததை எல்லாம் மாதவன் சொன்னார். அதைக் கேட்டு, எனக்குள்ள ஒரு வலி. நீதான் அந்த செல்வின்னு தெரிஞ்சிருந்தா, இந்த கல்யாணம் முன்னமே நடந்திருந்தாலும் ஆச்சர்யப் படுறதுக்கு இல்லை..” என்றான் அன்பு.

“கதைய சொன்ன மாதவன், என் போட்டோ காட்டலையா..? அப்படி பார்த்திருந்தா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..” என்றாள் இசை.

“இப்படி ஒன்னு இருக்கோ..? அந்த நேரத்துல எனக்கு அதுவும் தோணாம போய்டுச்சு. மாதவனுக்கும் அது தோணாம போய்டுச்சு..” என்றான் அன்பு.

“புருஷன் செத்தவளை எதுக்கு காட்டணும்ன்னு விட்டிருப்பான்..” என்றாள் இசை. அவள் பேச்சு வாக்கில் சொல்லிவிட,

“நான் உயிரோட பக்கத்துல தான் இருக்குறதா எனக்கு நியாபகம்.. உனக்கு..” என்று உறுமிய உறுமலில் பயந்தே போனாள் இசை. அன்புக்கும், இவ்வளவு கோபம் வரும் என்று இன்று தான் பார்க்கிறாள்.

“சாரி..! நான் ஏதோ வாய் தவறி..” என்று தலையை குனிய,

“இனி எப்பவும் மறக்காத. அது தான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. (Ativan) எதை மறக்கணுமோ அதை மறக்குறது இல்லை. மத்த எல்லாத்தையும் மனசுலையே போட்டுக்க வேண்டியது..” என்றவன், மாறனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

மங்கை சாப்பிட அழைக்க, அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டதே தனி சுகமாக இருந்தது. அதிலும் அன்பு, தனக்கு ஒரு புறத்தில் அகரனையும், மறுபுறத்தில் இசையையும் சாப்பிடவிட்டு, அவர்களுக்கு நடுவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

இசைக்கு அருகில் இருந்த ரோகிணி,

“மனுஷன் பெர்பாமன்ஸ்ல பின்றாரே..?” என்றாள் ரோகிணி மெதுவாக.

“பேசாம சாப்பிடுடி..” என்றாள் இசை.

“நடக்கட்டும் நடக்கட்டும்..! அந்த பக்கம் பிள்ளை, இந்த பக்கம் பொண்டாட்டி…ம்ம்..ம்ம்..!” என்று ரோகிணி கண்ணடித்து சிரிக்க,

“உங்க ஹஸ்பண்டையும் வர சொல்லிடுங்க ரோகிணி. இன்னும் நல்லா இருக்கும்..” என்றான் அன்பு.

“நானும் சொல்லிட்டு தான் சார் இருக்கேன். சீக்கிரம் வந்திடுறேன்னு சொல்லியிருக்கார்..” என்றாள் ரோகிணி.

இதில் எதுவும் ஒட்டாமல் காதம்பரி தனியாக இருக்க, அவருடன் சங்கீதாவும் இருந்தாள். அவர்களைப் பார்த்த பல்லவன்,

“மாப்பிள்ளை..! இவங்க ரெண்டு பேரும் பத்து நிமிஷம் பக்கத்துல சேர்ந்து இருந்தாலே பல பிரச்சனை வரும். இப்ப என்ன வரக் காத்திருக்கோ..?” என்றார் மாதவனிடம்.

“அட நீங்க வேற மாமா..? அங்க எங்கம்மாவைப் பாருங்க..! இவங்க மூணு பேரையும் என்ன பண்றது..?” என்றான் மாதவன்.

“ஒண்ணுமே செய்ய முடியாது மாப்பிள்ளை. இவங்களை மாதிரி எல்லார் வீட்லயும் ரெண்டு லேடிஸ் இருக்கத்தான் செய்வாங்க. அவங்க பார்வைக்கு அவங்க நல்லவங்க. சில சமயம் ரொம்ப நல்லவங்க போல நடந்துப்பாங்க, சில சமயம், இவங்களா அப்படின்ற மாதிரி நடந்துப்பாங்க. நமக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான்..” என்று பல்லவன் சொன்ன விதத்தில் மாதவனுக்கு சிரிப்பு வந்தது.

“என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு..?” என்றாள் சங்கீதா.

“ஒண்ணுமில்லைம்மா..! சும்மா பேசிட்டு இருக்கோம்..” என்ற மாதவன்,

“வயித்துல இருக்குற என்னோட பிள்ளையை நினைச்சா கவலையா இருக்கு மாமா..?” என்றான் மாதவன்.

“ஏன் மாப்பிள்ளை..?”

“எதிர்ல இருக்குற என்னாலையே முடியலை. அவளுக்குள்ள இருக்குற குழந்தையோட நிலைமைய யோசிச்சுப் பாருங்க. வெளிய வந்து இவளை நாலு மிதி மிதிச்சா தான் திருந்துவா போல..” என்றான் மாதவன்.

“அதெல்லாம் நடக்காது..! அன்பு மிதிக்காத மிதியா, பேசாத பேச்சா.. இப்ப வரைக்கும் காதம்பரியே மாறலை. அவ பொண்ணு மட்டும் எப்படி மாறுவா..?” என்றார் பல்லவன்.

“வழக்கமா பொம்பளைங்க தான பொரணி பேசுவாங்க..?  இங்க என்னடான்னா.. நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க..? அதுவும் உங்க பொண்டாட்டிங்களையே..? நான் போய் அவங்க கிட்ட சொல்லவா..?” என்று பின்னால் இருந்து கயல்விழி கேட்க,

“ஏன் கயல் உனக்கு இந்த கொலைவெறி..?” என்றனர் பாவமாய்.

அந்த நேரத்தில் அங்கு வந்தவர்களை, யாரும் எதிர்பார்க்கவில்லை. இசை அதிர்ந்து நிற்க, அன்போ..புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

லட்சுமியும், மணிகண்டனும் வந்திருந்தனர். லட்சுமி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். மணிகண்டனைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவரும் அந்த நிலைமையில் தான் இருந்தார்.

லட்சுமி ஏதோ பரிதவிப்புடன் நிற்பதைப் போல் இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் பார்த்த இசைக்கு, கதிரவனையே நேரில் பார்ப்பது போல் இருந்தது.

“அத்தை..” என்று அவள் உதடுகள் முனுமுனுக்க, அதிலிருந்து அவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டான் அன்புச்செழியன்.

அவர்கள் அங்கு வந்ததில் ராஜாங்கத்திற்கு துளியும் விருப்பமில்லை. அவர் எதுவும் பேசாமல் இருக்க,

“வாங்க..!” என்றார் மங்கை.

“என்ன பண்ற மங்கை..?” என்று அவரை அதட்டினார் ராஜாங்கம்.

“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்றது தான் மரியாதை..” என்றார் மங்கை.

“அந்த அளவுக்கு அவங்க நடந்துக்கலை..” என்றார் ராஜாங்கம்.

“நான் என்ன பண்ணேன் அண்ணா..?” என்ற லட்சுமியின் குரல் தேய்ந்து ஒலித்தது. அவரை அப்படி ஒரு கோலத்தில் பார்த்த இசைக்கு மனசே ஆறவில்லை.

“அத்தை..!” என்று அவரைக் கட்டிக் கொண்டவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். எல்லா சூழ்நிலையிலும் அவளுக்கு பக்க பலமாக இருந்து ஒரு உறவு ஆயிற்றே. அவர்களின் பிணைப்பை பார்த்த காதம்பரிக்கு பொறாமையாக இருந்தது.

ஒரு கனமான அமைதி அங்கு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!