Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காமல் தானே நிழல் போல நானே

நீங்காமல் தானே… நிழல் போல நானே..! – 20 (நிறைவுப் பகுதி)

நிழல் 20:

“எப்படி இருக்க செல்வி..?” என்றார் லட்சுமி.

“நல்லா இருக்கேன் அத்தை..! நீங்க எப்படி இருக்கீங்க..?” என்றாள்.

“பெத்த பையனும் இல்லை.. வீட்டுக்கு வந்த மருமகளும் இல்லை..! எப்படி இருப்பேன்னு நினைக்கிற..?” என்றார் லட்சுமி.



Advertisement

“அத்தை..!” என்றாள் அதிர்ந்து.

“உனக்கு எல்லார் மேலயும் கோபம் இருக்கும்ன்னு தெரியும். ஆனா, நான் என்ன பண்ணேன் செல்வி..?” என்று நெடுநாட்களாக மனதில் அறுத்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டார் அவர்.

“மன்னிச்சுடுங்க அத்தை..! எனக்கு அப்ப என்ன பண்றதுன்னு தெரியவே இல்லை..!” என்றாள்.

Advertisement

“நானா, உனக்கு போன் பண்ணி பேசலைன்னாலும்.. நீ கடைசி வரைக்கும் என் கூட பேசியிருக்க மாட்ட.. என்னைப் பார்க்க வந்திருக்க மாட்ட.. அப்படித்தானே..?” என்று அவர் கேட்க, ராஜாங்கத்திற்கு அதிர்ச்சி. மங்கைக்கு அந்த அதிர்ச்சி இல்லை. அவர் தானே லட்சுமியை பேச வைத்தது.

Advertisement

கல்யாணத்திற்கு எந்த பிடியும் கொடுக்காமல் இருக்கும் இசையை, சம்மதிக்க வைக்க மங்கைக்கு வேறு வழி தெரியவில்லை. யார் சொன்னால், செல்வி கேட்பாள் என்று அவருக்குத் தெரியும்.

ராஜாங்கத்திற்கு தெரியாமல் அவர் செய்த ஒரே வேலை இது தான். அப்போதும் மணிகண்டன் தடுக்கத்தான் செய்தார். லட்சுயுமியும் அந்த முறை கணவனின் பேச்சைக் கேட்கவில்லை.

போனில் லட்சுமியின் குரலைக் கேட்ட செல்விக்கு முதலில் குரல் அடையாளம் தெரியவில்லை. சில வினாடிகளுக்கு பின் அவரை அவள் உணர, அவர் பேர் சொல்லுவதற்கு முன்பே,

Advertisement

“அத்தை..!” என்றாள் செல்வி.

அவருடைய நல விசாரிப்புகளுக்குப் பிறகு லட்சுமி சொன்ன ஒரே விஷயம் இது தான்.

“இங்க பார் செல்வி..! எல்லா விஷயத்துக்கும் யோசிச்சுகிட்டே இருக்காத. நீ இங்க இருந்திருந்தா, நானே கண்டிப்பா உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். கதிரும் அதைத் தான் விரும்புவான். இன்னும் எத்தனை வருஷத்துக்கு அவனையே நினைச்சுட்டு இருப்ப..? உனக்கு இன்னும் வயசு இருக்கு செல்வி. ஊர் என்ன சொல்லும்ன்னு யோசிக்காத..? ஊருக்கு நம்மளோட கஷ்ட்டம் தெரியாது..! என்மேல உனக்கு கொஞ்சமாவது பாசம் இருந்தா, அக்கறை இருந்தா நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. இல்லை… கடைசி வரைக்கும் நான் நடைபிணமாதான் வாழணும்ன்னு நீ நினைச்சா, உன் இஷ்ட்டப்படி முடிவை எடு. இத்தனை நாள் எங்களை தள்ளி வச்சு கஷ்ட்டப் படுத்தின..இப்போ பக்கம் இருந்து கஷ்ட்டப் படுத்துற. எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு அத்தை தான். நீ எனக்கு மருமகள் தான்..” இதை மட்டும் நியாபகத்தில் வச்சுக்க செல்வி..” என்று இயந்திர கதியில் சொன்னவர் போனை மங்கையிடம் கொடுத்து விட்டார்.

“ரொம்ப நன்றி அண்ணி..!” என்றார் மங்கை.

“எனக்கு நன்றியெல்லாம் வேண்டாம் மங்கை..! எனக்கு ஏதாவது நீ செய்யனும்ன்னு நினைச்சா… என்னோட பேரனை மட்டும் ஒரு தடவை காட்டு.அது போதும் எனக்கு. இவ்வளவு சொத்துக்கும் சொந்தக்காரனே அவன் தான். ஆனா, எதுவுமே இல்லாம இப்படி அவன் வளரனும்ன்னு விதி போல..” என்று கண்ணீர் விட, அதைப் பார்த்த மங்கைக்கு மனம் வெம்பிப் போனது.

“அவன் உங்க பேரன் அண்ணி..! அவனைப் பார்க்க உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்..?” என்றார் மங்கை.

“அவன் என்னோட பேரனா இருந்தாலும், அவனைப் பார்க்க ஆசை இருந்தாலும்.. அதுக்கான தகுதி எங்களுக்கு இருக்கான்னு தெரியலையே மங்கை. இங்க இருக்கவங்க யாரும் அந்த தகுதிக்கு சமமா நடந்துகிட்டாங்களா என்ன..?” என்று மணிகண்டனை பார்த்து அவர் குத்தலாய் பேச,

“என்ன லட்சுமி வாய் நீளுது..” என்றார் மணிகண்டன்.

“உண்மைதான்..! இந்த பேச்சை நான் சரியான நேரத்துல பேசியிருந்திருக்கணும். அப்போ பையன் போன துக்கத்துல இருந்தேன். இப்பவும் பேசாம இருந்தா, என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது..” என்றார் லட்சுமி.

கதிரவனுக்கு யாருடைய குணம் என்று அப்போது தான் மங்கைக்கும் புரிந்தது.

நடந்ததை இப்போது நினைத்துக் கொண்டார் மங்கை. லட்சுமி பேசிய பிறகு இசையிடம் அப்படி ஒரு மாற்றம். அவளாகவே திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். அவர்களின் பாசப் பிணைப்பு மங்கைக்கே ஆச்சர்யம் தான்.

“என்னோட பேரனை ஒரு தடவை பார்த்துட்டு போய்டவா செல்வி..?” என்றார் யாசகமாய். அவரின் அந்த நிலை பார்ப்பவர்களுக்கே கண்களை கலங்கச் செய்யும்.

“அகரன்..!” என்று இசை கூப்பிடவும், அவன் அன்புச் செழியனை விட்டு இறங்க மறுக்க,

“அகர் குட்டி..! அவங்க உனக்கு பாட்டி.. அவங்ககிட்ட போங்க பார்க்கலாம்..” என்றான் அன்பு.

“அவங்க அப்பா பாட்டியா, அம்மா பாட்டியா..? என்றான் அகர் விபரமாய்.

இந்த இடைப்பட்ட நாட்களில் அவனை அப்பா என்றே அழைக்கும் படி அகரனை பழக்கியிருந்தான் அன்பு. இசை சம்மதம் சொல்லாமல், எந்த தைரியத்தில் இதை செய்தான் என்றால் அவனிடம் பதில் இல்லை.

“அப்பா பாட்டி தான்..” என்றான் அன்பு.

“நோ..! அப்பா பாட்டி அங்க. அம்மா பாட்டி இங்க..” என்று அவன் மங்கையையும், காதம்பரியையும் காட்ட, லட்சுமி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

“விடுங்க தம்பி..! பெரியவங்களுக்கே சில விஷயம் புரியாம இருக்கும் போது, அவனுக்கு என்ன தெரியும்.. அவன் குழந்தை..” என்றார் லட்சுமி. அவர் மனிகண்டனைத் தான் சொல்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அப்போதும் அவர், எதுவும் பேசவில்லை.

“அகர்..இவங்களும் அப்பா பாட்டி தான். இவங்களும் என்னோட மம்மி மாதிரி தான். சோ.. உனக்கு பாட்டி..” என்றான் அன்பு.

“ஹைய்..! அப்போ த்ரீ பாட்டியா..?” என்றவன் ஒரே நிமிடத்தில் லட்சுமியிடம் தாவி விட்டான். அவன் கைகளில் வந்தது தான் மிச்சம்… அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும் கொட்டித் தீர்த்து விட்டார் லட்சுமி. எதோ கதிரவனே அவருக்கு திரும்பக் கிடைத்ததை போல் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அவரின் அன்பில் அகரன் திக்கு முக்காடிப் போனான். அருகில் இருந்த மணிகண்டனுக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்து விட்டார். அவரும் மறக்கும் படியான வார்த்தைகளை பேசவில்லையே.

“ரொம்ப நன்றி தம்பி..” என்று அன்புவைப் பார்த்து சொல்ல,

“எனக்கு எதுக்கும்மா நன்றி எல்லாம் சொல்றிங்க. நானும் உங்களுக்கு ஒரு பிள்ளை தான். உங்களுக்கு எப்ப தோணுதோ, அப்பல்லாம் நீங்க வரலாம். நாங்களும் வருவோம் போவோம். கதிர் இல்லைன்னு நினைக்காதிங்க, அவருக்கு பதில் நானும், அகரனும் இருப்போம்..” என்றவன்,

“அகர் சரிதான..?” என்றான் அவனைப் பார்த்து.

“டன்..” என்று அவன் சொல்ல,  அவர்களின் பிணைப்பைப் பார்த்த லட்சுமிக்கு அப்படி ஒரு சந்தோசம்.

“ரொம்ப சந்தோசம் தம்பி..” என்றார்.

“அன்புன்னே சொல்லுங்கம்மா..!” என்றான் அவன்.

“இங்க இருக்கும் போதே, வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டு போங்க அன்பு..” என்று லட்சுமி சொல்ல,

“கண்டிப்பாம்மா..!” என்றான் அன்பு.

“போகலாம்..” என்று மணிகண்டனைப் பார்த்து சொல்ல, அவரும் கிளம்பினார்.. அகரனைப் பார்த்துக் கொண்டே. அவர் பேசிய பேச்சுக்களின் வீரியம் அவருக்கும் தெரியும். அதனால் தான் அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை. மன்னிப்புகேட்டு சரி செய்ய கூடிய விஷயம் இல்லை அது என்று அவருக்குத் தெரியும். ஆனால், அவர் கண்களிலும் ஒரு ஏக்கம் இருந்ததை அன்பு தெரிந்து கொண்டான். அதற்கு அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் விதைத்த  விதைக்கு அவர்கள் தானே அறுவடையை எடுக்க முடியும்.

அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்த காதம்பரி,

“என்ன அன்பு இதெல்லாம்..? பெத்தவ நான் இங்க குத்துக் கல்லு மாதிரி இருக்கேன். யார் யாரையோ அம்மான்னு சொல்ற..?” என்றார் கோபமாய்.

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனைம்மா..?” என்றான் அன்பு சலிப்பான குரலில்.

“பின்ன என்ன..? நீயும் அவங்களை அம்மா சொல்லி உருகிட்டு நிக்குற, அவளும் என்னமோ அத்தைன்னு சொல்லி உருகிட்டு நிக்குறா..? எங்களுக்கு என்ன மரியாதை..?” என்றார்.

“மனக்கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஆறுதலா பேசுறது தப்பில்லை..! இப்ப நீங்க பேசுறது தான் தப்பு..” என்றான்.

“நான் தான் தப்பு.. எல்லாரும் சரியா..?” என்றார் காதம்பரி.

“நான் அப்படி சொல்ல வரலைம்மா..!  பையன் உயிரோட இல்லைன்னாலும், மருமகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமையணும்ன்னு நினைக்கிற அவங்க கண்டிப்பா ஒரு நல்லா அம்மாதான். நல்ல மனுஷி தான். நீங்களும் அப்படி பெருந்தன்மையா பாசத்தோட இருந்தா, உங்ககிட்டையும் எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க..” என்றான்.

“இப்ப நான் யார்கிட்ட அப்படி நடந்துக்கலை..” என்றார்.

“இதோ, இசைகிட்ட கூட நீங்க அப்படி நடந்துக்கலையே..? பையன் உயிரோட இல்லாதப்ப கூட, அவங்களுக்கு இசை மேல இருக்க பாசத்தைப் பார்த்திங்கல்ல. இது தான் கடைசி வரைக்கும் கூட வரும். இருக்க வரைக்கும் சந்தோஷமா இருப்போம்..” என்றான்.

“இதெல்லாம் இவளுக்கு கடைசி வரைக்கும் புரியாது.. நீ விடு அன்பு. சிலரை திருத்த நினைக்கிறது எப்படி இருக்கு தெரியுமா.. பாறாங்கல்லுன்னு தெரிஞ்சும், அதுல போய் முட்டிக்கிற மாதிரி.. திரும்பி சத்தம் வரதுக்குள்ள நம்ம மண்டை பிளந்திருக்கும்..” என்றார் பல்லவன். அவராக சொல்லவில்லை, அவரின் இத்தனை வருட அனுபவம் சொல்லியது.

பல்லவன் பேசியதைக் கேட்டு, ரோகிணிக்கு சிரிப்பு வர, அடக்கிக் கொண்டாள்.

“ நீ பேசாம இரும்மா. இவங்க எல்லாருமே நல்லவங்க, நாம மட்டும் தான் கெட்டவங்க..” என்றாள் சங்கீதா.

“தெரிஞ்சா சரி..” என்று மாதவன் சொல்ல,

“என்ன சொன்னிங்க..?” என்றாள்.

“உண்மையை சொன்னேன்..” என்றான்.

“மாதவா இங்க இருந்தது போதும்.. நம்ம வீட்டுக்கு கிளம்புவோமா..?” என்று சாந்தா சொல்ல,

“அடுத்து நீங்களா..?” என்றவன்,

“கிளம்பலாம்ம்மா..!” என்றான்.

“ஏன் மாதவன்..? இந்த வயசான காலத்துலயும் இப்படித் தனித் தனியா இருக்கனுமா..? ஒரே வீட்ல இருக்கலாமே..?” என்றான் அன்பு.

“அட நீங்க வேற அன்பு.. தனி தனி வீட்ல இருக்கப் போய் தான் எங்கப்பா இன்னும் உயிரோடவே இருக்கார். ஒரே வீட்ல இருந்திருந்தாங்க, கண்டிப்பா எங்கம்மா அவரை பேசியே சாகடிச்சிருப்பாங்க..” என்றான் சிரிக்காமல். அவன் சொன்னதைக் கேட்ட அன்புக்கு சிரிப்பு வந்தது.

“அதுவும் சரிதான்..” என்றான் அன்பு.

அன்று இரவிற்கான எந்த சடங்கைப் பற்றியும் பேசவே கூடாது என்று சொல்லியிருந்தான் அன்புச்செழியன்.

அறைக்குள் வந்த அன்பைப் பார்த்து அவளுக்கு எந்த அதிர்ச்சியும் வரவில்லை. அவன் முன்னாடியே சொன்னது தானே… என்று அமைதியாக இருந்தாள் இசை.

அவளின் எண்ண ஓட்டம் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அகரன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். இசை, ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறித்துக் கொண்டிருக்க,

“தூங்கு தேனு..!” என்றான் அமைதியாக.

“தேனா..?” என்றவள் ஆச்சர்யமாய் திரும்பிப் பார்க்க,

“என்ன..?” என்றான்.

“என்ன புதுசா தேனு..?” என்றாள்.

“என்னைப் பொருத்தவரைக்கும் செல்வியும் இல்லை, இசையும் இல்லை தேனு தான். அன்புச்செழியனுக்கு எப்பவும் தேனு தான் கரெக்ட்ட இருக்கும். இதை முன்னாடியே சொல்ல நினைச்சேன், நீ ஏதாவது நினைச்சுகிட்டா.. அதான் பேசாம இருந்துட்டேன்..” என்றான்.

“ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள்.

“எதுக்கு..?”

“லட்சுமி அத்தைகிட்ட ஆறுதலா பேசுனதுக்கு. அவங்களோட கஷ்ட்டத்தை சொல்ல ஆள் இல்லாம எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க..?” என்றாள்.

“நான் அவங்க ஆறுதலுக்காக சொல்லலை.! உண்மையாவே தான் சொன்னேன்.  கண்டிப்பா அவங்களைப் போய் பார்த்துட்டு வருவோம்..” என்றான்.

“நான் அங்க வரலை..” என்றாள்.

“ஏன்..?”

“அங்க வந்தா.. எனக்கு பழசெல்லாம் நியாபகம் வரும்.. அதைத் தாங்குற சக்தி எனக்கில்லை..” என்றாள்.

“போகாம இருந்தாதான் அது எப்பவுமே நியாபகத்தில் இருக்கும். போயிட்டு வந்துட்டு இருந்தா, அது சகஜம் ஆகிடும்..” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

“தூங்கு தேனு..! நான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னது மட்டும் உண்மை. உன்னை இனி என்னோட பொண்டாட்டியா மட்டும் தான் பார்க்க முடியும். அதனால் இந்த நண்பர்கள் போல அப்படின்ற தாட்ஸ் எல்லாம் விட்டுட்டு, சீக்கிரம் என்னோட பொண்டாட்டியா யோசிக்கப் பாரு..” என்றவன், படுத்த நிமிடத்தில் உறங்கிவிட்டான். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த இசையும் தூங்கி விட, அவள் தூங்கிய பிறகு எழுந்து அமர்ந்தான் அன்பு.

ஏனோ அவளை இப்படி அருகில் வைத்து இமைக்காமல் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு கொள்ளை ஆசை. அதை அவள் முழித்திருக்கும் போது செய்ய முடியாதே. அதான், அவள் தூங்கிய பிறகு அவளை ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவன்,

“கல்யாணம் ஆனா, பயலுக எல்லாம் ஏன் பொண்டாட்டி பின்னாடியே சுத்துறாங்கன்னு இப்பத்தான் தெரியுது. இப்படி ஒரு கஷ்ட்ட காலம் யாருக்கும் வரக் கூடாது. அன்பு, உனக்கு வாய்த்தது அவ்வளவுதான்..” என்று புலம்பியபடியே படுத்து விட்டான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டாள் இசை. எழுந்தவள் நேராக மங்கையைத் தேடி செல்ல, வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்.

“என்ன செல்வி.. எந்திருச்சாச்சா..? இங்க வா, கோலம் போடு. நான் போ டீ போடுறேன்..” என்றார்.

“சரிம்மா..” என்றவள் கோலம் போட்டுக் கொண்டிருக்க,

“உனக்கு கோலமெல்லாம் போடத் தெரியுமா தேனு..?” என்ற குரலில் நிமிர, அன்பு நின்றிருந்தான்.

“தெரியுமே..” என்றாள்.

“ஹோ..அப்படியா..? போடு போடு..” என்றவன் அவள் போடும் கோலத்தையே சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்க,

“இப்ப எதுக்கு இப்படி என்னைய சுத்திகிட்டு இருக்கீங்க..?” என்றாள்.

“இல்ல, நான் நிறைய படத்துல பார்த்திருக்கேன். புதுப் பொண்டாட்டி கோலம் போடும் போது, ஹீரோ எல்லாம் இப்படி தான் சுத்தி பார்ப்பாங்க. அவங்க அப்படி என்ன பார்க்குறாங்ன்னு  எனக்குத் தெரிஞ்சுக்கணும். அதான்..” என்றான்.

“அது புது பொண்டாட்டி போட்டா பரவாயில்லை. நான்தான் பழைய..” என்று ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்த, எதிரே அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் சட்டென்று உள்ளே சென்று விட,

“கொஞ்சம் சிரமம் தான் போலயே..?” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், வேகமாக கோலத்தை முடித்து விட்டு, அவனைத் தேடி சென்றாள்.

“சாரி அன்பு..! தெரியாம சொல்லிட்டேன்..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளை இழுத்து அணைத்திருந்தான் அன்பு. அவன் திடீரென்று இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத இசை, விக்கித்து நிற்க, அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தவன்,

“நானும் தெரியாம பண்ணிட்டேன். இப்ப கன்னத்தோட விடுறேன். இனி இப்படியே பேசிட்டு இருந்தா, அடுத்து ஸ்ட்ரெயிட்டா..” என்று அவன் சொல்ல வர,

“செல்வி..” என்ற மங்கையின் குரலில் ஓடி விட்டாள் அவள்.

“உனக்கு அப்பப்ப இப்படி ட்ரீட்மென்ட் குடுத்துகிட்டே இருக்கணும். அப்பத்தான் கொஞ்சமாவது பழசை பேசாம இருப்ப..” என்று சொல்லிக் கொண்டவன், அவளின் அதிர்ந்த தோற்றத்தை எண்ணி சிரித்துக் கொண்டான்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு…

சங்கீதாவிற்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. சென்னையில் தான் இருந்தாள்.

மாதவன் இப்போது, ஊரில் உள்ள நிலங்களைப் பார்த்துக் கொண்டு, அன்புடன் சேர்ந்து தொழில் செய்கிறான். அவர்களின் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள், அவர்கள் தோட்டத்தில் இருந்தே கிடைக்கும் மாதிரி,வழிவகை செய்திருந்தான்.

எது எப்படி மாறினாலும், சங்கீதா மட்டும் அப்படியே தான் இருந்தாள். இதில் அவள் மட்டும் தான் குழந்தை பெத்து கஷ்ட்டப் படுவதைப் போல் பில்டப் காட்டுவதில் அவளுக்கு மிஞ்சி யாருமில்லை.

கயல்விழிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது. அவளையும் உள்ளூரில் சின்னுவிற்கு(சின்ன பாண்டி) தான் கட்டிக் கொடுத்திருந்தனர்.

மாறன், பள்ளி இறுதி வகுப்பில் இருக்க… மங்கையும் அவனும் இப்போதும் அதே வீட்டில் தான் இருந்தனர். சாந்தா எப்பவும் போல் தனியாகத் தான் இருந்தார். ராஜாங்கம் இறுதிவரை இரண்டு வீட்டிற்கும் நடையாய் தான் நடக்க வேண்டும்.

ரோகிணியின் கணவன் இப்போது சென்னைக்கே வந்துவிட்டான். சொந்தமாக ஒரு வீடு வாங்கி.. அதற்கு குடி போய்விட்டனர். ரோகிணியின் பெற்றோர் இன்னும் அன்பு வீட்டில் தான் குடியிருந்தனர்.

லட்சுமி இப்போதெல்லாம் அடிக்கடி வந்து அகரனை பார்த்து விட்டு செல்கிறார். அன்பும் அங்கு செல்லும் போதெல்லாம் அவரைப் பார்க்காமல் வர மாட்டான்.

“தேனு ஒரு சட்டை எடுக்க இவ்வளவு நேரமா..? டைம் ஆச்சு..” என்று அன்பு கத்திக் கொண்டிருக்க,

“இருங்க அன்பு..! தேடிட்டு இருக்கேன்..” என்றவள் தேடிக் கொண்டிருக்க, அகரன் இல்லையென்று நினைத்து வந்த அன்பு, பின்னால் இருந்து அவளைக் கட்டிக் கொள்ள, அவளுக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது. இன்னமும் அவன் அருகில் வந்தால், அணைத்தால் அவளிடம் ஒரு நடுக்கமும், ஒதுக்கமும் இருக்கும். இன்றும் அப்படியே இருக்க, அன்பு அதையெல்லாம் கண்டு கொண்டான் இல்லை.

“என்னடி பண்ற..?” என்றான்.

“சட்டை தான் தேடுறேன்..” என்றாள்.

“அது அங்க இருக்காது..?” என்றான்.

“ஏன்..?”

“நான் தான் அதை எடுத்து போட்டுட்டேனே..?” என்றான் சிரிப்புடன்.

“உங்களை..” என்று அவள் முறைக்க,

“முறைக்கிறப்ப கூட செம்மையா இருக்க தேனு..” என்று அவன் ரகசியமாய் சொல்லிக் கொண்டிருக்க,

“அப்பா..தள்ளுப்பா..” என்ற அகரனின் குரலில் அன்பு நிமிர, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் அகரன்.

“என்னடா..? விலக முடியாது போடா. என் பொண்டாட்டி..” என்றான்.

அவனை இழுத்து தள்ளி விட்ட அகரன்.. இசையை பின்னால் இருந்து கால்களை கட்டிக் கொண்டு..

“என்னோட மம்மி..” என்றான் முகத்தை சுருக்கி.

அன்பை போல் செய்கிறேன் என்று அவன் செய்ய, அவன் காலோடு அணைத்திருப்பதை பார்த்து சிரித்தான் அன்பு.

“நீ இன்னும் வளரனும்டா மகனே..” என்று சிரித்த அன்பு, அவனைத் தூக்கிப் போட்டு பிடிக்க,

“இன்னொரு தடவை ப்பா..பிளீஸ்..பிளீஸ்..” என்று அகரன் கேட்க, மீண்டும் மீண்டும் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அகரனை ஸ்கூலில் விட்டுவிட்டு இருவரும் கம்பெனிக்கு சென்றனர். இசை வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். காதம்பரி எப்போது எப்படி பேசுவார் என்றே தெரியாது.

“என்னைப் பார்க்காம உன்னால இருக்க முடியலைன்னு சொல்லு. அதான என் கூடவே வர..” என்று இப்படி எதையாவது சொல்லி வம்பிழுத்துக் கொண்டே இருப்பான் அன்பு.

“நீங்க ரொம்ப அமைதியான ஆளுன்னு நினைச்சேன்..” என்பாள் இசை.

“நீயா நினைச்சா, அதுக்கு நானா பொறுப்பு..” என்று எதாவது சில்மிஷம் செய்வான். அதோடு நிறுத்திக் கொள்வான். கல்யாணத்திற்கு முன்னால் அவளிடம் வாய்கிழிய பேசியவன், அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை.

அன்றும் ஸ்கூல் முடித்து வந்த அகரன், எதையோ கேட்டு பிடிவாதம் பிடிக்க, அதை உடனே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருந்தான் அன்பு.

“இப்படி அவனைப் பார்த்து பார்த்து வளர்க்குறது எல்லாம் சரிதான். இப்படி உனக்கொரு பிள்ளை என்னைக்கு பிறக்குறது..? இப்படியெல்லாம் அந்த குழந்தையை எப்படி வளர்க்குறது..?” என்றார் காதம்பரி ஜாடையாக.

“நீங்க பேசாமையே இருக்க மாட்டிங்களாம்மா..?” என்றான் அன்பு.

“அம்மா, கேட்டதுல என்ன தப்பு. இவங்களை கல்யாணம் பண்ண சரி, அதுக்கடுத்து ஒரு நல்லதும் நடந்த மாதிரி தெரியலை. ஒரு அம்மாவா அவங்க இதைக் கூட கேட்க கூடாதா..?” என்றாள் சங்கீதா.

“மாதவனுக்கு போன் போடவா..?” என்றான்.

“எதுக்கு..?” என்றாள் சங்கீதா.

“உன்னைய வந்து கூட்டிட்டு போக சொல்லத்தான்..” என்றான்.

“எப்பா சாமி.. நீங்க எப்படி இருந்தா எனக்கென்ன..? நீங்க பிள்ளைப் பெத்தா எனக்கென்ன..? இல்ல கழுதையைக் கட்டி மேய்ச்சா எனக்கென்ன..?” என்ற சங்கீதா, ஜகா வாங்கிவிட்டு சென்று விட்டாள் அறைக்குள்.

பல்லவனுக்கு சிரிப்பாக வந்தது. இப்போதெல்லாம் இவர்களை சமாளிக்க அன்பு நன்றாக தேறியிருந்தான். எந்த சண்டை வந்தாலும் அதை பெரிதாகவே விட மாட்டான். அப்படியே அனைவரையும் ஆப் செய்து விடுவான்.

காதம்பரி சொன்னது இசையின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. யோசனையில் இருந்தவள், அன்பு அறைக்குள் வந்ததையே கவனிக்கவில்லை.

அகரன் தூங்கிக் கொண்டிருக்க, அவள் யோசனையுடன் இருப்பதைப் பார்த்த அன்பு,

“என்ன யோசனை தேனு மேடம்..” என்றான், அவளை நெருங்கி அமர்ந்து.

“ஒன்னுமில்லைங்க..” என்றாள்.

“நீ இவ்வளவு மரியாதையா பதில் சொல்லும் போதே, ஏதோ இருக்கு.. என்னன்னு சொல்லு..” என்றான்.

அவள் அப்போதும் அமைதியாக இருக்க,

“அம்மா, சொன்னதை யோசிக்கிறியா தேனு. அவங்களைப் பத்தித்தான் உனக்குத் தெரியும்ல. அப்பறம் ஏன், அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற..?” என்றான்.

அவனை தீர்க்கமாகப் பார்த்தவள்,

“அவங்க சொன்னதைப் பத்தி யோசிக்கலை. உங்களைப் பத்தி தான் யோசிச்சு இருந்தேன்..” என்றாள்.

“என்னன்னு..?”
“நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்னவோ சொன்னிங்க. ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு மாதிரி இருக்கீங்க..? அதான் எனக்குப் புரியலை..” என்றாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவளின் தோளில் கைபோட்டு தன்னருகில் இழுத்தவன்,

“தேனு.. அப்ப சொன்னதைத் தான் இப்பவும் சொல்றேன். என்னோட எண்ணத்துல எந்த மாற்றமும் இல்லை. ஆனா, அதுக்காக உன்னை கட்டாயப் படுத்தவும் என்னால முடியாது..” என்றான்.

“அத்தை சொன்னது அவங்களோட ஆசையா கூட இருக்கலாம்..” என்றாள்.

“இருக்கலாம், அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..! எனக்குக் கூட ஒரு பொண்ணு வேணும்ன்னு ஆசையா தான் இருக்கு. அதெல்லாம் நான் வெளிய சொல்ல முடியுமா..?” என்றான் சிரிப்புடன்.

“வெளிய சொல்ல முடியுமா..? முடியுமான்னு சொல்லிகிட்டே, எல்லாத்தையும் வெளிய சொல்லிட வேண்டியது..” என்ற இசை அவனைப் போட்டு மொத்தி எடுக்க,

“என்னோட ஆசையில ஏதாவது தப்பிருக்கா சொல்லு..” என்றான் அவளை தன் கைகளுக்குள் நிறுத்தி.

“ஆசையில தப்பில்லை..! ஆனா,அதுக்கான முயற்சியே செய்யாம, ஆசைப் படுறது தான் தப்பு..!” என்றவள், அவனுக்கு புரியும் முன்னரே, அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“ஹேய் தேனு..நிஜமாவா..?” என்றான் சந்தோஷமாய்.

“ம்ம்..!” என்று அவள் தலையை நிமிர்த்தாமல் சொல்ல, அவளை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்த நிமிடம் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதே மகிழ்ச்சியுடன்.. அவளை தன்னவளாக்கிக் கொள்ள, அவளும் சந்தோஷமாய் அவனுக்குள் அடங்கிப் போனாள்.

கதிரவன் அவளின் நிழல், அன்புச்செழியன் அவளுடைய நிஜம் என்று அப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள் இசை.

கதிரவனின் செல்வியவள், அகரனுக்குத் தாயாகி, இசையாகி… அன்புச்செழியனின் தேனாகினாள்.

கதிரவனால் வெளிச்சம் பெற்று, இருண்டு போன அவள் வாழ்வு, அன்புச்செழியனால் மீண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!