Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 10(2)

“என்னாச்சு ஆதி..” என கேள்வியாய் நோக்கிய தினகரனிடம்,



Advertisement

“ஒரு தென்றல் புயலாகி வருது.. அது கரையை கடக்கும் வரை நான் இங்கே இருப்பது தான் நல்லது..”

என்று முழியை உருட்டி கூறினான்.

Advertisement

“யாரு..?? என்ன சொல்ற..” என்று கேட்டு அவனை தாண்டி பின்னால் பார்க்க,

Advertisement

“கமலினி தான்.. தாத்தா புண்ணியத்தில் கொஞ்ச நாளா அவ கண்ணில் படாம தலை மறைவா தான் இருக்கேன்..”

என்று பாவமாய் கூறினான். அவன் சொல்வதன் அர்த்தம் விளங்கவில்லை என்றாலும் கண்ணாடி கதவின் வழியே  சாலையில் மறுபுறம் நிற்கும் கமலினியை கண்டு அனிச்சையாய் ஓர் இதமான உணர்வு ஆட்கொள்ள தன்னை அறியாமல் புன்னகைத்தான்.

Advertisement

அதில் வெகுண்ட ஆதவன்,

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குல்ல..”

என்று முறைக்க அங்கே அவளோ சாலையை கடந்து இவர்களை நோக்கி தான் வந்துக் கொண்டிருந்தாள். அதனை நொடியில் புரிந்துக் கொண்ட தினகரன் விழிகள் வியப்பில் விரிய,

“தென்றல் கரையை எல்லாம் கடக்கிற மாதிரி தெரியல.. நம்ம கடையை நோக்கி தான் வந்துட்டு இருக்கு..”

என்றான் கேலியாய்.. அதில் திகைத்த ஆதவன் சட்டென்று திரும்பி பார்க்க அதே சமயம் அவளும் கதவை திறந்து உள்ளே வந்தாள் கமலினி.

உடனே பார்வையை திருப்பிய தினகரன்,

“வாசு.. அந்த தஞ்சாவூர் ஆர்டருக்கு அனுப்ப வேண்டிய ஸ்டாக் எல்லாம் சரி பார்த்து எடுத்து வை.. வண்டி வந்திடும்..”

என்று கடை பையனை உள்ளே அனுப்பிவிட்டு இவர்களை கண்டுக் கொள்ளாதது போல் கேபின் தாண்டி இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான்.

‘என்ன பேச வந்திருப்பாள்..’ என்ற குறுகுறுப்பும் ஆர்வமும் அவனிடம் நிரம்பி இருந்தது.

“ஹே.. கம்மல்.. என்ன இங்க வந்து இருக்க…”

என்று திகைப்பை மறைத்து ஆச்சரியம் போல் வினவிய ஆதவனை முறைத்தவள்,

“நடிக்காத.. என்னை பார்த்ததும் தானே   வேகமா உள்ள வந்த..? என்ன இந்த கடைக்கு வந்திட்டால் நான் வர மாட்டேன்னு நினைச்சுட்டீயா..”

என்று உண்மையை உடைத்து கேட்க,

“என்ன சொல்ற.. எனக்கு புரியல.. நான் ஏன்மா அப்படி பண்ண போறேன்..”

என்றான் அப்போதும் புரியாதது போல்..!!

“நடிக்காத ஆதி.. எனக்கு செம்ம கோபம் வருது…!! வேண்டும்னு நீ என்னை தவிர்க்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீயா..?”

என்றவள் தீனாவை ஓர் பார்வை பார்த்துவிட்டு மென்குரலில்,

“ஏன் ஆதி இப்படி பண்ணின.. உனக்கு தெரியாதது எதுவும் இல்ல.. இத்தனை பிரச்சனை நடக்கும்ன்னு புரிஞ்சும் தாத்தாவை இப்படி ஏத்தி விடலாமா..??”

என்று வினவ அவனும் தன் கண்ணாமூச்சு ஆட்டத்தை விடுத்து,

“தாத்தாகிட்ட நான் சொல்லல கமல்.. அவரா ஏதோ நினைச்சுட்டு பண்ணிட்டு இருக்கார்..” என்று சொல்ல,

‘ இதை நான் நம்பணுமா..’ என்பது போல் பார்த்தவள்,

“நீ அன்னைக்கு சொன்னதை விளையாட்டா எடுத்துக்காம அப்பவே நான் சுதாரிச்சு இருக்கனும்..!! தாத்தா நான் அந்த மாதிரி எந்த நினைப்பும் இல்லாமல் தான் அன்னைக்கு கிளம்பினேன்னு சொன்னாங்க.. அப்போ அந்த யோசனை வர வைச்சது

நீயா தான் இருக்கும்.. என்கிட்ட சொன்ன மாதிரியே தாத்தாகிட்டேயும் சொல்லி இருப்ப.. இப்ப சமாளிக்கிற..”

என்று குற்றம் சாட்டினாள்.

“உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது… இங்க பார் கம்மல் இப்ப நீ டென்ஷன் ஆக வேண்டிய அவசியமே இல்லை.. ஏன்னா..”

என அவன் தீனா சற்று முன் கூறியதை சொல்ல முற்பட அதனை மறித்து,

“அவன் மேல ஏன் பாயுற.. இதோ பார்.. அவனுக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது..”

என்று தினகரன் இடைபுக இருவர் பார்வையும் அவனிடம் திரும்பியது. தீனாவின் இயல்பான தொனி அவளுக்கு திமிராக தெரிய,

“ஹலோ மிஸ்டர்.. அவன் என்ன சொன்னான்.. எங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு எதுவும் உனக்கு தெரியாது.. தெரிஞ்சா மாதிரி வந்து கருத்து சொல்ல வேண்டாம்..” என முகத்தில் அடித்தாற்போல் பதில் கொடுத்தாள். இதுவே இவர்களுக்குள் நடக்கும் முதல் உரையாடல் என இருவருமே உணரவில்லை.

அவளின் எடுத்தெறிந்த பேச்சில்,

“ஏய்.. என்ன.. மரியாதை கொடுத்து எல்லாம் பேச தெரியாதா..?? ஆதியையும் அவன் இவன் ங்கிற… உன் வயசு என்ன.. எங்க வயசு என்ன..”

என்று தீனாவும் எகிறினான்.

ஆதவன் ‘இதென்னடா.. புதுசா..’ என்று பதறி இருவரையும் தடுக்க முனைந்து,

“நான் பேசிப்பேன் தீனா.. நீ அமைதியா இரு..” என்றான். அதற்குள் அவள்,

“நீங்க தலையிடாம இருந்திருந்தா உங்களை பேசவும் உங்ககிட்ட பேசவும் எனக்கென்ன அவசியம்..!! என் அண்ணனை எப்படியும் நான் கூப்பிடுவேன்.. அது உங்களுக்கு தேவை இல்லாதது..”

என பன்மை அழைப்பு தானாக வந்தாலும் அசராமல் பதில் கொடுத்தாள்.

“நான் ஏன் அமைதியா இருக்கனும்.. நீங்க பேசுற விஷயத்தில் நானும் தானே சம்பந்தப்பட்டு இருக்கேன்..  தாத்தா என்ன கொலை குத்தமா பண்ணிட்டார்.. நடந்திடவே கூடாதுன்னு நீ இவ்வளவு பதறி துடிக்கிற அளவு என் மேல என்ன பயம்..?? என்னை பார்த்தா உனக்கு உங்க அப்பாவுக்கு எல்லாம் எப்படி தெரியுது..”

என எழுந்து முழங்கையில் சட்டையை மடித்து விட்டுக்கொண்டு கடுமையாய் கேட்க அவனின் தோரணைக்கு எதிர்பதமாய் முகத்தில் உரிமையான சீண்டலே இருந்தது.

அவை ஆதவனுக்கு புரியவில்லை.

‘இவ்வளவு எல்லாம் பேச மாட்டானே.. ஒருவேளை சித்தப்பா கிட்ட உள்ள கோபத்தை கமலி கிட்ட காட்டுறானா..?’

என குழம்பியவன்,

‘எதுவா இருந்தாலும் இதற்கு மேல் இவர்கள் வாக்குவாதத்தை வளரவிட கூடாது..’ என நினைத்தான். ஆனால் இவன் தடுக்க அவசியமே இல்லாதது போல் அவனின் சீண்டலை சடுதியில் புரிந்துக் கொண்ட கமலினி பதிலுக்கு பதில் வார்த்தையாடுவது அனாவசியம் என்று உணர்ந்து,

“அவர் கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது ஆதி..”

என்று சட்டென்று பேச்சை முடித்துக் கொண்டாள்.

தான் பேச்சை வளர்க்க வேண்டியே வம்பிழுக்கிறோம் என அவள் புரிந்து சுதாரித்து விலகியதை உணர்ந்த தீனாவின் மைண்ட் வாய்ஸ் ‘ விவரம் தான்..’ என்று கமெண்ட் அடிக்க அவனும் மேற்கொண்டு பேச விளையவில்லை.

இடையில் சிக்கிய ஆதவன் தான்,

“நீ கொஞ்சம் சும்மா இரு தீனா..” என்று  சொல்ல தோளை குலுக்கி அமைதியாகிவிடவும் மீண்டும் கமலியிடம் திரும்பி,

“நான் சொல்றதை  நம்பாமல் நீ இப்படி சண்டைக்கு நிப்பன்னு தான் உன்னை அவாய்ட் பண்ணேன்.. நான் பேசினது தற்செயலா வாயில் வந்தது.

சத்தியம் வேணும்னாலும் பண்றேன்.. நான் தினகரனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணினா நல்லா இருக்கும் என்ற மாதிரி எல்லாம்  அவர்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல.. அவரா மனசுல ஏதோ வைச்சுட்டு இப்படி விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்கார்.. நானும் உனக்கு ஆதரவா தான் பேசினேன்.. என்னை நம்பு..”

என்று சொல்ல தீனாவின் புதிய பரிமாணத்தில் குழம்பி இருந்தவள் மேலே பேச தோன்றாமல் சரியென்னும் விதமாய் தலையசைத்தாள்.

‘என்ன உடனே ரெண்டு பேரும் கேட்டுட்டாய்ங்க.. நம்ம பேச்சுக்கு அவ்வளவு மதிப்பா..”.

என்று வியந்த ஆதவன் அதே தோரணையில்,

“சரி.. சரி.. நல்ல நேரத்தோட நீ கிளம்பு.. சித்தப்பா உன்னை இங்க வைச்சு பார்த்தால் அவ்வளவு தான்… அது வேற தலைவலி..”

என்று சொல்ல அவளும் பதிலின்றி கதவை நோக்கி நகர்ந்தவள் சட்டென்று  நின்று தீனாவை பார்த்து,

“எனக்கு எந்த பயமும் கிடையாது… தாத்தா சொல்றார்ன்னு எல்லாத்திற்கும் தலையாட்டிட மாட்டேன் நான்.. எனக்கு பிடிக்கணும்.. என் வாழ்க்கையில் நான் நினைச்சால் தான் எதுவும் சாத்தியம்..”

என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்.

பெருமூச்சோடு, “நானும் கிளம்புறேன் தீனா..” என ஆதவனும் போய்விட மழையடித்து ஓய்ந்தது போல் இருந்த சூழலில் அசையாமல் சிலையாய் அமர்ந்திருந்த தினகரன் உதடுகள் கொஞ்ச கொஞ்சமாய் புன்னகையில் விரிய தலை கோதி பின்னால் சாய்ந்தவன் மனம்,

“உன் ஆயுசுக்கும் இந்த பொண்ணு கிட்ட இருந்து நீ மீள வழியே இல்ல தீனா..” என்ற நிதர்சனத்தில் மத்தாப்பாய் பூத்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!