Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 2 1

அத்தியாயம் 2 

பிரிவு கூட நம்மிடம் இருந்து

விடை பெற்றுச் செல்லும் நம்

காதலின் வீரியம் கண்டு!!!



Advertisement

அந்த பக்கம் சரவணன் போனை எடுத்ததும் தங்களுக்கு யமுனாவை பிடித்திருக்கிறது என்று சொன்ன ரகு எப்போது பெண் பார்க்க வருவது என்று கேட்டார்.

Advertisement

அவர் சொன்னதைக் கேட்டு சரவணன் மகிழ்ந்து தான் போனார். தன்னுடைய மகளுக்கு திருமணம் கூடி வந்தால் எந்த தந்தைக்கு தான் சந்தோஷம் வராது? அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றே அவர்களை பெண் பார்க்க வரச் சொல்லி விட்டு போனை வைத்தார் சரவணன்.

Advertisement

வீட்டுக்கு வந்ததும் சரவணன் அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல “அதுக்குள்ள கல்யாணாமாப்பா? கொஞ்ச நாள் போகட்டுமே?”, என்று தயக்கத்துடன் சொன்னாள் யமுனா.

Advertisement

“இது தான் சரியான வயசு யமுனா மா. பையனைப் பத்தி தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சேன். நல்ல மாதிரி தான் சொல்றாங்க. நாளைக்கு அவங்க வரட்டும். குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் எப்படி என்ன மாதிரின்னு பாத்துட்டு மேற்கொண்டு பேசுவோம். மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம். சரியா?”, என்று அன்பாக சரவணன் சொல்ல அவளும் “சரிப்பா, உங்க இஷ்டம்”, என்று சொல்லி புன்னகைத்தாள். அவள் புன்னகை மற்ற அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.

அரசி உற்சாகமாக மாப்பிள்ளையின் குடும்பத்தை பற்றி விசாரிக்க அவளுடைய மகள் ஜானகியோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தாள். அவளுடைய அமைதி கொஞ்சம் தாமதமாக தான் சரவணனுக்கு உரைத்தது.

“என்ன இந்த குட்டிக் கழுதை திருவாயை மூடிட்டு இருக்கு சரி இல்லையே?”, என்று எண்ணியவர் “நீ என்ன அமைதியா இருக்க குட்டிமா?”, என்று கேட்டார்.

“ஒரு சந்தேகம் பா. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்று தீவிரமாக சொன்னாள் ஜானகி.

“உனக்கு சந்தேகமா? என்ன டா?”

“அது வந்துப்பா. அக்காக்கு மாதிரியே எனக்கும் சலுகை கொடுப்பீங்களாப்பா?”.

“எப்படி? அவளுக்கு என்ன சலுகை கொடுத்தேன்?”

“நானே மாப்பிள்ளை செலக்ட் பண்ணுறதுக்கு தான்”

“அதுக்கு வாய்ப்பே இல்லை. நான் யாரை கை காட்டுறேனா அவனை தான் நீ கல்யாணம் பண்ணனும்”

“ஏன்ப்பா?”, என்று போர்க் கோடி தூக்கியவளைக் கண்டு முறைத்துப் பார்த்தவர் “நீயே ஒரு தறுதலை. நீ செலக்ட் பண்ணுறவனும் கண்டிப்பா தருதலையா தானே இருப்பான்? அப்புறம் எப்படி நான் சரின்னு சொல்ல முடியும்?”, என்று அவர் சொன்னதும் கடுப்புடன் எழுந்தவள் அவர் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டே அங்கிருந்து சென்றாள்.

“ஆ”, என்ற படி தலையைப் பிடித்தவரைப் பார்த்த அரசி “இது உங்களுக்கு தேவையா? அவ அமைதியா தானே இருந்தா? எதுக்கு அவ கிட்ட வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க?”, என்று புன்னகையுடன் கேட்டாள். அப்பா அம்மாவுக்கு தனிமை கொடுத்து விட்டு தங்கையைத் தேடிச் சென்றாள் யமுனா.

“மகளை அடிக்க விட்டு வேடிக்கை பாக்குறியா டி?”, என்று முறைப்புடன் கேட்டார் சரவணன்.

“ஆமா ஆமா நான் தான் அடிக்கச் சொன்னேன். நான் எதுக்கு ஆள் வச்சு அடிக்கணுமாம்? என் மாமாவை நானே அடிக்க மாட்டேனாக்கும்?”, என்று சரசத்துடன் சொல்ல சரவணனின் பார்வையே மாறிப் போனது. அவர் பார்வையைக் கண்டு அரசி முகத்தில் அந்த வயசிலும் வெட்கம் மிளிர்ந்தது.

தங்கையின்  அறைக்கு யமுனா வரும் போது அவளோ அவளுடைய பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் களைத்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏய் கோச்சிக்கிட்டு வந்தியே, என்ன செய்றன்னு பாக்க வந்தா நீ என்ன ரூமையே தலை கீழா மாத்தி வச்சிருக்க?”

“உனக்கு கல்யாணம் வரப் போகுதுள்ள?”, என்று கேட்டாள் சின்னவள்.

“அதுக்கு நீ ஏன் டி ரூமை அலங்கோலம் ஆக்கி வச்சிருக்க?”

“உன் கல்யாணத்துக்கு எனக்கு புது டிரஸ் எடுக்கணும்ல?”

“ஆமா”

“அதான், எந்த கலர்ல எனக்கு டிரஸ் இல்லன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்?”, என்று சொன்ன தங்கையின் தலையில் பாசமாக கொட்டிய படி சிரித்தாள் யமுனா.

“உன் செல்ல அப்பாவைக் கொட்டினதுக்கு என்னை பழி வாங்கிட்ட தானே?”, என்று போலியாக அக்காவை முறைத்தாள் ஜானகி.

“ஏன் எனக்கு மட்டும் தான் செல்ல அப்பாவாக்கும்? உனக்கு அப்பாவை பிடிக்காதோ?”

“யார் சொன்னா? அவர் தான் என் முதல் ஹீரோ. அவரை மாதிரி தான் எனக்கு ஹஸ்பண்ட் வேணும் பா”

“அப்புறம் எதுக்கு டி அவர் கிட்ட வம்பிழுக்க?”

“இங்க இருக்குற வரைக்கு தானே அப்பா கிட்ட வம்பிழுக்க முடியும்?”

“ஜானகி….”

“நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒரு ஆள் ஆம்பளைப் பையனா பிறந்திருக்கலாம்க்கா. நம்ம ரெண்டு பேருமே வேற வீட்டுக்கு போயிட்டா அம்மா அப்பா பாவம்ல?”, என்று சொன்னதைக் கேட்டு யமுனாவுக்கும் கலக்கமாக இருந்தது.

பின் தன்னைத் தேற்றிக் கொண்டவள் “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? நான் எப்படியும் இதே ஊர்ல தான் இருக்க போறேன். அடிக்கடி வந்து அவங்களை பாத்துக்குறேன். நீ கல்யாணமே பண்ணாம அம்மா அப்பா கூடவே இரு”, என்று சொல்லி தங்கையை சீண்டினாள்.

“ஏது? நீ மட்டும் வரப் போற மச்சான் கூட ஜாலியா இருப்ப? நான் மட்டும் முதிர் கன்னியா சாகனுமா? என்ன ஒரு நல்ல எண்ணம் உனக்கு? நீயல்லவா பாசமான அக்கா?”, என்று சொல்லி முறைத்தாள்.

“சும்மா சொன்னேன் டி. ஆமா அது என்ன மச்சான்? அழகா அத்தான் இல்லைன்னா மாமான்னு கூப்பிடலாம்ல?”

“சே சே, அக்கா வீட்டுக்காரர்னா ஸ்பெஷல். அந்த மச்சான்ல தான் ஒரு கிக் இருக்கும்”

“கிக்கா? அடியே, அது என் வீட்டுக்கார் டி? எனக்கு கிக் வந்தா போதும்”

“பொறாமை? பாரு டா. இன்னும் பாக்காத ஆளுக்காக இவ்வளவு உருகுற? நாளைக்கு வரப் போற மச்சான் கிட்ட உன்னோட வீக்னசை எல்லாம் சொல்லி ஓட வைக்கிறேன்”

“ஐயையோ ஏன் டி இந்த கொலை வெறி?”, என்று அவசரமாக கேட்க “யாரோ ஒரு ஆள் கல்யாணம் இப்பவேவான்னு கேட்டாங்க. இப்ப என்ன டான்னா இப்படி அவசரப் படுறாங்க?”, என்று கேலியில் இறங்கினாள். அப்படியே அவர்களுக்குள் உரையாடல் தொடர்ந்தது.

அடுத்த நாள் காலையிலே இரு வீட்டிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கிரி வீட்டில் “பொண்ணு பாக்குற பங்ஷன் தானே? அதனால நான் வரலை. எனக்கு அண்ணி ஓகே தான். நேர்ல வந்து தான் என்னோட சம்மதத்தை சொல்லணும்னு அவசியம் இல்லை”, என்று சொல்லி கழண்டு கொண்டான் ஸ்ரீராம்.

“உன் கிட்ட யாரும் சம்மதம் கேக்கலை. நீ வராம இருக்குறதே கோடி புண்ணியம்”, என்று அவனுக்கே பல்ப் கொடுத்தார் ரகு.

இங்கே யமுனா வீட்டிலோ “இது அக்கா வாழ்க்கை ஜானகி, ஏதாவது அதிக பிரசங்கித் தனமா செஞ்சு வைக்காத. அடக்க ஒடுக்கமா சுடிதார் எடுத்து போட்டுட்டு பொண்ணா லட்சணமா இரு”, என்று அட்வைஸ் என்ற பெயரில் ஜானகியை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள் சரவணனும் அரசியும்.

“இப்படியே பேசிட்டு இருந்தா நான் எங்கயாவது கிளம்பி போய்ருவேன், பாத்துக்கோங்க. காலைல இருந்து இதையே சொல்லி எனக்கு காது சவ்வு பிஞ்சிருச்சு”, என்று அவள் கத்தின பிறகு தான் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

கோபமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்த ஜானகியை அழைத்த யமுனா தங்கையின் மனதை மாற்ற எண்ணி தனக்கு அலங்காரம் செய்ய உதவி செய்ய சொல்ல அதன் பின் ஜானகி கவனம் முழுவதும் அக்காவை அலங்கரிப்பதிலே சென்றது. அதில் பெற்றவர்களும் நிம்மதியாக வீட்டை அலங்கரிப்பதில் இறங்கினார்கள்.

சொன்ன நேரத்துக்குள் கிரி குடும்பம் அங்கே வந்தது. அவர்களை வாசலுக்கு சென்று வரவேற்றார்கள் அரசியும் சரவணனும்.

வீட்டைக் கண்டும், அவர்களின் மரியாதையைக் கண்டும் அம்பிகாவுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. கிரி வெட்கப்பட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்தான். அனைவரையும் வரவேற்று அமர வைத்து உபசரிப்பு எல்லாம் செய்தார்கள் சரவணனும் அரசியும்.

சரவணனுக்கும் அரசிக்கும் கிரியை பார்த்து திருப்தி வந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக ஒரு நண்பரைப் போல பேசிய ரகுவை சரவணனுக்கும் பிடித்திருந்தது.

“நம்மளே பேசிட்டு இருந்தா எப்படி? பொண்ணை அழைச்சிட்டு வாங்க”, என்று சொன்னாள் ஜெயா.

“ஜானகி அக்காவை அழைச்சிட்டு வா”, என்று அரசி குரல் கொடுத்ததும் யமுனாவை அழைத்து வந்தாள் ஜானகி.

அழகும், அடக்கமும் ஒருங்கே கொண்டு தலை குனிந்து வந்தவளைக் கண்டதும் அனைவருக்கும் பிடித்து விட்டது. கிரிக்கோ அவன் மனைவி எப்படி இருக்கணும் என்று செய்து வைத்திருந்த கற்பனை உருவத்துக்கு உயிர் கொடுத்தது போல வந்தவளைக் கண்டு மிகவும் பிடித்து விட்டது.

“மாப்பிள்ளையை நீயும் பாரு மா”, என்று ரகு சொன்னதும் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த யமுனா கிரி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கவும் நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள். தன்னைக் கண்டு முகம் சிவந்த அவளை கிரிக்கு இன்னும் அதிகமாக பிடித்தது.

அப்போது “இது தான் உங்க ரெண்டாவது பொண்ணா? பேர் என்ன?”, என்று கேட்டாள் அம்பிகா.

“ஆமாம்மா. பேர் ஜானகி. பி. ஈ முடிச்சிருக்கா”, என்று அரசி சொன்னதும் ஜானகியைப் பார்த்தாள் அம்பிகா.

அந்த பாட்டி தன்னையே பார்க்கவும் லேசாக சிரித்து வைத்தாள் ஜானகி. ஆனால் அம்பிகாவோ அவளைப் பார்த்து சிரிக்காமல் ஏதோ ஆராய்ச்சியாக பார்க்கவும் “என்ன இந்த கிழவி இப்படி சிரிக்காம நமக்கே பல்ப் கொடுத்துருச்சு?”, என்று எண்ணியவள் “என்ன?’, என்னும் விதமாய் புருவத்தை ஏற்றி கண்களால் வினவினாள். அவள் செய்கையில் திகைத்துப் போன அம்பிகா அவளைக் கண்டு புன்னகைத்தாள். பதிலுக்கு சிரிக்காமல் அவருக்கு பல்ப் கொடுத்தாள் ஜானகி.

இருவருக்கும் நடந்த இந்த பார்வை பரிமாற்றத்தை மற்றவர்கள் கவனிக்காமல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கிரி உனக்கு ஓகே வா டா?”, என்று கேட்டார் ரகு.

“எனக்கு பிடிச்சிருக்குப்பா”, என்று அவன் சொன்னதும் “நீங்க என்ன சொல்றீங்க?”, என்று சரவணனிடம் கேட்டார் ரகு.

“எங்களுக்கும் பிடிச்சிருக்கு. அம்மாடி யமுனா உனக்கு ஓகே வா மா?”, என்று சரவணன் கேட்டதும் அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

“ரெண்டு பேரும் தனியா பேசணும்னா பேசுங்க. கிரி பேச போறியா டா?”, என்று ரகு கேட்க “எனக்கு அவசியம் இல்லைப்பா. எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்? எனக்கு முழு சம்மதம்”, என்று அவனுடைய விருப்பத்தை அவசரமாக சொல்லி விட்டு அசடு வழிய அவன் அவசரத்தில் அனைவரும் சிரித்தார்கள். யமுனாவின் உதடுகளும் புன்னகையால் மலர்ந்தது.

அதன் பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து கிரி மற்றும் யமுனாவுக்கு நிச்சயதார்த்தம் என்றும் அது முடிந்து ஒரு மாதம் கழித்து திருமணம் என்றும் இரு வீட்டினராலும் பேசி முடிக்கப் பட்டது. அவர்கள் கிளம்பிச் சென்றதும் அனைவரும் யமுனாவிடம் மீண்டும் மீண்டும் மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று கேட்டு உறுதி படுத்திக் கொண்டார்கள்.

கிரியை எண்ணி யமுனா கனவில் திளைக்க இது வரை இல்லாத அக்காவின் இந்த புது வெக்கம் பிடித்துப் போய் அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாள் ஜானகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!