Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 2 2

ஒரு வழியாக நிச்சாதார்த்த நாளும் வந்தது. நிச்சயதார்த்தம் அன்று ஜெயா பரபரப்பாக தாம்பூலத்தை தயார் செய்து கொண்டிருந்தாள்.

“எல்லாம் எடுத்து வச்சிட்டியா ஜெயா? ஒண்ணும் குறைஞ்சிரலையே?”, என்று கேட்டாள் அம்பிகா.



Advertisement

“எல்லாமே இருக்கு அத்தை. பொண்ணுக்கு வாங்கினதை எல்லாமே எடுத்து வச்சிட்டேன். பூ பழமும் தனியா எடுத்து வச்சிட்டேன். கார்ல வைக்கிறது தான் பாக்கி”

Advertisement

“சரி நான் இதைக் கொண்டு போய் கார்ல வைக்கிறேன். நீ உன்னோட ரெண்டு மகன்களும் கிளம்பிட்டாங்களான்னு பாரு. இல்லைன்னா என் மகன் தையதக்கான்னு குதிப்பான்”

Advertisement

“சரிங்க அத்தை”, என்று சொன்ன ஜெயா கிரியின் அறைக்கு சென்றாள். அங்கே கிரி கிளம்பி முடித்து தலைவாரிக் கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த கட்டிலில் ஒரு ஆப்பிளைக் கடித்த படி கிளம்பி அமர்ந்திருந்தான் ஸ்ரீராம்.

Advertisement

“ஸ்ரீகுட்டி கிளம்பிட்டியா டா?”, என்று கேட்டாள் ஜெயா.

“பின்ன கிளம்பாம? நடக்க போறது என்னோட அண்ணனோட நிச்சயம் ஆச்சே? பொண்ணு பாக்க போற அன்னைக்கு தான் என்னை விட்டுட்டு போய்ட்டீங்க? இதுக்கும் என்னை விட்டுட்டு போய்ட்டீங்கன்னா அதான் முதல் ஆளா கிளம்பி மாப்பிள்ளை கூடவே இருக்கேன்”, என்றான் ஸ்ரீராம்.

“நாங்களா உன்னை விட்டுட்டு போனோம்? நீ தான் வரலை. சரி சரி உங்க அப்பா கத்த ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் வாங்க”, என்று அழைத்துச் சென்றாள் ஜெயா.

அதன் பின் அனைவரும் காரில் ஏறியதும் கார் கிளம்பிச் சென்றது. போகும் போது “இங்க பாரு சின்னவனே, உன்னோட குசும்பு சேட்டையை எல்லாம் அங்க வந்து காமிச்சிட்டு இருக்காத. நீ வராததுனால பொண்ணு பாக்குற பங்ஷன் நல்ல படியா நடந்துச்சு. ஆனா இப்ப என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு. அப்புறம் யமுனாவுக்கு ஒரு தங்கை இருக்கு. மத்த பொண்ணுங்க கிட்ட கடலை போடுற மாதிரி அங்க வந்து ஏதாவது செஞ்சு உன் அண்ணன் வாழ்க்கையை கெடுத்துறாத”, என்று சொன்னார் ரகு.

அவர் சொன்னதைக் கேட்டு ஸ்ரீராம் அமைதியாக எதையோ யோசித்த படியே வந்தான்.

“என்ன டா அமைதியா வர? திருந்திட்டியா?’, என்று கேட்டான் கிரி.

“இல்லை, இவ்வளவு நேரம் இப்படி எல்லாம் யோசிக்கலை. இப்ப அப்பா சொன்ன அப்புறம் தான் ஒரு விஷயம் தோணுதுண்ணா”

“என்னது டா?”

“அண்ணியோட தங்கச்சி பேர் என்ன? ரொம்ப அழகா இருப்பாளா?”, என்று ஸ்ரீராம் கேட்க ரகு அதிர்ந்து போனார்.

“என் பிள்ளை நல்ல பிள்ளையா தான் இருக்கான். நீங்க தான் அவனைக் கெடுக்குறீங்க?”, என்று சொல்லி ரகுவை முறைத்தாள் ஜெயா.

அதே நேரம் வீட்டையே ரெண்டு பண்ணிக் கொண்டிருந்தாள் ஜானகி.

“உன்னையா பொண்ணு பாக்க வராங்க? உன் அக்காவைத் தான் பாக்க வராங்க. ஆனா உன் அராத்து தாங்கலை. தயவு செஞ்சு இன்னைக்காவது அடக்க ஒடுக்கமா பொண்ணு மாதிரி இரு”, என்று மகளிடம் கத்திக் கொண்டிருந்தார் சரவணன்.

“அப்பா, இன்னைக்காவது உங்களுக்குள்ள திரிஞ்சிக்கிட்டு இருக்குற அந்த ஹிட்லரை தட்டி தடவி தூங்க வைக்க கூடாதா? கடுப்பா இருக்குப்பா. உன்னோட இஞ்சி திங்குற மாதிரி இருக்குற முகத்தை பாத்து எங்க அக்காவை பிடிச்சிருக்குன்னு சொன்ன கிரி மச்சான் இப்ப யோசிக்க போறார்”, என்றாள் யமுனா.

“பாப்பா அபச குணமா பேசாத. ஒழுங்கா போய் அக்காவை ரெடி பண்ணு போ”, என்று அரசி குரல் கொடுக்க “இந்த அப்பா தான் மா வம்பிழுக்கார்”, என்று சொல்லி அவரை முறைத்த படியே சென்ற ஜானகி யமுனாவை அழகாக அலங்கரித்தாள்.

“அன்னைக்கு நான் பண்ணின சாதாரண அலங்காரத்திலே மச்சான் உன் கிட்ட மயங்கி உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆனா இன்னைக்கு உன் அழகுல மயங்கி இன்னைக்கே உன்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக பாரு”, என்று அக்காவிடம் சொல்ல “பயமா இருக்கு டி”, என்று சொன்னாள் யமுனா.

“அன்னைக்கு வந்தவங்க தானே இன்னைக்கும் வருவாங்க. அதுவும், மச்சான் செம. உன்னையே வச்ச கண் எடுக்காம பாக்குறார். நீ லக்கிக்கா. ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம்”, என்று சொல்லி சிரித்தாள்.

அவர்கள் வந்ததும் அதன் பின் அங்கே ஸ்ரீராமுக்கு ஒரு அறிமுகப் படலம் ஓட யமுனாவை அழைத்து வரச் சொன்னாள் அம்பிகா.

ஜானகி தான் யமுனாவை அழைத்து வந்து அங்கே அமர வைத்தாள். நிச்சயதார்த்தம் என்பதால் இரண்டு வீட்டினர் பக்கமும் இருந்து வந்த உறவினர்களால் அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் படபடப்பாக அமர்ந்திருந்தாள் யமுனா.

ஜானகியைப் பார்த்த ஸ்ரீராம் “இவ தான் அண்ணியோட தங்கையா? சும்மா தீயா இருக்கா”, என்று எண்ணிக் கொண்டான். ஆனால் ஜானகி அவனை பார்த்து அதிர்ந்து போனாள். அதுவும் அவன் கிரியின் தம்பி என்றதும் அவள் மூளை யோசனையில் சூடாகியது.

ஏனெனில் அவனை அவள் இரு முறை பார்த்திருக்கிறாள். எப்போது என்று அவள் மூளை யோசித்தது. ஒரு முறை தன்னுடைய தோழிகளுடன் அவள் படம் பார்க்க சென்றிருந்த போது அவளுக்கு பின் வரிசையில் தான் அவன் அமர்ந்திருந்தான்.

ஏதோ சத்தம் கேட்டு அவள் திரும்பி பார்க்க அவனுடன் அமர்ந்திருந்த ஒரு பெண் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அந்த காட்சியைக் கண்ட ஜானகி படக்கென்று திரும்பிக் கொண்டாள்.

“சீ என்ன மேனர்ஸ் இல்லாம இப்படி பப்ளிக் பிளேஸ்ல நடந்துக்குறாங்க?”, என்று அவள் தன்னுடைய தோழியிடம் புலம்ப “நீ வேற, தியேட்டர்ல லைட் ஆப் பண்ணின உடனே என்னல்லாமோ நடக்கும். இது ஒரு முத்தம் தானே? இனி என்ன எல்லாம் நடக்குமோ? நீ அப்ப அப்ப திரும்பி பாரு. அப்ப தெரியும்”, என்றாள் அவள்.

“சீ, இங்க வந்து உக்காந்ததே தப்பு. எனக்கு படம் பாக்குற மூடே இல்லை”, என்று சொல்லி விட்டு கண்களை மூடித் தூங்கி விட்டாள். அவன் முகம் மட்டும் அவளுக்கு அப்படியே நினைவு இருந்தது.

இன்னொரு நாள் வேறு ஒரு பொண்ணுடன் அவனை பார்த்திருக்கிறாள்.

பல பெண்களுடன் சுற்றுபவன் என்று அவனைப் பற்றி எண்ணிக் கொண்டாள் ஜானகி. இப்போது அவனை கிரியின் தம்பியாக பார்க்கவும் “சரியான பொறுக்கி இவன். இவனா மச்சானோட தம்பி?”, என்று எண்ணி பல்லைக் கடித்த ஜானகி அதன் பின் அவன் புறம் திரும்பவே இல்லை. ஆனால் அவள் மனது மட்டும் தம்பியை மாறி அண்ணனும் இருப்பானோ என்று சஞ்சலம் கொண்டது. கிரியைப் பார்த்தாள். கிரியோ முழுக் காதலையும் கண்ணில் தேக்கி யமுனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் கொஞ்சம் சமாதானம் ஆனாலும் கிரியைப் பற்றி நன்கு விசாரித்தாரா என்று அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பின் மற்ற சொந்தங்களும் அங்கே வந்து முடிக்க கூடத்தில் போடப் பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் கிரியையும் யமுனாவையும் அமர வைத்தார்கள்.

தன்னை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவிப்புடன் இருந்த யமுனாவின் வெட்கத்தை ரசித்தன கிரியின் கண்கள். அவனுக்கு இவள் தான் தனக்கு பொருத்தமான மனைவி என்ற எண்ணம் தான் வந்ததில் இருந்து அவன் மனதில் அவள் மீதான காதல் ததும்பியது.

மணமக்கள் அமர்ந்ததும் அவர்களுக்கு மற்றவர்களால் நலங்கு வைக்கப் பட்டது. அதன் பின் இரண்டு மோதிரம் மணமக்கள் கையில் கொடுத்து மாற்றிக்க சொல்லி சொல்லப் பட்டது.

யமுனாவின் நடுங்கும் கரங்களைப் பற்றி மோதிரம் அணிவித்தான் கிரி. அதே போல படபடப்புடன் அவன் கரத்தில் மோதிரம், போட்டாள் யமுனா. அதுவும் அவளுடைய கையை ஒரு வினாடி அவன் இறுக பற்றி விடுவிக்க அவன் தொடுகையில் அவளுக்கு மூச்சடைக்கும் உணர்வு தான் வந்தது. நாணத்தில் அவள் உதடு கடிக்க அவன் அவளுடைய உணர்வுகளை ரசித்துப் பார்த்தான்.

அதன் பின் உணவு உண்டு விட்டு ஸ்ரீராம் குடும்பம் கிளம்பிச் சென்றது.

அவர்கள் சென்ற பின்னர் ஜானகி எதுவோ யோசனையிலே இருந்தாள். அவளின் அமைதி அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் திகைப்பைத் தான் கொடுத்தது.

“என்ன ஆச்சு இந்த சின்னக் கழுதைக்கு? இந்நேரம் ஒரு ரகளையே நடத்துவான்னு பாத்தா அமைதியா ரூமுக்கு போயிட்டா?”, என்று கேட்டார் சரவணன்.

“அவ வாயடிச்சாலும் திட்டுறீங்க? அமைதியா இருந்தாலும் தேடுறீங்க? இன்னைக்கு காலைல சீக்கிரம் எழுந்துட்டாள்ள? அதான் படுத்திருப்பா. சரி வாங்க, வீடு குப்பை மாதிரி இருக்கு,. நம்ம ரெண்டு பேரும் ஒதுங்க வைக்கலாம்”, என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றாள் அரசி.

எவ்வளவு யோசித்தும் ஜானகியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கிரி நல்லவனா இருப்பானா என்ற கவலை அவளை அரித்தது.

அந்த ஸ்ரீராம் ஒரு முறை ஒரு பெண்ணுடன் சுற்றி இருந்தால் அது அவனது லவ்வர் என்று எண்ணி அதை விட்டிருப்பாள். ஆனால் அவள் அவனைப் பார்த்த இரண்டு முறையும் இரண்டு பெண்களுடன் இருந்ததை தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

அவனைப் போல கிரியும் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி தான் அவளை அரித்தது. அவளைப் பொறுத்தவரை யமுனா தேவதை. அவளை உயர்ந்த குணம் கொண்ட ஒருவனுக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அக்கா கிட்ட முதல்ல பேசணும் என்று எண்ணி யமுனாவின் அறைக்குச் சென்றாள் ஜானகி. அங்கே கதவு திறந்து கிடப்பதைக் கூட அறியாமல் கிரி போட்ட மோதிரத்தை புன்னகையுடன் தடவிப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் யமுனா.

மெய் மறந்து அமர்ந்திருந்த தன்னுடைய அக்காவை ஜானகி வியப்பாக பார்க்க அந்த மோதிரத்துக்கு முத்தம் கொடுத்தாள் யமுனா.

“மச்சான் இவ மனசுல ரொம்ப தீவிரமா பதிஞ்சிட்டார் போலயே? கண்டிப்பா இனி இவ மனசை மாத்திக்க மாட்டா”, என்று எண்ணி அவளைக் கலைக்காமல் வெளியே வந்தவள் தந்தையிடன் சென்று கிரியைப் பற்றி விசாரித்தீர்களா என்று கேட்டாள்.

அவரும் ஆம் என்று சொல்லவும் வெளியே வந்தவள் அங்கே சரவணனின் போன் இருக்க அதில் சம்பந்தி என்று பதிந்திருந்த நம்பரைக் மனதில் குறித்துக் கொண்டு அறைக்குள் வந்தாள்.

தன்னுடைய போனை எடுத்து ரகு வீட்டின் நம்பரை அழுத்தினாள். அவள் இப்போது செய்யப் போகும் காரியம் அவள் வாழ்க்கையே மாற்றப் போகிறது என்று அவள் உணரவே இல்லை.

அங்கே ரிங் போய்க் கொண்டிருக்க இங்கே இவளுக்கு இதயம் தடதடத்தது. “கடவுளே கிரி மச்சான் தான் போன் எடுக்கணும். வேற யார் எடுத்தாலும் வச்சிருவேன்”, என்று எண்ணிக் கொண்டே இருந்தாள்.

அவளின் கெட்ட நேரம் அவளுடைய அழைப்பை ஏற்றது ஸ்ரீராம் தான். “ஹலோ யாருங்க?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!