Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 3 1

அத்தியாயம் 3 

உன் மீதான அன்பை

சுமந்து கொண்டே

திரிகிறது என் இதயம்!!!



Advertisement

கிரி வீட்டுக்கு செல்லும் போது காரில் டிரைவர் அருகில் அம்பிகா அமர்ந்திருந்தாள். பின் பக்கம் கிரி, யமுனா, ஜானகி மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

Advertisement

ஸ்ரீராமின் வீட்டுக்கு செல்லவே ஜானகிக்கு பிடிக்க வில்லை. ஆனால் அவளுடைய உயிருக்கு உயிரான அக்காவை அவளுடைய புகுந்த வீட்டில் விடுவதற்கு அவள் போக வேண்டுமே. அதனால் தான் வேறு வழியில்லாமல் சென்றாள்.

Advertisement

கிரியும் யமுனாவும் கழுத்தில் இருந்த மாலையைக் கூட கழட்டாமல் கண்களில் காதலுடன் அமர்ந்திருக்க அங்கே பூஜை வேளை கரடியாக அமர்ந்திருப்பது ஜானகிக்கு தர்மசங்கடமாக இருந்தது.

Advertisement

“வீட்டுக்கு தானே போகப் போறோம்? எங்க கூடவே வா”, என்று அழைத்த தன்னுடைய அக்காவை நூறாவது முறையாக மனதுக்குள் திட்டித் தீர்த்தாள் ஜானகி.

மணமக்கள் பக்கமே திரும்ப கூடாது என்று எண்ணி தலையைத் திருப்பி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்து பார்த்து அவளுக்கு கழுத்து வலி வந்தது தான் மிச்சம்.

யமுனா தங்கையை தன்னுடன் அழைத்துக் கொண்டாலும் அவள் கவனம் எல்லாம் அருகில் அமர்ந்திருந்த கிரியின் மேலேயே இருந்தது.

இருவரின் கால்களும் உரசிக் கொண்டிருக்க தவிப்புடன் அமர்ந்திருந்த யமுனாவின் கையை பிடித்துக் கொண்டான் கிரி. அவள் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க அவள் கணவனோ கண்களால் காதல் கதை பேச ஆரம்பித்தான். அவன் பேசிய கதையில் யமுனாவுக்கு டிரைவரோ, அம்பிகாவோ, அருகில் அமர்ந்திருந்த ஜானகியோ யாருமே கருத்தில் பதிய வில்லை.

அங்கே அவர்கள் வேறு உலகில் பயணிக்க ஜானகிக்கோ மூச்சு முட்டிப் போகும் உணர்வு.

எப்போதடா அங்கிருந்து போவோம் என்று இருந்தது அவளுக்கு. கிரியின் வீட்டுக்கு சென்றதும் மணமக்களுக்கு ஆரற்றி சுற்றினாள் ஜெயா. மொத்த குடும்பமும் சந்தோசத்துடன் உள்ளே செல்ல வேண்டா வெறுப்பாக உள்ளே போக காலேடுத்து வைத்தாள் ஜானகி.

அப்போது “வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க மேடம்”, என்ற குரல் கேட்டு அவள் நிமிர்ந்து பார்க்க அங்கே குறும்பு புன்னகையுடன் நின்றிருந்தான் ஸ்ரீராம்.

அவனைக் கண்டதும் அவளது ரத்த அழுத்தம் அநியாயத்துக்கு எகிறியது. அவனை முறைத்துப் பார்த்தவள் “சாத்தான் இருக்குற வீட்டுக்கு எந்த காலை எடுத்து வச்சா என்ன? எல்லாம் ஒண்ணு தான்”, என்று வெடுக்கென்று சொன்னாள்.

அதில் முகம் கருத்துப் போனவன் “உன் அக்கா வலது காலை எடுத்து வச்சு தானே உள்ளே வந்தாங்க? அப்புறம் என்ன?”, என்று கேட்டான்.

“அக்காவைப் பொறுத்த வரைக்கும் இந்த வீடு கடவுள் மாதிரி இருக்குற கிரி மச்சான் வீடு. அதனால அவ வலது காலை எடுத்து வச்சு வாழ போனா. ஆனா எனக்கு இது நீ இருக்குற வீடாச்சே?”

“அப்ப என்னை சாத்தான்னு சொல்ற? அப்படித் தானே?”

“இதுல என்ன சந்தேகம்? உனக்கு ஸ்ரீராமன்னு பேர் வச்சதுக்கு பதிலா ஸ்ரீராவணன்னு பேர் வச்சிருக்கலாம். கல்யாண மேடைல  வச்சு பிரச்சனை வேண்டாம்னு தான் பொறுமையா இருந்தேன். இல்லைன்னா நீ பண்ணின காரியத்துக்கு….. இன்னொரு தடவை என் கிட்ட உன் பொறுக்கித் தனத்தை காட்டின நான் மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”, என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.

அவள் பேச்சைக் கேட்டு கோபத்தின் உச்சியில் நின்ற ஸ்ரீராம் அவள் எந்த காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் என்பதைக் கவனிக்க வில்லை.

“திருப்பி திருப்பி என்னை பொறுக்கின்னு சொல்ற ஜானகி. இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப. இந்த வீட்டுக்குள்ள உன்னை வலது காலை எடுத்து வச்சு வர வைப்பேன். நான் ராமனா இருந்தாலும் ராவணனா இருந்தாலும் உன்னை அடைஞ்சே தீருவேன் டி. அதுக்கப்புறம் என்னோட உண்மையான பொறுக்கித் தனத்தை நீ பாப்ப”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றான்.

தன்னுடைய தந்தை அருகில் அமைதியாக அமர்ந்திருந்தாள் ஜானகி. அவள் தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கவே இல்லை. அவளுக்கு பார்க்கவும் பிடிக்க வில்லை. அவளுக்கு எப்போதடா இங்கிருந்து செல்வோம் என்று தான் இருந்தது.

அமைதியாக அமர்ந்திருந்த ஜானகியைக் கண்டு சரவணன் மற்றும் அரசியே அதிர்ச்சியாகி விட்டார்கள். அவ்வளவு அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தாள். ஆனால் அவர்களுக்கு யார் சொல்வது, எங்கே தலையை நிமிர்ந்து பார்த்தால் ஸ்ரீராம் என்ற பொறுக்கி கண்ணில் பட்டு விடுவானோ என்று பயந்து தான் அமைதியாக இருந்தாள் என்று.

ஏனென்றால் அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாலும் ஸ்ரீராமின் பார்வை அவள் மேலேயே இருப்பதை அவளால் உணர முடிந்தது. இப்போது அவனைப் பார்த்தால் தன்னை அறியாமலே முகத்தில் கோபத்தை காட்டி விடுவோம் என்பதால் தான் அப்படி அமைதியாக அமர்ந்திருந்தாள். அது உண்மையும் கூட ஸ்ரீராம் என்ன தான் முயற்சி செய்தாலும் அவளை விட்டு அவனால் பார்வையை விலக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் பார்வை அவளை தான் தழுவியது.

அரக்கு வண்ணப் பட்டுப் புடவையில் தேவதை போல இருந்தவளை அவன் கண்கள் ரசனையுடன் அளவிட்டது. மணி இப்போது ஐந்து என்பதால் அவள் முகத்தில் சோர்வு இருந்தாலும் அது கூட அவள் அழகை அதிகப் படுத்தி தான் காட்டியது. அதனால் அவளையே நோட்டம் இட்டான். அதை உணர்ந்தவள் மனதுக்குள் பல்லைக் கடித்தாள்.

அப்போது கிரியின் அம்மா ஜெயா ஜானகியிடம் எதையோ கேட்க நிமிர்ந்து பார்த்த ஜானகியின் கண்ணில் தன்னை விசமத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் விழுந்தான்.

அவள் தன்னைப் பார்த்ததும் அவன் பார்வை அவளுடைய இடையிலும், அவன்  விரல் பட்ட இடத்திலும் படிய கோபத்துடன் கூடிய மெல்லிய படபடப்பு எழுந்ததில் அவசரமாக தலை குனிந்து கொண்ட ஜானகி “பொறுக்கி”, என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அதன் பின் அங்கிருந்து செல்லும் வரைக்கும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

கிளம்பும் போது அங்கே யமுனா மற்றும் அரசி இடையே ஒரு கண்ணீர் படலம் அரங்கேற ஜானகியும் யமுனாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

பின் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். வீட்டுக்கு வந்ததும் தனது அறையில் உள்ள பால்கனியில் அமர்ந்திருந்த ஜானகியின் பார்வை இலக்கற்று வானத்தை வெறித்தது. என்ன முயன்றும் அவளால் அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியவில்லை.

அடிக்கடி அவனுடைய தொடுகை அவளுக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தது. அவனுடைய கை அதே இடத்தில் இருப்பது போல அவ்வப்போது தோன்றி வைத்ததில் மொத்தமாக தன் வசம் இழந்தாள்.

அந்த நிகழ்வை மறக்க முடியாமல் திண்டாடியவளை அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து வதைத்தது. அவன் மேல் கோபமாக வந்தது. அதைக் காட்டும் வழி தெரியாததால் சில நேரம் கண்ணீர் கூட வந்தது.

யமுனாவை விட்டுவிட்டு வந்ததில் இருந்து மனது பாரமாக இருந்த அரசி மற்றும் சரவணனுக்கு இளைய மகளின் அமைதி வியப்பாக இருந்தது. அவர்கள் பல முறை கேட்டுப் பார்த்தும் அவளிடம் பதில் இல்லை. பெற்றவர்களே ஆனாலும் அவர்களிடம் அதை அவளால் சொல்ல முடியவில்லை.

பின் அரசியே “அக்கா அங்க போனதுனால இப்படி இருக்கியா?”, என்று கேட்க அதையே பிடித்துக் கொண்டு ஆம் என்னும் விதமாய் தலையசைத்தாள்.

மகள் மனதை அறியாமல் “பொண்ணுங்க நிலைமை இது தான் டா. உன் அக்கா நாளைக்கு மாப்பிள்ளையோட இங்க வருவா. நீ கவலைப் படாதே”, என்று ஆறுதல் சொன்னாள் அரசி.

அம்மாவுக்காக சரி என்று தலையசைத்தாள் ஜானகி. ஆனால் என்ன முயன்றாலும் ஜானகியால் அந்த விஷயத்தை மறக்க முடியவில்லை. குளிக்கும் போதும், உடை அணியும் போதும் வெகுவாக தவித்துப் போனாள்.

கிரியின் அறை முதலிரவுக்காக அலங்கரிக்கப் பட்டிருந்தது. யமுனாவுக்கு மிதமாக அலங்கரித்த ஜெயா “இனி கிரி உன்னோட பொறுப்பு டா. இனிமே நீ அவனுக்கு இன்னொரு அம்மாவாவும் இருக்கணும். அவன் ஸ்ரீராம் மாதிரி கலகலப்பா இருக்க மாட்டான். அதுக்காக முசுடும் கிடையாது. நீயே போகப் போக அவனை புரிஞ்சிக்குவ. பக்குவமா நடந்துக்கணும் என்ன?”, என்று அக்கறையாக சொன்னாள்.

“சரிங்க அத்தை”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் யமுனா. “சரி வா, நேரம் ஆச்சு?”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்ற ஜெயா “இது தான் கிரி ரூம். உள்ள போ”, என்று சொல்லி விட்டு சென்றாள். தயக்கத்துடன் அந்த அறைக்குள் நுழைந்த யமுனா அங்கே அவனைக் காணாததால் திகைத்தாள்.

அதே நேரம் கிரியோ ஸ்ரீராமின் மொக்கையில் இருந்து எப்படி தப்பித்து அறைக்கு செல்ல என்று நெளிந்து கொண்டிருந்தான். அண்ணன் நிலைமை புரிந்தாலும் வேண்டும் என்றே “எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருக்குண்ணா. நம்ம கம்பெனில எத்தனை விதமான கிரானைட் கற்கள் இருக்குன்னு சொல்லேன்”, என்றான்.

“இது இப்ப கேக்க வேண்டிய கேள்வியா டா? மனுஷன் அவஸ்தை புரியாம படுத்துறானே?”, என்று எண்ணி அமைதியாக இருந்தான் கிரி.

அதற்கு மேல் அவனைப் படுத்த மனதில்லாமல் “சரி சரி இன்னொரு நாள் கேட்டுக்குறேன். இப்ப உன்னோட ரூமுக்கு போ. பாவம் அண்ணி உனக்காக வெயிட் பண்ணுவாங்க”, என்று சொல்லி சிரித்தான்.

“அடப்பாவி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் இவ்வளவு நேரம் மொக்கை போட்டியா? எனக்கும் ஒரு நேரம் வரும் டா”, என்று சொன்ன கிரி அவன் தலையில் நங்கென்று கொட்டி விட்டே அங்கிருந்து சென்றான்.

புன்னகையுடன் தலையை தடவிக் கொண்ட ஸ்ரீராம் “நானும் பெரிய பையன் தானே? எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சா தான் என்னவாம்? இந்த அப்பா ரொம்ப மோசம்”, என்று புன்னகையுடன் சிணுங்கிக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!