Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 6 1

அத்தியாயம் 6

நான் தடம் மாறிப் போனாலும்

என்னுடன் வருகிறது

உந்தன் காலடித் தடங்கள்!!!



Advertisement

ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. திருமண நாள் காலை அனைவருக்கும் மகிழ்ச்சியாய் விடிந்தது. பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கழுத்தில் மாலையுடன் மணமேடையில் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். ஹோம குண்டத்தில் இருந்து வந்த புகையினால் அவன் கண்கள் எரிந்தது. சுற்றி சொந்த பந்தம் அனைவரும் இருப்பதால் அங்கே காற்றுக்கு பஞ்சமாகி அவனுக்கு வியர்த்து ஒழுகியது.

Advertisement

அருகில் நின்ற கிரியிடம் “கசகசனு இருக்குண்ணா”, என்றான்.

Advertisement

“கொஞ்ச நேரம் தான் டா ஸ்ரீ. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, என்றான் கிரி.

Advertisement

ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க அவனும் புரிந்தும் புரியாமலும் அதை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து “பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கொடுக்க ஸ்ரீராம் வீட்டில் வாங்கிக் கொடுத்த புடவை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் உறவினர்களுடன் மேடையேறி வந்தாள் ஜானகி.

சரவணனுக்கு அந்த அலங்காரத்தில் தன்னுடைய மகளைப் பார்க்கும் போது அந்த சீதா தேவியாகவே தான் தெரிந்தாள்.

யமுனா அவளை ஸ்ரீராம் அருகில் அமர வைத்தாள். அருகில் அமர்ந்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான் ஸ்ரீராம். அவளோ அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவனை மட்டும் இல்லை அவள் சுற்றி இருந்த யாரையுமே நிமிர்ந்து பார்க்க வில்லை.

தலை குனிந்தே அமர்ந்திருந்தாள். “கொஞ்சம் நிமிந்து உக்காரு ஜானகி”, என்று சொன்ன யமுனா அவள் தலையை சற்று நிமிர்த்தினாள். அப்போது ஸ்ரீராம் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

உணர்ச்சிகளைத் துடைத்த முகத்தோடு அருகில் அமர்ந்தவளைக் கண்டவனின் முகமும் உணர்ச்சிகளை துடித்து இறுகியது. “என்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு இவ முகத்தை இப்படி வச்சிருக்கணுமா? வாழ்க்கைல ஒரு தடவை நடக்குற விஸேஷம் இது. இதுக்கு இப்படி அழுது வடியணுமா?”, என்று எரிச்சலாக வந்தது அவனுக்கு.

கெட்டிமேளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க அனைவரின் ஆசியோடு அவள் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் ஸ்ரீராம். அவன் தாலி கட்டிய போது ஏதோ உலகையே வென்ற நிம்மதியில் அவன் இதயம் சிலிர்த்தது.

வெகு அருகில் இருந்த அவனது வாசனையை நுகர்ந்த படி அவன் கட்டிய தாலியை தலை குனிந்து வாங்கிக் கொண்டாள் ஜானகி.

அவள் கரம் பிடித்து அக்னியை வலம் வரச் சொல்லி ஐயர் சொல்ல அவன் தன்னுடைய கையை அவளை நோக்கி நீட்டினான். வேண்டா வெறுப்பாக அவன் கரத்தின் மீது தன்னுடைய கையை வைத்தாள்.

அக்னியை வலம் வரும் போது வேண்டும் என்றே அவள் விரல்களை இறுகப் பிடித்திருந்தான் ஸ்ரீராம். அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள். மூன்றாவது முறை அக்னியை வலம் வந்து முடிக்கும் போது அவன் அவளுடைய கையை விட முயன்றான்.

அப்போது அவனுடைய உள்ளங்கையில் யாருக்கும் தெரியாமல் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆ”, என்று அலறிய படி அவன் கையை உதறினான். அவனுக்கு வலி உயிர் போனது. அவன் அலறியதும் முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளையே பார்க்க அவள் முகத்தில் இருந்த குரும்பையும் சிரிப்பையும் கண்டவனுக்கு மனதில் இது வரை இல்லாத நிம்மதி வந்தது.

“எப்படி என் வேலை?”, என்னும் விதமாய் அவள் அவனைக் கண்டு கண்ணடிக்க அவன் திகைத்து போய் அவளைப் பார்த்தான்.

“இது ஆரம்பம் தான் டா, இனி தான் உனக்கு இருக்கு”, என்று அவள் உதடுகள் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தது.

மற்றவர்கள் முன்னிலையில் அவளை எதுவும் சொல்ல முடியாமல் அவளை சிறு சிரிப்புடன் பார்த்தான். அவன் மனதில் இது வரை இருந்த இறுக்கம் மறைந்து அங்கே புன்னகை குடி கொண்டது.

மீண்டும் ஐயர் வேறு சடங்குகள் செய்ய சொல்ல அவளோ அவனை கலங்கடித்து விட்டோம் என்ற திருப்தியில், ஏதோ சாதித்தது போல சந்தோசமாக இருந்தாள். அதன் பின்னர் இருவர் முகமும் மலர்ந்தே இருந்தது.

அதன் பின் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். சடங்கு எல்லாம் முடிந்ததும் காலை உணவு முடிந்து அவர்களை ரிசப்ஷன் மேடையில் அருகருகே நிற்க வைத்தார்கள்.

அவளிடம் வம்பிழுப்பதற்காக “என்னை கிள்ளிட்டேன்னு ரொம்ப சந்தோஷப் படாதீங்க மேடம். இன்னைக்கு நைட் முழுக்க நீ என் கஷ்டடி. இன்னைக்கு மட்டும் இல்லை. வாழ்க்கை முழுக்க உனக்கு இந்த ஸ்ரீராம் கூட இருக்குற ஜெயில் தான் நிரந்தரம்”, என்று புன்னகையுடன் சொன்னான் ஸ்ரீராம்.

“எப்படியோ உன்னைக் கல்யாணம் பண்ணுறது எனக்கு ஜெயில்ன்னு நீ ஒத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் ராம். இத்தனை பேர் முன்னாடி உன்னை ஆன்னு கத்த வச்ச எனக்கு உன்னை தனி ரூம்ல வச்சு ஒண்ணும் செய்ய முடியாதா? இனிமே உன் பொறுக்கித் தனத்தை எல்லாம் மூட்டை கட்டலை, அப்புறம் இருக்கு உனக்கு”, என்று அவளும் பதிலுக்கு மிரட்டினாள். அதாவது இனி அவன் எந்த பெண்களுடனும் பேசக் கூடாது என்று உரிமையாக கண்டித்தாள். அந்த உரிமையை அவன் கட்டிய தாலி அவளுக்கு கொடுத்திருந்தது.

அவனோ அவள் சொன்னதை உணராமல் “உன் கிட்ட பொறுக்கித் தனத்தைக் காட்ட தான் லைசன்ஸ் கொடுத்திருக்காங்க மா”, என்று புன்னகையுடன் சொல்லி அவள் கழுத்தில் இருந்த தாலியைச் சுட்டிக் காட்டினான்.

அவளையே அறியாமல் “என் கிட்ட மட்டும் காட்டினால் பரவால்ல? ஆனா மத்த பொண்ணுங்களைத் தான் பாக்க கூடாது”, என்று முணுமுணுத்தாள். அவள் சொன்னது அவனுக்கு கேட்க வில்லை. ஆனால் அதை சொன்ன அவளுக்கு அப்படி ஒரு திகைப்பு.

எதனால் இப்படி சொன்னேன் என்று தடுமாறிப் போய் நின்றாள். உறவினர்கள் மேடையேற அந்த நினைவு அவளின் ஆழ் மனதுக்கு சென்றது.

இப்படி இருவரும் வம்பு பேசிய படியே புன்னகையுடன் மேடையில் நின்றிருந்தார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் புன்னகையுடன் பேசுவது தான் தெரிந்தது. ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிய வில்லை என்பதால் அவர்களது சந்தோஷம் அனைவரையும் தொற்றியது.

திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவர்களின் சந்தோசத்தைக் கண்டு பெரியவர்களின் முகமும் மலர்ந்தது. முக்கியமாக அவர்களின் புன்னகையைக் கண்டு அம்பிகாவுக்கு சந்தோஷமாக இருந்தது.

இருவரின் ஜோடிப் பொருத்தத்தை வீட்டாள்கள் மட்டும் இல்லை.  உறவினர்களும் ரசித்துப் பார்த்தார்கள். அந்த அளவுக்கு அழகாக இருந்தார்கள். சிலர் அவர்கள் ஜோடிப் பொருத்தத்தையும் பெயர் பொருத்தத்தையும் அவர்களிடமே பாராட்டி விட்டுச் செல்ல அப்போது தான் மணமக்களும் தங்களின் பெயர் பொருத்தத்தை உணர்ந்தார்கள். அதில் ஸ்ரீராம் சந்தோசமடைய “நீ ஏண்டா நல்லவனா இல்லாம போன? உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி நீ ஏன் இல்லாம போன?”, என்று வேதனையாக எண்ணினாள் ஜானகி.

அப்போது அவளது நண்பர் கூட்டம் மேடையேற தன்னுடைய நினைவை ஒதுக்கி சந்தோஷமாக அவர்களை அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள். அவர்கள் கிஃப்ட் கொடுத்து போட்டோ எடுத்து முடிக்கும் வரை ஜானகி அவ்வளவு சந்தோசமாக இருந்தாள். அவளுடைய நண்பர்கள் ஸ்ரீராமிடம் ஜானகி காலேஜில் செய்த சேட்டைகளை சொல்ல அவன் அவளைக் கண்டு சிரித்தான்.

அவர்கள் சென்றதும் “ஜானு, இவங்க சொல்றதைப் பாத்தா நீ அருந்த வாலா இருப்ப போல? கடைசில நான் தான் உன் ஜெயிலில் மாட்டிக்கிட்டேனா? தாலி கட்டின புருஷன் பொழைச்சுப் போட்டும்னு கொஞ்சம் மன்னிச்சு விடு மா”, என்று சொல்லி சிரித்தான்.

“போங்க ராம், அவங்க சொன்னாங்கன்னு நீங்க வேற? நான் எல்லாம் ரொம்ப அமைதியாக்கும்”, என்று சிணுங்கிய படியே ஜானகி சொல்ல அவளது புன்னகையே அது பொய் என்று அவனுக்கு உணர்த்தியது.

கூடவே அவளது ராம் என்ற அழைப்பு, அவளது சிணுங்கல், அவளது அழகு, அவளது வாசனை என அனைத்திலும் திணறிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

இந்த அளவுக்கு ஒரு பெண் மேல் பைத்தியமாவோம் என்று அவன் கனவிலும் எண்ண வில்லை. அதை எண்ணி அவனுக்கே வியப்பாக இருந்தது.

ஜானகி அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்க அப்போது அவனது நண்பர்கள் அனைவரும் மேடையேறினார்கள். அதைப் பார்த்தவளுக்கு முகம் இருண்டு போனது.

ஏனெனில் அங்கே அவனுடைய நண்பர்களுள் ஒருத்தியாக ரம்யாவும் வந்து கொண்டிருந்தாள். நண்பர்களைக் கண்ட ஸ்ரீராம் ஜானகியைக் கவனிக்க வில்லை. ஆனால் அவள் முகம் சுருக்கியதை ரம்யா பார்த்து விட்டாள்.

“என் ஸ்ரீ கூட நீ சந்தோஸமா சிரிச்சிக்கிட்டு நிக்குறியா? அது என்னோட இடம் டி.  கண்டிப்பா இனி ஸ்ரீ என்னைத் திரும்பி பார்க்க மாட்டான் தான். ஆனா நீ அவன் கூட எப்படி சந்தோஷமா வாழுறன்னு பாக்குறேன்”, என்று எண்ணிக் கொண்டு அவர்களை நெருங்கினாள் ரம்யா.

“ஜானு, இது கிருஷ், இது விச்சு, இது ஆகாஷ், இது நிலா, இது ரம்ஸ், அப்புறம் இது கோபி”, என்று ஸ்ரீராம் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்த ஜானகிக்கு ரம்யாவை தவிர மற்ற யாருமே அவள் கருத்தைக் கவர வில்லை.

ஏதோ ரம்யாவைக் காணும் போது ஸ்ரீராமை தன்னிடம் இருந்து பிரிப்பவள் போலவே அவளுக்கு தோன்றி வைத்தது. அவளை அறியாமலே அவள் கை நகர்ந்து ஸ்ரீராமின் கையை இறுகப் பற்றியது.

நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஸ்ரீராம் அதை உணரவே இல்லை. ஆனால் ரம்யா கண்டு கொண்டாள். அதைக் கண்டு அவளுடைய வன்மம் அதிகமானது. அவர்கள் கிஃப்ட் கொடுத்து முடித்ததும் குருப் போட்டோ எடுக்கும் போது ஜானகி அருகில் சென்று நின்றாள் ரம்யா.

மற்ற அனைவரும் ஃபோட்டோவுக்கும் விடியோவுக்கும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க “என்ன சிரிப்பு ரொம்ப அதிகமா இருக்கு? நியாயமா பாத்தா உன்னோட நிலைமைக்கு நீ சிரிக்கவே கூடாது”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னாள் ரம்யா.

அவள் சொன்னதைக் கேட்டு திகைத்தாலும் “என்ன உளற?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் ஜானகி. அவளுக்கு அந்த ரம்யா எப்போது அங்கிருந்து செல்வாள் என்று இருந்தது.

“ஆமா இன்னொருத்திக்கு சொந்தமானவனைக் கட்டிக்கிட்டு இப்படி பல் இளிச்சா எப்படி? நீ நிக்குறது என்னோட இடம் டி”

“தேவையில்லாம பேசாத. முதல்ல இங்க இருந்து போ. உன்னைப் பாத்தாலே எனக்கு எரிச்சலா வருது. கார்ட்டூன்ல வர சூனியக்காரி மாதிரியே இருக்க”, என்று ஜானகி அவளிடம் காய அதில் ரம்யாவுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

“நான் சூனியக்காரியா? பரவால்ல நான் சூனியக்காரியா இருந்துட்டு போறேன். ஆனா நீ பைத்தியக் காரி டி. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சியா? எனக்கு எல்லாம் தெரியும். ஸ்ரீ உன்னைப் பழி வாங்க தானே கல்யாணம் பண்ணிருக்கான்?”, என்று அவள் சொன்னதும் ஸ்ரீராமைப் பற்றியிருந்த கையை விட்டாள் ஜானகி. ஏதோ அவன் அவளை விட்டு தூரம் போனது போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!