Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 6 2

ஜானகி மற்றும் ஸ்ரீராம் இடையே நடந்த உண்மையை ரம்யாவிடம் அவன் சொல்லியிருக்கிறான் என்றால் ரம்யா அவனுக்கு எந்த அளவுக்கு குளோஸ் என்று ஜானகிக்கு புரிந்தது. அவள் மனதில் பெரிய வலி ஒன்று எழுந்தது.

“இப்ப தான் புரிஞ்சதா? அன்னைக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் குளோசா இருந்தப்ப உனக்கு புரியலையா?”, என்று குரல் எழுப்பியது ஜானகியின் மனசாட்சி.



Advertisement

“இங்க பாரு. ஸ்ரீ எனக்கு மட்டுமே சொந்தம். நீ நினைக்கிற மாதிரி அவன் உன்னைப் பழி வாங்க எல்லாம் கல்யாணம் பண்ணலை”, என்று ரம்யா சொன்னதும் “இது என்ன புதுக்கதை?”, என்னும் விதமாய் அவளைப் பார்த்தாள் ஜானகி.

Advertisement

“நீ வேணும்னா அவன் கிட்ட கேளு. அவன் கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்லுவான். ஏன்னா அவன் உன்னைப் பழி வாங்க எல்லாம் கல்யாணம் பண்ணலை. அவன் எதுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணினான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவன் அவங்க அப்பாவோட கட்டாயத்துக்காக தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்”, என்றாள் ரம்யா.

Advertisement

அவள் அப்படிச் சொன்னதும் அவன் திருமண பேச்சை ஆரம்பிக்கும் போதே திருமணம் வேண்டாம் என்று சொன்னதாக யமுனா சொன்னது இப்போது நினைவில் வந்தது. அதை எண்ணி உள்ளுக்குள் கசந்தது ஜானகிக்கு. ஆனால் அவன் தான் அம்பிகாவிடம் சொல்லி திருமண பேச்சை ஆரம்பித்தது என்ற உண்மையை அவள் அப்போது மறந்து விட்டாள். அதைப் பற்றி யோசிக்க ரம்யா விடவும் இல்லை.

Advertisement

ஜானகியின் தவிப்பையும் கலக்கத்தையும் கண்ட ரம்யா “நான் பொய் சொல்லலை. உண்மையை தான் சொல்றேன். அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ண துளி கூட விருப்பம் இல்லை. நாங்க காலேஜ் படிக்கும் போதுல இருந்து லவ் பண்ணுறோம். ஆனா அவங்க அப்பா அதுக்கு ஒத்துக்கலை. உன் அக்கா அந்த வீட்டு மருமகனால நீயும் இதே வீட்டுக்கு வந்தா உங்க ரெண்டு குடும்ப சொத்தும் வெளிய போகாதுன்னு தான் இந்த கல்யாணத்தை பேசி முடிச்சாங்க. ஆனா உன் கிட்ட உன்னை பழி வாங்க தான் இந்த கல்யாணம்னு கதை விட்டுருப்பானே? அதெல்லாம் சும்மா தான். அவன் என் கிட்ட எல்லாம் சொல்லிட்டான். உன்னை மாதிரி ஒரு இளிச்ச வாயைக் கல்யாணம் பண்ணினா தான் அவன் என் கூட சந்தோஷமா இருக்க முடியும்? அதுக்கு தான் ஸ்ரீ இந்த பிளான் போட்டுருக்கான். அவன் கையால தாலி கட்டிக்கிட்டாலும் நீ அவனுக்கு செகண்டண்ட் தான். நான் தான் அவனுக்கு எல்லாமே. இப்ப அவன் உன் கூட அன்பா இருக்குற மாதிரி நடிச்சு உன்னை நம்ப வச்சு உன் கிட்ட நல்ல பேர் வாங்குவான். அப்படி நீ அவனை நம்பினா தானே அவன் என் கூட சந்தோஷமா இருக்க முடியும்? இப்ப நான் ஏன் இந்த உண்மையைச் சொல்றேன்னு உனக்கு குழப்பமா இருக்கா? ஸ்ரீ சொல்லக் கூடாதுன்னு தான் சொன்னான். ஆனா எனக்கு தான் அவன் பக்கத்துல நீ நிக்குறதை தாங்க முடியலை. இது என் இடம். ஆனா அவனுக்காக தான் பல்லைக் கடிச்சிட்டு இருக்கேன்”, என்று அவளுடைய தலையில் இடியை இறக்கினாள்.

ரம்யா ஸ்ரீராம் காதல் விஷயம் அந்த முத்த நிகழ்வில் ஜானகிக்கு புரிந்திருந்தாலும் அதை ரம்யா காது பட கேட்க அவளுக்கு கூசியது. அருகில் நின்றவனை திரும்பிப் பார்த்தாள். அவனோ சந்தோஷமாக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

இந்த சந்தோஷம் எதனால் என்று எண்ணியவளுக்கு ரம்யா சொன்ன இளிச்ச வாய் என்ற வார்த்தை நினைவில் வந்தது. “கடைசில நான் தான் ஏமாந்துட்டேனா?”, என்று அவள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போதே ரம்யா மீண்டும் பேசினாள்.

“தாலி கட்டிட்டாலும் நீ ஸ்ரீ கூட வாழ முடியாது டி. அவன் எனக்கு தான். ஊருக்கு தான் நீ பொண்டாட்டி. ஆனா அவன் வாழ்ந்தது, வாழ போறது எல்லாம் என் கூட தான்”, என்று சொன்ன ரம்யா அவளிடம் இருந்து விலகி ஸ்ரீராம் அருகில் சென்றாள். இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஜானகி.

ஸ்ரீராம் கையைப் பற்றிய ரம்யா “வாழ்த்துக்கள் ஸ்ரீ”, என்று சொல்ல அவனும் “தேங்க்ஸ் டி”, என்று சொல்லி அவளுடைய கன்னத்தைக் கிள்ளினான். அவர்களின் இணைந்திருந்த கையையும் அவனது செய்கையையும் பார்த்த ஜானகிக்கு வாழ்க்கையே இருளில் மூழ்கிய உணர்வு தான் வந்தது.

அவனுடைய நண்பர்கள் அங்கிருந்து செல்ல ரம்யாவும் சென்றாள். வெற்றிப் புன்னகையுடன் செல்லும் ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகியின் மனதில் சொல்லொண்ணா துயரம் வந்து குடி புகுந்தது. அவள் முகத்தில் இருந்த இறுக்கத்தைக் கண்ட ஸ்ரீராம்க்கு குழப்பமாக இருந்தது. இது வரை நல்லா தானே இருந்தாள் என்று எண்ணிக் குழம்பி “ஜானு என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

“நீ என்னைப் பழி வாங்க தான் கல்யாணம் பண்ணுனியா ராம்?”, என்று கேட்டாள் ஜானகி.

அவளுக்கு அவன் ஆம் என்று பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அவன் ஆம் என்று சொன்னால் ரம்யா சொன்னது அனைத்தும் பொய்யாகி விடும் என்று நம்பினாள்.

ஆனால் அவள் மேல் அதிக அன்பு வைத்திருந்த அவனோ “ஏய் லூசு, அது சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னது. உன்னைப் பழி வாங்க யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? உன்னைப் பழி வாங்கினா என் வாழ்க்கையும் தானே வீணாப் போகும். பழசை எல்லாம் மறந்துரு”, என்றான் ஸ்ரீராம்.

அடுத்த உறவினர் வர ஸ்ரீராம் கவனம் அவர்கள் மீது சென்றது. ஆனால் ஜானகியோ “அப்படின்னா நீ உன் அப்பா சொன்னதுனால தான் என்னைக் கல்யாணம் பண்ணிருக்கியா? என்னை நீ எதிரியா கூட நினைக்கலையா ராம்? இப்ப என் கிட்ட நீ சிரிச்சு பேசுறது கூட என்னை ஏமாத்திட்டு அவ கூட வாழத் தானா?”, என்று எண்ணி சோர்ந்து போனாள்.

அதன் பின் உணர்வுகள் துடைத்த முகத்துடன் நின்றாள் ஜானகி. மதிய உணவு நேரம் கூட அவள் முகம் இறுகியே இருந்தது. அவன் அவளிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தாலும் “பிளீஸ் எனக்கு தலை வலிக்குது. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கணும்”, என்று முடித்துக் கொண்டாள்.

உணவு முடிந்ததும் மணமக்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர். காரில் போகும் போது அவன் வேண்டுமென்றே அவளை ஒட்டி அமர “ஏன் இப்படி? பேசாம என் மடில வந்து உக்கார வேண்டியது தானே?”, என்று அவனிடம் அவள் எரிந்து விழுந்தாலும் அவனது அருகாமை அவளுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வை உருவாக்கியது.

“இவன் நடிக்கிறானா? இப்படி பண்ணினா தான் நான் இவன் தப்பை கண்டுக்க மாட்டேன்னு இப்படி பண்ணுறானா?”, என்று குழம்பினாள்.

“உன் மடில உக்கார எனக்கு ஓகே தான் ஜானு பேபி. ஆனா முன்னாடி உக்காந்து கார் ஓட்டுற உன் கிரி மச்சானையும், அண்ணியையும் நினைச்சு தான் தள்ளி உக்காந்துருக்கேன்”, என்று நக்கலாக சொன்னான் ஸ்ரீராம். அவள் அவனை முறைத்துப் பார்த்தாலும் அவன் அவளை விட்டு தள்ளி உக்காரவே இல்லை.

அவன் நகர்ந்து உக்கார வழியை காணும் என்றதும் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் ஜானகி.

“ஆ”, என்று ஸ்ரீராம் அலற “என்ன ஆச்சு டா?”, என்று கேட்டான் கிரி. யமுனாவும் “என்ன தம்பி?”, என்று கேட்டாள்.

மனைவியை திரும்பி பார்த்த ஸ்ரீராம் “அது ஒண்ணும் இல்லைண்ணா. எறும்பு கடிச்சிருச்சு”, என்று சொல்லி அசடு வழிந்தான்.

“கடிச்சது கொஞ்சம் பெரிய சைஸ் எறும்போ?”, என்று கிரி கேட்டதும் இப்போது வெட்கத்துடன் தலையை வெளியே திருப்பிக் கொண்டாள் ஜானகி.

மணமக்கள் வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்கு ஆரத்தி கரைத்து சுற்றினாள் ஜெயா.

“ஜானகி வலது காலை எடுத்து வச்சு உள்ள வா மா”, என்று ஜெயா சொன்னதும் அவனுடன் இணைந்து வீட்டுக்குள் சென்றாள். “ஒரு வழியா வலது காலை எடுத்து வச்சு உள்ள வந்துட்ட பாத்தியா?”, என்று அவள் காதைக் கடித்தான் ஸ்ரீராம் .

“நான் வலது காலை தான் எடுத்து வச்சேன் ராம். அதுக்காக நீ ஸ்ரீராமன்னு எல்லாம் ஒத்துக்க மாட்டேன். என்னைப் பொறுத்த வரை நீ ராவணன் தான்”, என்றாள் அவள். “இவ மாறவே மாட்டாளா?”, என்று யோசனையாக பார்த்தான் ஸ்ரீராம்.

அதன் பின் விளக்கேற்றுவது. பால் பழம் உண்பது, மறுவீடு என்று நேரம் கழிந்தது. அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது அரசி கூட “இங்க மாதிரி பொறுப்பில்லாம நடந்துக்காத. எல்லாரையும் மதிச்சு நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கணும். உன்னால முடிஞ்ச வேலையை செய்யணும்”, என்று அறிவுரை தான் சொன்னாள்.

ஆனால் சரவணனோ மகளைக் கட்டிக் கொண்டு சிறு பிள்ளை போல கண்ணீர் வடிக்க ஸ்ரீராமுக்கு சிரிப்பாக வந்தது.

“அப்பா உன்னை விட்டுட்டு நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை”, என்று ஜானகியும் அவர் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

“இதெல்லாம் உண்மைன்னு நம்பிராதீங்க மாப்பிள்ளை. இவங்க ரெண்டு பேரும் எப்ப எப்படி இருப்பாங்கன்னு புரிஞ்சிக்கவே முடியாது. இப்படி அழுது வடியுவாங்க. அடுத்த நிமிஷம் எதிரி மாதிரி சண்டை போடுவாங்க”, என்று ஸ்ரீரமிடம் சொன்னாள் அரசி.

கிளம்பும் போது “அவ குழந்தை மாதிரி மாப்பிள்ளை. நீங்க தான் அவளை நல்லாப் பாத்துக்கணும்”, என்றார் சரவணன்.

ஜானகி அழுது கொண்டே இருக்க அவளுடைய கண்ணீர் முகம் எப்போதும் போல் இப்போதும் அவனை பாதித்தது. அவளை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கு “ஏன் ஜானு, இவ்வளவு அன்பான அப்பாவையா நீ ஹிட்லர்னு சொன்ன? உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பாத்தியா? என் அப்பாவை அப்படிச் சொன்னாக் கூட பரவால்ல. ஆனா மாமாவைப் பத்தி நீ எப்படி ஹிட்லர்னு சொல்லலாம்?”, என்று அவளிடம் கேள்வி கேட்பது போல அவளை சரவணனிடம் போட்டுக் கொடுத்தான்.

அதில் அழுகையை மறந்து அவனை பார்த்த ஜானகி அடுத்த நொடி தந்தையைப் பார்த்தாள்.

“நான் உனக்கு ஹிட்லரா பாப்பா?”, என்று அவர் பாவம் போல கேட்க அவரைக் கண்டு புன்னகைத்த ஜானகி “ஆமா என் அப்பா எனக்கு ஹிட்லர் தான்”, என்றாள்.

ஸ்ரீராம் அவளையே பார்க்க “நான் ராட்சசியா இருக்கும் போது எனக்கு எங்க அப்பா ஹிட்லர் தான். நான் மாணவியா இருந்தா அவர் எனக்கு டீச்சர். நான் குழந்தையா இருந்தா எனக்கு அம்மாவும் அவர் தான் அப்பாவும் அவர் தான். நண்பன், எதிரி, வழி காட்டி, கார்டியன் எல்லாமே என் அப்பா தான். என்னோட எல்லா உறவுகளுக்கும் உருவம் என்னோட அப்பா”, என்று சொல்லி அவரைக் கட்டிக் கொண்டாள். சரவணனும் நெகிழ்ந்து போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!