Skip to content
Post Views: 3,177
“அவர் தான் உன் அம்மான்னா அப்ப நான் யாரு டி?”, என்று அரசி வேண்டும் என்றே வம்பிழுக்க “இதுக்கு தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன். எனக்கு அப்புறம் ஒரு பையனைப் பெத்துக்கோங்கன்னு. என் பேச்சைக் கேட்டா தானே?”, என்று ஜானகி சோகம் போல சொல்ல அனைவரும் சந்தோஷமாக சிரித்தார்கள்.
ஸ்ரீராமோ அவளை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தான். அவள் காதைத் திருகிய அரசி “அம்மா கிட்ட என்ன பேசுறதுன்னு இல்லை? அங்கயும் போய் இப்படி நடந்துக்க கூடாது. அப்புறம் சீக்கிரம் எங்களுக்கு பேரக் குழந்தையை பெத்துக் கொடுக்கணும் என்ன?”, என்று சொல்ல திகைப்பும் வெட்கமுமாக ஸ்ரீராமைப் பார்த்தாள் ஜானகி.
Advertisement
அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் இருந்த வெட்கத்தைக் கண்டவனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைக்கச் சொல்லி கைகள் பரபரத்தது. இருக்கும் சூழ்நிலை உணர்ந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். சந்தோசமாக அங்கிருந்து அவனுடைய வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அன்று மாலை ஸ்ரீராம் வீட்டுக்கு வந்ததும் அன்றைய அலைச்சலால் இருவரும் ஓய்வெடுக்க தனித் தனி அறைக்கு சென்றார்கள். ஜானகி அவளுக்கு கொடுக்கப் பட்டிருந்த அறைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க அவளைக் காண வந்தார் ரகு.
Advertisement
Advertisement
அவரைக் கண்டு “வாங்க மாமா”, என்று சொல்லி எழுந்து நின்றாள்.
“உக்காரு டா. நான் உனக்கு அப்பா மாதிரி”, என்று சொல்லி அவளை அமர வைத்து அவள் அருகே அமர்ந்தார்.
Advertisement
அவர் ஏதோ சொல்ல தயங்குவது போல இருக்கவும் “என்ன ஆச்சு மாமா?”, என்று கேட்டாள் ஜானகி.
“ஸ்ரீராம் கொஞ்சம் சேட்டை பிடிச்சவன் மா. சின்ன வயசுல இருந்தே அவன் அப்படி தான். தருதலைன்னு கூட சொல்லுவேன். ஆனா ரொம்ப நல்லவன். என் கிட்ட மட்டும் தான் வம்பு பண்ணுவான். அவனுக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணுறது பிடிக்கலை போல?”, என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தார்.
“இந்த வயசுல கல்யாணம் பண்ணுனது உங்க மகனுக்கு பிரச்சனை இல்லை மாமா. அந்த ரம்யாவை விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணுனது தான் பிரச்சனை”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
அவள் அமைதியாக இருக்கவும் “இந்த கல்யாண விஷயம் பேசினதும் அவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னான் மா. நான் தான் கட்டாயப் படுத்தி பண்ணி வச்சேன்”, என்று அவர் சொன்னதும் வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளுடைய வேதனையைக் கண்டவர் “நீ கவலைப்படாதே டா. அப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் இப்ப அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் உன்னை நல்லாப் பாத்துக்குவான்”, என்றார்.
“என்னை நல்லா பாத்துக்கிட்டா தானே அவன் அந்த ரம்யா கூட கூத்தடிக்க முடியும்”, என்று எண்ணிக் கொண்டு அவரைப் பார்த்தவள் “எனக்கு புரியுது மாமா. எல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப் படாதீங்க”, என்றாள்.
“தேங்க்ஸ் மா, நீயும் யமுனாவும் இந்த வீட்டுக்கு கிடைச்ச அருமையான மருமகள்கள். இல்லை இல்லை நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு மகள் தான். அவன் ஆரம்பத்துல கொஞ்சம் முரண்டு பிடிச்சா நீ கொஞ்சம் பொறுமையா போ என்ன மா?”
“சரி மாமா”
“அவன் கொஞ்சம் பொறுப்பில்லாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கான். நீ தான் அவனை மாத்தணும் மா”
“நான் சொன்னா அவன் எங்க கேப்பான்?”, என்று மனதில் எண்ணினாலும் “சரி மாமா”, என்று சொல்லி புன்னகைத்தாள். அவளது புன்னகையை வாஞ்சையுடன் பார்த்தவர் “நல்லா இரு டா மா”, என்று சொல்லி அவள் தலையை வருடி விட்டுச் சென்றார்.
“ஏங்க அவளே காலைல இருந்து ஓய்வில்லாம இருக்கா. அவ கிட்ட போய் இப்ப தான் மொக்கைப் போடுவீங்களா?”, என்று ஜெயா ரகுவைக் கடிவது ஜானகிக்கு கேட்டது.
“நான் பேசுறது மொக்கையாவா இருக்கு?”, என்று பாவமாக ரகு கேட்பதும் அவளுடைய காதில் விழுந்தது. அதைக் கேட்டு அழகாக புன்னகைத்தாள் ஜானகி.
தனக்கு கிடைத்த அன்பான மாமியார் மாமனாருக்காக அவனைப் பொறுத்துக் கொள்ள தான் வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தாள்.
என்னதான் உறுதி எடுத்தாலும் அவன் தனக்கு இல்லையே என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள்.
மாலை மங்கி இரவு வந்தது. முதலிரவுக்கு என அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.
அதைப் பற்றி எல்லாம் எண்ணாமல் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று எண்ணி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ஜானகி.
அப்போது அந்த அறைக்குள் வந்த யமுனா “போய் குளிச்சிட்டு வா டி, நேரம் ஆகிருச்சு”, என்றாள்.
“தூங்கும் போது குளிச்சிக்கிறேன் கா. அப்ப தான் பிரஷா இருக்கும்“
“ஏய் மறந்துட்டியா ஜானகி? இன்னைக்கு உனக்கு பர்ஸ்ட் நைட். அத்தை உன்னை ரெடி பண்ணச் சொன்னாங்க. முதல்ல போய் குளி போ”, என்று சொன்னதும் திக்கென்று இருந்தாலும் “ஆமா ஆமா அவன் கூட முதலிரவைக் கொண்டாடிட்டாலும். அவன் எங்க என் கூட முதலிரவைக் கொண்டாடப் போறான்?”, என்று விரக்தியாக எண்ணியவள் அடுத்த நொடி அதிர்ந்து போனாள்.
“நானா இப்படி எல்லாம் யோசிச்சேன்? கடவுளே மத்த பொண்ணுங்க மாதிரி நானும் தாலி கட்டின உடனே அவனை விரும்ப ஆரம்பிச்சிட்டேனா?”, என்று எண்ணினாள்.
“நீ இப்ப இல்லை. அவன் எப்ப உன்னைத் தொட்டானோ அப்ப இருந்தே அவனை தான் நினைச்சிட்டு இருக்க? அவன் மேல உனக்கு இருக்குறது கோபம்னாலும் உன்னால அவனை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதிக்க முடிஞ்சதா?”, என்று கேள்வி எழுப்பியது மனசாட்சி.
“ஏய் என்ன இப்பவே கனவா? முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க மேடம்”, என்று யமுனா சொன்னதும் அவளை முறைத்து விட்டு குளிக்கச் சென்றாள்.
“உன்னைப் பத்தியே நினைக்க வச்சு என் நிம்மதியைக் கெடுத்துட்டல்ல? இரு டா வரேன். நீ எப்படி சந்தோஸமா இருக்கேன்னு பாக்குறேன். இனிமே தான் உனக்கு இருக்கு”, என்று எண்ணிக் கொண்டே குளிக்க ஆரம்பித்தாள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு மிதமான அலங்காரங்களை செய்து விட்டு அவளை ஸ்ரீராம் அறைக்கு வெளியே விட்டு விட்டு தங்களின் அறைக்குச் சென்றாள் யமுனா.
“ஏன் அம்மு இவ்வளவு நேரம்? கல்யாண வேலை கல்யாண வேலைன்னு சொல்லி ஒரு வாரம் கிட்ட வராம ஏமாத்திட்டியே?”, என்று கேட்ட படி அவளை அணைத்துக் கொண்டான் கிரி. “ஜானகியை கிளப்பி விட்டுட்டு வந்தேன். அதான் லேட்டா ஆகிருச்சுங்க”, என்று சொல்லிய படியே அவன் கைக்குள் அடங்கினாள் யமுனா.
முதலிரவுக்கு என பிரத்யேகமாக அலங்கரிக்கப் பட்டிருந்த அறையில் எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். அறையில் இருந்த இதமான நறுமணம் அவன் மனதில் இதத்தை தந்தது. ஜானகியை இந்த அறையில் எப்படி எதிர்க் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் எழுந்து அவனுக்கு படபடப்பைத் தந்தது.
முதலில் அவளை பழி வாங்கத் தான் திருமணம் செய்ய எண்ணினான். ஆனால் இன்று அவனை அறியாமலே அவளை அளவுக்கு அதிகமாக விரும்ப ஆரம்பித்து விட்டான். வாழ்க்கையைப் பற்றிய பல கனவுகள் அவனுக்குள் எழுந்தது.
முதலிரவைப் பற்றி நண்பர்களுடன் பேசிய கிண்டல் பேச்சுகளெல்லாம் இப்போது அவன் மனதில் உலா வர ஆரம்பித்தது. அந்த நினைவில், ஜானகியின் அழகில் அவனுடைய இளமை உணர்வுகள் கூட சற்று தூண்டப் பட்டன.
அப்போது அவளது வீட்டில் வைத்து அவள் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது. “நான் அவ கிட்ட நெருங்கினா செத்துருவேன்னு சொன்னாளே? ஐயையோ அப்படி எதுவும் செஞ்சிருவாளோ?”, என்று பயந்து போனான்.
அப்போது அவனது போன் அடித்தது. யாரென்று எடுத்துப் பார்த்தான்.
அழைப்பது ரம்யா என்றதும் அதை எடுத்து “சொல்லு ரம்யா, என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க?”, என்று கேட்டான். சரியாக அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் வந்தாள் ஜானகி. அவள் காதில் விழுந்த வார்த்தைகளில் அவள் இதயம் துடித்தது.
“என்னைக் கல்யாணம் பண்ணிட்டு இந்நேரம் அவ கூட பேசிட்டு இருக்கானே. அப்படின்னா இவனுக்கு நான் யாரு?”, என்று எரிச்சலாக வந்தது.
அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் ரம்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான். “ஆல் த பெஸ்ட் சொல்ல தான் டா கூப்பிட்டேன்”, என்று சொல்லி ரம்யா போனை வைக்க அப்போது தான் ஜானகியைப் பார்த்தான் ஸ்ரீராம். அவளைக் கண்டு அவன் கண்கள் மின்னியது. அழகான ரோஜா வண்ணச் சேலை அவள் உடலைத் தழுவியிருக்க தலை நிறைய பூச்சூடி, கழுத்தில் தடிமனான தாலிக் கயிருடனும் மிதமான அலங்காரத்திலும் தேவதை போல வந்தவளை ரசித்துப் பார்த்தான்.
அந்த நேரத்தில் அவனுடைய அறையில் அவளைக் கண்டதும் அவனுக்குள் தாபம் எழுந்தது.
“ஏன் ஜானு அங்கயே நின்னுட்ட? உள்ள வா”, என்று மையலுடன் அழைத்தான் ஸ்ரீராம்.
அவனை உறுத்துப் பார்த்த படி உள்ளே வந்தாள். அவளது பார்வையில் அவன் உணர்வுகள் அனைத்தும் வடிந்தன. நிதர்சனம் முகத்தில் அடிக்க அவளுக்கு தன்னைப் பிடிக்காதே என்று அப்போது தான் அவனுக்கு நினைவில் வந்தது.
“எங்களுக்குள்ள எவ்வளவு பிரச்சனை இருக்கு? இதுல நான் முதலிரவை பத்தி கனவு கண்டுட்டு இருக்கேனே? இந்த ராட்சசி என்னை அவ கிட்ட கூட வர விடுவாளான்னு தெரியலையே?”, என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் அருகே வந்தவளை அவன் ஏற இறங்க பார்க்க அவளோ என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறி நின்றாள். அவனிடம் கேட்க அவளுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கிறது தான். ஆனால் முதல் முறை ஒரு ஆணுடன் தனியே ஒரு அறையில் இருப்பது அவளுக்கு தயக்கத்தையும் கூச்சத்தையும் கொடுத்தது. அந்த கூச்சத்திலும் ரம்யாவைப் பற்றி எப்படி அவனிடம் கேட்க என்று தெரியாமல் அவனைப் பார்த்த படி நின்றாள்.
நேசம் தொடரும்….
error: Content is protected !!