Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 3 1

அத்தியாயம்

உந்தன் மௌனம் என்னைக்

கொல்லாமல் கொல்கிறது என்று

எப்போது உணர்வாய் பெண்ணே?!!!



Advertisement

“உன் கிட்ட தினமும் போன்ல பேசுறேன் பாரதி. நாள் சீக்கிரம் ஓடிரும். அங்க படிச்சா தான் என்னோட பியூச்சர்க்கு ரொம்ப நல்லது. ஆனாலும் அங்க நிலைமை எப்படின்னு தெரியாது. இருந்தாலும் உன் கிட்ட பேசுவேன். எனக்கு உன்னோட முடிவு தெரியாம அப்பா கிட்ட என்ன சொல்ல தெரியலை. அவர் என் கிட்ட ஆசைப் பட்டு கேட்ட விஷயம் இது மட்டும் தான். நான் போயிட்டு வரட்டுமா?”

Advertisement

“சரி நீங்க போயிட்டு வாங்க”, என்றாள் பாரதி.

Advertisement

“தேங்க்ஸ். ஆனா இன்னும் உன் மனசுல இருக்குறதை நீ சொல்லலையே?”

Advertisement

“என்ன? என்ன சொல்ல?”, என்று தடுமாற்றமாக கேட்டாள் அவள்.

“உனக்கு என்னைப் பிடிக்குமா?”

“ம்ம், பிடிக்கும். ஆனா இது காதலான்னு எல்லாம் தெரியாது. ஆனா எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் இருக்கு. ஏன்னா உங்களைக் கல்யாணம் பண்ணினா நீங்க சஹியை பாத்துக்குற மாதிரியே என்னையும் பாத்துக்குவீங்கல்ல? அதான்”, என்று பாரதி சொல்ல அவளை குழப்பமாக பார்த்தான் ரிஷி.

பின் தன் கவனத்தை அவள் மேல் செலுத்தியவன் “ரொம்ப தேங்க்ஸ் பாரதி. இன்னைக்கு என்ன சொல்வியோன்னு பயந்துட்டே தான் வந்தேன்”, என்று சொல்லி புன்ன்கைத்தான்.

அவள் பேசியதற்கு அவன் எதுவும் பதில் சொல்லாததால் “ம்ம், நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கவா?”, என்று கேட்டாள் பாரதி.

“கேளு மா”

“நீங்க…”

“என்ன நீங்க… என்ன பாரதி? தைரியமா கேளு”

“நீங்க என்னை சஹியைப் பாத்துக்குற மாதிரி பாத்துக்குவீங்க தானே?”, என்று அவள் கேட்டதும் மீண்டும் குழப்பமாக அவளைப் பார்த்தவன் “அவ என்னோட தங்கை. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணினா நீ என்னோட உயிரா மாறிருவ பாரதி. அவளை விட நான் உன்னை நல்லா பாத்துக்குவேன்”, என்று சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது.

அவள் மலர்ந்த முகம் அவனுக்கும் நிறைவை தந்தது. “நான் படிச்சிட்டு வர வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுவியா பாரதி?”, என்று கேட்டான் ரிஷி.

“கண்டிப்பா, நான் உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்”, என்று பாரதி சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது.

“நிஜமாவே எனக்காக காத்துட்டு இருப்பியா பாரதி?”, என்று கண்கள் மின்னக் கேட்டான் ரிஷி.

“கட்டாயம் காத்துட்டு இருப்பேன்”, என்று அவள் சொன்னதும் சந்தோசத்தில் டேபிள் மீதிருந்த அவள் கையை பற்றி விட்டான். அவன் தொடுகையில் அதிர்ந்து போன பாரதி படக்கென்று கையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அவளை அறியாமலே தான் இழுத்துக் கொண்டாள். அது ஒவ்வாமையா என்று கூட தெரியவில்லை. ஒரு அந்நியனின் தொடுகை உணர்ந்ததும் தன்னால் எழுந்த உணர்வு தான் அந்த விலகல். ஆனால் அவன் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது.

“என்ன, பிடிக்கலையா சாரி”, என்று முகம் சுருக்கி ரிஷி சொல்ல சுற்றி இருப்பவர்களின் மீது பார்வையை செலுத்தினாள் பாரதி. அவள் சுற்றி இருப்பவர்களை பார்த்ததும் தான் அவள் அவர்களை எண்ணி தான் கையை எடுத்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு “ஓ சாரி மா, எனக்கு டக்குன்னு நீயும் நானும் மட்டும் தான் இங்க இருக்குற மாதிரி தோணிருச்சு. இங்க இருக்குற யாரையும் கவனிக்கலை”, என்று சொல்லி சிரித்தான் ரிஷி.

அவள் அமைதியாக இருக்கவும் “சாரி பாரதி, நீ சொன்னது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்துச்சு தெரியுமா? அதனால தான்.  தேங்க்ஸ். அண்ட் சாரி ஓகே வா?”, என்று கேட்டான்.

“சாரி எல்லாம் எதுக்கு? சுத்தி நிறைய பேர் இருக்குறதுனால தான் வேண்டாம்னு சொன்னேன்”, என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள் பாரதி.

அப்போது சஹானா அங்கே வர இருவர் பேச்சும் தடை பட்டது. சஹானாவுக்கு அவர்களின் மலர்ந்த முகமே சந்தோசத்தைக் கொடுத்தது. அதன் பின் அவளிடம் தாங்கள் பகிர்ந்து கொண்ட விசயத்தையும் அவன் ஜெர்மனி போக முடிவு எடுத்த விசயத்தையும் சொன்னார்கள் பாரதியும் ரிஷியும்.

“ஐ சூப்பர், நான் நினைச்ச மாதிரியே நீ தான் எனக்கு அண்ணி”, என்று சொல்லி சந்தோஷமாக அவளைக் கட்டிக் கொண்டாள் சஹானா.

அதன் பின் சஹானாவும் ரிஷியும் பாரதியிடம் விடைப் பெற்றுச் சென்றதும் பாரதி ஹாஸ்டல் நோக்கி நடந்தாள். அவள் மனது சந்தோசத்தில் மலர்ந்து இருந்தது. அதன் பின் பரிட்சையில் அவள் கவனம் சென்றது.

கடைசி பரீட்சை முடிந்து பாரதியும் சஹானாவும் வெளியே வந்தார்கள். “நல்ல படியா ஊருக்கு போயிட்டு வா பாரதி. என்னோட நம்பர் உனக்கு தெரியும்ல? உன் மாமா போன்ல இருந்து அடிக்கடி என் கிட்ட பேசு. நான் அண்ணன் அவன் நம்பர் தந்ததும் உனக்கு தரேன். அவன் கிட்டயும் பேசு. அப்புறம் கூடிய சீக்கிரம் உனக்குன்னு ஒரு போன் வாங்கி வச்சிக்கோ. நான் வாங்கித் தறேன்னு சொன்னாலும் கேக்க மாட்டிக்க. சரி நான் கிளம்புறேன்”,  என்றாள் சஹானா.

“சரி சஹி நான் அடிக்கடி பேசுறேன்”, என்று சொல்லி அவள் ஹாஸ்டல் நோக்கி நகரப் பார்க்க “பாரதி”, என்று அழைத்தாள் சஹானா.

பாரதி திரும்பி பார்க்க “அங்க பாரு உன் ஆளு உன்னைப் பாக்க சரியான நேரத்துக்கு வந்துட்டான்”, என்று சஹானா சொன்னதும் திரும்பி பார்த்தாள்.

அங்கே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரிஷி தான் பட்டான். அவனைக் கண்டு பாரதி புன்னகைக்க அவனும் இவர்கள் அருகில் வந்து பரீட்சை எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கேட்டான். மேலும் சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் ரிஷியும் சஹானாவும் கிளம்பிச் செல்ல பாரதி ஹாஸ்டல் நோக்கிச் சென்றாள். பின் ஹாஸ்டலைக் காலி செய்து விட்டு தேவையில்லாத பொருள்களை அங்கேயே வைத்து விட்டு ஊருக்கு பயணமானாள். காலேஜ் பகலிலே முடிந்தாலும் அவள் மாலை ஆறு மணிக்கு தான் திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் பாரதி. எல்லாவற்றையும் ஒதுங்க வைக்க அவளுக்கு அவ்வளவு நேரம் ஆகி விட்டது.

மாலை நேர குளிர் காற்று அவள் முகத்தில் வந்து மோதியது. டிக்கட் எடுத்து விட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள். ரிஷியைப் பற்றிய நினைவு தான் அவளுக்கு வந்தது. அவனுடைய அன்பு, பொறுப்பு என அவனைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

அவன் நாளை இரவு ஜெர்மனி கிளம்புகிறான் என்று அவளுக்கு தெரியும். அவளுக்கு இன்னும் அவனது போன் நம்பர் தெரியாது.

“ஜெர்மனி போய் நம்பர் வாங்கியதும் நான் சஹானா கிட்ட நம்பர் கொடுக்குறேன். நீ அவ கிட்ட வாங்கி பேசு”, என்று சொல்லியிருந்தான்.

நம்பர் கிடைத்தாலும் அவளால் பேச முடியாதே. அவளிடம் தான் செல் கிடையாதே. “வேலைக்கு போனதும் முதல் மாச சம்பளத்தில் ஒரு செல் வாங்கணும்”, என்று எண்ணிக் கொண்டாள்.

யோசித்த படியே வந்தவள் சிறிது நேரத்தில் நன்கு தூங்கி விட்டாள். அவள் திருநெல்வேலியில் வந்து இறங்கும் போது பத்து மணியாகி விட்டது. ஏற்கனவே அவள் வருவது தெரியும் என்பதால் அவளது மாமா மூர்த்தி அவளை அழைப்பதார்க்காக பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருந்தார்.

அவரைக் கண்டதும் புன்னகைத்த படியே அவரை நெருங்கியவள் “மாமா எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன் பாரதி. பரீட்சை எல்லாம் எப்படி எழுதிருக்க? எல்லாம் ஈஸியா இருந்துச்சா?”

“நல்லா எழுதிருக்கேன் மாமா. ரொம்ப ஈஸியா இருந்துச்சு. இந்த தடவையும் காலேஜ் பர்ஸ்ட் நான் தான் வருவேன். சரி அத்தை, பிரவீன் எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் மா. சரி வீட்டுக்கு போகலாமா?”

“சரி மாமா, எங்க வீட்டுக்கே போகலாம். இந்நேரம் உங்க வீட்டுக்கு வந்தா அத்தைக்கு சங்கடம் மாமா”

“அவ கிடக்கா, நீ நம்ம வீட்டுக்கு வா”

“நாளைக்கு பகல்ல வரேன் மாமா. இப்ப வேண்டாம்”, என்றதும் அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினார் அவளது மாமா.

இருள் அந்த தெருவையே மூடியிருக்க அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினாள் பாரதி. அமுதா தான் வந்து கதவைத் திறந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!