Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 3 2

தலை கலைந்து உள்ளாடை வெளியே தெரிய அவள் வந்த கோலம் பாரதிக்கு சங்கடத்தைக் கொடுத்தது. “இந்நேரம் வந்தது தப்போ? மாமா வீட்டுக்கே போயிருக்கணுமோ?”, என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே “கொஞ்சம் சீக்கிரம் வரதுக்கு என்ன? நடு ராத்திரில தான் வரணுமா? சரி சரி கதவை பூட்டிரு. எனக்கு தூக்கம் வருது”, என்று சிடுசிடுத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் அமுதா.

என்றுமே அவள் மூர்த்தி வீட்டில் இரவு தங்கியது இல்லை. அதனால் தான் இன்றும் இங்கே வந்து விட்டாள். ஆனால் அங்கே வந்தது தவறு என்று லேட்டாக புரிந்தது.



Advertisement

தலை விதியை நொந்த படியே கதவைப் பூட்டி விட்டு பாத்ரூம் சென்று உடை மாற்றிய பாரதி அங்கே செல்ஃபில் கிடந்த அவளது பழைய பாயை எடுத்து விரித்து அதில் படுத்து விட்டாள்.

இந்நேரம் பெற்ற அம்மாவாக இருந்திருந்தால் சாப்பிட்டியா? பயணம் எப்படி இருந்தது? வீட்டுக்கு எப்படி வந்த? அப்பாவை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பிருப்பேன்ல? என்று சொல்லியிருப்பாள் என்று எண்ணிக் கொண்டாள் பாரதி.

Advertisement

Advertisement

பின் இது எப்போதும் நடப்பது தானே என்று எண்ணிக் கொண்டவள் அப்படியே தூங்கிப் போனாள். காலையில் சீக்கிரம் எழுந்தவள் வாசல் பெருக்கி கோலம் போட்டு விட்டு “நான் மாமா வீடு வரைக்கும் போயிட்டு வரேன் சித்தி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். அதற்கு மேல் அங்கே இருந்தால் காலைச் சமையலும் அவள் தலையில் தான் விழும். மதியச் சமையலும் அவள் தலையில் தான் விழும்.

தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு மூர்த்தி வீட்டை நோக்கி அழுத்தினாள். போகும் வழி முழுவதும் நெல் வயல்களாக தான் இருந்தது. அதை ரசித்த படியே சென்றாள்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த மானூர் என்ற தாலுகா. விவசாயம் நிறைந்த ஊர் என்பதால் எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்தது.

மூர்த்தி வீட்டுக்கு சென்றதும் அவரது மனைவி மீனா அவளை ஆசையாக அனைத்துக் கொண்டாள். அக்கா என்று சொல்லி பிரவீனும் அவளை வரவேற்றான். அந்த வீட்டில் தான் ஒரு உயிர்ப்பிருப்பதை உணர்ந்தாள் பாரதி.

குளித்து முடித்து வந்த மூர்த்தி “மீனா பேச வேண்டியது எல்லாம் அப்புறம் பேசலாம். அவ இன்னும் சாப்பிட்டுருக்க மாட்டா. முதல்ல அவளுக்கு சாப்பாடு கொடு”, என்றார்.

“நான் ஒரு கூறு கெட்டவ. பிள்ளையை பாத்ததும் எல்லாம் மறந்து போச்சு. ஹாஸ்டல்ல நாக்கு செத்து போய் வந்திருப்பா. பாரதி கண்ணு நீ தம்பி கூட உக்காரு. அத்தை உனக்கு சூடா தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்”, என்றாள் மீனா.

அதன் பின் பாரதியும் பிரவீனும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சொல்லி விட்டு மூர்த்தி வயலுக்கு கிளம்பினார்.

மூர்த்தி விவசாயம் தான் பார்ப்பதால் சீக்கிரம் சென்று விட்டார். அதன் பின் மீனா தோசை சுட்டு போட பிரவீனும் பாரதியும் ஒரு பிடி பிடித்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டதும் “அத்தை நானும் தம்பியும் வயலுக்கு போறோம்”, என்றாள் பாரதி.

“போயிட்டு வாங்க. அங்க போனா மாங்காய் தின்னோமா இளனி குடிச்சோமான்னு வீட்டுக்கு வந்துரணும். அதை விட்டுட்டு உன் மாமா கூட சேந்து களை பிடுங்கவும், தண்ணி பாய்க்கவும் கூடாது. அதெல்லாம் உன் மாமா பாத்துக்குவார் சரியா? அப்புறம் மாமாவுக்கு இந்த கஞ்சியைக் கொடுத்துருங்க. மதியம் சாப்பிட சீக்கிரம் வீட்டுக்கு வந்துரணும். அக்காவும் தம்பியும் சேந்து ஊரு சுத்தக் கூடாது”, என்று அன்புடன் அரட்டினாள் மீனா.

அவளுடைய அக்கறையில் புன்னகைத்த பாரதி “சரிங்கத்தை, வா டா பிரவீன்”, என்று சொல்லி அவனுடன் வயலுக்கு நடந்தாள். அதன் பின் அவளுக்கு நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. பிரவீனுடன் சேர்ந்து வயல் வரப்புகளில் சுற்றினாள் பாரதி.

மூர்த்தி மறுக்க மறுக்க அவருக்கு உதவி செய்தாள். எங்கு பார்த்தாலும் பசுமை, பூத்து குலுங்கிய மரங்கள் என அந்த ஊரே ரம்மியமாக இருந்தது. அதனால் சந்தோசமாகவே பிரவீனுடன் உலாவினாள்.

அன்று மதியம் சாப்பிடும் போது “படிப்பு முடிஞ்சிட்டு பாரதி. அடுத்து என்ன செய்ய போற? மேல படிக்க போறதுன்னா படி மா. மாமா உன்னைப் படிக்க வைக்கிறேன். எந்த காலேஜ் நல்ல காலேஜ்னு பாரு. இல்லை இப்ப படிச்ச காலேஜ்லயே வேணும்னா படி”, என்றார் மூர்த்தி.

அதற்கு மேல் அவருக்கு கஷ்டம் கொடுக்க மனதில்லாமல் “இல்லை மாமா கொஞ்ச நாள் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். ஏதாவது நல்ல வேலை வந்தா சொல்லுங்க”, என்றாள் பாரதி.

அதன் பின் மாலை அவளுடைய வீட்டுக்கு சென்று விட்டாள். இரவு உணவை அவள் தான் செய்ய வேண்டும். ஹாஸ்டலில் இருந்து விட்டு வீட்டுக்கு வந்த மகளை வா என்று கூட கேசவன் அழைக்க வில்லை. அமுதாவின் பிள்ளைகளும் அவளிடம் பேச வில்லை. அதனால் இரவு சமையலை முடித்து விட்டு மொட்டை மாடிக்கு செல்பவள் அவர்கள் அனைவரும் படுத்த உடன் தான் கீழே வந்து இரவு உணவை உண்ணுவாள். அதன் பின் படுத்து விடுவாள்.

அமுதாவின் பிள்ளைகள் கேசவன் அமுதாவின் அறையில் ஒரு தடுப்பு சுவர் எழுப்ப பட்டு இரண்டு அறையாக பிரிக்கப் பட்டிருந்ததால் உள்ளே தூங்கினர். பாரதி மட்டும் ஹாலில் படுத்திருப்பாள். பின் அதிகாலையில் எழுந்து முத்தம் தெளித்து விட்டு மூர்த்தி வீட்டுக்கு சென்று விடுவாள். நாட்கள் அவளுக்கு எப்போதும் போல் நகர்ந்தது. ஆனால் பாரதி ரிஷி மற்றும் சஹானாவிதம் பேசவே இல்லை.

அமுதா எப்போதும் வீட்டிலே இருப்பதால் அவளால் வீட்டில் இருக்கும் போனை எடுக்க முடியவில்லை. அதனால் அவளால் சஹானாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மூர்த்தி போனில் இருந்து அழைக்கவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஏனென்றால் மூர்த்தி போனில் இருந்து அவள் சஹானாவை அழைத்தால் சஹானா ரிஷியின் நம்பரைத் தருவாள். நம்பர் தந்தவுடன் அவளால் மூர்த்தி போனில் இருந்து அவனை அழைக்க முடியாதே. சஹானா மூலம் மூர்த்தியின் எண் ரிஷிக்கு தெரிந்தால் அவனும் அழைப்பான். அப்போது ரிஷி யார் என்று மூர்த்திக்கு தெரிந்தால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற பயத்திலே அவள் சஹானாவை அழைக்க வில்லை.

இப்படியே நாட்கள் அவளுக்கு ஒரு நாடோடி போல ஓடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் அவள் வயல் வரப்பில் அமர்ந்து நவீனுடன் கதை பேசிக் கொண்டிருக்க அதே நேரம் அதே ஊரில் அமைந்த ரைஸ் மில்லில் அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் தமிழன்பன். வீட்டினருக்கு தமிழ்.

மானூரிலே அவர்கள் குடும்பம் தான் வசதியானது. வீட்டுக்கு ஒரே பையன். வயது இருபத்தி ஆறு. திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு கடந்த ஐந்து வருடமாக தன்னுடைய தந்தையின் தொழில்களைப் பார்த்துக் கொள்கிறான்.

கோதுமை நிறமும் ஆறடி உயரமும் அடர்த்தியான மீசையும் என கம்பீரமாக இருந்தான். இவர்களுக்கு ரைஸ் மில், கரும்பு ஆலை, வட்டிக்கு விடுதல், பெரிய அளவிலான விவசாயம், இடம் வாங்கி விற்பது என பல தொழில்கள் உண்டு.

இவனது அப்பா பாண்டியனும் அம்மா கோகிலாவும் இவனுக்கு இப்போது தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு செவ்வா தோஷம் இருப்பதால் வரன் தட்டித் தட்டிப் போகிறது. அதனால் கோகிலா கோயில் கோயிலாக மகனுக்காக பரிகாரம் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பம் கிடையாது.

அவனுக்கு பெண்கள் மேல் அதிகம் ஆர்வமும் கிடையாது. அவனுடன் கல்லூரியில் படித்த சில பெண்கள் மூலம் அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் பெண்களை வெறுக்க வைத்தது.

அவனுடைய நண்பர்களை காதல் என்று சொல்லி ஏமாற்றி அவர்களுடைய பணத்தை எல்லாம் கரியாக்கி ஏமாற்றிச் சென்ற பெண்களைக் கண்டதால் இவனுக்கு பெண்கள் என்றாலே சுயநலவாதிகள் என்ற எண்ணம் தான் வரும்.

தமிழ் மிகவும் சுறுசுறுப்பானவன். தினமும் காலையில் எழுந்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, யோகா என்று செய்பவன் அதன் பின் கோகிலா தரும் சத்தான உணவை உண்டு விட்டு ஒவ்வொரு தொழிலையும் பார்க்கச் சென்று விடுவான்.

தொழிலாளிகளுடன் சேர்ந்து சில சமயம் இறங்கி வேலை செய்வான். அவர்களின் தோட்டத்தில் வேலை செய்யும் பல பெண்கள் அவன் மேல் பைத்தியமாக இருந்தார்கள். அவர்களின் பார்வையை கண்டு கொள்ளும் தமிழுக்கோ பெண்கள் மேல் மேலும் வெறுப்பு தான் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!