Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 15 2

“நாம மத்தவங்களுக்காக வாழ முடியாது மா. அப்படி யாராவது, எதாவது பேசினா, என்கிட்டே பேச சொல்லுங்க. நான் அவங்களுக்குப் பதில் சொல்லிக்கிறேன்.” என்றதும், குழலி அமைதியாகி விட… 


“ஒரு தடவை எதோ தெரியாம தப்பு செய்திட்டா, அவங்க காலம் எல்லாம் அதுக்குத் தண்டனை அனுபவிக்கனுமா என்ன?” 


“இதே நம்ம வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்தா, பார்த்திட்டு சும்மாவா இருப்போம். அவங்க வாழ்க்கையைச் சீர் பண்ணத்தானே பார்ப்போம். அதே மத்தவங்களுக்குன்னா வேறையா?” 


யார் என்ன சொன்னாலும், நந்தா தன் மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பது குழலிக்கு புரிந்து விட, அவர் மேலும் அவனிடம் வாதிடவில்லை. அதுவும் திருமணமே முடிந்து விட்டது. இனி பேசி என்ன ஆகப்போகிறது என்றும் நினைத்தார். 



Advertisement


நந்தா காலை உணவு முடிந்ததும், கயலை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். இருவரும் நடந்தே சென்றனர். 


செல்லும் வழியில், அவளிடம் வீட்டு தொலைபேசி எண் மற்றும் வீட்டு விலாசத்தை மனப்பாடம் செய்ய வைத்தான். பேசியபடியே பேருந்து நிலையம் வந்தவர்கள், அங்கு வந்த பஸ்சில் ஏறினர். 


நந்தா கயல்விழியின் கல்லூரி பெயரை சொல்லி டிக்கெட் எடுக்க, அப்போதுதான் அவளுக்கே கல்லூரிக்குச் செல்கிறோம் என்று தெரியும். 

Advertisement


செல்லும் வழியில் அவன் அவளுக்கு முக்கியமான கட்டிடங்கள், இடங்கள் எல்லாம் காண்பித்துக் கொண்டே வந்தான். 

Advertisement


கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியவர்கள், கல்லூரிக்குச் செல்லாமல், சாலையைக் கடந்து, எதிர்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். மீண்டும் அங்கு வந்த பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்தனர். 


“நல்லா கவனிச்சியா? நாளையில இருந்து நீ காலேஜ் போகணும்.” என்றபோது, கயல் வேகமாக மண்டையை உருட்ட…இவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது, அங்கே வருணும், தாரணியும் இருந்தனர். 


குழலி அவர்களுக்குப் பழரசம் தயார் செய்ய… கயல் அவர் செய்ததை எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்தவள், தானும் ஒன்றை எடுத்து பருகினாள். 

Advertisement


அவள் குடித்து முடிக்கக் காத்திருந்த நந்தா, “இந்தா இந்த டைரில எல்லாரோட போன் நம்பர், நம்ப வீட்டு அட்ரஸ், எல்லாம் எழுதி இருக்கேன். இந்தப் பணமும் வச்சுக்கோ.” அவன் கொடுக்க, கயல் கவனமாக வாங்கிக்கொண்டாள். 


“இப்ப என்ன பண்ற? இங்க இருந்து கிளம்பி காலேஜ் போயிட்டு, திரும்ப அங்க இருந்து பஸ் பிடிச்சு வீட்டுக்கு வர.” என்றதும், அவளுக்கு ஐயோ என்றிருந்தது. 


“நான் மட்டுமா?” அவள் பாவமாகக் கேட்க, 


“நாளைக்கு நீ தனியாத்தான் போகனும், இப்ப ஒரு தடவை போயிட்டு வந்திட்டா… நாளைக்கு டென்ஷன் இருக்காது. போயிட்டு வா…” என்றான். 


“யாருக்கு டா டென்ஷன் இருக்காது, அவளுக்கா? உனக்கா?” வருண் மடக்க… 


“எனக்குன்னே வச்சுக்கோ…. நான் இவ எப்படிப் போவாளோன்னு கவலைப்பட வேண்டாம் பாரு.” என வருணுக்குப் பதில் கொடுத்தவன், “நீ இன்னும் கிளம்பலையா?” எனக் கயலிடம் கேட்டான். 


“அத்தை பாவம், தினமும் தனியா சமைக்கிறாங்க. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்.” 


“போகக் கால் மணி நேரம், வர கால் மணி நேரம் ஆகும். அரை மணி நேரத்தில உன் அத்தை அப்படி ஒன்னும் வேலை பண்ணி இருக்க மாட்டாங்க. நீ வந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு.” 


“நான் எங்கையாவது தொலைஞ்சு போயிட்டா.” 


“அதுக்குத்தான் போன் நம்பர் கொடுத்திருக்கேன். அங்க இருக்கப் பப்ளிக் போன்ல இருந்து கூப்பிடு.” 


“கூப்பிட்டா, நீங்க வருவீங்களா?” 


“இல்லை, வீட்டுக்கு வர வழி சொல்லுவேன்.” 


இவன் விடமாட்டான் என நினைத்தவள், வேறுவழியில்லாமல் கிளம்ப…. “போய்ப் பர்ஸ் எடுத்திட்டு வா… எல்லாத்தையும் கைலையே வச்சுப்பியா?” நந்தா சொன்னதும், கயல் சென்று கைப்பை கொண்டு வந்தாள். 


“பார்த்து போ, ஒழுங்கா பார்த்து ரோடு கிராஸ் பண்ணு.” என்று சொல்லி அனுப்பினான். 


கயலோடு வாசல் வரை வந்த வருண், “பஸ் ஸ்டாப்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு, திரும்பி வந்திடு.” எனத் தங்கைக்குக் குறுக்கு வழி சொல்லி கொடுக்க… 


“போங்கண்ணா… தெரிஞ்சா திரும்ப அனுப்புவாரு. நான் போயிட்டே வரேன்.” என்றாள். 


கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் இதற்கு முன் கல்லூரிக்குப் பேருந்தில் சென்று வந்தவள் தானே, அதனால் சமாளித்துக் கொண்டாள். 


எல்லாப் பேருந்தும் அவள் கல்லூரி வழியாகத்தான் செல்லும் என்றாலும், எதற்கும் நடத்துனரிடம் தன் கல்லூரியின் பெயர் சொல்லி, நிற்குமா எனக் கேட்டுக் கொண்டே ஏறினாள். 


சரியாக இறங்கி விட வேண்டும் என்ற பதட்டத்தில், செல்லும் வழியை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். 


இதற்குப் பிறகு இது வரும் என்று நந்தா சொல்லி இருந்தது. அவளுக்கு உதவியாக இருக்க… ஸ்டாப்பிங் வந்ததும், அவளே எழுந்துகொள்ள, நடத்துனரும் குரல் கொடுத்தார். 


அவரை நன்றியுடன் பார்த்தவள், பஸ்சில் இருந்து இறங்கி, நிதானமாகச் சாலையைக் கடந்தாள். அங்கே மட்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் பேருந்துக்காகக் காத்திருந்தாள். பிறகு வந்த பேருந்தில் ஏறி, சரியாக வீடு இருந்த ஸ்டாப்பிங்கில் இறங்க, அங்கே நந்தா அவளுக்காகக் காத்திருந்தான். 


வேண்டுமென்றே அவனைப் பார்க்காதது போல், அவள் அவனைக் கடந்து செல்ல… புன்னகையுடன் அவள் கைபிடித்து நிறுத்தியவன், “கோபமா கயல். நீ எல்லாத்தையும் தனியா சமாளிக்கக் கத்துக்கணும்.” என்றான். 


“நான் இங்க இருந்தா, நானே உன்னைக் கூடிட்டு போய் விடுவேன்.” என்று அவன் சொன்னபோது, அதில் இருந்த நிதர்சனம் கயல்விழிக்கும் புரிந்தது. 


அன்று வேறு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். மதிய உணவு அனைவரும் சேர்ந்து சாப்பிடும் போது, நந்தா தாரணியிடம் அண்ணன் என்ற உரிமையில் பேசினான். 


“தாரணி, நீ நம்ப வீட்ல இருக்க மாதிரியே, உன் மாமியார் வீட்லயும் இருக்க… உன் மாமியார் வேலை செய்றாங்க, நீ பார்த்திட்டு இருக்க. நீயும் எதாவது செய்யலாம் இல்லையா?” 


“எனக்கு வர மாட்டேங்குது அண்ணா. நான் என்ன பண்றது?” 


“ரெண்டு நாள் பழகினா வந்திடும். ஏன் கயல் செய்யலை? நீயும் பார்த்து பழகிக்கோ. யாரும் குறை சொல்ற மாதிரி நடந்துக்காத.” 


நந்தா சொன்னால் தாரணி கேட்பாள்தான் . ஆனால் அவன் கயலோடு ஒப்பிட்டதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. 


இதற்கு முன் அவள் அண்ணனிடம் அவளுக்குத்தான் முன்னுரிமை. ஆனால் கயல்விழி வந்ததில் இருந்து அண்ணன் அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்ய…. இனிமேல் நந்தாவின் மனதில் கயல்விழிக்குத்தான் முன்னுரிமை என்பது புரிந்தாலும், ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. 


ஏற்கனவே அந்தக் கடுப்பில் இருந்தவள், கயல்விழி கல்லூரியில் எடுத்த பிரிவு பற்றிப் பேச்சு வர…. “ஹோம் சயின்ஸ்ஸா? அது மக்குங்கதான் படிக்கும்.” என வாய்விட்டாள். 


கயல்விழி முகம் கருக்காமல் இருக்க… பெரிதும் பாடுபட்டாள். 


“நீ டுவல்த்ல எவ்வளவு பெர்சண்டேஜ்?” 


“உங்களுக்குத் தெரியாதா அண்ணா? என்பத்தஞ்சு.” 


“அவ எவ்வளவுன்னு கேளு?” நந்தா சொல்ல… தாரணி கயல்விழியைப் பார்க்க…. “என்பத்திஎட்டு.” என்றாள் கயல். 

“அவளுக்கு அந்தக் குருப் பிடிச்சிருக்கு. அதனால எடுத்தா. உனக்குத் தெரியாம எதுவும் பேசக் கூடாது. அதுவும் மத்தவங்க மனசு புண் படுத்திற மாதிரி.” 


வருண் சற்று அழுத்தமாகவே சொல்ல…. தாரணிக்கு மிகுந்த கோபம். 


“சில பேர் எல்லாம் உரு தட்டியே மார்க் வாங்கிடுவாங்க. அதுக்காகப் புத்திசாலின்னு அர்த்தம் இல்லை.” தாரணி விடாமல் வழக்கடிக்க…. வருண் அவளை முறைத்தான்.

எங்கே தன்னால் சண்டை வந்துவிடுமோ எனப் பயந்த கயல்விழி, “ஆமாம், எனக்குக் கொஞ்சம் படிப்புச் சுமாராதான் வரும். அதனாலத்தான் எனக்கு என்ன வரும்னு பார்த்து குரூப் எடுத்தேன்.” என அவளே விட்டுக் கொடுத்து பேச…

தாரணி கேட்டுக்கோங்க என்பது போல் மற்றவர்களைக் கேலியாகப் பார்க்க… இதற்கு மேல் பேசினால் சண்டையில் போய் முடியும் என எல்லோரும் அமைதியாக இருந்தனர். 


இரவு எட்டு மணி போல் உணவை முடித்து விட்டு நந்தா ஊருக்கு கிளம்ப…. கயல்விழி அவனுக்குத் தேவையானது பார்த்து எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். 

காலில் ஷு அணிந்தபடி, “நீயும் என்னோட வரியா?” அவன் கேட்க… அவள் வரவில்லை எனத் தலையசைத்தாள். 


அவளின் அம்மா வீடு இருக்கும் ஊருக்குத்தானே அவன் செல்கிறான். அப்போதும் வரவில்லை என அவள் சொன்னால், அவள் மனம் எந்த அளவிற்குக் காயம்பட்டிருக்கும் என நந்தாவுக்கு நன்றாகவே புரிந்தது. 


“நீங்க திரும்ப இங்க எப்ப வருவீங்க?” கயல்விழி ஆர்வமாகக் கேட்க…. 


“எப்ப ப்ரீயா இருக்கேனோ அப்ப வருவேன்.” என்றான். 


அவளுக்கு ஆயிரம் ஜாக்கிரதை, பத்திரம் சொல்லி அவன் விடைபெற… 


“டேய்  நாங்க எல்லாம் இங்கத்தான் இருக்கோம். பார்த்துக்க மாட்டோமா? நீ கிளம்பு.” என்றான் வருண். 


நந்தா மனமே இல்லாமல் கிளம்பி சென்றான். அவனை ரயில் நிலையத்தில் விடப் பரணி உடன் சென்றான். கயல்விழிக்காக அன்று வருணும், தாரணியும் அங்கயே தங்கினர். 


எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தனர். குழலி மறுநாள் அவர் கல்லூரிக்கு செல்ல… எல்லாம் எடுத்து வைப்பதை பார்த்த கயல், அவளும் தன் அறைக்குச் சென்று எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்தாள். 

பரணி வந்ததும் எல்லோரும் படுக்கச் செல்ல…. குழலியின் அறையில் இருந்த இன்னொரு கட்டிலில் படுத்துக் கொண்ட கயல்விழி, விளக்கை அனைத்ததும், கண்ணீர் சிந்தினாள். 


நந்தா இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. அவன் சென்றதும் அந்த வீடே வெறிச்சென்று இருந்தது. அவன் சென்ற ஒரு மணி நேரத்திலேயே இந்த நிலை என்றால்… இனி வரும் நாட்களை எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!