Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 15

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 15

நேற்று போலவே இன்றும் கயல்விழி சுவரை ஒட்டி படுத்துக் கொள்ள, அவள் அருகில் இடைவெளி விட்டு நந்தா. ஆனால் இன்று படுத்தவுடன் உறங்கி விடாமல் விழித்துக் கொண்டு இருந்தாள். 


“உங்க அம்மாகிட்ட பேசினியா?” 


“இல்லை.” 



Advertisement


“இங்க வந்து போன் பண்ணவே இல்லையா?” 


“நீங்க ஒன்னும் சொல்லலையே?” 


அவள் பக்கம் திரும்பி படுத்தவன், “அப்படியே அடிச்சேன்னா தெரியும். இதைக் கூடவா நான் சொல்லணும்.” 

Advertisement


அவனின் கோபம் பார்த்து மிரண்டவள், மௌனமாகி விட… 

Advertisement


“நீ எப்படி இருக்கியோன்னு நினைச்சு, உங்க அம்மா எவ்வளவு கவலைப்படுவாங்க. நாளைக்குக் காலையில முதல்ல அவங்களுக்குப் போன் பண்ணி பேசுற நீ.” 


அதற்கும் கயல்விழி பதில்சொல்லாமல் இருக்க. 


“கயல், வாயை திறந்து பதில் சொல்லு.” 

Advertisement


“சரி.” 


“அவங்களுக்கு நம்ம வீட்டு நம்பர் கொடு. அவங்க பேச நினைக்கும்போது போன் பண்ணி பேசட்டும்.” 


“ம்ம்…” 

கயல்விழியின் முகத்தைப் பார்த்த நந்தாவுக்கு, தேவையில்லாமல் அவளிடம் கோபபட்டு விட்டோமோ எனத் தோன்றியது. திருமணமான நிமிடத்தில் இருந்து அவன் சொல்வதைத்தான் அவள் செய்கிறாள். அப்படியிருக்க அவளைக் கோவித்து என்ன பயன்? 


“கயல், கோபமா?” 


அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்க. 


“எனக்கு நிறைய விஷயங்கள் நியாபகம் இருக்காது கயல். அதுவும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா… வீட்டு விஷயம் எல்லாம் நியாபகம் இருக்கிறது இன்னும் கஷ்டம்.” 


“நான் எப்ப ப்ரீயா இருப்பேன். உனக்கு எப்ப போன் பண்ணுவேன். எதுவும் சொல்ல முடியாது. அது அப்ப இருக்கிற சூழ்நிலையைப் பொறுத்துதான்.” 


“இதுல நீ என்னை எதிர்பார்த்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. எப்ப என்ன பண்ணணுமோ அதை நீயே பண்ணிடு சரியா?” 


“ம்ம்…” 


“உனக்கு ஏதாவது என்கிட்டே கேட்கணுமா?” 


“நீங்க ஊருக்கு போன பிறகு நான் இங்கதான் தூங்கணுமா?” 


அவள் தனியாக உறங்க பயந்து கொண்டு கேட்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், “இல்லை, அம்மா ரூம்ல இன்னொரு கட்டில் இருக்கும். அதுல படுத்துக்கோ. ஆனா உன் சாமான் எல்லாம் இங்கயே இருக்கட்டும். பகல் நேரத்தில இந்த ரூமையே உபயோகப்படுத்திக்கோ.” 


“சரி…” 


“பரணிகிட்ட உனக்குப் பஸ் பாஸ் எடுத்து தர சொல்றேன். அப்புறம் உனக்குத் தேவையான பணம் இங்க அலமாரில இருக்கும். காலேஜ் போகும்போது பர்ஸ்ல எப்பவும் நூறு ருபாய் வச்சுக்கோ. அதுதவிர உனக்குச் செலவுக்குத் தேவையானது எடுத்துக்கோ. பணம் காலி ஆகிடுச்சின்னா அம்மாகிட்ட கேளு.” 


“ம்ம்...” 


“அடுத்த வாரம் உமாவே வந்து உன்னைப் பார்கிறேன்னு சொல்லி இருக்கா.” 


“ம்ம்…” 


“எல்லாத்துக்கும் ம்ம் தானா?” நந்தா புன்னகைக்க... பதிலுக்குக் கயல் முகமும் மலர்ந்தது. 


“குட், கொஞ்ச நேரம் பாட்டு கேட்கலாமா.” என்றவன், டேப்பை போட்டு விட்டான். 


வரிசையாக இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க… கேட்டபடியே நந்தா உறங்கி விட, கயல்விழி விழித்திருந்தாள். 


பாடல் முழுவதும் முடிந்து, டேப் ஓடுவது தானாக நின்றுவிட… அந்தச் சத்தத்தில் கண்விழித்த நந்தா, பக்கத்தில் இருந்தவளை பார்க்க… கயல்விழி அழுது கொண்டிருந்தாள். நந்தா பதறி போய் எழுந்தான். 

“என்ன கயல்? எதுக்கு மா அழற? கனவு எதுவும் கண்டியா?” 


அவன் கேட்டதற்கு இல்லை எனத் தலையாட்டியவள், தானும் எழுந்து அமர்ந்து, “நீங்க மட்டும் வரலைனா, நான் என்ன ஆகிருப்பேன்னு யோசிச்சேன். அதை நினைச்சதும், அழுகை வந்துடுச்சு.” குழந்தையாகத் தேம்பியவளை பார்த்து அவனுக்கு மனம் வலித்தது. 


“அதுதான் நான் வந்துட்டேன் இல்ல…” என்ற நந்தா அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். 


“கயல், இதுக்கு முன்னாடி என்ன நடந்திருந்தாலும், அது எல்லாம் முடிஞ்சு போனது. அதையே நினைச்சு மனசை அலட்டாம, இப்ப உன் வாழ்க்கையை எப்படிச் சந்தோஷமா கொண்டு போறதுன்னு மட்டும் பாரு.” 


“இனிமே உனக்கு ஒரு பிரச்சனையும் வராது. புது எடம் புது மனுஷங்க. உனக்கே கொஞ்ச நாள்ல நல்ல மாற்றம் தெரியும் பாரு.” 


“இந்தா கொஞ்சம் தண்ணி குடி.” என அவளுக்குத் தண்ணீர் கொடுத்து, படுக்க வைத்தான். 


டேப்பில் இருந்த கேசட்டை எடுத்து, அவன் மறுபக்கம் மாற்றிப் போட… மீண்டும் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. 


அவள் கையை எடுத்து தன் மீது வைத்து நந்தா வருடி விட… மனதில் இருப்பதைச் சொல்லி விட்டதாலோ என்னவோ, சிறிது நேரத்தில் கயல்விழி உறங்கி விட்டாள். அந்த நிம்மதியில் அவனும் கண் அயர்ந்தான். 


மறுநாள் காலை கயல்விழி கண் விழித்த போது, அன்றும் நந்தா அவளுக்கு முன்பே எழுந்து சென்று இருந்தான். உறக்கத்தில் நழுவி இருந்த தாவணியை எடுத்துச் சரியாகப் போட்டுக் கொண்டவள், தன் கணவனிடம் சென்றாள். 


வெளிமாடியில் இருந்தவன், அணிந்து இருந்த உள் பனியன் தொப்பலாக வியர்வையில் நனையும் அளவுக்கு உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். 


அவன் மனைவியோ, கர்லாக்கட்டையை அவன் தலைக்கு மேல் லாவகமாகச் சுற்றுவதை ஆச்ரயமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 


அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவன், கையில் இருந்ததைக் கீழே வைத்துவிட்டு அவளை அருகில் அழைத்தான். 


“குட் மார்னிங் கயல்.” 


“தினமும் இதெல்லாம் பண்ணுவீங்களா?” 

“முதல்ல நான் விஷ் பண்ணதுக்குப் பதிலுக்கு நீயும் விஷ் பண்ணு. அப்பத்தான் சொல்வேன்.” 


“குட் மார்னிங்.” என்று வார்த்தையாக மட்டும் சொல்லாமல், கயல் சல்யுட் வைக்க… நந்தா சிரித்தான். 


“ஆமாம் தினமும் பண்ணுவேன். என்னோட வேலையில தினமும் சரியான நேரத்துக்கு எல்லாம் சாப்பிட முடியாது. அதனால சாப்பிடும் போது, நல்லா கட்டிடுவேன். இப்படி எல்லாம் எக்ஸ்ர்சைஸ் பண்ணத்தான் உடம்பு பிட்டா இருக்கும்.” 


“நீயும் தினமும் எக்ஸ்ர்சைஸ் பண்ணு, அன்னைக்கு முழுக்க நாள் சுறுசுறுப்பா இருக்கும். நைட்டும் நல்லா தூக்கம் வரும்.” 


“ம்ம் சரி.” என்று சொல்லிவிட்டு கயல் அப்படியே நிற்க… 


“என்ன அப்படியே இருக்க… இந்தக் கட்டையை எடுத்து நாலு சுத்து சுத்து.” நந்தா விளையாட்டுக்கு சொல்ல... கயல் உண்மை என்று நினைத்து, அந்தக் கட்டையைத் தூக்க… அவளால் அதைப் பாதி உயரம் கூடத் தூக்க முடியவில்லை… இதில் எங்கிருந்து சுற்றுவது, அவள் நந்தாவை பார்த்து அசடு வழிய… 


“நான் என்ன சொன்னாலும் செய்வியா?” என்றவன், “சரி அது வேண்டாம் ஸ்கிப்பிங் குதி போதும்.” என்றான். 


“இது ரொம்ப ஈஸி.” என்றவள் அங்கிருந்த கயிறை எடுக்க… 


“ஆயிரம் தடவை குதிக்கணும்.” என்றதும், பட்டென்று கயிற்றை வைத்து விட்டாள். 


‘விட்டா காலை உடைச்சிடுவாங்க போலிருக்க.’ என நினைத்தவள், “நான் கோலம் போட போகணும்.” என்றாள். 

 
மாடியில் இருந்து எட்டி பார்த்த நந்தா, “முனியம்மா, இன்னைக்கு நீயே கோலம் போட்டுடு. நாளையில இருந்து அம்மா போடுவாங்க.” எனக் குரல் கொடுக்க… சரி என்றார் அவர். 


வேறுவழியின்றிக் கயல் அவள் பாவடையைத் தூக்கி சொருகிக் கொண்டு. ஸ்கிப்பிங் குதிக்க… அவள் தாவணி மிகவும் இடையூறு செய்ய… அவள் அருகில் வந்த நந்தா, அவள் எதிர்பார்க்காத நேரம், அதைச் சட்டென்று தன் கையில் எடுத்துக் கொண்டான். 


முழு நீல சட்டைதான். இருந்தாலும், கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். இதில் தாவணி இல்லாமல் அவன் முன்பு நிற்க கயலுக்குக் கூச்சமாக இருக்க… 

“தாவணியைக் கொடுங்க.” என வாங்கி, அதை ஒரு பக்க தோளில் போட்டு, மறுபக்கம் முடிந்து கொண்டாள். 


இருநூறு வரை குத்தித்தவள், “இன்னைக்கு இது போதுமே.” எனச் சொன்னதும், நந்தாவும் விட்டு விட்டான். 


“சரி முதல்ல உங்க அம்மாகிட்ட போன் பேசிடு.” 


இருவரும் உள்ளே செல்ல.. கயல் போன்னை எடுத்து அவள் வீட்டு எண்ணை அழுத்த, அந்தப் பக்கம் அன்பரசு போன்னை எடுத்தார். 


தந்தையின் குரல் கேட்டதும் சர்வமும் நடுங்க. போன்னை வேகமாக நந்தாவிடம் கொடுத்தவள், அங்கிருந்து செல்ல பார்க்க… 


சட்டென்று நந்தா அவளின் நீள குந்தலை பிடித்து இழுக்க…. அவன் இழுத்த வேகத்தில், கயல் அவன் மீதே மோதி நின்றாள். 


“நீ போன் பேசலையா?” நந்தா கேட்க, அதற்கு “அப்பா…” என்று வாயை மட்டும் அசைத்தாள். 


“இருந்தா என்ன பேசு.” நந்தா போன்னை அவளிடம் கொடுக்க… மாட்டேன் எனக் கயல் சைகையில் சொல்ல… அதைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டவன், 


“ஹலோ, நான் நந்தா பேசுறேன். கயலுக்கு அவங்க அம்மா கூடப் பேசணுமாம்.” என்றதும், அன்பரசு பத்மாவை அழைத்தார். இவர்கள் இருவரும் பேசியது அவர் காதிலும் விழுந்து இருந்தது. 


பத்மா வந்ததும், அவரிடம் போன் கொடுத்த அன்பரசு, “கயல் தான் பேசுது.” என்றதும், சந்தோஷத்தில் போன்னை வேகமாக வாங்கியவர், “கயல்.” என்று பாசமாக அழைக்க….

 
“அம்மா...” என்ற கயலுக்கும் தொண்டை அடைத்தது. 


“நல்லா இருக்கியா டா?” 


“நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?” 


“இங்க எல்லோரும் நல்லா இருக்கோம். உங்க வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?” 


அவர் கேட்டதுதான் தாமதம். இரண்டு நாட்கள் எங்கே போனாள், என்ன செய்தாள் என எல்லாவற்றையும் கயல் ஒப்பிக்க… கேட்ட பத்மாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. 

பக்கத்தில் இருந்த அன்பரசுவிடம், “உங்க மக மெட்ராஸ்ல காலேஜ் போகப் போறாளாம்.” அவர் சந்தோஷமாகச் சொல்ல… 


“அங்க போயாவது ஒழுங்கா இருக்கச் சொல்லு. திரும்ப எதாவது பிரச்சனயை இழுத்திட்டு வந்தா கொன்னுடுவேன், சொல்லிட்டேன்.”

 
அன்பரசு கடுமையாகச் சொல்ல… அது கயல்விழியின் காதிலும் விழ… சற்று நேரம் முன்பு வரை இருந்த மகிழ்ச்சி சட்டென்று வடிய… அவள் முகம் கருத்தது.

அதை நந்தாவுக்குக் காட்டாமல் மறைத்தவள், “சரிமா பிறகு பேசுறேன்.” எனப் போன்னை வைத்து விட்டாள். 


கலங்கிய கண்களைக் கணவனுக்குக் காட்டாமல், உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள். நந்தாவும் கீழே சென்றான். 


அவனைப் பார்த்ததும் குழலி, அவனுக்குக் காபி போட்டுக் கொடுக்க, அதை வாங்கியவன் அங்கேயே உட்கார்ந்து பருகினான். 


“கயலை உன்னோட கூடிட்டு போகலையா?” 


“இல்லை மா... கொஞ்ச நாள் இங்கயே இருக்கட்டும். அங்க இருந்தா, அவளால ப்ரீயா வெளிய போயிட்டு வர முடியாது. முதல்ல அவ மனசு அளவுல தெளியட்டும். பிறகு பார்க்கலாம்.” 


நந்தா சொல்ல குழலி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.


“உங்களுக்குக் கோபமா மா?” 


“கோபம் இல்லை. ஆனா வருத்தம் இருக்கு.” 


“ஏன் மா கயலை உங்களுக்குப் பிடிக்கலையா?” 


“அவளைப் பிடிச்சுதான் இருக்கு. ஆனா இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லாம அவ நம்ம வீட்டுக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”

 
குழலியின் பேச்சை கேட்டு, நந்தா முகம் வாடினான். 


“இன்னும் நம்ம சொந்தகாரங்களுக்கு எல்லாம் அவளோட விஷயம் தெரிஞ்சா என்னென்ன பேசுவாங்களோ?” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!