Skip to content
Post Views: 4,907
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 16
காலை ஐந்து மணிக்கு அலாரம் சத்தம் கேட்டு கயல்விழிக்குத் தூக்கம் கலைந்தாலும், எழுந்துகொள்ள முடியவில்லை. முன்தினம் நள்ளிரவுக்கு மேல்தான் உறங்கி இருந்தாள்.
குழலி எழுந்து குளியல் அறைக்குள் செல்ல, மேலும் தாமதிக்காமல் கயல்விழியும் எழுந்து கொண்டாள். கண்ணைக் கசக்கி தூக்கத்தை விரட்ட முயன்றபடி, மேலே இருந்த அவர்கள் அறைக்குள் நுழைந்தவளுக்கு, நந்தாவின் நினைவுகள் அலைமோதியது.
Advertisement
முகம் கழுவிவிட்டு மறுபக்க கதவை திறந்து கொண்டு வெளிப்பக்கம் சென்றவள், பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடி, அவனைச் சந்தித்த நாளில் இருந்து, நேற்று அவன் விடைபெற்று சென்ற கடைசி நிமிடம் வரை, நினைத்து பார்க்க. எல்லாம் கனவு போல் இருந்தது.
அவன் சொன்னான் என்பதற்காக சிறிது நேரம் ஸ்கிப்பிங் குத்தித்தாள்.
Advertisement
“யம்மா, வந்து கோலம் போடுறியா?” முனியம்மா குரல் கொடுக்க, வேகமாகக் கீழே இறங்கி சென்றாள். கோலம் போட்டுவிட்டு, அவள் சமையல் அறைக்கு வந்த போது, குழலி சமைத்துக் கொண்டு இருந்தார்.
Advertisement
“ப்லாஸ்க்குல காபி இருக்கு கயல், ஊத்தி குடி.”
“சரிங்க அத்தை. நீங்க குடிச்சிடீங்களா?”
“காலையில காலேஜ் போய்தான் சாப்பிடுவேன். அதனால நான் ஏழரைக்குக் கிளம்பும் போது குடிச்சிப்பேன்.”
Advertisement
முன்தினமே குளிர்சாதனப்பெட்டியில் நறுக்கி வைத்திருந்த காய்கறியை எடுத்து அவர் சாம்பார் வைக்க… மறுபக்க அடுப்பில் சாதம் கொதித்துக்கொண்டு இருந்தது.
இட்லி ஊற்றுவதற்கு அவர் தயார் செய்வதைப் பார்த்தவள், “நான் இட்லி ஊத்தவா?.” எனக் கேட்டதும்,
“சரி ஊத்திடு. பத்து நிமிஷம் ஆனதும் அடுப்பை அணைச்சிடு. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” என்றவர், சாதத்தை வடித்துவிட்டு சென்றார்.
கயல்விழிக்கும் பெரிதாகச் சமையல் தெரியாது. அந்தப் பிரச்சனைக்குப் பிறகுதான், பத்மா அவளைத் தன்னுடனே வைத்திருப்பார். அதனால் அவருக்குச் சின்னச் சின்ன வேலைகள் செய்து தருபவள், அவர் சமைப்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பாள். அதனால் ஓரளவுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும்.
குழலி குளிக்கச் சென்றிருந்த வேளையில் போன் அடிக்க, வேறு யாராவது வந்து எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் கயல்விழியும் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் போன் அடிப்பதும் நின்று விட்டது.
குழலி வந்ததும் கயல்விழி குளிக்கச் சென்றாள். குளித்து நந்தா வாங்கிக் கொடுத்த சல்வார் அணிந்து வந்தபோது, குழலி பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு வேலைக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டது.
அவருக்குக் காலைக்கும் மதியத்துக்கும் டிபன் கட்டிக் கொண்டவர், அப்போதுதான் நினைவு வந்தவராக, “நீயும் இன்னைக்குக் காலேஜ் போற இல்லை. உனக்குச் சாப்பாடு கட்டவே மறந்துட்டேன்.” எனத் தலையில் அடித்துக் கொள்ள…
“பரவாயில்லை அத்தை, நானே கட்டிக்கிறேன். நீங்க காபி குடிச்சீங்களா?”
“இன்னும் இல்லை,”
“நீங்க முதல் காபி குடிங்க. நான் பார்த்துகிறேன்.”
“அங்க டிபன் பாக்ஸ் இருக்கும் பாரு.”
குழலி உணவு மேஜையில் உட்கார்ந்து காபி குடிக்க, கயல்விழி தனக்கான உணவை கட்டிக்கொண்டாள். அப்போது அங்கே தாரணி வந்தாள்.
“ஐயோ இன்னைக்கு லேட் ஆகிடுச்சே.”
“சீக்கிரம் எழுந்துக்கணும். லேட்டா எழுந்துக்க வேண்டியது, அப்புறம் புலம்ப வேண்டியது. டேபிள்ள இட்லி சாம்பார் இருக்கு. அவருக்கும் கொடுத்திட்டு, நீயும் சாப்பிடு. நான் கிளம்பனும் எனக்கு டைம் ஆகிடுச்சு.”
“இட்லியா? எனக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும் தான?”
“சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தான் நம்ம வீட்ல வேற டிபன் பண்ணுவோம், உனக்கு அது தெரியாதா? காலையிலேயே என்னை டென்ஷன் பண்ணாத தாரணி.”
“அதெல்லாம் அவ சாப்பிடுவா, நீங்க கிளம்புங்க அத்தை.” என்றபடி வந்த வருண், குளித்துத் தலையைத் துவட்டியபடி வந்தான்.
“கயல், உனக்கும் காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சு, சாப்பிட்டுக் கிளம்பு மா.”
“இதோ சாப்பிடுறேன் அத்தை.” என்ற கயல்விழி தட்டில் இரண்டு இட்லிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
அறைக்குள் சென்ற குழலி, ஒருமுறை கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்துக் கொண்டார். சந்தன நிறத்தில் கருப்பு கரையிட்ட காட்டன் புடவை அவருக்குப் பாந்தமாக இருந்தது. கருப்பு நிறத்தில் சிறிய பொட்டு ஒன்று வைத்துக் கொண்டவர், திருப்தியாக அறையில் இருந்து வெளியே வந்தார்.
தோள்பை அல்லாத இன்னொரு பையில் தன் காலை, மதிய உணவுகளை எடுத்து வைத்தார்.
காலை உணவை மட்டும் ஒரே டப்பாவில் வைத்துக் கொண்டவர், மதிய உணவுக்குச் சாதம், சாம்பார், பொரியல், மோர் எனத் தனித்தனியாக அதற்குரிய பாத்திரத்தில் எடுத்து வைத்து இருந்தார். சாப்பிட சிறிய தட்டு ஒன்றும் வைத்துக் கொண்டார்.
அந்நேரம் வீட்டு டெலிபோன் அடிக்க, அவர் சென்று எடுக்க, அழைத்தது நந்தாதான்.
“நல்லபடியா ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டியா நந்தா?”
நந்தா என்ற பெயரை கேட்டதும், உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போல் கயல்விழிக்கு ஜிவ்வென்று இருந்தது. காதை தீட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.
“வந்துட்டேன் மா, காலையில போன் பண்ணேன், ஏன் யாருமே எடுக்கலை?”
“நான் குளிச்சிட்டு இருந்தேன், கயல் வேலையா இருந்தா.”
“சரி, மறக்காம அவளுக்கு ஒரு வீட்டுச் சாவி கொடுத்துடுங்க மா. அவ உங்களுக்கு முன்னாடியே வந்திடுவா. நான் இதை சொல்லத்தான் போன் பண்ணேன்.”
“சரி நந்தா, கயல்கிட்ட பேசுறியா.”
“இல்லை, அவளுக்குக் காலேஜ்க்கு லேட் ஆகிடும். அப்புறம் பேசுறேன். அவளைப் பார்த்துப் போகச் சொல்லுங்க.” என்ற நந்தா வைத்து விட…தன்னை அழைப்பான் என ஆவலுடன் காத்திருந்த கயல்விழிக்கு முகம் வாடிவிட்டது.
“யாரு அத்தை நந்தாவா?” என்றபடி சாப்பிட அமர்ந்த வருண், கயல்விழியின் முக மாற்றத்தை கவனித்தே இருந்தான்.
“ஆமாம், கயலுக்கு வீட்டுச் சாவி கொடுக்கச் சொன்னான். இன்னொரு சாவி எங்க இருக்குன்னு வந்துதான் தேடனும்.”
“தாரணி, நீ உன்கிட்ட இருக்கச் சாவியைக் கயலுக்குக் கொடு.”
“என்கிட்டே இருக்கிறதை கொடுத்திட்டா அப்புறம் எனக்கு?”
“நீ இனி இங்க வார கடைசியிலதான வருவ. அப்ப உனக்கு வேற சாவி தரேன்.”
முழுதாகச் சமாதானம் ஆகவில்லை என்றாலும், தருவதாகத் தாரணி தலையசைத்தாள். அவள் இப்போது இயற்பியலில் M. phil படித்துக் கொண்டு இருக்கிறாள். நினைத்தால் கல்லூரியில் இருந்து அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாள். அதனால் அவளிடம் ஒரு சாவி இருக்கும்.
“பார்த்து போ கயல். நான் வர நாலு மணி ஆகிடும்.” என்ற குழலி, அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.
பேருக்கு ஒரு இட்லி மட்டும் எடுத்துக் கொண்டு தாரணி சாப்பிட, கயல்விழி அவள் அறைக்குச் சென்று, முகம் கழுவி லேசாக ஒப்பனை செய்து கொண்டு, கல்லூரிக்கு செல்ல பையை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
அவள் கீழே வந்தபோது, தாரணியும் வருணும் வாசலில் நின்று இருந்தனர்.
“கயல், நாங்க கிளம்புறோம். எதுனாலும் எனக்குப் போன் பண்ணு.” வருண் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே… “எனக்கு டைம் ஆகிடுச்சு, சீக்கிரம் வாங்க.” தாரணி அவசரப்பட… வருண் பைக்கை கிளப்ப… அவன் பின்புறம் தாரணி அமர்ந்துகொண்டு, கயல்விழிக்கு கையசைத்து விட்டு சென்றனர்.
வீட்டு சாவியைப் பற்றிக் கயல்விழிக்கு நியாபகம் இருந்தது. ஆனால் அவசரமாகச் செல்பவர்களைத் தடுத்து நிறுத்த விரும்பாமல் அமைதியாக இருந்தாள்.
எட்டு மணி ஆக ஐந்து நிமிடங்கள் இருந்தபோது, அப்போதுதான் உறக்கத்தில் இருந்து எழுந்த பரணி வந்தான். அங்கே தயாராக இருந்த கயல்விழியைப் பார்த்து, “நீங்க காலேஜ் கிளம்பிடீங்களா அண்ணி?” என்றான்.
“கிளம்பிட்டேன். உங்களுக்கு வெளிய போற வேலை இல்லையா?”
“நான் பத்து மணிக்குப் போனா போதும் அண்ணி.”
“சரி நான் கிளம்புறேன்.” கயல்விழி அவனிடம் சொல்லிக்கொண்டு சென்றாள்.
கையில் சாவி இல்லை. திரும்ப வீடு வந்தால், குழலி வரும்வரை வாசலில்தான் இருக்க வேண்டும். அதையே நினைத்துக் கொண்டு இருந்ததால்… பயணம் ஒன்றும் பயப்படுத்தவில்லை.
அவளுக்கு எட்டு நாற்பதுக்குத்தான் கல்லூரி. அவள் எட்டு முப்பதுக்கே கல்லூரியில் இருந்தாள். அவள் வகுப்பை தேடி கண்டுபிடித்துச் சென்று அமர்ந்தவள், சுற்றிலும் பார்வையை ஓட விட… முதலில் யார் புதிதாக வந்திருப்பது என்பது போல் பார்த்தவர்கள், பிறகு அவரவர் வேலையைப் பார்த்தனர்.
இதே அவள் ஊர் என்றால்… இந்நேரம் அவள் வரலாறையே விசாரித்துத் தெரிந்துகொண்டு இருப்பார்கள். ‘சிட்டின்னா இப்படித்தான் இருக்கும் போலிருக்கு.’ என அவளே நினைத்துக் கொண்டாள்.
பேராசிரியர் உள்ளே வந்ததும், அனைவரும் எழுந்து நிற்க, எல்லோரையும் உட்கார சொன்னவர், கயல்விழியைப் பார்த்துவிட்டு, அவளைப் பற்றி விசாரித்தார்.
“இதுக்கு முன்னாடி நடத்தினது எல்லாம், யார்கிட்டயாவது நோட்ஸ் வாங்கிப் பார்த்து எழுதிடுமா.” என்றவர், வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.
குத்துமதிப்பாக ஒரு பத்துப் பக்கத்தை விட்டுவிட்டு, கயல்விழி நோட்ஸ் எழுத ஆரம்பித்தாள்.
மதிய இடைவெளியில் எங்கே சென்று சாப்பிடுவது என்று அவள் யோசிக்கும்போது, சிலர் எழுந்து வெளியே செல்ல… பலர் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டனர்.
அவள் முன்பு படித்த கல்லூரியில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றுதான் சாப்பிட வேண்டும். எல்லோரும் ஸ்பூன் வைத்துக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்தவள், நாளைக்கு நாமும் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
கைகழுவாமல் சாப்பிட ஒரு மாதிரி இருக்க… துப்பட்டாவில் கையைத் துடைத்துக் கொண்டு அவள் சாப்பிட… அதை இரு ஜோடி விழிகள் பார்த்துக் கொண்டு இருந்ததை அவள் கவனிக்கவில்லை.
சாப்பிட்டு முடித்துவிட்டு எங்கே சென்று கை கழுவுவது என்று ஒரே யோசனை. பிறகுதான் தண்ணீரே கொண்டு வரவில்லை என்பது நியாபகம் வந்தது.
‘குடிக்கத் தண்ணி கொண்டு வரணும்ன்னு கூட அறிவு இல்லையே.’ எனத் தன்னையே நொந்தவளுக்கு, ஒரு நாளுக்கே கண்ணைக் கட்டியது. அவள் வீட்டில் பத்மாவே எல்லாம் செய்து விடுவார்.
மெதுவாக எழுந்து வெளியே சென்றவள், அவளே அங்கே இங்கே தேடி குழாயை கண்டுபிடித்துக் கைகழுவிட்டு, அந்தத் தண்ணீரையே குடித்து விட்டு வந்தாள்.
மதியம் பன்னிரெண்டரையில் இருந்து ஒரு மணி வரை உணவு இடைவேளை. அதன்பிறகு மீண்டும் வகுப்பு ஆரம்பித்து, மதியம் இரண்டு மணிக்கு கல்லூரி நேரம் முடிந்த போது, ஹப்பா டா என்று இருந்தது.
இப்போதே வீட்டிற்குப் போனால் கூடக் குழலி வரும்வரை வாசலில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள், கல்லூரி ஓய்வறைக்குச் சென்றுவிட்டு, நிதானமாக வந்தாள்.
சிறிது நேரம் கல்லூரி வளாகத்தில் இருந்த மரத்தடியிலேயே உட்கார்ந்து இருந்தாள். அங்கே நிறைய மாணவர்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். மாலை வகுப்புகளுக்கும் நிறைய மாணவிகள் வந்து கொண்டு இருந்தனர்.
மூன்று மணி தாண்டியதும், மெதுவாக நடந்து பேரூந்து நிலையம் சென்றாள். அங்கிருந்து பஸ் பிடித்து வீடு வந்தவள், கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று வாசலில் அமர்ந்தாள்.
இரவு தூங்காதது, இன்னும் வெயிலில் நடந்து வந்தது வேறு, நன்றாக உறக்கம் வந்தது. கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். வீட்டிற்குள் வேறு விடாமல் போன் அடித்தபடியே இருந்தது.
நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்த குழலி வாசலில் இருந்தவளை பார்த்து விட்டு, “சாவி கொடுக்காம போயிட்டாளா அவ. ஒரு வேலையும் உருப்படியா செய்யமாட்டா.” என்றவர், கதவை திறக்க… இருவரும் உள்ளே சென்றனர்.
அந்த நேரம் போன் மீண்டும் அடிக்க, “ரொம்ப நேரமா அடிக்குது.” என்றாள் கயல்விழி.
குழலி போன்னை எடுத்து ஹலோ என்றதும், அந்தப் பக்கம் நந்தா பொரிய ஆரம்பித்து விட்டான். கயல்விழி வீட்டிற்கு வரும் நேரத்தை கணக்கிட்டு அவன் அழைக்க… அவள் எடுக்கவில்லை என்றதும், எதுவும் பிரச்சனையோ என பயந்து விட்டான்.
“கயல் வீட்டுக்கு வந்தாளா இல்லையா?”
“வந்துட்டா டா.”
“அப்புறம் போன் எடுக்காம என்ன பண்றா?”
“தாரணிகிட்ட சாவி கொடுக்கச் சொன்னேன். அவ மறந்துட்டா, அதனால நான் வர்ற வரை வெளியே உட்கார்ந்து இருந்தா.”
“என்னமா நான் காலையிலேயே உங்ககிட்ட சொன்னேன் இல்லையா?”
“என்ன பண்ண சொல்ற நந்தா? இன்னைக்குத் திங்கள்கிழமை எனக்கும் வேலைக்குப் போற டென்ஷன்.” எனக் குழலி குரலை உயர்த்த…. அவரும் வேலையில் இருந்து களைப்பாக வந்திருப்பார், அதனால்தான் எரிச்சல் ஆகிறார் என்று உணர்ந்தவன், “சாரி மா, கயல்கிட்ட போன்னை கொடுங்க.” என்றான்.
“கயல்.” என்று அழைத்துப் போன்னை கொடுத்து விட்டு, அவர் உள்ளே சென்று விட… கயல்விழி பேசினாள்.
“ஹலோ.”
“எப்படி இருக்கக் கயல்?”
“ம்ம்… நல்லா இருக்கேன்.” வார்த்தைதான் அப்படி வந்ததே தவிரக், குரல் மிகவும் சோர்வாக இருந்தது.
“ரொம்ப நேரம் வெயில்ல உட்கார்ந்து இருந்தியா?”
“இல்லை... சாவி இல்லைன்னு காலேஜ்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டுதான் வந்தேன்.”
அவள் யோசித்துச் செயல்பட்டது நந்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“வெரி குட். காலேஜ் எப்படி இருந்தது?”
அவளுக்கே இன்னும் ஒன்றும் பிரியவில்லை. இதில் எப்படி இருந்தது என்று கேட்டால் என்ன சொல்லுவாள்.
“நல்லாத்தான் இருந்தது.” என்று கடமைக்கு அவள் சொல்ல… அதை உணர்ந்தவன், “இன்னும் ரெண்டு நாள் போனா சரி ஆகிடும்.” என்றான்.
“அவதான் சாவி கொடுக்க மறந்திட்டு போனா, நீயாவது நியாபகம் வச்சு கேட்க வேண்டாமா?”
“எனக்கு நியாபகம் இருந்தது. ஆனா அண்ணி அவசரமா போனாங்க. வெளியப் போகும் போது, கூப்பிட்டு நிறுத்தினா, போன காரியம் உருப்படாது. அதுதான் பேசாம இருந்துட்டேன்.”
அவள் சொன்னதைக் கேட்டபடி வந்த குழலிக்கு மனதில் இருந்த எரிச்சல் மறைந்து சிரிப்பு வந்தது.
“இந்தா சாவி. உன் காலேஜ் பையில வச்சுக்கோ. நான் சாவி கொடுத்துட்டேன்னு உன் புருஷன்கிட்ட சொல்லிடு.” எனக் கிண்டலாகச் சொல்லிவிட்டு சென்றார்.
“அத்தை சாவி கொடுத்திட்டாங்க, உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க.”
“கோபமா இருக்காங்களா?”
“இல்லை சிரிச்சிட்டுதான் போறாங்க.”
“உனக்கு எதாவது என்கிட்டே சொல்லணுமா?”
“காலையில ஏன் என்கிட்டே பேசலை?”
“நான் உன்கிட்ட பேசத்தான் இங்க வந்ததும் போன் பண்ணேன். நீதான் எடுக்கலை. அப்புறம் பண்ணும்போது உனக்குக் காலேஜ் போற டைம். அதுதான் பிறகு பேசுவோம்ன்னு நினைச்சேன்.”
“சரி, நாளைக்கு எப்ப போன் பண்ணுவீங்க?”
“அதெல்லாம் சொல்ல முடியாது. இன்னைக்கு உனக்கு முதல் நாள்ன்னு பண்ணேன். அதுக்காகத் தினமும் பண்ணுவேன்னு நினைக்காத. என் டைம் எல்லாம் சொல்லவே முடியாது. எப்ப ப்ரீயா இருக்கேனோ அப்ப பண்றேன்.”
‘ரொம்பத்தான் பண்றாங்க.’ என மனதிற்குள் நொடித்தாலும், வெளியே கயல்விழி மெளனமாக இருக்க…
“என்ன சத்தத்தைக் காணோம். நைட் உங்க அம்மாவுக்குப் போன் பண்ணி பேசு.”
“சரிங்க.”
“நான் வச்சிடட்டுமா?”
“ம்ம்...”
“உன் குரலே ரொம்ப அலுப்பா தெரியுது. போய் எதாவது சாப்பிட்டு ரெஸ்ட் எடு.” என நந்தா போன்னை வைக்க.. அவனின் அக்கறை மனதை நெகிழ செய்ய… கயல்விழி நிறைவாக உணர்ந்தாள்.
அந்தப் பக்கம் போன்னை வைத்த நந்தாவும் மகிழ்ச்சியாக இருந்தான். ‘மேடம் நம்மைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க.’ என நினைத்தவன், அப்போதே கயல்விழியைச் சந்திக்கச் செல்லும் நாளுக்காக ஏங்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!