Skip to content
Post Views: 5,838
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 17
Advertisement
அவனது அலுவலகத்தில் நந்தாவுக்குத் தலைக்கு மேல் வேலை இருந்தது. அந்த வேலைகளுக்கு நடுவிலும், அவன் சொன்னது போல், பாண்டியின் பெற்றோருக்கு வேறு ஊரில் பண்ணையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை வாங்கிக் கொடுத்தான்.
அவர்கள் அதே ஊரில் இருந்தால், அதைச் சாக்கிட்டு இரு பக்கமும் அடித்துக் கொள்வார்கள் என்றே வேறு ஊருக்கு அவர்களை இடம் மாற்றினான்.
அவர்கள் தங்க அந்தப் பண்ணையிலேயே வீடும் இருந்தது. அதோடு சம்பளமும் உண்டு. அவர்களுக்கும் இடம் மாறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
Advertisement
இதுவரை உடன் இருந்தவர்கள், பழி தீர்க்க வழி சொன்னார்களே தவிர… அவர்கள் வாழ எதுவும் செய்யவில்லை. அதனால் நந்தா செய்த உதவியை அவர்கள் மனமார ஏற்றுக்கொண்டனர்.
Advertisement
அதே போல் பேச்சியின் பெற்றோரிடம் பேசி, அவளை அந்த ஆண்டே பள்ளியில் சேர்த்தான். பேச்சிக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவள் தந்தையுடன் வந்து நந்தாவுக்கு நன்றி சொன்னாள்.
வீட்டுக்கு வெளியில் இருந்தே பேசிவிட்டு செல்லப் பார்த்தவர்களை, நந்தா வீட்டுக்குள் அழைக்க… இருவரும் அவனை வியப்பாகப் பார்த்தனர்.
“என்னைப் பொறுத்தவரை மனுஷங்களுக்குள்ள எந்த வித்யாசமும் இல்லை. இதுல உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாம் எங்கிருந்து வருது? உள்ள வாங்க.” என விடாப்பிடியாக அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
Advertisement
வீட்டில் இருந்த வேலையாள் கொண்டு வந்த காபியை அவர்களுக்கு கொடுத்து உபசரித்தான்.
ஹாலில் நந்தா கயல்விழியின் திருமணப் படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்க, அதைப் பார்த்துச் சந்தோஷமாக விழிவிரித்த பேச்சி, “கயல் அக்கா நல்லா இருக்காங்களா?” எனக் கேட்டாள்.
“ரொம்ப நல்லா இருக்கா.”
“இங்க எப்ப வருவாங்க?”
“அவ வரும் போது கண்டிப்பா உனக்குச் சொல்றேன்.” என்ற நந்தா, பேச்சியிடம் நன்றாகப் படிக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.
ஒரு நாள் பேச்சி பள்ளியில் இருந்து திரும்பி கொண்டிருந்த போது, நவநீத கிருஷ்ணன் அவளை வழிமறித்துப் பேசினான்.
“என்ன புள்ள படிக்கப் போறியான்?”
“ஆமாங்க ஐயா.”
“படிச்சு என்ன கலக்டர் ஆகப்போறியோ? ஒழுங்கு மரியாதையா நாளையில் இருந்து வேலைக்கு வர. இல்லைனா தொலைச்சிடுவேன்.”
பேச்சி பதில் சொல்லமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
“முதல்ல உங்க அப்பன் சாராயம் காய்ச்சுறதை நிறுத்தினான். இப்ப உன்னைப் படிக்க அனுப்புறான். எல்லாம் அந்த நந்தகுமார் கொடுத்த தைரியம் தானே?”
“அவன் இன்னும் எத்தனை நாள் இந்த ஊர்ல இருப்பான்? அவன் போனதுக்கு அப்புறம் உங்க கதி என்ன ஆகும்ன்னு நினைச்சு பாருங்க.”
அவன் பேசப் பேச பேச்சிக்குப் பயத்தில் முகம் வெளுத்தது. அதைப் பார்த்து சிரித்த நவநீத கிருஷ்ணன், “சரி வேலைக்கு வரலைனா பரவாயில்லை. ஆனா வாரத்துக்கு ஒருநாள் தோப்பு வீட்டுக்கு வந்திட்டு போ.” என அவன் அசிங்கமாக கண் அடிக்க… கேட்ட பேச்சிக்கு சர்வமும் நடுங்கிவிட்டது.
அவள் வீட்டிற்கு வந்து கதறி அழுதாள். காரணம் தெரிந்ததும், அவள் அம்மா அழுது புலம்பத் தொடங்கிவிட்டார்.
“அவங்க பெரிய ஆளுங்க. நாம அவங்களைப் பகைச்சிட்டு இங்க வாழ முடியுமா? படிப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல இவளுக்குக் கல்யாணத்தை முடிச்சு வேற ஊருக்கு அனுப்பி விட்டுடலாம்.”
படிக்க வேண்டும் என்ற தன் ஆசை மண்ணாகப் போனதை எண்ணி பேச்சி கண்ணீர் விட்டாள். ஏழையாகப் பிறந்தால் படிக்கக் கூட உரிமை இல்லையா? மனதிற்குள் எழுந்த ஏமாற்றம் கோபமாக மாற… மறுநாள் அதிகாலையே நந்தாவை தேடி சென்றாள்.
அவள் அழுது கொண்டே நடந்ததைச் சொல்ல…கேட்ட நந்தாவிற்கு ரத்தம் கொதித்தது. “சரி நான் பார்த்துகிறேன். நீ போ.” என்றவன், அப்போதே தனது வண்டியில், தன் மாமனார் வீட்டிற்குச் சென்றான்.
மருமகனை அந்த நேரத்தில் எதிர்ப்பார்க்காத அன்பரசு திகைத்துப் போனார். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனை வரவேற்றார்.
“வாங்க.” என்றவர், உள்ளே திரும்பி, “பத்மா, மாப்பிள்ளை வந்திருக்கார்.” என்றதும், பத்மா சந்தோஷமாக வந்தார். அதற்குள் நந்தா உள்ளே வந்து ஹால் சோபாவில் அமர்ந்து இருந்தான்.
“வாங்க மாப்பிள்ளை, சவுக்கியமா?”
நலம் விசாரித்த தன் மாமியாரை பார்த்தவன், “நான் இப்ப உங்க மாப்பிள்ளையா வரலை. உங்க மூத்த மகனை கொஞ்சம் கூப்பிடுங்க.” என்றான் காட்டம் குறையாமல்.
பத்மா முகம் மாறினாலும், நந்தா சொன்னால் அதில் எதாவது காரணம் இருக்கும் என்று உணர்ந்தவர், கீழே இருந்து நவநீத கிருஷ்ணனை அழைத்தார். அன்பரசு புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
எதற்கோ என்று எண்ணி இறங்கி வந்த நவநீத கிருஷ்ணன், நந்தாவை பார்த்ததும் திகைத்து விழித்தான்.
எதற்குத் தன் மாமியார் காலையிலேயே மகனை தேடுகிறார் என நினைத்த கீதாவும், அவன் பின்னே இறங்கி வந்தாள்.
“உன்னோட பணத் திமிர், ஜாதித் திமிர் இதெல்லாம் இன்னையோட விட்டுடணும். இல்லைனா நீ இருக்க மாட்ட.” என நவநீத கிருஷ்ணனை நந்தா எச்சரிக்க.
“எதுக்கு எங்க அண்ணனை நீங்க பேசுறீங்க?” என வாசு அவனுக்குப் பரிந்து கொண்டு வர….
“அதுதானே என் வீட்டுக்காரர் எப்படி இருக்கனும்னு சொல்ல, நீங்க யாரு?” எனக் கீதாவும் கேட்டாள்.
இவன் என்ன செய்து வைத்தானோ எனப் பத்மா கவலையாகப் பார்க்க…. அவன் வீடு தேடி வந்து பேசுகிறான் என்றால், அதில் எதோ காரணம் இருக்கிறது என உணர்ந்த அன்பரசு, மவுனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
நந்தா அவர்கள் யாரையும் மதிக்கவே இல்லை. “உங்க வீட்ல வேலை செஞ்சா, அவங்க உங்களுக்கு அடிமை இல்லை. படிக்கப் போற பொண்ணைப் படுக்கக் கூப்பிட்டு இருக்க. உன்னை என்ன பண்றது?”
“நீங்களே சொல்லுங்க அன்பரசு, என்ன பண்ணலாம்? உங்க வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம், மத்தவங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் இருக்கக் கூடாது இல்லை.”
“அந்தப் பெண்ணுக்கும் அண்ணன் இருக்கான். அவன்கிட்ட அருவாளை கொடுத்து உங்க பையனை வெட்ட சொல்லலாமா.”
நந்தா எளிதாகச் சொல்ல… கேட்ட அனைவரும் அதிர்ச்சி விலகாமல் பார்க்க… பத்மா மட்டும், நல்லா வேணும் என நினைத்தார்.
“யாரு? என்ன நடந்தது?” என அன்பரசு விசாரிக்க, நந்தா விவரம் சொன்னான்.
அன்பரசு திரும்பி தன் மகனை பார்வையால் எரித்தார். “இனிமே எதுவும் இது போல நடக்காது. நானே அந்தப் பொண்ணு வீட்ல பேசுறேன். அந்தப் பொண்ணு படிக்கட்டும்.” என்றார்.
“நான் உங்ககிட்ட அனுமதி கேட்டு வரலை. எப்படியும் உங்க பையன் உள்ளப்போகப் போறான். அதை இன்னைக்கே என்னால செய்ய முடியும். அப்புறம் இவனால என்ன கிழிக்க முடியும்.”
“ஒன்னும் கிழிக்க முடியாது. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.”
“எளியோரை வளியோர் அடித்தால்… அந்த வளியோரை தெய்வம் அடிக்கும். உங்களுக்கு அது தெரியுமா? இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும். வரட்டா?” என அவன் விடைபெற்று சென்றுவிட… வீடே நிசப்தமாக இருந்தது.
“ஏன் டா? ஏன் டா என் உயிரை எடுக்குறீங்க? கொஞ்ச நாள் உங்களால மூடிட்டு இருக்க முடியாதா?” என அன்பரசு வீடே அதிரும்படி கர்ஜிக்க… நவநீத கிருஷ்ணன் தலை குனிந்தான்.
“வாசு நீ நம்ம எஸ். ஐ கிட்ட என்ன விஷயம்ன்னு விசாரி?”
“சரிப்பா.”
வாசு சென்றுவிட்டு சிறிது நேரம் சென்று வந்தான்.
“மொத்தம் பதினெட்டுக் கேஸ் போட்டிருக்காங்க. போன தடவை நடந்த ஊர்வலத்துல, அண்ணன் வெட்டினது பார்த்த நேரடி சாட்சிகள் இருக்காம். அதனால கண்டிப்பா கைது பண்ணுவாங்க.”
“சரி, ஜாமீன் எடுக்க முடியுமான்னு பாரு.”
“ஜாமீன் கொடுக்க மாட்டாங்க. அண்ணன் சாட்சிகளை எதாவது பண்ணிடுவாருன்னு காரணம் சொல்லி விடமாட்டாங்க.”
“இப்ப என்னதான் டா பண்றது? நம்ம அமைச்சருக்கு போன் போடு.”
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, வீட்டிற்குள் போலீஸ் படை ஒன்று வந்து, கோர்ட் ஆர்டரை காட்டிவிட்டு, நவநீத கிருஷ்ணனை கைது செய்து கொண்டு சென்றது.
அன்பரசுவால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது. வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன்பிறகு அவர் அமைச்சரிடம் போன் செய்து பேசினார்.
“என்ன அன்பரசு பண்றது? சாட்சிங்க இருக்கே, நீங்க எப்படியாவது சாட்சிகளை கலைக்கப் பாருங்க. பிறகு கேஸ் நிற்காது.”
அன்பரசுவால் வேறு நேரம் என்றால் சாட்சிகளை எளிதாகக் கலைத்திருக்க முடியும். இப்போது அவர்கள் பின்னால் நந்தகுமார் இருந்தான். அவன் இருக்கும் தைரியத்தில், என்ன மிரட்டினாலும் அவர்கள் பணியவே இல்லை.
இன்னொன்று, இப்போது வேறு எதுவும் செய்து, தானும் ஜெயிலுக்குப் போய் விடக்கூடாது என்பதில் அன்பரசு கவனமாக இருந்தார். போலீசாரின் பார்வை முழுவதும், அவர் மீதுதான் இருந்தது.
கயல்விழிக்கு அன்று கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது, ஒரே யோசனை. முன்தினம் பேசிய பத்மா, அவளிடம் நவநீத கிருஷ்ணன் கைது ஆனது பற்றிச் சொல்லி இருந்தார்.
“அண்ணி என்னைத்தான் திட்டி இருப்பாங்க இல்லைமா?”
“அவ கிடக்கிறா, அவ புருஷன் யோக்கிதை அவளுக்குத் தெரியாதாக்கும். உன் புருஷன்கிட்ட சொல்லி எனக்காக ஒன்னு பண்ண சொல்லு.”
மகனை விட்டு விடச் சொல்லி கேட்கப்போகிறாரோ. எனக் கயல் நினைக்க.
“அவனை ஜெயிலையே வச்சு திருத்தி அனுப்ப சொல்லு. அவன் மனுஷனா மாறி வந்தா போதும்.” என்றார்.
error: Content is protected !!