Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 17 2

அதையே நினைத்தபடி கயல்விழி பஸ்சில் உட்கார்ந்து இருக்க… நடுவில் சிக்னலில் வண்டி நின்றது. ஸ்டாப்பிங்தான் வந்துவிட்டது என நினைத்து அவசரப்பட்டு இறங்கிவிட்டாள். 


இரண்டு நிறுத்தங்கள்தான் என்றாலும், தூரம் அதிகம்தான். முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை. 


அழுகை வந்துவிடும் போல் இருந்தது. வருணுக்கு போன் செய்வோமா எனக் கூட நினைத்து விட்டாள். பிறகே நிதானமாகச் சுற்றி பார்க்க… நந்தா காட்டிய கட்டிடம் ஒன்றை பார்த்ததும், தான் முன்பே இறங்கிவிட்டோம் எனப் புரிந்தது. 


இப்போது எப்படிச் செல்வது? பஸ் இந்த இடத்தில் நிற்காது. நடந்தே சென்று விடுவோம் என நினைத்து, அவள் இரண்டு எட்டு வைக்க… எதிரில் அவளையே பார்த்தபடி, அவள் வகுப்பில் படிக்கும் சமீரா நின்றுகொண்டு இருந்தாள். 



Advertisement


அவளிடம் பேசுவதா வேண்டாமா எனக் கயல்விழி யோசிக்க… அதற்குள் சமீராவே பேசினாள். 


“இது நீ இறங்க வேண்டிய இடம் இல்லையே?” 


“ஆமாம், வண்டி நின்னதும் ஸ்டாப்பிங்ன்னு நினைச்சு இறங்கிட்டேன்.” 

Advertisement


“பார்த்து இறங்க மாட்டியா?” 

Advertisement


“ஆமாம் நீ ஏன் இங்க நிற்கிற?” 

“நீ இறங்கினத்தைப் பார்த்தேன். அதுதான் நானும் பஸ்ஸை நிறுத்த சொல்லி இறங்கிட்டேன். நீ ஊருக்கு புதுசு இல்லை. தெரியாம வேற எங்கையாவது போயிட்டா?” 

Advertisement


சமீரா பேசியதை கேட்டு கயல்விழிக்கு கண்ணீரே வந்துவிட்டது. வகுப்பில் பார்த்ததோடு சரி, பேசியது கூட இல்லை. தனக்காக வேலை மெனக்கெட்டு பஸ்ஸை விட்டு இறங்குவதென்றால், பெரிய மனம் வேண்டும். 


யாரோ எப்படியோ போகட்டும் என்று நினைக்காமல், தனக்காக வந்த சமீராவை, கயல்விழிக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுக்குச் சட்டென்று பேச்சே வரவில்லை. வேகமாக அருகில் சென்று சமீராவின் கையைப் பிடித்துக் கொண்டாள். 


கயல்விழியின் நிலை உணர்ந்த சமீராவும், ஆறுதலாக அவள் கையைப் பற்றிக்கொண்டாள். 


“வா கயல், அடுத்த ஸ்டாப்பிங் வரை நடந்தே போயிடலாம். பேசிட்டே போனா ஒன்னும் தெரியாது.” 


“உன்னோட வீடும் அங்கதான் இருக்கா?” 


“இல்லை. இன்னும் ரெண்டு ஸ்டாப்பிங் தள்ளித்தான் என் வீடு. அடுத்த ஸ்டாப்பிங் போய்ப் பஸ் பிடிக்கணும்.” 


சமீரா பர்தா அணிந்து இருந்தாள். முகம் மட்டுமே தெரிந்தது, நடக்கும் போது, அதையும் அவள் மூடிக்கொள்ள… இப்போது அவள் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. 


கயல்விழி அவளையே பார்க்க, “என்ன அப்படிப் பார்க்கிற?” எனக் கேட்டாள். 


“எனக்கு உன்னைப் பார்த்தா, மெல்ல திறந்தது கதவுல வர்ற அமலா மாதிரி இருக்கு. நீயும் பார்க்க அவங்களை மாதிரி அழகா இருக்க.” 


நினைத்ததைச் சொல்லிவிட்டு சமீரா என்ன நினைத்துக்கொள்வாளோ என்பது போல் கயல்விழி பார்க்க… சமீரா புன்னகைத்தாள். 


“நீ என்னைச் சொல்றியா? நீதான் ரொம்ப அழகு.” 


“சரி நாம ரெண்டு பேருமே அழகு. ஆமாம் எனக்காக நீ ஏன் இறங்கின?” 


“நீ வந்த அன்னையில இருந்து நான் உன்னைப் பார்த்திட்டு இருக்கேன். இதுவரை கிளாஸ்ல யார்கிட்டையாவது வாய் திறந்து பேசி இருக்கியா? அதுதான் என்ன செய்வியோன்னு இறங்கிட்டேன்.” 


“அவங்களும் தானே என்னோட பேசலை.” 


“நீ பேசி இருந்தா பேசி இருப்பாங்க. நீதானே புதுசா வந்த? 

“ஓ…இதுல இவ்வளவு இருக்கா?” 


“என்ன ஓ? யார்கிட்டையாவது நோட்ஸ் கேட்கவாவது உனக்குத் தோணுச்சா?” 


“கேட்கணும்னு தான் நினைப்பேன். அப்படியே யோசிச்சிட்டே விட்ருவேன்.” 


“இப்போதாவது என்கிட்டே கேட்கலாம் இல்லையா?” 


“ஏன் நான் கேட்டாத்தான் தருவியா? நீயே தர மாட்டியா? என்னைக் கேட்டா பஸ்ஸை விட்டு இறங்கின?” 


சமீராவுக்குச் சமமாகக் கயல்விழியும் வாய் அடித்தாள். இருவருக்கும் புதிதாகச் சந்தித்தவர்கள் போல இல்லை. ரொம்ப நாட்களாகப் பழகிய தோழிகளைப் போலவே உணர்ந்தனர். 


அதற்குள் பஸ் நிறுத்தமும் வந்துவிட, சமீரா தன்னுடைய நோட்டை கயலிடம் கொடுத்தாள். 

“எடுத்த டிக்கெட் வேஸ்ட் ஆகி இருக்கும் இல்ல. நான் வேணா டிக்கெட் காசு கொடுக்கவா.” கயல் கேட்க, சமீரா முறைத்தாள்.

 
“சாரி கோவிச்சுக்காத. எனக்காக வந்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ். தனியா நடந்து வந்திருக்கக் கஷ்ட்டமாத்தான் இருந்திருக்கும்.” 

“நாம ரெண்டு பேரும் இனி ப்ரண்ட்ஸ். தேங்க்ஸ், சாரி எல்லாம் சொல்லகூடாது.” 


“சரி சொல்லமாட்டேன்.” 


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த போதே பேருந்து வந்துவிட, “சரி நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம்.” என சமீரா பஸ்சில் ஏறினாள்.

அவளை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்த கயல்விழிக்கு, என்றுமில்லாமல் இன்று மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது. 


தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள், ரேடியோவில் சத்தமாகப் பாட்டை வைத்துக் கொண்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். 


குழலிக்குக் காலையில் சமையல் வேலை பார்கத்தான் நேரம் சரியாக இருக்கும். மாலை வந்துதான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். வீட்டு வேலை செய்யும் பெண்ணும் அந்த நேரம்தான் வருவார். 


கயல் முதல் இரண்டு நாட்கள் எல்லாவற்றையும் கவனித்தபடி இருந்தாள். அவளுக்குமே புதிய இடம் என்பதால்.. தானே எடுத்துக் கொண்டு செய்யத் தயக்கமாக இருந்தது. 


அதன்பிறகு வந்த நாட்களில் அவளாகவே செய்ய ஆரம்பித்தாள். கல்லூரி முடிந்து வந்து இரண்டு மணி நேரம் வீட்டில் தனியாகத் தானே இருப்பாள். 

கல்லூரியில் இருந்து வந்ததும், உடை மாற்றி முகம் கழுவி விட்டு வந்து, வீட்டை ஒதுங்க வைப்பாள். அடுத்துக் வேலைக்காரி காலையில் பின்பக்கம் துவைத்துக் காயப் போட்டு வைத்திருக்கும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைப்பாள். 


குழலி வந்ததும் அவருக்கு டீ போட்டுக் கொடுத்து, தானும் குடிப்பாள். சிறிது நேரத்தில் வேலை செய்யும் பெண்மணி வந்துவிடுவார். அவர் வந்து வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி விட்டு செல்வார். 


முன்பெல்லாம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், குழலிக்கு உட்கார கூட நேரம் இருக்காது. இப்போது கயல்விழி வந்ததும்தான், அவர் மாலையில் ஒய்வு எடுக்கிறார். அவர் வருவதற்குள் கயல்விழியே எல்லா வேலைகளையும் முடித்து வைத்திருப்பாள். 


இரவு உணவு அவர்தான் செய்வார். கயல் அவருக்கு உதவி செய்வாள். அப்படியே மறுநாளுக்குத் தேவையான காய்கறிகளைக் கழுவி நறுக்கி தந்து விடுவாள். அவள் வந்ததும் குழலிக்கு நிறைய வேலைகள் குறைந்து விட்டது. 


அவர் கூட அதைப் பற்றி நந்தாவிடம் சொல்ல, “இருக்கட்டும் மா அவ விருப்பட்டுத் தானே செய்றா. சும்மா இருந்தா அவளும் தேவை இல்லாதது எல்லாம் யோசிப்பா. நீங்களும் இவ்வளவு நாள் எல்லாம் தனியா தான செஞ்சீங்க. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க.” என்றான். 


“நீ சொல்ற, இருந்தாலும் தாரணி ஒன்னும் செய்ய மாட்டாளா. இப்ப கயல் செய்றதை பார்த்தா, மருமகளை மட்டும் வேலை வாங்குறேன்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு.” 


“நீங்க எப்பமா உங்க மருமகள் மாதிரி ஆனீங்க? தேவை இல்லாதது எல்லாம் யோசிக்கறீங்க. அவ எந்த வேலையும் செய்யாம இருக்க, அவ என்ன விருந்தாளியா? இது அவ வீடும் தான்மா. அப்புறம் அவளுக்கு இது நம்ம வீடுன்னு பீல் வருமா?” 


“சரி டா, இனி அப்படி நினைக்கலை. இனிமே என்னோட மாமியார் அதிகாரத்தைக் காட்றேன் பாரு.” 


“நல்லா காட்டுங்க. அவ அதைத் தப்பா எடுத்தா தானே. அவ அப்படி நினைக்க மாட்டா.” 


“பார்க்கலாம் அதையும்.” 

குழலி கிண்டலாகச் சொல்ல, நந்தாவும் புன்னகையுடன் போன்னை வைத்திருந்தான். 


இரவு உணவு எட்டு மணிக்கெல்லாம் முடிந்து விடும். அதன்பிறகு கயல்விழி மாடி அறையில்தான் உறங்கும் நேரம் வரை இருப்பாள். 

அன்று சமீராவிடம் இருந்து வாங்கிய வந்த நோட்டை பார்த்து, அவள் நோட்டில் எழுதி கொண்டு இருந்தாள். டேப்பில் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. நந்தாவிடம் இருந்து இந்தப் பழக்கம் அவளுக்கும் தொற்றிக்கொண்டது. 


இனிமையான பாடல்களைக் கேட்டு விட்டு இரவு படுக்க. அவள் கண்டதையும் யோசிக்கவில்லை. அதனால் நன்றாக உறங்கியும் விடுவாள். 


மறுநாள் பேருந்து நிலையத்தில் சமீரா வரும் பேருந்துக்காகக் காத்திருந்து, அவள் வந்த பேருந்தில் கயல்விழி ஏறினாள். சமீராவுக்கும் அவளைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி. இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசியபடி சென்றனர். 


குறுகிய நாட்களில் இருவரும் நெருக்கமான தோழிகள் ஆகினர். அதோடு சமீராவால் மற்ற மாணவிகளும் அவளோடு நட்பு பாராட்ட, கயல்விழிக்கு இப்போது கல்லூரிக்கு செல்ல மிகவும் பிடித்தது. 


நந்தாவிடம் சமீரா பற்றிச் சொல்வதற்காக ஆவலாகக் காத்திருந்தாள். அவன் தினமும் எல்லாம் அழைக்க மாட்டான். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுதான். அதனால் எப்போது போன் அடித்தாலும் கயல்தான் ஓடி சென்று எடுப்பாள். 


நந்தாவை விட்டு பிரிந்து இருந்தாலும், அவன் மீது நாளுக்கு நாள் அன்பு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவள் இன்று வாழும் இந்த வாழ்க்கை அவனால் அல்லவா? ஒவ்வொரு நிகழ்வையும் அவனோடு சேர்த்துப் பார்க்கத்தான் அவளுக்குப் பிடிக்கும். 


சில நேரம் சிறு பிரிவு கூட அன்பை அதிகமாக்கும். நம் துணையை அதிகம் தேட வைக்கும். அதுதான் இப்போது கயல்விழிக்கும் நடந்து கொண்டிருக்கிறது. தள்ளி இருந்தாலும் நந்தா அவனையே நினைக்க வைத்திருந்தான். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!