Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 24 2

ஆறு மணி போல் வருண் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றபோது, தாரணி அங்குதான் இருந்தாள். 


“உங்க அண்ணன் வந்திருக்கான் தெரியுமா?” 


“தெரியும் காலையில பார்த்தேன்.” 


“கிளம்பு அங்க போயிட்டு வரலாம்.” 



Advertisement


“நான் வரலை நீங்க போங்க.” என்ற தாரணியை வருண் ஆச்சர்யமாகப் பார்த்தான். பின்னே அம்மா வீடு என்றால் முதல் ஆளாகக் கிளம்புவாளே. இன்று என்ன வந்தது?” 


“உன் அண்ணன்தான் உன்னைக் கூடிட்டு வர சொன்னான்.” 


அவன் இவ்வளவு சொல்லியும், தாரணி கிளம்பாமல் இருக்க…. வருணுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. 

Advertisement


“நீ எதுவும் உங்க வீட்ல கலகம் பண்ணியா என்ன? ஏன் அங்க வர இவ்வளவு யோசிக்கிற?” 

Advertisement


அவன் வாய்விட்டே புலம்ப, தாரணிக்கு பக்கென்று ஆகிவிட்டது. நேற்று அவள் பேசியது தெரிந்தால்… நந்தா கூட விட்டுவிடுவான், ஆனால் வருண் அவளைக் கொன்றே போட்டு விடுவான் எனத் தெரியும். 

அதற்கு மேல் தாமதிக்காமல், அவள் உடனே கிளம்ப…. இருவரும் அங்கே சென்றனர். 


இவர்கள் அங்கே சென்றபோது பரணி, ராதிகா எல்லாம் வீடு திரும்பி இருந்தனர். நந்தாவும் வந்திருந்தால்… எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ராதிகா எதோ அவள்தான் உரிமையானவள் போல் நந்தாவின் அருகே உட்கார்ந்து இருந்தாள். 

Advertisement


நேற்று வீட்டில் எதோ நடந்திருக்கிறது என்பதுவரை அவளுக்குப் புரிந்தது. ஆனால் எதையும் தாரணியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் எல்லோரையும் ஆராய்ச்சி கண் கொண்டு பார்த்தாள். 


கயல் எல்லோருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். 


அவள் திரும்ப வருவாள் என நந்தா எதிர்ப்பார்க்க.. அவள் உள்ளேயே இருந்து கொண்டாள். 


“கயல்…” நந்தா அழைக்க…. அவள் வந்து எட்டிப்பார்க்க, “அங்க என்ன பண்ற? இங்க வா.” என அழைத்தான். 


கயல் அங்கிருந்படியே “நைட்டுக்கு சமைக்கணும்.” என்றாள். 


“எல்லாம் இருக்கே கயல்.” என்றார் குழலி. “மதியம் அசைவம் சமைத்ததால்… குழலி நிறையவே செய்து இருந்தார்.” 

“சாப்பாடு வைக்கிறேன்.” என எதோ சாக்கு சொன்னாள். அவளுக்குத் தாரணி முன்பும், ராதிகா முன்பும் வரவே பிடிக்கவில்லை. 


அதோடு தாரணி சொன்ன, எங்க அண்ணனுக்கு இவங்க பொருத்தம் இல்லை என்பது வேறு அவளுக்கு உருத்திக்கொண்டே இருந்தது. 


“சாப்பிடும் போது சாதம் வச்சுக்கலாம்.” எனக் குழலி சொல்லியும், கயல் வரவில்லை. 


நந்தா அவனே எழுந்து சென்று, சமையல் அறையில் பார்க்க… கயல் அங்கே சும்மாதான் நின்று கொண்டு இருந்தாள். 


“இங்க என்ன பண்ற?” 


திடிரென்று நந்தாவின் குரல் கேட்டதும், கயலுக்குத் தூக்கிவாரி போட்டது. 


“என்னை யாரையும் எதையும் கேட்கவும் விட மாட்டேங்கிற. இப்படி நீ ஒதுங்கி இருந்தா, நான் என்ன பண்ணட்டும்? எல்லார் கூடவும் சண்டைதான் போடணும், போடட்டுமா?” 


கயல் பயந்து போய், வேகமாக வேண்டாம் எனத் தலையசைத்தாள். 


“அப்ப நான் சொல்றது கேளு.” என்றவன், அவள் கைபிடித்து அழைத்து வந்தான். 


அவர்கள் இருவரும் வருவதைப் பார்த்துச் சோபாவில் இருந்து குழலி எழுதுகொள்ள. “நீங்க இருங்க மா.” என்றவன், உணவு அறையில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்தான். 


“ராதிகா, இதுல உட்கார்ந்துக்கோ.” என்றவன், குழலி அருகே சோபாவில் உட்கார்ந்து, பக்கத்தில் கயலை நெருக்கமாக உட்கார வைத்து, அவள் நகர முடியாதபடி, அவள் தோள் மீது கையும் போட்டுக் கொண்டான். 

 

நீங்க எல்லாம் என்ன நினைச்சா என்ன டி? இவ என்னோட பொண்டாட்டி என்பது போல், அவனது செயல் இருந்தது. அதைப் பார்த்து தாரணிக்கும் ராதிகாவுக்கும் முகம் கருத்துவிட்டது. 


“அப்புறம் இந்தத் தடவை எத்தனை நாள் இருப்ப? என்னைக்குக் கிளம்புற?” வருண் கேட்க, 


“ரெண்டு நாள் இருப்பேன். அதோட நான் மட்டும் தனியா போகலை. இந்தமுறை கயலையும் என்னோட கூடிட்டு போறேன்.” என்றான். 


“லீவுக்குக் கூடிட்டு போறியா?” 


“இல்லை… இனி நான் எங்க இருக்கேனோ, அங்க என்னோட பொண்டாட்டியும் இருப்பா.” 


“இப்பத்தான் நீ நல்ல முடிவா எடுத்திருக்க.” என்றான் வருண்.


“கயல் கிராமத்தில வீட்டுக்குள்ள வளர்ந்த பொண்ணு. எனக்கோ அடிக்கடி ஊர் மாத்திட்டே இருக்க வேலை. நான் எந்த ஊருக்கு போனாலும், கயலுக்கு அங்க தனியா சமாளிக்கத் தெரியனும்.” 


“இப்ப இங்க இவ்வளவு நாள் இருந்திருக்கா… தனியா வெளிய போயிட்டு வரா. கார் ஓட்ட தெரியும். இனி எங்க போனாலும் சமாளிச்சுப்பா.” 


“அண்ணி இன்னும் படிப்பு முடிக்கலையே அண்ணா. வேற காலேஜ்ல சேர்த்து விடுவீங்களா?” பரணி கேட்க… 


“எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ட்ரான்ஸ்பர் வரும். சென்னைக்கே வந்ததுன்னா ,அவ காலேஜ் போவா… இல்லைனா அவ தபால்ல டிகிரி முடிக்கட்டும்.” என்றான் நந்தா. 


“அப்ப அந்தப் படிப்புக்கு எந்த மதிப்பும் இருக்காது. நானும் படிச்சிருக்கேன்னு பேருதான் இருக்கும்.” ராதிகா புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைக்க… 


“நான் வேலைக்குப் போக அவளைப் படிக்க வைக்கலை. என் வேலையில் என்னால வீட்டையோ, குழந்தைகளையோ கவனிக்க முடியாது. என் பொண்டாட்டி வீட்டை பொறுப்பா பார்த்து, குழந்தைகளை நல்லா வளர்த்தா எனக்குப் போதும்.”  என்றான் நந்தா.


“நீங்க எல்லாம் படிச்சாலும் இன்னும் பட்டிக்காடா தான் அத்தான் இருக்கீங்க.” 


“ஓ வேலைக்குப் போகாம வீட்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் உனக்குக் கேவலமா.” 


“அப்படித்தான் டா மச்சான் உன் தங்கச்சியும் நினைக்கிறா.” 


“பொண்ணுங்க வேலைக்கே போகக் கூடாதுன்னு நான் சொல்லலை. அது அவங்க சூழ்நிலையைப் பொறுத்தது.” 


“அம்மாவும்தான் வேலைக்குப் போறாங்க. ஆனா நாம எல்லாம் கொஞ்சம் வளர்ந்து, பெரியவங்களா ஆனப்பிறகு போனாங்க. அதோட நம்ம பாட்டி இருந்தாங்க, நம்மைப் பார்த்துக்க.” 


“அதே போல என்னோட குடும்பச் சூழ்நிலைக்கு, நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறது, எங்களுக்குத் தோதுபடாது. அவ்வளவுதானே தவிர…. வேலைக்குப் போறவங்க உயர்ந்தவங்க, போகாதவங்க தாழ்ந்தவங்க இல்லை.” 


“நான் என் சம்பளத்தையே என் பொண்டாட்டிகிட்ட தான் கொடுப்பேன். எனக்கே அவதான் செலவு பண்ணனும்.” என்ற நந்தா கயலிடம், “என்ன கயல்? என்னை நல்லா பார்த்துப்ப இல்ல. நான் சம்பளம் மட்டுமே வாங்கும் போலீஸ்காரன் மா, கொஞ்சம் பத்தியும் பத்தமளும்தான் இருக்கும்.” என்றதும், கயலுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நந்தா இன்னும் அவனது அணைப்பை இறுக்கினான். 


கயல் மெதுவாக அவன் கையை எடுத்து விட… நந்தா தோளில் இருந்து எடுத்த கையை, அவளது இடையில் படரவிட்டான். 


இதுக்கு அதுவே பரவாயில்லை என நினைத்த கயல், யார் கவனத்தையும் கவராமல், அவன் கையை எடுக்க முயல… அவள் அருகில் குனிந்தவன், “நீ சும்மா இருந்தா, நானும் சும்மா இருப்பேன். இல்லைனா நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்லை.” என்றதும், கயல் தன் முயற்சியை விட்டுவிட்டாள். 


அவள் முகம் சிவந்து விட்டது. அதை ரசனையாகப் பார்த்தவனின் முகத்திலோ புன்னகை இருந்தது. இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் மற்றவர்கள் இருந்தனர். ராதிகாவுக்குப் பொறுக்க முடியவில்லை. அவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள். 


“நான் போய்ச் சாதம் வைக்கட்டுமா?” கயல் கிசுகிசுப்பாகக் கேட்க, இதில் ரகசியமாகக் கேட்க என்ன இருக்கிறது என்று நினைத்தவன், “நாம வெளிய போறோம். நீ போய் டிரஸ் மாத்திட்டு வா.” என்றான். 


கயல் எழுந்து செல்ல… அவள் மேலே செல்லும் வரை அவளையே பார்த்திருந்தவனின் முகம், இப்போது கடினமாக மாறியது. 


“அம்மா, எனக்கு மெட்ராஸ்க்கே ட்ரான்ஸ்பர் வந்தாலும், நான் என் பொண்டாட்டியோட தனிக் குடித்தனம் போயிக்கிறேன்.” நந்தா சொல்ல… மற்றவர்களின் முகம் மாறியது. 


“அவளை யாரும் குறைவா நடத்தினா என்னால பார்த்திட்டு இருக்க முடியாது. நான் பதிலுக்குப் பேசிடுவேன். அப்ப எல்லாருக்குமே மனசு கஷ்ட்டம்.” 


“நமக்குள்ள வார்த்தையை விட்டுட்டா…. அப்புறம் எப்படி நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியும் சொல்லுங்க.” 


“ஏன் அந்த அளவுக்குக் கொண்டு போகணும்? நான் முதல்லையே விலகி இருந்துக்கிறேன்.” 


நந்தா சொல்லி முடித்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல.. மற்றவர்கள் தாரணியைதான் பார்த்தனர். 


“இப்ப சந்தோஷமா உனக்கு.” வருண் கேட்க… 


“நீ பண்ணதுக்கு, எனக்கும் அம்மாவுக்கும்தான் தண்டனை.” என்ற பரணி, அங்கிருந்து கோபமாக எழுந்து சென்றான்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!