Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 24 1

புது வெள்ளை மழை

 

அத்தியாயம் – 24 


நந்தா அறைக்குள் சென்றபோது கயல் அங்கு இல்லை. பக்கவாட்டுக் கதவு திறந்து இருக்க… அவன் அங்குச் சென்று பார்த்த போது, தலைக்குக் குளித்து விட்டு கூந்தல் காய்வதற்காக, கயல் வெயிலில் நின்றுகொண்டு இருந்தாள். 



Advertisement


பார்வை எங்கோ தூரத்தை வெறித்து இருக்க, இரவு அழுத சுவடு இன்னும் அவள் கண்களில் மிச்சம் இருந்தது. எதோ சோக சித்திரித்ததைப் பார்ப்பது போல் அவள் தோற்றம் இருக்க, அப்படி அவளைப் பார்க்கவே நந்தாவுக்குப் பிடிக்கவில்லை. 


அவள் அருகில் அவன் செல்ல… யாரோ வருவது உணர்ந்து கயல் பார்வையைத் திருப்பினாள். நந்தாவை பார்த்ததும் நம்ப முடியாத ஆச்சர்யத்தில், அவள் விழிகள் இன்னும் பெரிதாக விரிய, இதழும் புன்னகை சிந்தியது. 


அவள் எதிரில் வந்தவன், அவள் முகத்தைப் பற்றிகொண்டு, “எம்மாம் பெரிய கண்ணு. என்னை அப்படியே இஸ்க்குதே…” எனப் பாவனையாகச் சொல்ல.. “வரும் போதே முனியம்மாவைதான் பார்த்திட்டு வந்திருக்கீங்க போலிருக்கு.” என்ற கயலின் புன்னகை மேலும் விரிந்தது. 

Advertisement


“முன்னாடியெல்லாம் புரியாது. இப்ப மெட்ராஸ் தமிழ் நல்லா புரியுது போல….”

“யாரு ட்ரைனிங்? உங்க முனியம்மாவோடது ஆச்சே.” 

Advertisement


“என்னது என்னோட முனியம்மாவா?” நந்தா அதிர்ச்சியாக, கயல் குறும்பாகச் சிரித்தாள். 

அவள் காதை பிடித்துத் திருகியவன், “ரொம்ப வாய் அதிகமாகிடுச்சு.” என்றான். 


இருவரும் வெகு அருகில் நின்று இருந்தனர். கயல் அப்போதுதான் கவனித்தாள். நந்தா மிகவும் களைத்துப் போய் இருந்தான். 

Advertisement


“நான் உங்களுக்குக் காபி கொண்டு வரேன்.” என அவள் அங்கிருந்து செல்ல, “அப்படியே கீழ பல்பொடி இருக்கும், அதையும் எடுத்திட்டு வா.” என்றான். 


நேற்று அவன் அலுவலகத்தில் இருந்து அப்படியே கிளம்பி இருந்தான். எதையும் எடுத்து வரவில்லை. வரும்போது சட்டையை மட்டும் மாற்றி இருந்தான். 


கயல் அவனையே பார்க்க… “என்ன அப்படிப் பார்க்கிற?” நந்தா கேட்க… ஒன்றும் இல்லை எனத் தலையசைத்தவள், திரும்பி சென்றாள். 


முதலில் கயல் பல்ப்பொடியை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, திரும்பக் கீழே காபி எடுத்து வர சென்றாள். 


அவள் காபி போட்டுத் திரும்பும்போது குழலி வந்தார். அவர் இன்னும் கல்லூரிக்கு கிளம்பவில்லை. கயலின் பார்வையை உணர்ந்தவர், “இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு பார்க்கிறேன்.” என்றார். 


“உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” கயல் கவலையாகக் கேட்க,
“கல்யாணத்துக்குப் போயிட்டு வந்ததுதான் கொஞ்சம் அலுப்பா இருக்கு. அதுதான் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்.” 


குழலி சாதரணமாகச் சொன்னாலும், நேற்று நடந்த பிரச்சனைக்குப் பிறகுதான், அவர் இப்படி இருக்கிறார் எனக் கயலுக்குப் புரிந்தது.

 

கயல் காபியோடு வந்த போது, நந்தாவும் முகம் கழுவி வந்திருந்தான். அவனிடம் அவள் காபியை கொடுக்க… அதை அவன் பருக, கயல் கல்லூரிக்கு செல்ல தயாரானாள். 


“நேத்தெல்லாம் அழுதிட்டே இருந்தியா? இல்லை பரிட்ச்சைக்கும் படிச்சியா?” 


கயல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் பதில் எதுவும் சொல்லாமல், மீண்டும் அவள் வேலையைப் பார்க்க… நந்தாவும் விட்டுவிட்டான். 


“நான் குளிச்சிட்டு வந்து உன்னைக் காலேஜ் கூடிட்டு போறேன்.” என்றவன், துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். கயல் கீழே இறங்கி வந்துவிட்டாள். 


நந்தா வருவதற்குள் மதிய சமையலுக்குச் சின்ன வெங்காயம் உரித்து, தக்காளி நறுக்கி, கொஞ்சம் தேங்காயும் துருகி, குளிர் சாதனப் பெட்டியில் வைத்தாள். 


“நீ ஏன் கயல் இப்பபோய் இதைப் பண்ணிட்டு இருக்க? காலேஜ்க்கு டைம் ஆகப் போகுது.” 


“உங்களுக்கு உடம்பு சரி இல்லை. அதுதான் கொஞ்சம் வேலை செஞ்சு வச்சிட்டு போகலாம்னு நினைச்சேன். காலேஜ்க்கு அவர் கொண்டு போய் விடுறேன்னு சொன்னார்.” 


“சரி, அவன் வர்றதுக்குள்ள நீ போய்ச் சாப்பிடு.” 


அந்த நேரம் தாரணியும் அங்குதான் இருந்தாள். கயல் செய்வது எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் கயல் தாரணியை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.  கயல் சாப்பிட்டு முடிக்கும்போது, நந்தா வந்தான். 


“உங்களுக்கு டிபன் எடுத்து வைக்க வா.” 

“வேண்டாம், நான் உன்னை விட்டுட்டு வந்து சாப்பிடுறேன்.”

 
கயல் தன் தோள் பையை எடுத்துக்கொள்ள.. நந்தா வண்டி சாவி எடுத்துக் கொண்டு வந்தவன், பிறகுதான் நியாபகம் வந்தவனாக, “தாரணி எங்க?” எனத் தன் அம்மாவிடம் கேட்டான். 


“அவ இப்பதான் கிளம்பி போனா?” 


“வருண் வந்தானா?” 


“இல்லை, அவளே தான் போனா?” 


“ஏன் தனியா போனா? நான் கொண்டு போய் விட்டிருப்பேனே.” என்றான். 


தாரணிக்கு தன் அண்ணனை பார்க்க பயம். அவன் எதாவது திட்டு விடுவானோ என்ற பயத்தில் தான், உடனே கிளம்பிவிட்டாள். கயல் எல்லாவற்றையும் நந்தாவிடம் சொல்லி இருப்பாள் என அவள் நினைத்துக் கொண்டாள். 


கயல் சொல்ல மாட்டாள் எனக் குழலிக்கு தெரியும். அதோடு நந்தாவும் தங்கையை அப்படி விட்டுக் கொடுத்து விடமாட்டான். இருந்தாலும், தாரணிக்கு ஒரு பயம் இருந்தால்தான், அவள் இனி இதுபோலக் கயலை மீண்டும் பேச மாட்டாள் என நினைத்தே, அவளிடம் ஆறுதலாக எதுவும் சொல்லவில்லை. 

அப்போது வேலைக்குச் செல்ல தயாராகி வந்த ராதிகா, “ஏன் அத்தான். உங்களுக்கு உங்க தங்கையை மட்டுதான் தேட தோணுதா? நான் ஒருத்தி இங்க இருக்கிறது நியாபகம் இல்லையா?” எனக் கேட்டாள். 


“ஓ… நீ இந்த வீட்லதான் இருக்க இல்லை. உண்மையாவே எனக்கு நியாபகம் இல்லை ராதிகா.” என்றான் நந்தா. 

 

ராதிகாவுக்கு முகம் கருத்துவிட்டது. உன்னைப் போய் மறப்பேனா என்று சொல்வான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் உன் நியாபகமே இல்லை என்றுவிட்டான். 


“கயலுக்கு டைம் ஆகுது. நாம பிறகு பேசுவோம்.” என்றவன், உடனே கிளம்பியும் விட்டான். 


நந்தா கயலை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றான். அவன் அவளைக் கல்லூரி வாயிலில் இறக்கி விட, “போயிட்டு வரேன்.” என்றவள், சிறிது துரம் சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி அவனிடம் வந்தாள். நந்தா அவளையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான். 


“அத்தைகிட்ட எதுவும் கேட்காதீங்க. அவங்களுக்கு உடம்பு சரி இல்லை.” அவள் சொல்ல… அவளையே அழுத்தமான பார்வை ஒன்றை பார்த்தவன், “சரி எதுவும் கேட்கலை.” என்றான். 


“பரீட்ச்சையை ஒழுங்கா எழுது.” என்றவன் புன்னகைக்க, கயலும் பதிலுக்குப் புன்னகைத்து விட்டு சென்றாள். 


நந்தா வீட்டிற்கு வந்தவன், குழலி எடுத்து வைத்த உணவை சாப்பிட்டான். அவன் சாப்பிடும் போதே, குழலி அவராகவே சகுந்தலா வீட்டிற்கு வந்தது, போன்னில் பேசியது, தாரணி நேற்று அவரிடம் சண்டை பிடித்தது என எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். 


“இதுல மாப்பிள்ளை கூட முன்னாடி நாள் என்ன சண்டை பிடிச்சான்னு தெரியலை? அவர் கோபத்தில இருக்கார் போலிருக்கு, நேத்து அவளைக் கூப்பிட கூட வரலை.” என்றார். 


“இந்தப் பொண்ணு ஏன் இப்படியெல்லாம் பண்ணுதுன்னு எனக்குத் தெரியலை? அவ வாழ்க்கையை அவளே கெடுத்துப்பா போலிருக்கு.” 


இதையெல்லாம் கேட்டபடி பரணி வெளியே செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான். அண்ணன் வந்துவிட்டார் இனி அவர் பார்த்துக் கொள்வார் என அவனுக்கு நிம்மதியாக இருந்தது. 


“நான் பார்த்துகிறேன் மா. நீங்க கவலைப்படாம இருங்க. வாங்க எதுக்கும் நாம டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடலாம்.” என்றவன், குழலி மறுப்பதைப் பொருட்படுத்தாமல், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு சென்றான். 


அவருக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்க்க… எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வரும்போது, மதிய சமையலுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிகொண்டு வந்து குழலி மகனுக்கு விருந்து சமைத்தார். 


நந்தா சிறிது நேரம் ஓய்வு எடுப்போம் என அறையில் வந்து படுத்துவிட்டான். நேற்று இரவு கிடைத்த பஸ்சில் ஏறி இருந்தான். பஸ்ஸில் உறங்கவே இல்லை. கயல் என்ன நிலைமையில் இருக்கிறாளோ என அதே கவலையாக இருந்தது. 


படுத்தபிறகுதான் கவனித்தான், அறை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. கயல் தான் கற்றுக்கொண்ட கலைகளை எல்லாம், செய்து அங்கங்கே வைத்திருக்க… பார்க்க கண்ணைக் கவரும்படி இருந்தது. மனைவியைப் பற்றிய பெருமித்தத்தில் நந்தா அப்படியே உறங்கி போனான். 


மதியம் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது, கயல் நந்தாவை மிகவும் எதிர்பார்த்தாள். ஆனால் அவனைக் காணவில்லை. அதனால் வழக்கம்போல் சமீராவோடு சென்றாள். 


அவள் வீட்டிற்கு வந்தபோது குழலி சமைத்துக் கொண்டு இருந்தார். நந்தா வீட்டில் இல்லையோ எனக் கயல் நினைக்க, “வந்துட்டியா கயல், நான் சமையல் முடிச்சிட்டேன். நீ போய் நந்தாவை கூடிட்டு வந்து சாப்பிடு.” என்றார் குழலி. 


கயல் சென்று பார்த்துப் போது, நந்தா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பவே அவளுக்கு மனம் வரவில்லை. 

பையை வைத்து விட்டு முகம் கைகால் கழுவிவிட்டு வந்தவள், முதலில் அவன் அருகில் மெத்தையில் படுக்கத்தான் நினைத்தாள். பிறகு எதோ யோசித்தவள், சற்று தள்ளி தரையில் தலையணை மட்டும் போட்டு படுத்துக் கொண்டாள். 


இரவு அவளும் சரியாகத் தூங்கவில்லை. அதனால் படுத்ததும் உறங்கிவிட்டாள். சில மணி நேரங்கள் சென்று, நந்தாவுக்கு உறக்கம் களைய, நேரத்தை பார்த்துவிட்டு பதறி அடித்து எழுந்தான். மதியம் கயலை கூப்பிட செல்ல வேண்டும் என நினைத்து இருந்தான். 


இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே, அம்மாவையாவது எழுப்பி விடச் சொல்லி இருக்கலாம் என நினைத்தவன், அப்போதுதான் கயல்விழியும் அங்கிருப்பதைப் பார்த்தான். 


அவள் தரையில் படுத்திருக்க, அப்போது அவன் எதுவும் நினைக்கவில்லை. வயிறு வேறு பசித்தது. கயல்விழி சாப்பிட்டாளா எனத் தெரியவில்லை. 


அவன் கீழே சென்ற போது, குழலி அவர் அறையில் இருந்தார். ஆனால் விழித்துதான் இருந்தார். அவர் சொன்ன பிறகுதான் கயலும் இன்னும் சாப்பிடவில்லை என்று தெரியும். 

அவர் உணவை எடுத்து வைப்பதற்காகச் செல்ல…. நந்தா கயலை எழுப்பிச் சாப்பிட அழைத்து வந்தான். அப்போதே மணி நான்கு. சாப்பிட்டதும் நந்தா வருணின் அலுவலகத்திற்கு அழைத்தான். 


“ஹாய் டா மாப்பிள்ளை. எப்படி இருக்க?” 


“என்ன டா மச்சான் இந்த நேரத்தில போன் பண்ணி இருக்க?” 


“மெட்ராஸ்ல தான்டா இருக்கேன்.” 

“அப்படியா சொல்லவே இல்லை. எப்ப வந்த?” 


“காலையில வந்தேன்.” 


“சரி ஆபீஸ் முடிஞ்சு போகும்போது வீட்டுக்கு வரேன்.” 


“வரும்போது தாரணியையும் கூடிட்டு வா.” 


“அவ அங்கதான இருந்தா.” 


“காலையில கிளம்பி போயிட்டாளே.” 


“சரி.” என்று போன்னை வைத்த வருணின் முகம், சற்று முன்பு இருந்த மலர்ச்சியைத் தொலைத்து இருந்தது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!