Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 27 1

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 27 


“கயல், கிளம்பு கோவிலுக்குப் போயிட்டு, எதாவது படத்துக்குப் போயிட்டு, அப்படியே மத்தியானம் வெளியவே சாப்பிட்டு வரலாம்.” என நந்தா அழைத்தான். 


இருவரும் கிளம்பிக்கொண்டு இருந்தபோது, போன் அடித்தது. அருகில் இருந்ததால் கயல்தான் எடுத்தாள். அந்தப் பக்கம் சமீரா பேசினாள். 



Advertisement


கயலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னவள், “இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். வரட்டுமா?” எனக் கேட்டாள். 


“ஒரு நிமிஷம் நான் உனக்குத் திரும்பப் பண்றேன்.” எனக் கயல் போனை வைத்துவிட்டாள். 


அவள் நந்தாவிடம் சமீரா சொன்னதைச் சொல்ல… அவன் உடனே “என்னை ஏன் கேட்கிற? நீயே வர சொல்லி இருக்க வேண்டியது தானே.” என்றான். 

Advertisement


“நீங்க வெளிய போகணும்னு சொன்னீங்களே?” 

Advertisement


“அது பரவாயில்லை இன்னொரு நாள் போயிக்கலாம்.” என்றதும், கயலுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. அவள் நிறைய முறை சமீராவை வீட்டிற்கு அழைத்து இருக்கிறாள். ஆனால் சமீரா இதுவரை வந்ததே இல்லை. 


“மதியம் சாப்பிடுற மாதிரி வர சொல்லு.” என்றான் நந்தா.
கயல் சமீராவை அழைத்து, “மதியம் சாப்பிடுறது போல வா.” என்றாள். 


“சரி ஒரு பன்னிரண்டு மணி போல வரேன்.” என்றாள் சமீரா. 

Advertisement

நந்தாவும் கயலும் கோவிலுக்கு மட்டும் சென்றனர். கயல் நெற்றி, வகுடு, தாலி என எல்லா இடத்திலும் குங்குமம் வைத்து விழுந்து விழுந்து சாமி கும்பிட, அதைப் பார்த்த நந்தா, “உனக்காக எதாவது வேண்டினியா இல்லையா?” எனக் கிண்டலாகக் கேட்டான். 


“நீங்க நல்லா இருந்தா, நானும் நல்லா இருப்பேன்.” 


கயலின் பதில் நந்தாவின் மனதை சுகமாகத் தாக்க… அவன் அவளையே ஆசையாகப் பார்த்தான். 


“என்ன?” எனக் கயல் பார்வையால் கேட்க… 


“கோவிலா போயிடுச்சேன்னு பார்க்கிறேன்.” என்றதும், கயலுக்குப் பதட்டமாகி விட்டது. போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு சென்றாள். 


கோவிலில் இருந்து வரும்போது, மதிய சமையலுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தனர். 


“உன் ப்ரண்ட்க்கு பிடிச்சதா பண்ணு. என்ன செய்யப்போற?” 


“அவளுக்கு வாழை இலையில சாதம், சாம்பார், கூட்டு, பாயசம்ன்னு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். நான் அதுதான் பண்ணப்போறேன்.” 


கயல் சமைக்க, நந்தா அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தான். தோட்டத்தில் இருந்து வாழை இலை பறித்து வந்தான். பாயசத்துக்குத் தேங்காய் உடைத்துக் கொடுத்தான். 


சமையல் முடிந்ததும், கயல், நந்தாவுக்கு ஒரு கிண்ணத்தில் பாயசம் கொண்டு வந்து கொடுத்தாள். 

நந்தா கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டவன், “பாயசம் செமையா இருக்கு.” என்றான். 

“நான் இன்னைக்குத்தான் முதல் தடவை பருப்புப் பாயசம் பண்ணி இருக்கேன்.” 


“முதல் தடவைக்கே இப்படி அசத்துறியே கயல்.” 


“வருண் அண்ணாவுக்குப் பாயசம்னா ரொம்பப் பிடிக்கும்.” கயல் சொல்ல, நந்தா முகம் மாறினான். 


வீட்டின் அழைப்பு மணி அடிக்க…. சமீரா வந்துவிட்டாள் எனக் கயல் ஓடிசென்று கதவு திறந்தாள். 


அவள் எதிர்பார்த்தபடி சமீராதான் வந்திருந்தாள், அவள் அப்பாவோடு வந்திருந்தாள். அவர் வெளியே வண்டியிலேயே அமர்ந்து இருக்க… கயல் அவரை வீட்டுக்குள் அழைத்தாள். 


“இருக்கட்டும் மா, நீங்க ப்ரண்ட்ஸ் பேசிட்டு இருங்க.” என்றவர் அங்கிருந்தபடியே கிளம்பிவிட்டார். அவர் குரல் கேட்டு நந்தா வெளியே வருவதற்குள் அவர் சென்றுவிட்டார். 

நந்தாவை பார்த்ததும் சமீராவுக்கு ஒரே அதிர்ச்சி. நந்தா இருப்பது தெரிந்தால் வந்திருக்கவே மாட்டாள். அதனால்தான் கயலும் அவளிடம் சொல்லவில்லை. 


சமீரா கயலை முறைக்க, கயல் சிரித்தாள். நந்தா அவளை வரவேற்றான். 


“எப்படி இருக்க மா?” 


“நல்லா இருக்கேன் அண்ணா.” என்றவள், கயலுக்கு வாங்கி வந்த பிறந்த நாள் பரிசை அவளிடம் கொடுத்தாள். 


“அவர் உங்க அப்பாவா? உள்ள வராமலே போயிட்டாரே.” 


“ஆமாம், அவர் கடைக்குப் போறார்.” 

சமீரா தயங்கித்தயங்கி பேச… நந்தா தோழிகள் இருவரும் தனியாகப் பேசிக்கொள்ளட்டும் என்று எண்ணினான். 


“நான் கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரேன். உன் அண்ணனுக்குப் பாயசம் குடுக்கிறியா? கொடுத்திடுறேன்.” நந்தா கேட்டதும், கயல் சந்தோஷமாகச் சமையல் அறைக்குச் சென்றாள். 


நந்தா அவள் பின்னே உள்ளே வந்தவன், “இருந்தா கொடு, இல்லைனா பரவாயில்லை.” என்றான். 


“நமக்கும் சேர்த்துதான செஞ்சேன். நீங்க கொண்டு போங்க. நான் அத்தை வர்றதுக்குள்ள திரும்ப இன்னும் கொஞ்சம் பண்ணிடுறேன்.” 


கயல் கொடுத்த பாயசத்தை வாங்கிகொண்டு நந்தா கதவின் அருகே செல்ல… 


“அண்ணா...” என வேகமாக அழைத்த சமீரா, “இவளையும் உங்களோட ஊருக்கு கூடிட்டு போயிடுங்க அண்ணா. நீங்க இல்லாம இவ புலம்புறதை கேட்க கஷ்ட்டமா இருக்கு.” என்றதும், கயல் மாட்டி விட்டுடாளே என்பது போல முழிக்க… நந்தாவுக்கு அவளைப் பார்த்துச் சிரிப்புப் பொங்கியது. 


“ஓ அப்படியா நீ சொன்னதுனால யோசிக்கிறேன் மா.” என்றவன், சமீராவிடம் விடைபெற்றுச் சென்றான். கயல் அவன் பின்னே வாசல்வரை செல்ல… 


“நீ எல்லார்கிட்டயும் சொல்லு. ஆனா என்கிட்டே மட்டும் எதையும் சொல்லாத. வந்து உனக்கு இருக்கு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். கயல் சிரித்தபடி உள்ளே சென்றாள். 


அதன்பிறகு அவளுக்கு அவள் தோழியுடன் நேரம் சந்தோஷமாகக் கழிந்தது. அவள் அறைக்குச் சென்று சமீராவோடு பேசியபடி ஊருக்கு செல்ல, தன் உடைகளை எடுத்து வைத்தாள். 

“நீயே அண்ணாவோட ஊருக்குப் போறதா தான் இருந்துச்சா, நான்தான் தேவையில்லாம உளறிட்டேனா?” 


“நீ என்னைத்தான் அவர்கிட்ட மாட்டி விட்டிருக்க. திரும்ப வந்ததும், என்ன சொன்னேன்னு கேட்டு உயிரை எடுப்பார்.” 


ஒரு மணி ஆனதும், சமீராவுக்கு அவளுக்குப் பிடித்த மாதிரி வாழை இலையில் கயல் உணவு பரிமாறினாள். 


“எனக்காக இவ்வளவு செஞ்சியா?” 


“ஆமாம், நீ எங்க வீட்டுக்கு அடிக்கடி வரப்பாரு.” 


“நீ ஊருக்கு போயிட்டா, நான் எப்படி உன்னைப் பார்ப்பேன்?” 


“அவருக்கு இந்த ஊருக்கே ட்ரான்ஸ்பர் கிடைச்சிட்டா நல்லா இருக்கும். இல்லைனாலும் நாங்க இங்க வருவோம். நான் வரும் போது, உனக்குப் போன் பண்றேன். நீ இங்க வா… இல்லைனா நான் உங்க வீட்டுக்கு வரேன்.” 


சமீரா சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம், அவள் அப்பா அவளை அழைத்துச் செல்ல வந்துவிட்டார். 


அவரை உள்ளே அழைத்த கயல் பாயசம் கொடுத்தாள். அவர் கயலிடம் நந்தாவை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். கிளம்புவதற்கு முன் சமீராவும் கயலும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவள் அப்பாதான் எடுத்தார். 


சமீரா சென்றதும் கயலுக்கு வருத்தமாக இருந்தது. நந்தா வருவதற்குள் பாயசம் செய்து விடலாம் என நினைத்து அந்த வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

நந்தா வருணின் அலுவலகத்திற்குச் சென்றபோது, அவனை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத வருண் அவனை ஆவலாக வரவேற்றான். 


“வா டா மச்சான்.” 



“நீ இங்க இருக்கியா இல்ல கோர்ட்டுக்கு போயிட்டியோன்னு நினைச்சிட்டே வந்தேன்.” 


“இல்லைடா, இன்னைக்கு இங்கதான்.” 


“கயல் அவ ப்ரண்டு வர்றாங்கன்னு பாயசம் செஞ்சா… எங்க அண்ணனுக்குப் பிடிக்கும்னு கண்ணைக் கசக்கினா… அதைப் பார்கிறதுக்கு, வந்து குடுத்திட்டே போயிடலாம்னு வந்தேன்.” 


“என் பாச தங்கச்சி கயல், அண்ணனை விட்டுட்டு சாப்பிடுமா?” என்ற வருண், பாயசத்தை ஒரு டம்ளரில் ஊற்றிக் குடித்தான். 


“எங்க ஆபீஸ்ல வேற யாரும் இல்லை?” 


“எல்லாம் சாப்பிட போயிருக்காங்க. ஆமாம் இப்ப கயலை உன்னோட கூடிட்டு போறியே, அங்க கயலுக்குப் பாதுகாப்பா இருக்குமா?” 


“இப்ப கொஞ்சம் ஊர் அடங்கித்தான் இருக்கு. நவநீத கிருஷ்ணனும் இப்ப ஜெயில்ல. அவன் இன்னும் பன்னிரண்டு வருஷத்துக்கு வெளியே வர முடியாது.” 


“ஐயாவோட பையனே ஜெயில்ல இருக்கான்னு, இப்ப மத்தவங்க கொஞ்சம் அடங்கித்தான் இருக்காங்க.” 


“பாண்டியை கொன்னவனை ஜெயில்ல போட்டாச்சுன்னு, இப்ப அந்தப் பக்கமும் அமைதியா இருக்காங்க.” 

“இதுல என் மாமனார் அரசியல்ல இறங்கி இருக்கார். அதனால கொஞ்ச நாள் அவரை நல்லவராத்தான் காட்டிப்பார். 


“அதோட நாங்க இருக்கப் போறது சிட்டியில. பக்கத்துலதான் என்னோட ஆபீஸ். அதனால ஒன்னும் பிரச்சனை இருக்காது. இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு ட்ரான்ஸ்பர் வந்திடும்.”

வருணோடு பேசிக்கொண்டே திரும்பிய நந்தா, தாரணியை வருவதைக் கவனித்து விட்டான். ஆனால் அவளைப் பார்த்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. 


கல்லூரியில் இருந்து நேராகக் கணவனின் அலுவலகத்திற்கு வந்த தாரணியும் தன் அண்ணனை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் தயங்கி தயங்கி உள்ளே வர…. மனைவியைப் பார்த்ததும் வருணின் முகம் மலர்ந்தது. 


“ஏய் தாரணி,  என்ன இந்தப் பக்கம்?” 


“நீங்க இங்க இருந்தா உங்களோடையே வீட்டுக்கு போயிடலாம்னு நினைச்சு வந்தேன்.” 


தாரணி கல்லூரி முடிந்து பஸ்சில் இந்தப்பக்கம்தான் எப்போதும் செல்வாள். ஆனால் ஒருமுறை கூட இப்படி வந்தது இல்லை. அதனால்தான் வருண் ஆச்சர்யமாகக் கேட்டான். 


“எப்ப அண்ணா வந்தீங்க.” 


“கொஞ்சம் நேரம் ஆச்சு. நீ என்ன காலேஜ் முடிச்சு வர்றியா?” 


“ஆமாம்.” 


“சரி, அப்ப நான் கிளம்புறேன். நீங்களும் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடனும் இல்லையா?” என நந்தா எழுந்துகொள்ள…
என்ன அதற்குள் கிளம்பிகிறான் என்பது போல் மற்ற இருவரும் அவனைப் பார்த்தனர். 


“நீயும் எங்களோட வீட்டுக்கு வாயேன் டா?”

 
“இல்லைடா, வீட்ல கயல் எனக்காகச் சாப்பிடாம காத்திட்டு இருப்பா.” 


“அப்ப சாயங்காலம் கயலையும் கூடிட்டு வா.” 


“இன்னைக்குக் கயலோட பிறந்தநாள், பரணி வெளிய போய்ச் சாப்பிடலாம்ன்னு சொன்னான். அதனால இன்னொரு நாள் வரோம்.” 


நீங்களும் வாங்க என நந்தா அழைக்காதது வருணுகே ஆச்சர்யமாக இருந்தது என்றால்… தாரணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவள் முகம் வாடிவிட்டது. அதைப் பார்த்து கணவனின் மனம் தாங்கவில்லை. 


“தாரணி ரொம்பப் பீல் பண்ணா டா.” 


“என் பொண்டாடியும்தான். என்னாலதான பிரச்சனை என்னைக் கொண்டுபோய் எங்க வீட்ல விட்டுடுங்கன்னு சொல்றா? விட்டுடவா?” என நந்தா சூடாகக் கேட்க, பதில்சொல்ல முடியாமல் மற்ற இருவரும் திகைத்து போய் நின்றனர். 


“பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும். இல்லைனா பின்விளைவுகளை அனுபவிச்சுதான் ஆகணும்.” என்றவன், “சரி நான் கிளம்புறேன்.” எனச் சென்றுவிட்டான். தாரணி அங்கையே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். 


நந்தா இவ்வளவு பிடிவாதமாக இருப்பான் என வருணுமே நினைக்கவில்லை. அவன் தாரணியைச் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றான். 

நந்தா வீட்டுக்கு வந்ததும், கயல் அவனுக்கு உணவு பரிமாறினாள். 


“நீ சாப்பிட்டியா?” 


“இல்லை.” 


“நீயும் உட்கார்ந்து சாப்பிடு.” 


கயல் நந்தாவுக்குப் பரிமாறிவிட்டு, அவளும் அவனோடு உட்கார்ந்து சாப்பிட்டாள். சாப்பிடும்போது நந்தா அமைதியாக இருந்தான். 


சாப்பிட்ட பிறகும் கயல் வேலை பார்த்துக் கொண்டே இருக்க… நந்தா ஹாலில் இருந்த சோபாவில் படுத்தவன், அப்படியே உறங்கிவிட்டான். 


மாலை வந்த குழலி மகன் ஹாலில் படுத்திருப்பதைப் பார்த்தவர், கயலிடம் விசாரித்தார். 


“நான் வேலை பார்த்திட்டு இருந்தேன், அவர் அப்படியே தூங்கிட்டார் அத்தை.” 


“அப்படி என்ன வேலை உனக்கு?” 

“ஊருக்கு போறேன் இல்லையா. அதுதான் மாவு அரைச்சி வச்சிட்டா உங்களுக்கு ஈஸியா இருக்கும்னு பார்த்தேன்.” 


“கயல் ஒன்னு தெரிஞ்சிக்கோ, நந்தா இப்படி வீட்ல ஓய்வா இருக்கிறது எல்லாம் அதிசயம். அவன் வீட்ல இருக்கும்போது அவனோட நேரத்தை செலவு பண்ணு. வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். குழலி சொன்னதற்குக் கயல்விழி தலையை ஆட்டி வைத்தாள். 

“நீ போய்ப் படி. மிச்ச வேலையை நான் பார்த்துகிறேன்.” 

“இல்லை எல்லாம் முடிச்சிட்டேன். டீதான் போடணும்.” என்றவள், பிறகுதான் நியாபகம் வந்து, “இன்னைக்கு என் ப்ரண்ட் வந்தான்னு. பாயசம் பண்ணேன். உங்களுக்குக் கொண்டு வரவா?” 


“சரி கொண்டு வா.” 


கயல் கொண்டு வந்த பாயசத்தைச் சாப்பிட்டு பார்த்தவர், “ரொம்ப நல்லா இருக்கு. நீ ஊருக்கு போயிட்டா நான்தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் கயல்.” எனக் குழலி புன்னகைக்க, கேட்ட கயல்விழிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


தன் அம்மா பேசியதை கேட்டபடி எழுந்த நந்தா, “அதுக்காக எல்லாம் உங்களுக்கே என் பொண்டாட்டியை விட்டு கொடுக்க முடியாது.” என்றான். 


“நீயே அவளை நல்லா வச்சுக்கோப்பா… ஆனா நீங்க இருக்கிற இடத்துக்கு, நான் வந்தா வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்களா?” குழலி கேட்க, 


“நீங்களும் எங்களோட வந்திடுங்க அத்தை.” கயல்விழி அழைக்க, 


“அவங்க வேலையை விட்டுட்டு அப்படியே வந்திட போறாங்க.” என்றான் நந்தா. 


“இப்பவே நான் வேலையை விட்டுட்டு என்ன பண்ணுவேன்? உங்க அப்பாவா இருக்கார்.” பேசும் போது குழலியின் குரல் உடைய, நந்தா அவர் கைப்பற்றித் தன் பக்கத்தில் உட்கார வைத்தான். 


“சாரி மா, நான் விளையாட்டுக்குதான் சொன்னேன்.” 


“எப்பவுமே நம்ம வீட்ல என்னோட சமையல்தான். நமக்கும் யாராவது சமைச்சு போட மாட்டாங்களான்னு இருக்கும். என் அம்மா இருக்கும்போது, நான் அவர் சமைச்சு உட்கார்ந்து சாப்பிட்டிருக்கேன். எங்க அம்மாவுக்குப் பிறகு கயல்விழி வந்துதான் என்னோட ஆசையை நிறைவேத்தி இருக்கா.” 


“நான் அந்த அர்த்தத்தில சொன்னேன். அதுக்காக நான் அவ என்னோடவே இருக்கனும்னு நினைக்கலை. நீயும் அவளும் சேர்ந்து சந்தோஷமா இருங்க.” 


குழலி பேசப் பேச, கயல்விழியின் கண்கள் கலங்கிவிட்டது. அதைக் கவனித்த நந்தா, “அம்மா, இப்படியெல்லாம் பேசினீங்கன்னா, என் பொண்டாட்டி என்னோட ஊருக்கே வரமாட்டா.” என்றான் சிரித்துக்கொண்டே. 


“அவங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டுப் பேசுறாங்க. நீங்க என்ன கிண்டல் பண்றீங்க?” கயல் சண்டைக்குக் கிளம்ப, 


“என்னைப் பத்தி எங்க அம்மாவுக்குத் தெரியும். அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.” 


“இப்பவே அவங்க வேலையை விடமாட்டாங்க. அதோட பரணியைத் தனியா விட்டுட்டும் வரமாட்டாங்க. அவங்க என்னைக்கு நம்மோட வந்து இருக்கனும்னு நினைக்கிறாங்களோ, அப்ப நாம அவங்களைச் சந்தோஷமா வரவேற்போம்னு அவங்களுக்குத் தெரியும். அதனால நீ டென்ஷன் ஆகாத.” என்றான் நந்தா. 


“ஆமாம் கயல், அவன் சொல்றது கரெக்ட் தான்.” என்றார் குழலி. 


“ஆனா அம்மா, எங்களுக்குக் குழந்தை பிறந்ததும், நீங்க எங்களோட வந்திடுங்க.” 


“ஏன் டா? என்னை விடக் கயல் நல்லா குழந்தையை வளர்ப்பா.” 

“சாப்பாடு எல்லாம் நல்லாத்தான் போடுவா. ஆனா குழந்தையை மிரட்ட தெரியாது. குழந்தைதான் இவளை மிரட்டும், இவ உட்கார்ந்து அழுதிட்டு இருப்பா.” நந்தா சொன்னதும், கயலுக்குக் கோபம் வந்துவிட்டது. 


“உங்க போலீஸ் புத்தியை காட்றீங்க இல்ல... முதல்ல குழந்தையை ஏன் மிரட்டணும் சொல்லுங்க? அது அன்பா சொன்னா கேட்காதா?” கயல் இடுப்பில் கைவைத்துக் கேட்க, 


“நல்லா கேளு, குற்றவாளிங்க கூட இருந்து, இவனுக்கும் அதே புத்தி.” என்ற குழலி உள்ளே சென்று விட…. 


“இப்ப நீ கோபமா இருக்கியா? நந்தா கேட்க… 


“ஆமாம்.” கயல் கெத்தாகச் சொல்ல… 


“எனக்கு உன்னை எப்படிக் கூல் பண்றதுன்னு தெரியும்.” என்றவன், அவள் இடையில் கிச்சுகிச்சு மூட்ட… கயலுக்குக் கூச்சம் தாங்கவில்லை. 


கயல் அவனைத் தள்ளி விட்டு ஓட, நந்தா விரட்ட, அந்நேரம் சரியாக ராதிகா அலுவலகத்தில் இருந்து வந்தாள். 


இருவரையும் முறைத்து பார்த்தவள், அறைக்குள் செல்ல… நந்தா கயலை பார்த்துச் சிரித்தான். 


“நான் படிக்கப் போறேன்.” என்ற கயல் மாடிக்கு சென்றுவிட… அவள் படிக்கட்டும் என நந்தா ஹாலிலேயே உட்கார்ந்து டிவி பார்த்தான். 


எட்டு மணி ஆனதும், “கயல் வந்து சாப்டிட்டுப் போய் படி.” குழலி அழைக்க… கயல் கீழே வந்தாள். 


“உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கவா?” அவள் நந்தாவிடம் கேட்க, 

“இப்போ வேண்டாம். நான் அப்புறம் சாப்ட்டுகிறேன். நீ சாப்பிட்டுப் போய்ப் படி.” என்றான்.











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!