Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 5 2

கேண்டீன் சென்றதும் அவனுடைய நண்பர்கள், இருவரையும் வியப்பாக பார்க்க அவளுக்கோ அவர்களிடம் பேச தயக்கமாக இருந்தது. ஆனால் யுவனுக்காக அவர்களுடன் அமர்ந்தாள்.

ஒவ்வொருவராக யுக்தாவிடம் கேள்வி கேக்க அவளும் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் யுவனின் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு அவளுக்கு தைரியம் வந்திருந்தது.



Advertisement

அவள் இப்படி எல்லாம் எந்த ஆணிடமும் பேசியதில்லை. இந்த அளவுக்கு தன்னை மாற்றியது யுவன் தான் என்று எண்ணியவளின் மனது அவனுடைய மாசுமருவற்ற அன்பை எண்ணி பூரித்து போனது.

Advertisement

Advertisement

அதே நேரம் பிஸ்னஸ் விஷயமாக இன்று இரவு வெளியூர் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் சீக்கிரமே வீடு திரும்ப எண்ணி ஆபீஸில் இருந்து கிளம்பினார் செல்வம். மணி நாலே கால் ஆனதால் யுக்தாவையும் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணி கல்லூரிக்கு சென்றார்.

எப்போதும் அவளை ஏற்றும் இடத்தில் அவள் இல்லாததால் “காலேஜ் முடிஞ்சு இங்க நிக்க சொல்லிருந்தும் இவ ஏன் இன்னும் வரலை?”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டவர் ஒரு ஐந்து நிமிடம் அவளுக்காக காத்திருந்தார்.

Advertisement

அப்போதும் அவள் வரவில்லை என்றதும் அவளுடைய கிளாசை விசாரித்து அங்கே சென்றார். அங்கே வகுப்பறை மூடப் பட்டிருக்க “எங்கே போயிருப்பா?”, என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் யுக்தா வருவது தெரிந்தது.

நண்பர்கள் புடைசூழ ஒரு மகாராணிக்கு உரிய புன்னகையோடு நடந்து வந்து கொண்டிருந்தாள் யுக்தா.

“யுக்தா நாளைக்கு உன்னோட டேர்ன். நீ தான் எங்களுக்கு டிரீட் கொடுக்கணும்”, என்று ஒருவன் சொல்ல “ஓ கொடுக்குறேனே? ஆனா எல்லாருக்கும் ஒரு பப்ஸ் தான்”, என்று சொன்னாள் அவள். அதைக் கேட்டு மற்றவர்கள் அவளை கலாய்த்த படி வந்தனர்.

ஆறு ஆண்களுக்கு நடுவே நடந்து வரும் மகளைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றார் செல்வம். அவர் அறிந்த யுக்தா இப்படி இல்லை. அவளா இப்படி என்று என்ற எண்ணம் வரும் போதே அவருக்குள் கோபமும் பொங்கியது.

அவளையே முறைத்த படி அவர் நிற்க எதற்கோ திரும்பி பார்த்த யுக்தா அவரைக் கண்டு விட்டாள்.

அதிர்ந்து போய் அசையாமல் நின்றவளின் உடல் பயத்தில்; நடுங்கியது. அவள் கண்கள் அவரையே வெறித்து நோக்கியது.

“ஏய் என்ன ஆச்சு யுக்தா?”, என்று யுவன் அவளைப் போட்டு உலுக்க அவள் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

“அவ கிட்ட டிரீட் கேட்டதுல தான் அவ இப்படி ஆகிட்டாளா?’, என்று மற்றவர்கள் கேலி செய்ய யுவன் தான் அவளது பயத்தை முதலில் கண்டான். அவன் கண்கள் அவள் பார்வை போகும் திசையைப் தொடர்ந்தது.

அங்கே செல்வம் நின்றிருக்க அவளது பயமும் அவர் முகத்திலிருந்த கோபமுமே அவர் யார் என்று அவனுக்கு புரிய வைத்தது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த யுக்தாவைப் பார்த்தவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

“என்ன ஆச்சு யுவன்?”, என்று ஒருவன் கேட்க “யுக்தாவோட அப்பா டா”, என்றான்.

“வாங்க எல்லாருமே போய் பேசலாம்”, என்று சொல்லி ஒருவன் முன்னேற அனைவரும் அவனைத் தொடர்ந்தார்கள். யுவனும் யுக்தாவும் மட்டும் கடைசியாக நடந்தார்கள். செல்வம் குணத்தைப் பற்றி ஏற்கனவே அவளிடம் கேட்டிருந்ததால் இப்போது என்ன ஆகுமோ என்று யுவனுக்குமே பயமாக இருந்தது.

“சாரி யுக்தா. எல்லாமே என்னால தான்”, என்று யுவன் சொன்னது கூட அவள் மூளையில் பதிந்ததா என்று அவனுக்குத் தெரியாது.

“ஹாய் அங்கிள், நீங்க யுக்தாவோட அப்பா தானே? நாங்க அவ பிரண்ட்ஸ்”, என்று வருண் என்பவன் சொல்ல அவனையோ அவன் பேசியதையோ கண்டு கொள்ளாத செல்வம் நேராக யுக்தாவை நெருங்கி “உனக்கு ஒருத்தன் பத்தாது அப்படித் தானே?”, என்று கேட்டார்.

பயத்திலும் அவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று புரியாத நிலையிலும் அவள் அதிர்ச்சியில் நிற்க அவர் சொன்னதைக் கேட்ட மற்ற அனைவரும் ஸ்தம்பித்து தான் போனார்கள்.

அனைவருக்குமே அவர் இப்படி தரக் குறைவாக பேசியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் வெறுப்பையும் அளித்தது. அவர்கள் அறிந்த வரை நண்பர்களின் பெற்றோர்களையும் தன்னுடைய பெற்றோர்களாக எண்ணுவது தான் வழக்கம். அவர் அப்படி பேசியதும் யார் என்ன பேச என்று தெரியாமல் அந்த இடமே அமைதியாக இருந்தது.

யுவனுகோ யுக்தாவை நினைத்து தான் கவலையாக இருந்தது. தன்னால் தான் அவளுக்கு இவ்வளவு பெரிய இக்கட்டு என்பதால் “சாரி அங்கிள். யுக்தா மேல எந்த தப்பும் இல்லை. இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். அதான் டிரீட் கொடுக்க கூட்டிட்டு போனேன். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. நாங்க எல்லாம் பிரண்ட்ஸ்”, என்று அவளைக் காப்பாற்றுவதற்காக சொன்னான்.

தன்னுடைய கையை உயர்த்தி அவனை பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தவர் யுக்தா புறம் திரும்பி “வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு”, என்று மிரட்டி விட்டு அவள் கையைப் பற்றி இழுத்த படி சென்றார்.

“என்ன டா இந்த ஆள் இப்படி இருக்கான்? இவ்வளவு வல்கரா பேசுறான். பாவம் யுக்தா. அவ ஒரு குழந்தை மாதிரி டா. இவ்வளவு நேரம் ரொம்ப சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்தா”, என்றான் வருண்.

“ஆமா பாவம் யுக்தா. ரொம்ப பயந்துட்டா. ரொம்ப வெகுளிப் பொண்ணு. அந்த ஆள் பேசினது கூட அவளுக்கு புரியலை. இப்படி ஒரு அப்பா இருக்குறதுனால தான் அவ எல்லார்க் கிட்டயும் பேச யோசிக்கிறா போல?”, என்றான் கதிர்.

“வீட்டுக்கு போய் அவளை அடிப்பாங்களா டா? எனக்கு அவளைப் பாக்க என்னோட குட்டித் தங்கச்சி மாதிரியே தோணுச்சு”, என்றான் அகிலன்.

ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று பேச யுவனுக்கோ தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது.

“யுவன் உன் கிட்ட யுக்தா நம்பர் இருந்தா நைட் என்ன ஆச்சுன்னு கால் பண்ணி கேளு டா. பாவம் டா”, என்றான் வருண்.

“அவ நம்பர் என் கிட்ட இல்லை. நாளைக்கு அவ வந்தா தான் என்ன ஆச்சுன்னு தெரியும். கஷ்டப் பட்டு அவளை அவ கூட்டுல இருந்து வெளிய கொண்டு வந்தேன் டா. எல்லாம் போச்சு. இனி அவ நம்ம எல்லார்க் கிட்டயும் பேசுறது கூட கஷ்டம் டா. பாவம் அவ. சரி வாங்க போகலாம்”, என்று சொல்லி முன்னே நடந்தான் யுவன். மற்றவர்களும் அவனுடன் நடந்தார்கள்.

அப்போது “யுவன் உன் கிட்ட ஒண்ணு கேக்கவா?”, என்று கேட்டான் சுந்தர்.

“நானே டென்ஷன்ல இருக்கேன். நீ என்ன கேக்க போற?”

“நீ யுக்தாவை லவ் பண்ணுறியா?”

“எத்தனை தடவை இதையே கேப்பீங்க? அப்படி எல்லாம் என் மனசுல எந்த எண்ணமும் இல்லை. அவ எனக்கு நீங்க எப்படியோ அப்படி தான் அவளும். என்னோட ஃபிரண்ட் தான். சரி நான் கிளம்புறேன். நாளைக்கு பாப்போம்”, என்று சொல்லி விட்டு அவன் செல்லும் பஸ்ஸில் ஏறிச் சென்று விட்டான்.

“திருப்பி திருப்பி அவன் கிட்ட லவ்வா லவ்வான்னு கேட்டு இல்லாத ஒண்ணை அவனுக்குள்ள உருவாக்கிறாத மச்சி. யுக்தா அப்பாவை பாத்த தானே. அவர் மகளை யுவன் லவ் பண்ணினா அவன் வாழ்க்கையே போயிரும். யுக்தாவும் இனி நமக்கு ஃபிரண்ட். அதை மனசுல வச்சு எதுனாலும் பேசு”,. என்று சுந்தரை எச்சரித்தான் அகிலன்.

காரில் செல்லும் போது பயத்தில் அழுத படியே வந்தாள் யுக்தா. செல்வமோ கோபக் கொந்தளிப்பில் இருந்தார்.

வீட்டுக்குச் சென்றது தான் தாமதம் தன்னுடைய இடையில் அணிந்திருந்த பெல்ட்டை கழட்டியவர் “எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலையை செஞ்சிருப்ப?”, என்று கேட்டு அடிக்க ஆரம்பித்தார். அவள் தோளில் இருந்த பேகைக் கூட பிடுங்கி தூர வீசினார்.

மகளும் கணவனும் வந்து விட்டதால் அவர்களுக்கு டீ எடுத்து வந்த தாமரை வாயில் கை வைத்த படி மகள் அடி வாங்குவதைக் கண்டு துடித்துப் போனாள்.

செல்வம் அடிக்கும் போது சத்தம் வெளியே வரக் கூடாது என்பது அவளுக்கு போடப் பட்டச் சட்டம். அதனால் வாயை வலியைத் தாங்கிய படி கண்களில் நீர் வழிய அடி வாங்கிக் கொண்டிருந்தாள் யுக்தா.

கையில் இருந்த டீக்கப்பை கீழே போட்ட தாமரை “ஐயோ என்ன ஆச்சு? ஏன் இப்படி பண்ணுறீங்க? என் மகளை விடுங்க”, என்று சொல்லி மகளுக்கு முன் வந்து நிற்க சோர்ந்து போய் கீழே விழுந்தாள் யுக்தா.

“அப்படின்னா அவளை இப்படி வளத்த உன்னைத் தான் முதல்ல வெளுக்கணும்”, என்று சொல்லி தாமரையையும் அடித்தார் செல்வம்.

அன்னை அடி வாங்குவதைத் தாங்க முடியாமல் “அம்மாவை அடிக்காதீங்கப்பா. இனி நான் இப்படி பண்ண மாட்டேன் பா”, என்று கைகளை குவித்து யுக்தா மண்டியிட்ட பிறகு தான் அடிப்பதை நிறுத்தினார்.

“ஏண்டி என் வயித்துல வந்து பிறந்த? இதுக்கா உன்னை ஆசை ஆசையா பெத்தேன்? என்ன பாப்பா நடந்துச்சு?”, என்று கேட்ட படி மகளை கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்த தாமரை கணவன் சமையல் அறைக்குச் சென்றதை கவனிக்க வில்லை.

உள்ளே சென்ற செல்வத்துக்கோ வெறி அடங்கவே இல்லை. அழுக்கு செல்வதற்காக குத்தி விடுவதற்காக வைத்திருந்த கம்பியை எடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் வைத்தார்.

“என்ன டி நடந்துச்சு? வாயை திறந்து அம்மா கிட்ட சொல்லு டா”, என்று தாமரை கேட்டுக் கொண்டிருக்க “அம்மா யுவன்….”, என்று யுக்தா ஆரம்பித்தது தான் தாமதம் அப்போது அங்கே வந்த செல்வம் தாமரையிடம் இருந்து அவளை பிடித்து இழுத்து அவளுடைய காலில் கம்பியை வைத்து சூடு வைத்தார்.

“அம்மா”, என்று அலறிய படி அதை தடுக்கப் போன யுக்தா அந்த கம்பியைப் பிடித்து கையிலும் சூடு வாங்கிக் கொண்டாள்.

என்ன நடக்கிறது என்று தாமரை உணர்வதற்கு முன்னே எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

மகளை வாரி அணைத்துக் கொண்டவள் கண்ணீர் மல்க வெறுப்புடன் செல்வத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன டி முறைக்கிற? இப்படி செஞ்சா தான் இவ ஒழுங்கா இருப்பா. ரெண்டு பேருக்கும் பயம் விட்டுப் போச்சுல்ல? அதான்”, என்று நக்கலாக சொன்னார் செல்வம்.

“சீ நீயெல்லாம் மனுசனா? இப்படி சின்ன பொண்ணுக் கிட்ட போய் இப்படி நடந்துக்குறியே? உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது”, என்று சொன்னாள் தாமரை.

“என்ன டி வாய் நீளுது? உனக்கும் ரெண்டு வைக்கணுமா?’

“ரெண்டு எதுக்கு? எங்க ரெண்டு பேரையும் உயிரோட கொளுத்திரு. அதுக்கப்புறம் தான் உனக்கு நிம்மதியா இருக்கும்”

“இப்படியே ஆத்தாலும் மகளும் நடந்துக்கிட்டா அது தான் நடக்கும். இனி இவ காலேஜ் போகக் கூடாது”, என்று சொல்லி விட்டுச் தன்னறைக்குச் சென்று விட்டார்.

மகளை கைத்தாங்கலாக அவளுடைய அறைக்குச் அழைத்துச் சென்றாள் தாமரை. காலை அவளால் ஊன்ற கூட முடிய வில்லை என்பதால் நொண்டி நொண்டி அன்னையுடன் சென்றாள்.

மெத்தையில் அவளைப் படுக்க வைத்த தாமரை மகளின் காயத்துக்கு மருந்து போட்டாள்.

“அம்மா ரொம்ப வலிக்குது மா”

“ஆஸ்பத்திரிக்கு போவோமா பாப்பா?”

“வேண்டாம் மா. என்னால நடக்க கூட முடியாது. நீ மருந்தே போடு”, என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.

மகளின் துடிப்பைக் கண்ட தாமரைக்கு என்ன நடந்தது என கேட்க வேண்டும் என்று கூட தோன்ற வில்லை.

சிறிது நேரத்தில் நன்கு உறங்கி விட்டாள் யுக்தா. மகளுக்கு விடிவு காலமே வராதா என்று எண்ணி பால் வடியும் அவள் முகத்தையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் தாமரை.

“ஏய் என்ன டி செய்ற? மனுஷன் சாப்பிட வேண்டாமா?”,. என்று செல்வம் சத்தம் கொடுத்ததும் தான் கீழே சென்றாள்.

செல்வத்தை முறைத்த படி அவர் முன்னே சென்று தாமரை நிற்க “பாத்தது போதும். நல்லா மொரு மொருன்னு நெய் போட்டு தோசை ஊத்தி எடுத்துட்டு வா”, என்று சொன்னார் செல்வம்.

இது எப்போதும் நடப்பது தான் என்பதால் வேறு வழியில்லாமல் சமையல் அறைக்குச் சென்றாள். இன்று பார்த்து வேலைக்காரிக்கு லீவ் கொடுத்தது மடத் தனமாக பட்டது.

வெறுப்புடன் அவருக்கு தோசை சுட்டுக் கொடுத்தவள் மகளுக்கும் இரண்டு தோசையை சுட்டு வைத்து விட்டு அடுப்பை அனைத்து விட்டு வெளியே வந்தாள்,.

அப்போது கிளம்பி வந்த செல்வம் “நான் வேலை விஷயமா வெளியூர் போறேன். வர நாளு நாள் ஆகும். நாளைக்கு ஆஃபிஸ்ல இருந்து ஆள் வருவாங்க. உன் மக கிட்ட கையெழுத்து வாங்கிக் கொடுத்து விடு. கூடவே அவளுக்கு எப்படி ஒழுக்கமா இருக்கணும்னு சொல்லிக் கொடு. அஞ்சாறு பசங்க கூட சேந்து கூத்தடிக்கிறா. எவனையாவது இழுத்துட்டு வந்துரக் கூடாது பாரு. பணக்கார பொண்ணுன்னு பழகி இவ சொத்தை எல்லாம் புடுங்க பிளான் பண்ணுவாங்க. அதை விட்டுக் கொடுக்க நான் ஒண்ணும் கேனையன் இல்லை. இன்னும் உன் மக எந்த ஆம்பளை கிட்டயும் பேசக் கூடாது. கூடிய சீக்கிரம் அவ பேர்ல இருக்குற சொத்தை என் பேர்ல மாத்தணும். அந்த வக்கீல் பிடி கொடுக்கவே மாட்டிக்கிறான். எங்க போயிரப் போறான்?”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் போனதும் மகளின் அறைக்குச் சென்றாள் தாமரை. அவள் நல்ல உறக்கத்தில் இருக்க அவளை எழுப்பி இரண்டு தோசையை ஊட்டி விட்டு, தூக்க மாத்திரை கலந்த ஒரு டம்ளர் பாலையும் கொடுத்து குடிக்க வைத்தாள்.

அன்னையின் தோளில் அழுத படியே சாய்ந்தாள் யுக்தா. என்ன நடந்தது என்று அறிய “யுவன் நம்பர் இருக்கா பாப்பா?”, என்று கேட்டாள் தாமரை.

“என் நோட்ல இருக்கு மா. இனி அவன் கிட்ட நான் பேச மாட்டேன். பேசினா அப்பா அடிப்பாங்க. எனக்கு ரொம்ப வலிக்குது மா”

“சரி டா, இனி இப்படி நடக்காது. நீ படுத்துக்கோ”, என்று சொல்லி அவளை தூங்க வைத்து விட்டு வெளியே வந்தவள் யுவனுக்கு அழைத்தாள்.

அதே நேரம் சுந்தரி மடியில் படுத்துக் கொண்டு கவலையுடன் யுக்தாவைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தான் யுவன்.

“அந்த ஆள் அவளை ஏதாவது செஞ்சிருப்பாரா மா?”

“அவர் அவளோட அப்பா டா. அப்படி எல்லாம் ஒண்ணும் செய்ய மாட்டாங்க. எங்கயாவது அப்பா பிள்ளையை காயப் படுத்துவாங்களா?”, என்று கேட்ட சுந்தரி மகனின் தலையை கோதிக் கொடுத்தாள்.

“ஆனா அந்த ஆள் ரொம்ப தப்பா பேசினார் மா”

“என்ன பேசினார்?”

அன்னையிடம் அதைச் சொல்ல மனதில்லாமல் “அது அதை விடுங்க மா. அவளுக்கு ஒண்ணும் ஆகிருக்காது தானே?”, என்று கேட்டான்.

“இங்க பாரு யுவன், பெத்தவங்கன்னா அப்படி ஒரு பொண்ணு பசங்க கூட பேசுறதைப் பாத்து கோபப் படுறது நியாயம் தான். சும்மா மிரட்டிருப்பாங்க. நீ பண்ணினதும் தப்பு தானே? அவ நிலைமை தெரிஞ்சும் அவளை நீ அங்க கூட்டிட்டு போனது தப்பு. சரி நாளைக்கு கிளாஸ்க்கு வருவா தானே? அப்ப அவ கிட்ட விசாரி. ஆனாலும் அவ கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு. சரி இரு நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்”

“இல்லை மா, சாயங்காலம் நிறைய சாப்பிட்டோம். எனக்கு  பசிக்கலை. நான் தூங்கப் போறேன்”

“இப்பவே தூங்கப் போறியா? படிக்கலையா டா?”

“மனசு சரியில்லை மா”, என்று சொன்னவன் தன்னுடைய அறைக்குள் சென்று படுத்து விட்டான்.

அவனுடைய பேகில் சைலென்ட்டில் கிடந்த அவனுடைய போனுக்கு ஐந்து முறை அடித்து தோற்றுப் போய் சோபாவில் அமர்ந்த படியே தூங்கி விட்டாள் தாமரை.

புயல் வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!