Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 27 2

கயல் அவள் சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பி விட்டாள். சிறிது நேரம் சென்று போன் அடித்தது, குழலிதான் எடுத்தார். அந்தப் பக்கம் தாரணிதான் அழைத்து இருந்தாள். 


“என்ன டி?” 


“என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் ஜாலியா இருக்கீங்க இல்ல?” 


“என்ன ஜாலியா இருந்தோம்?” குழலிக்கு அவள் சொல்ல வருவது புரியவில்லை. 



Advertisement


“கொஞ்சம் புரியிற மாதிரி பேசுறியா” 


“அவங்க எல்லாம் எங்க? எங்களை விட்டுட்டு அவங்க மட்டும் வெளிய போயிட்டாங்க இல்ல.” 


“யாரு எங்க போனா? உன் அண்ணன் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்கிறான். கயல் மாடியில படிச்சிட்டு இருக்கா. பரணி இப்பத்தான் வந்தான்.” 

Advertisement


குழலி சொன்னதைத் தாரணிக்கு நம்பவே முடியவில்லை. பிறகு ஏன் நந்தா அப்படிச் சொன்னான்? 

Advertisement


மதியம் நந்தா சென்றதில் இருந்து, அவள் ஒரே புலம்பல்தான். “அண்ணன் என்னை வெறுத்திட்டார். அவர் என்னை ஒதுக்கி வச்சிட்டார். இனி அவர் என்கிட்டே முன்னாடி மாதிரி இருக்க மாட்டார்.” 


அவள் அழுது கொண்டே இருக்க… வருண் தான் பாவம். அவன் மதியம் அலுவலகத்திற்குக் கூடச் செல்லவில்லை. 


“அவங்களுக்கு என்னை வேண்டாம் இல்ல. எனக்கும் அவங்க வேண்டாம்.” என்பவள், அடுத்த நிமிடமே “என்னால எங்க அண்ணனோட பேசாம இருக்க முடியாது.” என்று அழுவாள். வருணுக்குத்தான் தலை சுற்றியது. 

Advertisement


போன்னை வைத்தவள் கண்ணைத் துடைத்து விட்டு. “நான் இப்பவே எங்க அண்ணனை பார்க்கணும்.” என்றாள். 


“சரி போகலாம். ஏன் டா இப்படிப் பண்றேன்னு, அவன் சட்டையைப் பிடிச்சு நல்லா கேள்வி கேளு.” என்ற வருண், அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 


அங்கே குழலி, “உன் தங்கச்சி போன் பண்ணா. அவ பேசுறதே புரியலை.” என்றதற்கு, நந்தா சிரித்துக் கொண்டான். அவன் அவர் பேசியதை கேட்டுக்கொண்டு தானே இருந்தான். 


“இன்னும் கொஞ்ச நேரத்தில அவ இங்க வருவா பாருங்க.” என்றான். 


அவன் சொன்னது போல், சிறிது நேரத்தில் வாயில் மணி அடிக்க, நந்தா சென்று கதவை திறந்தான். 


“அண்ணா.” என்ற தாரணி அவன் நெஞ்சிலேயே சாய்ந்து ஒரே அழுகை. 


“நான் தப்பு பண்ணா, நீங்க என்னைக் கண்டிக்கலாம், அதைவிட்டு என்னை விட்டுடுவீங்களா அண்ணா.” அழுது கொண்டே தாரணி கேட்க, 


“நான் எப்பவும் உன்னை விட மாட்டேன். உன் தப்பை புரியவைக்கத்தான் அப்படிப் பண்ணேன். ஒருநாள் நான் உன்னை அலட்சியபடுத்தினதையே உன்னால தாங்கிக்க முடியலை. அப்ப வருணை பத்தி, கயலை பத்தி நினைச்சுப் பாரு. அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?” 


“அவங்களை நீ எடுத்து எரிஞ்சு பேசுறதும், அலட்சியபடுத்துறதும், எந்த வகையில நியாயம்.” 


“தப்புதான். இனிமே நான் அப்படிப் பண்ண மாட்டேன்.” 


“என்கிட்ட சொல்லாத, வருண்கிட்ட சொல்லு.” 


வருணின் பக்கம் திரும்பிய தாரணி, “சாரி, இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்.” என்றாள். 

“நமக்குள்ள எதுக்கு டா சாரி. கயல்கிட்ட கேளு போதும்.” என்றான் வருண். 


“அண்ணி எங்க?” 


“அவ மேல படிச்சிட்டு இருக்கா… நீ அவகிட்ட சாரி எல்லாம் கேட்க வேண்டாம். என் பொண்டாட்டி இன்னும் பயந்துதான் போவா. நீ அவகிட்ட நல்லா நடந்துகிட்டாலே போதும்.” என்றான் நந்தா. 


அவன் மனைவியைப் பற்றி அவனுக்குத்தனே தெரியும். கண்டிப்பாகத் தாரணி சென்று மன்னிப்புக் கேட்டால்… நந்தாவைத்தான் கயல் அடிப்பாள். 


குழலி அவர்களைச் சாப்பிட சொன்னதற்கு, “இல்லைமா வேண்டாம். நாங்க வீட்ல போய்ச் சாப்பிட்டுக்கிறோம். வீட்ல மாவு இருக்கு.” என்றவள் வருணிடம், “நான் உங்களுக்குத் தோசை ஊத்தி தரேன்.” என்றதும், அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 


குழலி இருவருக்கும் பாயசம் கொடுக்க, நந்தா கயலை அழைக்க மாடிக்குச் சென்றான். அவன், சாற்றி இருந்த கதவை மெதுவாகத் திறந்து பார்க்க… அங்கே ஆனந்த சயனத்தில் கயல் இருந்தாள். 


அதாவது நன்றாகப் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள். தலைக்கு ஒரு தலையணை, காலுக்கு ஒரு தலையணை வைத்து, சீலிங் ஃபேன் பத்தாமல், பக்கத்தில் டேபிள் ஃபேன் வேறு ஓடிக்கொண்டு இருந்தது. 


பார்த்ததும் நந்தாவின் முகத்தில் கனிவுதான் தோன்றியது. தூங்கும்போது கூட எவ்வளவு அழகு என் பொண்டாட்டி என நினைத்தவன், பிறகுதான் பக்கத்தில் இருந்த பெட்டியை கவனித்தான். 


ஊருக்கு செல்ல பெட்டி கட்டி தயாராக வைத்து இருந்தாள். வண்டி கிளம்பிடுச்சு இனிமே நிற்காது. என நினைத்தவன், அப்போது அவளைத் தொந்தரவு செய்யாமல் இறங்கி வந்துவிட்டான். 


நந்தா கீழே வந்தபோது பரணியும், ராதிகாவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். 


“கயல் தூங்கிட்டா,” என்றதும் தரணியின் முகம் வாட… 


“அவ தூங்கட்டும் நாளைக்கு அவளுக்குப் பரீட்சை.” என்றார் குழலி. 


சாப்பிட்டு எழுந்த ராதிகா, “அத்தை, எனக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல இடம் கிடைச்சிருக்கு. நாளைக்குக் காலையில நான் திங்க்ஸ் எடுத்திட்டு கிளம்பிடுவேன்.” என்றாள். 


“எந்த ஹாஸ்டல்?” அவள் பாதுகாப்பு கருதியே நந்தா கேட்டான். கோபத்தில் அவள் பாட்டுக்கு எதாவது தவறான இடத்தில் சேர்ந்து விட்டாள். 


அவள் ஒரு பெயர்பெற்ற விடுதியின் பெயரை சொன்னாள். அதைக் கேட்டதும் எல்லோருக்கும் ஆச்சர்யமாகிவிட்டது. ஏனென்றால் அங்கே இடம் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல. முன்பே பதிந்து வைத்திருக்க வேண்டும். 


அதை நந்தா குறிப்பிட்ட போது, தான் அங்கு ஏற்கனவே பதிந்து வைத்திருந்தேன் என்றாள். 


நந்தா உடனே தாரணியைத்தான் பார்த்தான். இப்பவாவது உனக்கு இவளைப் பற்றிப் புரியுதா? என அவன் பார்வையால் கேட்டான். குழலிக்கும் அதிர்ச்சிதான். ராதிகா உள்ளே சென்றதும் புலம்பினார். 


“பார்த்தியா இந்தப் பொண்ணு. இதை நம்மகிட்ட சொல்லவே இல்லை. இவங்க அம்மா என்ன நாடகம் ஆடினாங்க. இருந்த கொஞ்ச நாள்ல, இங்க குடும்பத்துக்குள்ள சிண்டு முடிச்சு விட்டாச்சு. வந்த வேலை முடிஞ்சதும், கிளம்பியாச்சு.” 


“இந்தமாதிரி ஆளுங்ககிட்ட நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்.” என்றான் வருண். 


“நல்லவேளை அண்ணா இவளைக் கல்யாணம் பண்ணலை.” தாரணி சொல்ல… 

“நான் என்னைக்கும் இவளைக் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.” என்றான் நந்தா. 


தன் தவறை ஈடு செய்யும் வகையில் கயலுக்கு எதாவது நல்லது செய்யவேண்டும் எனத் தாரணிக்கு ஆசையாக இருந்தது. 


“அண்ணா, நாளைக்குக் கயலுக்குத் தெரியாம சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்கலாமா. நாங்க வரோம்னு சொல்லாம, நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க அவங்களைக் கூடிட்டு வாங்க.” 


“கயல் சொல்லாத அண்ணி சொல்லு.” குழலி சொல்ல..


“சாரி அண்ணியைக் கூடிட்டு வர்றீங்களா?” 


தாரணியின் ஆர்வத்தைப் பார்த்து நந்தா சிரித்துக் கொண்டான். 


“நாளைக்கு அவளுக்குப் பரிட்ச்சை. நைட் நாங்க ஊருக்கு கிளம்புறோம்.” 


“மதியம் போகலாம் டா… அப்ப எல்லோரும் ப்ரீ தானே.” வருண் சொல்ல… 


“மதியம்னா ஓகே. உனக்கு ஒகே வா பரணி.” நந்தா கேட்க… அவனும் சரி என்றான். 


“அம்மா நீங்களும் வரணும்.” 

“நான் எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க.” 


“அதெல்லாம் இல்லைமா, நீங்களும் கண்டிப்பா வரணும். நாம குடும்பத்தோட போகலாம்.” என்றான் நந்தா. 


“அண்ணிகிட்ட சொல்லாதீங்க. நான் எங்கன்னு காலையில போன் பண்ணி சொல்றேன்.” என்ற தாரணி, அவள் கணவனோடு சந்தோஷமாகத் தன் புகுந்த வீட்டிற்குச் சென்றாள். 


இவர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி சிரிப்பதை பார்த்து ராதிகாவுக்குப் பொறாமையாக இருந்தது. அவள் நினைத்தது நடக்கவில்லை.

 
இரவு வெகு நேரம் தன் அம்மாவோடும் தம்பியோடும் பேசிக்கொண்டிருந்த நந்தா, வெகு நேரம் சென்றே படுக்கச் சென்றான். அவன் மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. 


கயல் அவன் முன்பு பார்த்த நிலையில் இருந்து மாறவே இல்லை. நேரத்தை பார்த்தவன், ரொம்ப நேரம் தூங்கிட்டா, இனி எழுப்பலாம் என நினைத்தவன், அவள் அருகில் உட்கார்ந்து அவளைத் தட்டி எழுப்பினான். முதலில் அவள் அசையவே இல்லை. பிறகு சிரமப்பட்டுக் கண் திறந்தாள். 


“எவ்வளவு நேரமா டி எழுப்பிறது?” 


அவன் கேள்வியில் பதறி அடித்து எழுந்தவள், “ஐயோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? பரிட்ச்சைக்கு போகணுமே.” என்றதும், நந்தா பக்கென்று சிரித்துவிட்டான். கயல் அவன் காலையில் எழுப்புகிறான் என நினைத்துவிட்டாள். 


“இன்னும் விடியலை.” 


“அப்ப ஏன் என்னை எழுப்புனீங்க?” 


“நைட் முத்தம் தரேன்னு சொன்னியே, பன்னிரண்டு மணி ஆக அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. சீக்கிரம் கொடு.” என்றதும், கயலுக்கு “ஓ…” என்று கத்த வேண்டும் போல் இருந்தது. 


அவள் வாய்விட்டே அழ ஆரம்பித்து விட்டாள். “நேத்தும் என்னைத் தூங்க விடலை. இன்னைக்கும் என்னைத் தூங்க விடலை.” அவள் அழுகைக்கு இடையில் பேச… 


“இப்படியே ஊர்ல நாலு பேருகிட்ட போய்ச் சொல்லு விளங்கிடும்.” என்றான் நந்தா. அவள் அழுதது அவனுக்குக் கடுப்பாக இருந்தது. 


“இப்ப ஏன் கோபப்படுறீங்க?” 


“உனக்குத் தூங்கணும் தானே… தூங்கு.” என்றான். 


நல்லதாகப் போய்விட்டது எனக் கயல் படுத்துக் கொண்டாள். ஆனால் சிறிது நேரம் ஆகியும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. பிறகுதான் அவன் கேட்டது புரிந்தது. 


தன் கணவனின் பக்கம் திரும்பி படுத்தவள், “தூங்கிடீங்களா?” என்று கேட்டதும்,

 
கண்ணைத் திறக்காமலே, “இல்லை ஏன்?” என்றான். 


“அப்ப எதோ கேட்டீங்களே?” 


“தெரியாம கேட்டுட்டேன், தூங்கு.” என்றான். 


“தூக்கம் வரலை.” 


“கண்ணை மூடி படு வரும்.” 


“லைட் ஆ பண்ணிடவா?” 


“ம்ம்…” 


விளக்கை அனைத்து விட்டு வந்தவள், அவனின் அருகே நெருங்கி படுத்தாள். நந்தா கண் திறந்தான், விடி விளக்கும் இல்லை… அதனால் அவள் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. 


என்ன செய்யப் போகிறாள் என அவன் யோசிக்கும் போதே, அவன் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள். 


“போதுமா…” அவள் அவன் காதில் கிசிகிசுப்பாகக் கேட்க… 


அவள் பக்கம் திரும்பி படுத்தவன், அவளை அனைத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டான். 


“இப்போதைக்குப் போதும், ஆனா நாம ஊருக்குப் போனதும் நிறைய வேண்டும்.” என்றான். அதை நினைத்ததும், கயலுக்கு இப்போதே வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!