Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Short Stories

வேந்தனின் வேட்கை 

வேந்தனின் வேட்கை

 

ஆலமர மறைவிற்கு அந்த இருவர் வந்ததும் நீரிலிருந்து அம்புகள் சீறிப்பாய்ந்து வந்து தைத்தன. அவர்கள் அலறிதுடித்து வீழ்ந்தபோது, குளத்து நீருக்குள் பதுங்கியிருந்தவன் நீரை வாரியிறைத்தபடி வெளிவந்தான்.

 



Advertisement

சந்தியா வேளையில் நீராடிய சூரியனென அவன் பிம்பம் அந்நீர்நிலை முழுதும் பட்டு ஒளிர்ந்தது. கரையேறியவன் தேகத்தில் பாறைகளிலிருந்து விழும் அருவிகளாய் நீர்த்துளிகள் வழிந்தோடின. கண்ணிரண்டு போதவில்லையென காரிருள் காரிகை, கோடானுகோடி விண்மீன் கண்களைத் திறந்திடத் தொடங்கினாள்.

 

நிச்சயமாக விழிகளே எதிராளியை வீழ்த்திவிடும் கூர்மை கொண்டிருந்தன. அவன் நோக்குவர்மத்தில் ஆயுதமின்றி ஆண்களே அடங்கிடுவரெனில், மங்கையர் நிலை சொல்லியறிதல் வேண்டுமோ ?

Advertisement

 

Advertisement

நீராடல் வேளையில் அவனைக்கண்ட அவ்வூரின் மான்விழிகள் மையல்கொண்டு அலைந்திட்டனர்.

 

அவனோ பாய்ந்து சென்று அடிபட்டவர்களைப் பிடித்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த ரதத்தோடு பிணைத்தான். இருவரும் கால்களில் காயமுற்றிருந்தனர். அவன் யாரென்று மற்றவர் அறியுமுன் மின்னலாய் மறைந்தான்.

Advertisement

 

அங்கிருந்த மாந்தர் அனைவரின் கண்களும் அவன்மீதிருக்க, அவன் கண்களோ எதிரியை வீழ்த்தியதும் மீதமிருந்த ஒரு வினாடி நேரத்தில் எதிர்கரையில் மற்ற பெண்களோடு ஒட்டாமல், தனியாக நீந்தி விளையாடிய கயல்விழி ஒன்றோடு கட்டுண்டு மீண்டது.

நெஞ்சோடு பதிந்துவிட்டிருந்த அவள் முகம்… முதல்நாள் அவன் கண்ட அதே முகம்…

கண்களால் அவளை ஆற்றைவிட்டு காலம்தாழ்த்தாமல் வெளியேறும்படி குறிப்பு தந்துவிட்டு மறைந்துவிட்டான்.

 

காந்தள் மலர் போல் விரலொன்றை, வியப்பில் குவிந்த இதழ்களில் பொருத்தியிருந்தவள் இவன் குறிப்புணர்ந்து, கண்கள் போன திசையில் சென்று மறைந்தாள்.

 

…..

 

நேரம் சென்றது… நினைவுகள் மட்டும் அவளைவிட்டு அகலமறுத்தன.

 

“வளவா… காலம் குறைவாகவே உள்ளது. நாம் எடுத்த காரியம் நிறைவேறும் வேளை நெருங்கிவிட்டது. இந்நிலையில் நீ வேறு செயல்களில் காலம் கடத்துதல் வீண் இடர்பாடுகள் உண்டாக்கக்கூடும்” என்றார் அந்த நடுத்தர வயதுடையவர்.

 

“அம்மானே…இதுவே உகந்த நேரமென்பதை நானறிவேன் .

எனினும் இது பருவத்தில் ஏற்படும் தடுமாற்றமென்பதை நீங்கள் அறிவீரல்லவா !! இதுவரை ஏற்படாதொரு உணர்வு இன்று என்னுள் எழுகிறது. நானும் அதனை அடக்கியாளவே எண்ணுகிறேன்.

ஆனால் அதுவோ அடங்கா புரவியென பாய்ந்து வருகிறது…

என் உள்ளத்தில் பற்றியெரியும் கனல் இதனாலெல்லாம் அணைந்துவிடாது. கவலை கொள்ளாதீர்..!!” வளவன் தன் தாய் மாமன் இரும்பிடர்தலையரிடம் தன்னிலை விளக்கமளித்தான்.

 

இதில் மனம் லயிப்பதை தவிர்க்கவோ, தவறென்று என்னவோ கூட அவன் விரும்பவில்லை. இச்சிறு வயதிலும் அனைத்தையும் கையாளும் பக்குவம் கொண்டிருந்தான்.

 

அவனை இழுத்தது அவளின் புறத்தோற்றமா..??

 

இல்லவேயில்லை…!!

 

முதல்நாள் நிகழ்வுகள் கண்முன் விரிந்தன…

 

…..

 

அதுவொரு இளவேனிற்கால முன்மாலைப்பொழுது….

 

அவன் அந்நகருக்குள் நுழைவதற்குமுன் இரண்டு தேர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தன்னை நோக்கி வருவதையுணர்ந்தான்.

 

தன் புரவியை ஒழுங்கையின் ஓரமாக இருந்த புன்னை மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு மறைவில் நின்றுகொண்டான்.

 

வந்த தேரில் ஒன்றின் அச்சாணி கழன்றுவிட, அதிலிருந்த வீரன் அதனையறியாமல் தன் காளைகளை விரட்டினான். இரண்டாம் தேரோட்டி இதனைக் கண்டுகொண்டான் போல் தோன்றியது.

 

அவன் காளைகளை முடுக்கி விரைந்து சென்று முதலாமவனை நிறுத்த வேண்டியது தானே என்று வளவனின் மனம் குருகுருத்தது. ஆனால் இரண்டாவது தேரோட்டி செய்த செயல் இவனை வியப்பில் ஆழ்த்தியது. தன் தேரை நிறுத்தியவன், இடையில் வைத்திருந்த வளரியை எடுத்து வீசி.. முதல் ரதத்திற்கு சிறிது தூரம் அப்பாலிருந்த மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான்.

 

முதலாம் தேரோட்டி வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் இவன் வேகமாய் சென்று அந்த வண்டியின் சக்கரத்திற்கு ஒரு குச்சியை வைத்து அச்சாணி பொருத்தினான்.

 

“நல்லவேளை நீ என்ன விரட்டி வரவில்லை. இல்லையெனில் நான் இன்னும் விரைவாகச் சென்று.. இந்த சக்கரம் கீழே விழுந்து எனக்கும் ஏன், காளைகளுக்கும் கூட ஏதேனும் ஆயிருக்கும்” என்றான் முதலாமவன்.

 

இதை மறைந்திருந்து பார்த்த வளவனுக்கு அவர்களின் உத்திகள் பிடித்திருந்தது . இரண்டாவது தேரோட்டி தன் தலைப்பாகையை கழற்றி உதறினான். அப்பொழுது இடை தாண்டிய நீண்ட கூந்தல் அருவியென விழுந்தது.

 

அக்கணம் தான் உணர்ந்தான் இரண்டாவது தேரோட்டி பெண் என்பதை..

 

பெண்களுக்கு வீரமும் சாமர்த்தியமும் சாகசமும் கைவரும் என்று இத்தனை நாள் அவன் எண்ணியதில்லை. ஆனால் இந்த காட்சி அவன் மனக்கண்ணில் பதிந்துவிட்டிருந்தது.

 

நாணத்தை மட்டுமே சுமந்திருந்த பெண்களைப் பார்த்துப் பழகிய இவனுக்கு அவ்வீரமங்கையின் வேல் விழிகள் சுமந்திருந்த மிடுக்கு ஒரு புதிய உணர்வு தந்தது. மனம் அவள் யாரென்று அறிய ஆவல் கொண்டது. அவளையே நீங்காமல் சுற்றிவரப் பணித்தது.

 

முதல் தேரோட்டியான அந்த ஆடவன், “எதற்காக உன் தலைப்பாகையை அவிழ்த்தாய் ?? யாராவது பார்த்து விட்டால்…!! ஒற்றர்களிடம் சிக்கினால் நம் நிலை என்னவாகும் என்பதை நீ அறிய மாட்டாயா..?” என்று சிடுசிடுத்தான்.

 

“இவ்விடத்தில் நம்மை அடையாளம் காணுமளவுக்கு யாருமில்லை. நகருக்குள் நுழைந்து விட்டால் எவருக்கும் ஐயம் வராது. நகர வாயில் வரை மட்டும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. உன் தலையில் ஒரு கூடை பாரத்தை ஏற்றி வைத்தால் மட்டுமே புரியும்” என்றாள் அசட்டையாக.

 

“மற்ற பெண்டிர் போல் உன்னையும் அரண்மனை முற்றத்தில் அம்மானை ஆடவிட்டிருந்தால் அச்சமெனும் உணர்விருந்திருக்கும். நீதான் போர்ப்பயிற்சி பெற்றவளாயிற்றே !! உனக்கதனை எவ்வாறு புரியவைப்பேன்…” இப்படி நொந்துகொண்டவன் அவள் தோழனோ, தமயனோ தான். நிச்சயமாக கணவனாக இருக்க வாய்ப்பில்லை என்று ஊகம் செய்துகொண்ட வளவன், புன்னைமர மறைவிலிருந்து அவர்கள் அறியாமல் சற்று தொலைவிலிருந்தபடி பின்தொடர்ந்து சென்றான்.

 

எதிரெதிரே இருந்து வந்த இரண்டு சாலைகள் நகருக்குள் புகுவதற்காய் ஒன்றிணைந்தன. கோட்டைச்சுவரை அவர்கள் நெருங்கவும், இதே கருவூரில் அவன் பட்ட இன்னல்கள் நினைவுக்கு வந்தன. சேரனின் தலைநகருக்கடுத்து மிகவும் புகழ்வாய்ந்த இந்நகரில் தான் அவன் சிறைப்பட்டு மீண்டான்.

 

ஆண்டுகள் கடந்தும் அன்றைய நாளில் அவன்பட்ட காயங்களின் ரணம் ஆறாது,சினம் ஊற்றாய் பெருக்கெடுத்தது…

 

மயிலாடுதுறை நகரில் வேதம் கற்பிக்கும் வேடமிட்டு எட்டாண்டு வனவாசத்தை முடித்திருந்தவன், கருவூரில் சிலகாலம் பதுங்கிட எண்ணியபோது அவன் இருப்பிடம் கண்டுகொண்ட சோழநாட்டின் அமைச்சர்கள் இளவரசனை அழைத்துவர பட்டத்து யானையை அவ்வூர் நோக்கி அனுப்பினர்.

 

இதையறிந்த அண்டைநாட்டு பகைமன்னர் சிலர் கருவூரில் அவனைச் சிறைவைத்ததோடு நில்லாமல் சோழநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறைக்கு தீவைத்தனர். இதில் காயமுற்றவனை அவன் மாமன் தான் மீட்டு தாயகம் அழைத்துச்சென்றார்.

 

அன்று தன் அரசுப்பட்டம் பறிக்க எண்ணிய ஒவ்வொருவரின் பட்டமும் தான் பறிப்பேனென்று சூளுரைத்தான் வளவன்.

 

இந்நினைவுகள் உள்ளக் கொந்தளிப்பை வளர்த்திட, அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அவ்விருவரையும் பின்தொடர்ந்தான்.

 

பெருவிழாக்காலம் முடிந்திருந்தமையால், கோட்டைக் காவலில் மிகுந்த கெடுபிடிகளில்லை. வணிகர்கள், வேளாளர், சிறு சிறு எண்ணிக்கையில் போர்வீரர் குழாம்கள் என்று பலதரப்பட்ட மக்கள் அங்கே கூடியிருந்தனர்.

 

கோட்டையை நெருங்கியத்திலிருந்தே சாலையின் இருபுறமும் மலர்செடிகள் வரவேற்றன. அவற்றோடு மரக்கறி மற்றும் ஊன் உணவுப் பண்டங்கள், அகிற்புகை மூட்டம், தானிய மணம் என்று கலவையான பல வாசனைகள் சேர்ந்து உள்ளே அங்காடி நடப்பதை உறுதிசெய்தன.

 

பொழுதுசாயும் வேளையாதலின் இருட்டு கவியத்தொடங்கியதும் மக்கள் கலைந்து சென்றுகொண்டிருந்தனர்.

 

சேரன் சமண ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் சமணத்துறவிகள் உறையும் பள்ளிகள் பல அந்நகரில் தென்பட்டன. அங்கே மௌனமே மொழியாயிருந்தது.

 

ஆணும் பெண்ணுமான அவ்விருவரும் இவையனைத்தையும் நோக்கித் தெளிந்துகொண்டிருக்க, வளவனின் பார்வை மட்டும் அவர்களை விட்டு இம்மியும் அசையவில்லை.

 

அவர்கள் இருவரும் ஒரு பெருந்தனக்காரரின் வீட்டிற்குள் நுழைந்ததை உறுதிசெய்துகொண்டு அங்கிருந்த அம்பலத்தை அடைந்தான். அலைந்த களைப்பில் உடனே உறங்கிப்போனான். (canadianpharmacy365.net)

 

முடிசூடிய நான்காண்டுகளாய் இதுபோலவே வெவ்வேறு நகரத்தின் தன்மைகளை ஆராய்ந்து வருகிறான். தன்னிடமிருக்கும் சிறுபடை கொண்டு விரைவில் மூளப்போகும் போரில் சேரனும் பாண்டியரும் வேளிரும் கூட்டிவரப்போகும் மக்கட் பெருங்கடலை சமாளிக்க மாறுவேடமிட்டு உத்திகள் தேடியலைந்துவருகிறான்.

 

…..

 

“நீ யாரென்று நானறிவேன்… மறந்துவிடாதே..!!” அவன் கழுத்தினில் கத்தி வைத்து அழுத்தியபடியே சொன்ன வீரனிடம் பொறுமைகாத்தான் வளவன்.

 

“நான் யாரென்று நீ முழுவதுமாய் அறிந்திருந்தால், நீ செய்யும் இச்செயல் தரப்போகும் விளைவுகளையும் அறிந்திக்க வேண்டும்..!!” ஆவேசத்தில் வெளிவர நினைத்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான்.

 

அவன் கருவூருக்குள் நுழைந்து முழுதாக ஒருநாள் நிறைவுபெற்றிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பியிருந்ததால் இவ்விடம் சண்டைக்கு உகந்ததல்ல என்று முடிவெடுத்தான்.

 

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவ்வீரனுக்கு போக்குகாட்டிவிட்டு அருகிலிருந்த நதிக்கரை விரைந்தான். அங்கிருந்த ஆலமர மறைவிற்குள் ஒருவன் கட்டிவைக்கப்பட்டிந்தது தெரிந்தது.

 

“சேர மன்னரை வேவுபார்க்குமளவு வேளிர்க்கு துணிவு வந்துவிட்டதோ ? எங்கே உன்னோடு வந்த மற்றைய வீரன் ?” என்று பேசும் குரல் கேட்டது.

 

விடையேதும் வராதிருக்க, “ வா சென்று தேடிவிட்டு வருவோம்.. இவனால் நம் உதவியின்றி அசையக்கூட முடியாது..!!” என்றான் மற்றவன்.

 

இரண்டு வீரர்கள் அங்கிருந்து நகர்ந்துசென்றதும் வளவன் அவ்விடம் சென்றுபார்த்தபோது, அங்கே கட்டிவைக்கப்பட்டிருந்தது முதல்நாள் மாலையில் பார்த்த ஆடவன். அவனை விடுவித்து தன் இருப்பிடம் அனுப்பிவிட்டு, வில்லும் அம்பராத்தூணியும் ஏந்தி ஓசையின்றி நீரில் இறங்கினான்.

 

 

“உங்களைப்பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எமை காத்தமைக்கு கோடி நன்றி… என் பெயர் நிலன், நங்கூர் வேளிர் குல இளவரசன். இவளென் தங்கை நற்சோலை…” என்று வணங்கினான் அவன்.

 

வளவனோடு வந்த நற்சோலைக்கு ஏதும் புரியவில்லை. ஆற்றங்கரையில் நடந்தது முதல் தன் தமயன் இவரிடம் பணிவது வரை எதுவும் விளங்கவில்லை.

 

“நாளை காலை இவ்விடம்விட்டு புறப்படுவோம். இனியும் இங்கிருப்பது பெரும் கேடு” என்று மொழிந்த வளவன் வெளியேறினான்.

 

அவன் யாரென்று தமயன் விளக்கக் கேட்டு கல்லானாள் மங்கையவள். போர்முரசின் ஒலி இன்னும் சில நாட்களில் கேட்குமென்றே உள்மனம் சொன்னது.

 

 

நற்சோலையின் உத்திகள் தற்கால போர்முறைகளைக் காட்டிலும் மாறுபட்டிருந்தன. ஆடவர் சிந்தனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவளல்லவா பெண் !!

 

வளவனும், அவன் மாமனும், நிலனும் சேர்ந்து ஆட்பலம் திரட்ட, நற்சோலை தான் பயின்ற ஆயுதம் தயாரிக்கும் வேலைகளை கருமார் மூலம் செவ்வேனே செய்தாள்.

 

அவள் திறம்பார்த்து வளவனுக்கு எல்லையில்லா காதல் வந்தது…

 

அதோடு போரும் வந்தது…

 

முரசறைந்தது…

 

சங்கு முழங்கியது…

 

வெண்ணி மாநகரெங்கும் குருதிவெள்ளம் …

 

வெண்ணாறு செம்மை கொண்டது…

 

வளவனின் வீரமும் போர் முறைகளும் கண்டு சேர பாண்டிய மற்றும் பதினோரு வேளிரும் கலங்கிச் சிதறியோடினர்.

 

போரில் சோழம் வென்றது…

 

சோழன் மனதை நற்சோலை வென்றாள்…

 

கரம்கோர்த்த இணையரை வையம் வாழ்த்தியது…

 

“திருமாவளவன் வாழ்க…!

நற்சோலை வாழ்க…!!

கரிகால பெருவளத்தான் மற்றும் உடைய பிராட்டி வாழ்க வாழ்க…!!!”

 

★★★ பிரதீபா சந்திரமோகன்★★★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!