Skip to content
Post Views: 6,016
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 31
அன்பரசுவும், பத்மாவும் அதன்பிறகு பேசவில்லை. அவரவர் யோசனையில் இருந்தனர். இரவு தாமதமாக வந்த வாசுவை பார்த்ததும்தான், பத்மாவுக்கு நந்தா சொன்னது நினைவு வந்தது.
வாசு அவன் அறைக்குச் சென்றுவிட, கணவரின் அறைக்கு சென்றார். அன்பரசு உறங்காமல் தான் இருந்தார்.
Advertisement
“இன்னைக்கு மாப்பிள்ளை சொன்னார், நம்ம வாசுவை நல்லதம்பியோட அடிக்கடி பார்க்கிறதா.”
“ம்ம்…”
அதற்கு மேல் அன்பரசு எதுவும் பேசாமல் படுத்துக் கொள்ள, பத்மாவுக்கும் வேறு எதுவும் கேட்க முடியவில்லை.
Advertisement
மறுநாள் அதிகாலையே நந்தாவும், கயல்விழியும் காரில் கொடைக்கானலை நோக்கி சென்றனர். கயலுக்கு இன்னும் எங்கே போகிறார்கள் எனத் தெரியாது. நந்தாவே காரை ஓட்டினான்.
Advertisement
காரில் இருவர் மட்டுமே, கூட இளையராஜாவின் இசை. பிறகு கேட்கவும் வேண்டுமா? பயண நேரம் வெகு இனிமையாகக் கழிந்தது.
அதிகாலை சென்றதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வேகமாகச் செல்ல முடிந்தது. வழியிலேயே ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டனர்.
Advertisement
ஒன்பது மணி போல் கொடைக்கானலின் மலையில் கார் பயணிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் கயல்விழிக்குத் தாங்கள் கொடைக்காணல் செல்கிறோம் எனத் தெரிந்தது. வியப்பின் உச்சிக்கே சென்றவள், ஜன்னல் வழியாக ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
செல்லும் வழியிலேயே ஒவ்வொரு சுற்றுலா தளங்களிலும் இறங்கி பார்த்துக் கொண்டே சென்றனர். கார்டனில் நடக்கும் போது, நந்தா கயலை தன் தோளோடு சேர்த்து அணைக்க, வெளியிடம் என்பதால் கயல் அவனிடம் இருந்து விலகினாள்.
“இங்க இப்படித்தான் இருக்கணும். தள்ளித் தள்ளி
நடந்தாதான் ஒருமாதிரி பார்ப்பாங்க.” என்றவன், அவளைத் தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டே நடக்க, தங்களைச் சுற்றி கவனித்த கயல்விழியும், மற்றவர்களின் நெருக்கத்தைப் பார்த்து விட்டு, இது பரவாயில்லை என அமைதியாகி விட்டாள்.
அடுத்து கொடைக்கானலின் ஏரிக்கு சென்றனர். இவ்வளவு பெரிய ஏரியா எனக் கயல் வியந்து போய்ப் பார்த்தவள், அதைத் தன் கணவனிடம் சொல்ல திரும்ப, அப்போது அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
சாதாரணமாக இல்லை அவன் பார்வை. அவளைத் தாபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?”
“எப்படிப் பார்க்கிறேன்?” எனக் கேட்டவனோ புன்னகைக்க, கயலுக்கு முகம் சிவந்து விட்டது.
“சொல்லு எப்படிப் பார்க்கிறேன்?” நந்தா விடாமல் கேட்க, உன் பார்வை என்னை விழுங்குவது போல் இருக்கிறது என எப்படிச் சொல்வது எனத் தெரியாமல், கயல் மெளனமாக இருந்தாள்.
நந்தாவின் பார்வை இன்னும் அப்படியே இருக்க, கொடைக்கானலின் குளிரிலும் கயலுக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
“எனக்கு இங்க பார்க்கிறது எல்லாம் மனசுல பதியவே இல்லை. உனக்காகத் தான் இதெல்லாம் பார்த்திட்டு இருக்கேன்.” என்றான்.
“ஏன் உங்களுக்கு இதெல்லாம் பார்க்க பிடிக்காதா?”
“நான் அதுக்கா இங்க வந்தேன். எந்தத் தொந்தரவும் இல்லாம உன்னோட இருக்கணும். அதுக்குத்தான் வந்தேன். எப்ப ரூமுக்கு போவோம்ன்னு இருக்கு.” என்றதும், கயலின் முகம் ரத்த நிறமே கொண்டு விட்டது.
இதற்கு மேல் இவனைப் பேச விட்டால் ஆபத்து என உணர்ந்தவள், “எனக்குப் போட்டிங் போகணும்.” என்றாள்.
படகில் சவாரி சென்றவர்கள், மேலும் சில இடங்களைச் சுற்றி பார்த்துவிட்டு, மதிய உணவையும் முடித்துக் கொண்டு, அவர்கள் தங்கப்போகும் விடுதியை நோக்கி சென்றனர். செல்லும் வழியிலேயே மழை தூற ஆரம்பித்தது.
நகரத்தை விட்டு வெகு தொலைவில் அவர்களின் காட்டேஜ் இருந்தது. தனித் தனிக் குடில்களாகச் சுற்றிலும் மரங்கள் சூழ, மிகவும் அழகாக இருந்தது.
“நாம இங்கயா இருக்கப் போறோம்?”
“ஆமாம், ஏன் பயமா இருக்கா?”
“நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்?”
காரை நிறுத்திவிட்டு, வரவேற்பு அறைக்குச் சென்று சாவி வாங்கிகொண்டு, இருவரும் மழை தூறலில் நனைந்தபடி தங்கள் காட்டேஜ் நோக்கி சென்றனர்.
முன்புறம் சின்னப் பால்கனி, அடுத்து கதவை திறந்ததும் வரவேற்பு அறை இருந்தது. டிவி, சோபா எல்லாம் முன் அறையில் இருக்க, படுக்கை அறையில் பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது.
பெட்டியை தூக்கிக்கொண்டு வந்த ஹோட்டல் பணியாளர், அவர்களின் பெட்டியை அறையில் வைத்துவிட்டு, அங்கிருந்த பெரிய திரைசீலையை விலக்க, ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடியிலான தடுப்புத்தான்.
அதன் வழியாக அந்தப்பக்கம் பார்க்க, இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது. பச்சை புல்வெளியும், உயரமான மரங்களும், மெல்லிய மழை தூறல் எனப் பார்ப்பதே கண்ணுக்கு விருந்தாக இருந்தது.
கயல் நின்று இயற்கையை ரசிக்க, நந்தா சென்று கதவை மூடிவிட்டு வந்தான்.
“இங்க வந்து உட்கார்ந்து பாரு.” என அவளைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றவன், அவள் அருகில் உட்கார்ந்து தானும் ரசித்தான். சிறிது நேரம் சென்று அவன் அவளைப் பார்க்க, அவள் இப்போதும் வெளியே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அங்க என்ன அப்படிப் பார்க்கிற?”
“ரொம்ப அழகா இருக்கு இல்ல.”
“எனக்கு அதைவிட நீதான் அழகா தெரியிற.”
நந்தா புன்னகைக்கக் கயல் அவனைச் செல்லமாக முறைத்தாள்.
“உண்மையைத்தான் சொல்றேன். நான் மட்டும் உன்னைப் பார்க்காம போயிருந்தா? நீ எனக்குக் கிடைக்காம போயிருந்தா? என் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ. ஆனா நீ வந்த பிறகு, மனசு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ரொம்ப நிறைவா உணர்ந்திருக்கேன்.”
“என்னை ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிக்குது?”
“தெரியலை. உன்னைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சிடுச்சு.”
“சில பேரை பார்க்கும்போது மட்டும்தான் தோணும், இவங்களுக்காக என்ன வேணா பண்ணலாம். இவங்களை மட்டும் இழந்திட கூடாதுன்னு.”
“எனக்கு உன்னைப் பார்த்ததும் அப்படித்தான் தோனுச்சு.”
நந்தா சொல்ல சொல்ல கயல் ஆச்சர்யமாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நீயும் எதாவது சொல்லேன்?”
“எதைப்பத்தி?”
“என்னைப் பத்தி. உனக்குத் தோணுறதை சொல்லு.”
நந்தாவை பற்றிச் சொல்ல, கயலுக்கு நிறைய இருந்தது. ஆனால் அவளால் அவனைப் போல் எளிதாகச் சொல்ல முடியவில்லை. எதோ தடுத்தது.
கயல் மெளனமாக இருக்க, “ஹனிமூன் வந்திட்டு பேசிப் பேசி டைம் வேஸ்ட் பண்றோமோ?” என்றவன், எழுந்து சென்று திரையை இழுத்து மூடினான்.
அதன்பிறகு அவர்கள் நேரம் இனிமையாகச் சென்றது. இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு, மூன்றாம் நாள் மதியம் கிளம்பி இரவு வீடு வந்தனர்.
தேன்நிலவு சென்று வந்த பிறகு, கயலிடம் இருந்து இன்னும் கொஞ்சம் தயக்கம் விலக, தன் கணவனின் சந்தோஷமே அவளது முதன்மையானது. இருவருக்கும் வாழ்க்கை இனிமையாகச் சென்றது.
அன்பரசு, பத்மா வாசுவை பற்றிச் சொன்னதை மறந்துவிட்டார். அன்று காலை அவர் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருக்க, வாசு அவரைக் கடந்து செல்லும்போது தான் நினைவு வந்தது.
“எங்கப் போற நீ?” அன்பரசு பேப்பரை இறக்கி பிடித்தபடி வாசுவை பார்த்து கேட்க,
“என்னோட ப்ரண்ட பார்க்க போறேன்.” என்றான் அவன்.
“யாரை நல்லதம்பியவா?”
அன்பரசு சரியாகக் கேட்டுவிட, வாசு பதில் சொல்ல திணறினான்.
“அவனோட உனக்கு என்ன பழக்கம்? காத்துல பறந்து போய் கோபுரத்துல உட்கார்ந்த காகிதம் மாதிரி, அவங்க அப்பன் திடிர்ன்னு லாட்டிரி அடிச்சு பணக்காரன் ஆனவன்.”
“அவன் பையனோட எல்லாம் உனக்கு என்ன சிநேகிதம் வேண்டி கிடக்கு.”
வாசு பதில் சொல்லாமல் தலை குனிய, “இனிமே அவனோட சேர்ந்து சுத்தாத. நீ உன் பொழப்பை பாரு. சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணனும்.” அன்பரசு சொல்ல, விட்டால் போதும் என்று வாசு அங்கிருந்து நழுவினான்.
மறுநாள் அன்பரசு வெளியே கிளம்பிக் கொண்டு இருந்த போது, இரண்டு கார்கள் அவர் வீட்டின் முன்பு நிற்க, முதல் காரில் இருந்து இறங்கிய ஆட்களில் ஒருவன் சென்று, மற்றொரு காரின் கதவை திறந்து விட, அதிலிருந்து நல்லதம்பியின் அப்பா வடிவேலு இறங்கினர்.
அவரைப் பார்த்ததும் அன்பரசுவின் முகம் மாற, அவர் வந்தவரை வா என்று கூட அழைக்கவில்லை. ஆனால் வடிவேலு அவராகவே உள்ளே சென்று உட்கார்ந்தார்.
“அன்பரசு எப்படி இருக்கீங்க?” வடிவேலு கேட்க, அவரை முறைத்து பார்த்த அன்பரசு, “அய்யான்னு சொல்லு, என்கிட்டே வேலைபார்த்தவன் தானே நீ. பழசு எல்லாம் மறந்து போச்சா.” என்றதும், உள்ளுக்குள் எரிந்தாலும் வெளியே வடிவேலு சிரித்தார்.
“அது ரொம்ப முன்னாடி. இப்ப நானும் உங்களுக்குச் சமமான பணக்காரன். நீங்க இன்னும் பழைய காலத்திலேயே இருக்கீங்க போலிருக்கு.”
அதைக் கேட்டு, அன்பரசுவின் முகம் கடுத்தது. “இப்ப உனக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்திருக்க?” எனக் கேட்டார்.
“எல்லாம் நல்ல விஷயம்தான். என் பொண்ணுக்கும், உங்க பையனுக்கும் சம்பந்தம் பேச வந்தேன்.”
“உன் பொண்ணுக்கு என் பையனை செய்ய எனக்கு இஷ்ட்டம் இல்லை. நீ போகலாம்.”
“அதை நீங்க சொல்லக் கூடாது. உங்க பையன்தான் சொல்லணும்.” என்றதும், அன்பரசு கோபத்தில் எழுந்தே விட, சமையல் அறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பத்மா, “அவர் சொல்றதை தாங்க என் பசங்க கேட்பாங்க. அவருக்குதான் இஷ்ட்டம் இல்லைன்னு சொல்லிட்டாரே, நீங்க போகலாம்.” என்றார்.
அப்போது வாசுவும் அங்கேதான் மாடிப்படி அருகே நின்று கொண்டு இருந்தான். அவன் எதாவது சொல்வானா என வடிவேலு பார்க்க, வாசு தலை குனிந்து நிற்க, வடிவேலுவின் முகம் மாறியது.
“நீங்க எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க. பெரிய பையன் ஜெயில்ல இருக்கான் போலிருக்கு. பொண்ணு கூட நம்ம பக்கம்தான் இருக்குன்னு கேள்விபட்டேன்.” என்றதும், அன்பரசுவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தாலும், தன் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“என் மாப்பிள்ளை பெரிய போலீஸ் ஆபீசர் தெரியும் இல்ல. அவர் லிஸ்ட்ல நீ இல்லையே? என்கவுன்டர் பண்ணிட போறார். எதுக்கும் பார்த்து இருந்துக்கோ.” எனத் திமிராகவே அன்பரசு பதில் கொடுக்க, வடிவேலு அங்கிருந்து சென்றதும், அவர் கோபம் வாசுவின் பக்கம் திரும்பியது.
“என்ன மாதிரி ஆளுங்களோட சவகாசம் வச்சிருக்க. எனக்கு முன்னாடி நின்னு பேச பயப்படுறவன், இன்னைக்கு வீடு தேடி வந்து மிரட்டிட்டுப் போறான். எல்லாம் உன்னால.”
“உனக்கு நான் எப்படிப்பட்ட இடத்தில பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் தெரியுமா? நம்ம விஸ்வநாதன் பொண்ணு வசுந்தராவை உனக்குப் பேசி வச்சிருக்கேன். நீ என்னன்னா போயும், போயும் இவன் பெண்ணைப் போய்க் கட்ட நினைச்சிருக்க.”
“திடீர் பணக்காரன் மாதிரி, இப்ப அரசியலுக்கும் வரான். அவனுக்கு என்னோட தயவு வேணும். அதுக்குத்தான் உன்னைய பிடிச்சிருக்கான்.”
அன்பரசு சொன்னதும் யோசித்த வாசுவுக்கு, தன் அப்பா சொல்வது சரியென்றே தோன்றியது. நல்லதம்பி அவனாகத்தான் வந்து வாசுவிடம் வழிய பழகினான். அவன் தங்கையையும் அறிமுகம் செய்து வைத்தவன், தன் தங்கைக்கு அவனைப் பிடித்திருப்பதாகவும் சொன்னான்.
ஒரு அழகான பெண்ணுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்றதும், வாசுவும் மயக்கத்தில் இருந்தான். இப்போது யோசிக்கும்போது, எல்லாமே திட்டமிட்டதாக இருக்குமோ எனத் தோன்றியது.
“இதுவரை எப்படி எப்படியோ இருந்திட்டோம். உன் அண்ணனும் ஜெயிலுக்குப் போயிட்டான். நான் இப்ப அரசியலுக்கு வந்துட்டேன். நாம இன்னும் மேல போகணும். உனக்கும் நல்ல இடத்தில சம்பந்தம் பண்ணிட்டா, நீயும் கயல்விழி மாதிரி நல்லா இருப்ப.”
“இவனுங்களோட சேர்ந்தா நம்மை இன்னும் படுபாதாளத்துல தள்ளிடுவானுங்க. அதுவும் இவன் பையன் கஞ்சா வியாபாரம் செய்றதா கேள்விபட்டேன். அதனாலதான் மாப்பிள்ளை உங்க அம்மாகிட்ட உன்னைப் பத்தி எச்சரிக்கை பண்ணி இருப்பார்.”
அன்பரசு நந்தாவை மாப்பிள்ளை என அழைத்ததைப் பத்மாவும், வாசுவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அதுவும் கயல் மாதிரி நீயும் நன்றாக இருக்கணும் என்றது, இன்னும் வியப்பாக இருந்தது.
வழக்கமாகக் காலையிலேயே எழுந்துகொள்ளும் கயல்விழிக்கு, அன்று தலையே தூக்க முடியவில்லை. படுத்திருக்கும் மனைவியை நந்தா ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“என்ன ஆச்சு?”
“தெரியலை, தலையே தூக்க முடியலை. ஒருமாதிரி பாரமா இருக்கு. தூங்கிட்டே இருக்கணும் போல இருக்கு.”
அவளுக்கு உடம்பு எதுவும் சரி இல்லையோ என நந்தா தொட்டு பார்க்க, காய்ச்சலும் இல்லை. சிறிது நேரம் சென்று எழுந்தவள், கஷ்ட்டப்பட்டு வேலை செய்தாள். அதைப் பார்த்து நந்தாவும் அவளுக்கு உதவினான்.
காலை டிபன் சாப்பிட்டதும், நந்தா அலுவலகத்திற்குக் கிளம்புவதற்குள், மீண்டும் படுத்து உறங்கி விட்டாள். அவளை விட்டு செல்ல மனமில்லாமல், அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தான்.
நந்தாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறாள் என கவலைப்பட்டவன், தன் மாமியாருக்கு அழைத்து அவரை உடனே வர சொன்னான்.
பத்மா பதட்டமாகக் கிளம்ப, அன்பரசு காரணம் கேட்டார்.
“மாப்பிள்ளை உடனே வாங்கன்னுதான் சொன்னார், வேற ஒன்னும் சொல்லலை.”
“சரி சீக்கிரம் கிளம்பு.”
பத்மா வந்தபோது, நந்தா அலுவலகம் செல்ல தயாராக இருந்தான். கயல் முன் அறையில் இல்லை.
“என்ன ஆச்சு?” அவர் பதட்டமாகக் கேட்க,
“பார்க்க நல்லத்தான் இருக்கா, ஆனா தூக்கமா வருதுன்னு சொல்றா.” என்றான்.
தூக்கமா வருதா, இதுக்குத்தான் இந்தக் கலாட்டாவா என நினைத்தவர், மகளைச் சென்று பார்க்க, அவள் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
“நீங்க ஆபீஸ் போங்க. நான் பார்த்துகிறேன்.”
“இல்லை அவ எழுந்துகட்டும் பார்த்திட்டே போறேன்.” நந்தா சொல்ல, பத்மா சமையல் அறைக்குச் சென்று, அங்கிருந்த காய்கறிகளை வைத்து மதியத்துக்குச் சமைக்க ஆரம்பித்தார்.
பன்னிரண்டு மணி போல், எழுந்து வந்த கயல், நந்தாவின் அருகே சென்று அமர, அவன் மனைவியின் தலையை வருடி விட்டான்.
“எனக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சா?” கயல் சோகமாகக் கேட்க, நந்தாவுக்குக் கஷ்ட்டமாக இருந்தது.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்க அம்மா வந்திருக்காங்க.” என்றான்.
அதற்குள் பத்மாவே ஹாலுக்கு வந்துவிட்டார்.
“எப்படி இருக்கு கயல் இப்ப?”
“ம்ம்…. வயிறு ஒருமாதிரி இருக்கு மா.” என்றாள்.
உடம்பு முடியவில்லையோ என நந்தா பதட்டமாக, “பசிக்குதோ என்னவோ, சாப்பிடுறியா?” எனப் பத்மா கேட்டதும், கயல் சரி எனத் தலையை அசைக்க, பத்மா அவளுக்கு ஒரு தட்டில் சாதம் போட்டு, புளிக்குழம்பு ஊற்றிக் கொண்டு வந்தார்.
“நீங்க?” எனக் கயல் நந்தாவை பார்க்க,
“நீ முதல்ல சாப்பிடு.” என்றான்.
கயல் வேகமாகச் சாப்பிட, அவள் நல்ல பசியில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. காலையில் அவளால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டதும் தெளிவாக இருந்தாள்.
அதைப் பார்த்து பத்மாவுக்குச் சந்தேகம் வர, “என்னைக்குக் கடைசியா குளிச்ச?” எனக் கேட்டார்.
“அது அங்க ஊர்ல இருக்கும்போது குளிச்சது. இங்க வந்து இன்னும் குளிக்கலை.” என்றாள்.
“இங்க வந்தே ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதே. உண்டாகி இருக்கிறது கூடத் தெரியாம, நீயெல்லாம் என்ன குடும்பம் நடத்துறியோ?” என்றார்.
நந்தாவுக்கு அவர்கள் இருவரும் பேசுவது வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. “என்ன?” என்று அவன் கயலிடம் கேட்க, சட்டென்று அவள் முகம் சிவக்க, அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றாள். நந்தாவும் அவள் பின்னே அறைக்குள் சென்றான்.
“என்ன கயல்?” அவன் மீண்டும் கேட்க, எப்படிச் சொல்வது என அவளுக்குத் தெரியவில்லை. அவன் கையை எடுத்து, தன் வயிற்றில் வைத்தாள்.
கயலின் வெட்கம் நிறைந்த முகமும், பார்வையில் இருந்த தவிப்பும், அவனுக்கு விஷயத்தைப் புரியவைக்க, இன்பமாக அதிர்ந்தவன், மனைவியை ஆசையாகக் கட்டிக்கொண்டான்.
இருவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம். தங்களுக்கு ஒரு குட்டி வாரிசு வருவதை எண்ணி, இருவரும் பரவச உலகில் இருந்தனர்.
error: Content is protected !!