Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 10

அந்த அந்தக்கார வேளை அத்தனை ஆர்ப்பாட்டமாய் இருந்தது கௌசியின் வீட்டில்.



Advertisement

கூடைக்கூடையாய் பூக்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. வாழை இலைக்கட்டும், மேசைகளும், பந்தல் போடுபவர்களும் என அங்கும் இங்கும் ஆட்கள் நடமாடிக்கொண்டிருக்க, வீட்டின் உள்ளே, அரமியத்தின் {முற்றம்} நடுவே நாற்காலி போட்டு அமரவைக்கப்பட்டிருந்தாள் ஆர்த்தி.

Advertisement

முகம் முழுக்க மஞ்சள் பூசி, தலை நிறைய பூச்சூடி, புது பட்டு தாவணியில் கண்ணை சுழற்றும் தூக்கத்தை சமாளித்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, அருகே தனபாக்கியம் அமர்ந்து அவள் கைகளில் தங்க வளையல்களை திணித்துக்கொண்டிருந்தார்.

Advertisement

தரையில் அமர்ந்து தங்கையின் கால் விரல்களில் மருதாணி வைத்துக்கொண்டிருந்தாள் கௌசல்யா.

Advertisement

புவனாவிற்கு தலைக்கால் புரியாத சந்தோஷம். சின்ன மகள் ஒன்பதாவது முடிக்கும் தருவாயிலும் இன்னமும் பூப்பெய்தவில்லையே என்ற மிக மெலிதான வருத்தத்தில் இருந்தவருக்கு, அந்த கவலையும் ஓடிவிட்ட மகிழ்வு.

அலைபேசியில் வேகவேகமாய் எண்களை அழுத்தியவர், மறுபக்கம் எடுக்கப்பட்டதும், “அண்ணே! புவனா பேசுறேண்ணே! உன் சின்ன மருமக பெரிய மனுஷியாகிட்டாண்ணே! தலைக்கு தண்ணி ஊத்தி உட்கார வச்சுருக்கோம்! சடுதியா வந்தன்னா குச்சி கட்டிடலாம்!” என்றார். குரலில் தான் ஏகப்பட்ட சந்தோஷம்.

ஆனால், மறுப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ… குரலில் இருந்த துள்ளல் அப்படியே இறங்கிப்போக, “அப்படியாண்ணே…? சரிண்ணே!” என்றவர் சட்டென அழைப்பை துண்டித்துவிட்டார்.

மருமகளின் பாவனைகளை ஓரக்கண்ணில் அளவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்த தனப்பாக்கியம், அவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பதைக்கண்டு, “என்னா சொன்னான் உன் நொண்ணன்?” என்றார்.

அடிக்கண்ணில் அவரை முறைத்தாலும் அண்ணன் மீதிருந்த கோபத்தால், “ம்ம்… அவரு ஏதோ முக்….கிய சோலியா மதுரை போயிருக்காராம்! உடனே இந்நேரம் வர முடியாதாம்! சின்னவனை வச்சு குச்சி கட்டிடு… நான் காலைல நேரமே வந்து நிக்குறேன்னு சொல்றாரு!” என்றார்.

“அப்பறம் என்னடி? நடுராத்திரிக்கு அவனும் எப்படி வெளியூர்ல இருந்து வந்து குதிப்பான்! சின்னவனுக்கு சொல்லி வர சொல்ல வேண்டியது தானே? அதவிட்டுட்டு மூஞ்ச ஏழு முழத்துக்கு இழுத்துக்கிட்டு நிக்குறவ?”

முகத்தை இன்னமும் தூக்கியவர், “முன்னமே பேசிட்டேன்… சின்னண்ணன் காலைல வரேன்னு சொல்லிடுச்சு” என்றார் முனகலாய்.

“என்ன ஆனாலும் உடம்பொறந்தவங்க வேற, சின்னம்மா பெரியம்மா மக்க வேற தான்! விடு அதான் வெள்ளன வரேனுங்குறானுங்களே…!” அதோடு முடித்துவிட்டார் தனபாக்கியம்.

புவனாவுக்கு தான் மனசுக்கு தாங்கவில்லை. சொன்னதும் ஓடி வந்து நிற்ப்பார்கள் என நினைத்திருக்க, இப்படி தாக்கல் சொல்வார்கள் என எண்ணவே இல்லை அவர்…

கௌசிக்கு விசேஷம் என்றபோது உடனே வந்து நின்றவர்கள் தான்! சின்னவள் இப்படி இருட்டிவிட்ட நேரத்தில் பூத்து நிற்க, அவரவர் சந்தர்ப்பமும் உடனே வர முடியாதபடி அமைந்துப்போனது.

புவனா, “காலைல அவங்க வந்து குச்சி கட்டுற வரை என் புள்ள இப்டியே இருக்கணுமா?”

“ஒரு ராத்திரில என்ன ஆகப்போது! உலக்கையை குறுக்க போட்டு ஓரமா படுத்து எந்திரிக்கட்டும்! காலைல எல்லாரும் வந்ததும் சிறப்பா செஞ்சுக்குவோம்!” தனபாக்கியம் சொல்ல, அதை புவனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அதெல்லாம் ஆகாது! என் புள்ள ஏன் அப்படி மூலைல கடக்கணும்?” ஒன்றும் இல்லாததுக்கு பெரிதாய் கவலைப்பட்டார் அவர்.

“அப்படி இன்னேரமே கட்டியாகனும்ன்னா, ஊருக்குள்ள மாமன் முறைக்காரனுங்க எத்தனயோ பேர் இருக்காங்க! அவங்களை யாராவது கட்ட சொல்லுவோம்! விடு” என்றவர், வெளியே ஆட்களிடம் நின்று பேசிக்கொண்டிருந்த மகனை, “அன்பு….” என அழைத்தார்.

புவனா வேகமாய், “அதெப்படி யாரோ ஒருத்தர் வந்து முறை செய்ய முடியும்? என் பொண்ணு என்ன யாரும் இல்லாம இருக்காளா?” என்றார் அதற்கும்.

தனபாக்கியதிற்கு எரிச்சலாய் வந்தது.

புவனாவின் குரல் வாசல் வரை கேட்க, “என்னத்தாண்டி உன் பிரச்சனை?” கேட்டுக்கொண்டே வந்தார் அன்பழகன்.

“அதக்கேளுடா முதல்ல! சும்மா நசநசன்னு புலம்பிக்கிட்டு நிக்குறா!” கடுகடுத்தார் தனப்பாக்கியம்.

புவனா முகத்தை திருப்பிக்கொண்டு கண்ணை கசக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, “குச்சி கட்டுறது தான் உன் பிரச்சனைன்னா, மனோகர் வீட்டுல தானே இருக்கான்! அவனை கூப்பிட்டு கட்ட சொல்லு” இயல்பாய் யோசிக்காமல் சொல்லிவிட்டார் அன்பழகன்.

அதைக்கேட்ட புவனாவுக்கு தான் கால்விரல் ரத்தம் கண்களுக்கு ஏறியது.

தனபாக்கியமோ, ‘அட, இது நமக்கு தோணலையே!’ என்ற பிரம்மிப்போடு, “அதுவும் சரிதானே? வீட்டுலயே தாய்மாமன வச்சுக்கிட்டு எதுக்கு போன் போட்டுக்கிட்டு திரியனும்!” என்றதோடு, “மனோ…. மனோ….” என அவனை அழைத்தும் விட்டார்.

எப்போதும் தனபாக்கியம் தான் அவனுக்கு குடை பிடிப்பார் என்றால், இன்று கணவனும் அவன் பக்கத்திற்கு சாய,

“எவ பெத்த புள்ளைக்கு எவன் தாய்மாமன்? எந்த அநாதைப்பயலும் என் புள்ளைக்கு முறை செய்ய தேவையில்லை. முறை செய்ய எல்லாம் ஒரு அருகதை, யோக்கியதை வேண்டாமா? எவன் எவனோ முறை செய்யுற அளவுக்கா நானும் என் பொண்ணும் தாழ்ந்துப்போய் நிக்குறோம்? ஒரு வேலைக்காரன் கையால….” புவனா பேசிக்கொண்டே போக,

“வெளில ஆர்கஸ்ட்ரா ஆளு வந்துருக்கார்… அட்வான்ஸ் தரனும்” என்று உரக்க சொன்னான் மனோகர்.

அவன் வந்ததும் முகத்தை சுளித்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டார் புவனா.

நிலைப்படி அருகே நின்றுக்கொண்டு செய்தி சொன்னவனை திரும்பி பார்த்த அன்பழகனுக்கு புவனாவின் பேச்சு தெள்ளத்தெளிவாய் அவன் செவிகளை சேர்ந்திருக்கும் என்பது புரிய, அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டு போனார்.

மனைவியின் எண்ணம் தெரிந்தும் வாய்விட்ட தன்னை மனதுக்குள் திட்டிக்கொண்டவர், முகத்தில் எதையும் காட்டாது, “வரேன்னு சொல்லு மனோ!” என்றுவிட்டு, “புள்ளைக்கு தூக்கம் வருது போலம்மா! நீங்க என்ன செய்வீங்களோ அதுப்படி செய்ங்க! முறைப்படி செய்முறை எல்லாம் வெள்ளன செஞ்சுப்போம்” என்றுவிட்டார் தனபாக்கியத்திடம்.

அதோடு ஆர்த்திக்கு இடம் ஒதுக்கி கொடுத்து அவள் அருகே தனபாக்கியத்தை துணைக்கும் இருத்தி வைத்துவிட்டு வெளியே சென்றார் அன்பழகன்.

அடுக்களையில் வெங்காயமும் பொரியலுக்கு வேண்டி கைகளை நறுக்கிக்கொண்டு ஐந்தாறு பெண்கள் வேலையில் இருந்தனர். புவனாவுக்கு புருஷன் மேல் கொட்ட முடியாத கடுப்பை எல்லாம் கொட்ட அவர்கள் தான் கிடைத்தனர்.

“இதென்ன கோஸு இத்த நீட்டம் நறுக்குற? பீன்சு என்ன பொரியலுக்கா இல்ல சாம்பாருக்கா? சன்னமா வெட்டு! எல்லாம் வாய் பாத்துட்டு இருந்தா வேலை நடக்குமா? உடம்புல ஒரு சுறுசுறுப்பு வேண்டாம்?!”

ஒழுங்காய் நடக்கும் வேலையையும் குறை சொல்லிக்கொண்டு எண்ணெய்யில் போட்ட அப்பளமாய் அவர் பொரிந்துத்தள்ள, அவர்மேல் மேலும் எண்ணெய்யை கொட்டவென வந்து நின்றாள் கௌசி.

வந்தவளும் எடுத்த எடுப்பிலேயே, “ஏன்ம்மா? மனோவும் எங்களுக்கு தாய்மாமா தானே? அவர் மாமன் முறை செஞ்சாத தான் என்னவாம்?” இப்படி கேட்டு வைக்க, புவனாவின் கையில் கூலமும், அவர்பின்னே ஒரு சிங்கமும் தான் குறை… மத்தபடி உக்கிர காளியாகவே மாறி நின்றார்.

“எடு செருப்ப! என்னடி மாமன்? என்க்கூட பொறந்தவனா? இல்ல உன் அத்தையை கட்டுனவனா? எந்த முறைலடி அவன் உனக்கு மாமன் ஆகிட்டான்?” கையில் கிடைப்பதை எடுத்து அவளை அடிக்க ஓங்க, வேகமாய் நான்கடி பின்னே பாய்ந்தவள்,

“அட போங்கம்மா! மாமா’ன்னு சொன்னா நீங்க அடிக்குறீங்க! மாமா’ன்னு சொல்லாட்டி ஆத்தா திட்டுறாங்க! உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்குறேன்”

“எல்லாம் அந்த கிழவிய சொல்லணும்! என் உசுர வாங்கன்னே அது இன்னும் உசுர புடிச்சுக்கிட்டு கடக்கு!” என முனகியவர்,

“இங்கப்பாரு இன்னொருவாட்டி என்கிட்ட வந்து அவனை மாமன் மண்ணாங்கட்டின்னு வக்காலத்து வாங்குன? மைகோதியை நெருப்புல வாட்டி ஒரே இழுவையா இழுத்துடுவேன்… மரியாதையா இருந்துக்க!” என்றார் ஆக்ரோஷமாய்.

கண்களில் பயம் அப்ப, “அப்ப எப்படிதான் அவரை நான் கூப்பிடுறது ம்மா” என்றாள் அவரிடமே.

“அவனை என்னத்துக்குடி நீ கூப்புடுற? உன் அண்ணன், தங்கச்சி எல்லாம் அவன்கிட்ட பேசிட்டா இருக்காங்க? அவனை மனுஷனா கூட பாக்குறது இல்ல.. நீ ஒருத்தி தான் அவன் கிழவியோட சேர்ந்துக்கிட்டு அவன்கிட்ட உறவை இழுத்துக்கிட்டு திரியுற! என் வயித்துலையாடி பொறந்து தொலைச்ச நீ எல்லாம்?” என்று கத்த,

‘இதுக்குமேல் பஜனை தொடங்கிவிடும்’ என்றறிந்த கௌசி நைசாக அங்கிருந்து நழுவிவிட்டாள்.

அவள் போன பின்னும் அடுக்களை வாசலை பார்த்தபடி புவனா அங்கதம் பாட, அவர் எதிர்ப்பார்க்காதபடி சட்டேன அங்கே வந்து நின்றான் மனோகர்.

அவனை அங்கே கண்டதும் புவனாவின் பேச்சு பட்ன நின்று போனது.

அவன் பார்க்க வளர்ந்தவன் தான். கிடைக்கும் சாக்கில் எல்லாம் அவனை வசைமாரி பொழிபவர் தான்! ஆனால் முழுதாய் வளர்ந்து நிற்கும் ஆண்மகன் என்கையில் அவனை அருகே காணும்போது லேசாக உதறல் எடுக்கும் அவருக்கு.

சிரிப்பை மறந்த அவன் இறுகிய முகம் ‘கை நீட்டி விடுவானோ?’ என்ற அச்சத்தை எப்போதுமே அவருக்கு தரும். ஆனாலும் அவர் தன் பேச்சை குறைத்ததில்லை.

இப்போது திடீரென அடுக்களையில் வந்து அவன் நிற்க, ‘தான் பேசியதற்கு கோபத்தில் பதில் மொழி சொல்ல வந்துவிட்டானோ?’ என அவர் யோசிக்க,

“நீங்களே சொன்னாலும் ‘மாமன்’ங்குற உரிமையை என்னைக்கும் நான் எடுத்துக்க மாட்டேன்! நான் இந்த வீட்ல தங்கிருக்க ஒரு வேலைக்காரன்! அதை நீங்க நியாபகப்படுத்தனும்ன்னு அவசியம் இல்லை. ஏன்னா எனக்கே அடிமனசுல அழுத்தமா பதிஞ்சு போச்சு அது! அதனால வீணா கவலைப்படாம உங்க பொண்ணு விஷேசத்துக்கு சிரிச்ச முகமா சந்தோசமா இருங்க!”

இயந்திரகதியில் சொன்னவன், வந்த போக்கில் திரும்ப, அவன் பேச்சால் புவனாவின் மனதில் ஒருவித நிம்மதி தான் விரவியது.

அவனை முறை செய்ய விடாமல் தடுத்து நிறுத்த இனி போராட தேவையில்லை. அவனே ஒதுங்கிவிட்டான் என்ற நிம்மதி.

சென்றவனோ ஒரு நொடி திரும்பி, “எதாவது வேலை இருந்தா குரல் கொடுங்க! இங்க தான் இருப்பேன்” என்றுவிட்டு போனான்.

‘தான் ஒரு வேலைக்காரன் தான்!’ என சொல்லாமல் சொல்கிறானாம்!

புவனாவுக்கு தான் அவன் பேச்சில் நிம்மதி உண்டானாலும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உரச ஆரம்பித்தது.

பின் வாசல் பக்கம் வந்தவன், அண்ணாந்து இருட்டின வானை வெறித்தான்.

மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள், ஏக்கங்கள், கோபங்கள் அணிக்கட்டி வந்தன. தன் நிலை இப்படி தானா? தனக்கென்று எதுவும் உரிமை இல்லையா? இப்படி பலவித எண்ணங்கள் அவனை பலவீனமாய் ஆக்க, கண்கள் கூட கலங்கும் போல இருந்தது.

முயன்றும் கலங்கும் கண்களை அடக்கினான்.

இதுதான் வாழ்க்கை…! இப்படிதான் இனி! என இந்த வீட்டுக்குள் வந்த ஏழெட்டு வருடங்களில் மனதில் பதிந்து போனது தான்! இந்த ஒதுக்கமும் புறக்கணிப்பும் சதா சர்வகாலமும் அவன் சந்திப்பது தான். ஆனாலும் அப்போதெல்லாம் கலங்காத கண்கள் இப்போது மட்டும் ஏன்?!

மனபாரம் தலைக்கு ஏறுவதை போல இருந்தது.

தலையை கைகளால் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

கண்களை மூடியிருந்தவன் செவிகளில் கொலுசு சத்தம் அருகே கேட்க, கண்களை திறவாமலே தெரிந்தது அது கௌசி தான் என்று.

ஒருநொடி கூட தயங்காது படக்கென நிமிர்ந்தவன், சற்று தள்ளி நின்று எங்கோ முறைத்துக்கொண்டிருந்தவளை பார்த்து, “கௌசி?” என்றான்.

அவளோ இவன் பக்கம் திரும்பினாள் இல்லை.

“ஏன் கௌசி பேச மாட்டேங்குற?” தன்னைமீறி கேட்டுவிட்டவனுக்கு அப்போது தான் மண்டைக்குள் உரைத்தது.

அவனிடம் உரிமையாய் வந்து பேசும் ஜீவனின் சின்ன புறக்கணிப்பு தான் தன்னை இத்தனை பலவீனமாக்கியிருக்கிறது என்று!!! புரிந்த பின்னோ அவனுக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்!

கௌசி அருகே வந்தாலே ‘போச்சு… ரேடியோவ தொறந்துட்டா!’ என்று சலிப்பாய் தான் தோன்றும் அவனுக்கு.

அவள் பேசாததா தன்னை இத்தனை பாதிக்கிறது?! ஆச்சர்யத்துடன் புன்னைகையும் தோன்ற அவள் பாராமுகத்தை கண்டு, “ரொம்ப கோவமோ?” என்றான்.

அப்போதும் அவளிடம் பதில் இல்லை. இந்த நான்கு நாட்களாகவே அவள் அவனிடம் பேசுவதில்லை. ஏன், முகம் கூட பார்ப்பது இல்லை.

எவ்வளவு விரட்டி விட்டாலும் காலை சுற்றும் நாய்க்குட்டியென, ‘மாமா’ என்று வந்து நிற்ப்பவளின், புறக்கணிப்பு வேதனையை கொடுத்தாலும் மறுபுறம் சிரிப்பையும் சேர்த்தே தான் கொடுத்தது.

“என்ன கோபம்ன்னு சொன்னா தேவலாம்!” இலகுவாய் கேட்டான். அவளுக்கு என்ன கோபம் இருக்க போகிறது? அதுவும் தன் மேல்? என்ற அசட்டை அவனுக்கு.

சிறிது நேரம் முன்னே அன்னையிடம் தனக்காக பேசியவளுக்கு தன்மீது கோபமா என்ற எண்ணம் வேறு அவனுக்கு.

அவளோ தீவிரமான முகபாவத்துடன், “நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்கனும்ங்குற எண்ணத்துல இருக்கீங்களா என்ன?” என்றாள் பட்டு தெறித்தார் போன்று.

அவளிடம் இருந்து அவன் எதை எதிர்ப்பார்த்தாலும் இப்படியொரு பேச்சை அவன் சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அதிரிச்சியில் அவன் எழுந்து நின்ற தோற்றமே சொல்லியது.

அதை கவனித்தாலும், “அப்படியொரு எண்ணம் மனசுல இருந்தா இப்போவே அதை தூக்கி குப்பைல போட்டுடுங்க! உங்களை மாறி ஒருத்தரை நான் கனவுல கூட கல்யாணம் செஞ்சுக்கனும்ன்னு ஆசைப்பட மாட்டேன்!” என்றாள்.

கனவிலாவது வர மாட்டானா? என பின்னாளில் தான் ஏங்க போவது தெரியாமல்.

“என்ன பேசுற கௌசி நீ?” பேச்சுக்கூட தாமதமாக தான் வந்தது அவனுக்கு.

“புரியாதமாறி நடிக்காதீங்க! என்கிட்ட நல்லவன் மாதிரி பேசிட்டு, அடுத்த நாளே ஹரியை போட்டு அந்த அடி அடிச்சு அவன் கை காலை உடைச்சுருக்கீங்க! உங்கக்கிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்க்கலை மா…”

‘மாமா’ என்று வாய்வரை வந்ததை அப்படியே சொல்லாமல் நிறுத்தினாள்.

“நீ என்ன பேசுறன்னே புரியல!” திகைப்பு நீங்காது கேட்டான். அவன் அறிந்த கௌசிக்கு கோபப்படவே வராதே! அதிலும் இப்படி எடுத்தெறிந்து பேசுவது…?! ம்ஹும்…

“புரியாதவங்களுக்கு விளக்கலாம்! புரிஞ்சுகிட்டே புரியலன்னு நடிக்குறவங்களுக்கு யார் சொல்லியும் விளக்க முடியாது” வெறுப்பாய் சொன்னாள்.

“உங்கக்கிட்ட சமாதானம் பேச நான் வரலை! இனியொரு முறை அவன்மேல நீங்க கை வைக்க கூடாதுன்னு சொல்லிட்டு போகதான் வந்தேன்! அப்பாக்கிட்ட சொல்லுவேன்னு என்னை மிரட்டலாம்ன்னு நினைக்காதீங்க! எனக்கு பயம் இல்லை! என் மேல என்ன தப்பு இருக்கு நான் பயப்பட?” சற்றே திமிராய் சொன்னவள்,

அவன் கண்களை பார்த்து, “இனி என்கிட்ட நீங்க பேசவே கூடாது! நீங்க யாரோ? நான் யாரோ!” என்று சொல்லி சென்றவள், அதை அப்படியே கடைப்பிடிக்கவும் செய்தாள்.

அதுவரை ஆர்த்தியும் மதனும் தான் அவனை புறக்கணித்தனர். இப்போதும் அதில் கௌசியும் சேர்ந்துக்கொள்ள, மற்றவர்களை போல அவளையும் எளிதில் அலட்சியப்படுத்த முடியவில்லை அவனால். அதில் அவன் இறுக்கம் இன்னும் அதிகரிக்க, வீட்டிற்கு வருவதே இருட்டியப்பின் தான் என்றானது.

ஆர்த்திக்கு பதினோராவது நாள் புண்ணியாதானம் செய்ததும் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்க, ரிவிஷன் எக்ஸாம் நடப்பதால் தினமும் கௌசி மட்டும் தனியே பள்ளி சென்று வந்தாள்.

திருச்சியில் வணிகர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடக்க இருப்பதாக அன்பழகனுக்கு அழைப்பு வந்தது. ஒவ்வொரு ஊரின் முக்கிய புள்ளிகளும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கைதுணைக்கு மனோகரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார் அன்பழகன்.

ஒருநாள் இருநாள் என நீடித்த போராட்டம் முழுதாய் முடிய பத்து நாட்கள் பிடித்தது. இறுதியில் போலிஸ் வந்து சமாதானம் பேசி அரைமனதாய் போராட்டத்தை களைத்திருந்தனர்.

‘முடிந்ததே போதும்’ என்ற நிம்மதியில் இருவரும் வீடு வந்து சேர, மனோகரின் கண்கள் தன்னையறியாமல் கௌசியை தான் காணத்தேடியது.

இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்ததே இல்லை. அவனுக்கு அன்பழகனுடன் போகவே விருப்பம் இன்றி இருந்தது. மனம் ஏனோ பாடாய் படுத்த, அவன் எத்தனை சொல்லியும் கேளாமல் தான் அழைத்து சென்றிருந்தார் அவனை.

இப்போது கௌசியை ஒருமுறை கண்ணால் கண்டுவிட்டால் போதும், தவிப்பு நீங்கிவிடும் என்றெண்ணி அவன் காத்திருக்க, தந்தைக்கு தண்ணீர் கொண்டு வந்தவளை பார்த்தவனின் இதயம் துடிக்கும் ஓசை வெளி வரை கேட்டது.

கண்கள் சிவந்து, முகம் சோர்ந்து, பத்தே நாள்களில் பாதியான உடம்போடு, ஜீவனற்ற பார்வையுடன் இயந்திரமாய் வந்து நின்றாள் கௌசல்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!