Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 11

 

“அங்க ஒருத்தன் என்னை பார்த்து ‘நீ யாருய்யா கேள்விகேட்க?’ன்னு ஒரு சத்தம் போட்டான். அப்போ கையை முறுக்கிக்கிட்டு அவனை அடிக்க ஓடுனான் பாருங்க! விட்டா சில்லி மூக்கை உடைச்சுருப்பான்! அவ்ளோ கோவம் அவனுக்கு!” முற்றத்தில் அமர்ந்து தன் ‘பத்து நாள் போராட்டக்கதையை’ சொல்லிக்கொண்டிருந்தார் அன்பழகன்.

“மனோகரு அப்படியா செஞ்சான்?” தனப்பாக்கியம் ‘ஆஆ’ என கேட்டார்.



Advertisement

“ஆமாம்மா! நானே ஒரு நிமிஷம் அசந்துட்டேன்! நமக்காக துடிக்குறானான்னு!”

புவனா, “பின்ன சம்பளம் தர முதலாளியை ஒன்னு சொன்னா கோபம் வரத்தானே செய்யும்!” கிடைக்கும் கேப்பில் எல்லாம் மனோகரை வேலைக்காரன் என பதிவு செய்துக்கொண்டிருந்தார்.

தனப்பாக்கியத்தோடு அன்பழகனும் சேர்ந்தே அவரை முறைத்தனர்.

Advertisement

“ரத்த சொந்தம் இல்லனாலும் தசை ஆடுது பாரு! அதுதான் பாசம்” என்றார் தனபாக்கியம்.

Advertisement

“ம்கும்! என் புள்ளையா இருந்தா இந்நேரம் அடிச்சுட்டு தான் மறுவேலை பார்த்துருப்பான்! இப்படி கையை ஓங்கி பாவனை எல்லாம் காட்டிருக்க மாட்டான்!” புவனா நொடித்தார்.

தனப்பாக்கியம் பதில் சொல்லும் முன்னே, “யாரு உன் மவன் தானே? இந்தாளுக்கு நல்லா வேணுன்னு, அவனே காசு கொடுத்து, கூட ரெண்டடி வாங்கிக்கொடுக்க திட்டம் போட்டுருப்பான்!” என்றதும், ஆர்த்தி ‘களுக்’கென சிரிக்க, மதன் அவள் தலையில் கொட்ட, அதற்கு அவள் கத்த என அந்த இரவு நேரம் ஆரவாரமாய் மாறியபோது, மேலிருந்து சொட்டு சொட்டாய் துளிகள் கொட்ட ஆரம்பித்தது.

‘மழை வரும் போலயே!’ என்ற எண்ணம் வரும்போதே இயல்பாய் அன்பழகனின் கண்கள் கௌசியை தான் தேடியது.

Advertisement

“பெரியவ எங்க?” என்றார்.

“உறக்கம் வருதுன்னு நேரமே போய் படுத்துட்டா!” என்று புவனா சொன்னது யாருக்கும் வேறாய் தோன்றவில்லை.

அறைக்குள் இருந்த கௌசிக்கு கண்களில் நீர் நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது.

கண்களின் நீர்சத்தே வற்றும் அளவுக்கு இந்த இருவாரங்களில் அழுது ஓய்ந்து விட்டாள். ஆனாலும் கண்ணீர் நின்ற பாடில்லை.

வலக்கையில் இருந்த பேனா கத்தியை அழுத்தமாய் பிடித்துக்கொண்டாள்.

அவ்வளவு தான்… இன்னும் சிறிது நேரத்தில் தன் கண்ணீருக்கெல்லாம் முடிவுக்காலம் கிட்டிவிடும் என்ற ஆசுவாசத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இடக்கை மணிக்கட்டில் அவள் கோடு போட சென்ற நேரம், அறை கதவு ‘படார்… படார்’ என அடித்தது.

உடல் தூக்கிவாரிப்போட, ‘இதோ வரேன்!’ என்ற அறிவிப்போடு கண்களை அழுத்தமாய் துடைத்துக்கொண்டாள். கையில் இருந்த கத்தியை மேசை மீது வைத்துவிட்டு வேக மூச்சுகளுடன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கதவை திறந்தவளுக்கு, அங்கே நின்ற மனோகரனை கண்டதும் கண்கள் விரிந்தது.

வந்தவன், “என்ன பண்ணிட்டு இருந்த?” என்றான் பதட்டமாய்.

“ஒ…ஒன்னும் பண்..ணலையே…” இந்த இரண்டு வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள்ளே குரல் திக்கி திணற, உடல் முழுக்க வியர்வை கொட்ட,

மனோகருக்கு அவளது தோற்றம் பூதாகரமாய் பயம் காட்டியது. லேசாக தலை கலைந்தாலே அத்தனை முறை கண்ணாடி முன் நின்று தன்னை சரிசெய்துக்கொள்பவள், இப்போது கலைந்த தலையும், நலுங்கிய உடையும், பொலிவற்ற முகமும் என்றிருக்க, ‘இவளுக்கு என்ன தான் ஆனது?’ என்ற குழப்பமே அவனை தன்னியல்பையும் மீறி அவள் அறை கதவை தட்ட வைத்திருந்தது.

அவள் ‘ஒன்றும் இல்லை’ என்று சொன்னாலும் அது உண்மையல்ல என்று அவன் மனம் அடித்து சொல்ல, “என்னமோ சரியில்லன்னு தோணுது எனக்கு. என்னன்னு என்கிட்ட மட்டுமாவது சொல்லிடேன்… எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் சரி பண்றேன்” என்றான் உறுதியான குரலில்.

அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். அவன் சட்டை பொத்தானை பார்க்கக்கூட அஞ்சியவளாய் தலை குனிந்திருந்தாள்.

அவள் முகத்தை நிமிர்த்தவில்லை என்றாலும் மௌனமாய் அழுகிறாள் என்பது தெரிய, மனோகருக்கு பதட்டம் இன்னும் தான் ஏறியது.

சிந்தனை எங்கெங்கோ போக, எந்த வகையில் அவளுக்கு துன்பம் நேர்ந்திற்கும் என யோசிக்க ஆரம்பித்தான்.

அதில் முதலாவதாக மனதில் வந்தது ‘அவன்’.

மனதில் தோன்றிய மறுகணமே, “அவன் மறுபடியும் உன்கிட்ட பேசுறானா!? உன்னை எதுவும் தொந்தரவு செய்றானா!? சொல்லு கெளசி…!” பரபரப்பாய் கேட்டவன், அவள் சொல்லும் முன்னே,

“நான் இங்கிருந்து போயிருக்கவே கூடாது… போகாம இருந்துருந்தா எனக்கு தெரிஞ்சுருக்கும்” என்று தன் தலையிலேயே அடித்துக்கொள்ள, கெளசியின் அழுகை சத்ததோடு வர ஆரம்பித்தது.

இதையே தான் அவளும் பலமுறை நினைத்திருந்தாள். ‘மனோ மாமா இருந்துருந்தா இப்படி நடந்திருக்காதே’ என்று… அவனும் அதையே சொல்லவும் அழுகை வெடித்தது.

அதுவரை அறை வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தவன், இப்போது அவள் கரம் பிடித்து அறைக்குள் இட்டுச்சென்று கதவடைத்தான்.

“கெளசி ம்மா, உனக்கு என்மேல இன்னமும் கோபமா? அதான் பேச மாட்டேங்குறியா?” என்றவன்,

“நான் ‘அவனை’ ஒண்ணுமே செய்யல கெளசி. அவனை அன்னைக்கு பிறகு பாக்கக்கூட இல்லை… எனக்கென்னவோ அவன் எங்கேயோ போய் விழுந்து வாரிட்டு வந்து உன்கிட்ட ‘சிம்பதி’ உருவாக்க, நான் அடிச்சுட்டதா பொய் சொல்லிருப்பான்” என்று சொல்ல,

அதையே தான் அந்த ‘ஹரி’யும் சொல்லிருந்தான்.

‘நீ என்னை தவிர்த்துட்டு போகவும் உன்னை என்கூட பேச வைக்கணுன்னு தான் அப்படி பொய் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு’

அவன் அப்படி சொன்னபோது அவளுக்கு கோபம் எல்லாம் வரவில்லை.

தனக்காக தானே இப்படி செய்தான் என்ற சிலாகிப்பு தான் தோன்றியது.

மௌனமாய் நின்றவளின் தோள் தொட்டு உலுக்கினான் மனோகர்.

“என்கிட்ட வாய் ஓயாம பேசிட்டே இருக்கியேன்னு பலமுறை எரிச்சல் ஆகிருக்கேன். இப்போ ஒருவார்த்தை உன்னை பேச வைக்க எனக்கு தொண்டை தண்ணி வத்துது…

தயவுசெஞ்சு என்னன்னு சொல்லு… இல்லனா கீழ போய் உங்கப்பாக்கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லுவேன்”

மிரட்டினாலாவது பதில் கிடைக்கும் என்றெண்ணி அவன் சொல்ல, அவள் அழுகை தான் விம்மி வெடித்ததே தவிர பதில் வந்தப்பாடில்லை..

மனோகருக்கு ஆயாசமாய் போனது.

‘இந்த பெண்ணிடம் எப்படிதான் உண்மையை வாங்குவது?’

அழும் அவளை கையாலாகாத நிலையில் வெறித்திருந்தான்.

“இப்ப என்ன எங்க அப்பாக்கிட்ட சொல்லிடுவீங்களா? சொல்லிக்கோங்க!” அன்று தன் முகத்துக்கு நேரே சலனமின்றி சொல்லிவிட்டு போனவள், இன்று ஒரு வார்த்தை கூட பேசாமல் அழுகிறாள் என்றால்…?

மனோகருக்கு அவள் அழுகை நொடிக்கு நொடி அவன் இதயத்தின் துடிப்பை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது.

ஏதோவொரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது அவனுக்கு. தொய்ந்துப்போய் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

வாய் திறந்து சொன்னால் கூட அது எப்பேர்ப்பட்ட இன்னலாய் இருந்தாலும் அவன் இத்தனை தளர்ந்துப்போயிருக்க மாட்டான். மனம் மார்கத்தை யோசிக்க தொடங்கிருக்கும். ஆனால், இப்போதோ ‘இதுவோ? அதுவோ? ஒருவேளை அப்படியோ?’ என பலவாறாய் யோசித்து எதையும் தெரிந்துக்கொள்ள முடியாமல் மனம் மத்தளமாய் கொட்டியது.

அழும் அவளை வெறுமையாய் வெறித்தவன், “வீட்டுல சொல்லிடுவேன்னு பயப்படுறியா? என்னால உனக்கு எதுவும் தொந்தரவு வரும்ன்னு தயங்குறியா? இல்ல என்கிட்ட சொல்லவே முடியாத எதுவுமா? எதுவா இருந்தாலும் சுருக்கமாவாது சொல்லிடுமா!” என்றான்.

“……..”

“நான் திட்டுவேன்னு யோசிக்குறியா?”

“………….”

“பேசு கௌசி! இப்படி அழாத!”

“……………”

அவள் அழுகை நிற்கவே இல்லை.

எதிரே நின்றவளின் கரத்தை சட்டென பற்றி இழுத்தான். இழுத்த வேகத்தில் அதை தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்தி, “நெஞ்சு நடுங்குது கௌசி!” என்று சொல்ல, அவன் இதயம் தாறுமாறாய் துடிப்பது அவள் கரத்தின் மீது அப்பட்டமாய் தெரிய, மறுநொடி, ஓங்கி எழுந்த விம்மலுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள் அவள்.

தன் நெஞ்சில் விழுந்து அழுபவளின் தலையை அழுத்திப்பிடித்தவன், ‘எந்தவொரு தீங்கும் இவளை அண்டியிருக்கக்கூடாது!’ என இருக்கும் அத்தனை கடவுளிடமும் முறை வைத்தான்.

சில நிமிடங்களில் கதறல் தேய்ந்து குறைந்து தேம்பலாய் மாற, அவள் சிகையை வருடிக்கொண்டிருந்தவன், தன்னிரு கரத்தாலும் அவள் முகம் பற்றி நிமிர்த்தினான்.

அவன் முகம் காணாது நிலம் பார்த்தவளை அதட்டி அவன் விழி காண வைத்தவன், “என்னனு சொல்லு! உன் மாமன்… நான் இருக்கேன்!!” என்று சொல்ல, புதிதாய் சுரக்கும் கண்ணீர் கன்னங்களில் வழிய, நடுங்கும் இதழ்கள் கொண்டு தன் துயரத்தை சொல்லி முடித்தாள் கௌசி.

சொன்னவளுக்கு பாரத்தை இறக்கி வைத்த ஆசுவாசம் என்றால், கேட்டவனுக்கோ இடியை விழுங்கிய அதிர்வு.

அந்த அறையில் கௌசியின் சன்னமான விசும்பலும், அறைக்கு வெளியே கொட்டும் மழையின் ஆரவாரமும் தவிர வேறு சப்தமில்லை.

முகத்தில் எந்தவித பாவனையும் இன்றி அமர்ந்திருந்தான் மனோகர்.

எத்தனை நிமிடங்கள் கடந்ததோ…? அவனே பேசினான்.

“இப்போ என்ன செய்யலாம்ன்னு இருக்க?”

“செத்து போகலாம்ன்னு இருந்தேன்” யோசிக்காமல் சொன்னாள்.

“ஓ! செத்துட்டா? எல்லாம் முடிஞ்சுடுமா?”

“எனக்கு வேற வழி தெரியலை மாமா” என்றவளுக்கு அழுகை தான் வந்தது.

“நான் ஒன்னு சொல்லுவேன்… செய்வியா?” என்றான் மனோ.

மறுநொடி வேகவேகமாய் தலையாட்டினாள்.

“இனிமே நீ அவனை பாக்கவோ பேசவோ கூடாது!”

மனோகர் சொன்னதற்கு உடனே சரி என்றாள்.

“ஹும்ம்!” பெருமூச்சோடு கட்டிலை விட்டு எழுந்தவன், “இப்படி எந்நேரமும் அழுது வடிஞ்சு ஒப்பாரி வைக்காம எப்பவும் போல சிரிச்சு பேசி கலகலன்னு இரு! இருக்க முடியலன்னா முயற்சி பண்ணு!!! இன்னொரு முறை உன்னை இப்படி நான் பார்க்கக்கூடாது” என்றான். அவள் மறுத்து பேச வர, “என்கிட்ட சொல்லிட்டல்ல? நான் பாத்துக்குறேன்… என்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா நான் சொன்ன மாதிரி இருக்க முயற்சி பண்ணு! இப்போ லைட்டை அமத்திட்டு நிம்மதியா தூங்கு” என்றவன் அறையை விட்டு சென்றுவிட்டான்.

அவன் சொன்னதாலோ இல்லை மனதை அழுத்திக்கொண்டிருந்ததை பகிர்ந்து விட்ட நிம்மதியினாலோ அயர்ந்து உறங்கினாள் கௌசி.

ஆனால், மனோகருக்கு தான் அது தூங்காவிரவாகி போனது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!