Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 20

காலையில் கௌசி கண்விழிக்கையில் மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மணியை பார்த்ததும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவளுக்கு மனம் முழுக்க மனோகரனிடம் பேச வேண்டும் என்பது மட்டுமே!!!

 

‘ஒருவேளை மாமா முடியாதுன்னு சொல்லிட்டாலும், நம்ம தெளிவா பேசிடனும்! அவர் கூட இருந்தா தான் நான் இயல்பா, நிம்மதியா, பாதுகாப்பா எல்லாத்தையும் தாண்டி சந்தோசமா இருக்கேன்!’

 



Advertisement

அரக்கபறக்க குளித்து நல்லதாய் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டவள், வெகு நாட்களுக்கு பிறகு கண்ணாடியில் முகம் பார்த்து தன்னை மிதமாய் அலங்கரித்துக்கொண்டாள்.

 

‘இனி மாமாக்கு பிடிச்ச மாறி இருக்கணும்!’ நினைத்தவளுக்கு தன்னை மீறி முறுவல் பூக்க, அறையை விட்டு வெளியே வந்தாள்.

Advertisement

 

Advertisement

மாடியை விட்டு இறங்கி அந்த மேற்க்கூரையற்ற முற்றத்திற்குள் அவள் கால் படும்போது, “உண்மையா மனோகரா இது? உண்மையா?” என கத்தும் அன்பழகனின் குரல் கேட்கவும் பதறிக்கொண்டு அவள் செல்ல, 

 

அங்கே அவரின் எதிரே கொஞ்சமும் குனியாமல், அவரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, “ஆமா! உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டிருந்தான் மனோகரன்.

Advertisement

 

அதை கேட்ட அன்பழகன் பேச்சற்ற ஒரு பார்வையை அவன்மீது வீச, அவரின் இருப்பக்கமும் வெற்றிகளிப்பில் நின்றிருந்தனர் புவனாவும், மதனும்.    

 

கௌசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எதற்க்காக அப்பா கத்த வேண்டும்? அதுவும் மனோகரனிடம்!? யாரிடம் கேட்பதென தெரியாது அவள் நிற்க, அருகே ஆர்த்தி நிற்பதைக்கண்டு, “என்ன ஆச்சு?” என்றாள்.

 

“அப்பா ஆபிஸ்ல இருந்து ஐஞ்சு லட்சம் பணம் திருடிட்டானாம்…” அசட்டையாய் சொன்னவளின் வார்த்தைகள் கௌசியை திடுக்கிட வைத்ததென்றால், “ஆமா உண்மைதான்!” என மனோ சொன்ன வார்த்தைகளின் பொருள் அவளை எல்லையற்ற திகைப்பிலாழ்த்தியது.

 

“ஏன்டா இப்படி செஞ்ச? காசு பணம் வேணுன்னா கேட்டுருக்கலாமே? தராமையா போயிருப்பேன்? இப்படி என் நம்பிக்கைல கை வைக்கணுமா நீ?” நெஞ்சில் இருந்து கிளம்பிய வருத்தம் அன்பழகனின் ஒவ்வொரு மூச்சிலும் வெளிப்பட்டது.

 

பேசாமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான் மனோ.

 

இது தவறு செய்து மாட்டிக்கொண்டவனின் தோரணை இல்லையே!!   

   

கௌசி அப்படி நினைக்க, அன்பழகனுக்கும் அப்படி தான் தோன்றியதோ!?

 

“உண்மையை சொல்லு! யாருக்காது குடுத்ததை கணக்கு எழுத விட்டுட்டியா?” 

‘ஆமாம்’ என சொல்லிவிட மாட்டானா என்ற நப்பாசை அவருக்கு.

 

“எந்த கணக்கும் விட்டுப்போகல! நான் தான் பணத்தை எடுத்தேன்!” என்றான் மனோ.

 

“பார்த்தீங்களா ப்பா! பணத்தை திருடுனதும் இல்லாம எப்படி திமிரா பேசுறான்?” மதன் ஏற்றிவிட, 

 

“அதான் சொல்லுவாங்களே! எதையோ குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது புத்தி குப்பை மேட்டுல பொறுக்கத்தான் போகும்ன்னு! சரியா தானே இருக்கு” ஜாடை பேசினார் புவனா.

 

“ஏன்டா எடுத்த?” அயர்ந்துப்போய் கேட்டார் அன்பழகன்.  

 

அவனிடம் பதில் இல்லை.

 

“சரி என்ன செஞ்ச அந்த பணத்தை?”

 

“செலவு பண்ணிட்டேன்” என்றான்.

 

“எவன் வீட்டு காசை எவன் செலவு செய்யுறது?” மதன் குரல் உயர்த்த, கௌசிக்கு பதறிக்கொண்டு வந்தது, எங்கே பேச்சுவார்த்தை கைகலப்பாகி விடுமோ என்று! அந்த அளவுக்கு மதனின் குரலும் உடல்மொழியும் இருந்தது.

 

ஆனால் மனோகரோ அப்படி ஒருவன் அங்கு இருப்பதாய் கூட மதிக்கவில்லை. பார்வை மொத்தமும் அன்பழகனிடம் மட்டுமே! 

 

“எதுவா இருந்தாலும் நீ இப்படி செஞ்சுருக்கக்கூடாது மனோகரா! என்கிட்ட சொல்லிருக்கலாம்! நானே குடுத்துருப்பேன்!” வருத்தமாய் சொன்னவரை, 

 

“என்னப்பா நீங்க? பணத்தை திருடிருக்கான்! அதுவும் எப்போ? ரெண்டு வருஷம் முன்னாடியே! இப்போ நான் பொறுப்பெடுத்து கணக்கு பார்க்கப்போய் உண்மை தெரிஞ்சுருக்கு!? திருடுனதும் இல்லாம அதை மறைச்சு நம்பிக்கை துரோகம் வேற செஞ்சுருக்கான்! அவன்கிட்ட போய் அமைதியா பேசிட்டு இருக்கீங்க? வீட்டை விட்டுப்போக சொல்லுங்கப்பா!” என்றான் மதன்.

 

ஆக, இதற்கு தானா இத்தனை நாளும் இந்த ‘பொறுப்பாளி’ வேடம்!

 

“அதானே! ரெண்டு வருஷம் முன்னாடியே கை வச்சவன், அதுக்கு பிறகு மட்டும் சும்மாவா இருந்துருப்பான்? இன்னும் எத்தனை லட்சம் போச்சோ? இதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்! வேலைக்காரனை எல்லாம் வைக்குற இடத்துல வைங்கன்னு! யாரு கேட்டா என் பேச்சை” புவனா பொரிந்துத்தள்ள, அசராமல் நின்றான் மனோகரன்.

 

“என்ன காரணமா எடுத்த மனோ? எதாவது என்கிட்ட சொல்ல முடியாததா?” அன்பழகன் கேட்க, 

‘பணத்தை திருடிவிட்டான்’ என்று சொன்னதுமே அவன் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறார் என்று அன்பழகனின் குணம் புரிந்த புவனாவும் மதனும் நினைத்திருக்க, இப்படி சோகமாய், வருத்தமாய், சாந்தமாய் பேசும் அன்பழகனின் பார்க்க பத்திக்கொண்டு வந்தது இருவருக்கும்.

 

“என்னப்பா நீங்க? நான் சொல்லிட்டே இருக்கேன் நீங்க அவன்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க? இதையே நான் செஞ்சுருந்தா நீங்க இப்படிதான் பண்ணுவீங்களா? இந்நேரம் அடிச்சு வெளுத்துருக்க மாட்டீங்க? சொந்த பையனுக்கு ஒரு நியாயம், வேலைக்காரனுக்கு ஒரு நியாயமா?” 

 

வார்த்தைக்கு வார்த்தை மனோவை ‘வேலைக்காரன்’ ‘வேலைக்காரன்’ என இருவரும் பேசுவதை தாங்க முடியாது, “அண்ணே! அவர் ஒன்னும் வேலைக்காரன் இல்ல!” என்றாள் கௌசி.

 

அவளை அற்பமென பார்த்த மதன், “ஏய் வாயை மூடிக்கிட்டு போடி” என்றான்.

 

“அப்பா எனக்கு இப்போவே ஒரு முடிவு தெரியனும்! இவன் செஞ்சது தப்பே இல்லன்னா நானும் இனி உங்கக்கிட்ட சொல்லாம பணம் எடுப்பேன்… என்னையும் நீங்க எதுவும் சொல்லக்கூடாது, சொல்லிட்டேன்” என்றான் மிரட்டல் போல.

 

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் அன்பழகன். மனோகரனின் தப்புக்கு, நியாயமாய் கோபம் வர வேண்டும். ஆனால் அவருக்கு வருத்தம் தான் மேலோங்கி இருந்தது. தான் எந்த அளவுக்கு அவன் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறோம் என்பதை அந்த கணம் தான் உணர்ந்தார் அவர்.

 

“பெத்த புள்ளையை கூட மாட்டை அடிக்குற மாறி அடிப்பாரு டா! ஆனா, அவனை ஒன்னும் சொல்ல மாட்டாரு! ஏன்னா அவன் தான் மொதோ பொண்டாட்டி உறவாச்சே!” சடைத்துக்கொண்டார் புவனா.

 

கௌசிக்கு பதட்டமாய் இருந்தது. மனோகரிடம் பார்வையால் கேட்கலாம் என்றால் அவன் கௌசியின் பக்கம் திரும்பக்கூட இல்லை. 

 

“அப்பா என்னதான் சொல்றீங்க?” மதன் விடாகொண்டனாய் நின்றான்.

     

“என்னடா செய்ய சொல்ற என்னை? என்ன செய்ய சொல்ற?” தெளிவற்ற கோபத்துடன் கத்தினார் அன்பழகன்.

 

“அவனை வீட்டை விட்டு போக சொல்லுங்க! அவனுக்கும் நமக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல!” என்று மதன் சொல்ல, கலங்கிப்போய் நின்றார் அவர்.

 

அவரது அந்த தோற்றமே புவனாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.

 

“அவன் போகலன்னா நம்ம போவோம்! அவன் இருந்தா நம்ம இனி இந்த வீட்டுல இருக்க தேவையில்லை! உங்க அப்பாவுக்கு யார் முக்கியம்ன்னு அவரே முடிவெடுக்கட்டும்! ஏய் ஆர்த்தி! என்ன வாய் பாத்துக்கிட்டு இருக்க? போய் புஸ்தகத்தை மூட்டை கட்டு! கிளம்புவோம்!” என புவனா படபடத்தபோது, 

 

“வீட்டை விட்டு போ!” என்றிருந்தார் அன்பழகன்.

 

‘யாரை சொல்கிறார்?’ என மதனும் புவனாவும் பார்க்க, அவர் மனோவிடம், “இனி உனக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை! போ!” என்றிருந்தார்.

 

அப்போதும் கூட மனோவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை!

 

அன்பழகன் அப்படி சொன்னதும் தான், புவனாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அன்னையும் புத்திரனும் யாருமறியாமல் கண்களால் சிரித்துக்கொண்டனர்.

 

“இனி இங்க வராத மனோ! போ இங்கிருந்து” வார்த்தைகளில் சுரத்தே இன்றி அன்பழகன் சொல்ல, “நீங்க சொன்னதை கேட்கணும்! உங்க பேச்சை மீற கூடாது! நீங்களே சொல்லாம உங்களை விட்டு போகக்கூடாதுன்னு எங்க அப்பா சாகும்போது சத்தியம் வாங்குனாங்க… அதை இப்போவரைக்கும் கப்பாத்திருக்கேன்! இனியும் அப்படிதான்!!!” என்ற மனோகரன், 

 

“இப்போ நீங்க சொன்னதால மட்டும் தான் இந்த வீட்டை விட்டு போறேன்!” என்றான்.

 

அவன் பேச்சில் துணுக்குற்ற அன்பழகன், “அப்போ நானா உன்னை துரத்தனும்ன்னு தான் பணத்தை எடுத்தியா?” என்று கேட்க, பதில் சொல்லாது சிரித்தவன், 

 

“அந்த பைக் என்னோட காசுல வாங்குனது தான்!” என்றுவிட்டு வெளியே செல்ல திரும்பினான்.

 

புவனாவுக்கு ஆயுள் தண்டனையில் இருந்து மீண்டு வெளியே வந்ததை போல அப்படி ஒரு உற்சாகம் உள்ளுக்குள்! 

 

அவன் வெளியே செல்வதை உள்ளார்ந்த நிம்மதியுடன் அவர் எதிர்நோக்க, நான்கடிகள் எடுத்து வைத்தவன், பின் நிதானமாய் திரும்பி, 

 

“உங்க பொருள் எதையும் நான் கொண்டு போகல! அதேமாறி என்னோட பொருளை நான் இங்க விட்டுட்டும் போகக்கூடாதுல?” என்றான் பொதுவாய். 

 

‘சும்மா போகாம இதென்ன பேச்சு?’ என எரிச்சலுற்ற புவனா, “உன்னோட பொருளு ஒண்ணுத்தையும் நீ இங்க விட்டுட்டு போகணும்ன்னு அவசியம் இல்லை! போறப்போவே கையோட கொண்டு போய்டு! அப்பறம் நாளைப்பின்ன அதை சாக்குவச்சுக்கிட்டு வந்து நிப்ப!!” என்றார்.

 

போனவன் மீண்டும் வந்துவிட்டால், அன்பழகனை நம்ப முடியாதே! இப்போது ஏதோ உணர்ச்சி வசத்தில் போக சொல்லிவிட்டார்… அதுவே பின்னாலும் வேலைக்கு ஆகும்ன்னு என்று சொல்ல முடியாதல்லவா! அந்த பதட்டம் புவனாவுக்கு.

 

“சரி, அப்போ என்னோடத என்னோடவே கொண்டு போறேன்!!” என்ற மனோகர், நிதானமாய் நேரே நடந்து வந்து, கௌசியின் கரத்தை பிடித்து, “வா!” என்றான்.

 

அதுவரை சுருங்கிப்போய் கிடந்த அவளது வதனம் நொடிப்பொழுதில் பூரித்து விகாசித்தது.

 

“மாமா?” என்றாள் நம்ப முடியாத ஆச்சர்யத்தில்.

 

“ரெண்டு நாள் முடிஞ்சுது! முடிவு கேட்டியே! இதான் அது!” என்றான் சேர்ந்திருந்த அவர்கள் கரங்களை காட்டி.

 

அவன் நடத்தை கண்டு ஒரு நிமிடம் திகைத்த புவனா, “ஏய்.. என்ன பண்ற? விடு அவ கையை! நீ யாரு அவளுக்கு? போடா மொதோ!” என்றார் பதறிக்கொண்டு.

 

ஆயுள் தண்டனையில் இருந்து தப்பித்து தூக்கு தண்டனையில் மாட்டிக்கொள்வோமோ என்ற பேரச்சம் அவருக்கு.

 

“நான் யாரா? உங்க பொண்ணு கழுத்துல இருக்க செயின் சொல்லும்… நான் யாருன்னு!!!” என்றவன், 

 

“மெதுவா கேட்டு வைங்க! நல்ல நாள் பாத்து கூட்டிட்டு போறேன்” என்று புவனாவிடம் சொன்னவன், 

கௌசியின் புறம் திரும்பி, தன் ஒற்றை கையால் அவள் காதோரமாய் கன்னம் பற்றினான்.

  

“சந்தோஷமா?”

 

அவன் முகத்தில் இருந்து அவள் கண்கள் நகரவே இல்லை. வாடாத புன்னகையுடன் தலையாட்டினாள்.

 

“இப்படி சிரிச்சுக்கிட்டே இரு! சீக்கிரமா வந்து கூட்டிட்டு போறேன்!” என்றான்.

 

அவளுக்கு துளிக்கூட வருத்தம் இல்லை. சந்தோஷமாய் தலையசைத்தாள்.

 

“ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதுல்ல?” அவன் கேட்க, அவள் என்னவென்று புருவம் சுருக்கிய நொடி, அவளது புருவ முடிச்சில் ‘சொத்’தென வந்து விழுந்தது ஒரு மழைத்துளி.

 

நிமிர்ந்துப்பார்க்க, அந்த முற்றத்தின் இரும்புக்கம்பிகளுக்கிடையே வானம் தன் துளிகளால் அவர்களை வாழ்த்த காத்திருக்க,

இருவர் முகமுமே சிரிப்பில் மின்னலென மின்னியது.

அவன் அவளிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்த தன் பைக்கில் ஏறி லேசான மழையில் நனைந்தபடி செல்லும் வரை பார்த்துக்கொண்டே நின்றாள் கௌசி.

 

செய்வதறியாத குழப்பத்தில் நின்ற புவனா, கௌசியின் தோள் பற்றி திருப்பி உள்ளிருந்த சங்கிலியை வெளியே இழுக்க, அதோடு சேர்ந்து கிடந்த மாங்கல்யத்தை கண்ட நிமிடம், தன் தலையில் இடி விழுந்ததை போல ஸ்தம்பித்து போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!