Skip to content
Post Views: 5,619
மனோகரனுக்கு இரண்டு நாட்கள் அவசாகம் கொடுத்தவள் அவனோடு வெளியே செல்வதை நிறுத்திக்கொண்டாள்.
அவனிடம் தெளிவான முடிவு தெரியாமல் அவன் கண் முன்னே செல்ல கூடாது என்று உறுதியாய் நினைத்தாள்.
Advertisement
அறைக்குள்ளேயே இருந்து நேரம் நகராமல் சண்டி செய்ய, கீழே இறங்கி கூடத்திற்க்கு சென்றவள், அங்கே யாரையும் காணாமல் கிச்சனுக்கு சென்றாள்.
அங்கே புவனா தனியாய் ஏதோ சமைத்துக்கொண்டிருக்க, வாசனை வேறு பலமாய் இருக்க, ‘வெள்ளிக்கிழமைல மீன் குழம்பா?’ என வியந்துப்போய் வேகமாய் சென்றவள், “ம்மா? என்ன இந்நேரம் மீன்குழம்பு? அதுவும் வெள்ளிக்கிழமை?” என்று கௌசி கேட்க,
Advertisement
Advertisement
அவளை திரும்பிக்கூட பார்க்காது, “சிவதாஸ் அண்ணன் பொண்ணு புள்ள பெத்துருக்கா! பால் சுறாவும், திருக்கை மீனும் செய்யுறேன்! பால் சுரக்கும்!” என்றார்.
அவர் சொன்னதில் ‘சிவதாஸ் அண்ணன் பொண்ணு’ என்றதே கௌசியை முகம் மலர செய்ய, “காயத்ரி வந்துருக்காளா ம்மா?” என்றாள்.
Advertisement
“ஆமா… அது உன் கூட தானே படிச்சது?” கேட்டுக்கொண்டே சமைத்ததை பாத்திரத்தில் மாற்றினார்.
“ஆமாம்மா…” என்றவள், “ம்மா… இதை நான் போய் குடுத்துட்டு வரவா?” என்றாள் ஆசையும் தயக்கமுமாய்.
சற்று யோசித்தவர், “அதுவும் சரிதான்! நீயே குடு! நான் போனா அந்த அண்ணி பேச்சுல புடிச்சுக்கும்” என்றுவிட்டு கூடையை அவள் கையில் கொடுத்தார்.
தன் பள்ளித்தோழியை காணப்போகும் ஆவலில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் அவளை காண ஓட்டமாய் நடந்தாள் கௌசல்யா.
வீட்டு வாசல் தாண்டி உள்ளே நுழைகையிலேயே அவள் கண்கள் தோழியை தான் தேடியது.
“அடடே, வாம்மா!” காயத்ரியின் அன்னையும் தந்தையும் அவளை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் நலம் விசாரிக்க, அவர்கள் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும் கண்கள் தோழியின் அறைப்பக்கமே தாவ,
அவள் பார்வையை உணர்ந்ததை போல, “குழந்தைக்கு பசியாதிட்டு இருக்காம்மா! சித்த பொறு” என்றார் காயத்ரியின் அன்னை!
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கதவு திறந்ததுமே, “காயு…” என அவள் ஓடி செல்ல, அவளுக்கு குறையாத உற்சாகத்தோடு, “கௌசி…!” என அணைத்துக்கொண்டாள் காயத்ரி. அதன் பிறகு தோழிகளுக்கே உரிய பேச்சுவார்த்தைகள் நடக்க, கௌசியின் மடியில் சுகமாய் படுத்துக்கிடந்தது காயத்ரியின் மகவு.
“என்ன ஸாஃப்ட் பாரேன்!!! பூவை விட மென்மையா இருக்கு”
குழந்தையின் கன்னத்தில் தன் சுண்டு விரலால் கோடு போட்டுக்கொண்டே, “நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு” என ஆசையாய் சொன்னாள் கௌசி.
“காலாகாலத்துல கல்யாணம் கட்டிருந்தா உனக்கே உனக்குன்னு புள்ள இருந்துருக்கும்! பொழுதுக்கும் கொஞ்சிட்டே இருந்துருக்கலாம் ல?” காயத்ரி கேட்ட கணம், கௌசியின் நெஞ்சில் ‘சுரீர்’ என எதுவோ பாய்ந்தது.
“என்ன அமைதியா இருக்க? வெட்கமா?” என்றவள், “நேத்து வந்து பூ வச்சுட்டு போனானுங்கலாமே?” என்றாள்.
கௌசி தலையசைக்க, “உனக்கு பிடிச்சுருக்கா அந்த பையன?” என்றாள் காயத்ரி.
கௌசிக்கு நடந்தது எதுவும் யாருக்குமே தெரியாதே! பள்ளி படிப்பு முடிந்ததும் மேற்ப்படிப்பிற்க்காக பெங்களூரில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். இது மட்டுமே ஊர் அறிந்தது…!
“உன்னை தான்டி கேட்குறேன்! அந்த பையனை பிடிச்சுருக்கா?” அமைதியாய் இருந்தவளின் தோள் பற்றி உலுக்கினாள் காயத்ரி.
மனோவின் முடிவு தெரியாமல் என்னவென்று சொல்வது என்ற தயக்கம் சூழ, “வீட்ல பேசிருக்காங்க!” என்றாள் பட்டும் படாமல்.
“ப்ச்! ஆனா வேஸ்டுடி நீ! வீட்லயே ஜம்முன்னு ஒரு ஆளை வச்சுக்கிட்டு வெளில போறேங்குற பாரு?” என்று அவளது வெந்த புண்ணில் வெந்நீரை கொட்டினாள் காயத்ரி.
“நீ உங்க மனோ மாமாவையே கட்டிக்கிட்டன்னா எத்தனை பெனிபிட்ஸ் இருக்கு தெரியுமா? உன் வீட்டை விட்டு போக தேவையில்லை, மாமியார் மாமனார் கொடுமை இல்லை, எல்லா நாளும் அம்மா வீட்டு சீராட்டல் கிடைக்கும்! இன்னும் எக்ஸட்டிரா எக்ஸட்டிரா….” அவள் சொல்லிக்கொண்டே போக,
‘கட்டுனவனையே எத்தனை முறைடி கட்ட முடியும்!’ என மனதுக்குள் நொந்துக்கொண்டாள் கௌசி.
“என்னை எல்லாம் என் மாமியார் எவ்ளோ பேச்சு பேசுனாங்க தெரியுமா? கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமா புள்ள இல்ல… காய்க்காத மரத்தை கட்டி வச்சுட்டாங்கன்னு ஏகப்பட்ட பேச்சு! ஒரு முறை மூணு மாசம் வரை இருந்து ஒன்னு கலைஞ்சு போச்சு!
ஷ்…ஷப்ப்பா! ஒரு முறை கரு கலைஞ்சா அடுத்து புள்ளையே பொறக்காதே! என் வம்சமே போய்டுசேன்னு அத்தனை ஆர்ப்பாட்டம்! இப்போ பொட்டைப்புள்ளைய பெத்துட்டேன்னு இன்னும் பாக்க கூட வரல! முதல்ல கலைஞ்சது ஆண் வாரிசா தான் இருக்கும்! திட்டம் போட்டு கலைச்சுடான்னு அபாண்டமா பேசிட்டு இருக்கு!!!’
காயத்ரி சொன்ன அவள் கதையெல்லாம் வீட்டிற்கு வந்து தன் கட்டிலில் படுத்த பிறகும் கூட காதில் கேட்டுக்கொண்டே இருப்பதை போல இருந்தது கௌசிக்கு.
‘புள்ளை உருவாகுறது எல்லாம் கடவுள் தர வரம்டி கௌசி! அதை போய் வேண்டாம்ன்னு யாராது சொல்லுவாங்களா? அப்படி சொல்லுறவ நல்ல பொம்பளையா இருப்பாளா என்ன?’
‘எத்தனை பொம்பளைங்க ஒத்த புள்ளைக்காக கோவிலுக்கும் ஆசுபத்திரிக்குமா தவம் கிடக்குறாங்க! அவங்களுக்கு கிடைக்காத பொக்கிஷம் நமக்கு கிடைக்குதுன்னா அதை பொத்தி பாதுகாக்க தானே தோணும் நமக்கு? வேண்டாம்ன்னு கலைக்கவா தோணும்? அப்படி ஒரு கல்லு மனசு எந்த பொண்ணுக்கு இருக்கு!?’
மனதுக்குள் ஒலித்த அவள் பேச்சிற்கு, “எனக்கு இருந்துச்சு! எனக்கு இருந்துச்சே!!!!” என்று வாய் விட்டு பிதற்றினாள் அவள். கண்ணீர் அவள் கண்களில் இருந்து கோடாய் வழிந்து காது மடல்களை நனைக்க ஆரம்பித்தது.
மனோ கட்டிய தாலியை புவனா அறுத்து வீச அன்றிரவோடு அந்த வீட்டின் நிம்மதி பறிபோனது.
கௌசி எந்நேரமும் விட்டதை வெறித்துக்கொண்டு அறைக்குள்ளே முடங்கிக்கிடந்தாள். அன்பழகனும் புவனாவும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக்கொள்ள, தனபாக்கியம் அவரது கயிற்று கட்டிலை விட்டு எழுந்திருப்பதே இல்லை! மதன் கல்லூரி விடுதியிலும், ஆர்த்தி விடுமுறையை தன் மாமன்கள் வீட்டிலும் கழித்தனர்.
என்ன நடந்தாலும் அந்த வீட்டின் வேலையாட்களுக்கு கூட எதுவும் தெரியாதபடி பார்த்துக்கொண்டார் புவனா.
அந்த நேரம் தான் அன்பழகனின் தொழில்கள் அத்தனையிலும் மனோகரன் தலை நீட்ட வேண்டியதாய் போயிற்று. எடுத்து செய்ய வேண்டியவர் முடங்கி கிடக்கும்போது, அவர் இடத்தில் இருந்து காரியங்களை நடத்த வேண்டிய பொறுப்பு அவனுக்கு தான் வந்தது. புவனா கூட தடுக்கவில்லை.
அப்போதும் கூட வேலைக்காரன் தானே? செய்யட்டும்! என்றிருந்தார் அவர்.
மனோகரன் சாப்பிட கூட நேரம் இல்லாது பம்பரமாய் சூழ்ன்ற காலம் அது!!!
சரியாய் இருபது நாட்கள் இப்படி போக, ஓர்நாள் வயிற்ரை பிடித்துக்கொண்டு குமட்டினாள் கௌசி. ஏனோ அதை சாதரணமாய் எடுக்க முடியவில்லை அவளாள்.
மூளை ‘சிந்தனை’ என்ற ஒன்றை துறந்தே பல நாட்கள் ஆகியிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு தன் நினைவடுக்கை புரட்டி, இறுதியாய் மாதவிலக்கான தேதியை கணக்கிட்டாள்.
நாற்பத்தி இரண்டு நாட்கள்…
ஒருமுறை…
இருமுறை….
மும்முறை…
எத்தனை முறை மாற்றி மாற்றி எண்ணினாலும் அதே கணக்கு!!!
அதிர்ந்து போகக்கூட அப்போது அவள் உடலிலும் மனதிலும் தெம்பில்லை.
‘இன்னும் எத்தனையை தான் தாங்க வேண்டும் ஆண்டவா!’ என கதற வேண்டும் போல இருந்தது.
கதறி மட்டும் என்ன ஆகிவிடும்!? கட்டுப்பாட்டை மீறி கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்தாள்.
இதற்கான முடிவு என் கைகளில் இல்லையே? விதைத்தவனிடம் தான் விடை கேட்க வேண்டும்! என்று தோன்ற யோசிக்காமல் கிளம்பிவிட்டாள்.
வீட்டில் உள்ளவர்களின் கண்ணில் படாமல் பின்வாசல் வழியே இறங்கி தோப்பின் தடத்தில் வேக வேகமாய் நடந்தாள். எதிர்ப்பட்ட மினிபஸ்ஸில் ஏறி அவள் பள்ளியின் பேருந்து நிறுத்ததில் இறங்குகையில் அறை மணி நேரம் கடந்திருந்தது.
அவ்வளவு நேரம் இருந்த வேகமும், தைரியமும் பள்ளிக்கூடத்தை பார்த்ததும் வடிந்துப்போக, அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
எத்தனை நாட்கள், இதே இடங்களில் சிரிப்பும் துள்ளலுமாய் சுற்றி வந்திருப்பாள்?
கவலைகள் அற்ற கன்னிப்பருவத்தினை திகட்ட திகட்ட அனுபவித்திருப்பாள்?
எல்லாம்… எல்….லாம்…. மொத்தமாய் பறிபோனதே!
ஆர்வமான பார்வைகளையும், ஆசையான சீண்டல்களையும் கண்டதே இல்லையா அவள்? இதுவரை எத்தனை பேர் அவள் பின்னே வந்திருப்பார்கள்? பேச முயன்றிருப்பார்கள்? காதல் என்ற போர்வையில் தூது விட்டிருப்பார்கள்? அப்போது எல்லாம் தடுமாறாது கடந்து வந்த மனதுக்கு இப்போது மட்டும் என்ன கேடு வந்ததாம்?
‘பொண்ணு சிரிச்சுச்சு… போரு வந்துச்சு!’ மகாபாரதத்தை பற்றி தனப்பாக்கியம் அடிக்கடி இப்படி சொல்லுவார். அப்போதெல்லாம் “ஒரு பொண்ணு சும்மா சிரிச்சா உடனே போர் வந்துடுமா? அட போங்க ஆத்தா!” என்பாள்.
‘நான் சிரிச்சது தான் எவ்ளோ பெரிய தப்பு?’ கோடி முறையேனும் இதை நினைத்து கதறியிருப்பாள்.
தள்ளாடும் கால்களை கடினப்பட்டு இழுத்துக்கொண்டு அந்த போட்டோ கடையின் வாசலில் நின்றாள் கௌசி.
உள்ளே அவன் இருப்பான் என்பதற்கு எந்தவித நிச்சயமும் இல்லை.
இந்த இடத்தை விட்டால் அவனை எங்கே சென்று பார்ப்பது என்றுக்கூட அவளுக்கு தெரியாது! அதை விட மேலாய் அவன் பேரை தவிர ஒன்றுமே தெரியாதே அவளுக்கு!
தன் நிலையை நினைத்து தானே அருவெறுத்துப்போனாள்.
“வாங்க ம்மா! பாஸ்போர்ட் சைஸ் ஆ? புல் சைசா?” நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் வந்து மரியாதையாய் கேட்க, எச்சில் கூட்டி விழுங்கி, “ஹரி?” என்றாள்.
அவன் பேரை சொன்னதுமே எதிரே நின்றவரின் முகத்திலும் உடலிலும் அத்தனை மாற்றம்!
“நீ யாரு?”
“நான் கௌசி! ஹரிக்கு என்னை தெரியும்! அவரை பாக்கணும்!” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாள்.
“ஹரின்னு இங்க யாரும் இல்ல… கிளம்பு” முகத்தில் அடித்தார் போல பேசினார் அவர்.
“இல்ல.. இங்க தான் வேலை செய்யுறாரு! எனக்கு தெரியும்!” அவள் சொல்லும்போதே, ‘பிரிண்டிங் ரூம்’இல் இருந்து லேசாக நொண்டிக்கொண்டு வந்தான் ஹரி.
“அண்ணே, இது ஓகே வா?” கேட்டுக்கொண்டே வந்தவன், கௌசியை கண்டதும் நடுக்கத்தில் கையில் இருப்பதை தவற விட்டான்.
முகம்மெல்லாம் ஆங்காங்கே வீங்கி, நெற்றியில் ஒரு பெரிய கட்டு, இடக்கையில் போட்ட கட்டு கழுத்தின் தயவில் தொங்கிக்கொண்டிருந்தது. காலை விந்திக்கொண்டே நடந்ததை தான் பார்த்தாளே!
கௌசியை கண்டதும் அவன் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது. பின்னே யாரும் இருக்கிறார்களா என அவன் கண்கள் அலைமோத, “நான் தனியா தான் வந்தேன்! உங்கக்கிட்ட முக்கியமா பேசணும்!” என்றாள்.
அந்த ‘அண்ணன்’காரன் முடியவே முடியாது என்று சொல்ல, இவளும் பிடிவாதமாய் இருக்க, கடை முன்னே காட்சிபொருளாக வேண்டாம் என்ற எண்ணத்தில், கடைக்கு பின்னே இருக்கும் காலிமனையில் நிற்கும்படி அனுப்பிவைத்தான்.
ஹரி தனியாக வருவான் என அவள் நினைக்க, அந்த அண்ணனும் உடன் வந்தார். அருகே வர வர தான் தெரிந்தது… ஹரியின் உடன் அவர் வரவில்லை… அவர் உடன் தான் ஹரி வருகிறான் என்று!!!
“என்ன சொல்லணுமோ அதை என் முன்னாடியே சொல்லு! சீக்கிரம்” என்றார் அவர்.
ஹரி அவள் முகத்தை கூட நேராக பார்க்கவில்லை. அன்று கிடைத்த அடியில் வெகுவும் பயந்துபோயிருக்கிறான் என்பது பார்த்தாலே தெரிந்தது.
கௌசியை திருமணம் செய்தால் இந்த அடி எல்லாம் விழும் என்று தெரிந்து தான் அவளை வீட்டை விட்டு வர சொன்னதே!!!
அடித்தால் தாங்கிக்கொள்வோம் என்று நினைத்திருந்தான்… ஆனால், இப்படி உயிரே போகுமளவு வலிக்கும் என தெரியவில்லை. வாங்கிய அடிகள் அப்படி!!!
“சீக்கிரம் சொல்லு!” அவர் அவசரப்படுத்த,
ஹரியை பார்த்தவள், “நான் கர்ப்பமா இருக்கேன்னு நினைக்குறேன்!” என்றாள்.
அந்த கணம் ஹரியின் அதிர்ச்சியை வார்த்தைகளில் வடிக்க இயலாது. கணப்பொழுதில் அவன் உடல் வியர்வையில் குளிக்க, கைகால்கள் எல்லாம் நடுக்கம் எடுக்க, விட்டால் மயங்கி விழுந்திருப்பான்!
அவன் அண்ணன், “அதை எதுக்கு இவன்கிட்ட சொல்ற?” என்றார் இடைப்புகுந்து.
“யார் காரணமோ அவர்கிட்ட தானே சொல்லணும்?” நிமிர்வாய் கேட்டவளை, அசூயையுடன் பார்த்தவர், “உனக்கு தான் உன் வீட்டோட இருக்கவன் கூட கல்யாணம் ஆகிடுச்சாமே! அவனோட ஒரு மாசம் இருந்துட்டு வந்து பலியை இவன் தலைல போடுறியா?” என்றார்.
கௌசி விதிர்விதிர்த்து போனாள்.
‘என்ன சொல்லிவிட்டார் இவர்?’
“எனக்கு கல்யாணம் ஆச்சுனு யார் சொன்னா?”
“உன்னை கட்டுனவன் தான் வந்து சொன்னான்! அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இனி அவளை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு!”
தனக்காக தான் மனோ செய்திருக்கிறான் என்றது வருடலாய் இருந்தாலும், “ஹரி! உங்களுக்கே தெரியும் நமக்குள்ள நடந்தது?” என்றாள் கௌசி.
ஹரியை பேசவிடாத அவள் அண்ணனோ, “உன் வயித்துல இருக்குறதுக்கு அப்பன் என் தம்பிதாங்குரியா நீ? சரி, எங்க நடந்துச்சு? எங்க போய் ரூம் போட்டீங்க?” என்றிட, “அண்ணே…” என அவர் கரத்தை அழுத்தினான் ஹரி.
“சும்மா இருடா! இப்போ போலிஸ் ஸ்டேஷன் போனா எல்லாம் சொல்லிதானே ஆகணும்… இங்கேயும் சொல்லட்டும்!”
அவமானத்தில் துடித்த உதடுகளை அடக்கிய கௌசி, “போனமாசம் இனி என்னை பார்க்காதீங்க! நமக்குள்ள ஒன்னும் கிடையாதுன்னு சொல்லிட்டு போக உங்க கடைக்கு வந்தேன்! வெளில ரொம்ப மழை… எனக்கு அன்னைக்கு தலைவலி வேற! உங்க தம்பி தான் ஏதோ மாத்திரை குடுத்தாரு! போட்டா சரி ஆகிடும்ன்னு சொல்லவும் வாங்கிக்கிட்டேன்! ஆனா, மாத்திரை போட்ட கொஞ்ச நேரத்துல தலை சுத்துச்சு! மயக்கமா வந்துச்சு! அப்பறம் நடந்தது எனக்கு தெரியாது… கண் முழிச்சப்போ ‘ஒரு வேகத்துல தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சுடு’ன்னு உங்க தம்பி என் கால்ல விழுந்து அழுதுட்டு இருந்தாரு!” அழுதுக்கொண்டே அவள் சொல்ல,
“என்ன பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் படம் காட்டுறியா? மயங்கிட்டாளாம்… ஒன்னும் தெரியாதாம்!!! யாருக்கிட்ட கதை விடுற? ஒழுங்கா இந்த புள்ளைக்கு எவன் அப்பனோ, அவன்கிட்ட போய் பேசு…” என்றவர், “டேய்.. வாடா” என ஹரியின் கரம் பற்றி இழுத்தார்.
“ஹரி! நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே தெரியும் தானே? சொல்லுங்க அவர்க்கிட்ட! பேசாமையே நின்னா எப்படி?”
குனிந்த தலை நிமிரவில்லை அவன்.
“ஏய் மொதோ போ இங்கிருந்து… ஒரு ஆம்பளை கிடைச்சுட கூடாது! நாக்கை தொங்கப்போட்டுட்டு அலையுறது! ச்சை!” என்றவர், “வாடா!” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
அவர் பேச்சில் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அருவருத்து நின்றாள் அவள்.
இயலாமையிலும் அவமானத்திலும் கூனிக்குறுகி தேங்கிய விழிகளுடன் மன்றாடலாய் அவள் ஹரியை பார்க்க, “சும்மா ஒரு தடவை ல புள்ள வருமா?” என்றான் அவன்.
“என்ன பேசுற நீ?” சீறினாள்.
“ப்ச்! நீ இன்னொருத்தன் பொண்டாட்டி! இப்படி வந்து என்கிட்ட பேசுறதை யாராவது பாத்தா எனக்கு தான் பிரச்சனை… என்னால அடி தாங்க முடியாது… விட்டுடு!” என்றான் கையெடுத்து கும்பிட்டு.
“அப்போ இந்த புள்ளையை என்ன செய்ய?” கண்களை துடைத்துக்கொண்டு கோபமாய் கேட்டாள்.
“அது என் புள்ளைதான்னு என்ன ஆதாரம்? ஒருவேளை உனக்கும் அந்த மனோ…” அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவன் செவிப்பறை கிழியும் அளவு ‘அறை’ விட்டவள்,
“ச்சீ!” என்று அவன் முகத்தருகே காரி உமிழ்ந்துவிட்டு வந்ததை விட வேகமாய், நெஞ்சில் ஒரு உறுதியோடு நடந்தாள்.
முழுதாய் ஒருநிமிடம் நடந்திருப்பாள்…
காரில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு தூரத்து பச்சையை பார்த்தபடி நின்றிருந்த மனோகரனை கண்டதுமே, அவள் நெஞ்சின் பாரம் எல்லாம் சுமை தாங்காது வடிய, கதறிக்கொண்டு அவன் நெஞ்சில் விழுந்தாள் அவள்.
அழுகை அடங்கும் வரை அப்படியே நின்றான். பதிலுக்கு அவளை அணைக்கவோ, ஆறுதல் சொல்லவோ முயலவில்லை.
சாலையில் போகும் ஒன்றிரண்டு வாகன ஒலியில் அவளே தன்னை மீட்டுக்கொண்டு காரில் ஏறப்போக, “தெளிவா ஒரு முடிவு செஞ்சுட்டு ஏறு!” என்றான் அவன்.
அவன் நிற்கும் தோரணையிலேயே அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என புரிந்துப்போனது அவளுக்கு.
ஒருநிமிடம் முழுதாய் கண்மூடி நின்றவள், கண்களை திறந்தபோது, “எனக்கு இது வேண்டாம்!” என்று தீர்க்கமாய் சொல்லியிருந்தாள்.
அவள் முடிவை பற்றி எதுவுமே பேசவில்லை அவன். இருவரும் காரில் ஏறினர்.
சில நெடிய நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது.
குரலை செருமினான் மனோகர்.
“ஒருவேளை அவன் இது என் குழந்தைன்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சுருப்ப?” என்றான்.
அவன் கேட்ட பிறகே யோசித்தாள்.
‘என்ன செஞ்சுருப்பேன்?’
“அவனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சு வந்தியா?” அவன் கேட்ட கணமே, ‘ச்சீ..ச்சீ’ என மனம் அசூயை கொண்டது.
“வேற எதுக்காக இதை அவன்கிட்ட சொல்ல வந்த?”
“தெரியல மாமா! உன்னோட தப்பு தானே இது! இதுக்கு ஒரு வழி சொல்லுன்னு கேட்கணும்ன்னு தோனுச்சு!”
“என்ன வழி சொல்லுவான்னு நினைச்ச!?” அவன் கேட்க, “தெரியல மாமா!!!” என்றாள் தேம்பிக்கொண்டே… பதினேழு வயதுக்கு இதற்குமேல் என்ன யோசிக்க தெரியும்?
ஆழமாய் மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான் மனோகரன்.
பின்னே, “நான் இப்போ சொல்லப்போறதை உன் மனசுல ஆழமா பதிய வச்சுக்கோ! அது உன் மனசுல எப்போவும் இருக்கணும்! புரியுதா?” என்றான்.
“ம்ம்ம்…”
“இந்த வயசுல காதல்ன்னு நினைச்சு தடுமாறுறது… எது காதல்ன்னு தெரியாம தப்பு பண்றது… அந்த தப்போட பலனை வயித்துல சுமக்குறது… இது எல்லாமே அந்த வயசோட போகாது! ஆயுசுக்கும் இருக்கும்!
இதை தான் ‘பழி ஓரிடம்.. பாவம் ஓரிடம்’ன்னு சொல்வாங்க!
நீ கெட்டுப்போனவ! கற்பை இழந்துட்ட! செகன்ட் ஹேன்ட்… இந்த வார்த்தை எல்லாம் நீ கண்டிப்பா வாழ்க்கைல ஃபேஸ் பண்ற சூழ்நிலை வரும்!
அப்படி வரப்போ… உன்னை என்னவோ கறந்த பால் மாதிரியும்… கெட்டு போய் குப்பைல வீசிட்ட மாதிரியும் நீ நினைக்கவே கூடாது!
அப்படி கெட்டுப்போச்சுன்னு சொல்ற பால்ல கூட விதவிதமா பலகாரம் செய்றாங்க! இந்த உலகத்துல எதுவுமே வேஸ்ட் இல்லை!!! முக்கியமா பொண்ணுங்க!!
அவங்க உடம்பை வச்சு கற்பை நிச்சயிக்கக்கூடாது! பேசுறவங்க வாயெல்லாம் அடைக்க முடியாதுன்னாலும், குறைஞ்ச பட்சம் உன் மனசுல, ‘நீ எந்த விதத்துலயும் மோசம் இல்ல’ன்னு பதிய வை!
போற வழில சேறு கிடக்குறதை பார்க்காம மிதிச்சுட்ட… அசிங்கம் உன் காலுல ஒட்டிக்கிச்சு! அதை கழுவுனா சரி ஆகிடும்… இவ்ளோதான் இது!!! இது மட்டும் தான்!!!
தேவையில்லாம அதிகமா யோசிச்சு குழம்பாத!!! கடைசியா உன் முடிவை இன்னும் ஒருமுறை யோசி! பின்னாடி அவசரப்பட்டுட்டோம்ன்னு தோனக்கூடாது!!!” இத்தனை நீளமாய் நிதானமாய் தெளிவாய் சொன்னவனின் வார்த்தைகள் ஆணி அடித்ததை போல அவள் மனதில் பதிய, புது தைரியம் பிறந்தது அவளுக்கு.
“நான் தெளிவா இருக்கேன்!” என்றாள் கௌசி.
மனோகரன் ஒரு முடிவோடு காரை வீட்டை நோக்கி செலுத்தினான். வீட்டிற்குள் இருவரும் நுழைந்த மறு கணம் முதல் நடந்ததெல்லாம் இப்போது நினைக்கையில் கூட கௌசியின் நெஞ்சை தடதடக்க வைக்கும்.
மனோகரன் விஷயத்தை சொன்னபோது அந்த வீட்டில் யார் அதிகம் உடைந்தனர், யார் அதிகம் அதிர்ந்தனர் என்ற பாகுபாடே இன்றி மூன்று பெரியவர்களுமே ஸ்தம்பித்து நிற்க, தனபாக்கியம் தளர்ந்துப்போய் கீழே அமர்ந்துவிட்டார்.
நோய் நொடியில்லாத கட்டுகோப்பான தேகம் கூட, சில நாட்களாக மனதின் சுமை கூட கூட, தளர ஆரம்பித்திருந்தது.
கண்ணீர் வறண்டு போன கண்களுடன் நின்றிருந்தாள் கௌசி.
இப்போது என்ன நடக்கும்? என்பது அவளுக்கு தெளிவாய் தெரியும்! அடிக்கு அஞ்சவில்லை அவள்!
பெற்றவர்கள் முன்னே இப்படி ஒரு நிலையில் நிற்பதை எண்ணியே குறுகிப்போயிருந்தாள்.
“எதுவும் முடியலையா இன்னும்?” சோர்ந்துப்போய் கேட்ட புவனாவை பார்த்து மனோவுக்கே கஷ்டமாக இருந்தது.
எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டும், திட்டிக்கொண்டும் அதிகாரமாய் சுற்றியே அவரை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஓய்ந்த தோற்றத்தில் பார்க்க சங்கடத்தை கொடுத்தது.
அன்பழகன் மெல்ல அடியெடுத்து வைத்து அவளிடம் வந்து, “இதனால தான் அன்னைக்கு இவனை கட்டிக்க மாட்டேன்னு சொன்னியா?” என்றார்.
கௌசி ‘ஆம்’ என தலையசைத்தாள்.
அவள் தலை அசைந்த செணம், அன்பழகனின் முறம் போன்ற கைகள் அவள் பட்டு மேனியில் பாய ஆரம்பித்தது.
‘இங்கு தான்’ என்றில்லாமல், கண்மண் தெரியாமல் அடித்து வீசினார். கையில் கிடைப்பதை கொண்டெல்லாம் அவளை அடிக்க, அவரது இந்த கோரதாண்டவத்தை மனோகரானால் கூட தடுக்க இயலவில்லை. வெறிக்கொண்டவர் போல அடி விளாசினார்.
பேத்தியை அடிப்பதைக்கண்டு தனப்பாக்கியமும் தன் தள்ளாட்டத்தை மறைந்து தடுக்க வர, மூவர் சேர்ந்து பிடித்தும் கூட அவரிடம் இருந்து கௌசியை காக்க முடியவில்லை.
முற்றத்தில் இருந்த பித்தனை பாத்திரங்கள் கூட அவள் மீது விழ, அது கொடுக்கும் வலியை விட, அன்பழகனின் வார்த்தைகள் கொடும் சவுக்கடியை தான் கெளசியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பெற்ற தந்தையிடம் இருந்து வரக்கூடாத சொற்களை எல்லாம் வீசினார். கேட்கவே காது கூசியது.
இதற்கு என்னை இப்படியே கொன்றுவிட்டால் என்ன? என எண்ணுமளவு வீரியமுடன் வெளிப்பட்டன அவர் வார்த்தைகள்.
மொத்தத்தில் அவளை ஒரு மூன்றாம் தர பெண்ணாக உணர வைக்கும் அளவுக்கு வார்த்தைகளால் வதைத்தார்.
இடைவிடாத அடியை தாங்க முடியாது, மனதின் சோர்வும் சேர அப்படியே மயங்கி விழப்போனவளை இறுதியாய் அவர் கோபத்தில் பிடித்துத்தள்ள, தடுமாறியவள், மனோ வந்து பிடிக்கும்முன்னே அங்கிருந்த ஆட்டுக்கல்லில் நேர்க்குத்தி விழுந்தாள்.
நீட்டிருந்த கல்லின் கணமான கைப்பிடி அப்படியே அவள் அடிவயிற்றில் குத்த, மயங்கி விழுந்தவளின் கால் தாண்டி ஓடியது உதிரம்…!
அவ்வளவு தான் அன்பழகனின் ஆட்டம்!
குருதியை பார்த்ததும் கொதிப்பு அடங்கி, சமைந்து நிற்க,
“ஐயோ கௌசி…” மாரில் அடித்துக்கொண்டு அவளை அள்ளிக்கொள்ள புவனா விரைய, மறுப்பக்கம் இதெயெல்லாம் காண சகிக்காது நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்டார் தனபாக்கியம்.
இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, கௌசிக்கு முறையான கருகலைப்பும், தனபாக்கியதிற்கு முதலுதவிவும் ஆரம்பமாக, சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், ‘சிவியர் கார்டியாக் அரஸ்ட்! எங்களால காப்பாத்த முடியல’ என்று கையை விரித்து விட்டார்.
பிரதேமற்ற சாவு வீடாய் அதுவரை இருந்தது, அன்று பிரேதத்துடன் ஊரார் வந்து போக சாவு வீடாய் மாறியது.
இறப்புக்கு வந்த அன்பழகனின் ஒன்று விட்ட அத்தை விஷயம் அத்தனையும் கேள்விப்பட்டு, ‘இனி இவ இங்க இருக்க வேண்டாம்! கொஞ்ச நாள் என்னோட வச்சுக்குறேன்!’ என அழைத்து சென்றுவிட்டார்.
வீட்டில் தன்னுடன் மட்டும் இருந்தால் சரிவராது, அவள் வயது ஆட்களுடன் சகஜமாய் பழகட்டும் என்று விடுதியில் சேர்ப்பித்தார். அது பெண்களுக்கான பிரத்யேக கல்லூரி ஆனதால் அந்த நான்கு வருடங்கள் கௌசி தன்னை சமன்ப்படுத்திக்கொள்ள எதுவாய் அமைந்தது.
மாதம் ஒருமுறை அவளுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் விடுதி வந்து சேரும்! கொண்டு வருவது மனோகரன் தான் என்றாலும் அவன் முகத்தைக்கூட பார்க்க முடியாது!
அறுத்து வீசினாலும் கட்டியது கட்டியது தானே!? என்ற நினைவில் ‘எனக்கு மாமன் போதும்!’ என்ற பிடிப்பில் நாட்களை கடத்தியவளுக்கு மனோவின் முடிவு என்னவாய் இருக்கும்? தன் தலையெழுத்து எப்படி தான் அமையும்? என தவிப்பாய் இருந்தது.
பழசை எல்லாம் நினைத்து நெஞ்சம் புழுங்கியவள், கன்னங்களின் ஈரத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, “இன்னையோடு நான் கொடுத்த ரெண்டு நாள் முடியுது! நாளைக்கு ரெண்டுல ஒன்னு கேட்டுடணும்!” என்ற வைராக்கியத்தோடு உறங்கிப்போனாள்.
விடியல் அவளுக்கு வேறு ஒன்றை வைத்துக்கொண்டு காத்திருந்தது.
error: Content is protected !!