Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 7 4

“சென்னைக்கு போன ஆதவன் அவன் நண்பனோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானாம். ரங்கன் வந்து சொல்லிட்டு போனான். நானும் உன் அப்பாவும் இப்ப தான் அங்க போயிட்டு வரோம். அந்த பொண்ணையும் பாத்தோம். அண்ணன் இன்னைக்கு சாயங்காலம் வரவேற்பு வச்சிருக்கு”

“அம்மா நீ பொய் தானே சொல்ற?”, என்று நடுக்கத்துடன் கேட்டாள் பிரியா.



Advertisement

“கூறு கெட்ட கிறுக்கி, உண்மையைத் தான் டி சொல்றேன். நம்ம தலைல கல்லைத் தூக்கிப் போடுவானு நான் கனவா கண்டேன்? உன் ஆசை அம்மாவுக்கு தெரியும் கண்ணு. நானும் உன்னை ஆதவனுக்கு கட்டிக் கொடுக்க தான் ஆசைப் பட்டேன். இப்படி ஆகும்னு யோசிக்கலையே?”

“அம்மா எனக்கு கஷ்டமா இருக்கு மா”

Advertisement

Advertisement

“விடு பிரியா, நடக்குறது தான் நடக்கும். நீ இப்ப இயல்பா இருக்கணும். உன்னோட சின்ன நடவடிக்கை கூட மத்தவங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். போ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு”, என்று வேணி சொன்னதும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அறைக்குள் சென்ற பிரியா விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டாள். தன்னுடைய காதல் பைத்தியக்காரத் தனமானது என்று அவளுக்கு புரிந்தது. ஆனால் அதை நம்பத் தான் அவள் மனதால் முடிய வில்லை.

Advertisement

மகளை அப்படி விட்டுச் சென்றால் ஏதாவது செய்து கொள்வாளோ என்று பயமாக இருந்தது வேணிக்கு. சக்தியும் செல்வியும் எழுந்து வந்ததும் அவர்களுக்கு விஷயத்தை சொல்ல அவர்களுக்கும் திகைப்பு தான்.

செல்வி உடனே வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்ல “போய் குளிச்சிட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க. அங்கயே சாயங்காலம் வரைக்கும் இருந்துக்கோ செல்வி. அண்ணிக்கு உதவியா இருக்கும். அதுக்கப்புறம் பங்சனுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து வேற சேலை மாத்திக்கோ. இல்லைன்னா சேலையை அங்கயே எடுத்துட்டு போயிரு”, என்று வேணி சொல்ல அத்தையை நன்றியோடு பார்த்தவள் குளிக்கச் சென்றாள்.

முதலில் முகிலை தயார் செய்து வேணி அருகே அமர்ந்து டி‌வி பார்க்கச் சொன்ன செல்வி குளிக்கச் சென்றாள்.

சக்தியும் செல்வியும் குளித்து முடித்து வரும் போது விஸ்வமும் கிளம்பி வந்தார். வேணி வந்ததில் இருந்து அப்படியே இருக்கவும் “நீ வரலையா வேணி?”, என்று கேட்டார் விஸ்வம்.

“பாப்பா இன்னும் எழுந்துக்கலைங்க. வீட்ல யாரும் இல்லைன்னா பயந்துருவா. அவ எந்திச்சதும் ரெண்டு பேரும் கிளம்பி வரோம். நீங்க எல்லாரும் போங்க”, என்று சொன்னாள் வேணி. அதனால் மற்றவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.

இங்கே வீட்டுக்கு வந்ததும் சக்தி, விஸ்வம், செல்வி, முகில் நால்வரும் சிந்துவைக் காணச் சென்றார்கள். ரங்கநாயகி அவர்களை சிந்துவுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்.

சிந்துவின் அழகும், அமைதியான குணமும், மிரண்ட பார்வையும் கண்டு செல்விக்கு அவளை அதிகம் பிடித்து விட்டது. தன்னுடைய தம்பிக்கு பொருத்தமான பெண் என்று எண்ணிக் கொண்டாள். ஆண்கள் இருவரும் சிந்துவிடம் சாதாரணமாக பேசி விட்டு ரத்தினத்துக்கு உதவச் சென்றார்கள்.

“முகில், நீ பாட்டி கூடயும் அத்தை கூடயும் இரு”, என்று சொல்லி விட்டு மங்கையை தேடிச் சென்றாள் செல்வி.

“அத்தை நீங்க எப்ப எங்க வீட்டுக்கு வந்தீங்க? மாமா கூடவா வந்தீங்க? எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?”, என்று கேட்ட முகிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் சிந்து. இருவர் பேசுவதையும் சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் ரங்கநாயகி.

“செல்லக் குட்டி, நானும் உன் மாமாவும் நேத்துக் கிளம்பும் போது நல்லா இருட்டு டா. எல்லா கடையையும் மூடிட்டு போயிட்டாங்க. அதனால தான் உனக்கு ஒண்ணும் வாங்கலை. நாளைக்கு உனக்கு என்ன வேணுமோ அதை அத்தை வாங்கித் தரேன் சரியா?”, என்று கேட்டாள் சிந்து.

“நிஜமாவா?”

“ஆமா டா செல்லம், உனக்கு என்ன பிடிக்கும்னு சொன்னா அத்தை பிராமிசா வாங்கித் தருவேன்”

“அருண் அண்ணாவுக்கும், அவந்திகாவுக்கும் வாங்கித் தருவீங்களா?”

அருண், அவந்திகா யார் என்று பாட்டி சொல்லியிருப்பதால் “கண்டிப்பா உங்க மூணு பேருக்கும் வாங்கித் தருவேன்”, என்றாள்.

“ஐ ஜாலி, பூட்டியாச்சி”, என்று ரங்கநாயகியை அழைத்தான் முகில்.

“சொல்லு டா தங்கம்”

“அத்தை எங்க மூணு பேருக்குமே வாங்கித் தருவாங்களாம். நல்ல அத்தை. எனக்கு இந்த அத்தையை ரொம்ப பிடிச்சிருக்கு. பிரியா அத்தையை தான் பிடிக்கலை. அவ என்னை அடிக்கிறா”, என்று புகார் வாசித்தான்.

பிரியா யார் என்று தெரியாததால் சிந்து பாட்டியைப் பார்க்க அவரோ முகிலிடம் “என் செல்லத்தையா அந்த ராங்கி அடிச்சா? எவ்வளவு திமிர் அவளுக்கு. இனி நீ அவ கிட்ட எதுவும் பேசாத சரியா தங்கம். இந்த அத்தை கிட்ட கேளு. எதுன்னாலும் உனக்கு வாங்கித் தருவா”, என்றார்.

“நான் பேசலைன்னா பிரியா அத்தை அழுவா. அவ பாவம்”, என்று முகில் சொல்ல அவன் பேச்சை சிந்து ரசித்தாள் என்றால் “அதானே உன் உரிமையான அத்தையை விட்டுக் கொடுக்க மாட்டியே? ஆனா இந்த அத்தை தான் டா உனக்கு தாய்மாமன் பொண்டாட்டி. உனக்கு பொண்ணு கூட இந்த அத்தை தான் டா பெத்துக் கொடுக்கணும்”, என்று விளையாட்டாக சொன்னாள் ரங்கநாயகி.

அவள் பேச்சு புரியாமல் “எனக்கு தூக்கம் வருது”, என்று சொன்ன முகில் சிந்துவின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான். அவன் தூங்குவது வரை அமைதியாக எதையோ யோசித்த படி இருந்தார் ரங்கநாயகி. அவர் அமைதியும் அவர் முகத்தில் இருந்த இறுக்கமும் சிந்துவை பாதித்தது.

இத்தனை நாள் எந்த விசயத்தையும் கண்டு கொள்ளாதவள் முதல் முறையாக அவர் முக வாட்டம் அவளை பாதிக்க “எதுக்கு ஆச்சி ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.

அவள் குரலில் அவளை வாஞ்சையாக பார்த்தவர் “ஒண்ணும் இல்லை டா. ஒரு சின்ன யோசனை. உன் அத்தைக்கு ஒரு அண்ணன் இருக்கான். என் மூத்த மகன் பேரு பரமசிவம். அவன் பொண்டாட்டி பேர் சுப்பு. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா. பேர் வைதேகி. என் மகனுக்கு வைதேகியை உன் புருசனுக்கு கட்டி வைக்கணும்னு ஆசை இருந்துச்சு. இப்ப உங்க கல்யாண விஷயம் அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ரத்தினம் மாப்பிள்ளை போன் பண்ணி சொல்லிருப்பார். அங்க அவனுக்கும் என் மருமகளுக்கும் என்ன வாக்குவாதம் நடக்குதோ தெரியலை? அதான் இன்னும் உன்னைப் பாக்க வரலை. இல்லைன்னா இந்நேரம் வந்திருப்பாங்க. இதே ஊர் தான். வடக்கு தெருவுல இருக்காங்க. எனக்குமே வைதேகிக்கும் ஆதவனுக்கும் கல்யாணம் பண்ணணும்னு ஆசை இருந்துச்சு. நீ தப்பா எடுத்துக்காதத்தா. ஆனா இப்ப நீ தான் அவனுக்கு பொருத்தம்னு தோணுது. ஆதவன் வைதேகி கிட்ட அன்பா இருப்பான் தான். ஆனா உன் மேல இருக்குற மாதிரி உயிரா எல்லாம் இருக்க மாட்டான்”, என்றார்.

“இது என்ன புதுக் கதையா இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டு அவரையே பார்த்தாள்.

“உண்மையா தான் சொல்றேன் டா. ஆதவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இல்லைன்னா என் பேரன் உன்னைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டான். இப்ப முழுக்க முழுக்க அவன் நினைப்பு உன்னைப் பத்தி தான்”

“ஆச்சி, வைதேகிக்கு கல்யாணம் ஆகலைன்னு வருத்தமா இருக்கா?”

“அதெல்லாம் இல்லை டா. நீயும் என் பேத்தி தானே? அப்புறம் எனக்கு எதுக்கு வருத்தம்? இன்னொரு விஷயம் சொல்லட்டா? எனக்கு உங்க கல்யாணம் நடந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன் தெரியுமா? ஆதவன் வைதேகியை கட்டலைன்னா காலைலே வந்தாளே வேணி, அவ மகளைக் கட்டிருவானோன்னு எனக்கு பயம். அவ பேர் தான் பிரியா. செல்வியைக் அவங்க வீட்ல தான் கட்டிக் கொடுத்துருக்காங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துருவாங்களோன்னு எனக்கு தவிப்பா இருந்தது? எனக்கு அவளை பிடிக்கவே செய்யாது. குறை சொல்லணும்னு சொல்லலை”

….

“என்னை எல்லாம் அவ மதிக்கவே மாட்டா. அவ இங்க வந்தா அவ கண்ணு முழுக்க ஆதவன் மேல தான் இருக்கும். பொம்பளை பிள்ளையா அடக்கமா இருக்க மாட்டா. அது தான் அவளை எனக்கு பிடிக்காது”, என்று பாட்டி சொன்னதும் பிரியா மற்றும் வைதேகியை பற்றி எண்ணி சிந்து குழம்பிப் போனாள்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!