Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 8 1

அத்தியாயம் 8

சொர்க்கமும் நரகமும்

ஒன்று தான் என்று கண்டேன்

பெண்ணே உந்தன் காதலில்!!!



Advertisement

“அவளுக்கும் ஆதவனுக்கும் கல்யாணம் ஆகக் கூடாதுன்னு நினைச்சேன். எதுக்கும் அவ கிட்ட உசாரா இருந்துக்கோ தா. ரத்தினம் மாப்பிள்ளைக்கும் அவரோட தங்கச்சி வேணின்னா உயிர். தங்கச்சியையும் அவ குடும்பத்தையும் ஒரு குறை சொல்ல விட மாட்டார்”, என்று சொன்னார். ரங்கநாயகி சொன்னதை எல்லாம் யோசித்த படி இருந்தாள் சிந்து.

Advertisement

அந்த பிரியா யார்? அவளுக்கு ஆதவனைப் பிடிக்குமா என்ற கேள்விகள் பிறந்தது. முதல் முறையாக ஆதவனுக்கு என்னைப் பிடிக்குமா? இல்லை பிரியாவையோ வைதேகியையோ பிடிக்குமா? என்ற கேள்விகள் சிந்துவுக்குள் பிறந்தது.

Advertisement

“அண்ணன் சொன்னதால் தான் என்னைக் கல்யாணம் பண்ணினாரா? அவருக்கு நான் சரியானவ தானா? அந்த கோகுல் என்னை வேண்டாம்னு சொன்ன மாதிரி இவரும் என்னை வேண்டாம்னு சொல்வாரா?”, என்று எண்ணி கவலை கொண்டாள். அவளை அறியாமலே பிரியா மற்றும் வைதேகி மேல் சிறிது கோபம் வந்தது. அந்த உணர்வு பொறாமை என்பதைக் கூட அவள் உணரவே இல்லை.

Advertisement

அதே நேரம் பிரியா கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்க ”பிரியா என்ன இது? எவ்வளவு நேரம் தான் இப்படி அழுதுட்டு இருப்ப? கண் எல்லாம் வீங்கிருச்சு பாரு. நாமளும் அங்க போகணும் டா. நிலைமையை புரிஞ்சிக்கோ”, என்று மகளைசமாதானப் படுத்தினாள் வேணி.

“எனக்கு கஸ்டமா இருக்கு மா. என்னால அங்க வர முடியாது”

“அங்க வரலைன்னா எல்லாருக்கும் தேவையில்லாத சந்தேகம் வரும் பிரியா”

“சரி நான் வரேன் மா. வா போகலாம்”

“நிஜமாவா சொல்ற?”

“ஆமா, எனக்கு அந்த பொண்ணு எப்படி இருக்கான்னு பாக்கணும்? என் இடத்துக்கு வந்தவளை நான் பாக்கணும்”

அவளை அழைத்துச் செல்வது தான் சரி என்று வேணிக்கு பட “சரி முகம் கழுவிட்டு வா. அங்க வந்து முகத்துல எதையும் காட்டிக்காத”, என்று சொன்னதும் சரி என்று சொல்லி முகம் கழுவச் சென்றாள் பிரியா.

ரங்கநாயகி நல்ல உறக்கத்தில் இருக்க சிந்து ஆதவனைப் பற்றி யோசித்த படியே இருந்தாள். அப்போது சுபா குடும்பம் வந்தது. அவர்களின் சத்தத்தில் எழுந்து கொண்ட ரங்கநாயகி அவர்களை சிந்துவுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். சுபாவின் கணவர் ஆனந்த் அவளிடம் நன்றாக பேசினான். சிந்து தான் அனைவரிடமும் தயக்கத்துடன் பேசினாள்.

‘அத்தை’ என்றழைத்த படி அருணும் அவளிடம் ஒட்டிக் கொள்ள அவந்திகாவை சிந்துவே கை நீட்டி வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அந்த கொழு கொழு குழந்தையை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

ஆனந்தும் சக்தியும் சேர்ந்து ஆதவனை கிண்டல் அடித்துக் கொண்டிருக்க அவனோ இரண்டு மாமன்களிடம் சிக்கிக் கொண்டு அசடு வழிந்து கொண்டிருந்தான்.

சுபாவைப் பார்த்த மங்கை “வந்துட்டியா? உனக்காக தான் காத்துட்டு இருக்கேன்”, என்றாள்.

“எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு மா. ரொம்ப அழகா இருக்கா”, என்று சுபா சொல்ல “ஆமாக்கா, நானும் இதைத் தான் சொன்னேன்”, என்றாள் செல்வி.

“உங்க நாத்தனாரை ரெண்டு பேரும் அப்புறம் ரசிக்கலாம். இப்ப கடைக்கு போயிட்டு சிந்துவுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிட்டு வாங்க. அவ நேத்து போட்டிருந்த கல்யாணச் சட்டையை துவைச்சு காயப் போட்டு வச்சிருக்கேன். அதைக் கொண்டு போய் டிரஸ் வாங்கிட்டு வாங்க. இப்ப தான் சட்டை ரெடிமேடா கிடைக்குதே?”, என்றாள் மங்கை.

“சரி மா. அப்புறம் நகை எல்லாம் அதுக்கு மேட்ச்சா வாங்கணும்ல?”, என்று கேட்டாள் சுபா.

“அதெல்லாம் வேண்டாம் டி. அவளோட நகையே எல்லா டிரஸ்க்கும் பொருந்துற மாதிரி இருக்கு. அப்படின்னாலும் உங்க அப்பா இப்ப தான் பேங்க்ல இருந்து பூர்வீக நகையை எடுத்துட்டு வந்தார். அதையும் அவளுக்கு தான் கொடுக்க போறோம். அதனால எது சரியா வருதோ அதைப் போட்டுக்கலாம். இந்தாங்க, ஏ.டி.எம் கார்டு. பணம் எவ்வளவு ஆனாலும் பரவால்ல. ஆனா ரொம்ப அழகா பாத்து வாங்குங்க. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிக்கோங்க”, என்றாள் மங்கை.

“அம்மா, எங்களுக்கு எல்லாம் இப்ப வேண்டாம். எங்களுக்கு வாங்கினா எங்க பிள்ளைகளுக்கு வாங்கணும். பிள்ளைகளுக்கு வாங்கினா வீட்டுக்காரருக்கு வாங்கணும். அப்புறம் அத்தைன்னு சொல்லி வேணி அத்தை, மாமா, பிரியானு வாங்க வேண்டியிருக்கும். அதனால நாங்க இப்ப போய் ஆதவனுக்கும் சிந்துவுக்கும் வாங்குறோம். அப்புறம் தாய் மாமா வீட்டுக்கு கண்டிப்பா வாங்கணும். அதனால பரமசிவம் மாமாவுக்கும் ஆச்சிக்கும் வாங்குறோம். சுப்பு அத்தைக்கு வாங்கினா இங்க வேணி அத்தை கோச்சிக்கும். அப்பா தலை தான் உருளும்”, என்று சொன்னாள் செல்வி.

அவள் சொன்னது சரி என்று பட இருவரும் கிளம்பினார்கள். அவர்களுடன் ஆனந்தும் சக்தியும் வர ஆதவனையும் அழைத்துக் கொண்டார்கள். பிரியா அங்கே வரும் போது ஆதவன் கடைக்கு சென்றிருந்தான்.

ரங்கநாயகிக்கு அவர்கள் வரவு பிடிக்கவே இல்லை. பிரியாவோ சிந்துவை ஆராய்ச்சியாகப் பார்த்தாள். தன்னை விட அழகியாக, முகத்தில் புன்னகையுடன், ஆதவன் கட்டிய தாலியுடன் அமர்ந்திருந்த சிந்துவைக் கண்டு பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது. அவளைக் கண்டதும் ஆதவன் இனி தனக்கு இல்லை என்ற உண்மை அவளை கூறு போட்டது. பிரியா சிந்துவையே முறைத்த படி பார்த்துக் கொண்டிருக்க சிந்துவோ பயந்து போனாள்.

மகள் எதுவும் பிரச்சனையைக் கிளப்பி விடக் கூடாது என்று அஞ்சிய வேணி “பிரியா சிந்துவை பாத்துட்டல்ல? வா போகலாம்”, என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளை முறைத்த படியே சென்ற பிரியாவை பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்து.

“பாத்தியா கண்ணு அவ பார்வையை? நான் சொன்னேன்ல? அவ குணமே இப்படி தான். நான் நாளைக்கு என் மகன் வீட்டுக்கு போயிருவேன். அதனால இப்பவே சொல்றேன். உன் மனசுல போட்டுக்கோ. இந்த பொண்ணு இங்க அடிக்கடி வந்து போய் தான் இருக்கும். அதை நம்மால தடுக்க முடியாது. இவ வயசுக்கு வந்தப்ப என் மக மங்கை, அதான் உன் அத்தை உன் மாமன் கிட்ட ஆதவன் நல்லா வளந்துட்டான். பிரியாவும் பெரிய மனுசியா ஆகிட்டா. அதனால அவளை அடிக்கடி இங்க வர வேண்டாம்னு சொல்லுங்கன்னு தான் சொல்லிருக்கா. என் மருமகன் என் தங்கச்சி மகளை நீ வரவேண்டாம்னு சொல்லுவியான்னு திட்டி அவ கையால ஒரு மாசம் சாப்பிடவே இல்லையாம். அதுல இருந்து தான் மங்கை எதையுமே கண்டுக்க மாட்டா. உன் மாமாவுக்கு அவரோட தங்கச்சின்னா உயிரு. அதனால நீ இந்த பொண்ணு கிட்ட கவனமா இரு டா கண்ணு. எதுன்னாலும் உன் புருஷன் கிட்ட சொல்லு.                                                                                   ஆனா அவனும் இந்த பொண்ணு விசயத்துல என்ன பண்ணுவான்னு தெரியலை”, என்றதும் சிந்துவுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் வந்தது.

அவள் பயத்தை அதிகப் படுத்த என பரமசிவம் குடும்பம் வந்தது. பிரியாவைப் போல தான் வைதேகியும் இருப்பாள் என்று எண்ணி மிரண்டு போனாள் சிந்து. ஆனால் பிரியாவைப் போல இல்லாமல் “ஹாய் அக்கா, என் பேர் வைதேகி”, என்று புன்னகையுடன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் வைதேகி.

பரமசிவமும் சுப்புவும் கூட “நீயும் எங்க மக தான் டா. இங்க எல்லாம் ஓஞ்சதும் மாப்பிள்ளையை அழைச்சிட்டு முதல்ல எங்க வீட்டுக்கு தான் விருந்துக்கு வரணும்”, என்று சொன்னார்கள்.

சிந்து அவர்களைக் கண்டு பயம் விலகி புன்னகையுடன் தலையசைக்க “அது எப்படி வராம இருப்பாங்க? சிந்துவோட தாய் வீட்டு விருந்துக்கு அப்புறம் உன் வீட்டு விருந்துக்கு தான் பரமு ஆதவன் வரணும். ஏன்னா நீ தான் ஆதவனுக்கு தாய் மாமா”, என்றார் ரங்கநாயகி.

“வேண்டாம் மா, நாம எந்த உரிமை பிரச்சனையும் ஆரம்பிக்க வேண்டாம். நாம கூப்பிட்டோம்னு தெரிஞ்சாலே வேணி வீட்ல சண்டைக்கு வருவாங்க. அப்புறம் ரத்தினம் மாப்பிள்ளை தான் நம்ம பக்கமும் பேச முடியாம அவங்க பக்கமும் பேச முடியாம திண்டாடுவார். மங்கை நிம்மதியும் போகும். விருந்துன்னா என்ன? சந்தோசத்தைக் கொண்டாடுறதுக்கு தானே? அதனால ஆதவனும் சிந்துவும் பொறுமையாவே நம்ம வீட்டுக்கு வரட்டும்”, என்று சொன்ன பரமசிவத்தை வியந்து பார்த்தாள் சிந்து.

அவர் பேச்சில் எவ்வளவு ஒரு பொறுப்பு, எவ்வளவு ஒரு பெருந்தன்மை என்று வியந்து போனாள் சிந்து. “சரி அத்தை, நாங்க கிளம்புறோம். ரத்தினம் அண்ணன் சொன்னதும் போட்டது போட்ட படி வந்துட்டோம். சாயங்காலமா வரோம். அது வரைக்கும் சிந்துக்கு துணைக்கு வைதேகி இருக்கட்டும்”, என்று சொன்னாள் சுப்பு.

“சந்தோஷமா இருக்கட்டும். என் ரெண்டு பேத்திகளும் என் கூட இருந்தா எனக்கு சந்தோஷம் தான். நீ போயிட்டு வா மா”, என்று ரங்கநாயகி சொன்னதும் பரமசிவமும் சுப்புவும் கிளம்பிச் சென்றார்கள்.

அஞ்சலி போல வைதேகியும் சிந்துவிடம் பேசிக் கொண்டிருக்க சிந்துவுக்கு அவளை பிடித்து விட்டது. கலகலப்பாக இல்லாமல் போனாலும் ஓரளவுக்கு சிந்துவும் பேசினாள். முகில், அருண், அவந்திகா கூட சிந்துவின் நேரத்தை ஓட வைத்தார்கள்.

கிட்டத்தட்ட பதினொரு மணிக்கு சீர் வரிசைகளை எல்லாம் லாரியில் ஏற்றி கொண்டு காரைக் கிளப்பினான் அசோக். காரில் பின் சீட்டில் உர்ரென்ற முகத்துடன் ஏகாம்பரம் அமர்ந்திருந்தார். அவர் அருகே கடுகடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அமுதவள்ளி. கிளம்புவதற்குள் அவளை ஒரு வழி ஆக்கியிருந்தார் ஏகாம்பரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!