Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 8 2

அவள் காலையில் ஒன்பது மணிக்கு கிளம்பச் சொன்னால் அது இது என்று நேரத்தைக் கடத்தி அனைவரையும் வெறுப்பேற்றி இருந்தார் ஏகாம்பரம். அவருக்கு ஆதவன் வீட்டுக்கு செல்லவே பிடிக்க வில்லை. அதனால் நேரத்தை தள்ளிக் கொண்டு இருந்தார். கடைசியில் மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே வேறு வழி இல்லாமல் கிளம்பினார்.

மகன், மனைவியின் பேச்சு அவர் மனதில் பதியாமல் போனாலும் மகளின் அன்பு அவரைக் கிளப்ப வைத்தது. “டேய் அசோக், போறப்ப அஞ்சலியை ஏத்திட்டு போகணும் டா. ஏற்கனவே கிளம்பி இருக்கச் சொல்லிட்டேன். அவங்க வீட்ல பேசிட்டேன். பஸ் ஸ்டாண்ட்ல நிக்குறேன்னு சொல்லிட்டா”, என்றாள் அமுதவள்ளி.



Advertisement

“சரி மா, நீ அவளை வரச் சொன்னதும் நல்லது தான். அஞ்சலியைப் பாத்தா சிந்து ரொம்ப சந்தோஷப் படுவா”, என்றான் அசோக். சொன்னது போல் அஞ்சலி காத்திருக்க அவளை ஏற்றிக் கொண்டான் அசோக். அவள் முன்னிருக்கையில் அசோக் அருகே அமர்ந்து கொண்டாள். கார் முதலில் செல்ல அதற்கு பின் சீர்வரிசை லாரி, அதற்கடுத்து நெருங்கிய உறவினர்கள் வரும் வேன் என்ற வரிசையில் சென்றது.

ஆதவன் இரண்டு அக்காக்கள் மற்றும் மாமன்களுடன் உடை எடுத்து விட்டு வீட்டுக்கு வரும் போது மாலை மூன்று மணி ஆகி இருந்தது. “இவ்வளவு நேரமா?”, என்று மகள்களை முறைத்துப் பார்த்தாள் மங்கை.

Advertisement

Advertisement

“நாங்க என்ன மா செய்றது? மாமாவுக்கும் ஆச்சிக்கும் மட்டும் எடுக்குறதைப் பாத்துட்டு தம்பி தான் எல்லாருக்கும் எடுக்கச் சொல்லிட்டான். உனக்கு, அப்பாவுக்கு, ரங்கனுக்கு, குழந்தைகளுக்கு, வேணி அத்தை குடும்பத்துக்கு, சுப்பு அத்தை குடும்பத்துக்கு, உன் ரெண்டு மாப்பிள்ளைங்களுக்கு, கடைசியா பிரியா வைதேகிக்கு கூட எடுத்த பிறகு தான் கிளம்ப விட்டான்”, என்றாள் சுபா.

சுபா சொன்னதைக் கேட்டு மகனை எண்ணி பெருமையாக இருந்தது ரத்தினம் மற்றும் மங்கைக்கு. “சரி சரி, வாங்கிட்டு வந்தது எல்லாம் சிந்துவுக்கு சரியா இருக்கானு பாருங்க. அவளை அலங்கரிக்க வேண்டியது உங்க ரெண்டு பேரோட பொறுப்பு. அதுக்கு முன்னாடி இந்த துணிகளை எல்லாம் அவங்க அவங்களுக்கு கொடுத்துட்டு வந்துருங்க”, என்றாள் மங்கை. அவர்களும் சரி என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.

Advertisement

அதன் பின் சிந்துவுக்கு ஒரு நொடி கூட ஓய்வு இல்லை. அவளை சுபாவும் செல்வியும் பம்பரமாக சுழற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் சிந்து. திருமண அலங்காரத்தில் பியூட்டி பார்லர் பெண்கள் அவளை அலங்கரிக்கும் போது பொம்மை போல அமர்ந்திருந்தாள். ஆனால் இப்போதோ அவள் முகத்தில் செம்மையுடன் கூடிய உயிர்ப்பு இருந்தது.

ஆதவனோ அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே மயக்கத்துடன் அமர்ந்திருந்தான். நேற்றைய நிகழ்வு நினைவில் வந்தது. முதலில் மறுப்பு சொன்னாலும் அதன் பின் கண்களை மூடி தன்னுடைய கைக்குள் அவள் நின்ற தோற்றமே அவன் மனக்கண்ணில் வந்தது. ஏனோ தன்னுடைய முத்தத்தை அவள் ரசிப்பது போல இருந்தது அவளது எதிர்ப்பில்லா செய்கை. அதை தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன மாப்பிள்ளை நைட்டை நினைச்சு இப்பவே கனவா?”, என்று ஒரு மாமா கேட்க அவரைக் கண்டு புன்னகைத்து விட்டு மண்டபத்துக்கு ரங்கனைத் தேடிச் சென்றான். அவன் வியர்வை வழிய அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்க அவனைக் கண்டு நெகிழ்ந்து போனான் ஆதவன்.

“டேய் ரங்கா”

“அண்ணே, கல்யாண மாப்பிள்ளை உனக்கு இங்க என்ன வேலை?”

“உன்னைப் பாக்க தான் டா வந்தேன். சாப்பிட்டியா?”

“சாப்பிட்டேண்ணே. ஐயா கூட இப்ப தான் போன் பண்ணி கேட்டாங்க”

“ரொம்ப வேலையா இருக்கா டா? உன்னை கஷ்டப் படுத்திட்டோமோ?”

“இப்படி பேசுறது தாண்ணே கஷ்டமா இருக்கு. இது நம்ம வீட்டுக் விருந்து. நான் செய்யாம வேற யார் செய்வாங்களாம். விஸ்வம் ஐயாவும் எனக்கு கூட மாட உதவியா இருந்தாங்க. அங்க பாரு மேடை அலங்காரத்தை? சும்மா நச்சின்னு இருக்குல்ல? உன் மாமனார் பாத்தா அசந்துருவார்”

“நீ சொன்னதும் தான் எனக்கு அவங்க நினைவே வருது. எங்க வராங்கன்னு கேக்குறேன்”

“சரிண்ணே மணி நாலு தான் ஆகுது. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் வந்து விடவா?”

“புல்லட்ல தான் டா வந்தேன். நானே போய்க்கிறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்த ஆதவன் அசோக்கை அழைத்தான்.

அதை எடுத்த அசோக் “சொல்லு மாப்பிள்ளை”, என்றான். பேசுவது ஆதவன் தான் என்று அறிந்து ஏகாம்பரம் காதுகள் கூர்மை அடைந்தன.

“எங்க டா வரீங்க?”

“இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் டா”, என்று சலிப்பாக சொன்னான் அசோக்.

“எதுக்கு டா அவ்வளவு நேரம்?”

“சில பல சோதனைகளைக் கடந்து வர நேரம் ஆகிட்டு”, என்று அசோக் சொல்ல “அந்த சோதனைக்கு பேர் பம்பரம் தானே?”, என்று நக்கலாக கேட்டான் ஆதவன்.

“அதே தான், சரி நாங்க வந்துருவோம். நேரா மண்டபத்துக்கு வரவா? வீட்டுக்கு வரவா?”

“வீட்டுக்கு வா டா. வீட்ல இருந்து எல்லாருமா மண்டபத்துக்கு போகலாம்”

“சரி”, என்று சொல்லி போனை வைத்தான் அசோக்.

மாலை ஐந்து மணி, ஆதவனின் வீடும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வண்ண வண்ண அழகான தோரணங்கள் வீட்டுக்கு மேலும் அழகு சேர்த்தன. உறவினர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டு மண்டபத்துக்கு அணிவகுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது லாரி மற்றும் கார் வந்து வீட்டு முன்பு நின்றது. காரில் இருந்து வேண்டா வெறுப்பாக இறங்கினார் ஏகாம்பரம். மகள் வாழ்க்கைப் பட்டிருக்கும் அந்த பெரிய வீட்டை கண்டு அதிர்ந்து போய் இறங்கினார்கள் அமுதவள்ளியும் அசோக்கும்.

“என்ன டா அசோக் வீடு இவ்வளவு பெருசா இருக்கு?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

“எனக்கே இவன் இவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரியாதும்மா”, என்றான் அசோக்.

“வாங்க வாங்க”, என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தார்கள்.

அங்கே ரங்கநாயகி, ரத்தினம், மங்கை நின்றிருந்தார்கள். அவர்களை ஆதவன் தான் அழைத்து வந்திருந்தான். ஆதவன் தான் இரண்டு குடும்பத்தினருக்கும் அறிமுகத்தை நடத்தி வைத்தான்.

“எல்லாரும் உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு ரத்தினம் வேறு விருந்தினரை அழைக்கச் சென்று விட ரங்கநாயகி மற்றும் மங்கை இருவரும் அமுதவள்ளி மற்றும் அஞ்சலியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய மகள் வாழ்க்கையை காப்பாற்றியதற்காக ஆதவனைப் புகழ்ந்து கொண்டிருந்தாள் அமுதவள்ளி.

அப்போது “மாப்பிள்ளை இந்த சீர் வரிசை பொருள் எல்லாம் எங்க டா இறக்கட்டும்?”, என்று கேட்டான் அசோக்.

“இவ்வளவு அதிகமான பொருளை இறக்க இவங்க கிட்ட பெரிய வீடா  இருக்க போகுது? ஆமா இவ்வளவு பெரிய மண்டபத்தை வாடகைக்கு பிடிச்சிருக்காங்களே. அதுக்கு வாடகை கொடுக்க பணம் இருக்கான்னு கேளு டா”, என்று தன்னை மீறிச் சொல்லியிருந்தார் ஏகாம்பரம். ஏனென்றால் அந்த கிராமத்தில் அவ்வளவு பெரிய வீட்டை பார்த்தவருக்கு அது நிச்சயம் மண்டபம் போல தான் இருந்தது.

அசோக்கும் அமுதவள்ளியும் எரிச்சலுடன் அவரைப் பார்த்தார்கள் என்றால் முகம் இறுகிப் போய் அவரைப் பார்த்தான் ஆதவன். ரங்கநாயகியும் மங்கையும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டார்கள்.

“அம்மா, ஆச்சி நீங்க ரெண்டு பேரும் அத்தையையும் அஞ்சலியையும் கூட்டிட்டு உள்ள போங்க”, என்று அவர்களை அனுப்பி வைத்த ஆதவன் பின் நண்பன் புறம் திரும்பி “இங்க சில பேருக்கு கண்ணு சரியா தெரியலை போல டா அசோக். வீட்டு கோட்டைச் சுவர்ல போய் பாத்துட்டு வரச் சொல்லு. ஆதிசங்கரர் இல்லம்னு போட்டுருக்கும். அது வேற யாரும் இல்லை. எங்க தாத்தா தான். உங்க அப்பா கிட்ட சொல்லு. இது என் வீடு தான்னு. எங்களோட பூர்வீக வீட்ல என் கல்யாணச் சீரை இறக்காம வேற எங்க இறக்க போறாராம் உங்க அப்பா?”, என்று நோஸ்கட் கொடுத்து விட்டு நண்பனை அழைத்துக் கொண்டு லாரி அருகில் வந்தான்.

“இது இவன் வீடா, நம்ப முடியலையே?”, என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றார். மனைவி எரிச்சலுடன் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க அவள் அருகில் சென்று அமர்ந்தார்.

வாயை மூடிக் கொண்டு இருக்காமல் “ஆமா அஞ்சலி எங்க? அவளை எங்க தொலைச்ச? நம்மளை நம்பி வந்துருக்கா. உனக்கு பொறுப்பு இருக்கா?”, என்று கேட்டார்.

அதைக் கேட்டு கடுப்பான அமுதவள்ளி “அந்த பருப்பு முதல்ல உங்க கிட்ட இருக்கா? நீங்க திருந்தவே மாட்டீங்களா? உங்களுக்கு உங்க மக நல்லா வாழாம உங்க கூடவே வந்து உங்களுக்கு அடிமை மாதிரி இருக்கணும். அப்படி தானே?”, என்று சுள்ளென்று கேட்டாள்.

“என்ன டி இப்படிச் சொல்ற?”

“ஆமா அது தான் உண்மை. இல்லைன்னா மாப்பிள்ளை கிட்ட இப்படி பேசுவீங்களா?”

“என்ன டி செய்ய சொல்ற? அவனை என்னால மாப்பிள்ளையா அக்சப்ட் பண்ணிக்கவே முடியலை”

“அப்படின்னா இப்பவே வெளிய போயிருங்க”

“வள்ளி“

“உங்களை ஏன் தான் கல்யாணம் பண்ணினேன்னு இருக்கு. உங்களால எனக்கு கொஞ்சம் கூட நிம்மதி இல்லை. எனக்கு செத்துப் போயிறலாம் போல இருக்கு”, என்று அமுதவள்ளி சொன்னதும் “சரி சரி டென்ஷன் ஆகாத. இனி அவன் கிட்ட எந்த பேச்சும் வச்சிக்க மாட்டேன்”, என்றார் ஏகாம்பரம்.

அப்போதும் அமுதவள்ளி முறைக்க “என்ன டி முறைக்கிற? சரி சரி அவர் கிட்ட எந்த பேச்சும் வச்சிக்க மாட்டேன், போதுமா?”, என்று சொல்லி இறங்கி வந்தவர் மகளை தேடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!