Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 10 3

மணமக்களை நடுவில் அமர வைத்து இரண்டு பக்கமும் இரு வீட்டின் உறவினர்களும் அமர்ந்திருந்தார்கள். ஊர்ப் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

“நியாயப் படி பாத்தா இது முதல்ல நடந்துருக்கணும். ஆனா நிலைமை வேற மாதிரி ஆச்சு. ஆனாலும் எல்லாம் சரியா இருக்கணும்ல?”, என்று சொன்ன ரத்தினம் ஒரு தாம்பூலத் தட்டை ஏகாம்பரத்திடம் நீட்டினார். அதில் சேலை, வேஷ்டி, பூ, பழம், நகை இருந்தது.



Advertisement

ஏகாம்பரம் குழப்பமாக பார்க்க “இது இந்த பக்கம் இருக்குற ஒரு சடங்கு சம்பந்தி. நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஆனதுக்கு அப்புறம் இப்படி பரிமாறிக்கிறது முறை”, என்றார் ரத்தினம்.

Advertisement

“இதெல்லாம் எனக்கு தெரியாதே. தெரிஞ்சிருந்தா நானும் வாங்கிட்டு வந்துருப்பேன்”, என்று தர்ம சங்கடமாக சொன்னார் ஏகாம்பரம்.

Advertisement

“இதுல என்ன இருக்கு சம்பந்தி? உங்க பொருள் ஏதாவது ஒண்ணைக் கொடுங்க. உங்க கைல இருக்குற பேனாவைக் கொடுங்க போதும்”, என்று ரத்தினம் சொல்ல “அந்த ஓட்டைப் பேனாவைக் கொடுத்தீங்க கொன்னுருவேன் கொன்னு. ஒழுங்கு மரியாதையா கழுத்துல கிடக்குற செயினைக் கழட்டி சம்பந்தி கழுத்துல போடுங்க. அது தான் பெருமை”, என்று ஏகாம்பரத்தின் காதைக் கடித்தாள் அமுதவள்ளி.

Advertisement

“ஏய் என்ன விளையாடுறியா? அது பதினொரு பவுன் டி”

“அதுக்கு என்ன? இப்ப போடப் போறீங்களா இல்லையா?”, என்று அவள் கண்ணை உருட்டி மிரட்ட கழுத்தில் கிடந்த அந்த சங்கிலியை கழட்டிய ஏகாம்பரம் வேண்டா வெறுப்பாக ரத்தினம் கழுத்தில் போட்டார்.

சபையை நிறைத்ததால் ரத்தினம் ஏகாம்பரத்தைப் பார்த்து மலர்ந்து சிரிக்க “ஏன் சிரிக்க மாட்ட? நீ அந்த நகை டப்பால மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு பவுன் வச்சிருப்பியா? ஆனா என் பதினொரு பவுன் போச்சே”, என்று மனதுக்குள் புலம்பினார் ஏகாம்பரம்.

“அப்புறம் என்னப்பா, பெரிய அளவுல சம்பந்தம் கலந்தாச்சு. பொண்ணுக்கு சீர் செய்ங்க”, என்று ஒரு பெரியவர் சொல்ல “என்ன டி இது மறுபடியும் சீர்னு ஆரம்பிக்கிறாங்க. நாம தான் எல்லாம் செஞ்சிட்டோமே? குட்டிமா போட்டுருக்குறதை தவிர அவளுக்குன்னு செஞ்ச நகையை கைல வச்சிருக்கியா? அதை கொடு. இப்ப கொடுத்துறலாம்”, என்று மனைவியின் காதைக் கடித்தார்

“நான் வந்ததுமே சம்பந்தி அம்மா கிட்ட இது சிந்துவோட நகைன்னு சொல்லி கொடுத்துட்டேங்க. இப்ப என் கைல ஒண்ணுமே இல்லை”, என்று சொன்ன அமுதவள்ளிக்குமே இப்போது என்ன செய்ய என்று தெரிய வில்லை.

“உன்னை யாரு அவசரப் பட்டுக் கொடுக்கச் சொன்னா? இப்ப பாரு முழிக்க வேண்டியது இருக்கு”

“நீங்க மட்டும் என்னவாம்? முழுசா அஞ்சு லட்ச ரூபாய் பணத்தை சிந்து கைல அவசரப் பட்டுக் கொடுத்தீங்க தானே? அதை வச்சிருந்து இப்ப கொடுத்துருக்கலாம்ல?”, என்று அமுதவள்ளி கேட்டதும் அமைதியாக இருந்து கொண்டார்.

அவர்கள் பயப்பட அவசியமே இல்லாத படி ஒரு பெட்டியை அங்கே எடுத்து வந்தாள் மங்கை.

“என்ன டி இது பெட்டியை எடுத்துட்டு வராங்க. இதை நிறைக்கிற அளவுக்கு என் கிட்ட ஒண்ணும் இல்லை டி. ஆனாலும் சரியான கொள்ளைக் கூட்டம் தான். இவன் ஒரு மாப்பிள்ளைன்னு எவ்வளவு செய்ய வேண்டியது இருக்கு இவனுக்கு?”, என்று கேட்டு மனைவியின் முறைப்பைப் பெற்றுக் கொண்டார் ஏகாம்பரம்.

“எங்களோட பூர்வீக நகை நூறு பவுன் இருக்குங்க. அது போக என் சம்பாத்தியத்துல என் மகளுங்களுக்கு போட்டது மாதிரி என் மகனுக்கு வரப் போற மனைவிக்கும் நூறு பவுன் எடுத்து வச்சிட்டோம். ஆக எங்க வீட்டுக்கு வரப் போற மருமகளுக்கு எங்களோட சீர் இருநூறு பவுன்”, என்று ரத்தினம் சொல்ல ஏகாம்பரமோ அதிர்ந்து போனார்.

அமுதவள்ளி கணவரை “இப்ப என்ன சொல்லப் போறீங்க?”, என்பது போல துட்சமாக பார்த்தாள்.

“சரி ரத்தினம் சீர் சொல்லியாச்சு. பொண்ணுக்கு எவ்வளவு பொண்ணு வீட்ல இருந்து செஞ்சிருக்காங்கன்னு சொல்லிட்டா எல்லாரும் கிளம்பலாம்”, என்று ஒரு பெரியவர் சொல்ல ஏகாம்பரம் திகைத்தார்.

எல்லாவற்றையும் சொல்லி சுயதம்பட்டம் அடிக்க வேண்டுமா என்று இருந்தது அவருக்கு. கூடவே அவர் மகளுக்கு போட்ட நகை ரத்தினம் மருமகளுக்கு போட்டதை விட குறைவு. அதுவும் அவருக்கு கௌரவ குறைச்சலாக இருந்தது.

“இதெல்லாம் இங்க சும்மா முறை தான் சம்பந்தி. நாள பின்ன எதுவும் பேச்சு வந்துறக் கூடாது. அதனால தைரியமா சொல்லுங்க”, என்று ரத்தினம் சொல்ல “நூற்றி ஐம்பது பவுன் நகை. அஞ்சு லட்ச ரூபாய் ரொக்கம். அது போக சீர்வரிசை பொருள்கள் அவ்வளவு தான்”, என்றார் ஏகாம்பரம்.

அதன் பின் ஊர்ப் பெரியவர்கள், மற்றவர்கள் எல்லாம் கிளம்பினார்கள். “நாங்களும் கிளம்புறோம் டா”, என்றான் அசோக்.

“என்ன தம்பி, காலைல போகலாம்ல?”, என்று கேட்டார் ரத்தினம்.

“அது வந்து மாமா..”, என்ற படி அசோக் ஏகாம்பரத்தைப் பார்க்க “சொந்தக்காரங்க எல்லாம் போகணும்னு சொல்றாங்க”, என்றார் ஏகாம்பரம்.

“சரி இன்னொரு நாள் தங்குற மாதிரி வரணும். இது யார் வீடோன்னு நீங்க யாரும் நினைக்க கூடாது. இது உங்க மக வீடு. உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு”, என்று ரத்தினம் சொல்ல ஏகாம்பரத்துக்கு பதிலுக்கு மாப்பிள்ளை பெண்ணை விருந்துக்கு  அழைக்க மனது வரவில்லை. அதை உணர்ந்த அமுதவள்ளி கணவன் மீது எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு “மாப்பிள்ளை இங்க எல்லா வேலையும் முடிஞ்ச உடனே நீங்களும் சிந்துவும் மறுவீட்டுக்கு விருந்துக்கு வரணும்”, என்று அழைத்தாள்.

“வரோம் அத்தை”, என்று புன்னகைத்தான் ஆதவன். அதன் பின் மகள் அருகே வந்தாள் அமுதவள்ளி. ஆதவனும் அசோக்கிடம் பேச எழுந்து சென்று விட்டான்.

தாயும் தந்தையும் கிளம்புகிறார்கள் என்று எண்ணி சிந்து முகம் கலங்க “இங்க பாரு டா குட்டிம்மா, இனி இது தான் உன் வீடு. எனக்கு உங்க அப்பா தானே எல்லாமே. அதே மாதிரி இனி உனக்கு மாப்பிள்ளை தான் எல்லாமே. அவர் சொன்ன பேச்சுக் கேட்டு நடக்கணும். மாமனார் மாமியார் கிட்ட அன்பா இருக்கணும். எதுக்கும் கலங்காம தைரியமா இருக்கணும். அம்மா நாளைக்கு காலைல ஃபோன் பண்ணுறேன் சரியா? மாப்பிள்ளைக் கிட்ட முரண்டு பிடிக்க கூடாது. அவர் கூட சந்தோஷமா இருக்கணும்”, என்று சொன்ன அமுதவள்ளிக்கு அதற்கு மேல் மகளிடம் என்ன பேச என்று தெரிய வில்லை. அன்னை மகளிடம் சொல்லக் கூடிய விஷயமும் இல்லையே. ஆனால் மகள் புரிந்து கொண்டாளா, அவளுக்கு ஏதாவது தெரியுமா என்று குழப்பமாக இருந்தது.

அப்போது அங்கே ஏகாம்பரம் வர அதன் பின் அமுதவள்ளி எதுவும் பேச வில்லை. “உனக்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அப்பாவுக்கு ஒரு கால் பண்ணு டா குட்டிமா”, என்று மகளிடம் சொன்ன ஏகாம்பரத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் அமுதவள்ளி. அசோக்கும் தங்கையிடம் விடை பெற்று விட்டு நண்பனிடம் தங்கையை பார்த்துக் கொள்ளும் படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

கடைசியாக தோழி அருகில் வந்த அஞ்சலி “நான் உனக்கு என்ன சொல்லன்னு தெரியலைடி சிந்து. ஆனா அண்ணாவை நம்பு. அவங்களைக் கண்டு பயப்படாதே. அவங்க உனக்கு நல்லது தான் செய்வாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். அஞ்சலியும் கடைசி நிமிடமாவது ரங்கன் இங்கு வருவான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் அவன் மண்டபத்தில் இருக்க அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.

அனைவரும் கிளம்பியதும் சிந்து முகம் கலக்கத்திற்குச் சென்றது. ரங்கநாயகி அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஆனால் அவள் முகத்தில் பயம் அப்பி இருந்தது.

“இன்னைக்கு சடங்கு உண்டா?”, என்று ஒரு பெண்மணி கேட்க ஆதவனுக்கு சிந்துவை நினைத்து தான் கவலையாக இருந்தது. ஏற்கனவே மிரண்டு போய் இருப்பவள் மற்ற எல்லாவற்றையும் எண்ணி கட்டாயம் பயந்து விடுவாள் என்று எண்ணினான்.

“இப்ப தான் நம்ம ஜோசியரை வரச் சொல்லிருக்கேன் அண்ணி. வந்த பிறகு தான் கேக்கணும்”, என்று மங்கை சொல்வது அவன் காதில் பட்டது.

யார் கண்ணிலும் படாதவாறு அவசரமாக வெளியே சென்றான். ஜோசியர் வீட்டை நோக்கி அவன் நடக்க அவரே அவன் எதிரில் வந்தார்.

ஆதவனைக் கண்டதும் “உங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் தம்பி. நீங்களே வந்துட்டீங்க? அவ்வளவு அவசரமா?”, என்று சிரித்தார் அவர்.

“அது இல்லை ஜோசியரே, ஒரு முக்கியமான விஷயம்”, என்று தயக்கமாக சொன்னான்.

“நானும் ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும். என் பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டிட்டீங்கன்னு சொன்னா. ரொம்ப சந்தோஷம் தம்பி”

“ஜானகி எனக்கு தங்கச்சி மாதிரி. அதை விடுங்க. நான் இப்ப சொல்லப் போறது வேற”

“என்னன்னு சொல்லுங்க தம்பி”, என்று குழப்பமாக கேட்டார்.

காதல் தொடரும்….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!