Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 10 2

எல்லாம் முடிந்தது என்று அவர்கள் நினைக்க வெளியூரில் இருந்து உறவினர்கள் வேறு வருகை தந்தார்கள். என்ன தான் சோர்வை அவள் மறைக்க நினைத்தாலும் அவளையும் மீறி அவள் முகத்தில் களைப்பு தெரிந்தது. “ரொம்ப அசதியா இருக்கா? கொஞ்ச நேரம் உக்காந்துக்குறியா?”, என்று கேட்டான் ஆதவன்.

அவன் பேச்சில் இருந்த கணிவு தன்னுடைய தந்தையை நினைவு படுத்த “வேண்டாம்”, என்ற படி அவனைக் கண்டு சிரித்தாள். அந்த சோர்வுடன் கூடிய அவளது சிரிப்பு கூட அவன் கண்களுக்கு அழகாகப் பட்டது.



Advertisement

“ஆமா யார் சொன்னது பொண்ணுங்களுக்கு நகை அழகுன்னு?”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கேட்டான்.

Advertisement

அவன் கேட்டது புரியாமல் நே என்று விழித்தவள் இவ்வளவு நகை போட்டுருக்குறதை கிண்டல் செய்கிறானோ என்று எண்ணி “நான் சொன்னேன் இவ்வளவு நகை வேண்டாம்னு. ஆனா அண்ணி தான் கேக்கவே இல்லை. ரொம்ப அசிங்கமா இருக்கா?”, என்று கேட்டாள்.

Advertisement

“அசிங்கமா இருக்குனு யார் சொன்னா? நீ ரொம்ப அழகா தான் இருக்க”

Advertisement

“அப்புறம் ஏன் நீங்க அப்படிக் கேட்டீங்க?”

“இல்லை, உன்னோட புன்னகையே பேரழகாக இருக்க உனக்கு எதுக்கு பொன்னகை? அதான் தான் கேட்டேன்?”, என்றதும் அவனை இமைக்காமல் பார்த்தாள் சிந்து.

“என்ன டி இப்படி பாக்குற? நான் சொன்னதுக்கு ஒண்ணு வெக்கப் படணும்? இல்லை சிரிக்கணும். நீ என்ன ஒரு மார்கமா பாக்குற?’

“இல்லை நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களான்னு தோணுச்சு அதான்”

“பேச்சா? எனக்கு பேச்சு எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி. உன் அண்ணா கிட்ட கேளு. நாங்க பேசாத பேச்சே இல்லை. காதலி கிட்ட, பொண்டாட்டி கிட்ட பேசுற உரிமையான பேச்சு தான் இதுவரை பேசினதில்லை. இனி தான் பேசிப் பழகணும். அதுவும் உன் கிட்ட. உனக்கு ஒண்ணு தெரியுமா? வித்தியாசமா நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டது கூட நேத்து தான்”, என்று சொல்லி அவன் அவளையே பார்க்க இப்போது அவள் முகம் சிவந்து போனது.

“என்ன பேசலாமா?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான் ஆதவன்.

அவள் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திகைத்து விழிக்க “உன் கிட்ட பேசக் கூடாதா நான்?”, என்று கேட்டான்.

பேசுங்க என்றும் சொல்ல முடியாமல், கூடாது என்றும் சொல்ல முடியாமல் அவஸ்தையில் நெளிந்தாள் சிந்து.

அவர்களையே கண்ட ஏகாம்பரத்துக்கு வியப்பாக இருந்தது. இங்கே வந்ததில் இருந்து மூன்று முறை மட்டுமே சிந்து ஏகாம்பரத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதன் பிறகு இயல்பாக ஆதவனிடம் பேசினாள். சிந்து இது போல வேறு யாரிடமும் பேசியதில்லை.

எப்போதும் சிந்து தந்தையைத் தான் அதிகம் தேடுவாள். ஆனால் இன்று அவரையே மறந்த நிலையில் அவள் இருக்க அவருக்கு என்னவோ போல இருந்தது. அவர் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்னங்க?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

“குட்டிமா என்னைத் தேடவே இல்லை டி”, என்று கலக்கமாக சொன்னார்.

“உங்களைக் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் எங்க அப்பாவையா ரொம்ப தேடினேன்? இல்லை தானே? எது வேணும்னாலும் உங்க கிட்ட தானே அதிகம் கேட்டேன். அப்ப சிந்து மட்டும் எப்படி உங்களைத் தேடுவா. அப்புறம் நீங்க அவ கிட்ட அப்படி பணத்தைக் கொடுத்ததும் தப்புங்க. எங்க அப்பா என் கிட்ட அப்படிக் கொடுத்துருந்தா உங்களுக்கு அந்த வலி தெரிஞ்சிருக்கும். சரி விடுங்க, சாப்பிட வாங்க. நாம போனா தான் நம்ம சொந்தக்காரங்களும் சாப்பிட வருவாங்க. அஞ்சலி வேற பசியோட இருப்பா. அசோக் வேற சம்பந்தி சாப்பிடக் கூப்பிடுறார்னு மூணு தடவை சொல்லிட்டான்”, என்று சொல்ல யோசித்த படியே எழுந்து சென்றார் ஏகாம்பரம்.

சாப்பாடு அறையில் ஏகாம்பரம் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க அப்போது மணமக்களையும் உணவு உண்ண அழைத்து வந்தனர் செல்வியும் சுபாவும்.

மாமனாரைக் கண்ட ஆதவன் “நல்லா சாப்பிடுங்க”, என்று சிறு சிரிப்புடன் சொன்னான்.

அவன் சிரிப்பில் எரிச்சலானவர் “நாங்க ஒண்ணும் சோத்துக்கு இல்லாம இங்க வந்து உக்காரலை. நான் பரம்பரை பணக்காரன்”, என்று எகிறினார் ஏகாம்பரம்.

“ஸ்‌ஸ், இப்ப எதுக்கு கத்துறீங்க?”, என்று அவரை அடக்கியவன் அவர் காதருகில் குனிந்தான். அவர் அவனை திகைப்பாக பார்க்க “மிஸ்டர் கனகாம்பரம்…”, என்றான்.

“ஏய் என் பேர் ஏகாம்பரம் டா”

“என்ன பம்பரமோ? நீங்க ஒரு காலத்துல ஒரு வேளை சாப்பாடுக்கே வழி இல்லாம இருந்தீங்களாம். அது உண்மையா?”

“இது எவன் பாத்த வேலைன்னு தெரியலையே. நம்ம பழைய வரலாறை எல்லாம் தோண்டி இவன் கிட்ட சொல்லிருக்காங்களே? யாரா இருக்கும்?”, என்று அவர் எண்ண “என்ன மாம்ஸ், யோசிக்கிறேன்னு இப்படி வெளிய உளறி வைக்கிறீங்க?”, என்று கேட்டான் ஆதவன். அவர் வாயை மூடிக் கொண்டு அவனைப் பார்த்தார்.

“ரொம்ப யோசிக்காதீங்க பம்பரம். இதைச் சொன்னது உங்க புத்திரன் தான்”, என்று ஆதவன் சொன்னதும் “இவனை’, என்று பல்லைக் கடித்தவர் அசோக்கைப் பார்த்தார்.

“அசோக் உங்க அப்பா கூப்பிடுறார். என்னன்னு கேளு”, என்று அசோக்கிடம் சொல்லி விட்டு அவன் அங்கிருந்து செல்ல “என்னப்பா கூப்பிட்டீங்களா? ஏதாவது வேணுமா? கேசரி கொண்டு வரச் சொல்லவா? ரொம்ப டேஸ்ட்டா இருக்காம்?”, என்றான் அசோக்.

“இப்ப இது ரொம்ப முக்கியம் டா”, என்று அவர் எரிச்சலுடன் சொல்ல “வேற எதுக்கு கூப்பிட்டீங்க?”, என்று கேட்டான் அசோக்.

“நான் ஒரு காலத்துல சாப்பாடுக்கே வழி இல்லாதவன்னு அவன் கிட்ட சொன்னியா டா?”

“எவன் கிட்ட?”

“அதான் அந்த திமிரு பிடிச்சவன் கிட்ட?”

”ஓ ஆதவனைச் சொல்றீங்களா? காலேஜ்ல ஒரு தடவை பேரண்ட்ஸ் பத்தி பெருமையா பேசச் சொன்னாங்கப்பா. நான் எங்க அப்பா இப்படி அப்படி கஸ்டப் பட்டு முன்னேறிருக்கார்னு பெருமையா தான் பேசினேன். ஏன் என்ன ஆச்சு?”

“அவன் என்னை நக்கலா சொல்லிட்டு போறான் டா”

“நீங்க அவன் கிட்ட வம்பிழுத்துருப்பீங்க”

“அவன் தான் என் கிட்ட வம்பிழுத்தான். என்னை பம்பரம்னு சொல்லுறான் டா”, என்று அவர் சிறு குழந்தை போல புகார் சொல்ல “ஏகாம்பரம் அப்படிங்குற பேரை மறந்து சொல்லிருப்பான் பா”, என்றான்.

“கனகாம்பரம்னு வேற சொல்றான்”

“ஐயோ தெரியாம சொல்லிருப்பான். சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க. அடுத்த பந்திக்கு ஆள் வெயிட்டிங்’, என்று சொல்லி விட்டு அவன்  செல்ல வாயை மூடிக் கொண்டு அமர்ந்தார்.

இதை எல்லாம் சிந்து அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதவன். அவனுக்கு சிரிப்பாக வந்தது. அவனைப் பார்த்த அசோக் கண்களாலே “பாவம் டா எங்க அப்பா, விட்டுடு”, என்று சொல்ல ஆதவன் முகம் மேலும் மலர்ந்தது.

“எங்க அப்பாவை என்ன சொன்னீங்க? எதுக்கு டென்ஷன் ஆனார்?”, என்று கேட்டாள் சிந்து.

“கேசரில ஏதோ நெய் அதிகமாம்? அதைத் தான் அசோக் கிட்ட சொல்றார் போல?”, என்று ஆதவன் சொல்ல அவனை குழப்பமாக பார்த்தாள் சிந்து.

அவனது உதட்டில் இருந்த புன்னகையே அவன் சொன்னது பொய் என்று பறைசாற்றியது. அவனையே பார்த்தாள். ரங்கனிடம் பேசிய படியே அவன் அழகாக புன்னகைக்க “இவனை எதுக்கு அப்பாவுக்கு பிடிக்கலை?”, என்று எண்ணினாள் சிந்து. “அப்ப உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று அவள் மனசாட்சி கேள்வி எழுப்ப அவளுக்கு தன்னுடைய யோசனையைக் கண்டு வியப்பாக இருந்தது.

அதன் பின் மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். முகில் ஏதோ கீழே விழுந்து விட்டான் என்று செல்வி அவனுடன் இருந்தாள். சக்தியும் மனைவி மகனுடன் தான் இருந்தான். வைதேகியும் வீட்டுக்குச் சென்று விட்டாள். முதலிரவைப் பற்றி பேசுவார்கள் என்பதால் வைதேகியை சுப்பு அழைத்துச் சென்று விட்டாள். அதனால் மணமக்களுடன் சுபா மற்றும் அஞ்சலி இருவர் தான் இருந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் அவர்களை வாசலில் நிற்க வைத்து சுபா தான் ஆரத்தி சுற்றினாள். வீட்டுக்குள் சென்றதும் சிந்துவை விளக்கேற்றச் சொல்ல தடுமாறியவள் ஆதவன் சொல்ல சொல்ல செய்தாள்.

அதன் பின் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப் பட்டது. உறவினர்கள் எல்லாம் சீர் வரிசையைப் பார்த்த படி இருந்தனர். மண்டபத்தில் இருந்த உறவினர்களை அனுப்பி விட்டு வீட்டுக்குச் செல்ல கிளம்பினார்கள் ரத்தினமும் மங்கையும். அப்போது “நாங்களும் கிளம்புறோம்”, என்று ரத்தினத்திடம் சொன்னார் ஏகாம்பரம்.

“அட என்ன கிளம்புறேன்னு சொல்றீங்க சம்பந்தி. வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. சம்பந்தம் கலக்குறது எல்லாம் இருக்கு”, என்று சொல்லி சிந்துவின் பெற்றோரையும் உறவினர்களையும் வீட்டுக்கு அழைத்து வந்தார் ரத்தினம்.

வீட்டுக்கு வந்ததும் ஒரு சேரில் அமர்ந்த ஏகாம்பரம் அந்த வீட்டையே தான் பார்த்தார். அப்போது ஆதவன் பேச்சுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்த சிந்து தான் அவர் கண்ணில் பட்டாள்.

அவர் அவளையே பாக்கவும் “இப்ப எதுக்கு அவளை கண்ணு வச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

“என் பொண்ணை நான் பாப்பேன். யார் டி என்னைக் கேப்பா?”

“உங்களை யாரு பாக்க வேண்டாம்னு சொன்னா? எதுக்கு குழப்பமா பாக்குறீங்கன்னு தான் கேட்டேன்”

“எனக்கு இன்னைக்கு குட்டிமா புதுசா தெரியுறா டி. அவ இது வரைக்கும் என் கிட்ட, அசோக் கிட்ட தவிர வேற யார்க் கிட்டயும் இவ்வளவு இயல்பா பேசி நான் பாத்ததே இல்லை. ஆனா இன்னைக்கு…”

“மாப்பிள்ளைக் கிட்ட பேசுறா, அதானே? இது தான் அவளோட இயல்புங்க. அவளை பயப்பட வச்சு வச்சு அவளோட இயல்பையே நீங்க தொலைச்சிட்டீங்க”

“சரி என் மேலயே தப்பா இருக்கட்டும். ஆனா இவ கோகுல் கிட்ட கூட இப்படி பேசலையே டி?”

“புடிச்சவங்க கிட்ட தானே பேச முடியும்?”

“வள்ளி”

“ஆமாங்க, சிந்துவுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு. மாப்பிள்ளை குடும்பமும் நல்ல விதமா பழகுறாங்க. நாமளே பாத்திருந்தா கூட இப்படி அமைஞ்சிருக்காது”

“குடும்பம் நல்ல விதமா தான் இருக்கு. ஆனா அவன் தான் சரி இல்லை. திமிர் பிடிச்சவன்”

“ஆம்பளைங்களுக்கு திமிர் அழகு தாங்க. என் கிட்ட எல்லாம் மரியாதையா தான் பழகுறார். மாப்பிள்ளை மச்சான்னு அசோக்கும் அவரும் பேசுறதைப் பாக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு. ஏதாவது செஞ்சு பிரச்சனை பண்ணிறாதீங்க”, என்று அமுதவள்ளி சொன்னதும் அவளை முறைத்து விட்டு தலையைத் திருப்பிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!