Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 13 3

அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பி விட்டு கண்ணாடி முன்பு நின்று தலை வார ஆரம்பித்தாள். அவனுக்கோ அவளை அப்படியே விட மனதில்லை. அதனால் கட்டிலில் இருந்து எழுந்தான். கட்டிலில் இருந்து ஆதவன் எழுவதைம் தன்னை நோக்கி நெருங்கி வருவதையும் கண்ணாடி வழியாக பார்த்த படி இருந்தாள் சிந்து. அவன் நெருங்க நெருங்க அவள் இதயம் வேகமாக துடித்தது.

அவளுக்கு பின்னால் சென்று நெருங்கி நின்றான் ஆதவன். அவள் கண்ணாடி வழியாக அவனையே பார்க்க அவன் கண்களில் இருந்த பாவத்தில் அவள் வெட்கத்துடன் அவன் புறம் திரும்பினாள்.



Advertisement

அவளது அருகாமையில் அவன் திணறுவது போல அவளுக்கும் அவனது நெருக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது தான். அஞ்சலி இதைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்லியிருக்க வில்லை என்றாலும் அவளுக்கே அவனது நெருக்கம் பிடித்து தான் இருந்தது. முதல் நாள் அவன் கொடுத்த முத்தமும் அவள் உணர்வுகளை தட்டி எழுப்பத் தான் செய்தது என்று இந்த நேரம் உணர்ந்தாள். கூடவே கோகுல் நெருங்கிய போது எதனால் அழுது பயந்தோம் என்றும் இவனுடன் மட்டும் எப்படி இயல்பாக இருக்கிறோம் என்றும் சிந்துவுக்கு கேள்வி பிறந்தது. அவனுடன் நெருக்கமாக இருப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று அவள் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். கணவன் மனைவி இடையே இது இயல்பு தான் என்றும் புரிந்து கொண்டதால் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

Advertisement

அவள் கண்கள் அவனிடம் எதுவோ கேட்பது போல இருக்க அவளை இன்னும் நெருங்கி நின்றான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வந்து மோத கண்களை மூடிக் கொண்டாள்.

Advertisement

“சிந்து, பிளீஸ் அன்னைக்கு மாதிரி ஒரே ஒரு தடவை”, என்று அவன் கெஞ்சலுடன் கேட்க அவள் விழிகள் வியப்பில் விரிந்தது. அவனையே பார்த்த படி இருந்தாள்.

Advertisement

அவளிடம் மறுப்பும் கோபமும் இல்லாமல் போக அவளை இன்னும் நெருங்கி நின்றவன் நன்றாக இருந்த ஒற்றைக் கையால் அவளது இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தான்.

அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் அவள் விழிகள் தாமாக மூடிக் கொண்டது. அதற்கு மேல் முடியாமல் அவளை தன்னை நோக்கி இழுத்து தன் இதழ்களை அவள் இதழ்களோடு புதைத்தான்.

லேசான முத்ததோடு எப்போதும் போல விலகி விடுவான் என்று அவள் எண்ண அவனோ அவள் இதழ்களை தின்று கொண்டிருந்தான்.

இதழ்களுக்குள் கதகதப்பாய் ஒரு உணர்வு எழுவதை இருவரும் அந்த நிமிடம் உணர்ந்தார்கள். எந்த மறுப்பும் இல்லாமல் அவளது இயல்பான ஒத்துழைப்பு கிடைத்ததில் அவன் வேகம் இன்னும் அதிகரித்தது.

“ஆதவா எங்க இருக்க?”, என்ற ரங்கநாயகியின் சத்தம் கேட்ட பிறகு தான் அவளை விட்டான். அவன் விட்ட பிறகும் அவள் கண்களை மூடிய படியே நின்றிருக்க சிறு சிரிப்புடன் அவள் கன்னம் தட்டினான்.

கண்களைத் திறந்தவள் அவனையே பார்த்த படியே இருக்க “ஆச்சி வந்துருக்கு. நீ தலை சீவிட்டு கீழ வா, நான் போறேன்”, என்று சொல்லிச் சென்றான். அவன் அறையை விட்டுச் சென்றதும் நடந்ததை எண்ணி சிறு சிரிப்புடன் அவள் தலை வார ஆரம்பிக்க அவனும் மந்தகாசப் புன்னகையுடன் கீழே சென்றான்.

மந்திரிச்சு விட்டது போல கீழே இறங்கி வந்த பேரனைக் கண்ட ரங்கநாயகி “என்ன டா ஒரு மார்க்கமா வர?”, என்று கேட்டாள்.

அப்போது வீட்டுக்குள் வந்த ரங்கன் “ஆச்சி அண்ணனுக்கு உங்க சத்தம் கேக்கவே இல்லை. அண்ணன் எங்கயோ கனவுல மிதந்துட்டு வருது”, என்றான். “சும்மா இரு டா”, என்று வெட்கத்துடன் சொன்னான் ஆதவன்.

“அட ஆமா, ஏதோ நடந்துருக்கு. என் பேரன் வெக்கமெல்லாம் படுறான். அப்படி என்ன நடந்துச்சு?”, என்று ரங்கநாயகி கேட்க “அதை அங்க வர உங்க பேத்திக் கிட்ட தான் கேக்கணும்”, என்று சொன்னான் ரங்கன். மாடியில் இருந்து தயக்கத்துடனும் பயத்துடனும் வந்து கொண்டிருந்தாள் சிந்து.

“உன் புருஷன் என்னம்மா ஒரு மாதிரி இருக்கான்? என்ன செஞ்ச அவனை?”, என்று கேட்டார் ரங்கநாயகி.

“ஐயையோ நான் ஒண்ணுமே செய்யலையே ஆச்சி.. அவங்க தான்…”, என்று அவள் உண்மையிலே பதற “ஆச்சி சும்மா சொல்றாங்க தங்கச்சி, நீ பயப்படாதே”, என்றான் ரங்கன். அதன் பின் ரங்கநாயகியும் ஆதவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஆதவனின் பார்வையைத் தாங்க முடியாமல் சிந்து தோட்டத்துக்கு சென்றாள்.

அப்போது கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள் பிரியா. அவளைக் கண்டதும் இது வரை இருந்த இதம் தொலைந்தது போல இருந்தது சிந்துவுக்கு.

“இவளை யாரு இங்க வரச் சொன்னா?”, என்று எண்ணிய படி சிந்து அமைதியாக இருக்க அவளோ சிந்துவைக் கண்டு கொள்ளவே இல்லை. ஏதோ உரிமையான வீட்டுக்குள் வருவது போல நுழைந்தாள். ஒரு பைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ரங்கன் பிரியாவைக் கண்டு “அம்மாவும் ஐயாவும் வீட்ல இல்லையே?”, என்று சொன்னான்.

சிந்துவை ஒரு பார்வை பார்த்த பிரியா, ரங்கன் புறம் திரும்பி “நான் ஒண்ணும் அத்தையைப் பாக்க வரலை. ஆதவன் அத்தானைப் பாக்க  வந்தேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

சிந்து முகம் ஒரு மாதிரி ஆகவும் ரங்கனுக்கு அவள் மனது தெளிவாக புரிந்தது. அவள் அருகே சென்று “கவலைப்படாதே தங்கச்சி, இப்ப மூணு நிமிசத்துக்குள்ள துண்டைக் காணும் துணியைக் காணும்னு இவ ஓடுவா பாரு. ஆச்சி இருக்குறப்ப உனக்கு என்ன கவலை? நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் ரங்கன்.

உள்ளே சென்ற பிரியா அங்கே அமர்ந்திருந்த ரங்கநாயகியைக் கண்டு திகைத்துப் போனாள். “இந்த கிழவி இருக்கும்னு நினைக்கலையே? இது தெரிஞ்சிருந்தா அப்புறமா வந்து அத்தானைப் பாத்திருப்பேனே?”, என்று எண்ணிய படி அவள் ஆதவனைப் பார்க்க “வா பிரியா”, என்றான் ஆதவன்.

“அத்தான், அம்மா ரத்தப் பொரியல் செஞ்சாங்க. அதான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன். இருங்க கிண்ணத்துல போட்டு எடுத்து வந்து ஊட்டுறேன்”, என்று சொல்லி அவள் திரும்ப “ஏய் நில்லு”, என்று அரட்டலுடன் அழைத்தார் ரங்கநாயகி.

பிரியா திரும்பி அமைதியாக அவரைப் பார்க்க “கொண்டு வந்ததை அங்க வச்சிட்டுப் போ. அதை அவன் பொண்டாட்டி அவனுக்கு ஊட்டுவா”, என்றார்.

“சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அப்படித் தானே அத்தான்?”, என்று பிரியா கொஞ்சலாக கேட்க “அதெல்லாம் அப்புறம் சூடு பண்ணி சாப்பிடலாம். அவன் இப்ப தான் சூப் குடிச்சான். அப்படி தானே ஆதவா?”, என்று கேட்ட ரங்கநாயகி கண்ணை உருட்டி அவனிடம் கேட்டார். அவர் பார்வையே ஆம் என்று சொல் என்று சொன்னது.

“ஆமா, ஆமா பிரியா… இப்ப தான் ஆச்சி சூப் கொடுத்தாங்க. இப்ப என்னால எதுவும் சாப்பிட முடியாது. நீ வச்சிட்டுப் போ. அப்புறமா நானும் சிந்துவும் சாப்பிட்டுக்குறோம்”, என்று சொன்னதும் கோபத்துடன் பாத்திரத்தை வைத்து விட்டு கிளம்பி விட்டாள்.

கோபத்துடன் போகும் அவளைக் கண்டு சிரிப்பாக வந்தது சிந்துவுக்கு. அவள் சென்றதும் அவசரமாக உள்ளே வந்தாள். சிந்து முகத்தில் இருந்த புன்னகையைக் கண்ட ஆதவன் அவளை ரசனையாக பார்க்க அவனைக் கண்டு கொள்ளாதவள் அவர்கள் அருகில் வந்து ரங்கநாயகி கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள். சிறு சிரிப்பும் பொறாமையுமாக ஆதவன் அவர்களைப் பார்க்க ரங்கநாயகியோ அவள் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார்.

“பாத்தியா ஆச்சி, உனக்கெல்லாம் கிடைக்குது?”, என்று அவன் பெருமூச்சு விட இரு பெண்களும் சிரித்தார்கள்.

இடை இடையே இப்படி அவளைச் சீண்டிய படி நாட்கள் நகர்ந்தது. பிரியாவும் ஆதவனுடன் இன்னும் நெருங்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள். பிரியாவைக் கண்டு சிந்து முகம் கோபமாவதைக் காண ஆதவனுக்கு சந்தோசமாக இருந்தது. அவளுடைய பொறாமை அவனுக்கு பிடித்திருந்தது. இத்தனை நாட்கள் எந்த உணர்வுகளையும் காட்டாதவள் முதல் முறையாக இப்போது வெளிப்படையாக பொறாமையைக் காட்டவும் அவளை ரசித்தான்.

அதனால் வேண்டும் என்றே பிரியாவிடம் பேசுவதும் சிந்துவின் கோபத்தை ஏற்றுவதுமாக இருந்தான். ஆனால் இதைக் கண்ட பிரியாவுக்கு ஆதவனுக்கு சிந்துவை பிடிக்க வில்லை போல என்று தோன்ற வைத்தது. அந்த எண்ணம் அவளுக்கு சந்தோசத்தையும் கொடுத்தது. ஆனால் ஆதவன் சிந்துவின் பயத்தைக் கவனிக்க தவறினான். அவன் மனதில் சிந்து தான் இருக்கிறாள் என்று அவளுக்கு உணர வைக்க தவறினான்.

இப்படியே ஆதவனுக்கும் சிந்துவுக்கும் இடையே கோபங்களும் சீண்டல்களும் தொடர்ந்த படி இரண்டு மாதம் முடிந்திருந்தது. மங்கை ஆவலுடன் எதிர் பார்த்த கோவில் திருவிழாவும் வந்தது. ஆதவனுக்கு கையும் ஓரளவு சரியாகி இருந்தது.

திருவிழாவுக்கு என்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உடை வாங்கி இருந்தார் ரத்தினம். அன்று இரவு உணவு முடிந்ததும் வீட்டு பூஜையறையில் இருந்த உடைகளை அனைவருக்கும் எடுத்துக் கொடுத்தாள் மங்கை.

கடைசியாக சிந்து கையில் கொடுத்து “சீக்கிரம் கட்டிட்டு வா டா. இதுக்கு பொருத்தமான நகையையும் போட்டுக்கோ. சாம பூஜை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துறலாம்”, என்றாள்.

“சரிங்க அத்தை”, என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தாள் சிந்து. அப்போது ஆதவன் கிளம்பிக் கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் “சேலை அழகா இருக்கு சிந்து. இங்க வச்சு தானே கட்டுவ? நான் இங்கயே இருக்கேன் சரியா?”, என்று கேட்டு அவளிடம் வம்பிழுத்தான்.

அவன் கேள்வியில் வெட்கம் கொண்டவள் “பிளீஸ், நீங்க வெளிய போங்க”, என்றாள்.

கோவிலுக்கு செல்ல நேரமானதால் “சரி சரி நீ மாத்து, நான் வெளிய இருக்கேன்”, என்று சொல்லி வெளியே சென்று விட்டான்.

கீழே அனைவரும் கிளம்பி விட “ஆதவா, நாங்க முதல்ல போறோம். நீ பின்னாடி சிந்துவை அழைச்சிட்டு வா, ரங்கன் எங்களை அங்க விட்டுட்டு காரை எடுத்துட்டு வருவான். இந்தா இதை சிந்து கிட்ட கொடுத்துரு”, என்று சொல்லி பூவைக் கொடுத்து விட்டுச் சென்றாள் மங்கை.

சிறிது நேரம் கழித்து “கிளம்பிட்டியா?”, என்று கேட்ட படி அறைக்கு சென்றான் ஆதவன். “கிளம்பிட்டேன்”, என்று சொல்லித் திரும்பிய மனைவியைக் கண்டு மூச்சடைத்துப் போனான். அவளைப் படைத்த பிரம்மன் கூட ஓவியன் தான் என்று நம்பும் வகையில் இருந்தாள் சிந்து. முன் பக்கம் சேலையை நீவி விட்டுக் கொண்டு இருந்த சிந்து அவனைப் பார்க்க வில்லை. அவனோ அவளது அழகில் பிரமித்து, மூச்சு தடை பட்டது போல நின்றான்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!