Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 15 1

அத்தியாயம் 15 

காதல் வசப்படும் பொழுது

உந்தன் ராதையானேன் நான்!!!



Advertisement

“அது… அது வந்து.. இது உனக்கு எப்படித் தெரியும்?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.

“வீட்லே இருக்குறவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சிட்டீங்க அப்படி தானே?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

Advertisement

Advertisement

“அது வந்து…. வள்ளி”, என்று அவர் தயங்க “உங்க அக்கா மகன் இளையவன் அசோக்கை பாத்து பேசிருக்கான். அவன் தான் உண்மையை புட்டு புட்டு வச்சிருக்கான். அந்த வீட்டைக் கொடுக்கச் சொல்லி அவன் கேக்க அசோக் நல்ல பதிலா சொல்லி அனுப்பிட்டான்”, என்றாள் அமுதவள்ளி.

“என்ன பதில் டி சொன்னான்?”

Advertisement

“எங்க அப்பா வாழ்க்கையிலே உருப்படியா செஞ்ச விஷயம் இது தான்னு சொல்லிருக்கான். இதை எதுக்கு எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க?”

“அது வந்து வள்ளி”

“எப்படியோ அவங்க குணத்தை நீங்க தெரிஞ்சிக்கிட்டதே போதும் எனக்கு. அப்புறம் பொறுமையா இருங்க. அசோக் வந்ததும் மாப்பிள்ளை கிட்ட விசாரிக்க சொல்லுவோம்”, என்று சொல்லி விட்டு அமுதவள்ளி உள்ளே செல்ல ஏகாம்பரம் “அப்பாடி தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணிக் கொண்டு மகளைக் காணச் சென்றார்.

“குட்டிமா கதவைத் திற டா”, என்று அவர் சத்தம் கொடுத்ததும் கதவைத் திறந்த சிந்து “அப்பா”, என்ற படி தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“குட்டிமா என்ன ஆச்சு டா? உன்னை யார் என்ன சொன்னா? இதுக்கு தான் அவன் கூட உன்னை அனுப்ப தயங்கினேன். கடைசில என் மகளை இப்படி அழ வச்சிட்டானே. அவனுக்கு இருக்கு”, என்று கோபமாக பேசிய படி மகளின் தலையை வருடிக் கொடுக்க அவர் அணைப்பில் இருந்து விலகிய சிந்து அவரையே இமைக்காமல் பார்த்தாள்.

அவள் பார்வை புரியாமல் “என்ன டா?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.

“நீங்க ஏன் பா அவரை அவன் இவன்னு சொல்றீங்க? இனி அப்படிச் சொல்லாதீங்க. அது நல்லா இல்லை. நான் தூங்கப் போறேன்”, என்று சொல்லி விட்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள். அவர் தான் திகைத்துப் போய் அசையாமல் நின்றார். மகளின் பேச்சு அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவர் போய் விட்டார் என்று எண்ணி தன்னுடைய போனை எடுத்த சிந்து அதில் இருந்த ஆதவன் முகத்தை ஆசையாக பார்க்க அதைக் கண்ட ஏகாம்பரத்தின் குழப்பம் மேலும் அதிகரித்தது.

“என் பொண்ணை இப்படி மயக்கி வச்சிருக்கானே”, என்று கடுப்புடன் எண்ணியவர் அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து வந்து விட்டார்.

அவரைப் பார்த்த அமுதவள்ளி “என்ன சொல்றா உங்க பொண்ணு?”, என்று கேட்டாள்.

“அவன் கூட வாழ மாட்டேன்னு சொல்றா”

“என்னது? அப்படிச் சொன்னாளா? குழம்பிய குட்டைல மீன் பிடிக்க பாக்குறீங்களா? எங்க என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க பாப்போம் உங்க பொண்ணு அப்படித் தான் சொன்னான்னு”

“போடி”, என்றவர் போனை எடுத்து அசோக்குக்கு அழைத்தார்.

“என்னப்பா இந்த நேரம் கூப்பிட்டுருக்கீங்க?”, என்று கேட்டான் அசோக்.

“உன் தங்கச்சியை உன் நண்பன் வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கான். சிந்து அழுது அழுது முகம் வீங்கிப் போய் உக்காந்துருக்கா. என்னன்னு அவன் கிட்ட விசாரி”, என்று சொல்லி போனை வைத்தார். அவர் அப்படிச் சொன்னதும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரே தங்கை என்றதும் அவனது உயிரும் துடிக்கத் தான் செய்தது.

அடுத்த நொடி அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பியவன் போகும் போதே ஆதவனை அழைத்தான்.

ஒரு ரிங்கிலே அவன் போனை எடுத்த ஆதவன் “அசோக், சிந்து எப்படி இருக்கா டா? ஏதாவது சொன்னாளா? என்னைப் பத்தி ஏதாவது சொன்னாளா? என்னைத் தேடினாளா?”, என்று படபடப்பாக கேட்டான்.

“நான் இப்ப தான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் மாப்பிள்ளை., என்ன நடந்துச்சு டா?”

“எனக்கு அவ இல்லாம கஷ்டமாக இருக்கு டா. ஏதோ உயிரே என்னை விட்டுப் போன மாதிரி இருக்கு. என்ன நடந்துச்சுன்னு ஒண்ணும் புரியலை டா”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னான் ஆதவன்.

மேலும் அவன் சிந்துவை நினைத்து புலம்ப நண்பனுக்காகவும் வருந்தினான் அசோக். “சரி மாப்பிள்ளை, நான் அவ கிட்ட விசாரிக்க பாக்குறேன். நீ கவலைப்படாதே”, என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி போனை வைத்தான்.

வீட்டுக்கு வந்த அசோக்கிடம் “இப்ப உனக்கு சந்தோஷமா டா? வேண்டாம்னு நான் சொன்னப்ப கேட்டீங்களா? இப்ப என் மக வாழ்க்கை போச்சு”, என்று படபடவென்று பொரிந்தார் ஏகாம்பரம்.

“ஆதவன் பக்கம் தப்பு இருக்குறதா எனக்கு தெரியலைப்பா. சிந்து ஏதோ தப்பா புரிஞ்சிருக்கா. என்னன்னு விசாரிப்போம். கொஞ்சம் பொறுமையா இருங்க பா. சின்னதா இருக்குறதை பெருசா இழுத்து விட்டுராதீங்க”, என்று சொன்ன அசோக்கிடமும் “ஆத்திரப் படாம அமைதியா இருங்க”, என்று சொன்ன அமுதவள்ளியிடமும் எரிந்து விழுந்தார் ஏகாம்பரம்.

அசோக் மற்றும் அமுதவள்ளி இருவரும் கேட்டதற்கு கூட சிந்து வாயை திறக்கவே இல்லை. ஆதவனைப் பிடிக்கலையா என்று கேட்டால் மட்டும் “அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று பதில் கொடுத்தாள். இப்போதைக்கு அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அதனால் அமைதியாக இருக்க முடிவு எடுத்தார்கள்.

சிந்துவை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த ரங்கனிடம் மங்கையும் ரத்தினமும் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தான் ரங்கன். ஆனால் அவனுக்கு அனைத்தும் தெரிந்திருந்ததால் அவர்களிடம் பொய் சொல்கிறோமே என்று கஷ்டமாக இருந்தது.

இப்போது வரைக்கும் வேணியும் பிரியாவும் இந்த அளவுக்கு பேசி ஒரு சிறு பெண்ணின் மனதை களைப்பார்களா என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னைப் பற்றி தவறாக நினைத்தாலும் இப்போதே அவர்களைப் பற்றி சொல்லி விட எண்ணினான் தான். ஆனால் சிந்துவுக்கு சத்தியம் செய்து கொடுத்ததால் என்ன நடந்தது என்ற உண்மையை மறைத்து விட்டான்.

“கடவுளே என்ன டா இது நமக்கு வந்த சோதனை? உனக்காவது ஏதாவது தெரியும்னு நினைச்சேனே?”, என்று புலம்பினாள் மங்கை.

தாய் போல தன்னைக் கவனித்துக் கொள்ளும் மங்கையின் கலக்கத்தை ரங்கனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

“அண்ணே, எங்க மா?”, என்று கேட்டான் ரங்கன்.

“உங்க ஐயா அவனைத் திட்டிட்டார் டா. தோப்பு வீட்ல இருக்கான்”

“அது வேற நடந்துச்சா? கவலைப்படாதீங்க மா. சீக்கிரம் எல்லாம் சரியாகிரும். அண்ணனும் சிந்தும் நல்ல படியா வாழ்வாங்க. அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற அன்பே அவங்களைச் சேத்து வைக்கும். நான் அண்ணனைப் பாக்க போறேன்”

“சரி டா, அப்புறம் நாளைக்கு நானும் உங்க ஐயாவும் மருமக பொண்ணைப் போய் பாத்துட்டு வரோம். நீ அவன் கூடவே இரு”

“சரி மா, நான் வரேன்”

“இரு, ரெண்டு பேருக்கும் சாப்பாடு தரேன். நீயும் அவன் கூடவே தங்கிக்கோ. நீ காரை எடுத்துட்டு இங்க அங்க அலைய வேண்டாம்.  நாங்க பெரிய கார்ல போயிருவோம். நாங்க போறதை அவன் கிட்ட சொல்ல வேண்டும். ரெண்டு பேருக்கும் தேவையான துணியையும் எடுத்துட்டு போ”, என்று மங்கை சொன்னதும் “சரி மா”, என்றான்.

பின் சாப்பாடையும் இருவருக்கும் தேவையான துணிகளையும் எடுத்துக் கொண்டு தோப்பு வீட்டுக்குச் சென்றான். அங்கே ஒரு நாளிலே துறவி போல இருந்த ஆதவனைக் கண்டு அவன் மனம் ஊமையாக அழுதது.

எல்லாம் தெரிந்தும் அதை வெளியே சொல்ல முடியாமல் இருக்கும் தன்னிலையை அவனே வெறுத்தான்.

ரங்கனைக் கண்டதும் “வந்துட்டியா டா? போகும் போது உன் தங்கச்சி ஏதாவது சொன்னாளா டா?”, என்று ஆர்வமாக கேட்டான் ஆதவன்.

“இல்லைண்ணா, எவ்வளவோ கேட்டேன், ஒண்ணும் சொல்லலை”, என்று அவனிடம் பொய்ச் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!