Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 15 3

“உங்க அம்மா தங்கச்சி அப்படிங்குறதுக்காக உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாதுங்க”

“அவ அன்னைக்கு ஆதவனை விரும்பினது தெரிஞ்சு அவளை சத்தம் போட்டேன் தானே? அதுக்கப்புறம் பிரியா அமைதியா தானே இருக்கா? நீ வேணுக்குன்னு பேசுற செல்வி? பிரியா உன் நாத்தனார், எங்க அம்மா உனக்கு மாமியார். அதை நினைவுல வச்சிக்கோ”



Advertisement

“நீங்க உங்க தங்கச்சி பக்கமே பேசுறீங்க? நான் என் சந்தேகத்தைச் சொன்னேன். விடுங்க. என்ன நடக்க போகுதுன்னு பாக்கலாம். ஆனா என் தம்பி சந்தோஷமா இல்லைன்னா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது”, என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல சக்திக்கும் ஆதவனை எண்ணிக் கவலையாக இருந்தது.

அவனும் உள்ளே சென்று விட்டான். “அம்மா, செல்வி அண்ணி சரியா கண்டு பிடிச்சிட்டாங்களே? அந்த சிந்து நம்மளை ஏதாவது காட்டிக் கொடுத்துருவாளா?”, என்று கேட்டாள் பிரியா.

Advertisement

Advertisement

“கண்டிப்பா சொல்ல மாட்டா. சொல்லனும்னா அவ நேத்தே சொல்லிருக்கணும். அதுவும் கண்டிப்பா அண்ணன் கிட்டயும் அண்ணி கிட்டயும் சொல்லவே மாட்டா”

“எனக்கு என்னமோ பயமா இருக்கு மா. ஆதவன் அத்தானும் வேணும்”

Advertisement

“அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு பிரியா. இன்னைக்கு அண்ணனும் அண்ணியும் அவ பக்கம் பேசினாலும் எத்தனை நாளைக்கு மகனை தனியா விடுவாங்க. அப்புறம் நாம ஒண்ணும் எந்த பொய்யும் சொல்லலை. உண்மையை அப்படியே சொன்னோம் அவ்வளவு தான்”, என்றாள்.

யாருக்கும் நிற்காமல் நேரம் கடக்க அடுத்த நாளே ரத்தினம் மற்றும் மங்கை இருவரும் சிந்துவைக் காண கிளம்பிச் சென்றார்கள்.

அவர்கள் வந்த போது ஏகாம்பரம் வீட்டில் இல்லை. அமுதவள்ளி தான் அவர்களை வரவேற்று அமர வைத்தாள். கணவன் வீட்டில் இல்லாதது அமுதவள்ளிக்கு சந்தோஷமாக தான் இருந்தது. அவர் இருந்தால் கட்டாயம் பிரச்சனையை பெரிதாக்குவார் என்று தான் அவளுக்கு தெரியுமே.

ஆனால் சிந்து என்ன செய்வாளோ என்று பயமாக இருந்தது. ஆனாலும் “சிந்து உன் அத்தையும் மாமாவும் வந்துருக்காக பாரு. கீழ வா”, என்று அழைத்தாள்.

வர முடியாது என்று சொல்லி விடுவாளோ, அவர்களை அவமானப் படுத்தி விடுவாளோ என்று அமுதவள்ளிக்கு நெஞ்சம் திக்கென்று தான் இருந்தது. ஆனால் சத்தம் கேட்டு அவசரமாக ஓடி வந்த சிந்து “அத்தை”, என்ற படி மங்கையை அணைத்துக் கொண்டாள். அந்த செய்கையில் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ரத்தினமும் அவள் தலையை வாஞ்சையாக வருடி விட சிந்துவின் வாழ்க்கை இன்னும் தொலைந்து விட வில்லை என்று அமுதவள்ளிக்கு சந்தோஷமாக இருந்தது.

“எப்படி இருக்க டா?”, என்று கேட்டாள் மங்கை.

“நல்லா இருக்கேன். நீங்க உக்காருங்க. உக்காருங்க மாமா. அம்மா ஏதாவது சாப்பிடக் கொடு”, என்று சொல்ல மகளின் பொறுப்பை எண்ணி அமுதவள்ளி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. திருமணத்திற்கு முன்பு வரை வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்கள் முன்பு வரவே மாட்டாள். அப்படியே வந்தாலும் அவர்களை வாங்க என்று கூட சொல்ல மாட்டாள்.

இப்போதைய அவளது மாற்றம் அன்னைக்கு பிரம்மிப்பைக் கொடுத்தது. அதனால் “நீ பேசிட்டு இரு. நான் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள்.

“ஏன் டா, இப்படி சொல்லாம கொள்ளாம இங்க வந்த? எங்க மேல ஏதாவது கோபமா?”, என்று கேட்டாள் மங்கை.

“நாங்க யாரும் உன்னை கஷ்டப் படுத்திட்டோமா மா?”, என்று கேட்டார் ரத்தினம்.

“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு அம்மா அப்பாவைப் பாக்கணும் போல இருந்த்து. அதான்”, என்று தயக்கத்துடன் சொன்னாள் சிந்து.

“இது உண்மைன்னா இப்பவே எங்க கூட கிளம்பி வரியா டா?”

“அது… கொஞ்ச நாள் கழிச்சு வரட்டா?”, என்று கண்ணைச் சுருக்கி சிறு குழந்தை போல கேட்க அவள் வருவேன் என்னும் விதமாய் சொன்னதே பெரியவர்களுக்கு நிம்மதியைத் தந்தது.

“அப்படின்னா நீ சொன்னது பொய் தானே? ஆதவன் உன்னை ஏதாவது கஷ்டப் படுத்திட்டானா டா?”, என்று கேட்டாள் மங்கை.

“இல்லை, அவங்க என்னை ஒண்ணுமே சொல்லலை”, என்று அவள் தெளிவாக சொல்லவும் அவர்களுக்கும் குழப்பமாக இருந்தது.

“நீ என் மகனுக்கு சந்தோசத்தைக் கொடுக்க வந்தவன்னு நினைச்சேன் டா. கடைசில நீயே அவனை விட்டுட்டு வந்துடியே? நீ இங்க வந்ததும் உன் மாமா வேற அவனை அதிகம் சத்தம் போட்டுட்டார். எப்பவும் அவர் என்ன பேசினாலும் ஏதாவது ஏட்டிக்கு போட்டி பேசி கண்டுக்காம போறவன் அன்னைக்கு அதிகம் மாமாவை பேசிட்டு வீட்டை விட்டே போய்ட்டான். இப்ப தோப்பு வீட்ல தான் தங்கி இருக்கான். நீ நம்ம வீட்டுக்கு வந்துரு டா கண்ணு. நீ இல்லாம வீடு வீடாவே இல்லை. இங்கயும் நீ நல்லா இருந்த மாதிரி தெரியலை. அவங்க அவங்க இருக்க வேண்டிய இடத்துல இருந்தா தான் கண்ணு மரியாதை. அது உன் வீடு. அங்க உனக்கு இருக்க பிடிக்கலையா? நானும் மாமாவும் உங்க கூட இருக்குறது உனக்கு சங்கடமா இருக்குன்னா சொல்லு. நாங்க தனியா போய்றோம். இல்லை நீங்க தனியா போய் இருங்க. இங்க சென்னைல கூட வீடு பாத்து இருங்க. புருசனும் பொண்டாட்டியும் ஒண்ணா இருந்தா தான் கண்ணு மரியாதை. நல்லா யோசிச்சிக்கோ”, என்று சொன்ன மங்கை அதன் பிறகு அவளைக் கட்டாயப் படுத்த வில்லை. கிளம்பும் போது “நீ கட்டாயம் வருவேன்னு நம்புறோம் டா”, என்று சொல்லிச் சென்றார்கள் இருவரும்.

அவர்கள் சென்றதும் மகளை அமுதவள்ளி வார்த்தையால் விலாச ஆரம்பித்தாள். அம்மா பேசியதை அமைதியாக கேட்டவள் “எனக்கு அவங்களைப் பிடிக்கும் மா. அவங்களுக்கு தான் என்னைப் பிடிக்கலை”, என்று அழுத படி சொன்னாள். அப்படி இல்லை என்று மறுத்து சொன்ன அன்னையின் வார்த்தைகளைக் அவள் ஏற்க வில்லை.

அதே நேரம் “ரங்கா வா, நாம நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்றான் ஆதவன்.

“அங்க போக மாட்டேன்னு சொன்ன?”

“அம்மாவும் அப்பாவும் சிந்துவைப் பாக்க போயிருக்காங்க. அங்க போனா தானே என்ன நடந்துச்சுன்னு தெரியும்? ஒரு வேளை அவளும் அவங்க கூட வந்தா….”

“அப்ப உன் கோபமெல்லாம்… மானம் ரோஷம் எல்லாம்”, என்று ரங்கன் நக்கலாக கேட்க “சிந்து விஷயத்தில் அதெல்லாம் பறந்தே போச்சு. அவளும் அம்மா அப்பா கூட வரணும்னு ஆசையா இருக்கு டா”, என்று வெட்கத்தை விட்டு அசடு வழிந்தான்.

“சரி அம்மாவும் ஐயாவும் அங்க போறது உனக்கு எப்படித் தெரியும்? உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு என் கிட்ட சொன்னாங்களே”, என்று உளறி விட்டான்.

அவனை முறைத்த ஆதவன் “நீ சொல்லலைன்னாலும் வேணி அத்தை சொல்லிட்டாங்க டா”, என்றான்.

“ஓ”, என்ற ரங்கன் வேறு எதுவும் சொல்ல வில்லை. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேணியை நினைத்து எரிச்சலாக வந்தது. அவள் மீது இருந்த மரியாதையே அவனை விட்டுச் சென்றிருந்தது.

வீட்டுக்கு வந்த ரத்தினமும் மங்கையும் ஆதவனை அங்கு எதிர் பார்க்க வில்லை. அவனைக் கண்டு “வந்துட்டியா தம்பி? உன் கோவம் போச்சா? அப்பா தானே டா சொன்னார்? அதுக்குனு கோச்சிட்டு போவியா?”, என்று சமாதானமாக பேசினாள் மங்கை.

“அதை விடு மா. சிந்து என்ன சொன்னா?”, என்று அவன் ஆர்வமாக கேட்க “அவ உன் மேல உயிரா தான் டா இருக்கா. உன்னை ஒரு சொல் சொல்ல விட மாட்டிக்கா. ஆனா என்ன நடந்துச்சுன்னு கடைசி வரை சொல்லவே இல்லை. கொஞ்ச நாள் இருந்துட்டு வறேன்னு சொன்னா. எதுக்கும் நீ போய் பாரு. உடனே போகாட்டியும் ரெண்டு மூணு நாள் கழிச்சு போய் பாரு. மனசு விட்டு பேசினா எல்லாம் சரியாப் போகும் டா”, என்றாள் மங்கை.

“சரி மா”, என்று சொன்ன ஆதவன் தயக்கத்துடன் தந்தையைப் பார்த்தான். அவரும் அவனைப் பார்த்த படி அவன் அருகில் வந்தார்.

அவன் தலையை வருடி விட்ட ரத்தினம் “எல்லாம் சரியா போகும். தைரியமா இரு”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

தந்தையின் செய்கையிலும் பேச்சிலும் அவன் அதிர்ந்து விழிக்க “பாத்தியாண்ணே? நான் சொல்ற மாதிரி ஐயாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அவர் உன்னை ரொம்ப லவ் பண்ணுறார் தெரியுமா? ஆனா வெளிய சொன்னது இல்லை”, என்று ரங்கன் சொல்ல அவன் பேச்சில் ஆதவனுக்கு சிரிப்பு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!