Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 27.2

மறுநாள் அலுவலகத்தை அடைந்த உதய் எந்த வித சலனமும் இல்லாமல் தன்னுடைய வேலையை துவங்கியிருந்தான். ஆதிக்கு அன்று இரவு யோசனையை மறைமுகமாய் கூறிய பொழுதே அவன் தந்தையின் அலுவலகம் பற்றிய எண்ணம் உதித்திருந்தது, அதை அடுத்த நாளே ஜெயனிடம் கூறி பத்திரங்களை எடுத்து வைக்க கூறியிருந்தான். ஆதியை சற்று முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதை செய்துவிட்டான். ஆதி தனக்கு விளைவித்தது போல் பெரிதாக அடி இருக்காது, ஆனால் நிச்சயம் ஆதியின் மனதில் பெரிய ஏமாற்றம் அடைந்திருப்பான் என்று யூகித்து தான் இந்த நகர்வு உதய்யிடம்.

“என்ன உதய் அந்த நீரஜ ஒரு வழியா முடக்கிட போல தெரியுது” பெரிதாய் சாதித்த இன்பத்துடன் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் ஈஸ்வரன்.

“ஆமா, ஏழு வருஷம் அவன் தொல்லை இருக்காது” இயந்திரமாய் பதில் தந்தவன் முன்னால் ஈஸ்வரனின் காருக்கு அருகில் விறைப்பாய் நின்ற யாழினியின் புகைப்படம் இன்னமும் ஓடிக்கொண்டே இருந்தது.



Advertisement

“பரவால்ல உதய் உன்ன பாராட்டி தான் ஆகணும். நீரஜ் தழல் விசியத்துலையும் சரி, ஜெர்மன் கம்பெனி விசியத்துலையும் சரி. நான் இங்க வந்து பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள அங்க ஒரு ஆள் அனுப்பி வச்சிட்ட. அவ்ளோ நம்பிக்கை?” ஆதங்கம் குரலாய் வந்தது ஈஸ்வரனிடமிருந்து.

அவர் பக்கம் திரும்பியவன், “உண்மையா இருந்தா கோபுரத்துல, இல்லனா தெருவுல தான் நான் ஒக்கார வைப்பேன்”

மறைமுக எச்சரிக்கை விழுந்தது மாமனுக்கு. பற்களைக் கடித்தவர், “அதுனால தான் என்ன உன் பக்கத்துல வச்சிருக்க போல?” இங்கு வந்த பத்து நாட்களில், உதய் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அவன் பார்வையை மீறி அவரால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.

Advertisement

உள்ளேயே ஆட்களை விலை பேசச் சென்றவருக்கு உதயின் அலுவலகத்தில் நெருப்பு பார்வை தான் அதிகம் கிடைத்தது, அதுவே அந்த மனிதரை அமைதியாக்கியது. எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் உதயின் கவனம் திரும்ப,

Advertisement

“எங்க உதய் உன்னோட பி.a ரெண்டு நாளா கானம்?” – ஈஸ்வரன்

“தெரியல” – உதய்

“இது தான் உன்னோட ஆளுங்க உனக்கு காட்டுற விஸ்வாசமா? சாவிய கைல தூக்கி குடுத்த அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள வந்து குடுத்துட்டு போய்ட்டா”

Advertisement

உதய் நேற்று யாழினி கையில் கொடுத்த ஒரு டைரியையும் சில சாவிகளையும் தன்னுடைய மேஜையில் தூக்கிப் போட்டார். உஷ்ணம் தலைக்கு ஏறியது அவர் பேசிய வார்த்தைகளில். நிச்சயம் அவர் செயல் என்று புரிந்துபோனது. அதுவும் நேற்றிலிருந்து யாழினி அலுவலகம் வராதது மேலும் உதயின் நெற்றியைச் சுருக்கியது யோசனையில்.

“ஒரு மாசம் இருந்தாலும் உண்மையா இருந்தா அந்த பொண்ணு. சிலர் பாம்பு மாதிரி கழுத்த சுத்திட்டு இருக்கறப்ப இந்த மாதிரி ஆளுங்க எனக்கு வரம் தானே”

அவன் பேசும் வார்த்தைகள் பல முறை மனதை நீ தான் என்று ஈஸ்வரனுக்குச் சுட்டிக்காட்டியிருந்தாலும் அந்த மனிதர் எதையும் உணரும் நிலையில் நிச்சயம் இல்லை. துர் எண்ணங்கள் மூளையை ஆட்சி செய்யச் சாத்தான்களின் பேச்சு மட்டுமே காதில் விழுந்தது அந்த மனிதருக்கு.

“அந்த பாம்பு வகைல நான் இல்லங்ற வர எனக்கு நிம்மதி தான்” தானே தன்னை நல்ல குடி நாணயத்தின் வகையில் சேர்த்தார் அந்த பெரிய மனிதர்.

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க… நம்ம பல்லாவரம் சைட் ஒர்க் எந்த அளவு போய்ட்டு இருக்குன்னு பாத்துட்டு வாங்க” வந்ததிலிருந்து உதய் தானாய் அவருக்கும் தரும் முதல் வேலை.

எங்குச் சென்றாலும் வேலை செய்ய விடாமல் அவனே அனைத்து வேலைகளையும் செய்திருக்க, இந்த வேலையாவது சென்று வருவோம் என்று தான் உடனே சரி என்று சென்றுவிட்டார். செல்லும் வரை முகத்தைச் சாந்தமாக வைத்திருந்தவன் முகம் பிறகு கோவத்தில் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

‘இந்த ஆள் பேச்ச கேட்டு மட்டும் நீ வராம இருந்த உன்னையும் கொல்லுவேன் அவனையும் கொல்லுவேன் டீ’ அடங்க முடியாமல் எறிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து யாழினியின் கைப்பேசிக்கு அழைத்தான்.

அவள் தந்தை சிறைச்சாலை சென்றது எல்லாம் உதய்க்கு நேற்று தான் தெரியும் ஆனால் அதன் காரணத்தை மேலோட்டமாக மட்டும் தன்னுடைய ஆட்கள் மூலம் அறிந்தவன் அவர் வீடு வந்து சேர்ந்ததையும் யாழினி ஈஸ்வரன் வாகனத்தின் அருகில் நின்ற புகைப்படமும் ஒரு சேர வர, அவன் மூலையில் ஏதோ மணி அடித்தது.

விளைவு, இரண்டு நாட்களாக யாழினி அலுவலகம் வராதது. முதல் முறை ரிங் முழுவதுமாக செல்ல அழைப்பு ஏற்கப்படவில்லை. மீண்டும் முயன்றான் நீண்ட நேரம் சென்ற பிறகே அழைப்பை யாழினி ஏற்க இரு பக்கமும் அமைதி.

ஒரு புறம் உதய்க்கு அவள் தானே வரவில்லை, அதற்கு முன் தான் தன்னுடைய கைகளில் வைத்து எவருடைய பேச்சையும் கேட்க வேண்டாம் என்று சிறு பிள்ளைக்குக் கூறியது போல் கூறினான், இப்பொழுது மீண்டும் துவங்கிய இடத்திலே வந்து நிற்கிறாள்… கோவம் வந்தது ஆடவனுக்கு மூக்கிற்கு மேல்.

அந்த பக்கம் அவன் அழைப்பு என்றதுமே மொட்டை மாடிக்கு வந்த யாழினிக்குக் கண்கள் கலங்கியது… எவ்வளவு ஆசையாய் பார்க்கும் அந்த விழிகள் தன்னை, மிக எளிமையான உடையை அணிந்து வந்தாலும் ரசனையை விழும் அவன் உரிமை பார்வை, அன்று அவன் வீட்டில் மனக்கவலை நீங்க அவள் மாடி சாய்ந்தது எனக் கடந்த இரண்டு நாட்களாக உணவைக் கூட பெயருக்காக அருந்தி எந்நேரமும் விட்டதை வெறித்து அமர்ந்திருந்த மகளை அவள் அன்னை, தங்கை எல்லோரும் கேள்விக் கணைகளைத் தொடுக்க, பெண்ணிடம் மௌனம் மட்டுமே.

இரண்டு பக்கமும் அமைதியே வரப் பொறுமை இழந்தவன், “ஆபீஸ் வா” ஆணை தான் வந்தது.

“நான் வரல சார்” குரலை நலுங்க விடாமல் தெளிவாகப் பேச முயன்று வெற்றி கண்டது பாவை.

“ஏன்?” – உதய்

“எனக்கு புடிக்கல சார்” – யாழினி

“புடிக்கலைனா? என்ன புடிக்கல… மாமாவ வேற ப்ரான்ச் மாத்துறேன்” – உதய்

“அவர் எங்க இருந்தா எனக்கு என்ன சார், எனக்கு உங்க ஆபீஸ் வர புடிக்கல” – யாழினி

எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் இருக்க முடியும் அவனாலும்… ஆனாலும் அவள் மனம் நோகவிடக் கூடாதென்று அப்பொழுதும் பொறுமையைக் கடைப்பிடித்தான், “என்ன பிரச்சனைன்னு சொன்னா தான யாழினி தெரியும்?”

“நீங்க தான் பிரச்சனை போதுமா?” எடுத்தெறிந்து அவள் பேசியதை அவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

“நான் தான் பிரச்சனையா? பொத்தம் பொதுவா சொன்ன என்ன அர்த்தம்?” விழிகள் சுருக்கி தலையை அவன் கைகள் நீவியது.

“ஒரு பொண்ணு பலவீனமா இருக்கறப்ப அவளை அங்கையும் இங்கையும் தொடுறது உங்கள மாதிரி பெரிய இடது பசங்களுக்கு பெருசா தெரியாது சார்” மொத்த பழியையும் தூக்கி அவன் மீது போட்டாள் யாழினி. அவன் மனம் நிச்சயம் அடித்துச் சொன்னது அவள் வார்த்தைகள் மனதிலிருந்து வரவில்லை என்று,

“மாமா ஏதாவது சொன்னாரா?” கேள்வி எழுப்பினான் உதய்.

“யாரும் சொல்லி குடுத்து செய்ய நான் ஒன்னும் கொழந்த இல்ல சார்” – யாழினி “மாமா உன்ன பாத்தது எல்லாம் எனக்கு தெரியும் யாழினி… எதையும் என்கிட்டே மறைக்காத” – உதய்

“எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரமிச்சிட்டாங்க சார்… நமக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அதை அப்டியே விட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க சார்” குடும்பத்தைக் காக்க தன்னுடைய ஒரே ஒரு பெரிய ஆசையையும் புதைக்க வேண்டிய கட்டாயம்.

“ஏய்… நேர்ல இல்லற தைரியத்துல ரொம்ப பேசுற டீ. ஒழுங்கு மரியாதையா ஆபீஸ் வந்து சேரு… இல்லனா வீடு வந்து ஆபீஸ் தூக்கிட்டு வந்துடுவேன்” பொறுமை காற்றில் பறந்தது உதய்க்கு… சற்று நிதானித்து, “நீ இல்லாம ஒரு மாதிரி இருக்கு டீ” இதற்கு மேல் என்ன சொல்லி அவளுக்குப் புரியவைக்க என்று புரியவில்லை அவனுக்கு.

இயலாமையுடன் காதல் வழிந்த அவன் வார்த்தைகளைக் கேட்டு அடக்கி வைத்திருந்த விசும்பல் ஒன்று வெளியேறியது… அப்பொழுது புரிந்தது உதய்க்கு, நரியின் சூட்சியில் இருவரும் விழுந்ததை.

“வேணாம் சார்… உங்களுக்கு நான் வேணாம். எனக்கும் நீங்க வேணாம். எனக்கு என் குடும்பம் வேணும்… எல்லா நேரமும் உங்கள எதிர்பாத்துட்டே இருக்குற சூழ்நிலை எனக்கு சுத்தமா புடிக்கல”

அழுகையினோடே யாழினி பாதி உண்மையை மறைத்து அவனிடம் தெரிவித்தாள்… எப்படியாவது அனைத்தையும் சரி செய்து என்னை உன்னுடனே வைத்துக்கொள் என்ற ஆசையில்.

“அப்ப நான் உனக்கு வேணாம்?”

அவளால் எப்படி அவனை வேண்டாம் என்று கூற முடியும்? தகுதியாவது உள்ளதா தனக்கு? தூரத்தில் நின்றே அவன் நினைவுகளை அழகாய் அவள் மனதில் செதுக்கியவனின் சிரித்த உருவம் வந்து ஆட்டி படைத்தது பெண்ணுக்கு… எந்நேரமும் அவன் எண்ணங்களுடன், அவன் அன்பிற்குச் சிறைப்பட்டுக் கிடக்கத் துடிதுடித்த இதயம் பொய் கூற மறுத்தது, வாயை மூடி தரையில் அமர்ந்து அழுதாள்.

இப்பொழுதே அவனிடம் சென்று மனதைத் திறக்க அவா எழுந்தது. ஆனால் அவள் மௌனத்தைச் சகிக்காதவன் கோவ மூச்சுக்காற்று தெளிவாகக் கேட்க, இனி அவன் ஒரு வார்த்தை கேட்டாலும் அவனிடம் சாய்ந்துவிடும் இதயத்தை மறைக்க அணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ஈஸ்வரன் மீது கோவம்… சகோதரியின் மகனின் நிம்மதியைக் குலைக்க ஏன் இந்த மனிதர் இவ்வளவு துடிக்கிறார்… அவன் மகிழ்ச்சி அவருக்கும் தித்திக்க வேண்டும் அல்லவா? அதே போல் தன் மீதும் கோவம், காதலைக் கூட அடைய முடியாமல் கோழையாய் நிற்பதை எண்ணி…

‘இனி அவனைச் சந்திக்கவே முடியாதா? அன்று அவன் கைச் சிறையில் கிடைத்த சுகம் இனி வாழ்க்கையில் எந்நாளும் கிடைக்காதா? அவன் வட்டத்தினுள் கிடைக்கும் பாதுகாப்பு என்றும் தனக்குக் கிடைக்கப் போவதில்லையா? எல்லாமே முடிந்ததா… அவ்வளவு தானா?’

கேள்வி மேல் கேள்வி எழுந்து பெண்ணின் மனதைக் குத்தி கிழித்தது உயிரோடு… அந்த பக்கம் யாழினி அழைப்பைத் துண்டித்ததும் கையிலிருந்த கைப்பேசி தனக்கு எத்திரிலிருந்த சுவரில் பட்டு சுக்கு நூறாய் சிதறி விழுந்தது. அடுத்து தனக்கு முன் இருந்த மடிக்கணினியை எடுத்து வீசப் போக, அதற்குள் ஜெயன் அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் தன்னுடைய காலில் சிக்கிய கைப்பேசியின் உடைந்த பாகத்தைப் பார்த்து உதயின் நிலையைப் பார்த்தவன் வியந்தான். எதையோ பெரிதாக இழந்த வருத்தம் அவன் முகத்தில்…

இயலாமையோடு மேஜையில் சாய்ந்து நின்ற உதய், தன்னை நிதானப்படுத்தும் முயற்சியைத் தலையை மீண்டும் மீண்டும் கோதியவன், “அப்பா, சித்தப்பாவ பாக்கணும்” என்றான் வால்ட்டடில் இருந்து சில கற்றை கோப்புகளை எடுத்துக்கொண்டே.

“நீங்க இருக்க வீட்டுக்கு வர சொல்றேன் சார்” – ஜெயன்

“வேணாம். நான் அங்க போகணும்”

தகவல் தெரிவித்து வெளியில் நடக்க விலகாத அதிர்ச்சியோடு முதலாளியைப் பின்தொடர்வது ஜெயனுக்கு வழக்கமாய் மாறிப்போனது. ஒரு மாதம் குடும்பத்தை விட்டு விலகி இருந்தவன் எதற்கு இன்று அங்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி மட்டுமே பாக்கி. வாகனம் உதயின் வீட்டை நோக்கி நகரச் செல்லும் வழி எங்கும் ஹிந்தியில், ஜெர்மனில் மாறி மாறி ஏதோ வெகு தீவிரமாகப் பேசிக்கொண்டே வந்தான்.

வீடு வந்தும் வாகனத்தை உள்ளே நிறுத்திய பின்னரும் வீட்டின் தோட்டத்தில் பல நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க அதற்குள் ரகுநந்தனும், ஜெயநந்தனும் மகனின் திடீர் வரவால் அதிர்ச்சியில் நின்றனர்.

“ஏதாவது பிரச்சனையா?” ஜெயனிடம் ரகுநந்தன் கேள்வி எழுப்பினார்.

“தெரியல சார். திடீர்னு உங்க ரெண்டு பேரையும் பாக்கணும் சொன்னாங்க”

தன்னுடைய முதலாளியின் சோக ரேகைகளை அவரிடம் கூறவில்லை, கூறினால் மட்டும் அவனுக்குத் தேவையானதையா இந்த குடும்பம் நிகழ்த்திவிடும் என்ற ஆதங்கம் தான் உண்மையை மறைக்க வைத்தது.

தந்தைமார்கள் மகன் பேசும் வரை வெளியிலேயே காத்திருக்க, அதற்குள் உதயின் வரவை வேலையாட்கள் மூலம் அறிந்த நளினி வேகமாக வெளியில் வந்தார். எத்தனை வாரங்கள் கடந்தது இந்த வீட்டினுள் அவன் வந்து… தோட்டத்திற்கு வந்தவர் கைப்பேசியில் மும்முரமாய் இருந்தவனின் உடல் தோற்றத்தைக் கண்டு கண் கலங்கியது.

மெலிந்த உடல்வாகுடன், கண்கள் எல்லாம் கருவளையம் விட்டு, சோர்வுடன் தெரிந்தான்… நிச்சயம் காலை உணவை அருந்தவில்லை… வேகமாக உள்ளே சென்றவர் வேலையாட்களிடம் ஆப்பிள் ஜூஸ் ஒன்றைச் செய்யக் கூறி, தான் காலையில் வைத்த சாம்பாருடன் தக்காளி சட்டினி செய்து, மொருவலாக இரண்டு தோசை சுட்டு உதயை அழைக்க வந்தார். இன்னும் கைப்பேசியில் தான் இருந்தவனைச் சிறிதும் யோசிக்காமல் நெருங்கி அவன் கையிலிருந்ததை வாங்கி இணைப்பைத் துண்டித்தார்.

“சித்தி…” உதய் அதிர்ச்சியாகச் சிற்றன்னையைப் பார்க்க அவர் அவன் கையை பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றார். அது வரை அமைதியாய் இருந்தவன் வாசலை அடைந்த சமயம் கால்கள் வேரூன்ற நின்றான். “வேணாம் சித்தி நான் ஒரு வேலை விசயமா வந்தேன். அப்பா, சித்தப்பா கிட்ட பேசணும்” என்றான்.

“வீட்டுக்குள்ள வந்து பேசு உதய்” – முதல் முறை அவரிடமிருந்து வரும் ஆணை… ஆனாலும் உள்ளே செல்ல பல காரணங்கள் அவனைத் தடுத்தது.

“வேணாம் சித்தி…” முடிவாய் அழுத்தம் கொடுத்தான்.

“ஏன் உதய் உள்ள வர மாட்டியா?” உதயின் செயல் கோவத்தைத் தர ரகுநந்தன் காட்டமாய் கேட்டார்.

“இத்தனை நாள் அவன் வராம இருந்தப்ப இதே கேள்வியை நீங்க ஏன் மாமா கேக்கல?” நளினியின் கேள்வியில் அங்கிருந்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சி தான்.

ரகுநந்தன் அமைதியாக இருக்க நளினியின் கணவர் தான் மனைவியைப் பார்வையால் பஸ்பமாக்கினார், “நளினி யார் கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?”

“நான் யாரையும் குறிப்பிட்டு பேசலங்க… நீங்களும் அந்த கேள்விக்கு பதில் சொல்லலாம். உங்க பசங்க உங்களோட இருக்காங்க… அது போதும் உங்களுக்கு… வேலைய பாத்துக்க ஒரு ஆள் வேணும், அதுக்கு உதய் வேணும். அவன் என்ன வேணா பண்ணிட்டு போகட்டும்… சாப்புடுறானா தூங்குறானா எதுவும் கவலை இல்லை. அப்ப அப்டி இருந்தவங்க இப்பயும் அப்டியே இருந்துக்கோங்க”

கணவனிடம் காட்டமாய் கூறியவர் உதய் பக்கம் திரும்பி, “உன்ன மதிக்காதவங்க இருக்குற இடத்துல நீ வர வேண்டாம் உதய்… நான் என்னையும் சேத்து தான் சொல்றேன்” கண்ணீர்த் துளி ஒன்று அவர் கணத்தில் வழிய வேகமாய் உதய் அதைத் துடைத்தான்.

“ஒரு அம்மாவா நான் தோத்துட்டேன்ல உதய்?” குற்ற உணர்ச்சி மேலோங்கியது அவனுடைய சிறு பாசத்தில்… எத்தனை நாட்கள் அன்னையின் பாசத்திற்கு ஏங்கி இருப்பான்? இப்படி அவன் பக்கமே திரும்பாமல் இத்தனை வருடங்கள் விட்டது தன்னுடைய தவறு தானே?

வலி நிறைந்த புன்னகையோடு சிரித்தவன், “இல்ல சித்தி… விஷ்ணு, ஹரி எவ்ளோ பொறுப்பா இருக்காங்க தெரியுமா? நீங்க பாத்தாலே பெருமைப்படுவீங்க” சிலாகித்துக் கூறினான்.

ஆனால் ஒரு தாய் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் சரி சமமாய் பார்த்தால் தானே அவர் ஒரு அன்னையாய் முதல் படியைத் தாண்ட முடியும்? அதன் பிறகு தானே அவர்கள் வளர்ப்பு எல்லாம் அடுக்கும்… அப்படிப் பார்த்தால் முதல் படியிலேயே தோல்வி தானே?

“எப்டி உதய் இத்தனை நாள் உன்ன நான் புரிஞ்சுக்காமயே இருந்தேன்?” தன்னையே கேள்வி கேட்டவர் கண்ணை துடைத்து, “ஒரு புள்ள பெத்தாலும் உன்ன மாதிரி மார் தட்டி பெருமை படுற புள்ளையா பெத்துக்கணும், கரண் இங்க ஒரு டேபிள், ச்சார் வந்து போடுங்க”

ஒரு வேலையாளிடம் ஏவியவர் தானும் உள்ளே சென்று அடுத்த இரண்டாவது நிமிடம் உதய் முன்னால் தான் செய்தது எல்லாம் அடுக்கி வைத்தார். அவனை அமரவைத்து அவனுக்குப் பரிமாறியவர்,

“காலைல சாப்பாடு உடம்புக்கு மட்டும் இல்ல, மூளைக்கும் ரொம்ப முக்கியம் உதய்… காயத்திரி அக்கா இருந்த வர, காலைல சாப்பாடு நாம வீட்டுல யாரா இருந்தாலும் நாள் தவறாம சாப்புடனும், உனக்கு தெரியாதது இல்ல” உன் அன்னை பேச்சிற்காக நீ காலை உணவை உண்டே ஆக வேண்டும் என்ற அதிகாரத்தைச் சிறு தலை அசைப்புடன் ஏற்றான். ஆனால் எதனால் தன் சித்தியிடம் இந்த திடீர் பாசம், அக்கறை என்று உதய் ஆராய விரும்பாமல் அனுபவிக்க விரும்பினான்.

ஒவ்வொரு மிடறு உள்ளே உணவு இறக்கும் பொழுதும் இரும்பை விழுங்குவது போல் மிகவும் கடினமாகத் தொண்டையிலேயே வரிசைகட்டி நிற்பது போன்ற எண்ணம். இரண்டு தோசையோடு எழ இருந்தவனைக் கட்டாயப்படுத்தி மூன்றாவது நெய் தோசையையும் உண்ண வைத்தே அவனை வேலை பார்க்க அனுமதித்தார்.

இவை அனைத்தையும் பார்வையாளராகவே நின்று பார்த்த ரகுநந்தனும், ஜெயநந்தனும் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி நின்றனர். நளினி சிறிய விசயங்களைக் கூட பெரிதுபடுத்துகிறாரா? இல்லை உதயின் ஆள் மனம் உண்மையிலேயே அடிபட்டு அதை அவன் மறைக்கிறானா? புரியாமல் விழித்தனர் இருவரும்.

“பேசலாமா ப்பா… நீங்க பிரீ தானே சித்தப்பா?” இருவரையும் விசாரித்து அவர்களுக்கு எதிரில் அமர்ந்தான்.

“சொல்லு உதய்” சிறிய தந்தையின் குரலில் ஒரு தடுமாற்றம் முதல் முறை உதய் உணர்ந்தான்.

“பெர்ஸ்னல் எல்லாம் யோசிக்காதிங்க சித்தப்பா… இது ரொம்ப முக்கியமான விசியம்”

“சரி உதய் சொல்லு நாங்க என்ன பண்ணனும்?” – ரகுநந்தன்

“நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க போறேன் ப்பா, அதுக்கு உங்களோட பெர்மிஷன் வேணும். இது நம்ம குடும்பத்துக்குள்ள பிரச்சனை கொண்டு வரலாம், அதே சமயம் பிஸ்னஸ்ல பெரிய பிரச்னையும் வரும்” தொழில் என்று வந்தால் உதயின் பேச்சிலோ பார்வையிலோ சிறு தடுமாற்றமும் கண்டது இல்லை, ஆனால் இன்று தயங்கித் தயங்கி அவன் கேட்கும் பொழுதே புரிந்தது பெரிதாக ஏதோ ஒன்று என்று.

“தயங்காத உதய்” தந்தையாய் மூத்த மகனை ஊக்குவித்தார் ஜெயநந்தன்.

“ஈஸ்வர் மாமா ரொம்ப தப்பு பண்றங்க ப்பா… இப்ப இல்ல ஜெர்மன் போனப்ப இல்ல, என்னைக்கு உங்ககிட்ட வேலை செய்ய வந்தாங்களோ அப்ப இருந்து அவர் கைக்கு போற ஒவ்வொரு ப்ராஜெக்ட் ஆகட்டும், அவர் பார்வைல இருக்குற ப்ராஜெக்ட் ஆகட்டும், எல்லாமே தனக்கு சாதகமா மாத்தி பல நூறு கோடி பிளாக் மனி வச்சிருக்காரு”

வார்த்தைகள் தந்தை இருவரிடமும் இருக்க கை பின்னே சென்று ஜெயனிடம் கொடுத்த கொத்தான கோப்பைகளை வாங்கியது. அதை இருவர் முன் நீட்டி, “இப்ப அந்த பணம் எல்லாம் ஒவ்வொரு ப்ராபர்ட்டி பேர்ல உயிரோட நிக்கிது”

இருவரின் முகமும் அதிலிருந்து மீளவே சில நொடிகள் பிடித்தன, உதய் கொடுத்த ஆவணங்களைப் பார்க்கப் பார்க்க அவன் வார்த்தைகளை விட அதிகம் அதிர்ச்சி தந்தன.

“ஏதாவது பண்ணனும் ப்பா” என்றவன் உஷ்ணம் தெறித்த குரல் இன்றே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற கங்னதோடு இருந்தது.

“இவன் இவ்ளோ மோசமா போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல” ஏமாற்றத்தோடு ரகுநந்தன் கூற,

“உங்களுக்கு முன்னாடியே அவரப் பத்தி தெரியுமா ப்பா?” இப்பொழுது தான் புரிந்தது அவரின் தொடக்க நேரம் மௌனத்தின் அர்த்தம்.

“தெரியும் உதய்” – ரகுநந்தன்

“கொஞ்ச வருஷம் முன்னாடி தான் தெரியும், அதுவும் ஒரு கோடி கை மாறுச்சு. அண்ணன் சொல்ல சங்கடப்படுறாருனு நான் தானே அவரை கண்டிச்சு விட்டேன். விட்ருவாருனு நம்பிக்கைல தானே இருந்தோம்” தளர்ந்த குரலில் ஜெயநந்தன் பதில் தர அப்பொழுது தான் ஹரி, ரகுநந்தன் மீது ஈஸ்வரனின் இலக்கார பார்வை இத்தனை ஆண்டுகள் எதற்கு என்பது புரிந்தது.

ஜெயநந்தனோ அதோடு விடாமல் தன் கையிலிருந்த கோப்பையும் அண்ணன் கையிலிருந்ததையும் வாங்கி மூடி உதய் முன் நீட்டினார், “இத இதோட விட்ரலாம் உதய். நீயும் மறந்துடு”

பிரமை பிடித்தது போல் இருந்தது உதய்க்கு, தான் சரியாக தான் கேட்டோமா என்ற எண்ணம் எழ, “இல்ல சித்தப்பா… நீங்க இத விட சொன்னிங்களா?” தன்னிச்சையாக அவர் நீட்டிய அந்த கொத்தை வெடுக்கென வாங்கினான்.

“ஆமா, விற்று உதய். இனி நீ இத பத்தி எதுவும் பேச வேணாம்” தந்தை உறுதியாய் கூறி இடத்தை விட்டு நீங்க போனார். “அதெல்லாம் விட முடியாது ப்பா. ஒரு மனுஷன் என்ன என்ன பண்ண கூடாதோ அது எல்லாம் பன்றாரு. அவரை அப்டியே விட முடியாது ப்பா” – உதய்

திரும்பி உதயை முறைத்த ரகுநந்தன், “காசு போனா போகட்டும் உதய், ஆனா சொந்தம் பந்தம் திரும்ப வராது” என்றார் இலகுவாக.

“கிழிச்சது” அடக்க மாட்டாத கோவத்தில் உதய் கூற,

“வார்த்தையை பாத்து பேசு உதய்” சிறிய தந்தை சினத்தைக் காட்டினார்.

“துரோகம் பண்ற உறவு இருந்தா என்ன இல்லனா என்ன?” – உதய்

“அவர் திருடுறாரு தான் இல்லனு சொல்லல ஆனா துரோகம் ஆகாது உதய். குடும்பம் ஒரு குருவிக் கூடு மாதிரி உதய், ஒரு சின்ன கல் பட்டாலும் திரும்ப நம்பிக்கை அங்க திரும்ப வரவே வராது. உன் மாமா நமக்காக நெறையா பன்னிருக்கார். அதுக்காக இதெல்லாம் விட்டுடலாம்”

“எனக்கு அப்டி பட்ட குடும்பம் தேவ இல்லை சித்தப்பா. என்ன தான் அவர் நமக்கு பண்ணிருந்தாலும் அதுக்கு சேத்து தான் இவ்ளோ சுருட்டிருக்காரே பத்தல? அவர் திருட்டை எல்லாம் தாண்டி ரொம்ப நாள் ஆச்சு. உங்க பாசமும் அமைதியும் தான் அவரை தன்னோட இஷ்டத்துக்கு ஆட வைக்கிது” எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றான் உதய்.

“திருட்டை தாண்டினா?” – ரகுநந்தன்

“ஆதிய ஜெயில்-கு அனுப்பிருக்காரு. அவன் மேல தப்பே இல்லாம…”

அவன் முடிக்கும் முன் இடையிட்டு, “ஆதிக்கு அவன் அடி குடுத்தான். ஆக, இது தான் உன்னோட கோவத்துக்கு முக்கிய காரணம்?” மொத்தமாக உதயின் சுயநலத்திற்காகத் தான் இவை அனைத்தும் என்று சரியாகத் தவறான எண்ணம் தந்தை மனதில் பதிந்தது.

“அது இல்ல ப்பா…” இயலாமையுடன் யாழினியின் விசயத்தை மறைக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டான் உதய்.

“இப்ப நீங்க முடிவா என்ன சொல்றிங்க?” இனி இவர்களின் காலை பிடித்து நிற்பது ஆகாது என்று புரிந்து போனது ஆணுக்கு.

“இனி நீ ஈஸ்வர் விசயத்துல தலையிட கூடாது. அவன் மறுபடியும் ஜெர்மன் போகணும்” – ஜெயநந்தன்

“முடியானு சொன்னா?” திமிராக வந்தது உதயின் கேள்வி.

“அஸ் எ ச்சார் மேன் உன்ன சி.இ.ஓ பொசிஷன்ல இருந்து இந்த நிமிஷமே என்னால தூக்க முடியும்” சகோதரனுக்குத் துணையாய் நின்றார் ரகுநந்தன். வலி நிறைந்த முகத்தோடு ஏளனமாகச் சிரித்தான் உதய்.

இவ்வளவு தான இந்த வீட்டில் தன்னுடைய வார்த்தைகள், மரியாதை எல்லாம்? அடக்கி அழுத்தி வைத்தான் உதய் அனைத்து உணர்வுகளையும் மனதினுள். உணர்வுகளைத் துடைத்து இறுகிய திமிர் பார்வையோடு,

“என்ன ப்பா ஒரு சாதாரண பதவி என்னோட வேலைய நிறுத்தும்ன்னு எப்படி யோசிச்சீங்க? இந்த பதவில இருந்தா லைஷன்ஸ் கன்-கு வேலை. இல்லையா லைஷன்ஸ் இல்லாத அருவாளோ, நம்பர் ப்ளேட் இல்லாத ஒரு லாரியோ அதே வேலையப் பாக்கும்” அழுத்தமாக ஆழமாக வந்தது அவன் இறுகிய குரல். ஆனால் தன்னுடைய மகன் தன்னையே எதிர்த்து தன் பேச்சைக் கேட்காமல் அவ்வளவு நிமிர்வாய் பேச, தந்தையின் கர்வத்தை அது சீண்டி விட்டது.

“அப்ப ஈஸ்வரன் மேல நீ ஆக்ஷன் எடுக்க போற?” – ரகுநந்தன்

“சந்தேகமே வேணாம்” உதய் புடித்த பிடியில் நின்றான்.

“என் பேச்சை மீறப் போற?” அவனுக்கு அருகில் வந்து அவனை அடிக்கும் அளவிற்குக் கோபத்துடன் கேட்டார்.

“நான் உங்களையே மீறி ரொம்ப நாள் ஆச்சு ப்பா” அதற்கு மேல் அங்கு நில்லாமல் நடந்தவன், “என் இடத்துல உங்க மச்சானை ஒக்கார வைக்கிறதா இருந்தா உங்க செல்வாக்கு யூஸ் பண்ணி ஜெயில்க்கு ஒரு கம்ப்யூட்டர், போன் இன்னைக்கே அனுப்பி விட்ருங்க” திரும்பியும் பார்க்காமல் சென்றவன் அடுத்துச் சென்றது மாமனின் இல்லத்திற்குத் தான்.

Epdi iruku? Comments please…

என்னுடைய வேறு புத்தகங்கள்… நேரமிருந்தால் படியுங்கள் (In amazon)….

என் மன ஆழியில்…

என் மன ஆழியில் 2

தட்றோம் தூக்றோம்

My Painful love

Star Love

Dead heart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!